House of Sand and Fog

இந்தப் படத்தை இப்போதுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. 2003-ல் வெளிவந்து ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் என்று தெரிந்திருந்தும் ஏனோ இதுவரை பார்க்கவில்லை.

பொதுவாக படங்களைப் பொருத்தவரை ஒரு ஹீரோ/ஹீரோயின் மற்றும் வில்லன் distinct-ஆக இருப்பது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் எல்லோரும் நல்லவர்களே. முக்கியமான மூவர், வாழ்க்கையில் நன்றாக இருந்து இப்போது இரானிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து கஷ்டப்படும் பெஹ்ரானி(Ben Kingsley) கதாப்பாத்திரம் ஒரு புறமென்றால் அநியாயமாக County office செய்த தவறுக்காக தன் தந்தை அளித்த வீட்டை இழக்கும் காத்தி(Jeniffer Connelly). இவர்களுக்கு நடுவில் காத்தியின் நிலையை கண்டு முதலில் பரிதாபப்பட்டு, பின்னர் காதலனாக மாறி, காதலுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்போய் வேலையையே இழக்கும் போலீஸ் அதிகாரி லெஸ்டர் (Ron Eldard).

இம்மூவரில் யாருமே வில்லன்கள் அல்ல. சில சமயம் கெட்ட காரியங்கள் செய்தாலும், அது வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களாகவே, சிறிதும் சினிமாத்தனமில்லாமல் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் Vadim Perelman. இதில் மிகவும் பரிதாபதுக்குரிய கதாபத்திரம்பெஹ்ரானியுடையது என்பது என் கருத்து. ஒரு காலத்தில் இரானில் Colonel-ஆக இருந்து, மிக வசதியுடன் வாழ்ந்து, அங்கு புரட்சி நடந்தபோது அமெரிக்காவிற்கு தப்பித்து வரும் பாத்திரம். நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன், வாழ்க்கையில் ஏழைகள் பணக்காரர்களாகலாம், ஆனால் பணம்படைத்தோர் ஏழையாவது சாவினும் கொடிதென்று. இதன் ஆழத்தை இப்படத்தைப் பார்த்தபின்னரே உணர்கிறேன்.
வசதியுடன் வாழ்ந்த பெஹ்ரானியால் அமெரிக்காவிற்கு வந்தும் தன் பழைய வாழ்வை மறக்கமுடியவில்லை. சாலைகள் இடும் பணியாளராகவும், பின்னர் ஒரு convenience store- clerk-ஆகவும் வாழ்ந்தாலும் தன் பழைய mercedes-ல் பவனி வருகிறார். வீட்டிற்கு செல்லும்முன் அழுக்கடைந்த துணிகளை மாற்றி பளபள சூட்டிற்கு மாறும் காட்சிகள் மிகவும் அற்புதம். அதேபோல், லெஸ்டர் வந்து மிரட்டும் போது, அதே பழைய மிடுக்குடன் பதிலளிக்கிறார். அதே மாதிரி கடைசி 15 நிமிடம் நிஜமாகவே கண்ணீர்த்துளிகளை வரவழைக்கும்.

பென் கிங்க்ஸ்லீயின் நடிப்புப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். இவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றிப்போது வருத்தமாயிருக்கிறது. Sean Pennக்கு கிடைத்ததும் நியாயந்தான். அவரின் mystic river-ம் அருமையான படம். அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாவதுதான் அடிப்படை இருபடங்களிலும். பார்க்கவில்லையெனின் வாங்கிப் பாருங்கள்.

அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

இன்றைய தேதியில் அரசியலைத் தொழிலாகக் கொண்டோரைத் தவிர மிகவும் சாடப்படும் வர்க்கம் மருத்துவர்கள் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு மருத்துவரையும் விட்டு வைப்பதில்லை. முதலிலேயே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எல்லாத்துறைகளைப் போல இத்துறையிலும் பெருச்சாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி பேசுவதில் சிறிதும் பிரயோசனமில்லை.

ஆனால் அத்தகைய சிறுபான்மையினரால் ஒட்டுமொத்த மருத்துவ வர்க்கமே அநியாயமாக கெட்ட பெயருக்குள்ளாகின்றது.முக்கியமாக அரசு மருத்துவர்களைப் பற்றி. முன்பே கூறியது போல், ஊழல்க்காரர்களைப் பற்றி பேசவில்லை. அரசு மருத்துவரென்றாலே அவர் அத்தகையவர் என்ற கருத்து நிலவுகின்றது. இதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். மிகச்சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் பார்வையாளனாய் (observer) இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மருத்துவத்துறையை சார்ந்தவனாயினும்,அயல்நாட்டில் படித்ததால் அங்கே சேரும்முன்னர் எனக்கும்கூட கொஞ்ச கெட்ட அபிப்பிராயம் இருந்தது..அதைத்தவிர இந்தியன், ரமணா பார்த்தது கூட காரணமாக இருக்கலாம்!

