இ.பி - 4: பூலோக வைகுண்டமா, நரகமா?

சென்ற பதிவில் KGB, GRU, அரசியல் கொலை என்றெல்லாம் பயங்காட்டினேன் இல்லையா? அதைப் படித்துவிட்டு மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் "SU was all evil" என்ற கருத்தில் நம்பிக்கை ஏற்படலாம். ஆனால், அது முழுக்கவும் உண்மையானதன்று. சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சோஷலிஸ தத்துவம், அந்த வகையில் சோவியத் யூனியன் மனிதர்களுக்கானது. வேலைப் பாதுகாப்பு, கல்வி, இருக்க இடம், உண்ண உணவு, ஆரோக்கியம் என்று எல்லாம் எல்லார்க்கும் வேண்டும் என்று வலியுறுத்திய மேன்மையான மார்க்கம் அது. அதே நேரத்தில், மேற்கத்திய சந்தைப் பொருளாதாரத்தை ஒரு அடி தள்ளியிருந்து ஆராய்ந்தால் அது ஒரு "jungle" சமூகம் என்று புரியும். survival of the fittest அல்லது strongest என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். ஆனால் சோஷலிஸம் வலிமையான குழந்தைகளுக்கு அளிப்பது போலவே நோஞ்சான் குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் அமைத்துத்தரும் மனித பெற்றோர் போன்றதாகும். நானும் சொல்வேன், சோவியத் யூனியன் சோஷலிஸத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டு இல்லை. அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களேயன்றி, கொள்கையல்ல. இருந்தாலும் சோவியத் அரசில் இன்றளவும் வளர்ந்த நாடுகளில் நடக்காத பல நல்ல விஷயங்கள் நடந்தன. அவையாவை என்று பார்க்கலாமா?

விவசாயத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருந்த ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சோவியத் யூனியன் என்னும் ஒரே காரணத்தினாலேயே தொழிற் சார்ந்த வளர்ந்த பொருளாதாரங்கள் ஆகின. ரஷ்யா அதுவரையில் ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் கட்டமைப்பு விஷயங்களில் வியத்தகு வளர்ச்சிபெற்றன.

முதலில், என்னைப் பொறுத்தவரை மிடில் ஏஜஸிலும், பிறகு ஸ்டீம் எஞ்சினால் ஐரோப்பாவில் நடந்த மாபெரும் தொழிற்புரட்சியும் பெரும்பாலும் ரஷ்யாவை அவ்வளவு எளிதில் வந்தடையவில்லை. இம்பீரியல் ரஷ்யாவை ஆண்டவர்கள் சுகமாய் வாழ்ந்தார்களைத் தவிர ஏழை மக்கள் நிலை சிறிதும் உயரவில்லை. கல்வியறிவின்றியும், ஏழ்மையிலும் சிக்கி தவித்தனர் பாமரர்.

1917 புரட்சிக்குப் பின் நிலைமை தலைகீழாய் மாறியது. இராட்சத வேகத்தில் தொழிற்புரட்சி நடந்து முப்பது ஆண்டு காலத்திற்குள் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாய கல்வியறிவு. ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அநேகமாக எல்லா ஊர்களிலும் மேல்நிலைப் பள்ளிகள், அடிப்படை கல்லூரிகள் அமைக்கப்பட்டன. முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. குறிப்பிட்டு சொல்லவேண்டியது மாஸ்கோவிலுள்ள Moscow State University மற்றும் St.Petersburg State Technical Univ போன்றவை. இவைத்தவிர, பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவற்றில் படிப்பதற்கும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. இந்த வகையில் வந்தது தான் 99.6 சதவிகித படிப்பறிவு.

