மருதைக்கு போலாமா? - 6

மீனாட்சி, அனுமார்கள், சூப்பர் டிரைவர்

மதுரையின்னு சொன்னாலே மீனாட்சியம்மன் கோயில் aerial shot ஒண்ணுதான் காமிப்பாங்க. பிரமிப்பூட்டும் இமேஜ் அது. அப்படியெல்லாம் நம்மால பாக்க முடியாதே. பொற்றாமரைக் குளம் அருகிலுள்ள வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். எங்கோ ஒருமுறை படித்தது, கோயிலில் உள்ள மெயின் விக்கிரகங்கள் மட்டும் எண்ணூறுக்கு மேல். கோபுரம் மற்றும் சுற்றும் முற்றும் உள்ளவை என்று கணக்கில் கொண்டால் சுமார் ஐந்தாயிரம் சிலைகள் இருக்குமென்றும் அதே கட்டுரையில் படித்தேன். ஒரிஜினல் சுட்டி கிடைக்கவில்லை.

கல்யாணம் புரிந்த இடமென்றாலும் அதற்குள் கணவன் மனைவியிடையே என்ன சண்டையோ தெரியல, தனித்தனியாத்தான் இருக்காங்க.சுந்தரேசுவரர் எல்லா சிவன் கோயிலையும் போலவே, லிங்கவடிவாகவே இருக்கிறார். இந்த ஊருக்குத் தான் எத்தனை விசேஷமோ, அந்தக் பொற்றாமரை குளத்திற்கு தான் எத்தனை மகிமையோ என்று எண்ணும் வகையில் ஒரு ஆச்சரியமான உண்மை, கோயிலின் பிராகரங்களில் சுற்றியபோதுதான் புரியவந்தது. சர்வேஸ்வரன் நடத்திய திருவிளையாடல்கள் எல்லாமே அநேகமாக மதுரை நகரிலும் அதனை சுற்றியும் தான் நடந்திருக்கிறது.


ஞானசம்பந்தப் பெருமானும் இதைப் புரிந்து தான்..

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

என்று மதுரையை விட்டு அகலாத சிவனே என்று பாடினார் போல.

மதுரையைப் பொறுத்தவரையில் மெயின் மீனாட்சிதானே? நகைநட்டு எல்லாம் எக்கச்சக்கமாய் போட்டு என்று தானே இன்னும் மதுரையின் அரசி என்ற மாதிரி கம்பீரமாக இருக்கிறாள். பிரம்மாண்ட கோயிலை முழுவதும் சுற்றிவர நாட்கணக்கில் ஆகுமென்று நினைக்கிறேன். இந்தக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை ஒரு மினி அருங்காட்சியகமாக்கி இருக்கின்றனர்.

மீனாட்சி கோயிலை ஒருவாறு சுற்றிவிட்டு, கிளம்பி 108 திவ்யதேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயிலுக்கு சென்றோம். அடுக்கடுக்கான அமைப்பு கொண்ட கோயில். மிகவும் விசேஷமானதும்கூட. பெரியாழ்வார் இந்தத் தலத்தில் தான்

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே

என்று தம் திருப்பல்லாண்டு பாடி வழிபட்டார் என்று கூறுகிறார்கள்.

கீழே கூடலழகர், மதுரவல்லி. விமானத்தின் மீது ஏறினால் சூர்யநாராயணர், பள்ளிகொண்ட பெருமாள். வைணவக் கோயில்களில் அரிதான நவக்கிரகங்களும் இங்கே உண்டு. இந்தக்கோயில பாத்துட்டு, பரோட்டா ரெண்டு உள்ள தள்ளிட்டு மதுரையிலிருந்து சுமார் 20 கிமி தள்ளியுள்ள கள்ளழகரையும், சோலை முருகனையும் பார்க்க கிளம்பினோம். இந்த முறையும் கூட்டத்தில் சிக்கி அழகர்கோவில் ரோடை தவறவிட்டு, வைகைகரையோரமாகவே ஓடும் ஒரு குட்டி ரோட்டில் திரும்பி ஆற்றின் மட்டத்திலேயே ஓடும் ஒரு பாலத்தைக் கடந்து, ஒருவழியாய் பழமுதிர்ச்சோலை சென்றடைந்தோம். ஆஹா, ரம்மியமான பெயர். ஆனால் பழம் எல்லாம் இருப்பதாகத்தெரியவில்லை. இராமனின் வானரப் படை இப்படித்தான் இருந்திருக்கும் என்று சொல்லுமளவு திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் அனுமார்கள். ரோட்டின் குறுக்கே உட்கார்ந்து கொண்டு தங்கள் இஷ்டப்படி லூட்டியடிக்கின்றன. ஹார்ன் அடித்தால் "where's the fire, man?" என்று நக்கல் பார்வை பார்த்துவிட்டு தத்தம் காரியங்களுக்கு திரும்பி விட்டபடியால் மிக அருகில் போய் ஹார்ன் அடித்து மிரட்டலாம் என்றால் 'குரங்குகள் எல்லாம் அனுமார் அம்சம்டா, எங்கேயாவது அடிபட்டுடப் போகுதுங்க.. மஹா பாவம்'ன்னு பின் சீட்டிலிருந்து குரல். ஏன் மாடு, நாய், பன்னிக்குட்டியெல்லாம் அடிச்சா மட்டும் தப்பில்லியான்னு கேட்க நினச்சு, பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமலேயே விட்டுட்டேன்.

