Are you Mobile?

1998-ல் தான் முதல் முதலா (என் சொந்தக் காசெல்லாம் இல்லை) மொபைல் வாங்கினேன். அதுவரைக்கும் மொபைல்னா என்னன்னு கேள்வி மட்டுந்தான். என் நண்பனை கூட்டிக்கொண்டு போய் ரொம்பத் தேடித்தேடி நூத்தி ஐம்பது டாலருக்கு Ericsson A1018 கிடைத்தது. ஆஹா, அதெல்லாம் பொற்காலம். பந்தா விடறதுக்கு மொபைல் தான் சரியான சாதனம். அப்பல்லாம் இந்தியாவிலேயும், ஏன் இங்கேயும் கூட அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தது. போன் வருதோ இல்லியோ, அப்பப்போ காதுல வச்சுகிட்டே தெருவில நடந்து போனா எல்லாரும் திரும்பிப் பாப்பாங்க. பைத்தியம்னு இல்ல. ஏதோ பெரிய மனுஷன் போலிருக்கு. மொபைல் வச்சுருக்காரு. கூடவே அதில பேசவும் செய்யறாரேன்னு. ஏன்னா, ஒரு நிமிஷம் அவுட்கோயிங் அப்போதிக்கு முப்பது செண்ட். அது கூட வரி அது இதுன்னு சேர்த்து நாப்பது செண்டுக்கு வந்துடும்.

கடவுள் தந்த வரம் ஒண்ணு இந்த எஸ்.எம்.எஸ். எங்கேயிருந்து எங்கே வேணும்னாலும் அனுப்பலாமில்லியா.இப்பல்லாம் ஈமெயில் அனுப்பறதே விட்டுப்போச்சு. எனக்கு மட்டுமில்ல பலருக்குந்தான். ஆமா, முழ நீளத்துக்கு அனுப்பி அது பல சமயம் பவுன்ஸாகி இல்லேன்னா 'அய்யய்யே, அந்த மெயில் ஐடிக்கு அனுப்பினியா, நா அத விட்டு மாறி மூணு மாசமாச்சுன்னு. இப்பத்தான் எதேச்சையா செக் பண்ணேன்' - அப்படீன்னு ஆறுமாசம் கழிச்சு பதிலனுப்புவாங்க. அதாத்தப்பி, மெயில் கிடைச்சு பதில் வந்திருக்கா வரலையான்னு அத அரைமணிக்கு ஒரு நொடி செக் பண்ணிகிட்டு வேற இருக்கணும். இந்த தொல்லையெல்லாம் இல்லாத வஸ்து நம்ம sms. இந்தியாவுக்கு போனபோதுதான் பார்த்தேன். ஏர்டெல்-ல ஏதோ sms ப்ரீன்னு போட்டுருந்தாங்க போலிருக்கு. விடுவானுங்களா நம்ம பசங்க. sms mania னே சொல்லலாம். ஒரு நாளைக்கு இருநூறாவது குறைஞ்ச பட்சம். பாதிக்குமேல் பார்வர்ட் தான். நொடிக்கொருதரம், இதோ எழுந்தாச்சு, தூங்கப்போறேன், அம்மா வச்ச ரசம் சரியில்லன்னு ரன்னிங் கமெண்டரி வேற. அந்த அளவுக்கு மோசமாகல நான். நம்ம அடிக்ஷனெல்லாம் இப்ப வலைப்பூக்களிலேயே மேயறதுதானே.

சில சுவாரஸ்யமான விஷயங்களும் மொபைல்களோட நடந்திருக்கு. ஆரம்பத்துல எங்க மொத்த பாட்சிலேயே மொபைல் வச்சுருந்தது ரெண்டு மூணுபேர் தான். பந்தாவுக்கு கேக்கணுமா என்ன? அப்புறம் கொஞ்ச கொஞ்சமா விலையும் குறைய ஆரமிச்சு மொபைல் இல்லாத ஆளே இல்லைன்னு ஆயிடுச்சு. அதுல ஒரு அசட்டு விளையாட்டு. லெக்சர், கிளாஸ் நடக்கும்போது வரிசையா அட்ரஸ் புக்கிலேர்ந்து கூப்பிடறது. ஏதாவது ஒரு ஆளு போன வைப்ரோ மோட்-ல போடாம அது பாட்டுக்கு அலற, பயங்கர காமெடியாயிருக்கும். சலிக்காத விளையாட்டு.