முதலில் இந்த எ.மு.சி பிரிவின் அமைப்பை பற்றி கூறிவிடுகிறேன். 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர், இரு மருத்துவர்கள், நான்கு பட்டதாரி மாணவர்கள். ஒரு குழு அறுவைச் சிகிச்சையும், ஒரு குழு வெளிநோயாளிகளையும் கவனித்துக் கொள்ளும். இதில் மூன்றாவது குழு மற்ற இரு குழுக்கள் பணி முடிந்தபின்னர், 24 மணி நேர அவசர சிகிச்சையை கவனித்துக்கொள்ளும். இது சுழற்சி முறையில் நடைபெற்று வரும்.

வெளிநோயாளிகள் பிரிவைப் பற்றி இப்போது. காலை 8-ல் இருந்து 8 30க்குள் இரு மருத்துவர்களும் வந்திடுவர். தலைமை மருத்துவர்களுக்கு அநேகமாக அலுவலக காரியங்களுக்கே நேரம் சரியாகப்போய்விடும். இந்த போர்ட், அந்த போர்ட் என்று சொல்லி அவர் வருவதற்கே 11 ஆகிவிடும். காலை 8 மணிக்கு முன்னர் நானே ஒரு நாளும் போனது கிடையாது. ஆனால் அப்போது இருக்கும் கூட்டம் சொல்லிமாளாது. ஒரு நாளைக்கு 200-300 என்பது சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது. இதில் என்ன பெரிய விஷயம், தனியார் பொது மருத்துவர்கள் பார்ப்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பொது மருத்துவமல்ல இது. ஒரு நாளைக்கு 150 வெளிநோயாளிகளைப் பார்க்கும் நிபுணர்களை அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அதிகபட்சம் 50. அதுவே மிக அதிகம். இதில் குழுவிற்கு வரும் கூட்டத்தில் அட்மிட் செய்யவேண்டியோர் குறைந்தபட்சம் 20 என்று வைத்துக்கொள்வோம். இந்நோயாளிகள் டிஸ்சார்ஜ்- ஆகும் வரை இக்குழுவே கவனித்துக் கொள்ளும்.

இப்போது அறுவைச் சிகிச்சை பற்றி. நான் பார்த்த வரையில் காலை 745-க்குள் பட்டதாரி மாணவர்கள் வந்து நோயாளிகளை தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவர். 830-9பதுக்குள் மற்ற இரு மருத்துவர்கள் அவர்களின் முந்தைய நாளின் அட்டவணையின்படி 24-மணி நேரச் சிகிச்சைப் பிரிவிலிருந்தோ வீட்டிலிருந்தோ வந்துவிடுவர். வாரத்தில் பாதி நாட்கள் அங்கு தான் காலைச் சிற்றுண்டி அவர்களுக்கு. தலைமை மருத்துவர்களும் வந்திடுவர். ஓரு நாளில் surgery-யின் தன்மையை பொறுத்து 3-4 வரை செய்ய முடியும். அதுவும் எ.மு.சி அறுவை சிகிச்சைகள் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது அதிக physical exertion உண்டாக்கக் கூடியவை. (பெரும்பாலும் சுத்தியலும் கையுமாய் அலைவதால் தான் எ.மு. மருத்துவர்களை 'carpenters' என்று மற்ற மருத்துவர்கள் கிண்டலடிப்பர்.) இந்நிலையில் ஒருநாளில் அதிகபட்சமாக 7 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யமுடியும்.

இப்போது முந்தைய பத்தியைப் பார்த்தீர்களானால் அதில் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் அட்மிட் செய்யப்படுகின்றனர். ஆனால் அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்யமுடிவதோ 7 பேருக்கு மட்டுந்தான். மிச்சம் 14 முடிக்கவே இன்னும் இரு அறுவைச் சிகிச்சை நாட்கள்
தேவைப்படும். ஆனால் அவ்விரு நாட்களுக்குள் அட்மிட் ஆகியும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியாமல் மேலும் தள்ளிப்போடப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40! உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தாலேயொழிய seniority முறையில் தான் நடக்கும். இது ஒரு குழுவிற்கு மட்டும். மற்ற இரு குழுக்களுக்கும் இதே நிலைதான்.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியவில்லையெனின் நோயாளியின் நிரந்தர disability-களும் இன்னபிற complications-um வர வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படிப்பட்ட நிலையில், சிகிச்சையால் முழுகுணமாகாமல் போகலாம். இப்படி ஆவதில் மருத்துவர்களைக் குறை கூற முடியுமா என்று சிந்தித்து பாருங்கள்.

