பணியிடத்தில் பழுதுவேலைகள் நடைபெறுவதால் இரண்டு நாள் விடுமுறை என்றாயிற்று. சரி, நமது வழக்கமான ஹாலிடே டெஸ்டினேஷனுக்கு செல்வோமென்றால் (அதாங்க கொடைக்கானல் - இந்த ஊருக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்னு நினைக்கிறேன். வருஷா வருஷம் பக்தர்கள் சபரிமலை போற மாதிரி நமக்கு கொடைக்கானல். இனிமேல் அங்க பார்க்க ஒண்ணுமே இல்லாவிட்டாலும் ஹோட்டலில் தூங்கி, கோக்கர்ஸ் வாக்கில் நடந்து, தூறலில் போட்டிங் சென்று, கார்ல்டனில் புப்பே கொட்டிக்கொண்டு இப்படி பலது பொழுது போவதே தெரியாமல் போகும்) அங்கே மதியநேரங்களில் வெயில் பட்டையை கிளப்புகிறது என்று நண்பர்கள் தகவல் சொன்னார்கள்.
இரண்டு நாட்களுக்கு சுற்றி வருவதுபோல பக்கத்தில் வேறு என்ன இருக்கிறது என்று அலசு அலசென்று அலசினால் ஒண்ணுமேயில்லை என்று நொந்துபோனேன். எதேச்சையாக எங்கள் ஊர் சோழன் சிலைக்கு பக்கத்தில் பெரிதாக தமிழ்நாடு சுற்றுலாக்கழகத்தின் விளம்பரம் பார்க்க நேரிட்டதில் (பல வருஷங்களாக துருப்பிடித்து அங்கேயேதான் இருக்கிறது - சிக்னலில் நின்று சென்றால்தானே கண்ணில்படும்) செட்டிநாட்டு பக்கம் சென்றால் என்ன என்று பல்ப் எரியவே காரைக்குடி பற்றி நெட்டில் தேடினேன்.

செட்டிநாடு என்று அறியப்படும் ஏரியா சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி போன்ற நகரங்களை உள்ளடக்கியது. பிரசித்திபெற்ற ஆலயங்களான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயமும், குன்றக்குடி முருகன் கோயிலும், காளையார்கோயிலும் - இவை தவிர நேமம், இளையாத்தன்குடி உள்ளிட்ட ஒன்பது நகரத்தார் கோயில்களும் இருக்கின்றன. நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் தமிழகத்தின் பெரும்பணக்காரர்கள் பலரை உள்ளடக்கிய சமூகம் செட்டியார்களுடையது. அந்தக்காலத்திலேயே
பர்மாவுக்கு சென்று தேக்குமர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் தெற்காசியா முழுதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மூலம் சொல்லிமாளாத செல்வம். சேர்த்த செல்வத்தை வைத்து வீடுகளை கோட்டைகளைப் போல இழைத்து இழைத்து கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தெரு நீளத்திற்கு. இப்படியே மைல்நீளங்களுக்கு நீளும் குறுகலான தெருக்கள். கிராமங்களிலெல்லாம் பெருநகரங்களிலும் காணக்கிடைக்காத சைசுகளில் அரண்மனைகள். உண்மையில் ராஜாக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால் 'செட்டிநாடு சிமெண்ட், அண்ணாமலை பல்கலைக்கழகம்' எம். ஏ. எம். இராமசாமி ராஜா, 'ஸ்பிக்' ஏ. சி. முத்தையா, முருகப்பா குழுமத்தின் பரம்பரை வீடு எனத் தமிழகத்தின் செல்வந்தர்கள் பலரின் அரண்மனைகள் இங்கேதான் இருக்கின்றன.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படும் கையேடுகளில் இடம்பெற்றிருக்கும் இந்த ஏரியா நம்மூரில் ஏனோ அவ்வளவு ஆர்வமாக ப்ரமோட் செய்யப்படுவதில்லை தமிழக அரசால். தமிழ்நாடு டூரிஸம் வலைத்தளத்தையும் இன்னும் சில வலைப்பூக்களையும் மட்டுமே நம்பி கிளம்பியாகிவிட்டது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.புதுக்கோட்டையில் சாப்பிட நல்ல ஓட்டல் கூட கிடையாது. வழியில் நிறுத்திக்கேட்டால் ஊரிலேயே நல்ல ஓட்டல் கோர்டுக்கு பக்கத்தில் உள்ள "லெட்சுமிநாராயண பவன்" என்பார்கள். நம்பாதீர்கள். அங்கு சாப்பிடுவதற்கு பதில் பட்டினியாகவே கிடக்கலாம்.