பழமுதிர்ச்சோலை - அறுபடை வீடுகளில் ஒன்று என்றாலும், மிச்ச ஐந்து படைவீடுகளைப்போல் பிரம்மாண்டமான கோயில் எல்லாம் இல்லாமல் சாதாரண farm house மாதிரி இருக்கிறது. சம்மருக்கு வந்த முருகப்பெருமான் அவ்வையிடம் 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கடி போட்ட இடமும் இதுதான். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே நூபுரகங்கை என்ற ஊற்று இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுக்கு போக நேரம் கிடைக்கவில்லை.

இங்கே பழமுதிர்ச்சோலையில் ஒரு விபரீதம் நடக்க இருந்தது. மலையின் ஸ்லோப்பில் நிற்கும் காரை ஸ்டார்ட் பண்ணும் முன் ஹேண்ட் பிரேக் எடுக்கக்கூடாது என்று தெரிந்தாலும் என்ன நினைப்பிலோ எடுத்தேன்.. ஹேண்ட் பிரேக் எடுத்தப்புறம் வண்டி பின்நோக்கி நகர ஆரம்பித்தபின் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால் அந்தப் பக்கம் பார்த்தபடி என் அம்மா வண்டி வருவதை கவனிக்காமல் நிற்கிறார். வண்டியோ மேடானதால் வேகமாக பின்நோக்கி நகருகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் பிரேக் சர்வோ வேலை செய்யாது அதனால் பிரேக் முழு அழுத்தத்துடன் பிடிக்கவில்லை. ஹேண்ட் ப்ரேக் போட்டு ஒருவாறு ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை புல்லா அமுக்கி, குதிரை கனைப்பு, டயர் புகை, ரோட்டில் கருப்பு தடம் என்று படுஜோரா கிளப்பினேன். இது நடந்தது ஒரு கணப்பொழுதில். இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. பார்க் செய்து வந்தபின், பூக்கடைக்காரர் 'நல்லா வண்டி ஓட்டறீங்க சார் நீங்க' ன்னு உள்குத்துடன் வஞ்சப்புகழ்ந்தார். கெக்கெபெக்கே என்று வழிந்துவிட்டு நகர்ந்தேன். வித்தியாசமான அனுபவம் இது. விபத்துகளுக்கு ஒன்றும் புதியவனில்லையென்றாலும், அம்மா என்று வந்தபின் பதட்டம் பலமடங்காகிவிட்டது. இந்த மாதிரி ரன்னிங் கமெண்டரி வச்சே ஒரு நாப்பது எபிசோட் ஓட்டிடலாம் என்று நினைக்கிறேன், என்ன சொல்றீங்க? :)

முருகனைப் பார்த்தாச்சு. அவன் மாமனைப் பாக்க வேண்டாமா? அதே மலையின் அடிவாரத்தில் தான் கள்ளழகர் இருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் கருங்கல் தரையின் மீது மூச்சிரைக்க ஓடி, தங்கையை மணமுடித்து தர வந்தமர்ந்த பெருமாளை தரிசனம் செய்தோம். இந்தக் கோயில்களைப் பற்றியெல்லாம் இன்னும் விரிவாக எழுதாதற்கு காரணம், எல்லாம் பலருக்கும் தெரிந்தவை என்பதாலேயே.

அங்கேயிருந்து என்ன, நேராக திருச்சி NH பிடிச்சு ஊருக்கு வந்தாச்சு.

தொடரின் முடிவுக்கு வந்துவிட்டது. இங்க ஒரு moral of the story எழுதணுமே... என் குத்தாலம் போன கதை தொடரிலேயே ட்ரை பண்ணேன். சரியா வரலை. அதனால சிம்பிளா மதுரை ரொம்ப நல்ல ஊரு, கூடவே பார்த்த ஊர்களும் மக்களும் ரோடுகளும் குரங்குகளும் மறக்கமுடியாதவை/வர்கள்னு சொல்லி இத்தோட முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன். ;)

இதுவரை பொறுமையுடன் படிச்சதற்கு நன்றி.



இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்
5. மருதைக்கு போலாமா? - 5:வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு

மாஸ்கோ மே - 9: படங்கள்: 1

படங்காட்டி பல நாட்கள் ஆகிவிட்டபடியால்...ஒரு படப் பதிவு

கடந்த மே 9-ஆம் தேதி மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற 60-வது நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள புஷ், ஷிராக், ஷ்ரோடர், நம் மன்மோகன் சிங் உட்பட 60 நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக முன்னிலை வகிக்க வரவெண்டுமென்று எனதருமை நண்பர் பூடின் அழைப்பு விடுத்திருந்தாலும், என் modesty-இன் காரணமாய், கூட்டத்திலேய் ஒருவனாய் நின்றிருந்தபோது எடுத்த படங்கள். :)









Red Square-இல் உள்ள St.Basil's Cathedral-க்கு பின்புறம் எடுத்தது. நான் சொன்ன உலகத்தலைகள் எல்லாம் அந்தப் பக்கம், அதாவது red square-இல் அமர்ந்திருந்தார்கள்.

மருதைக்கு போலாமா? - 5

மருதைக்கு போலாமா? - 5: வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு

என் லட்சியப் பயணத்தொடர் முடியும் சமயத்தில் தானா இப்படியொரு பிரச்சனை வர வேண்டுமா? அடுத்த பாகம் எழுதுவதில் கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள். எழுத வரவில்லையென்பதுடன் குஷ்பு பதிவுகளில் விழும் ஆயிரக்கணக்கான புது பின்னூட்டங்களில் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதிலேயே நேரம் போய்விடுவதாலும் இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளேன்.

சரி, நமக்குத்தான் எழுத வரல... ஏற்கனவே மண்டபத்தில எழுதி வச்சுருப்பாங்களே.. அதுகளோட சிறிது நம்ம சொந்த சரக்கையும் சேர்த்து மிக்ஸ் பண்ணினா பதிவு ரெடியாயிடும், இல்லியா? கொஞ்சம் மசாலாவாக்கவும், கொஞ்சம் மேதாவித்தனமாகவும் இருக்கட்டும் என்று மதுரையை பத்தி லோயர் அப்பர் மாதிரி பெரிய ஆளுங்க ஏதாவது சொல்லிருக்காங்களான்னு தேடினேன். off hand ஆக தேவாரம், திருவாசகம் எல்லாம் quote பண்ணுவேன் என்று சொல்ல ஆசைதான்... ஆனால், நீதி, நியாயம் மற்றும் சிலர் என்னைத் தடுக்கிறார்கள். உண்மையில் தேடியது project madurai யில் தான். அங்கே, நான் தேடியதோடு சேர்த்து வேறு இரண்டு அருமையான பாடல்கள் கிடைத்தன. அதனால், இதையே ஒரு பதிவாப் போட்டு இப்போதைக்கு ஓப்பேத்திடலாம் என்கிற ஐடியாவுடன், இதோ..

(மேலும் நம்ம கணேஷ் வேறு இங்கே கலக்குகிறார். அவரும் இந்த ஆர்வத்திற்கு காரணம்.)

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
          பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
          மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
          திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

                                                                                        - திருநாவுக்கரசர்


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

                                                                                        - அபிராமி பட்டர்





இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

கொடுத்து வைத்தவரா நீங்கள்? Are You?

எனக்கு ரொம்ப நாளாய் இந்த சந்தேகம் உண்டு. ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக ஏதேனும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்தால், அவரை கொடுத்து வைத்தவர் என்று சொல்கிறோம். அவர் என்னத்த, யாரிடம் கொடுத்து வைத்தார்? இந்த அரசாங்க காரியமென்றால் அந்த ஆபிஸில் வேலை செய்யும் எல்லோருக்கும் கொடுத்து வைக்கவேண்டியிருக்கிறதே. அந்த மாதிரி நம்ம ஆள் கொடுத்து வைத்த நபரின் தயவால் காரியம் நடைபெற்றது என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா?

மருதைக்கு போலாமா? - 4

மருதைக்கு போலாமா? - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

இது சென்ற பதிவின் தொடர்ச்சி..

என் தந்தை ஏன் அப்படி சொன்னார் என்று ஊரினுள் நுழைந்த பின்னரே புரிந்தது. city center-ல் ஆடி, ஆவணின்னு ஆயிரக்கணக்கான வீதிகள். எது எங்கே போகுதுன்னு தலைகால் புரியல. இதுல பாதிக்குமேல் ஒருவழிச்சாலை. போக்குவரத்த ஒழுங்குபடுத்த இது தேவைதான் என்றாலும், நமக்குன்னு வரப்போ ரொம்ப கடியா ஆயிடுது. ஒரு தெருவ விட்டா திரும்ப ஊர் முழுக்க சுத்தி சுத்தி வந்தீகன்னு தான் பாடிக்கொண்டே வலம் வரணும். இதேபோல சிஸ்டத்தை நெல்லையப்பர் கோயிலச் சுத்தியுள்ள வீதிகளிலேயும் பார்த்தேன். ஆனா இங்க சைஸ் ரொம்ப பெரிசு.