அப்புறம், ஒரு வெள்ளிக்கிழமை பாத் டப்பில் தண்ணிய ரொப்பிட்டு போமர் போடறதுக்கு குனிஞ்சா தொப்புன்னு என்னவோ தண்ணிக்குள்ள விழுந்துருச்சு. என்னன்னு ஒரு நிமிஷம் புரிஞ்சு பார்த்தால் நான் அப்போதான் புத்தம்புதுசா வாங்கின Ericsson T18. எடுத்துப்பார்த்தா ஆன் ஆக மாட்டேங்குது. அப்புறம் ஹீட்டர் மேல ஒரு அரைமணி வச்சுட்டு எடுத்தா வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. அன்னிலேர்ந்து சோனி எரிக்ஸன் தான். :)

இங்க எப்படின்னா, எல்லா கால்களும் முத அஞ்சு செகண்ட் இலவசம். மிகவும் எரிச்சலான விஷயம். என் நண்பன் ஒருத்தன் இப்படித்தான் பண்ணா பை செகண்ட் தான். அவனுக்கு அதுவே பேராவும் வச்சாச்சு. ஒரு விஷயத்த சொல்றதுக்கு முப்பது போன்கால்.

உதாரணம் சொல்லட்டா, தலை சுத்துதா இல்லியான்னு பாருங்க.

'ஹெல்லோ'-'ஹெல்லோ'-'நான் தான் பேசறேன்'-'சரி, சொல்லு, என்ன பண்றே?'-'சும்மாத்தான்.. ஒண்ணுமில்ல'-'நீ என்ன பண்ரே'-'அதேதான், டிவி பாக்கறேன்'-'அப்புறம்'-'வேரொன்னுமில்ல'-'சரி, நாளைக்கு கிளாசுக்கு வரியா'-'ஓ, வரேனே'-'சரி, அப்ப நாளைக்கு மீட் பண்லாம்'-'சரி'-'ஓகே, பை'-'ஓகே, பை'

பாத்தீங்களா. கிளாசுக்கு வரியான்னு கேக்க பதினஞ்சு கால். இதெப்படிருக்கு?

ஒரு சோகம், போன வருஷம் தான் முதல்முறையா என் வாழ்க்கையிலேயே பிக்-பாக்கெட்னா என்னன்னு நேரடி அனுபவம் கிடச்சது. மெட்ரோவில ஏறும்போது கூட்டத்துல படுபாவிப்பய எவனோ 'my precious' ஆன SE K700i சுட்டுட்டான். ஒரே வாரம் தான் என் கிட்ட இருந்தது. சுட்டவன இன்னிவரைக்கும் (இப்போகூட) சபிக்காம விட்டதில்ல. இப்படி பொறுப்பில்லாம் தொலச்சிதனால இனிமே விலை ஜாஸ்தி மொபைல்லாம் வாங்கினா தெரியும் சேதின்னு ஆர்டர் போட்டுட்டாங்க. :(

மொபைல் எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகமோ நிறைய கெட்ட விஷயங்களும் இருக்கு. நேரகாலமில்லாம கூப்டு டார்ச்சர் கொடுப்பாங்க. அப்புறம், இந்த எஸ்.எம்.எஸ் கொடுத்தா கொடுத்தவங்களுக்கு போய் சேர்ந்திருச்சுங்கற டெலிவரி ரிப்போர்ட். பல சம்யத்துல உதவின்னாலும் - 'இல்லியே, நீங்க அனுப்புன மெசேஜ் வரவேயில்லைன்னு' சால்ஜாப்பெல்லாம் சொல்ல முடியாது. இதே வகையில் கால் ரெஜிஸ்டர். 'நேத்திக்கு நாள் முழுக்க உங்களக் கூப்பிட்டேன். நீங்க போன எடுக்கவேயில்ல"ன்னு சொல்ல முடியாது. ஆனா இதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு லைன் கிடைக்கல. நெட்வர்க் பிஸின்னு சொல்லிக்கலாம். (இந்த தடவை பி.எஸ்.என்.எல் பல நேரம் இதையே தான் சொன்னது) இன்னொன்னு "Whole 10 Yards" படத்துல பாத்தேன். பேசிக்கிட்டே இருக்கும்போது, ஒரு பேப்பர போனோட மைக்கருகே கொண்டு வந்து கன்னாபின்னான்னு கசக்கிட்டு 'லைன் சரியில்லே'ன்னு எஸ்கேப் ஆகறது.