புதுக்கோட்டையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டரில் இருக்கிறது திருமயம். திருமயம் கோட்டை மிகவும் பிரபலமானது. அடையாளம் காண்பது ஒன்றும் கஷ்டமில்லை. மிகவும் சக்திவாய்ந்த கோட்டை பைரவர் கோயிலில் நிறுத்தி வணங்கிவிட்டுத்தான் அனைத்து வண்டிகளுமே செல்லும். கோட்டை பெரும்பாலும் சிதிலமடைந்தே இருக்கிறது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் சிவன் மற்றும் விஷ்ணுவின் கோயில்கள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு கோயிலை பார்த்திருந்தபடியால், ஞானாம்பிகை உடனுறை சத்தியகிரீஸ்வரரின் திருக்கோயிலுக்கு சென்றோம். சமணம் விடுத்து சைவம் தழுவிய மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய குடவரைக்கோயில்களில் ஒன்று இது. காலை எட்டு மணிக்கு குருக்கள் கிடையாது. சிப்பந்திகள் ஒருவர் கூட இல்லை. நாங்களும் ஒரே ஒரு வி.வி.ஐ.பி மட்டுமே. சந்திப்பின் அடையாளமாக ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். அந்த வி.வி.ஐ.பியும் "எக்ஸார்ஸிஸ்ட் போல அவுட் ஆப் போகஸில்" விழுந்துதொலைக்காமல் படத்தில் தெளிவாகவே விழுந்திருக்கிறார். மிகவும் அமைதியான சூழல். பிரகாரத்தை சுற்றிவந்தபோது கண்ட கஜலக்ஷ்மியின் அழகு சொக்கவைக்கும்படி இருந்ததால் அவளும் கோச்சுக்காமல் கேமராவில் வந்தமர்ந்தாள். பொறுமையாக படங்கள் எடுத்துக்கிளம்பும்வரை ஆள் அரவம் இல்லை. சத்தியகீரிஸ்வரனுக்கு ஒரு நன்றி சொல்லி கிளம்பினால் அடுத்த ஸ்டாப் பள்ளத்தூர்.
மேலே இருக்கும் போர்டை உற்று நோக்கினீர்களானால் பள்ளத்தூரில் செட்டியார்களின் வீடுகளைச் சுற்றிப்பார்க்கலாம் எனறு பொருள்படும்படி இருக்கும். பள்ளத்தூரில் விசாரித்தால் அப்படி ஒருவீடும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஓரேயொருவர் மட்டும் ஏ.எம்.எம் ஹவுஸ் கேட்டுப்பாருங்கள். விட்டால் விடலாம் என்று சொல்லவே குறுகலான தெருக்களுக்குள் நுழைந்து ஒருவழியாய் கண்டுபிடித்தோம். முகப்பு சிறியதாய் தான் இருக்கிறது. ஏ.எம்.எம் என்றவுடன் யாரென்று ஸ்ட்ரைக் ஆகவில்லை. அப்புறம் சிலநிமிடங்கள் கதவைத்தட்டியதன் பயனாய் சற்றே சோர்வுடன் ஒரு சிப்பந்தி பிரத்தியட்சம் ஆனார். இப்படி அகாலங்களில் காமிராவும் கையுமாய் டூரிஸ்ட்கள் வந்துவந்து களைத்திருந்தார் போலும். அவர் இது ஏ. எம். முருகப்ப செட்டியார் வீடு என்று சொன்னபின்பும் புரியவில்லை. பின்னர் 'டி.ஐ. சைக்கிள்ஸ் தெரியுமா' என்று கேட்டார். அப்போதுதான் Tube Investments of India Ltd, Carborundum Universal Ltd, Coromandel Fertilisers Ltd, EID Parry India, Parry Agro Industries, Cholamandalam DBS Finance (இது பாதிதான்.. முழுசு