நான் இதுவரை சொன்னது எல்லாம், எவ்வித தங்குதடையின்றி இந்த சிகிச்சை மையம் இயந்திரம் போல் செயல்பட்டால். எ.மு. சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் அடிதடி, சாலைவிபத்துக்கள் போன்ற MLC(medico-legal cases) வழக்குகள் போன்றவற்றிற்கு சாட்சி சொல்ல போகவேண்டும். undergraduate மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் மற்றும் லெக்சர்கள் எடுக்கவேண்டும். அதைத்தவிர அவர்கள் குடும்ப சூழ்நிலைகள். அடுத்தது bureaucracy. சில நோயாளிகளுக்கு அவ்வளவு அவசரம் இல்லையாயினும் அரசியல் பின்னணியோடு வருவோர் ஏராளம். அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் என்று dean தன் கைப்பட எழுதிய கடிதங்களை நான் அங்கு இருந்த குறைந்தகாலத்திலேயே ஏராளமாக பார்த்திருக்கிறேன்.

இவைத்தவிர அறுவைச்சிகிச்சைக்கான உபகரணங்கள் பழைமையானதாகவும், பல நேரம் வேலையே செய்யாதாகவும் இருக்கும். நம்பினால் நம்புங்கள். மின்சாரம் இல்லாமல் unipolar hemiarthroplasty செய்யப்பட்டு பார்த்திருக்கிறேன். இவ்வகை சிகிச்சை இப்போது மேல்நாடுகளில் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் bipolar வந்துவிட்டது. ஆனால் அதை செய்வதற்கான உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. அதே போல் ஒருமுறை open செய்த பின்னர் மின்சாரம் கட் ஆனதால் bleeders-ஐ கட்டுப்படுத்த மருத்துவர்கள் பட்டபாடு பார்த்தால் தான் தெரியும். நான் டார்ச் லைட் பிடிக்க, மற்ற மருத்துவர்கள் லிகேட் பண்ணுவதற்குள் திண்டாட்டமாகிவிட்டது. பாதி நாட்கள் குளிர்சாதன வசதி இருக்காது. கையுறைகளை autoclave முறையில் recycle செய்வதையும் இங்குதான் பார்த்தேன். எ.மு அறுவை சிகிச்சை தியேட்டர்களில் check X-Ray எடுக்க வசதி கிடையாது. இதெல்லாம் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரிவதில்லை.

அதே போல் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துசீட்டுகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள். இந்த துறையை பொறுத்தவரை இருப்பது 6 மருந்துகள் தான். அதில் ஒரு பாரசிட்டமால், டைக்லோபினாக், பி காம்ப்ளெக்ஸ், அமாக்ஸிசிலின் இன்னும் எதொ ரெண்டு இருக்கும். ஞாபகமில்லை. எந்த condition-க்கும் இதுதான் available மாத்திரைகள். புதிய தலைமுறை மருந்துகள் எவ்வளவோ வந்தபின்னும், இந்த மருந்துகள் பயனில்லை என்று கூறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட conditions- களுக்குத்தான் பயன்படுத்த முடியும். மருந்துகளை நிர்ணயிப்பது இந்த மருத்துவர்கள் அல்ல. அதற்கென்று ஒரு மாநில குழு இருக்கிறது. அது என்ன செய்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை.

நல்ல மருத்துவர்கள் பலர் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. கைகட்டி நின்று கொண்டு, இருக்கின்றவற்றை வைத்துக்கொண்டு தங்களால் இயன்றவரை சிறப்பாக செய்யமுயன்றும், பலனின்றி அந்நோயாளிகளிடமிருந்தே தாங்கள் செய்யாத தவறுகளுக்காக வசவும் வாங்கிக்கொண்டு இருந்து வருகின்றனர். இது தமிழ்நாடு முழுக்கவும் முக்கால்வாசி அரசு மருத்துவர்களின் நிலை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட கொடுமை நவீன உபகரணங்கள் கிடங்கில் கிடந்தாலும், திறப்பு விழா நடத்த 5-வது கூட பாஸ் பண்ணாத ஒரு வட்டத்திற்கோ மாவட்டத்திற்கோ காத்துகிடக்க வேண்டிய அவலநிலையே நம்நாட்டில் இருக்கிறது. யாரை குற்றஞ்சொல்ல?