இப்பல்லாம் மொபைல் பத்து ரூபாய்க்கு ரெண்டுன்னு விக்கறாங்க. ரொம்ப நல்ல விஷயம். எல்லாருக்கும் தேவைப்படும் சாதனம் மலிவு விலையில் கிடைப்பது.

ஆனா, ஓண்ணு மட்டும். ரோடுல நடக்கறீங்களோ, ஓட்டறீங்களோ. சரியான இடத்தில பார்க் பண்ணிட்டு காலெல்லாம் அட்டெண்ட் பண்ணுங்க. ஓட்டும்போது கால் எடுத்தே ஆகனும்னா Handsfree-ஆவது யூஸ் பண்ணுங்க. சமீபத்துல, எனக்கு தெரிந்த டாக்டர் இந்த மாதிரி போன் பேசிகிட்டு வண்டியோட்டினதுல, மண் லாரிமேல் மோதி மிக பரிதாபகரமா இறந்தார். விதி அது இதுன்னு சொன்னாலும் 43 வயசு சாகற வயசில்லை. தவிர்க்கப்பட்டிருக்கலாம் இல்லையா? ஜாக்கிரதையா இருங்க.

17 Comments:

  1. Anand V said...

    இராமநாதன்.
    நமக்கு எல்லாம் அலுவலகம் கொடுக்கும் OC போன் தான். தொலையறதை பத்தி, காசு செலவு பத்தி இது வரைக்கும் பிரச்சனை இல்லை !
    உங்க hospital இலவச போன் கொடுக்காதா ?


  2. rv said...

    ஆனந்த்,
    உங்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம். ஹாஸ்பிடல் போனெல்லாம் கொடுக்காது. டிகிரி கொடுத்தாலே எதேஷ்டம்கற நிலைமையில இருக்கேன். ;)

    ப்ரியா அக்கா,
    இப்பதான் உங்களுக்கு 'மயில்' அடிச்சிகிட்டே இருக்கேன். இப்ப இருக்கறது Siemens C65. நியு இயருக்கு SE K750i இல்லேன்னா SE வோட புது வாக்மேன் போன் வாங்கலாம்னு எண்ணம். ஹூம்.. பாக்கலாம்.


  3. rv said...

    ஆனந்த்,
    போட்டோல்ல இருக்கறது யாரு??? நீங்களா? நிக்கான்-கறதால கேக்கறேன் :) இவ்ளோ பெரிய லென்ஸ் வச்சு பயங்கர ப்ரோ- லெவல்ல காட்சி கொடுக்கறீங்க???


  4. Anand V said...

    * வீக்குக்கு போட்டா கொடுக்க சொன்னாங்க . அதான் !
    ;-)


  5. Sundar Padmanaban said...

    உங்க பதிவைப் படிச்சதும் பழைய நினைவுகள்..

    இந்தியாவுல (மதுரைல) கைப்பேசி வந்த புதுசுல மோட்டரோலா கைப்பேசி ஒண்ணு வாங்கினேன். குண்டாந்தடி மாதிரி வாக்கி டாக்கிய விட பெரிசா இருக்கும். இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்தா அதக் கர்லாக் கட்டைன்னு சொல்லிருப்பாங்க.

    வட்டார முட்டுச்சந்து அடிதடிக்குக் கூட உதவியா இருந்துச்சு! :)

    சுந்தர்.


