இ.பி 5: புதிய மன்னர்கள்

கோர்பசேவ் பதிவியை விட்டு இறங்கியாச்சு. வந்தாரு போரிஸ் யெல்ட்ஸின்னு போன பதிவுல பார்த்தோமா? அவர் கூட ஒரு கூட்டமும் வந்தது. நியோ லிபரல்ஸ்னு சொல்லிக்கொண்ட கூட்டம். அனாடோலி சுபாய்ஸ், யிகோர் ஹைதர், போரிஸ் நெம்ட்ஸோவ் இப்படி பலர். கம்யூனிஸ்டுகளுக்கு கிட்டத்தட்ட கட்டம் கட்டிய பின் எதிர்ப்பு என்பதே இல்லாமல் இருந்தது. இதில் முக்கியமானவர் யிகோர் ஹைதர். "அதிர்ச்சி வைத்தியம்" என்ற தத்துவத்தின் படி ரஷ்யாவின் சோவியத் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நினைத்து அதன்படி அதிர்ச்சியும் கொடுத்தார்.

அதுவரையில் கட்டுப்பாடுக்குட்பட்டிருந்த பொருட்களின் விலைகள், தனியார்மயமாக்கத்தின் மேலிருந்த கெடுபிடிகள், நிறுவனங்களுக்கு அதுவரையில் கொடுக்கப்பட்டுவந்த சப்ஸிடிஸ் என எல்லாவற்றையுமே ஒரே நாளில் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் விளைவால் ஏற்பட்ட பணவீக்கத்தை "hyperinflation" என்று வருணித்தார்கள் என்றால் நீங்கள் நிலைமையில் தீவிரத்தை உணர முடியும். இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் செண்ட்ரல் வங்கி என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறதல்லவா? பொருளாதார மாற்றத்தை விரும்பாத வங்கி, ரூபிள்களை அச்சடிக்க ஆரம்பித்தது. ரூபிள் வெறும் பேப்பர் என்ற மதிப்பானது. ரூபிள்களில் ஊதியம் பெற்று வந்த சாமானிய ரஷ்யர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஆயிரக்கணக்கான ரூபிள்கள் சேமித்து வைத்திருக்கிறோம் என்று நினைத்தவர்களின் வாழ்க்கையளவிலும் சேர்த்த சேமிப்பு உப்புக்கு பெறாமல் ஆனது.

சோவியத் காலத்தில் கடைகளில் சில பொருட்களே கிடைத்தாலும், அவற்றை வாங்கும் சக்தி மக்களிடம் இருந்தது. ஆனால், சந்தைப் பொருளாதாரம் என்று வந்தபின் பொருட்கள் குவியத் தொடங்கின. வாங்கத்தான் ஆளில்லை. 1993-இல் 49 சதவிகித ரஷ்யர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தனர் என்று கூட ஒரு புள்ளிவிவரம் உண்டு. பல தொழிற்நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கதவை மூடின. மக்களும் வீதிக்கு வந்தனர்.

இந்த மாறுதல்களை எதிர்க்க ஆரம்பித்த மக்களையும், மற்றவர்களையும் அடக்குவதற்காக தன் கைப்பாவையான டூமாவின் (பாராளுமன்றம்) மூலமாய் சட்டமாய் இயற்றினார் யெல்ட்ஸின்.

1994-இல் இப்படி எல்லாப்புறத்திலிருந்தும் இடி வாங்கிக் கொண்டிருந்த ரஷ்யாவிற்கு வந்தது அடுத்த (இன்றளவும் தீராத) தலைவலி. செசன்யா. மிகவும் தெற்கிலுள்ள, அதிக இசுலாமியர்கள் உள்ள இந்த நாடு ரஷ்யாவிலிருந்து பிரிவதாய் சுதந்திர பிரகடனம் செய்தது. ஆனால், எண்ணெய் வளமிக்க அந்த ஏரியாவை விட்டுத்தர யெல்ட்ஸின் சம்மதிக்க வில்லை. படைகளை அனுப்பினார். ஆனால் morale இல்லாத படைகள் செசன்யர்களை கட்டுக்குள் வைக்க திண்டாடினர். ஒருவழியாய் பிப்ரவரி 95 இல் 25000 உயிரழப்புகளுக்கு செசன்யாவின் தலைநகர் கிராஸ்னியை கைப்பற்றினர். இது ஒரு புறம். வெளியுலகின் கவனமெல்லாம் இங்கே இருக்க, வரலாறு காணாத ஒரு நூதன மோசடி ரஷ்யாவினுள்ளே நடந்து கொண்டிருந்தது.