இப்படத்தில் இருப்பது என்னவென்று யூகியுங்கள் பார்ப்போம் :)

hue மட்டும் மாத்தியிருக்கேன்.

இது என்ன?? - Image hosted by Photobucket.com

சரியாகச் சொல்வோர்க்கு ஆயிர பொற்காசுகள் தரும் நிலைமைல இல்ல.. ஆனா ஒரு "ஓ" போடலாம்!

புகைப்படங்களில் சான்க்ட் பீட்டர்புர்க் - Church of the Spilt Blood

Church of the Spilt Blood - இதுக்கு Church of the Resurrection-னு ஒரு பேரும் உண்டு. இது கனாலா கிரிபாயேதோவா-ங்கர நீர்வழி மேலே இருக்கு. பிரதான நெவ்ஸ்கி பிராஸ்பெக்ட்லேர்ந்து ஒரு 500மீ நடக்கணும். தன் தந்தை அலெக்ஸாண்டர் II இறந்த இடத்தில் அவரின் நினைவாக இதை கட்டியவர் மூன்றாம் அலெக்சாண்டர். இக்கட்டிடத்தின் ஒரு பாதி நிலத்திலும், மிச்ச பகுதி நீர்வழியின் மீதும் இருக்கும்.

Church of Spilt Blood - Image hosted by Photobucket.com

17-ஆம் நூற்றாண்டு பாரம்பரிய ரஷ்ய முறையில் இதை வடிவமைத்தவர் ஆல்ப்ரெட் பார்லண்ட் என்னும் கட்டிடக்கலை நிபுணர். இதே style-il கட்டப்பட்டது தான் மாஸ்கோவிலிருக்கும் Red Square-இல் உள்ள உலகப்பிரசித்தியான St. Basil's Cathedral.
இந்த சர்ச் 1883-ல் ஆரம்பிக்கப்பட்டு 1907-ல் முடிக்கப்பட்டது. உலகத்திலேயே அதிக சதுர அளவு mosaic உள்ளே கொண்ட சர்ச் இதுதான்.
1917இல் நடந்த ரஷ்ய revolution-இல் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1932-இல் கொடுங்கோலன் ஸ்டாலினின் ஆட்சியில் ஒரேயடியாக மூடிவிட்டனர். மதநம்பிக்கையை அடியோடு வெறுத்த சோவியத் ஆட்சிக்காலத்தில் theater equipment-களுக்கான கிடங்காக பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது பேரரழிவுக்கு உள்ளானது.

Church of Spilt Blood - Image hosted by Photobucket.com
Church of Spilt Blood - Image hosted by Photobucket.com



தற்போது பழைய நூல்களின் மூலமும், புகைப்படங்களின் மூலமும் 1907-இல் இருந்த நிலைக்கு மிகுந்த சிரமத்திற்கு பிறகு மறுவாழ்வு கொடுத்துள்ளனர். இப்போது இந்த இடம் அரசுக்குச் சொந்தமானதென்று, சான்க்ட் பீட்டர்புர்க் அரசாங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசேஷ நாட்களைத் தவிர இதர வழிபாடுகள் எதுவும் நடப்பதில்லை.

அடுத்த ப்ளாக்கில் அரண்மனைச் சதுக்கம் மற்றும் உலகப்புகழ்ப்பெற்ற "Hermitage" அருங்காட்சியகம் பற்றி.


Camera Used: Olympus C-5060WZ. long shot இல் மட்டும் கொஞ்சம் photoshop - Shadow/Highlight Filter மற்றும் Levels மாற்றம் செய்துள்ளேன்.please click on images to enlarge.

சோம்பல் ஒழிய மந்திரம்!

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

- மகாகவி பாரதியார்

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதெல்லாம் சோம்பலாயிருக்கிறதோ, வேலை செய்வதற்கு அலுக்கிறதோ, இதை ஒருமுறை படித்தால் ஒரு புது உத்வேகம் தோன்றும்.

இதை ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் worktable-ல் அருகினில் ஒட்டி வைத்து நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன்.

SPb - பாலசுப்ரமண்யமில்ல, சான்க்ட் பீட்டர்புர்க்.

