முதல்ல எல்லாருக்கும் என்னோட தீபாவளி நல்வாழ்த்துகள். பட்டாசெல்லாம் வெடிக்க கிடைக்கல இங்கே. இருந்தாலும் வீக்கெண்ட் சின்ன பார்ட்டினு முடிவு பண்ணிருக்கோம். பாப்போம். நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்க. ஆனா, ஜாக்கிரதையா இருங்க.
---
அடுத்தது, இது என்னோட நூறாவது பதிவு. நூறாவது பதிவுன்னா கொசுவத்தி கொளுத்த வேண்டாமா? சில ஹைலைட்ஸ். இதுதான் இப்போ டெம்ப்ளேட் ஆயிடுச்சே. மார்ச் 2005-ல் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்தேன், தங்கமகனின் ஊக்கத்தால். நிறைய நண்பர்களையும் பல வாசகர்களையும் ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நேரில் பார்க்காமலேயே ஏதோ நெருங்கிய உறவு போல் ஒரு அன்னியோன்யத்தை உருவாக்க வல்ல வலைப்பூக்களின், இல்லை.... தமிழின் தாக்கத்தை உணர்ந்து கொண்டேன்.
இனி சில நம்பர்கள். இதுவரை இந்த தளத்திற்கு வருகை தந்தவர்கள் 9115 பேர்கள் (என்னைச் சேர்க்காமல், என்னோடது மட்டும் இன்னுமொரு ஆயிரமாவது இருக்கும் :-) ).
இதெல்லாம் சில அக்காக்களுடனும் தலைகளுடனும் ஒப்பிடும் போது ஜுஜுபின்னாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை.
அதிகமாக கவனிக்கப்பட்ட பதிவுகள்: மறக்க முடியாத விளம்பரங்கள், சூப்பரின் சாதனையை இருட்டடிக்கும் ஆங்கில வெப்சைட்கள்
அதிகமான பதிவுகள் எழுதியது: அக்டோபர் 2005 - 24 பதிவுகள் இதையும் சேர்த்து.
மிகக் குறைவான பதிவுகள்: மே 2005 - 0!
தமிழ்மணத்தில் மிகவும் சந்தோஷப்பட்டது: 8 செப்டம்பர் - மதி கந்தசாமி அவர்கள் ஒருவார நட்சத்திரமாக இருக்க அழைப்பு விடுத்தது. ஆனால், என்னுடைய ஜாகையை மாற்றும் எண்ணத்தில் இருந்ததால், இருப்பதால் பின்னர் நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லை. விரைவில் வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்.
வருத்தப்பட்டது: சின்னவன், குசும்பன் பதிவுகள் தூக்கப்பட்டபோது.
சில தொடர்கள்:
கு.போ.கதை
மருதைக்கு போலாமா
சில படப்பதிவுகள்:
வயிரவன் கோயில் எறும்புகள்
Spider-Man
தஞ்சைப் பெரியகோயில்
சூரிய அஸ்தமனம்
நான் மிகவும் ரசிக்கும் பதிவர்கள்: ஆனந்த், துளசியக்கா, ராகவன், ரம்யா அக்கா, தாணு அத்தை, பரணீ, முகமூடி, குழலி
இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று என்னோட blogroll-ஐ பார்த்தாலே தெரியும்.
என் பதிவுகளையும் படித்து frequent ஆக பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய பெயர்களையும் போடணும்னா அப்புறம் தொடர் தான் ஆரம்பிக்கணும். அதனால், கோச்சுக்காம என் நன்றிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
--
சுய புராணம் ஜாஸ்தியாப் போச்சு. அதனால் இதோட நிறுத்திக்கிறேன். நூறாவது பதிவு டெம்ப்ளேட்டின் (updated) காப்பிரைட் இப்ப என்கிட்ட! :)
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்த்துகள்
தீபாவளி நூறு!
பனிவிழும் பொழுதில் - புகைப்படங்கள்
என்னோட 'வந்தாச்சு வந்தாச்சு' பதிவில் போட்டோ போட முடியல. அதனால போன வருஷம் எடுத்த சில படங்கள். எல்லாம் சான்க்ட் பீட்டர்புர்க்கில் எடுத்தது.
1. உறைந்து போன நேவா நதி. சில்ஹவுட்டில் வலமிருந்து இடம். ராஸ்டரெல்லி தூண், இசாக்கியெவ்ஸ்கி கதீட்ரல், அட்மிரால்ட்டி, ஹெர்மிடாஜ் அருங்காட்சியகம்.
2. Church of the Spilt Blood - பின்புறமுள்ள ஒரு பார்க்.
3. Peter and Paul Fortress அருகில் எடுத்தது. பாலத்துக்கு அந்தப் பக்கம் நான் இன்னும் போய்பாத்தில்லை!
4. Summer Garden அருகில் ஒரு canal.
5. Anichkov Palace - அருகில். இடது பக்கம் கொஞ்சமாத் வெள்ளை பில்டிங் தெரியுது இல்லையா? இந்த நதிக்கு பேர் fontanka. இந்தப் பாலத்தின் பெயர் அனிச்கவ் மோஸ்ட் (பாலம்). மிகவும் பிரபலமானது. முக்கிய சாலையான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் இருக்கிறது. இந்த பாலத்தில் இருக்கும் நான்கு சிலைகளும் - குதிரையை அடக்கும் வீரர்கள் - ரொம்ப பிரபலம். போட்டோ எடுக்காத டுரிஸ்ட்களே இல்லேன்னு சொல்லலாம்.
சில கூத்துகள்
ஜென்சன், நாராயண் மற்றும் இரான் அதிபர்
BAR Honda வின் ஜென்சன் பட்டன் சொல்லிருக்காரு
"And one week of the month you wouldn't want to be on the circuit with them, would you?"
"A girl with big boobs would never be comfortable in the car."
"And the mechanics wouldn't concentrate. Can you imagine strapping her in?"
சுட்டி
இதப் படிச்சப்பறம் என்ன சொல்றதுன்னு தெரியல..
நூறு ஸ்டார்ட்க்கு அப்புறமும் ஒரு ரேஸ் கூட ஜெயிச்ச பாடில்ல. நடுவுல காண்ட்ராக்ட் பிரச்சனை வேற. 2006 -லேயாவது ஒரு ரேஸாவது ஜெயிக்க வழி செய்யாம, அலட்டலா வாய்ச் சவடால் மட்டும் செஞ்சுருக்கறது தேவையா? பெண்களே இல்லாத விளையாட்டு F1. இருக்கலாம். ஆனா, ஜென்சன் என்ன நினைச்சுகிட்டு பேசுறார்னு புரியவேயில்ல. இவர மாதிரி சில ஆள்ங்களால தான் இன்னும் பெண்கள் F1 இல் இல்லியோ? டானிகா பாட்ரிக் போன்றவர்களுக்கு கண்டிப்பா சான்ஸ் கிடைக்கணும். எப்ப நடக்கப் போகுதோ? எம்மா பார்க்கர் போல்ஸ் சரியான பதிலடி கொடுத்திருக்காங்க. "Oh grow up. If he spent less time staring at grid girls' breasts he might win more races "
------
அடுத்த கூத்து நம்ம நாராயண். நாப்பது கோடி ரூபாய் கொடுத்து டாடாவும், ஜேகேவும் ரொம்ப மெனக்கெட்டாங்க. ஆனா சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டாரு. அடுத்த வருஷம், பணத்துக்காக டப்பா டீம்கள் கேக்கலாம். அதிலேயும் மினார்டி இனிமே இல்ல. ஜோர்டன் கைமாறியாச்சு.
ட்ராக்க விட்டு வெளிய ஓட்ட ரொம்ப பிடிக்கும்போல. சமீபத்திய ரேஸ்களில் எல்லாம் ராலி ட்ரைவர்களுக்கு போட்டியா ஓட்டறாரு மனுஷன். f1 ன்னுக்கு வரத்துக்கு முன்னாடியும் ஒண்ணும் பெரிசா சாதிச்சதில்லங்க்றத நினைவில் கொள்ளவும். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பெராரி தவிர வேற எந்த டீஸண்ட் டீமுமே பங்கெடுக்காத இண்டி ரேஸில் கூட தன் டீம் மேட்டிடம் தோற்றபோதே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு.
ரெட் புல்லோட ரெண்டாவது டீமிற்கும் ஆட்கள் ரெடி. டொயோட்டா, வில்லியம்ஸ் எல்லாம் வெறும் பகல் கனவு. என்ன பொறுத்தவரை, நாராயண் இன்னொரு alex yoong மாதிரி has been. ஆனா, வியாபாரம் தானே. பணம் நிறைய கொடுத்து அடுத்த வருஷம் ஸீட் வாங்கலாம். but he is not F1 material.
இன்னும் பல திறமையான இளம் டிரைவர்கள் சான்ஸ் கிடைக்காம அலைகிறார்கள். ஜப்பானுக்கு சாட்டோ மாதிரி நாராயண் இந்திய விளம்பரத்துக்காக சேர்த்துக்கொள்ளப்படலாம். அதனால் இழப்பு, F1 விசிறிகளுக்கு தான்.
-------
இன்றைய டாப்!
காலையில் பார்த்தவுடனே இதப் பத்தி யாராவது பதிவு செய்திருப்பார்கள்னு நினச்சேன். இல்ல அதனால்.. படிச்சுப் பாத்துட்டு சிரிக்கறதா கவலப்படறதான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
இரானின் புதிய ஜனாதிபதியின் அறிக்கை.
highlight இதுதான்
``no doubt the new wave in Palestine will soon wipe off this disgraceful blot (Israel) from the face of the Islamic world.
``Anybody who recognizes Israel will burn in the fire of the Islamic nation's fury,''
Bloomberg
Al-Jazeera
எங்க போய் முட்டிக்கறது?
வந்தாச்சு வந்தாச்சு!
இன்னும் அக்டோபர் முடியறதுக்கே அஞ்சு நாள் இருக்கு. ஆனா, இன்னிக்கு காலம்பற எழுந்து பாத்தா வெள்ளிப் பனி மழை மீதுலவுவோம் தான். முதல் ஸ்னோபால்கறதாலே நல்ல ஸ்ட்ராங்காவே பெஞ்சுருக்கு. தரையே காணும். ஒரே ராத்திரில ஊருக்கே வெள்ளையடிச்சாச்சு. திரும்ப மத்தியானம் பெரிய பனிமழை. இப்பவும் பெஞ்சுகிட்டுதான் இருக்கு. ஜன்னல் வழியா பாக்க ரொம்ப அழகா இருக்கு. மரங்களுக்கெல்லாம் டைம்டேபிள் மாறுனது தெரியல போலிருக்கு. இன்னும் முழுசா இலையையெல்லாம் உதிர்க்காததால, இலையெல்லாம் வெள்ளையா உறைஞ்சு படு சூப்பரா இருக்கு. குளிர் இன்னும் அவ்வளவு இல்லை. மைனஸ் மூணு நாலு தான். ஆனா இந்த வருஷம் நல்ல குளிரப்போதுன்னு பயமுறுத்திருக்காங்க. பாப்போம்.
முதல்முதல்லா பாத்தது 98-ல். ஏன்னா அதுவரைக்கும் சந்தோஷ் சிவன் புண்ணியத்துல 'புது வெள்ளை மழை' தான் பனின்னா என்னங்கறதுக்கு எனக்கெல்லாம் டெபனிஷன். மெக்டானல்ட்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 'ஸ்னோ பெய்யறதுடா'னு ஒரு சவுண்ட். சாப்பாட்டல்லாம் விட்டுட்டு நேரா தெருவுக்கு ஓடினோம். இத்தன வருஷமானாலும் முததடவை பாத்தா மாதிரியே பரவசமா இருக்கு. அலுக்கவேயில்ல. குளிரும் காத்தும் தான் பிரச்சனை. ஸ்னோல விளையாடறது பயங்கர தமாஷ். நடந்து போய்க்கொண்டிருக்கும் பிரண்ட்ஸோட விண்டர் ஜாக்கெட் குள்ளெல்லாம் திடீர்னு கட்டி போடறது இல்லேன்னா 7-stones கணக்கா டமால் டமால்னு பனிக்கட்டி அடிதடி இந்தமாதிரி நடக்கும்.
குழந்தைகள்லாம் இனிமே ஆளுக்கு ஒரு குட்டி போர்ட் எடுத்துக்கிட்டு சறுக்கிக்கிட்டே இருப்பாங்க. சின்ன குழந்தைகள் சும்மாவே அழகு. அதுல மொத்து மொத்துன்னு ரெண்டு மூணு ஸ்வெட்டர், அதுக்கு மேல தலை வரைக்கும் மூடற ஜாக்கெட்னு உப்பின பொம்மைகளாட்டம் தத்தக்கா பித்தக்கான்னு நடக்கறது பாத்தா பொழுது போறதே தெரியாது. குழந்தைகள்னு இல்ல. பெரிய ஆளுகளும் தான்.. சைட் வாக்கில பாத்தீங்கன்னா, சில சமயம், பனி எல்லாம் கெட்டியாகி ஐஸாகி இருக்கும். அதுல சர்சர்னு வழுக்கிகிட்டே விளையாடுவாங்க. நானும் ட்ரை பண்ணேன். வழுக்கி விழுந்து இடுப்பு போனதுதான் மிச்சம்.
போன வருஷம் மட்டும் தான் ஒருதடவை கூட வழுக்கி விழாம சாதனை படைச்சேன். இல்லாட்டி வருஷாவருஷம் குறஞ்சது அஞ்சாறுதடவை சறுக்கு விளையாட்டுதான். முத வருஷம் மட்டும் முப்பது நாப்பது தடவையாவது இருக்கும். ஒரு நாள் ரோடு க்ராஸ் பண்ணும்போது நடு ரோடுல நான் விழவும், க்ரீன் விழவும் சரியா இருந்தது. முதல்ல நிக்கறதோ பஸ். ஆனா பாவம், நல்ல ஆளு அந்த பஸ் ட்ரைவர், நான் ரெண்டு மூணு தடவை எழ முயற்சித்தும் திரும்ப திரும்ப விழுவத பார்த்து பரிதாபப்பட்டு கிளப்பாமல் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார். என் ப்ரண்டோ அந்தப் பக்கம் நின்னு நான் விழுந்து வாரரதை ஏதோ சர்க்கஸ் போல வேடிக்கை பாத்துகிட்டே பெரிய ஹாஹா வெல்லாம் போட்டு எஞ்சாய் பண்ணிக்கிட்டுருந்தான்.. "யூ *****, வந்து தூக்கிவிடு"னு நான் கத்தினதுக்கப்புரம் தான் என் நிலம புரிஞ்சு வந்து தூக்கிவிட்டான். எல்லாரும் வேடிக்கை பார்க்க, பயங்கர அசிங்கமா போச்சு. அன்னிலேர்ந்து பனிக்காலத்தில குனிஞ்ச தலை நிமிராம, ஒத்தையடிப் பிரதட்சணம் மாதிரி பாத்து பாத்துத்தான் கால வைக்கிறேன். அப்படியும் சில சமயம் பனி பகவான் காலவாரி விட்டுடறாரு.