ரஷ்யாவையை விற்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தனர் யெல்ட்ஸினின் கூட்டாளிகளும் பார்ட்னர்களும். எனர்ஜி, தொலைதொடர்பு, யுடிலிட்டிஸ் ஆகியவற்றில் பல பிராந்திய, நாடு அளவிலான, தனி நகரங்களுக்கென பலநூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருந்தது சோவியத் யூனியனில். ஆனால், இந்த சமயம் என்ன செய்தனர் தெரியுமா? அரசுக் கம்பெனியின் CEO கம்பெனியின் தனியான முதலாளியாவார். மற்ற முக்கியஸ்தர்களுக்கு அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் கணிசமான பங்குகள் கொடுக்கப்படும். இப்படியாக அரசு நிறுவனம் தனியார் நிறுவனமாகும். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், யெல்ட்ஸின் ஆசியுடன் இதுதான் நடந்தது. பல பில்லியன் டாலர்கள் இந்த வகையில் அரசுத்தரப்பிலிருந்து தனியாருக்கு கைமாறின. சொந்தங்களுக்கு கொஞ்சம், மற்றவர்க்கு கொஞ்சம் என்று பெரிய ரஷ்ய ஆப்பத்தை பங்கு போட்டுக் கொடுத்தார் யெல்ட்ஸின். முக்கியமாய் 1996 அதிபர் தேர்தலில் தோல்வியடையும் நிலை வந்தபோது இந்த முதலாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில், சம்பள பாக்கி குறித்த போராட்டங்கள் வெடிக்காமல் வேலை செய்தவர்கள் 'சரி'யாக வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டதால். மிகவும் குறுகிய வெற்றி பெற்ற யெல்ட்ஸின் தன் பாலிஸியை தொடர்ந்தார்.

ஒரு உதாரணம். மிக்காயில் கோடர்கோவ்ஸ்கி. 2004 ஆம் ஆண்டில் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 16 ஆவது இடம். ரஷ்யாவின் மிகப்பெரும் பணக்காரர். (கொசுறு செய்தி: பில்லியனர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை நியு யார்க்கிடமிருந்து மாஸ்கோ சென்ற வருடம் கைபற்றியது! மாஸ்கோ: 33, நியு யார்க்: 31) அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று பூடின் மீது சேறு வாறி இறைக்கும் மேற்கத்திய ஊடகங்கள் அவர் எப்படி அவ்வளவு பெரும் பணம் ஈட்டினார் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவரின் எண்ணெய் நிறுவனமான யூகோஸ் இன்றைய சொத்துமதிப்பு 31 பில்லியன் $. அத்தகைய நிறுவனத்தின் 78 சதவிகித பங்குகளைப் பெற கோடர்கோவ்ஸ்கியின் மெனடெப் குழுமம் கொடுத்தது... வெறும் 450 மில்லியன் $. வாங்கி இருவருடங்களில் செய்த மதிப்பீடு படி அப்போதைய யூகோஸின் மதிப்பு 9 பில்லியன் $.உண்மைதான் பூடின் நடவடிக்கை எடுத்ததற்கு அரசியல் காரணமும் உண்டு. ஆனால், வெட்கமேயில்லாமல் சொந்த நாட்டையே சுரண்டி ஏப்பம் விட்டவருக்கு என்ன பெரிய வக்காலத்து வாங்க வேண்டியிருக்கிறது? இவர் ஒருவர் மட்டுமில்லை யெல்ட்ஸினின் காலத்தில் தலையெடுத்த இந்த சுரண்டல் கூட்டத்திற்கு பெயர் "oligarchs". போரிஸ் பெரஸோவ்ஸ்கி, வ்ளாடிமிர் குஸின்ஸ்கி என்று பத்து பன்னிரண்டு பேர் இருந்தனர். ஒவ்வொருவராய் பூடினின் நடவடிக்கைகளில் மாட்டிக்கொள்ள எஞ்சியிருப்பது மிகச்சிலரே. ரோமன் அப்ரமோவிச் அதில் மிகப் பிரபலம். ஆங்கில கால்பந்து அணியான செல்ஸியை வாங்கியவர். ஒரு மாநிலத்திற்கு கவர்னராகவும் தற்போது இருக்கிறார்.