இங்கே)என்று நீண்டுகொண்டே போகும் ஏழாயிரம் கோடிரூபாய் மதிப்புள்ள தென்னிந்தியாவின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பில்லியன் டாலர் தொழில் சாம்ராஜ்யங்களில் பிரதானமான முருகப்பா குரூப்புடைய வீடு என்று என் மூளையில் பல்ப் எரிந்தது. 1902-ஆம் ஆண்டு இங்கு பிறந்த ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் தென்னிந்தியாவின் தொழிற்துறை முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர். சென்ற வருடம் இந்திய அரசு இவரின் தபால்தலையைக் கூட வெளியிட்டது. விஷயத்துக்கு வருவோம். 'இது தனியார் வீடு சார். சுற்றிப்பார்க்க விடுவதில்லையே' என்று வருத்தப்பட்டார். பின்னர் எப்படி தேடி இங்கே வந்தீர்கள் என்றதற்கு இண்டர்நெட், ப்ளாக் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை என்ற நான் சொன்னபோது தங்களைக் கேட்காமலேயே போர்ட் வைத்து வலையில் போட்டது எப்படி என்று நொந்துபோனார். இன்னும் எத்தனை ஆயிரம்பேர் வந்து விடுமுறை நாள் தூக்கத்தை கலைப்பார்களோ என்ற கவலையாக இருந்திருக்கும். பள்ளத்தூரில் ஒரு செட்டிநாட்டு அரண்மனைகூட சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்துவிடப்படவில்லை என்று ஆணித்தரமாகச் சொன்னவர் 'கானாடுகாத்தான் சென்றால் எம்.ஏ.எம்.இராமசாமி ராஜாவின் அரண்மனையைப் பார்க்கலாம். அதுதான் இப்பகுதியிலேயே மிகப்பெரியது' என்று சொல்லியதால் ஏமாற்றத்துடன் (இவ்வளவு பெரிய தொழிலதிபரின் வீட்டு வாசல் வரை வந்து திரும்பிய சோகம்தான்) கிளம்பி காரைக்குடி சென்றோம்.
காரைக்குடியில் அனைவரும் "சுப்பலட்சுமி பேலஸை" ரெகமண்ட் செய்தார்கள். டிபன் பரவாயில்லை. இன்முகத்துடன் சர்வர். வழி சொல்வதில் மிகவும் உதவியாக இருந்தார். பக்கத்தில் சுப்பலட்சுமி மஹாலில் ஒரு கிறிஸ்தவ நிட்சயதார்த்தம். இவை சர்ச்களில் மட்டுமே நடக்குமென்று எண்ணிவந்த எனக்கு, விருந்துவைத்து நாதஸ்வரம் மேளம் கொட்டி ஒரு பாதிரியார் மந்திரங்கள் ஓத கல்யாண மஹாலில் நடந்தது கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. . அதற்கு பிறகு வழக்கம் போல 'முன்பே வா என் அன்பே வா' என்று ஷ்ரேயா கோஷல் வந்து மந்திரம் ஓதி என்னை கிளுகிளுக்கவைத்துவிட்டு சென்றார்.
மணி பத்தரை ஆகிவிட்டிருந்தபடியால் கானாடுகாத்தானை ஒத்திப்போட்டுவிட்டு மதியம் நடைசாத்துமுன் காளையார்கோயில் சென்றுவிடுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் திருப்பத்தூருக்கு பிரியும் சாலையில் மானகிரி என்ற ஊர் உள்ளது. அதை அடைந்து மெயின்ரோட்டில் இடதுபுறமாய் கள்ளல் செல்லும் சாலையில் திரும்பி கள்ளலை அடைந்தால்.. காளையார்கோயில் என்ற ஊருக்கு வழிசொல்லவேண்டும் என்று திடீர் ஞானோதயம் வந்ததாய் த.அ.நெடுஞ்சாலைத்துறை போர்ட் வைத்து வழிசொல்கிறது. காரைக்குடியிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் இருக்கும்.