Sankt Peterburg - இது ரஷ்யாவோட ரெண்டாவது பெரிய நகரம். "northern capital"- னும் சொல்வாங்க. ஜனத்தொகை 50 லட்சம். SPb-nu தான் இந்த நகரத்தை கூப்பிடறாங்க. ரஷ்யாவில் கம்யூனிஸம் முதலில் தோன்றியதே இங்கேதான். சோவியத் யூனியன் வந்த போது இந்த பேர மாத்தி பெட்ரொக்ராட்னு கொஞ்ச நாளும் லெனின்க்ராட் னு அப்புறமும் வெச்சாங்க அப்புறம் இப்போ பழைய பேரே திரும்பி வந்தாச்சு. இப்போ ரஷ்ய அதிபரா இருக்கற வ்ளாடிமீர் பூடின் கூட இந்த ஊர்க்காரர்தான். ரஷ்யாவின் கலாச்சார தலைநகரம் னு இந்த ஊர்க்காரங்களுக்கு கொஞ்சம் திமிரே உண்டு.

இந்த நகரம் இருக்கற இடத்தில நேவா-னு ஒரு நதி கடல்ல கலக்கறது. இந்த நகரம் கட்டனவர் முதலாம் பியோட்ர்-ங்கற ரஷ்ய tsar. அவரோட செல்ல நகரமாகவே இதக் கட்ட ஆரம்பிச்சார். 1703-ல ஆரம்பிச்சு 1712-ல் முடிச்சு தலைநகரமாக ஆக்கிட்டாங்க. கிட்டத்தட்ட 100,000 பேர் இந்த நகரத்தை கட்டும் போது செத்துருப்பாங்கன்னு சொல்றாங்க. ஆனா பியோட்ர் I நினைச்சா மாதிரியே ஒரு நவீன ஐரோப்பிய நகரமா பிரமாதமா கட்டிட்டாங்க. இன்றைக்கும் இந்த ஊருக்கு "Window to Europe" -னு பேருண்டு. அதே மாதிரி "Venice of the North"னும் சொல்வாங்க. ஏன்னா நேவா நதி குறுக்கேயும் நடுக்கேயும் ஒடறதால பாலங்கள் கொஞ்சம் நஞ்சமில்ல.
இரண்டாவது உலகப்போரின் போது ரொம்ப கஷ்டப்பட்டாங்க இந்த ஊர்க்காரங்க. 3 வருஷம் ஹிட்லரின் படைகளின் siege-இல் இருந்தபோது கிட்டத்தட்ட 1,000,000 மக்கள் வரை இறந்திருப்பாங்கன்னு சொல்றாங்க. இது அந்த மூணு வருஷத்திலே மட்டும். இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்திலேயும், அமெரிக்காவிலேயும் மொத்தமாகவே 700,000 தான் இறந்தவர்கள்.

ஊரின் பிரதான சாலைக்கு நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட்-னு பேர். ஏகப்பட்ட பாலங்கள். அழகான கட்டிடங்கள், parks .. சே.. ஏதோ "உன் ஊர்" னு தமிழ் இரண்டாம் தாள் கட்டுரை மாதிரி இருக்கு. அத விடுங்க.. மொத்தத்திலே காலாற நடந்தா நேரம் போறதே தெரியாது. இப்போ கொஞ்ச நேரம் ஆங்கிலத்துக்கு தாவறதுக்கு மன்னிக்கவும்.

Inspite of Soviet Rule, which has literally turned Moscow's suburbs into utilitarian drab monstrosities in dull grey and white called buildings, this was Soviet architecture's hallmark in my opinion. Moscow does retain its unique European style blended neatly with Russian architecture, in the city center and within the Garden Ring Road. In that, I liked SPb better than Moscow as it seems that the whole city is a museum. You will be hard pressed to spot Soviet utility architecture in many parts of the city. Simply a beautiful city. And people are more friendly as well. With its innumerable palaces all replete with Victorian vanity, does provide great sights. The best and most famous of which is the Winter Palace which houses the Hermitage, one of the largest museums in the world. The museum itself is a marvellous piece of work, with its display rooms only fit to be visited even if they contained no exhibits!

ஸ்டுடெண்ட் நெ. 1 -னு ஒரு படம் வந்ததில்ல? அதுல 'விழாமலே இருக்க முடியுமா'னு சிபிராஜ் ஆடற ஓரு பாட்டு வரும். அது இந்த ஊர்லே தான் எடுத்திருக்காங்க. ரஷ்யானாலே ஒரு மட்டமான கருத்து இருக்கு. இந்த நாட்டின் போலிஸை வெச்சுத்தான் அப்டி நினைக்கிறாங்களோ என்னவோ. பக்கத்து கடைக்கு போனாலும் கடவுச்சீட்டு இல்லாம போக முடியாது. இது வெளிநாட்டுக்காரங்களூக்கு மட்டுமில்ல. ரஷ்யர்களும் எப்பவுமே ஒரு photo id உள்ள document எதாவது வெச்சுருக்கணும். மாஸ்கோ மக்களை மட்டும் பாத்தீங்கனா, உங்களுக்கு ரஷ்யாவே வெறுத்திடும். அப்டி சொல்றவங்க இந்த ஊருக்கு வந்து பாக்கணும். ஊரும் அழகு. மக்கள் அதுக்கு மேலே ரொம்ப நல்லவங்க. நீங்க எப்போவாவது ரஷ்யாவோ, ஸ்கேண்டினாவிய நாடுகளுக்கோ வந்தீங்கனா, மறக்காம ஒரு நடை வந்து பாத்துட்டு வாங்க. இந்த ஊரு மட்டுமில்லாம, பாக்கவேண்டிய இடங்கள்-னு சொன்னா பீடர்காப் மற்றும் புஷ்கின் ரெண்டு ஊரு பக்கத்தில இருக்கு. அதோட அழக எழுத்தில் சொல்ல முடியாது. எதாவது வலைத்தளம் கிடச்சா போஸ்ட் பண்றேன்.