போட்டோ போடலாம்னா கைல காமிரா இல்ல. :(
Are you Mobile?
1998-ல் தான் முதல் முதலா (என் சொந்தக் காசெல்லாம் இல்லை) மொபைல் வாங்கினேன். அதுவரைக்கும் மொபைல்னா என்னன்னு கேள்வி மட்டுந்தான். என் நண்பனை கூட்டிக்கொண்டு போய் ரொம்பத் தேடித்தேடி நூத்தி ஐம்பது டாலருக்கு Ericsson A1018 கிடைத்தது. ஆஹா, அதெல்லாம் பொற்காலம். பந்தா விடறதுக்கு மொபைல் தான் சரியான சாதனம். அப்பல்லாம் இந்தியாவிலேயும், ஏன் இங்கேயும் கூட அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தது. போன் வருதோ இல்லியோ, அப்பப்போ காதுல வச்சுகிட்டே தெருவில நடந்து போனா எல்லாரும் திரும்பிப் பாப்பாங்க. பைத்தியம்னு இல்ல. ஏதோ பெரிய மனுஷன் போலிருக்கு. மொபைல் வச்சுருக்காரு. கூடவே அதில பேசவும் செய்யறாரேன்னு. ஏன்னா, ஒரு நிமிஷம் அவுட்கோயிங் அப்போதிக்கு முப்பது செண்ட். அது கூட வரி அது இதுன்னு சேர்த்து நாப்பது செண்டுக்கு வந்துடும்.
கடவுள் தந்த வரம் ஒண்ணு இந்த எஸ்.எம்.எஸ். எங்கேயிருந்து எங்கே வேணும்னாலும் அனுப்பலாமில்லியா.இப்பல்லாம் ஈமெயில் அனுப்பறதே விட்டுப்போச்சு. எனக்கு மட்டுமில்ல பலருக்குந்தான். ஆமா, முழ நீளத்துக்கு அனுப்பி அது பல சமயம் பவுன்ஸாகி இல்லேன்னா 'அய்யய்யே, அந்த மெயில் ஐடிக்கு அனுப்பினியா, நா அத விட்டு மாறி மூணு மாசமாச்சுன்னு. இப்பத்தான் எதேச்சையா செக் பண்ணேன்' - அப்படீன்னு ஆறுமாசம் கழிச்சு பதிலனுப்புவாங்க. அதாத்தப்பி, மெயில் கிடைச்சு பதில் வந்திருக்கா வரலையான்னு அத அரைமணிக்கு ஒரு நொடி செக் பண்ணிகிட்டு வேற இருக்கணும். இந்த தொல்லையெல்லாம் இல்லாத வஸ்து நம்ம sms. இந்தியாவுக்கு போனபோதுதான் பார்த்தேன். ஏர்டெல்-ல ஏதோ sms ப்ரீன்னு போட்டுருந்தாங்க போலிருக்கு. விடுவானுங்களா நம்ம பசங்க. sms mania னே சொல்லலாம். ஒரு நாளைக்கு இருநூறாவது குறைஞ்ச பட்சம். பாதிக்குமேல் பார்வர்ட் தான். நொடிக்கொருதரம், இதோ எழுந்தாச்சு, தூங்கப்போறேன், அம்மா வச்ச ரசம் சரியில்லன்னு ரன்னிங் கமெண்டரி வேற. அந்த அளவுக்கு மோசமாகல நான். நம்ம அடிக்ஷனெல்லாம் இப்ப வலைப்பூக்களிலேயே மேயறதுதானே.
சில சுவாரஸ்யமான விஷயங்களும் மொபைல்களோட நடந்திருக்கு. ஆரம்பத்துல எங்க மொத்த பாட்சிலேயே மொபைல் வச்சுருந்தது ரெண்டு மூணுபேர் தான். பந்தாவுக்கு கேக்கணுமா என்ன? அப்புறம் கொஞ்ச கொஞ்சமா விலையும் குறைய ஆரமிச்சு மொபைல் இல்லாத ஆளே இல்லைன்னு ஆயிடுச்சு. அதுல ஒரு அசட்டு விளையாட்டு. லெக்சர், கிளாஸ் நடக்கும்போது வரிசையா அட்ரஸ் புக்கிலேர்ந்து கூப்பிடறது. ஏதாவது ஒரு ஆளு போன வைப்ரோ மோட்-ல போடாம அது பாட்டுக்கு அலற, பயங்கர காமெடியாயிருக்கும். சலிக்காத விளையாட்டு.
அப்புறம், ஒரு வெள்ளிக்கிழமை பாத் டப்பில் தண்ணிய ரொப்பிட்டு போமர் போடறதுக்கு குனிஞ்சா தொப்புன்னு என்னவோ தண்ணிக்குள்ள விழுந்துருச்சு. என்னன்னு ஒரு நிமிஷம் புரிஞ்சு பார்த்தால் நான் அப்போதான் புத்தம்புதுசா வாங்கின Ericsson T18. எடுத்துப்பார்த்தா ஆன் ஆக மாட்டேங்குது. அப்புறம் ஹீட்டர் மேல ஒரு அரைமணி வச்சுட்டு எடுத்தா வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. அன்னிலேர்ந்து சோனி எரிக்ஸன் தான். :)
இங்க எப்படின்னா, எல்லா கால்களும் முத அஞ்சு செகண்ட் இலவசம். மிகவும் எரிச்சலான விஷயம். என் நண்பன் ஒருத்தன் இப்படித்தான் பண்ணா பை செகண்ட் தான். அவனுக்கு அதுவே பேராவும் வச்சாச்சு. ஒரு விஷயத்த சொல்றதுக்கு முப்பது போன்கால்.
உதாரணம் சொல்லட்டா, தலை சுத்துதா இல்லியான்னு பாருங்க.
'ஹெல்லோ'-'ஹெல்லோ'-'நான் தான் பேசறேன்'-'சரி, சொல்லு, என்ன பண்றே?'-'சும்மாத்தான்.. ஒண்ணுமில்ல'-'நீ என்ன பண்ரே'-'அதேதான், டிவி பாக்கறேன்'-'அப்புறம்'-'வேரொன்னுமில்ல'-'சரி, நாளைக்கு கிளாசுக்கு வரியா'-'ஓ, வரேனே'-'சரி, அப்ப நாளைக்கு மீட் பண்லாம்'-'சரி'-'ஓகே, பை'-'ஓகே, பை'
பாத்தீங்களா. கிளாசுக்கு வரியான்னு கேக்க பதினஞ்சு கால். இதெப்படிருக்கு?
ஒரு சோகம், போன வருஷம் தான் முதல்முறையா என் வாழ்க்கையிலேயே பிக்-பாக்கெட்னா என்னன்னு நேரடி அனுபவம் கிடச்சது. மெட்ரோவில ஏறும்போது கூட்டத்துல படுபாவிப்பய எவனோ 'my precious' ஆன SE K700i சுட்டுட்டான். ஒரே வாரம் தான் என் கிட்ட இருந்தது. சுட்டவன இன்னிவரைக்கும் (இப்போகூட) சபிக்காம விட்டதில்ல. இப்படி பொறுப்பில்லாம் தொலச்சிதனால இனிமே விலை ஜாஸ்தி மொபைல்லாம் வாங்கினா தெரியும் சேதின்னு ஆர்டர் போட்டுட்டாங்க. :(
மொபைல் எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகமோ நிறைய கெட்ட விஷயங்களும் இருக்கு. நேரகாலமில்லாம கூப்டு டார்ச்சர் கொடுப்பாங்க. அப்புறம், இந்த எஸ்.எம்.எஸ் கொடுத்தா கொடுத்தவங்களுக்கு போய் சேர்ந்திருச்சுங்கற டெலிவரி ரிப்போர்ட். பல சம்யத்துல உதவின்னாலும் - 'இல்லியே, நீங்க அனுப்புன மெசேஜ் வரவேயில்லைன்னு' சால்ஜாப்பெல்லாம் சொல்ல முடியாது. இதே வகையில் கால் ரெஜிஸ்டர். 'நேத்திக்கு நாள் முழுக்க உங்களக் கூப்பிட்டேன். நீங்க போன எடுக்கவேயில்ல"ன்னு சொல்ல முடியாது. ஆனா இதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு லைன் கிடைக்கல. நெட்வர்க் பிஸின்னு சொல்லிக்கலாம். (இந்த தடவை பி.எஸ்.என்.எல் பல நேரம் இதையே தான் சொன்னது) இன்னொன்னு "Whole 10 Yards" படத்துல பாத்தேன். பேசிக்கிட்டே இருக்கும்போது, ஒரு பேப்பர போனோட மைக்கருகே கொண்டு வந்து கன்னாபின்னான்னு கசக்கிட்டு 'லைன் சரியில்லே'ன்னு எஸ்கேப் ஆகறது.
இப்பல்லாம் மொபைல் பத்து ரூபாய்க்கு ரெண்டுன்னு விக்கறாங்க. ரொம்ப நல்ல விஷயம். எல்லாருக்கும் தேவைப்படும் சாதனம் மலிவு விலையில் கிடைப்பது.
ஆனா, ஓண்ணு மட்டும். ரோடுல நடக்கறீங்களோ, ஓட்டறீங்களோ. சரியான இடத்தில பார்க் பண்ணிட்டு காலெல்லாம் அட்டெண்ட் பண்ணுங்க. ஓட்டும்போது கால் எடுத்தே ஆகனும்னா Handsfree-ஆவது யூஸ் பண்ணுங்க. சமீபத்துல, எனக்கு தெரிந்த டாக்டர் இந்த மாதிரி போன் பேசிகிட்டு வண்டியோட்டினதுல, மண் லாரிமேல் மோதி மிக பரிதாபகரமா இறந்தார். விதி அது இதுன்னு சொன்னாலும் 43 வயசு சாகற வயசில்லை. தவிர்க்கப்பட்டிருக்கலாம் இல்லையா? ஜாக்கிரதையா இருங்க.
மறக்க முடியாத விளம்பரங்கள்
நேத்திக்கு நண்பனுடன் ஸ்கூல் போன்ற கற்கால நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பேச்சு டிவியில் வந்த பிரபலமான விளம்பரங்கள் பக்கம் திரும்பியது. அவை விளம்பரம் செய்த பொருட்களை மறக்கமுடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொல்லவும் வேண்டுமா? அவற்றில சிலவற்றை இங்கே இடலாம் என்று எண்ணுகிறேன்.
1) பஜாஜ் ஸ்கூட்டர் - ஹமாரா பஜாஜ் என்ற அருமையான பாடலுடுடன் மிகவும் செண்டியான விளம்பரம்.
2) கெல்வினேட்டர் - ஓடுகளின் மேல் ஓடும் திருடன் வெப்பம் தாளாமல் தவிப்பான். ஆனால் ஓரே ஒரு வீட்டின் ஒடுகள் மட்டும் ஜில்லென்று இருக்கும்.
கெல்வினேட்டர் - இதே போல சில கலக்கல் விளம்பரங்கள் வைத்திருந்தனர். சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவரின் மனைவி பிரிட்ஜை ஓப்பன் செய்தால் பிர்ஹாக்களாக பொளந்து கட்டுவார். பல் செட்டை கழட்டி வைத்து பிரிட்ஜ் ஒப்பன் செய்யும் தாத்தா..
3) பெவிகுவிக் - மிகவும் புரபஷனல் உபகரணங்களோடு மீன் பிடிக்க திண்டாடும் ஆசாமி பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு குச்சியில் பெவிகுவிக் தடவி வரிசையாய் மீன் பிடிப்பான் ஒரு கோயிஞ்சாமி!
4) நேஷனல் எக் கார்ப்பரேஷன் - அண்டா கா பண்டா என்ற சூப்பர் பாட்டுடன் முட்டைகள் குறித்தது.
5) சோனி எரிக்ஸன் GF788 (மாடல் சரியாக நினைவிலில்லை) - ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் வழியப்போய், அந்தப் பெண் காபி பிளீஸ் என்று நக்கல் விடும் விளம்பரம். விருது கூட வாங்கியது என்று நினைக்கிறேன்.
6) க்ளோஸ் அப் - "மே ரோஸ் க்ளோஸ் அப் யூஸ் கர்த்தா ஹூ" என்ற ரீதியில் ஒரு வினோதமான குரல் பாட, சோடா பாட்டில் கண்ணாடி போட்டவர் ஆடும் வித்தியாச விளம்பரம்.
7) புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா??
8) விக்கோ டர்மரிக் கீரீம் - "விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்.." டீவியில் பார்த்ததாய் நினைவு இல்லை. எல்லா சினிமா தியேட்டர்களிலும் வரும். எரிச்சலூட்டும் என்றாலும் விக்கோவை மறக்க முடியாது.
9) ரீகல் சொட்டு நீலம் - சொட்டு நீலம் டோய் என்று குஷ்பு தீப்பந்தம் எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுவார்..
10) உஜாலா - நான் உஜாலவுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க?
நிறைய இருக்கு இந்த மாதிரி. உங்களுக்கு நினைவில் வருவதை சொல்லுங்களேன்.
Disclaimer: This Blog is not sponsored by any of the products mentioned above. The blogger doesnt endorse any of the products mentioned as well and hence doesnt receive any form of financial compensation from the respective companies, though wont mind if they decide to.
கந்தர் அனுபூதி: audio
நம்ம ராகவன் சைலண்டா கந்தர் அலங்காரம் பத்தி ஒரு அருமையான பதிவு ஆரம்பித்துள்ளார்.
எதோ என்னாலானது. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியிலிருந்து விஜய் சிவா சில பாடல்களை அருமையாகப் பாடியுள்ளார். எல்லாருக்கும் புரியற மாதிரி எளிமையான தமிழில் தான் பல பாடல்களும் இருக்கு. அதை வலையில் ஏற்றியுள்ளேன்.
சுட்டி இங்கே.
கேட்டுப்பாருங்க.
___________________________
குறிப்பு:
--
Чтобы скачать запрашиваемый вами файл, нажмите на ссылку:
http://ramblog.narod.ru/KandarAn.rm
Компания "Яндекс", владелец Народ.Ру, никак не связана с авторами и содержанием этого файла (см. Пользовательское Соглашение ). Оценка возможного риска , связанного с безопасностью загрузки данного файла, ложится на вас. Будьте внимательны!