தெருப் பெயர்கள் எல்லாம் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கறது வேற குழப்பம். மேற்கு ஆடி வீதியா? ஆவணி வீதியா ன்னு சர்ச்சை முடியறதுக்குள்ளே சித்திரை வீதின்னு ஒன்னு புதுசா வந்துடும். கோயிலைச் சுற்றி மாட வீதிகள், அவற்றின் ஊடேயும், சுற்றியும் மாதப் பெயர்கள் கொண்ட வீதிகள்னு ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டேன். அதில பல தெருக்கள் மிகக் குறுகலானவை. தெரியாம உள்ள நுழஞ்சிட்டீங்கனா, அப்புறம் அபிமன்யு கதைதான்.

இந்த ஆர்த்தி இருப்பது பெருமாள் கோயில் மேற்கு மாட வீதியில். கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு பின்புறம் இருக்கு. அதனால் கண்டுபிடிக்கறது அவ்வளவு கஷ்டமா இல்லேன்னாலும், மேற்சொன்ன மாதிரி, அந்த தெருவ விட்டுட்டு, பக்கத்து சந்தில நுழைந்து எதிரே வந்த மாட்டு வண்டி, டெம்போ போன்றவற்றை தாண்டிக்குதித்து கொஞ்சம் சர்க்கஸ்காரைப் போல ரெண்டு சக்கரம் பெருமாள் கோயில் மதில்சுவற்றின் மேலெல்லாம் ஓட்டி வெற்றிகரமா ஓட்டலை அடைந்தோம். உள்ளே பரவாயில்லை. பெரிய இடம் இருக்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு பயணிகள் கூட்டம் வேற. ரூம் பத்தி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒண்ணுமில்ல.

ஆதிசொக்கநாதர் கோயில் என்று ஒன்று இருக்கிறது, அதப் போய் பார்த்துட்டு வான்னு யாரோ ஒரு மாமி பத்தி வைக்க இவ்ளோ பெரிய மதுரையில எங்க போய் தேடறது? இனி வண்டியெல்லாம் எடுத்துகிட்டு இந்த ஒன்-வே விளையாட்டெல்லாம் ஆடமுடியாதுன்னு முடிவு பண்ணி வாசல்ல ஒரு ஆட்டோ புடிச்சோம். மீனாட்சியம்மன் கோயிலுக்கெல்லாம் முற்பட்டதுன்னு சொல்லப்படற இந்தக் கோயில் சைஸ் என்னவோ ரொம்ப சின்னது. அது exact-அ எங்கே இருக்குன்னு கேட்காதீங்க. ஏன்னா, எனக்கும் தெரியாது. மாட்டுத்தாவணி என்பது போன்ற மிக செக்ஸியான புறநகர்ப்பெயர்கள் கொண்ட ஊர் மதுரை. அந்த மாடுக்கு தினமும் தன்னோட தாவணிய பஸ்ஸிலெல்லாம் ஏலம் விடுறாங்களேன்னு தெரிஞ்சா பாவம், வருத்தப்படும்.

இந்த மாதிரி பெயர்களைக் கேட்டும் குழம்பாதவர்களுக்கு சிம்மக்கல், யானைக்கால் போன்ற வித்தியாசமான பெயர்களும் உண்டு. இதனால் எந்த ஏரியாவுக்கு போனோமெல்லாம் தெரியாது. கோயில் பேர் சொன்னோம். ஆட்டோக்காரர் அழகாக கொண்டு சேர்த்துவிட்டார். கரை சேர்த்துவிட்டார்னு தான் சொல்லனும். பின்ன.. நானும் பல ஊருகள்ள டிராபிக் பார்த்திருக்கேன். ஆனா, இந்த மதுரை மாதிரி வராதுங்க. சென்னையில் ஓட்டுவோர்க்குக் கூட தனித்தனியே கோயிலெழுப்பலாம்ங்கற மாதிரி ஓட்றாங்க. சிக்னல் விழுந்துட்டா போதும், இந்த நேஷனல் ஜியோல காட்டற locust attack மாதிரி நம்மள் சுத்தி சூழ்ந்து மூழ்கடிச்சிட்டு போய்டறாங்க. புதுசா ஊருக்கு வர்றவங்களயும் கூட்டத்தோடு கூட்டமா ஒன்-வேயில அடிச்சுகிட்டு போய், மினி மதுரைச் சுற்றுலா காமிச்சுருவாங்க. அதனால.. ஆட்டோ ரிக்ஷா தான் சரியான வழி.

ஆனா, ஒண்ணு சொல்லணும். எவ்வளவு மரியாதையா இருக்காங்க மக்கள். ஆட்டோக்காரர் கூட சண்டையெல்லாம் போடாம, மிக மரியாதையாய் சொன்னதக் கேட்டு தலையாட்டினார். நாங்க கோயிலுக்கு போய்ட்டு வரமட்டும் வெயிட் பண்ரேன்னு சொல்லிட்டு அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் கூட வாங்கல. இந்த மரியாதை விஷயம், இந்த முறைதான் நான் மிகவும் கவனிச்சு பார்த்தேன். ஒருத்தர் ரெண்டு பேரில்ல.. பல பேரு வெள்ளை கதர்வேட்டி, சட்டை போட்டு, தோளுல ஒரு துண்டு, நெத்தியில வீபூதின்னு மதுரை மாநகரமே ஒரு சட்டசபை மாதிரி இருக்கு. ஏதோ என்னய போய் மதிச்சு சார்-னு ரெண்டு பேர் கூப்பிட்டத மட்டும் வெச்சு சொல்லல.. பேசறதிலேயே ஒரு பதவிசு. நல்ல மக்கள். மரியாதை தெரிஞ்ச மக்கள்.