வருஷம் பூராவே நல்லா இருந்தாலும் ஜூன் தான் இந்த ஊருக்கு வர ரொம்ப நல்ல நேரம். அப்போ "வெள்ளை இரவுகள்" னு ஒரு festival நடக்கும். அதாவது அந்த நேரத்திலே இரவே கிடையாதுன்னே சொல்லலாம். எந்நேரமும் சூரிய ஒளி இருந்துண்டே இருக்கும். உங்களுக்கு ஸ்னோ ரொம்ப பிடிக்கும், பரவாயில்லேன்னா டிசம்பர், ஜனவரிலேயும் வரலாம்.
இப்போதைக்கு இவ்ளோதான்.

Anichkov Palace - Sankt-Peterburg


Anichkov Palace, Sankt-Peterburg
Posted by Hello

தீவிரவாததிற்கு தீர்வு! - finally :)

இப்போதுதான் திடீரென்று தோன்றியது நேற்றைய வலைப்பதிவுக்கான விடை.

தீவிரவாதத்திற்கு ஒரே தீர்வு, பாகிஸ்தான் மாதிரி நாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்வதுதான்!
:)

தீவிரவாதமும், அதற்கு பதிலும்?


தீவிரவாதம் என்பது - "the unlawful use of force against persons or property to intimidate or coerce a government, the civilian population or any segment thereof, in the furtherance of political or social objectives". This definition includes three elements: (1) Terrorist activities are illegal and involve the use of force. (2) The actions are intended to intimidate or coerce. (3) The actions are committed in support of political or social objectives. இது FBI-யின் விளக்கம்.

இதில் தீவிரவாதத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆள்பவர்களோ, சேனைகளோ மிக குறைவு. பெரும்பாலும், அப்பாவி பொதுமக்களே அல்லலுக்கு உள்ளாகின்றனர். Art Blakey-in quote-ஐ கொஞ்சம் மாற்றியமைத்தால் "Causes are like assholes... everyone's got one."

யாருக்குத்தான் வாழ்க்கையில் cause இல்லை? அதே போல் எல்லா தீவிரவாத அமைப்பினருக்கும் ஒரு cause இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையில் ஈடுபடுவோர், தங்கள் செயள்களினால் அப்பாவி மக்களை கொல்ல ஆரம்பிப்பின், அவர்கள் மனிதர்கள் என்கிற தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்களுடைய நோக்கம் எவ்வளவு உயர்வாகினும் இதே கதியே. இதில் உசாமாவாகட்டும், அராபத்தாகட்டும், பிரபாகரனாகட்டும், ஜெர்ரி ஆடம்ஸ்-ஆகட்டும். எல்லொரும் ஒர் நிலையே. (அரசுகள் போர்களின் மூலம் கொல்கின்றனர். ஆனால் அவ்விவாதம் இக்கட்டுரையின் scope-க்கு வெளியே உள்ளது. தனிமனிதர்களையும், renegade அமைப்புகளைப் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன்.)

தீவிரவாததிற்கு பதில் தாக்குதலே சரியென்று ஒரு சாரார் கூறுகின்றனர். இல்லை பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்பர் ஏனையர்.