வீட்டு வசதி என்று எடுத்துக்கொண்டால் அனைவருக்கும் வீடு என்ற கொள்கை இருந்தது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் முதலுரிமை அளிக்கப்பட்டது. பெரும் நகரங்களென்றும், Soviet Style குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டன. நம்மூரைப்போல தனித்தன்மையுடைய வீடுகள் இல்லாமல், அனைவருக்கும் ஒரேவிதமான வீடுகள் என்று வழங்கப்பட்டது. Квартира (குவார்த்தீரா) என்றழைக்கப்பட்டவை இந்த அப்பார்ட்மெண்ட்கள். pre-contructed blocks-ஆக கொண்டு வந்து ஓன்று சேர்த்து பலமாடிக் குடியிருப்புகளாய் மாறின. தனித்தன்மை இல்லாமல் இருந்தாலும் மக்களில் பெரும்பாலானோர்க்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த மாதிரி தனி அப்பார்ட்மெண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அம்மாதிரி முடியாதோரருக்காகவே communalka என்றழைக்கப்பட்ட கட்டிடங்களும் உண்டு. அவற்றில் மூன்று, நான்கு ரூம்கள் கொண்ட apt-இல் ஒவ்வொரு ரூமிற்கும் ஒரு குடும்பம். இவைகளுக்கு பொதுவாய் சமையலறையும், கழிவறை மற்றும் குளியலறை. அதே போல் பொதுவாக தொலைபேசி, மின் கட்டணம் போன்றவை. இதில் ஒரு சுவாரசியமான விஷயம். நம்மூரில் ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரு பெட்ரூம், ஒரு லிவிங் ரூம் மற்றும் கிச்சன், பாத்ரூம் இல்லியா? இங்கே அப்படியில்லை. ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரே ரூம் (லிவிங்/பெட்) அப்புறம் கிச்சன், பாத்ரூம்.

அடுத்தது healthcare. சோவியத் காலத்தில் காஸ்மெடிக் சிகிச்சைகள் தவிர முற்றிலும் இலவசம். போர் veteran-களுக்கும் 60 வயது தாண்டியவர்க்கும் முற்றிலும் இலவசம் இன்றளவும். வேறென்ன வேறென்ன வேண்டும் என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா? கர்ப்பிணிப் பெண்கள் உட்பட. குழந்தைகள் நலத்தில் கூட முன்னணி. இலவச க்ரெச்-கள் மற்றும் சுகாதார மையங்கள். ஆனால், தரத்தில் குறைந்தவை அல்ல. இந்த விஷயத்தில் இன்றளவும் மேற்கத்திய நாடுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வேலைவாய்ப்பு என்பது பிரச்சனையாகவே இல்லை. job security-உம் அதிகம். ஆனால் இந்த வகை உத்திரவாதத்தினால் உற்பத்தித்திரன் குறைந்ததென்னவோ உண்மை. மேலும், பணியுயர்வு சீனியாரிட்டி படியே நடந்தது. மெரிட்டினால் அல்ல. இது ஒரு புறமென்றால், டார்கெட்டை அடைவதற்குத் ஊக்கங்கள் கொடுக்கப்பட்டதேயொழிய பொருளின் தரம் குறித்து கவலைப்படவில்லை.

அடுத்து போக்குவரத்து. அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கும் முழுக்க இலவசம். மற்றவர்க்கும் ஒன்றும் அவ்வளவு விலையுயர்ந்ததல்ல. ஒப்பீடுக்கு இன்றைய தேதியில் மாஸ்கோவின் ஒரு மெட்ரோ பயணத்திற்கு டிக்கட் விலை - 13 ரூபிள்கள் (50 cents). அதுவும் மெட்ரோவிற்குள் நுழைவதற்குத்தான் இந்த விலை. உள்ளே சென்றுவிட்டால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை மெட்ரொவிற்குள்ளேயே சுத்தலாம். சோவியத் காலத்தில் இன்னும் மலிவாகவே இருந்திருக்கவேண்டுமல்லவா?

பெண்களின் நிலை முன்னேறியதாகவே இருந்தது. கட்டாயக் கல்வி ஆனதாலும், சமத்துவக் கோட்பாடு புகுத்தப்பட்டதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டில் அடைந்து கிடக்காமல் சுதந்திரமாய் வெளியில் வந்தனர். 99 சதவிகிதத்திற்கும் மேலான படிப்பறிவு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. டிரெடிஷனலான கல்வி மற்றும் மருத்துவத்துறையில் பெரும்பாலான இடங்கள் பெண்களுக்கே. இவை தவிர, பெண்கள் மற்ற நாடுகளில் அச்சமயத்தில் நுழையாத விஞ்ஞான, ஆராய்ச்சி, பொறியியல் என்றும் சக்கைபோடு போட்டார்கள். ஆண்களின் துணை தேவையில்லாமல், தனித்தே வாழ முடியும் என்று 30-40 வருடங்களுக்கு முன்னரே புரட்சி செய்தனர்.

விவசாயமும் நவீனப்படுத்தப்பட்டது. யாரோ ஒரு ஜமீந்தாருக்கு உழைத்துக் கொட்டாமல், கலெக்டிவைஸ்டு பார்ம்களின் பயன் உழைப்பாளிகளை நேரடியே சென்றடைந்தது.