இவர்கள் creme de la creme. சிறிய அளவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். 1998-ஆம் வருடம் ஆசிய பொருளாதார வீழ்ச்சியினாலும், எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு விழுந்ததனாலும் ரஷ்ய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஒரு டாலருக்கு 6000 ரூபிள்கள் என்று இருந்தது, 14000, 17000, 21000 என்று ஒரே வாரத்தில் வீழ்ந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல காலம். டாலர் கையிருப்பால். பின்னர், எப்போதென்று சரியாக நினைவில்லை. கடைசியில் இருக்கும் மூன்று ஜீரொக்களை மக்கள் வசதிக்காக நீக்கினார்கள். IMF கொடுத்த 22.5 பில்லியன் கடனாலும், உலகச் சந்தை ஒருவாறு ஸ்டபிலைஸ் ஆகி எண்ணெய் விலை மீண்டும் ஏறத்தொடங்கியதாலும் தட்டுத்தடுமாறி கிரைஸிஸிலிருந்து வெளிவந்தது.

அரசியல் நிலைமையும் சீரானதாய் அக்காலத்தில் இல்லை. செர்னோமிர்டின், கிரியென்கோ, ஸ்டெபாஷின், ப்ரிமாகோவ் என்று ஆறேழு பேர் பிரதமர்களாய் musical chair விளையாடினர். காரணம் யெல்ட்ஸின்!

இதைத்தவிர, சமூக அளவிலான பிரச்சனைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. குடிப்பழக்கம், கிரைம், போதை மருந்து, எய்ட்ஸ், டி.பி என்று திண்டாடினார்கள். காரணம், வேலைவாய்பின்மை, நிரந்தரமினமை.

1999-இல் ஒருவழியாய் நல்ல காலம் பிறந்தது. உலகச் சந்தையில் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதியான எண்ணெயின் விலை கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. யெல்ட்ஸின் திடீரென்று பதவி விலக முடிவு செய்து தம் வாரிசென்று அதுவரை அறியப்பட்டிராத முன்னாள் கேஜிபியான பூடினை நியமித்தார். பிரதமர் ஆனவர் பின்னார் அதிபராகவும் ஆனார். தலைவர் சொன்னதுபோல் பாய்ந்து ஓடும் குதிரையாய் துள்ளிக்குதித்து எழுந்து முன்நோக்கி பாயத்தொடங்கியது ரஷ்ய பொருளாதாரம்.

---------
Local Tips:
வெளியில் செல்லும்போது எந்நேரமும் பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். மூன்று நாட்களுக்குமேல் ரஷ்யாவில் தங்கினால் நீங்கள் தங்கும் நகரத்திலுள்ள உள்துறை அமைச்சகத்தின் "ரெஜிஸ்ட்ரேஷன்" எனப்படும் ஸ்டாம்ப் உங்கள் பாஸ்போர்டிலோ, அல்லது நுழைந்தபோது அளிக்கப்பட்ட migration card இலோ இருக்க்வேண்டும். பெரும்பான்மையான ஓட்டல்கள் இந்த ஸ்டாம்ப்பை இலவசமாக பெற்றுத்தந்துவிடுவர். டிரான்ஸிட் விசாவில் வருவோருக்கு 15 நாள் டைம் உண்டு.