வன்முறையே சரி என்பவர்கள் முதலில் எடுத்துக்காட்டுவது அமெரிக்காவை. பின்னர் ரஷ்யா மற்றும் இஸ்ரேல். அவர்களின் கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. 9/11 க்கு அப்புறம் அமெரிக்கா தன்னிச்சையாக முடிவெடுத்து, ஐ. நா சபை பற்றி துளியும் கவலையில்லாமல், 'என் வழி தனி வழி' என்கிற போக்கில் இரு போர்கள் தொடுத்தது. அப்போரினால் அந்நாடுகளில் என்ன பாதிப்பு எற்பட்டது என்பதைச் சொல்வது என் நோக்கல்ல. ஆனால், அப்போரினால் அமெரிக்காவில் தற்பொழுது அமைதியே இருக்கிறது. சில அமெரிக்க உயிர்களையும், பல லட்சம் பிறநாட்டு உயிர்களையும் குடித்தாலும், அவர்களுக்கு இப்போது வரையில் வெற்றியே கிட்டியுள்ளது. அது போரினால் மட்டுந்தான் என்றும் சொல்வதற்கில்லை. பூகோள அமைப்பும் ஓர் காரணம் என்பது என் கருத்து. உசாமா அவர் பாட்டுக்கு தேவா மாதிரி தினமும் ஒரு காஸெட் ரிலீஸ் பண்ணி விடுகிறாரெயொழிய எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இன்னமும்
பெரும் threat இருப்பது போல் மாயை உருவாக்க படுகின்றது என்பது பல பார்வையாளர்களின் கருத்து. அதில் எனக்கும் உடன்பாடே.

ரஷ்யர்களுக்கு பேச்சுவார்த்தை என்பது அகராதியில் கிடையாது. சமீபத்தில் கொல்லப்பட்ட செசனிய தீவிரவாதி அஸ்லான் மஷ்காடொவ் விவகாரம் கூட திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையே. இதில் சாதரண ரஷ்யர்களும் சில உயிரழப்புகளை சகித்து கொள்ள தயாராகத்தான் உள்ளனர். மாஸ்கோவில் சென்ற வருடம் ஒவ்வொரு மாதமும் எதாவதோர் தீவிரவாத attack நடந்து வந்தேயிருக்கின்றது. இதில், பெஸ்லான் பள்ளி மற்றும் மாஸ்கோ பாலே தியேட்டரிலும் நடந்த தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் பதிலிலேயே விடை இருக்கிறது. தமது மக்கள் சிலர் மடிந்தாலும் திவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை என்பதே இல்லை என்பதே அவர்கள் கொள்கை.

இஸ்ரேலியர்களும் சளைத்தவர்கள் அல்ல. "அடிக்கு அடி, உதைக்கு உதை" என்கிற நம் சூப்பர் ஸ்டாரின் தத்துவத்தையே தாரக மந்திரமாக கொண்டவர்கள் (திருமாக்கள் கவனிக்க!). சொல்லப்போனால் அவர்களின் வழியைத்தான் அமெரிக்காவும் ரஷ்யாவும் தற்போது செயல்படுத்தி வருகின்றன. வன்முறையும் பயன்படுகிறது இருப்பினும் தமது மக்களின் உயிர் சேதம் தவிர்க்கமுடியாததொன்றாகிறது.

ஆனால் இவ்வன்முறையால் மட்டுமே தீவிரவாதத்தை தடுக்க முடியுமா என்றால் அதற்கு அமெரிக்கா மட்டுமே (அதுவும் இப்போதைக்கு) எ.கா வாகும். அப்பாவி ரஷ்யர்களும், இஸ்ரேலியர்களும் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாடுகளின் பதில் வன்முறை அதிகரிக்க அதிகரிக்க தீவிரவாதச் செயல்களும் வளர்ந்து கொண்டேதான் போகின்றன. இதற்கு ஒர் எல்லை என்பதே கண்ணில் தெரியவில்லை. அமெரிக்காவின் வெற்றிக்கு ஏனைய காரணங்களும் உண்டு முன்பு சொன்னது போல.

இப்போது பேச்சுவார்த்தை முறைக்கு வருவோம். பெரிய எடுத்துக்காட்டுகள் இந்தியாவும், அயர்லாந்தும். அயர்லாந்தை பொறுத்தவரை ஓரளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்தியாவின் நிலையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டு என்று சொல்வதற்கில்லை. நாமும் பாகிஸ்தானும், தீவிரவதிகளும் பசினோம். பேசிக்கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். இதற்கும் முடிவேயில்லாமல் 50 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனெனில், எது சரியான வழி என்பது தெளிவாகவே இல்லை. இரு வழிகளிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் வெளிச்சத்துக்கு வருகின்றது. தீவிரவாதத்திற்கு வித்திடுவோர், பிரச்சனை
தீர்ந்திடுமெனில் வேலையில்லாதோர் ஆகிவிடுவர். ஆகவே பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதில் அவர்களின் சுயநலமும் அடங்கியுள்ளது. யாசர் அராபத் ஆனாலும் பிரபாகரன் ஆனாலும் இதே நிலைதான். அவர்களுக்கு போட்டியாக சுயநல அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். கடைசியில் பாதிக்கபடுபவர்கள் அப்பாவி மக்கள் மட்டுமே.