அரசியல் செல்வாக்குடையவர்களுக்கு மரியாதை தனி. அதை விட்டு பார்த்தால் சமத்துவமே எங்கும். கடைநிலை பணியாளர் ஆனாலும், மேலாளர் ஆனாலும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை உண்டு. இது சார்ந்த ஒரு பழைய பதிவு இங்கே.

மொத்தத்தில், அதுவரைக்கும் ஒன்றுமில்லா நாடுகள் ஒன்று சேர்ந்து உலகத்தையே மிரட்டும் அளவுக்கு அசாத்யமான அறிவியல் வளர்ச்சியும், ஆயுத பொருளாதார வளர்ச்சியும் பெற்றன. வெறும் 30 ஆண்டுகளுக்குள் உலக வல்லரசாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவிற்கு ஈடுகொடுத்து bipolar world என்று எல்லோரும் சொல்லும் வண்ணம் வலியுற்றிருந்தது. எல்லாம் சரி, ஆனால் இந்த அந்தஸ்து கிடைக்க அம்மக்கள் கொடுத்த விலை? தனிமனித சுதந்திரம் தான்.

-------
Local Tips
ரஷ்யாவிற்கு பயணிப்பதாய் இருந்தால் பணத்தை டாலராகவோ அல்லது உங்கள் ஊர் கரென்ஸி பெரிய அளவில் புழங்குவதென்றால் அதிலேயே கூட கொண்டு வரலாம். பாங்குகளிலும் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அதை விட வசதி: நம்மூர் பொட்டிகடை போல "கரென்ஸி எக்ஸ்சேஞ்" எல்லா இடத்திலும் இருக்கும். обмен валюты என்று எழுதி வைத்திருப்பார்கள். வெளியிலேயே எக்ஸ்சேஞ் ரேட்டும் போட்டிருப்பார்கள். சில இடங்களில் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள். ரஷ்ய மொழி தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. பணத்தையும், பாஸ்போர்ட்டையும் கொடுத்தால் அவர்களே ரூபிளாக மாற்றித் திருப்பித்தந்துவிடுவார்கள்.

பணமாக கொண்டுவராமல் உங்கள் சர்வதேச ஏடிம் கார்டுகளோ அல்லது டிராவலர்ஸ் செக்-காகவும் எடுத்து வரலாம். ஏ.டி.எம்-களுக்கு "Банкомат" என்று எழுதியிருக்கும். காசோலைகளை வங்கிகளிலோ அல்லது மேற்சொன்ன எக்ஸ்சேஞ்ச் செண்டர்களிலோ மாற்றலாம்.

-------
5 ரஷ்ய வார்த்தைகள்
1. car: ma-shyi-na - машина
2. Bus: avto-bu(உ)s - автобус
3. Metro/ Subway: Mi-thro - метро
4. Train: po-ezd - поезд
5. Plane: sa-ma-lyoth - самолёт

அடுத்த பதிவில் சோவியத் யூனியன் வீழ்ந்த பின் ரஷ்யர்களின் தலையில் விழுந்த இடி பற்றி.

(தொடரும்..)


முந்தைய பதிவுகள்: 1, 2, 3

10 Comments:

  1. தாணு said...

    இவ்ளோ பெரிய பதிவு எப்படி பொறுமையா அடிக்கிறீங்க? படிக்கிறதுக்குள்ளேயே எனக்கு தலை சுத்திடுச்சு. மெகா தொடர் எழுத உங்ககிட்டேதான் டிரெயினிங் எடுக்கணும்!


  2. rv said...

    என்ன தாணு,
    போட்டு வாங்கறீங்க...

    ஆங்கில டைப்பிங் தெரிந்திருப்பதால் (proper fingering எல்லாம் கிடையாது. இத்தன நாள் கணினி பழக்கத்தில தானா வந்துடுச்சு), ஈ-கலப்பைக் கொண்டு தமிழில் அடிப்பது எளிதாக இருக்கிறது. அரைமணி போறும். இதுக்குமேல பெரிய பதிவெல்லாம் போட்டுடலாம்.. :)


  3. சின்னவன் said...