---
மேலேயுள்ள பாட்டுக்கான லின்க்க க்ளிக் பண்ணா இப்படி வருதுன்னு சில பேர் சொன்னாங்க. தீர்வு: நடுவுல highlight-ஆன http://ramblog.narod.ru/KandarAn.rm லின்க்-க க்ளிக் பண்ணா ரியல் ப்ளேயர்ல பாடும். இல்ல லின்க்-க right click பண்ணி 'save target as' கொடுத்து உங்க வன் தகட்டிலும் இறக்கிக்கொள்ளலாம்.
__________________________
வரிகள் இங்கே
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. 1
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே. 6
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10
கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12
முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15
எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48
தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49
மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51
திருச்சிற்றம்பலம்
---------
(courtesy: project madurai)
இ.பி 5: புதிய மன்னர்கள்
கோர்பசேவ் பதிவியை விட்டு இறங்கியாச்சு. வந்தாரு போரிஸ் யெல்ட்ஸின்னு போன பதிவுல பார்த்தோமா? அவர் கூட ஒரு கூட்டமும் வந்தது. நியோ லிபரல்ஸ்னு சொல்லிக்கொண்ட கூட்டம். அனாடோலி சுபாய்ஸ், யிகோர் ஹைதர், போரிஸ் நெம்ட்ஸோவ் இப்படி பலர். கம்யூனிஸ்டுகளுக்கு கிட்டத்தட்ட கட்டம் கட்டிய பின் எதிர்ப்பு என்பதே இல்லாமல் இருந்தது. இதில் முக்கியமானவர் யிகோர் ஹைதர். "அதிர்ச்சி வைத்தியம்" என்ற தத்துவத்தின் படி ரஷ்யாவின் சோவியத் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நினைத்து அதன்படி அதிர்ச்சியும் கொடுத்தார்.
அதுவரையில் கட்டுப்பாடுக்குட்பட்டிருந்த பொருட்களின் விலைகள், தனியார்மயமாக்கத்தின் மேலிருந்த கெடுபிடிகள், நிறுவனங்களுக்கு அதுவரையில் கொடுக்கப்பட்டுவந்த சப்ஸிடிஸ் என எல்லாவற்றையுமே ஒரே நாளில் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் விளைவால் ஏற்பட்ட பணவீக்கத்தை "hyperinflation" என்று வருணித்தார்கள் என்றால் நீங்கள் நிலைமையில் தீவிரத்தை உணர முடியும். இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் செண்ட்ரல் வங்கி என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறதல்லவா? பொருளாதார மாற்றத்தை விரும்பாத வங்கி, ரூபிள்களை அச்சடிக்க ஆரம்பித்தது. ரூபிள் வெறும் பேப்பர் என்ற மதிப்பானது. ரூபிள்களில் ஊதியம் பெற்று வந்த சாமானிய ரஷ்யர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஆயிரக்கணக்கான ரூபிள்கள் சேமித்து வைத்திருக்கிறோம் என்று நினைத்தவர்களின் வாழ்க்கையளவிலும் சேர்த்த சேமிப்பு உப்புக்கு பெறாமல் ஆனது.
சோவியத் காலத்தில் கடைகளில் சில பொருட்களே கிடைத்தாலும், அவற்றை வாங்கும் சக்தி மக்களிடம் இருந்தது. ஆனால், சந்தைப் பொருளாதாரம் என்று வந்தபின் பொருட்கள் குவியத் தொடங்கின. வாங்கத்தான் ஆளில்லை. 1993-இல் 49 சதவிகித ரஷ்யர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தனர் என்று கூட ஒரு புள்ளிவிவரம் உண்டு. பல தொழிற்நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கதவை மூடின. மக்களும் வீதிக்கு வந்தனர்.
இந்த மாறுதல்களை எதிர்க்க ஆரம்பித்த மக்களையும், மற்றவர்களையும் அடக்குவதற்காக தன் கைப்பாவையான டூமாவின் (பாராளுமன்றம்) மூலமாய் சட்டமாய் இயற்றினார் யெல்ட்ஸின்.
1994-இல் இப்படி எல்லாப்புறத்திலிருந்தும் இடி வாங்கிக் கொண்டிருந்த ரஷ்யாவிற்கு வந்தது அடுத்த (இன்றளவும் தீராத) தலைவலி. செசன்யா. மிகவும் தெற்கிலுள்ள, அதிக இசுலாமியர்கள் உள்ள இந்த நாடு ரஷ்யாவிலிருந்து பிரிவதாய் சுதந்திர பிரகடனம் செய்தது. ஆனால், எண்ணெய் வளமிக்க அந்த ஏரியாவை விட்டுத்தர யெல்ட்ஸின் சம்மதிக்க வில்லை. படைகளை அனுப்பினார். ஆனால் morale இல்லாத படைகள் செசன்யர்களை கட்டுக்குள் வைக்க திண்டாடினர். ஒருவழியாய் பிப்ரவரி 95 இல் 25000 உயிரழப்புகளுக்கு செசன்யாவின் தலைநகர் கிராஸ்னியை கைப்பற்றினர். இது ஒரு புறம். வெளியுலகின் கவனமெல்லாம் இங்கே இருக்க, வரலாறு காணாத ஒரு நூதன மோசடி ரஷ்யாவினுள்ளே நடந்து கொண்டிருந்தது.
ரஷ்யாவையை விற்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தனர் யெல்ட்ஸினின் கூட்டாளிகளும் பார்ட்னர்களும். எனர்ஜி, தொலைதொடர்பு, யுடிலிட்டிஸ் ஆகியவற்றில் பல பிராந்திய, நாடு அளவிலான, தனி நகரங்களுக்கென பலநூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருந்தது சோவியத் யூனியனில். ஆனால், இந்த சமயம் என்ன செய்தனர் தெரியுமா? அரசுக் கம்பெனியின் CEO கம்பெனியின் தனியான முதலாளியாவார். மற்ற முக்கியஸ்தர்களுக்கு அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் கணிசமான பங்குகள் கொடுக்கப்படும். இப்படியாக அரசு நிறுவனம் தனியார் நிறுவனமாகும். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், யெல்ட்ஸின் ஆசியுடன் இதுதான் நடந்தது. பல பில்லியன் டாலர்கள் இந்த வகையில் அரசுத்தரப்பிலிருந்து தனியாருக்கு கைமாறின. சொந்தங்களுக்கு கொஞ்சம், மற்றவர்க்கு கொஞ்சம் என்று பெரிய ரஷ்ய ஆப்பத்தை பங்கு போட்டுக் கொடுத்தார் யெல்ட்ஸின். முக்கியமாய் 1996 அதிபர் தேர்தலில் தோல்வியடையும் நிலை வந்தபோது இந்த முதலாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில், சம்பள பாக்கி குறித்த போராட்டங்கள் வெடிக்காமல் வேலை செய்தவர்கள் 'சரி'யாக வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டதால். மிகவும் குறுகிய வெற்றி பெற்ற யெல்ட்ஸின் தன் பாலிஸியை தொடர்ந்தார்.
ஒரு உதாரணம். மிக்காயில் கோடர்கோவ்ஸ்கி. 2004 ஆம் ஆண்டில் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 16 ஆவது இடம். ரஷ்யாவின் மிகப்பெரும் பணக்காரர். (கொசுறு செய்தி: பில்லியனர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை நியு யார்க்கிடமிருந்து மாஸ்கோ சென்ற வருடம் கைபற்றியது! மாஸ்கோ: 33, நியு யார்க்: 31) அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று பூடின் மீது சேறு வாறி இறைக்கும் மேற்கத்திய ஊடகங்கள் அவர் எப்படி அவ்வளவு பெரும் பணம் ஈட்டினார் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவரின் எண்ணெய் நிறுவனமான யூகோஸ் இன்றைய சொத்துமதிப்பு 31 பில்லியன் $. அத்தகைய நிறுவனத்தின் 78 சதவிகித பங்குகளைப் பெற கோடர்கோவ்ஸ்கியின் மெனடெப் குழுமம் கொடுத்தது... வெறும் 450 மில்லியன் $. வாங்கி இருவருடங்களில் செய்த மதிப்பீடு படி அப்போதைய யூகோஸின் மதிப்பு 9 பில்லியன் $.உண்மைதான் பூடின் நடவடிக்கை எடுத்ததற்கு அரசியல் காரணமும் உண்டு. ஆனால், வெட்கமேயில்லாமல் சொந்த நாட்டையே சுரண்டி ஏப்பம் விட்டவருக்கு என்ன பெரிய வக்காலத்து வாங்க வேண்டியிருக்கிறது? இவர் ஒருவர் மட்டுமில்லை யெல்ட்ஸினின் காலத்தில் தலையெடுத்த இந்த சுரண்டல் கூட்டத்திற்கு பெயர் "oligarchs". போரிஸ் பெரஸோவ்ஸ்கி, வ்ளாடிமிர் குஸின்ஸ்கி என்று பத்து பன்னிரண்டு பேர் இருந்தனர். ஒவ்வொருவராய் பூடினின் நடவடிக்கைகளில் மாட்டிக்கொள்ள எஞ்சியிருப்பது மிகச்சிலரே. ரோமன் அப்ரமோவிச் அதில் மிகப் பிரபலம். ஆங்கில கால்பந்து அணியான செல்ஸியை வாங்கியவர். ஒரு மாநிலத்திற்கு கவர்னராகவும் தற்போது இருக்கிறார்.
இவர்கள் creme de la creme. சிறிய அளவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். 1998-ஆம் வருடம் ஆசிய பொருளாதார வீழ்ச்சியினாலும், எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு விழுந்ததனாலும் ரஷ்ய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஒரு டாலருக்கு 6000 ரூபிள்கள் என்று இருந்தது, 14000, 17000, 21000 என்று ஒரே வாரத்தில் வீழ்ந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல காலம். டாலர் கையிருப்பால். பின்னர், எப்போதென்று சரியாக நினைவில்லை. கடைசியில் இருக்கும் மூன்று ஜீரொக்களை மக்கள் வசதிக்காக நீக்கினார்கள். IMF கொடுத்த 22.5 பில்லியன் கடனாலும், உலகச் சந்தை ஒருவாறு ஸ்டபிலைஸ் ஆகி எண்ணெய் விலை மீண்டும் ஏறத்தொடங்கியதாலும் தட்டுத்தடுமாறி கிரைஸிஸிலிருந்து வெளிவந்தது.
அரசியல் நிலைமையும் சீரானதாய் அக்காலத்தில் இல்லை. செர்னோமிர்டின், கிரியென்கோ, ஸ்டெபாஷின், ப்ரிமாகோவ் என்று ஆறேழு பேர் பிரதமர்களாய் musical chair விளையாடினர். காரணம் யெல்ட்ஸின்!
இதைத்தவிர, சமூக அளவிலான பிரச்சனைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. குடிப்பழக்கம், கிரைம், போதை மருந்து, எய்ட்ஸ், டி.பி என்று திண்டாடினார்கள். காரணம், வேலைவாய்பின்மை, நிரந்தரமினமை.
1999-இல் ஒருவழியாய் நல்ல காலம் பிறந்தது. உலகச் சந்தையில் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதியான எண்ணெயின் விலை கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. யெல்ட்ஸின் திடீரென்று பதவி விலக முடிவு செய்து தம் வாரிசென்று அதுவரை அறியப்பட்டிராத முன்னாள் கேஜிபியான பூடினை நியமித்தார். பிரதமர் ஆனவர் பின்னார் அதிபராகவும் ஆனார். தலைவர் சொன்னதுபோல் பாய்ந்து ஓடும் குதிரையாய் துள்ளிக்குதித்து எழுந்து முன்நோக்கி பாயத்தொடங்கியது ரஷ்ய பொருளாதாரம்.
---------
Local Tips:
வெளியில் செல்லும்போது எந்நேரமும் பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். மூன்று நாட்களுக்குமேல் ரஷ்யாவில் தங்கினால் நீங்கள் தங்கும் நகரத்திலுள்ள உள்துறை அமைச்சகத்தின் "ரெஜிஸ்ட்ரேஷன்" எனப்படும் ஸ்டாம்ப் உங்கள் பாஸ்போர்டிலோ, அல்லது நுழைந்தபோது அளிக்கப்பட்ட migration card இலோ இருக்க்வேண்டும். பெரும்பான்மையான ஓட்டல்கள் இந்த ஸ்டாம்ப்பை இலவசமாக பெற்றுத்தந்துவிடுவர். டிரான்ஸிட் விசாவில் வருவோருக்கு 15 நாள் டைம் உண்டு.
ராண்டமாக டாகுமெண்ட் சோதனைகள் நடத்த போலிஸுக்கு அதிகாரமுண்டு. சரியான முறையில் இல்லையென்றால் அபராதம் கட்டவேண்டி வரும்.
---------
5 ரஷ்ய வார்த்தைகள்
1. தொலைபேசி: Thi-li-fon - телефон
2. கழிவறை: Thu-a-lyet - туалет
3. ஓட்டல்: Ga-sthi-ni-tsa - гостиница
4. உணவகம்: Ri-Stho-Ran - ресторан
5. ஹாஸ்டல்: Obshe-zhi-thi-ye - общежитие
(தொடரும்)
முந்தைய பதிவுகள்: 1, 2, 3, 4
இந்த வருடத்திய நோபல் பரிசுகள்!
இதைக்குறித்து யாராவது எழுதுவார்கள் என்று பார்த்தேன். உம்மைத்தொகை போட்டு ஆழமான தலைப்புகள் கொடுக்கும் நையாண்டித் தலக கூட கண்டுக்கிட்டதா தெரியல. இந்த மாதிரி அறிவுப்பூர்வமான விஷயங்களில் தமிழ்மணத்தில உலக அறிவு கம்மியா இருக்கறத சரி பண்ண நானே கிளம்பிட்டேன்! இந்த வருஷத்திய விருது பெற்றோர் பட்டியல்..
துறை - இயற்பியல்: ஜான் மெயின்ஸ்டோன் மற்றும் தாமஸ் பார்னெல் - ஆஸ்திரேலியா
செய்தது: Pitch Drop Experiment
1927 ஆரம்பித்தது இவர்களின் ஆராய்ச்சி. ஒரு துளி தார் கண்ணாடி பனலின் வழி கீழே ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒழுகுவதை பொறுமையாய் பாலோ செய்தது.