  6. rv said...

    சுந்தர்,
    நன்றி.. என் அப்பாவும் Siemens S1 (சரியா நியாபகமில்ல) அப்படின்னு ஒரு செங்கல் வச்சிருந்தார். நிஜமாவே அத வெச்சுட்டு அடிச்சா வலிக்கும்தான். அவ்வளவு வெயிட்!!!

    பிரியா அக்கா,
    கையோட பதில் 'மயில்' தூது அனுப்பறேன். கொஞ்சம் பொறுங்க. :)


  7. துளசி கோபால் said...

    மனுஷனைச் சும்மா இருக்கவிட மாட்டீங்களே? பின்னூட்டம் எழுத ஆரம்பிச்சா அதுவே ஒரு பதிவு
    நீளத்துக்கு வருது. சரி. பதிவாவே போடறென். அதையே, பெரியமனசு பண்ணி பின்னூட்டமா நினைச்சுக்கணும்.


  8. b said...

    இங்க சிங்கப்பூருக்கு பேஜர் வந்த புதுசு. 93ன்னு நெனைக்கிறேன். எல்லாரும் பேஜர் குத்திட்டு பெருமையா திரிஞ்சப்ப எனக்குள்ள ஒரு ஏக்கம். அதுக்கப்றம் நானும் ஒரு பேஜர்(மோட்டோரோலா) வாங்கினேன். அப்பவே அது 500 சிங் டாலர் ஆச்சுது. சட்டைய இன்பண்ணி அதுக்குமேல பெல்ட்டில எல்லாருக்கும் தெரியறா மாதிரி குத்திட்டு அலையறது. அது எப்பவாச்சும் மணி ஒலிக்கும்போது சுத்தி முத்தியும் பெருமையா பாத்துட்டு அப்றம் எடுத்து எந்த பரதேசி நாயி பேஜ் பன்னுச்சின்னு பாக்றது. ஏன்னா அதுக்கப்றம் 10காசு தேடனுமே போன் பண்ண!

    அதுக்கப்றம் 96ஆச்சுது நான் போன் வாங்க. அந்த சமயத்துல பெரிய கர்லாக் கட்டை கணக்கா போன் இருக்கும். இப்பவும்கூட தொலைக்காட்சி சிரிப்புக் காட்சியில் அதேபோன்றதொரு போன் காட்டுவார்கள். அது பெருசா இருந்ததால வாங்கலை. அதுக்கப்ற எரிக்சன் வந்தபின் 1000 சிங் டாலர் குடுத்து ஒன்னு வாங்கி இடுப்புல சொருகி... அதெல்லாம் ஜொள்ளித் திருந்த காலம்!


  9. rv said...

    அக்கா,
    பாத்தேன். உங்க பதிவுக்கு சாயங்காலம் வந்து பதில் போடறேன்.

    மூர்த்தி,
    பேஜரா? இந்தியால கூட கொஞ்ச நாளைக்கு ரொம்ப பிரபலமா இருந்ததில்ல. ஆனா, என்ன காரணமோ வாங்கினது கிடையாது.

    //சட்டைய இன்பண்ணி அதுக்குமேல பெல்ட்டில எல்லாருக்கும் தெரியறா மாதிரி குத்திட்டு அலையறது//
    போன் தொலைஞ்சு போனதிலிருந்து இப்பல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

    //அதெல்லாம் ஜொள்ளித் திருந்த காலம்!
    //
    அட, எல்லா ஊர்லேயும் இதே கத தானா.. ரைட் ரைட்! :)


  10. rv said...

    இது ஒரு டெஸ்ட்!


  11. Anand V said...

    எதுக்குப்பா இந்த டெஸ்ட இப்ப ?


  12. ரவிகுமார் ராஜவேல் said...

    Montoya fan'a neenga :-)


  13. அன்பு said...

    //ஹாஸ்பிடல் போனெல்லாம் கொடுக்காது. டிகிரி கொடுத்தாலே எதேஷ்டம்கற நிலைமையில இருக்கேன். ;)

    கலக்கல்.