காளையார்கோயில் என்று சொன்னவுடன் நம்மில் பெரும்பாலோர்க்கு மண்டைக்குள் மணியடித்திருக்கும். ஏனென்றால் மருதுபாண்டிய சகோதரர்களை தூக்கிலிட்ட இடம் என்று வரலாற்றில் படித்து வழக்கம்போல மறந்திருப்போம். கோயிலின் விசேஷத்தை பார்த்துவிட்டு மருதுபாண்டியரிடம் வருவோம். இந்தியாவிலேயே மூன்று சிவன் சந்நிதிகள், அவர்களுக்கு மூன்று அம்பிகைகள் என்று இருக்கும் ஒரே கோயில் இதுதான். சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூவர். இதில் சொர்ணகாளீஸ்வரர் பிரதானம். ஊர் மட்டத்திலிருந்து நான்கு அடி கீழே தங்கக்கவசம் சாத்தப்பட்டு துளியூண்டு இருக்கிறார். இவரை வணங்கினால் பிள்ளைபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். வரகுணபாண்டிய மன்னன் மீனாட்சியை தினமும் தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டானாம். காளையார்கோயிலில் தங்கியிருந்தசமயம் அவன் பத்து மாற்று குதிரைகள் உதவியுடன் மதுரைக்குச் சென்று வணங்கி திரும்பி வருவானாம். ஆனால் ஒருநாள் அவ்வாறு செல்லமுடியாமல் போன காரணத்தால், மதுரை சுந்தரேஸ்வரரே மீனாட்சியைக் கூட்டிக்கொண்டு அவனைத்தேடி வந்ததாக புராணம்.
அஷ்டமாகாளிகள் காளையார்கோயிலை சுற்றி அருள்புரிவதால் காளிகளுக்கு ஈசனாய் அமர்ந்தவர் காளீஸ்வரர் ஆனார். இவருக்கு 1914 ஆம் ஆண்டு ஒரு செட்டியார் பெருமகனார் தங்கத்திலேயே பள்ளியறை செய்து பிள்ளைப்பேறு பெற்றார் என்று வரலாறு.
இப்போது மருதுபாண்டியர்கள். 1733-ஆம் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஒன்றாய் இருந்த இராமநாதபுரம் சமஸ்தானத்தை இரண்டாக பிரித்து ஒன்றை இராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் மற்றொன்றை சிவகங்கை வம்சத்தினருக்கும் கொடுத்தனர். முத்து வடுகநாதத்தேவரின் தளபதிகளாய இருந்த மருதுபாண்டியர், தேவரின் வீரமறைவுக்குப் பிறகு வேலுநாச்சியாரின் ஆக்ஞைப்படி ஆட்சியைப் பெற்றார்கள். ஆன்மிகப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர்கள் காளையார்கோயில் கோயில் பிரதான கோபுரத்திருப்பணி செய்திருந்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தப்பித்தலைமறைவாகிய நிலையில், ஆங்கிலேய அரசு மருதுபாண்டிய சகோதரர்களைப் பிடிக்க இயலாமல் தவித்தது. வழக்கம்போலவே சதித்திட்டம் சூப்பராய்த் தீட்டி அதன்படி மருதுபாண்டிய சகோதரர்கள் சரண்டர் ஆகவில்லையெனில் அவர்கள் திருப்பணி செய்த கோயில் கோபுரத்தை பீரங்கிகளைக் கொண்டு தகர்த்துவிடுவதாய் மிரட்டியது. தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சிவன்கோயில் கோபுரம் அழியக்கூடாது என்று எண்ணிய மருதுபாண்டியர் சரணடைந்தார்கள். அவர்களைத் தூக்கிலிட்டு அவர்களின் கடைசி விருப்பபடியே காளையார்கோயில் சிவ சந்நிதியைப் பார்த்தபடியே அவர்களைப் புதைத்தது ஆங்கில கம்பெனி.
கோயிலுக்காக உயிரையே கொடுத்த சகோதரர்களுக்கு கோயிலுக்குள்ளேயே சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை நம்மைப்போன்ற பொதுமக்களிடமிருந்து பாதுகாக்க இரும்பு க்ரில்லும் போடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான கோயிலை ஆற அமர சுற்றி வர சுமார் ஒன்றரை மணிநேரமாவது பிடிக்கும். அங்கு இருந்த குருக்கள் (பெயர் மறந்துவிட்டது) மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சந்நிதிக்கும் கூட்டிச்சென்று புராணம் சொல்லி, தேவாரம் பாடி - அனுபவம் இனிமையாய் இருந்தது. மருதுபாண்டியருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதாகக்கேள்வி.
கோயிலை விட்டுக்கிளம்பி ரோடு மாறிச் சென்றால் ஒரு ஆச்சரியம். அட்டகாசமான மண்டபத்துடன் தெப்பக்குளம். கொஞ்சம் நிறையவே க்ளிக்கிவிட்டு திரும்ப பேக் டு காரைக்குடி சுப்பலட்சுமி.
(தொடரும்)