---
துறை - உலக அமைதி: க்ளேர் ரிண்ட் மற்றும் பீட்டர் சிம்மன்ஸ் - பிரிட்டன்
சுட்டி
செய்தது: 'நட்சத்திர சண்டை' (மொழிபெயர்ப்பு உபயம்: ஆழக்குத்தர்) திரைப்படத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது லோகஸ்ட்கள் எனப்படும் பூச்சிகளின் மூளையில் ஏற்படும் நிகழ்வுகளை பதிவு செய்தது.
---
துறை - இரசாயனம்: எட்வர்ட் கஸ்லர், பிரையன் கெட்டல்பிங்கர் - அமெரிக்கா
சுட்டி
செய்தது: தண்ணீர் மற்றும் சிரப்(syrup). இந்த இரண்டு மீடியம்களில் எதில் மனிதர்கள் வேகமாக நீந்த முடியும் என்ற கேள்விக்கு விடை கண்டது.
---
துறை - உணவு: Dr. யோஷிரோ நகமாட்ஸ் - ஜப்பான்
செய்தது: கடந்த 34 ஆண்டுகளாக அவர் உண்ட அத்தனை உணவையும் படம்பிடித்து பின்னர் அவை குறித்து ஆராய்ச்சி செய்தது
---
என்ன இதெல்லாம் ஓண்ணுகூட நீங்க கேள்விப்படலையா?
சரி சரி, இது அசல் நோபல் இல்லை. ஆனா நோபல் மாதிரி. இங்க போய் பாருங்க. இன்னும் இந்த மாதிரி மணிமணியான ஆராய்ச்சிகளப் பத்தியெல்லாம் நிறைய போட்டுருக்காங்க.
இ.பி - 4: பூலோக வைகுண்டமா, நரகமா?
சென்ற பதிவில் KGB, GRU, அரசியல் கொலை என்றெல்லாம் பயங்காட்டினேன் இல்லையா? அதைப் படித்துவிட்டு மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் "SU was all evil" என்ற கருத்தில் நம்பிக்கை ஏற்படலாம். ஆனால், அது முழுக்கவும் உண்மையானதன்று. சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சோஷலிஸ தத்துவம், அந்த வகையில் சோவியத் யூனியன் மனிதர்களுக்கானது. வேலைப் பாதுகாப்பு, கல்வி, இருக்க இடம், உண்ண உணவு, ஆரோக்கியம் என்று எல்லாம் எல்லார்க்கும் வேண்டும் என்று வலியுறுத்திய மேன்மையான மார்க்கம் அது. அதே நேரத்தில், மேற்கத்திய சந்தைப் பொருளாதாரத்தை ஒரு அடி தள்ளியிருந்து ஆராய்ந்தால் அது ஒரு "jungle" சமூகம் என்று புரியும். survival of the fittest அல்லது strongest என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். ஆனால் சோஷலிஸம் வலிமையான குழந்தைகளுக்கு அளிப்பது போலவே நோஞ்சான் குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் அமைத்துத்தரும் மனித பெற்றோர் போன்றதாகும். நானும் சொல்வேன், சோவியத் யூனியன் சோஷலிஸத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டு இல்லை. அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களேயன்றி, கொள்கையல்ல. இருந்தாலும் சோவியத் அரசில் இன்றளவும் வளர்ந்த நாடுகளில் நடக்காத பல நல்ல விஷயங்கள் நடந்தன. அவையாவை என்று பார்க்கலாமா?
விவசாயத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருந்த ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சோவியத் யூனியன் என்னும் ஒரே காரணத்தினாலேயே தொழிற் சார்ந்த வளர்ந்த பொருளாதாரங்கள் ஆகின. ரஷ்யா அதுவரையில் ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் கட்டமைப்பு விஷயங்களில் வியத்தகு வளர்ச்சிபெற்றன.
முதலில், என்னைப் பொறுத்தவரை மிடில் ஏஜஸிலும், பிறகு ஸ்டீம் எஞ்சினால் ஐரோப்பாவில் நடந்த மாபெரும் தொழிற்புரட்சியும் பெரும்பாலும் ரஷ்யாவை அவ்வளவு எளிதில் வந்தடையவில்லை. இம்பீரியல் ரஷ்யாவை ஆண்டவர்கள் சுகமாய் வாழ்ந்தார்களைத் தவிர ஏழை மக்கள் நிலை சிறிதும் உயரவில்லை. கல்வியறிவின்றியும், ஏழ்மையிலும் சிக்கி தவித்தனர் பாமரர்.
1917 புரட்சிக்குப் பின் நிலைமை தலைகீழாய் மாறியது. இராட்சத வேகத்தில் தொழிற்புரட்சி நடந்து முப்பது ஆண்டு காலத்திற்குள் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாய கல்வியறிவு. ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அநேகமாக எல்லா ஊர்களிலும் மேல்நிலைப் பள்ளிகள், அடிப்படை கல்லூரிகள் அமைக்கப்பட்டன. முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. குறிப்பிட்டு சொல்லவேண்டியது மாஸ்கோவிலுள்ள Moscow State University மற்றும் St.Petersburg State Technical Univ போன்றவை. இவைத்தவிர, பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவற்றில் படிப்பதற்கும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. இந்த வகையில் வந்தது தான் 99.6 சதவிகித படிப்பறிவு.
வீட்டு வசதி என்று எடுத்துக்கொண்டால் அனைவருக்கும் வீடு என்ற கொள்கை இருந்தது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் முதலுரிமை அளிக்கப்பட்டது. பெரும் நகரங்களென்றும், Soviet Style குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டன. நம்மூரைப்போல தனித்தன்மையுடைய வீடுகள் இல்லாமல், அனைவருக்கும் ஒரேவிதமான வீடுகள் என்று வழங்கப்பட்டது. Квартира (குவார்த்தீரா) என்றழைக்கப்பட்டவை இந்த அப்பார்ட்மெண்ட்கள். pre-contructed blocks-ஆக கொண்டு வந்து ஓன்று சேர்த்து பலமாடிக் குடியிருப்புகளாய் மாறின. தனித்தன்மை இல்லாமல் இருந்தாலும் மக்களில் பெரும்பாலானோர்க்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த மாதிரி தனி அப்பார்ட்மெண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அம்மாதிரி முடியாதோரருக்காகவே communalka என்றழைக்கப்பட்ட கட்டிடங்களும் உண்டு. அவற்றில் மூன்று, நான்கு ரூம்கள் கொண்ட apt-இல் ஒவ்வொரு ரூமிற்கும் ஒரு குடும்பம். இவைகளுக்கு பொதுவாய் சமையலறையும், கழிவறை மற்றும் குளியலறை. அதே போல் பொதுவாக தொலைபேசி, மின் கட்டணம் போன்றவை. இதில் ஒரு சுவாரசியமான விஷயம். நம்மூரில் ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரு பெட்ரூம், ஒரு லிவிங் ரூம் மற்றும் கிச்சன், பாத்ரூம் இல்லியா? இங்கே அப்படியில்லை. ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரே ரூம் (லிவிங்/பெட்) அப்புறம் கிச்சன், பாத்ரூம்.
அடுத்தது healthcare. சோவியத் காலத்தில் காஸ்மெடிக் சிகிச்சைகள் தவிர முற்றிலும் இலவசம். போர் veteran-களுக்கும் 60 வயது தாண்டியவர்க்கும் முற்றிலும் இலவசம் இன்றளவும். வேறென்ன வேறென்ன வேண்டும் என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா? கர்ப்பிணிப் பெண்கள் உட்பட. குழந்தைகள் நலத்தில் கூட முன்னணி. இலவச க்ரெச்-கள் மற்றும் சுகாதார மையங்கள். ஆனால், தரத்தில் குறைந்தவை அல்ல. இந்த விஷயத்தில் இன்றளவும் மேற்கத்திய நாடுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.
வேலைவாய்ப்பு என்பது பிரச்சனையாகவே இல்லை. job security-உம் அதிகம். ஆனால் இந்த வகை உத்திரவாதத்தினால் உற்பத்தித்திரன் குறைந்ததென்னவோ உண்மை. மேலும், பணியுயர்வு சீனியாரிட்டி படியே நடந்தது. மெரிட்டினால் அல்ல. இது ஒரு புறமென்றால், டார்கெட்டை அடைவதற்குத் ஊக்கங்கள் கொடுக்கப்பட்டதேயொழிய பொருளின் தரம் குறித்து கவலைப்படவில்லை.
அடுத்து போக்குவரத்து. அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கும் முழுக்க இலவசம். மற்றவர்க்கும் ஒன்றும் அவ்வளவு விலையுயர்ந்ததல்ல. ஒப்பீடுக்கு இன்றைய தேதியில் மாஸ்கோவின் ஒரு மெட்ரோ பயணத்திற்கு டிக்கட் விலை - 13 ரூபிள்கள் (50 cents). அதுவும் மெட்ரோவிற்குள் நுழைவதற்குத்தான் இந்த விலை. உள்ளே சென்றுவிட்டால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை மெட்ரொவிற்குள்ளேயே சுத்தலாம். சோவியத் காலத்தில் இன்னும் மலிவாகவே இருந்திருக்கவேண்டுமல்லவா?
பெண்களின் நிலை முன்னேறியதாகவே இருந்தது. கட்டாயக் கல்வி ஆனதாலும், சமத்துவக் கோட்பாடு புகுத்தப்பட்டதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டில் அடைந்து கிடக்காமல் சுதந்திரமாய் வெளியில் வந்தனர். 99 சதவிகிதத்திற்கும் மேலான படிப்பறிவு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. டிரெடிஷனலான கல்வி மற்றும் மருத்துவத்துறையில் பெரும்பாலான இடங்கள் பெண்களுக்கே. இவை தவிர, பெண்கள் மற்ற நாடுகளில் அச்சமயத்தில் நுழையாத விஞ்ஞான, ஆராய்ச்சி, பொறியியல் என்றும் சக்கைபோடு போட்டார்கள். ஆண்களின் துணை தேவையில்லாமல், தனித்தே வாழ முடியும் என்று 30-40 வருடங்களுக்கு முன்னரே புரட்சி செய்தனர்.
விவசாயமும் நவீனப்படுத்தப்பட்டது. யாரோ ஒரு ஜமீந்தாருக்கு உழைத்துக் கொட்டாமல், கலெக்டிவைஸ்டு பார்ம்களின் பயன் உழைப்பாளிகளை நேரடியே சென்றடைந்தது.
அரசியல் செல்வாக்குடையவர்களுக்கு மரியாதை தனி. அதை விட்டு பார்த்தால் சமத்துவமே எங்கும். கடைநிலை பணியாளர் ஆனாலும், மேலாளர் ஆனாலும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை உண்டு. இது சார்ந்த ஒரு பழைய பதிவு இங்கே.
மொத்தத்தில், அதுவரைக்கும் ஒன்றுமில்லா நாடுகள் ஒன்று சேர்ந்து உலகத்தையே மிரட்டும் அளவுக்கு அசாத்யமான அறிவியல் வளர்ச்சியும், ஆயுத பொருளாதார வளர்ச்சியும் பெற்றன. வெறும் 30 ஆண்டுகளுக்குள் உலக வல்லரசாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவிற்கு ஈடுகொடுத்து bipolar world என்று எல்லோரும் சொல்லும் வண்ணம் வலியுற்றிருந்தது. எல்லாம் சரி, ஆனால் இந்த அந்தஸ்து கிடைக்க அம்மக்கள் கொடுத்த விலை? தனிமனித சுதந்திரம் தான்.
-------
Local Tips
ரஷ்யாவிற்கு பயணிப்பதாய் இருந்தால் பணத்தை டாலராகவோ அல்லது உங்கள் ஊர் கரென்ஸி பெரிய அளவில் புழங்குவதென்றால் அதிலேயே கூட கொண்டு வரலாம். பாங்குகளிலும் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அதை விட வசதி: நம்மூர் பொட்டிகடை போல "கரென்ஸி எக்ஸ்சேஞ்" எல்லா இடத்திலும் இருக்கும். обмен валюты என்று எழுதி வைத்திருப்பார்கள். வெளியிலேயே எக்ஸ்சேஞ் ரேட்டும் போட்டிருப்பார்கள். சில இடங்களில் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள். ரஷ்ய மொழி தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. பணத்தையும், பாஸ்போர்ட்டையும் கொடுத்தால் அவர்களே ரூபிளாக மாற்றித் திருப்பித்தந்துவிடுவார்கள்.
பணமாக கொண்டுவராமல் உங்கள் சர்வதேச ஏடிம் கார்டுகளோ அல்லது டிராவலர்ஸ் செக்-காகவும் எடுத்து வரலாம். ஏ.டி.எம்-களுக்கு "Банкомат" என்று எழுதியிருக்கும். காசோலைகளை வங்கிகளிலோ அல்லது மேற்சொன்ன எக்ஸ்சேஞ்ச் செண்டர்களிலோ மாற்றலாம்.
-------
5 ரஷ்ய வார்த்தைகள்
1. car: ma-shyi-na - машина
2. Bus: avto-bu(உ)s - автобус
3. Metro/ Subway: Mi-thro - метро
4. Train: po-ezd - поезд
5. Plane: sa-ma-lyoth - самолёт
அடுத்த பதிவில் சோவியத் யூனியன் வீழ்ந்த பின் ரஷ்யர்களின் தலையில் விழுந்த இடி பற்றி.
(தொடரும்..)
முந்தைய பதிவுகள்: 1, 2, 3
இ. பி - 3: யூனியனின் கடைசி அத்தியாயம்
சென்ற பதிவை படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு தொடர்ந்தால் இப்பதிவு இன்னும் எளிதாக இருக்கும். பதிவின் முடிவில் இருவரைப் பற்றிச் சொன்னேனல்லவா? அவர்களில் ஒருவர் உலகெங்கும் கொண்டாடப்படும், ஆனால் ரஷ்யாவில் அடியோடு வெறுக்கப்படும் கோர்பசேவ். ஆனால், அந்த இரண்டாவது அதிரடி ஆசாமி யார் என்று இன்னும் புரியாதவர்களுக்கு - அவர் தான் போரில் யெல்ட்சின் (Boris Yeltsin). இவர் என்ன செய்தார் என்று சிறிது நேரத்தில் பார்ப்போம்.