கோயிலுக்குப் போனோமில்லியா? அங்க ஆதிசொக்கநாதர் இருக்கார். அந்த கோயில் அர்ச்சகர்கிட்ட இந்தக் கோயில்ல என்ன விசேஷம், புராணம்னு கேட்டோம். பெரும்பாலான கோயில்களுக்கு இந்த மாதிரி கதைகள் கேட்கவே போலாம். ஆனா, நிறைய கோயில்கள்ல தட்டுல இருபது ரூவாக்கு குறைச்சலா போட்டா தீபாராதனையே காட்ட மாட்டேங்கறாங்க. அப்புறம் புராணமாவது.. ஆனா, இங்க இவர் பாவம் காது அவ்வளவா கேளாதவர் போல. சரின்னு அவரை விட்டுட்டு பிரகாரம் சுத்தி வந்தோம். அப்போ ஒரு நடுத்தர வயது தம்பதி வெயிட் பண்ணிக்கொண்டிருந்தனர். எங்கள் கூடவே ஆதிசொக்கநாதரையும் பார்த்தவர்கள் அவர்கள். எதற்காகவோ நிற்கிறார்கள் என்று நினைத்து நாங்கள் கிளம்புகையில் அந்தக் கணவர் என்னைக் கூப்பிட்டு 'எந்த ஊருங்க உங்களுக்கு?இப்பத்தான் முததடவையா வர்றீங்களா' னார். 'ஆமா'ன்னு சொல்லவே.. 'நீங்க அர்ச்சகர் கிட்ட கேட்கும் போதே நினைச்சேன். சரி நீங்கள் கும்பிட்டுவிட்டு வரட்டும்னு தான் காத்திருக்கிறேன்' னு சொன்னார். இத்தன நேரம் காத்திருந்து தல வரலாறு சொல்ல வேண்டும் என்று நினைத்தாரா? எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. தலவரலாறு புத்தகம் அலுவலகத்தில் ஸ்டாக் இல்லையென்று அதற்குள் விசாரித்துவைத்து சொன்னவர் பிறகு மிகப் பொறுமையாக எங்களோட cross-questionsக்கும் பதில் சொல்லி அந்தப் பழம்பெரும் கோயிலின் இடைக்காடகர் புராணத்தை சொன்னார். விசிட்டிங் கார்ட் பரிமாற்றம் முடிந்த பின்னர் அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினோம். எங்களுக்கோ இன்னும் அதிசயம். வெளியூரிலிருந்து வந்து அவங்க ஊர் கோயில் பத்திக் அவர நேரடியாக் கேட்கலேன்னாலும் நின்னு நிதானமா எடுத்துச் சொல்லணும்னு தோணுதே.. அதுவே பெரிய விஷயமில்லியா? அதைவிட ஆச்சரியம், நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய ரெண்டாவது நாள் ஒரு கூரியர். ஆதிசொக்கநாதர் திருக்கோயிலின் தலவரலாற்று புத்தகம் அனுப்பியிருந்தார் அதே மதுரைக்காரர். சொந்தங்களுக்கே நிற்க நேரமில்லைன்னு ஓடும் இந்தக் காலத்திலே இப்படி ஒருவரா? மறக்க முடியாத நிகழ்ச்சி இது.

வந்த ஆட்டோக்காரர் லேட்டாக வந்ததற்கு ஒரு வசை கூட பாடாமல், பேசியதற்கு மேல் ஒரு நயாபைசா கேட்காமல் ஹோட்டலில் இறக்கிவிட்டார். அங்கே அடுத்த ஆச்சரியம். சர்வரின் வடிவில். ஓட்டலின் உணவகம் மூடும் நேரம். முப்பது வயது கூட இருக்காது. பார்ப்பதற்கு அச்சு அசல் நம்ம சினிமா நடிகர் முரளி போலவே இருந்தார். என் தம்பி நான்-ஓ எதையோ ஆர்டர் செய்ய ஆரம்பித்தான். 'ஏண்டா, பாவிப்பசங்களா, நடைய சாத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம்னு பாத்தா இப்படி கோயில் மாடுங்க மாதிரி வந்து ஒக்காந்துகிட்டு நானு வேணும் பேனு வேணும்னு எகத்தாளம் பண்றீங்க? இரு இரு.. நான் தரேண்டா உனக்கு ஒரு நான்.. இதுவரக்கும் வாழ்க்கையில இந்த மாதிரி நான மவனே நீ சாப்டிருக்கவே மாட்ட பார்' அப்படீன்னு சப்-டெக்ஸ்ட்டுடன் லுக் விடாமல் இன்முகமும், கனிவான பேச்சும் மாறாமல் "சார், இப்ப லேட்டாயிடுச்சு. முன்னாடி செஞ்சதத்தான் சூடு பண்ணி எடுத்துவரணும். அதுக்கு பதிலா, சூடா இட்லி இருக்கு. அது பரவாயில்லியா?"ன்னு கேட்டார். எனக்கு மாரடைப்பே வந்துடுச்சு! 'சொக்கா, இன்னிய நாளுக்கு கோட்டா ஓவர்! இதுக்கு மேல நல்லவங்கள பாக்குறத நம்மால தாங்க முடியாதுடாப்பா'..அப்படின்னு சொல்லி சாப்டு நேரே ரூமிற்கு கொஞ்சம் அலைபாய்ந்த மனம் கொஞ்சம் நிம்மதி பெறுவதற்காக WWF பார்த்துட்டு தூங்கப்போயாச்சு.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?
இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்