    எனக்கும் அந்த வாக்மேன் ஃபோன் மேல ஒரு கண்ணு அல்லது இந்த மோட் ROKR பார்க்கலாம். மற்றப்படி பேஜார், சொந்த போன்/ஆபீஸ் போன் எல்லாத்தையும் தூக்கிச்சொமக்க்றேன் - கொடுத்த/கொடுக்கற காசுக்கு:)

    // எதுக்குப்பா இந்த டெஸ்ட இப்ப ?
    ஆனந்த காக்கா கல் போட்ட கதை தெரியுமோ!?


  14. rv said...

    ஆனந்த், அன்பு,
    //// எதுக்குப்பா இந்த டெஸ்ட இப்ப ?
    ஆனந்த காக்கா கல் போட்ட கதை தெரியுமோ!? //

    காக்கா போட்ட கல்லெல்லாம் இல்லீங்க. யுனிகோட் தமிழ் என்னோட பழைய ரஷ்ய மின்னஞ்சல்ல வராம இருந்துச்சு. அதான் புதுசா ஒரு ஜிமெயில் id ஆரம்பிச்சு, யுனிகோட் கமெண்ட் வருதான்னு பாத்தேன். வருது!

    ramanathan.blogATgmailDOTcom


  15. rv said...

    //Montoya fan'a neenga :-) //

    சாதா பேன் இல்லீங்க. இராட்சத பேன் (in more than one way!) ;)

    நீங்க??


  16. G.Ragavan said...

    அலுத்துப் போச்சு இராமநாதன்....இந்த மாதிரி போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறவங்களப் பாத்துப் பாத்து......இப்பல்லாம் என்னால முடிஞ்சது...அவங்க பக்கமா நெருக்கமா பைக்குல போய் பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்முன்னு ஹார்ன் குடுக்குறதுதான்..ஒரு திருப்தி கிடைக்கும் அப்பத்தான் எனக்கு. ஓரமா நின்னு ரெண்டு நிமிசம் பேசீட்டுப் போனா கொறஞ்சா போகும்?

    நானும் ஒருவாட்டி ஃபோனத் தொலைச்சிருக்கேன். அன்னைக்குன்னு பாத்து லூசான பேண்ட் போட்டுட்டு மேச்சா ஷார்ட் குர்த்தா போட்டுக்கிட்டு போனேன். பேண்ட் பாக்கெட்டுல வெச்ச போனையும் காணோம் கூட இருந்த கிரெடிட் டெபிட் கார்டுகள் 150 ரூபா பணம்....டமால்..........எங்கன்னு தெரியலை.....கொஞ்ச நேரம் கழிச்சி ஃபோன் பண்ணுனா ஒருத்தன் எடுத்தான்......ஐயா சாமி ஃபோன நீயே வெச்சுக்கோ....அந்த சிம் கார்ட மட்டும் குடுப்பான்னு கெஞ்சினேன்..கன்னடத்துலதான்.....ம்ம்ம்ம்...நடக்கலையே...அடுத்து ஃபோன் பண்ணும் போது போனை ஆப் பண்ணீட்டான் அந்தப் புண்ணியவான். அப்புறம் எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணீட்டு புது சிம் கார்டு வாங்கினேன்.


  17. rv said...

    ராகவன்,
    தொலைஞ்சு போச்சுன்னே எனக்கு பத்து பதினஞ்சு நிமிஷம் கழிச்சுத்தான் தெரியும். போன பண்ணலாம் பாக்கெட்ல கையவுட்டா காணும். வேறெங்கேயாவது மாத்தி வச்சுருப்பேன்னு தான் தோணிச்சே தவிர தொலைஞ்சிருக்கும்னு உறைக்கவேயில்ல.

    அப்புறம் அடிச்சுபுடிச்சு நெட்வர்க் ஆபிஸுக்கு ஓடி ப்ளாக் பண்ணேன். ஆனா, இதுல ஒரு நல்ல விஷயம். என்னோட இன்னொரு பாக்கெட்ல காமிரா இருந்தது. நல்ல வேளை. அது தப்பிச்சது! :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்