முதலில் கோர்பசேவ். இவரின் "பெரிஸ்ட்ரோய்கா", "க்ளாஸ்நோஸ்த்" மற்றும் "உஸ்கோரெனியெ" பாலிஸிகள் மிகவும், குறிப்பாய் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவை. முறையே மறுகட்டுமானம், transparency மற்றும் விரைவுபடுத்துதல் என்று பொருள் கொள்ளலாம். 1987-இல் இத்திட்டங்களில் மூலம் சோவியத் யூனியனை ஊறித்தேங்கிப் போன ஊழலலிருந்தும், ரெட்-டேப்பிலிருந்தும், அதிதீவிரமான சென்ஸார்ஷிப்பிலிருந்தும் விடுவிக்க முயன்றார் கோர்பசேவ். ஆனால், ஆட்சிசுகத்தில் திளைத்திருந்த அவரின் கட்சிசகாக்கள் இந்த மாற்றங்களை விரும்பவில்லை. கருவிக்கொண்டே காத்திருந்தனர். ஆனால், அவரால் கட்டவிழ்க்கப்பட்ட பேச்சு சுதந்திரம் அவருக்கே எதிரியாய்ப் போனது. சோவியத் யூனியனின் குளறுபடிகள், குழப்பங்கள் எல்லாம் ஊடகங்களின் மூலம் வீதிக்கு வந்தது. அன்றளவிலும் தெய்வமாய் வணங்கப்பட்ட ஸ்டாலினின் கொடுங்கோல் முறைகள் அம்பலமாயின. அதுவரை பொறுத்திருந்த மத்திய ஆசிய நாடுகளின் anti-russian எண்ணங்கள் தீவிரமாய் வேரூன்றத்தோன்றியது. செய்வதறியாது தவித்த கோர்பசேவ், சோ.யூ-வின் முதல் ஜனநாயக தேர்தலை நடத்தி அதில் முதலும் கடைசியுமாக சோவியத் ஜனாதிபதியானார்.
இந்த நிலையில் இடையில் புகுந்தார் யெல்ட்சின். சோ.யூவின் அங்கமான Russian Socialist Republic இன் Congress of soviet deputies தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதல் காரியமாக சோவியத் யூனியனின் சட்டங்கள் சில தங்களுக்கு ஒவ்வாது என்று குண்டைப் போட்டார். கோர்பசேவ்வை பொதுவில் பலமுறை அவமானப்படுத்தி சோ.யூவின் பொதுச் செயலாளர் ஒன்றும் கடவுள் இல்லை என்று உணர்த்தினார். கோர்பசேவ் zero வாகவும் யெல்ட்சின் ஹீரோவாகவும் மாறியது: ஆகஸ்ட் மாதம் 1991-ஆம் வருடம் தீவிர கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் இராணுவத்தின் உதவியோடு கோர்பசேவை வீட்டுச் சிறை பிடித்து, சுதந்திரப் பிரகடனம் செய்த ரஷ்யாவை அடக்க அதன் வெள்ளை மாளிகை மேல் டாங்கிகளை ஏவினர். ஆனால், பொறுமையிழந்த மக்கள் யெல்ட்ஸினின் பின்னால் அணி திரண்டு செய்த ஆர்ப்பாட்டத்தினால் இராணுவம் பின்வாங்கியது. ஒரு வழியாய் 24 ஆகஸ்ட் 1991 விடுதலை என்று வந்தது. கோர்பசேவ் ஜனாதிபதி என்று விடுவிக்கப்பட்டாலும், அவரின் ஆட்சி அதிகாரம் செல்லுபடியாகவில்லை. ஆனாலும் 91-ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சோவியத் யூனியன் நிலைத்திருக்க வேண்டுமென்றே விரும்பினர். ஆனால், மற்ற நாடுகளை அடக்கியாளும் தெம்பு கோர்பசேவிடத்தில் இல்லை.
டிசம்பர் 8, 1991 - உக்ரேயின் மற்றும் பெலாருஸ்ஸூடன் சேர்ந்து ரஷ்யா, சோவியத் யூனியன் இனி செல்லுபடியாகாது என்றும் அதற்கு பதில் தன்னிச்சையான CommonWealth of Independent States உருவாக்கப்படும் என்று பிரகடனம் செய்தது. டிசம்பர் 24, ரஷ்யா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சோவியத் யூனியனின் இடத்தை ஏற்றது. அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்த கோர்பசேவ், அதன் மூலம் சோவியத் யூனியனிற்கு முடிவுரை எழுதினார்.
சரி, ஒருவழியாய் குழப்பம் தீர்ந்து நல்ல காலம் பிறக்கப்போகிறது என்று எண்ணிய ரஷ்யர்களின் தலையில் விழ மாபெரும் இடியொன்று காத்திருந்தது தெரியாமல் ஆர்வத்துடன் பொற்காலத்தை எதிர்பார்த்திருந்தார்கள். சோவியத் கால நிலைமையே தேவலை என்று மக்களை நினைக்க வைக்கும் அளவிற்கு இருந்தது அந்த அதிர்ச்சி. அப்படி என்ன அதிர்ச்சி என்று பார்ப்பதற்குமுன் - எப்படி மக்கள் அந்த பழைய அடிமை வாழ்க்கையையே மீண்டும் விரும்பி ஆதரிக்குமளவிற்கு மாறினார்கள் என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். அப்படி அதிசயப்படுபவர்களுக்கு சோவியத் நாடுகளில் இருந்த propaganda பீரங்கிகளுக்கு நிகராக அதே அளவு வீரியத்துடன் மேற்கத்திய நாடுகளிலும் பிரச்சார பீரங்கிகள் இயங்கி வந்தன என்பதே செய்தியாய் இருக்கலாம். சோவியத் யூனியன் பூலோக நரகம், அங்கு இருந்தவர்கள் எல்லோரும் கொடியவர்கள் என்பது மேற்கத்திய பீரங்கிகளின் நிரந்தர பிரச்சாரம். அப்படி உண்மையாகவே பூலோக நரகமா, சுவர்க்கமா என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
-----
சரி, இப்போ ஒரு புது பகுதி: தினசரி ஐந்து ரஷ்ய வார்த்தைகள் - பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்
எப்படி ஒலிக்கவேண்டும் என்பதை மட்டும் rough-ஆக ஆங்கிலத்தில் சொல்லி விடுகிறேன். "-" syllable பிரிவதைக் குறிக்கிறது.
1. வணக்கம் - formal : Drasth-vy-iche - Здраствуйте
2. வணக்கம் - informal : Pri-vy-et - Привет
3. நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?: Vi Ga-va-ri-che pa Ang-lis-ki? - Вы говорите по Английский?
4. நன்றி: Spasibo - Спасибо
5. Bye - formal: Das-vi-dan-ya До-Сведения
-----
இன்னொரு புதிய பகுதி: Local Tips
1 US$ = 28.5 Rubles
1 Euro = 35.6 Rubles
1 Ruble = 55.29 INR
ரூபிள்ஸ் கரன்ஸி நோட்டுகள்: 10,20,50,100,500,1000 மதிப்புகள்
ரூபிள்ஸ் சில்லறை மதிப்புகள்: 1,2,5, 10 (அரிது)
1 ruble = 100 Kopeks
கோபெக்ஸ் மதிப்புகள்: 1,5,10,50
------------
(தொடரும்)
முந்தைய பாகங்கள்:
1. some facts
2. குட்டி வரலாறு
சூப்பரின் சாதனையை இருட்டடிக்கும் ஆங்கில வெப்சைட்கள்!
இப்போதான் பார்த்தேன்! வசூலில் உலகத் திரைப்படங்களின் வரிசையில் சந்திரமுகி 23-ஆவது இடத்தில் உண்மையிலேயே இருக்காம்! தமிழ்சினிமா.காம் சொல்லிருக்கு. பின்ன இல்லாமேயா?
உலகத் திரைப்பட வசூலில் 23 -வது இடம் யாருக்கு? என்று boxofficemojo.com -ஐ பாத்தா
23. Star Wars: Episode II - Attack of the Clones - மொத்த வசூல் 649.4 மில்லியன் US$
ஜார்ஜ் லூகாஸ்னு ஒரு கிறுக்குபயபுள எடுத்த டப்பா படம் எங்க தலைவர விட நிறைய வசூல் செஞ்சுட முடியுமா? செய்யத்தான் விட்டுடுவோமா?
ஓண்ணு அந்தப் பயலுகளுக்கு நம்ம சூப்பர் ஸ்டார தெரியல, இல்லேன்னா இந்தியன் முன்னுக்கு வந்திடக்கூடாதுன்னு இப்படி போட்டு வச்சுருக்கான். தமிலன் நான் யார்ட போய் இதப் பத்தி முறையிடறுதுன்னு சொன்னீங்கன்னா வெளக்குமாறு, செருப்பு எடுத்துகிட்ட கிளம்பிடுவோம்!
நம்மூர் கணக்குக்கு வெறும் 3,250 கோடி ரூபாய் தான் வரும்.
இந்த ஜுஜுபி வசூல சந்திரமுகி தாண்டிருக்காதுன்னு நினக்கீறீங்களா?
--
தமிழ்சினிமா.காமின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டுமே எழுதியது என்று டிஷ்க்ளேய்மர் போட்டுக்கறேன்!
இரும்புத்திரைக்கு பின்னாலிருந்து - 2: வரலாறு
இந்தப் பதிவப் படிக்க கம்பூயூட்டர், இணைப்பு தவிர தேவையான பொருள் ஒன்னு இருக்கு. அது கொசுவத்திச் சுருள். லிக்விடெல்லாம் சரியா வராது. டார்டாய்ஸ் வாங்கி நல்லா பக்கத்திலேயே பத்தவச்சுக்குங்க. ஏன்னா, கொஞ்சம் வரலாறு பாக்கணும் இன்னிக்கு. ரஷ்யாவின் குறிப்பா சோவியத் வரலாறு பத்தி பலருக்கும் தெரிந்திருந்தாலும், மெகாத்தொடர்னு எழுத ஆரம்பிச்சுட்டா வரலாறுன்னு சொல்லி நாலுவாரம் இழுக்கற அருமையான சான்ஸையெல்லாம் விட்டுட முடியுமா? என்னைப் பொறுத்தவரை ரஷ்ய வரலாற்றை சோவியத் யூனியன் உடைவதற்கு முன்னும் பின்னும் என்று பிரிக்கலாம். எவ்வளவு சுருக்கமா சொல்ல முடியுமோ சொல்லிடறேன்.
12-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு விதமான tribes ஆக பிரிந்து இருந்த ரஷ்ய மண்ணில் Grand Duchy of Muscovy என்ற பெயரில் பிரிமிடிவ் அமைப்பு தோன்றியது. டானியல் அலெக்ஸாண்ட்ரோவிச் என்பவர் மாஸ்கோ நகரம் இருக்கிற ஏரியாவில் தக்கணூண்டுக்கு ஆரம்பித்த நாடு இன்று மேற்கில் போலந்து, பின்லாந்து என்று தொடங்கி சீனா, மங்கோலியா வரை விரிந்து கிழக்கே ஜப்பான் அருகே வரை பரந்து கிடக்கிறது. இந்த விரிவாக்கத்தை மிக வெற்றிகரமாக நடத்தியது மூன்றாம் இவான். இவனின் கீழ் தான் பிரம்மாண்ட சைபீரியா ரஷ்யாவின் கீழ் வந்தது. பின்னர் கொடுங்கோலன் இவான் 1V, கேத்தரீனா என்று பலரின் கீழ் ஐரோப்பிய இராஜாங்கங்களிடையேயும் குலாவத் தொடங்கியது ரஷ்யா. ஜார் என்று சொன்னவுடன் சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவது இரண்டாம் நிக்கோலாஸ் தான். முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட பெருந்தோல்வியாலும், வழக்கம்போல் ஏழைகளை குறித்து கவலையில்லாமல் சுகபோக வாழ்வில் ஈடுபட்டிருந்த நிக்கோலாஸ் 1917-இல் நடந்த புரட்சியை அடக்க முடியாமல், போல்ஷேவிக்குகளிடம் பிடிபட்டு பரிதாபமாக கூண்டோடு கைலாசம் போனான். அதோடு ஜார் வம்சம் அழிந்தது.
லெனினுக்கு பின் 1927-இல் ஆட்சி பீடத்தில் ஏறினான் ஜார்ஜியாவைச் சேர்ந்த கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின். அப்போதுவரை விவசாயத்தையே பெரும்பாலும் நம்பியிருந்த நாட்டில், அதிரடியாய் தொழில்துறை மற்றும் கட்டமைப்பு முன்னேற்றம், பொதுவுடைமையாக்குதல்னு பல காரியங்களைச் செய்தான். ஸ்டாலின் மட்டும் இல்லாதிருந்தால், சோவியத் யூனியன் முன்னேறியிருக்க வாய்ப்பே இல்லையென்று கூறுவோரும் உண்டு. கிராம நிலங்களையெல்லாம் கல்ஹோஸ் என்ற பெயரில் collectivization செய்யப்பட்டது. குறிப்பாய் கஸ்ஸாக்ஸ் எனப்படும் மக்கள் வசித்த தற்போதைய கஸக்ஸ்தானில் பெரும் ரத்தவெள்ளத்தில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாற்றத்தை எதிர்த்தோர் கையாளப்பட்டவிதம் ஹிட்லரையே மிஞ்சிவிடும். The Great Purges என்றழைக்கப்படும் இந்தக் கொடுமையான காலத்தில் அறிவாளிகள் எனக் கருதப்பட்ட விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள், பொறியாளர்கள் என பாகுபாடின்றி சைபீரியாவில் உருவான குலாக்குகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். உலகின் முதல் concentration campகள் இந்த gulag-கள். இதில் இறந்தோர் எண்ணிக்கை பலலட்சங்கள். இன்றளவும் மாஸ்கோவின் முக்கிய சாலைகளில் ஒன்றான Kutuzovskiy Prospekt-இல் உள்ள வெற்றிப்பூங்காவிற்கு இடப்பக்கம் திரும்பினால் Matvievskoe என்றழைக்கப்படும் குட்டி காட்டிற்குள் ஸ்டாலினின் டாச்சா (பண்ணை வீடு) இருக்கிறது (டாச்சா என்பது என்ன என்று வேறொரு சமயம் பார்ப்போம்). அந்த வழியாக சென்றாலே பீதியாய் இருக்கும். இந்த பர்ஜஸ் குறித்து ஸ்டாலின் இரவுச்சாப்பாட்டு நேரங்களில் தன் அந்தரங்க சகாக்களுடன் பல முடிவுகள் எடுத்தது இந்த வீட்டில்தான். மேலும் மேற்கு ரஷ்யாவில் இருந்த பல கிராமங்களை கூண்டோடு புகைவண்டியில் ஏற்றி கிழக்கில் சைபீரியா, ஆசியா பகுதிகளில் அத்துவானத்தில் செட்டில்மெண்டுகள் நிறுவ திட்டங்கள் தீட்டியதும் இங்குதான். அது ஏனென்றால் மத்திய மற்றும் கிழக்கு ரஷ்யாவில் மேற்கத்திய காக்கேஸியன் ரஷ்யர்களை குடியேற்றத்தான். இப்படி தனிமனித அளவில் கொடுமைப்படுத்தப்பட்டாலும், சோவியத் யூனியன் நாடென்றளவில் தொழில்துறையில் அபரிமிதமான வளர்ச்சியடைந்தது.