custom-made babies: மரபணு விற்பனை?

சமீபத்தில் spike lee-இன் "She Hate Me" படம் பார்த்தேன். ஒரு மருந்துத்தயாரிப்பு கம்பெனியில் VP-ஆக இருப்பவன் ஜாக். தீடிரென்று சில காரணங்களால் வேலையை இழக்க நேர்கிறது. முன்பு வேலை செய்த கம்பெனிக்காரர்களின் சதியால் அவனின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டு பணத்தட்டுப்பாடு. படம் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், கதை பல இடம் தாவுகிறது என்றாலும்.. அவன் பின்னர் பணத்திற்கு என்ன செய்தான் என்பதுதான் இந்தப் பதிவிற்கு காரணம்.

அவன் மூலம் இயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க விரும்புகிறார்கள் சில லெஸ்பியன் தம்பதிகள். அதுவும் இருவரும் ஒரே சமயத்தில். அதற்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்கவும் தயாராய் இருக்கிறார்கள். ஏன் sperm bank-ற்கு சென்று குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று கேட்பவர்களுக்கு. விந்தணு தானம் செய்தவர் உடல்நிலை, பயோடேட்டா எல்லாம் இருந்தாலும், பல சமயங்களில் தெரியாத ஒருவரின் பிள்ளையைப் பெறுவதற்கு தைரியமில்லை என்கிறார்கள். தங்கள் குழந்தைக்கு தந்தையின் பாதியாய் நல்ல மரபணுக்கள் கிடைக்கவேண்டும் என்ற கவலை அவர்களுக்கு. அதே போல், தத்தெடுப்பதிலும் ஓரினப் பெண் தம்பதியினருக்கு சட்டச் சிக்கல்கள் நிறைய என்கிறார்கள். நம் ஹீரோவிடம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது. ஆனால், தம்பதியர் எல்லோரும் முன்னமேயே அவனிடம் அந்தக் குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடக்கூடாது என்றும் இது வெறும் ஒரு பிஸினஸ் transaction மட்டுந்தான் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு விடுகின்றனர். இவனும் அதற்கு ஒத்துக்கொண்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு கடைசியில் 19 குழந்தைகளின் தந்தையாகி விடுகிறான்.

வித்தியாசமான கதைக்களமாக எனக்கு பட்டது. ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் பாதுகாப்பிற்காக இருக்கும் கணக்கற்ற அமைப்புகளில் ஒன்றுகூடவா செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க உதவ முடியாது? creative license என்றுதான் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். ஓரளவிற்கேனும் ஓரினச்சேர்க்கை குறித்த acceptance மற்றும் புரிதல் உள்ள அமெரிக்காவில்கூட தத்தெடுக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதில் ஹீரோவின் நிலைப்பாடு என்ன? விந்தணு என்பதை வெறும் biological product-ஆக வகைப்படுத்தி அதை பணத்திற்கு விற்கும் vendor என்று மட்டுமே அவனை கருத்தில் கொள்ள முடியுமா? ஏனென்றால் விந்தணு வங்கிகள் இந்தக் காரியத்தைத் தானே செய்து வருகின்றன. என்ன, அவ்வகையில் தானம் செய்வோர் தாயையும் சேயையும் பார்க்காமலேயே தந்தைகளாகிறார்கள். இதனால் மட்டும் பிறந்த குழந்தைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லையென்று ஆகிவிடுமா? குழந்தைகள் தான் பிரதான செல்வங்களாய் இருக்கும் நம் வாழ்க்கையில், தம் வாழ்க்கையில் ஒளியாய் இருக்கப் போகும் ஒரு குழந்தையைப் பெற இன்றியமையாத விந்தணுவிற்கு விலைதான் என்ன? உங்கள் பிள்ளை ஆரோக்கியத்துடனும், அறிவுடனும் பிறக்க எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருக்கிறீர்கள்? அந்தக் குழந்தைக்கு சிறந்த மரபணுக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்கு எத்தனை பணம் கொடுத்தால் தகும்? பணத்தால் வாங்கக் கூடிய ஒரு பொருளாக இதைப் பார்க்கவும் முடியுமா? ஓரினத் தம்பதிகளை விடுங்கள். சாதாரணத் தம்பதிகள்?