போல்டன், வுல்ப்போவிட்ச் மற்றும் F-16கள்!

அகிலாண்ட கோடி உலகமெல்லாம் ஆளும் நமதருமை பேரரசர் சமீபத்தில் நியமித்த இருவரை பற்றி மிகவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.ஒருவர் ஜான் போல்டன். இன்னொருவர் பால் வுல்ப்போவிட்ச் . ஏதுடா, நம்மூர்லேயே எவன் மந்திரி னு தெரியல. அமெரிக்காவுல என்ன நடந்தாநமக்கென்னனு யோசிக்ககிறீங்களா? விஷயதுக்கு வரேன்.

முதலில் போல்டன். ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்காவின் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்னமும் அமெரிக்க செனட் ஒப்புதல்அளிக்கவில்லையாயினும், நியமனமே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உலகத் துணை ஜனாதிபதி டிக் செனியின் அடிப்பொடிகளில் ஒருவர் இவர். இராக்கிற்கும் தீவிரவாததிற்கும் தொடர்புள்ளதென மக்களிடத்து நம் மன்னர் பொய் சொல்லும் முன்னரே, அந்நாட்டினை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டிய மூளைகளில் ஒருவர்.

"பாக்ஸ் அமெரிக்கானா" அடிப்படைவாதிகளை இவ்விரண்டாவது ஆட்சிக்காலத்தில் பெரும் பதவிகளில் தனிப்பெரும் கருணையோடு அமர்த்திவருகிறார் புஷ். நீக்ரோபாண்டே, ரைஸ், செர்டொப் வரிசையில் வந்தவர் தான் போல்டன். ஐ. நா சபை கலைக்கப் பட வேண்டும் அல்லது அமெரிக்கா அதனிலிருந்து விலக வேண்டும் என்பது இவரின் கொள்கை. இவ்விரண்டில் ஓன்று நடந்தாலும் உலக அமைதி குலையப் போவது உறுதியெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இரண்டாமவர் இன்னமும் தீவிரமானவர். உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக IMF வங்கியின் தலைவரை ஐரோப்பாவும், உலக வங்கியின் தலைவரை அமெரிக்காவும் நியமித்து வருகின்றன. "பாக்ஸ் அமெரிக்கானா"-வின் தற்போதைய தலைவர்களில் ஒருவரான பாதுகாப்பு செயலர் டோனல்டு ரம்ஸ்பெல்டின் தளபதி இவர்.

உலக வங்கியின் முக்கியப் பணி அமெரிக்க ஆயுதங்களை வாங்க வளரும் நாடுகளுக்கு உதவி செய்வதேயாகும். இரண்டாவது, அம்மாதிரி ஏழை நாடுகளை இவ்வகையில் பெருங்கடனுக்கு உள்ளாக்கி, பின்னர் தனியார் மயமாக்கலுக்கு அவைகளை உட்படுத்துவது. தனியார் மயமாக்கலில் தீங்கில்லை. ஆயினும் அதை செயல் படுத்தும் முறையில் வசூல் ராஜாவாகவெ உலக வங்கி செயல்பட்டு வந்துள்ளது. இந்த அழகில் வுல்ப்போவிட்சின் நியமனம் பீதியை கிளப்புகிறது.

முக்கியமாக இந்தியாவிற்கும் F-16 ஜெட்களை விற்போம் என்று ரைஸ் கூறியுள்ளார். நமது பொருளாதார நிலைமையில், அரதப் பழசான விமானங்களை வாங்க மேலும் மேலும் நாம் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.

நான் எழுதுவதால் நம்மன்னர் எதையும் மாற்றப்போவதில்லை. எதற்கு இதுக்கு ஒரு வலைப்பதிவு-னு உங்க முணுமுணுப்பூ எனக்கும் கேட்குது

கருப்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ!

ஒரு நல்ல விஷயத்தோட ஆரம்பிக்கலாமா?


கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்ப்வளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருபொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

உன்னோடுடனே யொருகடலில் வார்வாரை
இன்னா ரினையரென் றெனண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!

பதினாறு மாயிருவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டார்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெருஞ்சங்கே!

- நாச்சியார் திருமொழி

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

வணக்கம்!
வந்தனம்!
சுஸ்சுவாகதம்!

முதல்முறையாக தமிழில் பதிவு செய்கிறேன்!அதான் கொஞ்சம் ஆர்வம்!

 

வார்ப்புரு | தமிழாக்கம்