நாஜி ஜெர்மனியுடன் இரண்டாம் உலகப்போருக்குமுன் சமரச ஒப்பந்தம் செய்துகொண்ட ஸ்டாலின் போர் முன்னேற்பாடுகளை கவனிக்காமல் அசட்டையாக இருந்தான். ஹிட்லரின் படைகள் சான்க்ட் பீட்டர்புர்க்கை சூழ்ந்து கொண்டு இரண்டரை வருடங்களுக்கு சீஜ் வைத்தன. பல மில்லியன் மக்கள் மாண்ட இந்த சீஜில் தம் செல்லப்பிராணிகளையும், சில சமயங்களில் இறந்தவர்களையும் உணவுத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்க்காக உண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர் பீட்டர்புர்க் மக்கள். இன்றளவும் ரஷ்ய மக்களிடம் ஆறாத ரணம் இந்த இரண்டாம் உலகப்போர். ஏறத்தாழ 10 மில்லியன் ரஷ்யர்கள் உயிரிழந்தனர். தோல்வியின் விளிம்பிற்கே போன சோவியத் யூனியனுக்கு சாதகமாய் இரு விஷயங்கள் இருந்தன. ரஷ்யாவின் சீதோஷ்ண நிலை மற்றும் மிச்ச இடங்களில் பெற்ற தோல்விகளின் காரணமாகவும் ஜெர்மானிய இராணுவம் சோர்வடையவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பெர்லின் வரை துரத்திச்சென்று பெர்லினை அமெரிக்க/பிரித்தானிய படைகளுக்கு முன்னர் கைபற்றியது சிகப்பு இராணுவம். ஸ்டாலின் இச்சமயத்தில் மிகச்சாதுர்யமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஜெர்மானியர்களிடம் போர் புரிய ஆசைகாட்டி, அவர்களுக்கு உதவாமல் கைவிட்டான். இதன் மூலம் சோவியத் யூனியனின் சிகப்பு கரம் எதிர்ப்பின்றி கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நீள ஆரம்பித்தது. அமெரிக்க தலையீடு இல்லையென்றால், அப்போது போரினால் நலிந்திருந்த மேற்கு ஐரோப்பாவும் சோ.யூனியனின் குடையின் கீழ் வந்திருக்கும் என்பது என் ஊகம். இந்தப் போரில் சோ.யூ வென்றதற்கு காரணம் "steam roller" tactic தான். அதாவது, ஒரு வரிசை வீரர்களை எதிராளி கொன்றால் அடுத்த வரிசை முன்னே செல்லும். இதில் இரு வீரர்களுக்கு ஒரு துப்பாக்கி என்றளவு ஆயுதப்பற்றாக்குறை ஆரம்ப காலத்தில். கூட்டத்தை வைத்துதான் வென்றார்கள். மற்றபடி மிகவும் அட்வான்ஸ்டாக அதுவரை இல்லை. அதற்கு பின்னரே நவீனமயமாக்கப்பட்டு ஒரு சிறந்த படையாக "Red Army" விளங்கியது.
அதற்குப்பின்னர் பிரெஷ்னெவ், குருஷேவ் தலைமையில் "குளிர்ப்போரில்" ஈடுபட்டு "ஸ்பேஸ் ரேஸ்", "ஆர்ம்ஸ் ரேஸ்" எல்லாம் அமெரிக்காவோடு சரிக்குசமமாய் விளையாடி அசைக்க முடியாத வல்லரசாக இருந்தது சோவியத் யூனியன் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் உண்மை வேறுமாதிரி இருந்தது. தனிமனித சுதந்திரம் என்பது முழுக்கப் பறிபோனது. கிட்சன் டைனிங் டேபிள்களில் கூட வெளிப்படையாக அரசியல், சமூக விமர்சனங்களை வைக்கமுடியாத அளவிற்கு கட்டுப்பாடு. Komitet Gozudarstvennyi Bezopasnosti (KGB) - Committee for State Security என்ற சிவிலியன் அமைப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவர்களின் உள்நாட்டு உளவுப்பிரிவு மிகப் பிரபலம். ஆனால், இன்றளவும் பரவலாக அறியப்படாத ரஷ்யாவின் மிகப்பெரும் ரகசியம் GRU என்றழைக்கப்படும் Glavnoye Razvedyovatelnyie Upravleniye - Main Intelligence Directorate. கேஜிபியெல்லாம் ஜுஜுபி என்ற அளவிற்கு மிகப்பெரும் இராணுவ உளவு அமைப்பு இது. உலகெங்கிலும் இருந்தவர்கள் உள்ளூரில் இருக்கமாட்டார்களா என்ன? சோவியத் யூனியனில் இந்த இரு அமைப்புகளுக்கும் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. paranoia என்பது in-born ஆகவே ரஷ்யர்கள் இருந்தார்கள். அடுத்தவர்களையென்ன, சொந்தங்களையே நம்புவதற்கு பயந்தனர். அந்தளவிற்கு எங்கும் ஊடுருவியிருந்தன இந்த உளவுத்துறைகள்.
ஏதேனும் சாதனை செய்தாலும் அடக்கியே வாசிக்கவேண்டிய சூழ்நிலை. உலகின் முதல் விண்வெளிப்பயணரான யூரி ககாரின் இதற்கு அருமையான எடுத்துக்காட்டு. விமான விபத்தில் இறந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ககாரின் அவரின் அபரிமிதமான புகழின் காரணமாக அரசியல் கொலையே செய்யப்பட்டார் என்று சமீபத்தில் ஒரு டிவி சானலின் துப்பறியும் நிகழ்ச்சியில் சொன்னார்கள். இன்றைக்கு பெரிய அதிகாரியாக இருந்தவர், நாளை இருந்த தடமே இல்லாமல் காணாமல் போவார். எங்கே போனார்? என்ன ஆனார் என்று அதிகமாய் கவலைப்படும் நண்பர்களும், சுற்றத்தவர்களும் காணாமல் போவார்கள். இந்தியாவில் சுதந்திரமாய் வளர்ந்த நம்மாலெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அடக்குமுறைகள் அமலில் இருந்தன. வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் tag செய்யப்பட்டு பின் தொடரப்பட்டனர். புகைப்படம் எல்லா இடங்களிலுமெல்லாம் எடுத்துவிட முடியாது. மதம் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தது. பள்ளிகளில் லெனினும், ஸ்டாலினுமே நடமாடும் தெய்வங்கள், கட்சியே ஒரே தீர்வு என்று தினந்தோறும் போதனை செய்யப்பட்டது. இளவயதிலேயே கட்சிமேல் வெறி வளர்த்தது பெரிய சாதனை. இதனால் சோவியத் யூனியனின் கொள்கைகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக சிவிலியன்கள் உண்டானார்கள். மேற்கத்திய பொருளாதார மற்றும் அரசியல் முறை பற்றிக் குறை கூறுவதே ஊடகங்களின் வேலையாயிருந்தது.
நியு யார்க், லண்டனிலெல்லாம் உள்ள ஏழை neighbourhood-கள் மற்றும் கலாச்சார சீர்கேடு (western decadence) குறித்த பிரச்சாரப் படங்கள் மற்றும் இந்த வகை சீரழிவிலிருந்தெல்லாம் சோவியத் மக்களை சோஷலிஸமும், கட்சியும், லெனினும் தான் காப்பாற்றினார்கள் என்று நிதமும் போதிக்கப்பட்டது. நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும், அதை மக்களும் நம்பத்தான் செய்தனர். சென்ஸார், ஸ்பின் டாக்டர்கள் புண்ணியத்தால் சோவியத் யூனியனின் பொருளாதார மற்றும் இராணுவத் தோல்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆப்கான் போரின் முழுத்தோல்வியை பலரும் அறிந்தே இருக்கவில்லை. அமெரிக்காவுடன் போட்ட விண்வெளி, ஆயுதப்போட்டிகள் ஒரு புறமென்றால்... மறுபக்கம் பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை தங்கள் சோஷலிஸ சார்பு நிலையிலேயே வைத்திருக்க பணத்தை வாரியிறைக்க வேண்டியிருந்தது. அந்தச் செலவுகளுக்கு ஈடுகட்ட வழியில்லையென்றாலும் வீம்புக்காக போட்டி தொடர்ந்தது. புராதனமான கட்டமைப்பினால் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திரன் குறைந்தது. இழப்புகளை ஈடுகட்ட செயலற்ற நிறுவனங்களுக்கு subsidy என்ற பெயரில் அரசின் பணம் அள்ளிவீசப்பட்டது. தனியார் மயமாக்கலால் streamline ஆன மேற்கத்திய நாடுகள் போல் இல்லாமல் அரசு இயந்திரம் red tape-இல் சிக்கி செயலற்று efficiency என்பதில்லாமல் behemoth என்று சொல்வார்களே, அதே நிலைதான் கடைசியில். ஆனால், சாதாரணர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. இன்னமும் நல்லநிலையில் இருப்பதாகவே கருதினர் மக்கள். தெரிந்தவர்களும் அச்சுறுத்தலுக்கு பயந்து மௌனமாகவே இருந்தனர். 80-களின் இறுதியில்
(தொடரும்)
குறிப்பு: எழுபதாண்டுகள் வரலாற்றை நான்கே பத்திகளில் சுருக்குவது இயலாத காரியம். ஆனால் மிகவும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்பது அறியப்படவேண்டியது. மேற்கூறிய சோவியத் அடக்குமுறைகள் போன்ற விஷயங்கள் நான் என் ஆசிரியர்கள், ரஷ்ய நண்பர்கள் வழியாய் கேள்விப்பட்டவைதான். எவ்வளவு தூரம் உண்மை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. முன்னமே சொன்னபடி, முழுச்சுதந்திரத்துடன் வளர்ந்த நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாதவை. ரொம்ப dry யாகப் போகுதேன்னு நறநறப்பவர்கள் இன்னும் ஒரெயொரு பதிவு மட்டும் பொறுத்தருளுமாறு கேட்டுக்கறேன். ரஷ்யர்களின் மனநிலையை புரிந்துகொள்ள இவை உதவும் என்பதென் எண்ணம். டேங்க்ஸ் பா..
முந்தைய பாகம்
இரும்புத்திரைக்கு பின்னாலிருந்து - 1: some facts
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த மெகாத்தொடர் ஆரம்பம். திருமுருகன், திருச்செல்வனுக்கெல்லாம் நான் அடுத்தபோட்டியாளர்னு மண்டபத்துல பேசிக்கிறாங்க இல்ல? அதனால தான். அக்காவோட நியுஸிலாந்து பற்றிய பகுதிகளின் பாதிப்பு நிறைய இருக்கும் பொறுத்துக்கோங்க.
முதல்ல சில பாக்ட்ஸ் - சி.ஐ.ஏ விலிருந்து...
உலகின் மிகப்பெரிய நாடு. மொத்த நிலப்பரப்பு: 16,995,800 சதுர கி.மீ (ஒரு ஒப்பீடுக்காக இந்தியாவின் நிலப்பரப்பு : 2,973,190 சதுர கி.மீ. அமெரிக்காவை விட ஒன்றேமுக்கால் மடங்கு பெரியது. ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் இருக்கிறது)
ரோசியா - Россия [Rossiya] / Russia என்பது ஷார்ட் பார்ம்.
லாங் பார்ம்னா Российская Федерация [Rossiyiskaya Federatsiya] / Russian Federation
அரசியலமைப்பு: federation
ஜனாதிபதி: விளாடிமீர் விளாடிமீரோவிச் பூடின் / Владимир Владимирович Путин (Vladimir Vladimirovic Putin)
பிரீமியர்: மிஹாயில் எபிவோவிச் ப்ராட்கோவ் / Михаил Эфимович Фрадков (Mikhail Yefimovic Fradkov)
இணைப் பிரிமீயர்: அலெக்ஸாண்டர் டிமிட்ர்யேவிச் ஷுகவ் / Александр Дмитревич Жуков (Aleksandr Dmitreyevic Zhukov)
சுதந்திர தினம்: 24 ஆகஸ்ட் 1991
தேசிய தினம்: 12 ஜூன்
தலைநகரம்: மஸ்க்வா / Москва [Moskva] / Moscow
மற்ற முக்கிய நகரங்கள்: சான்க்ட் பீட்டர்புர்க் ( Saint Petersburg), நோவோசிபிர்ஸ்க் (Novo Sibirsk), வ்ளாடிவோஸ்டாக் (Vladivostok), துலா (Tula), வோல்காகிராட் (Volgograd), ரோஸ்டோவ் (Rostov), த்வேர் (Tver), நீஷ்னி நவ்கோரத் (Nizhny Novgorod)
மக்கள்தொகை: 143,420,309 (ஜூலை 2005)
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: -0.37% (2005 est.)
மொழி: ரஷ்யன் : எழுத்து: சிரில்லிக் (Cyrillic)
படிப்பறிவு: ஆண்கள் - 99.7%; பெண்கள்: 99.5%
பணவீக்கம்: 11.5%
பணம்: ரூபிள்ஸ் - Rubles = 28.5 ரூபிள்ஸ் / US$
தொலைபேசி இலக்கம்: 7
மாஸ்கோ: +7-095
செயிண்ட் பீட்டர்புர்க்: +7-812
வலை இலக்கம்: .ru
பயிர் செய்யப்படக்கூடிய நிலப்பரப்பு: 7.33%
permanent crops: 0.11%
other: 92.56% (2001)
சீதோஷ்ண நிலை: sub tropical லிருந்து sub arctic வரை
உயரமான இடம்: கோரா எல்ப்ரஸ் (ஐரோப்பாவின் மிக உயர்ந்த இடம்)
மதங்கள்: Russian Orthodox, Muslim, மற்றவை
இரயில்வே - மொத்தம்: 87,157 km
அகலப்பாதை: 86,200 km ஐரோப்பிய அளவு (40,300 கிமீ மின்சாரமயமாக்கபட்டவை)
நெடுஞ்சாலை: paved: 362,133 km
எண்ணெய் வளங்கள்: proved 69 billion bbl
இயற்கை வாயு: proved 47 trillion cu m (2003)
ஏற்றுமதி: $162.5 billion
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்: பெட்ரோலியப் பொருட்கள், கனிமங்கள், ரசாயனப் பொருட்கள், இராணுவ தளவாடங்கள்
மொத்தக் கடன்: $169.6 billion
வேலையில்லாதோர்: 8.3%
GDP: purchasing power parity - $1.408 trillion
முக்கிய படைகள்: Ground Forces (SV), Navy (VMF), Air Forces (VVS); Airborne Troops (VDV), Strategic Rocket Troops (RVSN), and Space Troops (KV) are independent "combat arms," not subordinate to any of the three branches
ரிசர்வ்-களையும் சேர்த்து available ஆட்படை: 18-49 வயதுக்குட்பட்ட ஆண்கள்: 35,247,049 (2005 est.)