அப்படிப் பார்க்க ஆரம்பித்தால்.. அதே படத்தில் ஒரு நண்பன் இதே போலவே கூறுகிறான். நீ ஒரு வேலையற்றவன். பொழுதுபோக்குக்காகவும், பணத்திற்காகவும் விற்கிறாய். இதுவே நியூட்டன், ஐன்ஸ்டைன், கேட்ஸ், டாம் க்ரூஸ் போன்ற வாழ்க்கையில் வெற்றி பெற்றோரின் விலை என்ன? அதே போல முட்டைகளையும் வாங்கலாம்.. அரிதா, மதர் தெரஸா, வீனஸ் வில்லியம்ஸ்.. இதை கிண்டலாகவும் கொச்சையாகவும் சொல்வதாகக் கொள்ளாமல் வேறு மாதிரி யோசிப்போமே. தம் பிள்ளைகளுக்கும் நல் ஆரோக்கியமும், புகழும், பெயரும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் எண்ணலாம் இல்லையா? தம் குழந்தை என்பதற்காக தம்முடையதையும் அதுதவிர ஏற்கனவே மதியாலும், உடலாலும் புகழ்பெற்றவர்களின் மரபணுக்கள் கூடுதலாக குழந்தைகளுக்கு கிடைக்குமெனில் அவற்றை பெற பெற்றோர்கள் விரும்புவது பாவமா? எதிர்காலத்தில் இத்தகைய வழிமுறைகள் சாத்தியப்படுமா? இப்போதே ஓரளவிற்கு சாத்தியப்படும் என்றாலும் பயன்படுத்துவதில் ஏகப்பட்ட சட்டசிக்கல்களும், நடைமுறைச்சிக்கல்களும் இருக்கின்றன. பல முன்னேறிய நாடுகளில் இதில் ஆராய்ச்சி செய்வதே தடைசெய்யப் பட்ட விஷயமாக இருக்கிறது. மனித குல மேம்பாடு என்று பார்த்தால் இது தேவையானதொன்றாகிறது. பல நோய்கள் வருவதற்கான ஜீன்களை ஆப் செய்துவிட்டால், அவை ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் என்றால் ஏன் செய்ய மறுக்கிறோம்? நடைமுறையில், மதமும் அது சார்ந்த கொள்கைகளும் அதன் மூலம் நமக்கு வந்த thinking-குமே இந்த வகை ஆராய்ச்சிக்கு எதிராக இருக்கிறது என்று தோன்றுகிறது. custom made குழந்தைகள் என்று வந்துவிட்டால், அப்புறம் ஆண்டவன் கொடுத்தான் என்ற சொல்லிற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே. ஒன்று இந்த ethical box லிருந்து நாம் வெளி வர வேண்டும். இல்லை, மரபணுக்கள் மூலம் நம் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை (குறைந்த பட்சம் advantage) பற்றி மறந்தே போக வேண்டும். எதைச் செய்யப்போகிறோமோ தெரியவில்லை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். இது வரை, இந்த முறைகள் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. இன்னும் நிறைய ஆராய்ச்சி, trials தேவை. ஆனால் trials-க்கு தம் க்ளொனிங் பிள்ளைகளை கொடுக்கப் போவது யார் என்ற கேள்வி உடனே வருகிறது.

படம் என்னவோ முன்னாள் காதலியுடனும் அவளின் தோழியுடனும் ஹீரோ சேர்ந்தே வாழ்வது போல் சுபம் போட்டு முடித்தாலும், பல ethical மற்றும் moral கேள்விகளை கேட்கிறது இந்தப் படம்.

மருதைக்கு போலாமா - 3

மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம், ஆர்த்தி

இது சென்ற பதிவின் தொடர்ச்சி

ஒரு வழியா காலை பூஜை ஆரம்பித்தது. தண்டாயுதபாணிக்கு திருநீறு, பால், பஞ்சாமிர்தம் என பல அபிஷேகங்கள். இந்த முறை கட்டளைக்காரர்கள் யாரும் இல்லாததால், நாங்கள் மட்டுமே. மிக அமைதியாய், தள்ளுமுள்ளு இல்லாமல் முருகன் தரிசனம். சில வருடங்களுக்கு முன்னர் வரை முருகனின் நிலை மிகவும் பரிதாபம். ஒன்றுமே இல்லாமல், கோவணம் மட்டும் தரித்த ஆண்டியானால் கூட சுரண்டுவதில் கில்லாடிகளாச்சே நம்மாட்கள். அப்படி நவபாஷாண சிலை சுரண்டப்பட்டதால் முருகனே தடியின் துணையின்றி நிற்க முடியாத ஒரு சூழ்நிலை. இப்போது குமரனின் விக்கிரகம் எங்கும் பல இடங்களில் வீங்கி இருப்பதுபோல் இருக்கிறது. ஏதோ மூலிகை மருந்தோ என்னவோ தடவி ஒரு மாதிரி பூசி வைத்திருக்கிறார்கள்.