ராண்டமாக டாகுமெண்ட் சோதனைகள் நடத்த போலிஸுக்கு அதிகாரமுண்டு. சரியான முறையில் இல்லையென்றால் அபராதம் கட்டவேண்டி வரும்.


---------
5 ரஷ்ய வார்த்தைகள்

1. தொலைபேசி: Thi-li-fon - телефон
2. கழிவறை: Thu-a-lyet - туалет
3. ஓட்டல்: Ga-sthi-ni-tsa - гостиница
4. உணவகம்: Ri-Stho-Ran - ресторан
5. ஹாஸ்டல்: Obshe-zhi-thi-ye - общежитие


(தொடரும்)



முந்தைய பதிவுகள்: 1, 2, 3, 4

8 Comments:

  1. darrylant said...
    This comment has been removed by a blog administrator.

  2. -/பெயரிலி. said...

    padaippukku brovin n-anRi
    arumai
    [both comments are copyrighted to -/peyarili.]

    -/peyarili.


  3. Anand V said...

    இராமநாதன்..
    மயில் வந்ததா ?


  4. துளசி கோபால் said...

    தம்பி,

    இங்கேயும் பல நிறுவனங்களை வித்துட்டாங்க. ஜப்பான்காரங்க நிறைய வாங்கிப் போட்டாச்சு.
    எப்ப எங்களையெல்லாம் விக்கப்போறாங்களொன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.
    யாராவது வாங்க ரெடியா?:-))


  5. Badri Seshadri said...

    துளசி - நியூசிலாந்தி்ல் விற்பதற்கும், ரஷ்யாவில் விற்றதற்கும் உள்ள வித்தியாசத்தை 'தம்பி' சொன்னதை வைத்துப் புரிந்து கொண்டிருக்கலாமே? இந்தியாவிலும் கூடத்தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள்.

    ஆனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இடங்களில் சரியான வேல்யுவேஷன் செய்து அடிமட்ட விலை குறைந்தது எவ்வளவு இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, டெண்டர் அமைத்து, யார் அதிகப் பணம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து அவர்களிடம் விற்கிறார்கள். விற்ற பணம் நாட்டு வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அந்தப் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது.


  6. துளசி கோபால் said...

    பத்ரி,
    நீங்க சொன்னது நிஜம்தான். வித்த பணம் நாட்டு நிதிக்கு. அதுக்கப்புறம் அதுலே
    வர்ற லாபம் எல்லாம் யாருக்கு?


  7. rv said...

    வாங்க -/பெயரிலி,
    ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. காப்பிரைட்டெல்லாம் பலமா இருக்கு?? :)

    பத்ரி,
    நன்றி


  8. rv said...

    அக்கா,
    உங்களுக்கு இன்னும் சரியா விளங்கலேன்னு நினைக்கிறேன். ஹிஸ்டரி, ஜியோ டீச்சர் கறதால பரவால்ல போங்க..

    //வித்த பணம் நாட்டு நிதிக்கு. அதுக்கப்புறம் அதுலே
    வர்ற லாபம் எல்லாம் யாருக்கு? //
    அதுக்கப்புறம் வர பணம் கிடக்கு. வித்ததுலேயே பெரிய ஊழல். ஒரு நிறுவனத்தோட உண்மை மதிப்பில் 10-20% மட்டுமே கொடுத்து பெரும்பான்மை பங்குகளை லபக்கிட்டாங்க. இப்படி அநேகமா எல்லா பெரிய கம்பெனியும் போச்சு. இது முன்னாடி.

    இப்ப வேற கூத்து நடக்குது. கேஸ்ப்ரோம் னு ஒரு அரசு நிறுவனம் இருக்கு பாருங்க. அவங்க அடிக்கிற லூட்டி தாங்க முடியல. அதப் பத்தி அடுத்த பதிவுல எழுதறேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்