17 வயதிலிருந்து ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் கட்டாய மிலிட்டரி recruitment
கைத்தொலைபேசிகள் எண்ணிக்கை: 17,608,800 (2002)
--
சரி, படிச்சு போரடிச்சிடுச்சா? இவ்வளவு பெரிய ரஷ்யாவிற்கு நான் வந்தது 1998-ல். அன்றிலிருந்து இங்கு தான் வாசம். நான் சென்ற முக்கிய நகரங்கள்னு பார்த்தா மஸ்க்வாவும், செயிண்ட் பீட்டர்ஸ்புர்க்கும் தான். இரும்புத்திரையின் பின்னாலிருந்த ரஷ்யா சோவியத் யூனியன் உள்நாட்டு போரில் சிக்கி உடைந்து, பல துண்டுகளாகி இன்று ரஷ்யா மீண்டும் தலைநிமிரும் நேரம். 98-ல் ஏற்பட்ட economic depression-ஐயும் சமாளித்து, ஜனநாயகத்திற்கு சில காலம் வேட்டு வைத்து, தன் படைபலத்தினால் மற்ற நாடுகளை மிரட்டி, இன்னமும் உலக அரங்கில் ஒரு முக்கிய உறுப்பினராக திகழ்கிறது: இதெல்லாம் நான் இருந்த காலத்தில் நடந்தது. ஏதோ ரஷ்யாவில் நான் பார்த்தவை நினைப்பவை நடப்பவை பற்றியே இந்தத் தொடர்.
(தொடரும்)
மாஸ்கோ மே - 9: படங்கள்: 2
ரெண்டு வார்த்தை எழுதலேனா தமிழ்மணத்தில வராதே! மே-9 இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் நினைவு விழாவில் எடுத்தது. சுஹோய் எனப்படும் ஜெட்டுகள் இவை. இந்தியாவிடமும் நிறைய உண்டு. எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தோன்றியபடியால் போகஸ் அவ்வளவு சரியாக இல்லை..
இதே நிகழ்ச்சி குறித்த முந்தைய பதிவு இதோ
குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?
பல நாட்களுக்கு முன்னர் எழுதியது. குடிப்பழக்கம் என்பது தனி மனித சுதந்திரமா என்று சர்ச்சை நடக்கும் வேளையில் மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியதால் செய்கிறேன். இதனால் நான் குடிப்பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்பது இல்லை. சிலருக்கு டிவி ட்ராமா, சினிமா மோகம் மாதிரியே இதுவும் தனி மனிதனைச் சார்ந்தது என்பது என் எண்ணம். இனி ஒரிஜினல் பதிவு
---
மிகவும் பிரபலமான "slogan" இது இந்தியாவில். ஆனால் உண்மையா இது? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாக உண்டு. குடிகாரன் எனப்படுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். Lite, medium, மொடாக்குடிகாரன் இல்லை addict.
வெளிநாடுகளில் லைட் வகையறாக்களைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. social drinking என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இங்கே ரஷ்யாவில் வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு வேலை நாட்களில், வேலைக்குப்பின் இரண்டு மூன்று பியர்கள் என்பது கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. வாரயிறுதியிலோ ஒருமுறையாவது hard alcohol என்பது வழக்கம். குறிப்பாய் 'வோட்கா'. இங்கே ஜோக் கூட உண்டு. தாகமெடுத்தால் பியர் குடிப்பது மினரல் வாட்டர் குடிப்பதை விட மலிவு என்று.
மீடியம் ஆல்கஹாலிக்ஸ் எனப்படுபவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்தால் மட்டுமே addicts ஆகின்றனர். அதுவும் கூட addiction என்பதன் விளக்கம்: "A chronic brain disorder characterized by the loss of control of drug-taking behavior, despite adverse health, social, or legal consequences to continued drug use."
இவ்விளக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூதாயம் மற்றும் சட்டம். இந்த duties-ஐ ஒருவன் மறந்து குடி உள்பட எவ்வகை போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அது addiction-ஆக கருதப்படும். அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் குடிப்போரை (குடிகாரர்கள் என்பது கொஞ்சம் derogatory-ஆக ஒலிப்பதால்) பெரும்பாலும் இகழ்வது வழக்கமாய் உள்ளது. சோமபானத்தை அருந்தி மகிழ்ந்த தேவர்களை வணங்கும் நாம் ஏன் குடிப்பழக்கத்தை (இதிலும் பழக்கம் என்பது habit என்றில்லாமல் addiction என்றே தொனிப்பதாய் தெரிகிறது) இப்படி நம் சமூகம் வெறுக்கிறது என்பது புரியவில்லை.
மது, அதிலுள்ள alcohol மற்றும் சிகரெட்டில் உள்ள சில வஸ்துக்கள், போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் பல மருந்தாய்ப் பயன்படும் பொருட்களும் இந்த dependence-ஐ (மருத்துவத்துறையில் இதுவே preferred term. addiction என்பது மருத்துவத்துறைக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) விளைவிக்கின்றன. சிகரெட்டின் தீமைகளை திண்ணமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல் மதுவிற்கு இல்லை. சொல்லப்போனால், குறைந்த அளவில் ஆல்கஹால் (ஆலகால விஷம் இது தான் என்று வைத்துக்கொண்டால், நீலகண்டன் நிரந்தரமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார் :) ) உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில ஆராய்ச்சிகளில் பியர் குடிப்பதன் மூலம் புதிய synapses உண்டாவதாகக் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பியர் குடிப்பதன் மூலம் அறிவு வளர்ச்சி என்று மேம்போக்காக சொன்னாலும், புதிய சினாப்ஸகளின் வேலை மது dependence-ஐ உண்டாக்குவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. மேலதிக விவரம் தெரியவில்லை.
'அளவிற்கு அதிகமானால்' என்பதாகவே ஆல்கஹாலினால் விளையும் தீமைகளும். alcoholic liver disease மற்றும் மிகவும் கடைசி நிலையில் liver cirrhosis-உம் உண்டாகும். இதில் ALD வெளிப்படுவதற்கு குறைந்த பட்சமாக ஐந்து வருடங்களோ அதிகபட்சமாக பத்து வருடங்களாகவோ தினமும் 30 கிராம் வெறும் ஆல்கஹால் units அருந்தியிருக்கவேண்டும். பலவருடங்களாக தினமும் குடிப்பது அதுவும் 5 வருடங்களாக என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், நீங்கள் மிதமாவோ லைட்டாவோ குடிப்பவர்களானால், அப்படியே இருப்பது உத்தமம். குறிப்பாக, இரத்தக்கொதிப்பு நோயுடையோர் அடியோடு நிறுத்துவதுதான் நல்லது.
சரி, மருத்துவப்படி dependence state-ஐ தவிர மிதமாய்க் குடிப்போர்க்கு பயப்படுவதற்கு பெரும்பாலும் ஒன்றுமில்லை. இப்படியிருக்கையில், சமூகத்தில் ஏன் இத்தனை இகழ்வு என்பது விந்தை. அடுத்த மனிதரையோ சமூகத்தையோ தொல்லைப்படுத்தாதவரை ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இது தனிமனித அல்லது நண்பர்களுடான harmless பொழுதுபோக்கு என்று கருதாமல் சமுகம் ஏன் சர்ச்சைப்பட வேண்டும் என்ற கேள்வி வருகிறதல்லவா?
மேற்கத்திய சமூகம் குடியைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் போதைப்பொருட்களை பொறுப்பதில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் அமெரிக்க பழங்குடியினரிடத்தும் தெற்கமெரிக்க பழங்குடியினரிடத்தும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே போ.பொ விளங்குகின்றன. இன்னும் ஒரு சில சமூகங்களிடையே, shamans எனப்படும் நம்மூர் கடவுளிடம் பேசும் பூஜாரிகள் போன்றோர் தம்முடைய சடங்குகளில் peyote எனப்படும் போதை வஸ்துவை பயன்படுத்தியே கடவுளைக் காண்கின்றனர். கலாச்சார வித்தியாசம் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. கலாச்சாரங்கள் மாறும் நேரத்தில், மற்றவரை எவ்வகையிலும் தொல்லைப்படுத்தாத வித்தியாசம் என்று சொல்லுவதால், அது தனி மனித உரிமை ஆகிவிடுகிறதல்லவா?
அந்த ஆண்டவன் சொல்றான்!
பிபிசியில பாலஸ்தீனிய தகவல்தொடர்பு அமைச்சர் நபில் ஷாத்தை பேட்டி கண்டபோது சொல்லிருக்காரு...
2003 ஜூன்ல இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடந்தது. அதில் ஜனாதிபதி புஷ் எல்லார்கிட்டேயும் சொல்லிருக்காரு "'I'm driven with a mission from God'. God would tell me, 'George go and fight those terrorists in Afghanistan.' And I did."
இது தாலிபான் பத்தி ஆண்டவன் சொன்னது. அதுக்கப்புறம் கூடுதலா இராக் பற்றியும் ரொம்பவே புஷ்ஷிடம் வருத்தப்பட்டிருக்காரு. "And then God would tell me,' George, go and end the tyranny inIraq' And I did."
இன்னிக்கு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் இது கட்டுக்கதைன்னு மறுத்திருக்காரு.
ஆண்டவனே வந்து பர்சனலா வருத்தப்பட்டுகிட்டா என்னா செய்வார் பாவம் நம்ம ஜார்ஜு? இப்படி என்னிக்காவது இந்தியா சரியில்ல புஷ் தம்பி, நம்ம படைகளை அனுப்பி அவுங்க கொட்டத்தை அடக்குன்னு சொல்லித் தொலைக்காம இருக்கணும்!
Independent
என் பாஸ்தா புராணம்!
இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.
பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.
பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.
சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்
கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?
1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.
அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?
அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.
இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.
இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.
சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.
சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.
எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.
இது தனியா கஷ்டப்படறவங்கள்ள சமைக்கணுமேன்னு ஆர்வம் உள்ளவங்களுக்கு. அப்படி இல்லாதவங்களுக்கு வேற ரெசிபி முன்னாடியே இங்க சொல்லிருக்கேன்.
மேலும் விபரங்களுக்கு
1. iLovePasta
2. Delia Smith
இதைப் பார்த்த ஆர்வத்தில் எழுதியது.
என் overbooking அனுபவம்!
உங்களில் பெரும்பாலானாவர்கள் ஒரு தடவையாவது இந்த ஓவர்புக்கிங்கினால் அவதிப்பட்டிருப்பீர்கள். விமான பயணச்சீட்டு வைத்திருந்தாலும் விமானத்தில் பறக்க இடமில்லை என்று சொல்லி துரத்திவிடுவார்கள். கூடவே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும், சாப்பாடு கூப்பன்கள், தொலைபேசி அட்டைகள் மற்றும் இன்னபிற.
பெரும்பாலும் அதிக டிமாண்ட் உள்ள ரூட்களில் எகானமி பிரிவில் தான் நடக்கும். சரி, ஓவர்புக்கிங் எப்படி சாத்தியம்? பயணச்சீட்டு இருந்தால் விமானத்தில் இடமில்லை என்று எப்படி உரிமை மறுக்கலாம் என்று கேட்கலாம். ஆனால், IATA விதிகளின் படி இது சாத்தியம். சராசரியாக ஒரு ப்ளைட்டில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாகவே இருக்கும். இவற்றிற்கு "no shows" என்று பெயர். இதனை சரி செய்ய, எத்தனை பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே predict செய்து அதற்கு தகுந்தாற்போல் அதிக அளவு டிக்கட்டுகள் விற்கப்படும். இவற்றின் எண்ணிக்கை, மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும். இந்த ஓவர்புக்கிங்குகள் தினந்தினம் நடந்து வருவதுதான் என்றாலும், சில நேரங்களின் "no shows" எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தால் இருக்கைகளைவிட அதிக பயணிகள் என்றாகிவிடும். ஸ்டாண்டிங், புட்போர்ட் மற்றும் கிரில் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்றவை சாத்தியமில்லையதனால் பயணிகளை குழுக்களாக பிரிப்பார்கள். முதலில் டிரான்ஸிட் மற்றும் connection flights உள்ளோர். இவர்களுக்கு முன்னுரிமை. இவையில்லாமல் ப்ளைட்டின் destination-னே final destination ஆக இருக்கும் பயணியர்க்கு first come, first served அடிப்படையில் இடம் கிடைக்கும். பிஸினஸ் பிரிவில் இடமிருந்தால் இலவசமாக மாற்றிக்கொடுத்துவிடுவர். உங்கள் பயணத்தேதி அவ்வளவு முக்கியமாக இல்லாதவர்கள் தங்கள் ப்ளைட்டில் ஓவர்புக்கிங் என்று தெரிந்தால் மிக லேட்டாக செக்-இன் செய்யுங்கள். இந்த டிரிக் சிலசமயம் வேலைசெய்து, பயனாய் இலவசமாக பிஸினஸில் பறக்கலாம். அப்படி வேலை செய்யவில்லையென்றாலும், என்னாகிவிட்டது! நட்சத்திர தங்கும் வசதி கண்டிப்பாய் உண்டு. அது எந்த டகால்டி ஏர்லைனாக இருந்தாலும் ஓவர்புக்கிங்கால் விமானத்தில் இடம் மறுக்கப்பட்டவர்களுக்கு இந்த வசதிகளை செய்துதர வேண்டும். மறுக்க முடியாது.