    மெகா சீரியலாசிரியரில் இருந்து மெகா வரலாற்று ஆசிரியர் ஆகி இருக்கீங்க.
    இன்னைக்கு கூட ஏதோ செச்ன்யா தாக்குதல் பற்றி செய்தி படித்தேன். அதையும் எழுதிவீர்கள் என்று நினைக்கிறேன் உங்களின் 120 episode ல்
    :-)


  4. rv said...

    என்ன சின்னவரே,
    120 எபிசோட் போறுமா? அதுக்குள்ள முடிச்சிடுவேன்னு பகல் கனவு காணுறீங்களே..

    செசன்யா பத்தி எழுத ஆரம்பிச்சா.. அது இந்த ஜென்மத்துல முடியாது.


  5. rv said...

    நன்றி பார்த்தா,
    லெனினுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் இண்ட்ரெஸ்டிங் ஆனது. புரட்சி மனப்பான்மை வளரக் காரணம், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, அவரைக் கொல்ல முயற்சி என்று பல விஷயங்கள் உள்ளன.

    தொடர்ந்து வருகை தாருங்கள்.


  6. G.Ragavan said...

    வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒன்னு கூடுனா...ஒன்னு கொறையுது. எல்லாம் சரிதான் போல.

    மருத்துவச் செலவு இலவசமென்றால் எப்படி அரசாங்கத்துக்குக் கட்டுப்படியாகுமோ! இங்கிலாந்திலும் இப்படித்தான் என்று கேள்விப் பட்டேன். ஒரு நாட்டுக் குடிமக்களின் நலனைப் பேணிக்காப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது உண்மைதான்.


  7. rv said...

    வாங்க ராகவன்,
    என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்?

    //வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒன்னு கூடுனா...ஒன்னு கொறையுது//
    இது உண்மை. ஆனா எது கூடுதலா வேணும் எது குறைச்சலா போதுமுன்னு முடிவெடுக்கற பக்குவம் தலைகளுக்கு இல்லாததுதான் பிரச்சனை.. :)

    //குடிமக்களின் நலனைப் பேணிக்காப்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும் என்பது உண்மைதான்//
    அரசாங்கங்களின் கடமை என்றே நான் சொல்வேன். குடிமக்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் இழப்பு அரசாங்கத்துக்கும் உண்டுதானே!


  8. G.Ragavan said...

    // வாங்க ராகவன்,
    என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்? //

    வந்தேன். வந்தேன். சென்னை சென்றிருந்ததால் வரமுடியவில்லை. மேலும் கோதுமைக் களவாணியை வேறு முடித்துப் பதிக்க வேண்டியிருந்தது. அதான்.

    // அரசாங்கங்களின் கடமை என்றே நான் சொல்வேன். குடிமக்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் இழப்பு அரசாங்கத்துக்கும் உண்டுதானே! //

    அப்படீன்னு நீங்க நெனைக்கிறீங்க. அரசாங்கம் நெனைக்கனுமே.


  9. rv said...

    //கோதுமைக் களவாணியை வேறு முடித்துப் பதிக்க வேண்டியிருந்தது. அதான்.
    //

    ஓ.. அதைப் படித்தேன். தொடரா?? அதுக்கு நானும் துளசியக்காவும் காப்பிரைட் வச்சிருக்கோம் :)

    //சென்னை சென்றிருந்ததால் வரமுடியவில்லை//
    சரவணபவன். கெட்டி தயிர் ??? :)


  10. G.Ragavan said...

    // ஓ.. அதைப் படித்தேன். தொடரா?? அதுக்கு நானும் துளசியக்காவும் காப்பிரைட் வச்சிருக்கோம் :) //

    இல்லை தொடர் இல்லை. இருந்தாலும் ஒரு கற்பனைக் கதையை எழுதி முடிக்கத்தானே வேண்டும்.

    அது சரி. அதென்ன காப்பி ரைட்? என்னய்யா பயமுறுத்துறீங்க?

    // சரவணபவன். கெட்டி தயிர் ??? :) //
    இந்த முறை சரவணபவன் போக முடியவில்லை. முருகன் இட்டிலிக் கடை சென்றேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. சாம்பார் வரை ரொம்ப நல்லா இருந்தது, கொஞ்சமா சாம்பார் இருந்தாலும் ஒரு மாதிரி நல்லா இருந்தது. அதே மாதிரி அஞ்சப்பர் போனேன். அங்க சாப்பிட்டதெல்லாம் ஒங்க கிட்ட சொல்ல முடியுமா!


 

வார்ப்புரு | தமிழாக்கம்