சரி இனி என் கதை. இந்த மாதிரி ஓவர்புக்கிங்கில் டில்லியில் மாட்டிக்கொண்டேன். ட்ரான்ஸிட் பயணிகள் பலர் இருந்ததால், கண்டிப்பாய் இடம் கிடையாது என்று தெரிந்துவிட்டது. இரவு மணி இரண்டு. 'உங்களுக்கு தில்லியில் தங்க இடம் இருக்கிறதா? இல்லை ஓட்டல் வேண்டுமா?" என்று கேட்பதற்கே காத்திருந்தமாதிரி "ஓட்டல் தான்". "சாகெத்தில் உள்ள மேரியட்டில் இடமிருக்கிறது, பரவாயில்லையா?". "ஏன், மவுர்யாவில் இல்லையா?!" என்று என்னவோ மேரியட் டப்பா ஓட்டல் மாதிரி திருப்பிக்கேட்டேன். "சாரி சர், இப்போதைக்கு மிஞ்சியிருப்பது மேரியட்டும் ஏர்போர்ட் செண்டாரும் தான்". "சரி சரி, என்னவோ, செண்டாருக்கு மேரியட்டே தேவல!" (திரும்பவும்) என்று அலம்பல் செய்த என்னிடம் ஓட்டல் கூப்பன் கொடுத்தவாறே இலவச பஸ்ஸிற்கும் இடம்காட்டினாள் பணிப்பெண். விமான நிலையத்திலிருந்து சாகெத் கொஞ்சம் தள்ளி இருப்பதால் முக்கால்மணி நேரப் பயணம்.
மணி மூன்றாகிவிட்டது, இருப்பினும் சுறுசுறுப்புடன் அதிர்ஷ்டவசமாய் தனி ரூம் கொடுத்துவிட்டார்கள். இனியென்ன, வீட்டிற்கு சொல்லணுமில்ல? தொலைபேசி கார்டு வாங்க மறந்துட்டோமே. நட்சத்திர ஓட்டல்னா STDக்கு தீட்டிவிடுவார்களே என்று கவலையிருந்தாலும், இந்த நடுநிசியில் எங்கு போய் கால் செய்வது. தூக்க கலக்கத்தில் இருந்த அப்பாவிடம் இது கனவில்லை, நான் எங்கிருக்கிறேன், எதனால் பறக்கவில்லை, ஓட்டல் நம்பர் என்றெல்லாம் விளக்கவே பத்துநிமிடமாகிவிட்டது.
அடுத்த நாள் காலை 930க்கு ரிசப்ஷனிலிருந்து போன். "Good Morning Sir, Sorry to have woken you up! காலை உணவு buffet முடிய இன்னும் அரைமணிதான் இருக்கிறது. சொல்வதற்குத்தான் கூப்பிட்டோம்". அடாடாடா. இதுதாண்டா சர்வீஸ் என்று நன்றி சொல்லிவிட்டு காலைஉணவு புப்பேவிற்கு போனேன். பிரமாதமான ஸ்ப்ரெட். காண்டினண்டல், சவுத் இந்தியன், ரோட்டி, சப்பாத்தி என்று பிரமாதம். buffet இல் ஒரு சவுகரியம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று மற்றவர்க்கு தெரியாது. a la carte வாக இருந்து சர்வருக்கு டிப்ஸ் வைக்கலேன்னா, "ஒசின்னு சொன்னோன்ன நல்லா துன்றான் பாரு கடோத்கஜனாட்டம்.. ஆனா பக்கி! ஒரு முப்பது ரூவ வக்கத் துப்பில்ல"னு வைதல்கள் வர சாத்தியக்கூறுகள் அதிகம். புப்பேவில் இந்த கவலையெல்லாம் இல்லாமல், எல்லாத்தையும் வேணுங்கற அளவு எடுத்துப் போட்டு பயமில்லாம சாப்பிடலாம். ஆனா கேக் போன்றவற்றை முன்னரே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு விட வேண்டும். கடைசியாப் போனீங்கன்னா கீரிம், செர்ரி எல்லாம் இல்லாம வெறும் பிரெட் மட்டுந்தான் மிஞ்சியிருக்கும். மத்தியான சாப்பாடு எப்போன்னு முக்கியமா கேட்டுகிட்டு கிளம்பினேன். டில்லியில் செய்யறதுக்கு வேலை ஒன்றுமில்லையதனால், ரூமில் டிவி பார்த்தே பொழுதுபோக்கியாச்சு.
மத்தியானம் மணி சரியா ரெண்டு அடிச்சோன்ன மறுபடியும் ரெஸ்டாரண்ட். எனக்கு முன்னரே சக பயணிகள் சிலர் இருந்தனர். அதனால் கூச்சமெல்லாம் படாமல் களத்தில் நேராக இறங்கினேன். முதல்ல ரெண்டு குலாப் ஜாமூன், அப்புறம் பெங்காலி ஸ்வீட் சில என்று தனியாய் லவட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டேன். அடுத்து சூப் மல்லிகாடானி (மல்லி ரசம்), தக்காளி, லெண்டில் (பருப்பு) என்று வகைக்கொன்று கா கா கிண்ணம். புலாவில் ஆரம்பிக்கலாமா, இல்லை ரோட்டியா என்று மினி பட்டி மன்றம் நடத்தி முடித்து ரோட்டி பக்கம் போனேன். அங்கே கோபி பராத்தா, லசூன் நான் அப்புறம் புல்கா என்று வகைக்கொன்று. தொட்டுக்க வேணுமே. அதில எனக்கு ரொம்ப பிடிச்ச பைங்கன் பர்த்தா (கத்திரிக்கா) மற்றும் பன்னீர் கோப்தா, அப்புறம் அருகில் நின்ன செப் மனசு வருத்தப்படக்கூடாதே மிச்சமிருந்த ஆலு மட்டரும், கோபி மஞ்சூரியனும் என்று அள்ளியாச்சு. இது முதல் ரவுண்ட். அவசர அவசரமா சாப்பிட்டாத் தான் நிறைய சாப்பிட முடியாது. அதனால பொறுமையா ஒரு முக்கா மணி நேரம் நின்னு ஒவ்வொரு கடி (bite) ஆ அனுபவிச்சு முடிச்சேன். அடுத்த ரவுண்டுக்கு வெஜ் புலாவ், புதுசா ஐட்டங்களில் அப்போதுதான் சேர்ந்திருந்த கார்லிக் ப்ரெட். அப்புறம் தொட்டுக்கற செக்சன். பன்னீர் கோப்தாவும், கோபி மஞ்சூரியன் எடுத்துட்டு பார்த்தா அதுக்குள்ள கத்திரிக்காயக் காணோம். வெறும் கர்ரி மட்டும் தான் பாக்கியிருந்தது. பேரரிடம் கேட்கவே நானே கொன்டுவந்துகொடுக்கறேன் சொல்லி சொன்னா மாதிரியே கொடுத்தார். இதுக்கு ஒரு அரை மணி. அப்புறம் கொறிக்க வெண்டக்கா பிரை. இது மட்டுமே ரெண்டு பிளேட். ஏன்னா, நான் முன்னாடி தட்ட வெச்சுட்டு ரீபில் பண்ணப்போனப்ப யாரோ அபேஸ் பண்ணிட்டாங்க. சாப்பிட்ட தட்டுகளையெல்லாம் எடுத்துப் போட்டவர் இதையும் சேர்த்து அள்ளியிருக்க வேண்டும். விடுவேனா? எடு இன்னொரு பிளேட். எப்படி இத்தனையும் சாப்பிட்டேன்னு எனக்கே தெரியலை. சாப்பிட்டு முடிச்சு நிஜமாவே உண்ட களைப்பில் படுத்தவன் தான். ரெண்டு மணி நேரம் ஓடியாச்சு. ஆறு மணிக்கு போன் பண்ணி, நீச்சல் குளம் வேலை செய்கிறது என்று தெரிந்தவுடனே ஓடி ஊறிக் கொண்டிருந்தபடியே ஒரு பன்னீர் டிக்கா. பொதுவா இப்பல்லாம் நீச்சல் குளம் போனா நீச்சலெல்லாம் அடிக்கிறதில்ல. நல்ல குட்டையில் ஊறற எரும மாதிரி ஊறுவதுதான்.
இராத்திரி பத்து மணிக்கு பஸ் மீண்டும் விமான நிலையத்திற்கு புறப்படும் என்று முன்னரே தகவல் சொல்லியிருந்தனர். அதனால் 8 மணிக்கெல்லாம் டின்னர் புப்பே. இந்த முறை முதல் ரவுண்ட் ஒரு வித்தியாசத்திற்காக ஸ்பாகெட்டி நியோபாலிட்டானே, ஒரு துண்டு பீட்ஸா. கூடவே நவரத்தன் குருமா, டால் மக்கனி அப்புறம் stuffed குடைமிளகாய்.
என்னிடம் இருந்தது ஒரேயொரு மீடியம் சைஸ் பெட்டி மட்டும் தான். கூடவே குட்டி ப்ரீப் கேஸ். சென்னையிலிருந்து ப்ளைட்ல யார் உதவியுமில்லாம தூக்கிகிட்டு, டில்லி விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு வந்தது நான் தான் என்றாலும், பெல் டெஸ்க் எதுக்கு இருக்கு. 950க்கு ரிசப்ஷனுக்கு போன் செய்து பெல்பாய் வரச்சொல்லுங்கள் என்று கேட்டேன். இதோ அனுப்பறேன் என்று சொன்னவர்கள் மறந்தே போனார்கள். காரணம் நாற்பதுக்கும் மேற்பட்ட இதே விமானப் பயணிகள் செக்-அவுட் செய்து கொண்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ரிசப்ஷனுக்கு முன்னிருந்த உள்ள லவுஞ்சில் அவர்கள் கண்ணில் படும்படியே போய் அமர்ந்தேன். ஆனால், வேலை பிஸியில் கவனிக்கவில்லை. பத்தேகாலுக்கு பஸ் புறப்பட்டபிந்தான் என்னை கவனித்தார் ரிசப்ஷனில் வேலை செய்பவர். சாரியெல்லாம் பவ்யமாக சொன்னவரிடம் வீம்பாக "அரைமணிக்கு முன்னர் பெல் பாய் அனுப்பச்சொன்னேன். இன்னும் அனுப்புகிறீர்கள். இப்போ எப்படி நான் ஏர்போர்ட் போறது? என்ன மாதிரி ஓட்டல் நடத்துகிறீர்கள்" என்று வீண் சண்டை போட்டேன். "ஏண்டா வரும்போது எப்படி வந்தே? பொதி கழுதை மாதிரி நீயே தானே தூக்கிண்டு வந்தே? இப்ப பெரிய இஷ்டாரு கணக்கா பெல் பாய் எங்கேன்னு கேட்கற"ன்னு நான் அவரிடத்தில் இருந்தாலும் கேட்டிருப்பேன். ஆனால் மேரியட்டாச்சே. மிகவும் மன்னிப்பு கேட்டு ஒரு ஏஸி மாருதி எஸ்டீம் ஏற்பாடு செய்து தந்தார். டெலிபோன் பில்லும் வாங்கவில்லை. நீச்சல் குளத்தில் சாப்பிட்ட பன்னீர் டிக்காவுக்கு டிஸ்கவுண்ட். டாக்ஸிக்கும் பணம் கேட்கவில்லை. பஸ்ஸிற்கு முன்னரே ஏர்போர்ட் வந்து சேர்ந்து, எகானமி பிரிவில் முதல் ரோவில் இடம் வாங்கி பறந்துவிட்டேன்.
இதனால் தெரியும் உண்மையென்றால்... ஒவர்புக்கிங் சான்ஸ் கிடைத்தால் கோட்டை விட்டுவிடாதீர்கள்.
தனியாய் கஷ்டப்படும் ஆண்களுக்கு: சமையல் குறிப்பு!
வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.
இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.
அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.
இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.
என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.
இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
This article is a stub and readers are expected to further experiment and provide feedback.
பங்களாதேஷ் - "குண்டு ஒண்ணு வெச்சுருக்கே!"
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலும் மற்றும் 63 மாநிலங்களிலும் தொடர்ச்சியாக 400 குண்டுகள் வெடித்தன. தற்போது எல்லைப் பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த தில்லி வந்த பங்களாதேஷின் Bangaladesh Rifles இன் Director General ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி கூட்டுபத்திரிகையாளர் சந்திப்பில் "தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அருகில் உள்ள ஒரு பெரிய நாடுதான் காரணம்" என்றார். அது எந்த நாடென கேட்ட இந்தியப் பத்திரிகையாளருக்கு "It is you!" என்று பதிலளித்துள்ளார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. உடனே மத்திய அரசும் மறுத்தும் கண்டித்தும்
"This is a baseless and scurrilous allegation and is all the more shocking because it has been made against a friendly country and particularly after the two countries have had useful and constructive talks between the BDR and BSF." என்று பதிலளித்துள்ளது.
நட்பு நாடான இந்தியாவிடம் சரிவர நடந்து கொள்ளத் தெரியவில்லையே.
முதலில், இந்தியாவிற்கு விருந்தினராக பேச்சுவார்த்தை நடத்த வந்துவிட்டு இப்படியொரு செய்தியை உண்மையோ பொய்யோ பத்திரிகையாளர்களிடம் சொல்ல வேண்டிய தேவையென்ன? இப்படிச் சொல்லிவிட்டு வாருங்கள் பேசலாம் என்றால் எந்த நாடாவது ஒத்துதான் வருமா? இந்தச்செய்திக்கு ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு பேசியிருந்தால் மதிப்பாவது கிடைத்திருக்கும். குருட்டாம்போக்காக இப்படியொரு அபாண்டமான பழியை சுமத்த என்ன தேவை? பங்களாதேஷின் அடிப்படைவாத எதிர்க்கட்சிகளின் ஆதரவோ இல்லை ஷேக் ஹஸினாவின் அரசு ஆதரவோயில்லாமல் இப்படி ஒரு செய்தி கொடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் "cross border terrorism" பத்தி சந்திகிழிய பேசுகிறவர்கள் இந்தியர்கள். ஆனால் இந்தியா எங்கள் நாட்டிலே தீவிரவாதம் செய்கிறது என்று திசைதிருப்பி அரசியல் பண்ணும் வேலைதானே இது?
நாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம் என்ற காரணத்திற்க்காக அடிமை சாசனம் எழுதித்தர சொல்லவில்லை. நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று கேட்பது தவறா? கங்கையைக் குறித்து நடந்த தகராறு, எல்லைத் தகராறு, BSF-ஐ அச்சுறுத்துவது, சட்டத்துக்கு புறம்பாக immigrants-ஐ தடுக்காதது என்று ஏகப்பட்டது செய்கிறீர்கள். இத்தனை இருந்தும் புழுவாக நினைத்து தன்னிச்சைப்படி நடந்து நசுக்காமல் மரியாதையுடன் நட்பு பாராட்டும் இந்தியாவிற்கு தரும் பதில் மரியாதை இதுதானா?
கொசுறு: இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களில் ஒரே ஒருவர் தான் of indian origin. கியாஸுதின். ஆனால் அவரும் 17 வருடங்களாக பங்களாதேஷிலேயே வசிப்பவர்.
The Hindu
NDTV