ஓதுவார் ஒருவர் திருப்புகழ் பாட, அவர் சுமாராகப் பாடினாலும் பக்தியில் பாடுவதால் அந்த ambience மிகவும் நன்றாக இருக்கும். பல சமயங்களில் உருவாய் உளதாய் இல்லன்னா ஏறுமயில் ஏறி என்று திரும்பத் திரும்ப ஒரே பாட்டை பாடியே ஓட்டிவிடுவார். ஆனால் இந்த முறை பாடியவரோ கேட்டிராத பல பாட்டுக்களை பாடினார். நன்றாக இருந்தது. இந்த மாதிரி கோயிலில் பாட்டு என்றவுடன் இந்த முறை சென்ற இன்னொரு கோயில் நினைவுக்கு வருகிறது. கீழப்பழுவூர். திருவையாற்றிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் இருக்கிறது இந்த ஊர். பழுவேட்டரையர்கள் காலத்திய சிவன் கோயில் ஒன்று மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளடங்கி இருக்கிறது. அங்கே இப்படித்தான் பணம் எதிர்ப்பார்த்து ஒரு கோயில் ஊழியர்.

அம்பாள் சன்னதியில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யவிடாமல் பெருங்குரலெடுத்து அந்த ஊழியர் பாட ஆரம்பித்தார். 'தனந்தரும் கல்வி தரும்' என்று அபிராமி அந்தாதிப் பாடலின் முதல் வரியைத் தாண்டவில்லை. வெறுமனே வார்த்தைகளை திருப்பி திருப்பிப் போட்டு ஐந்து நிமிடம் பாடுகிறேன் என்று படுத்தி, திடீரென்று ஞானம் வந்தவராய் 'அபிராமி கடைக்கண்களே' என்று எங்கிருந்தோ கொண்டு வந்து முடித்தார். இதைத்தான் பாட பத்து காசு, பாட்ட நிறுத்த இருபது காசுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

விபூதி அபிஷேகம் முடிந்ததும் பிரஷ்ஷாக கொடுப்பார்கள். அதைப் பூசினாலே குளுகுளுவென்று இருக்கும். ஆனால் விபூதி கொடுத்து போனபின் உடனே பால், சந்தனம் எல்லாம் கொடுப்பதால் அவையெல்லாம் மேலே கீழே கொட்டி, கொஞ்ச நேரத்திற்கு இசுக் பிசுக் தான். இந்த வினியோகம் முடிவதற்கும் அலங்காரம் முடிந்து திரை திறப்பதற்கும் சரியாக இருக்கும். ஒரு வழியாய் அலங்காரமெல்லாம் பண்ணிக்கொண்டு.. சும்மா சொல்லக்கூடாது. அலங்காரம் மட்டும் பிரமாதமாக பண்ணி அமர்க்களப்படுத்தி விடுகின்றனர் இந்த பழநி அர்ச்சகர்கள்.

முருகனேயே சுரண்டும் பழநி கூட்டம் நம்மை மட்டும் விடுமா என்ன? பிரகாரத்திற்கு வந்தீர்களானால், ஒரு பெரிய பட்டாளமே காத்திருக்கும். கோயிலில் வேலை செய்பவரோ செய்யாதவரோ நம்மிடம் கறக்க ரெடியாய் இருப்பார்கள். அவர்களிடமெல்லாம் சாமர்த்தியமாக தப்பித்துக்கொண்டு மடப்பள்ளி அருகேயுள்ள அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே, மீண்டும் பால். அப்புறம் பிரசாத பாக்கெட். ரூமில் வந்து பிரித்துப் பார்த்தால் பிரசாதம் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்திருந்தார்கள். எள் சாதம், புளியோதரை, சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல். நிறைய முந்திரிப்பருப்பு, நெய்யெல்லாம் போட்டு சக்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் பிரமாதம். பஞ்சாமிர்தத்தை முன்னெல்லாம் ஒரு மட்டமான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுத்தருவார்கள். ஆனால், இந்த முறை மிக நேர்த்தியாக சீல் செய்யப்பட்ட டின்னில் கொடுத்தார்கள். அதில் date of mfg, exp date எல்லாமே இருந்தது கூடுதல் சிறப்பு.

அங்கிருந்து குச்சனூர். தேனி தாண்டி 30 கிமி தெற்கில், சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (NH-49) பிரிந்து ஒரு 2 கி.மீ செல்ல வேண்டும். திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் சனீஸ்வரனுக்கு இங்கே குச்சனூரில் தனி கோயில். இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தனிகோயில். சமீபத்தில் தான் பிரபலமாயிருக்கிறது என்று நினைக்கிறேன். கோயில் எதிரிலியே முல்லையாறு ஓடுகிறது. சனீஸ்வரனுக்கு மிகவும் விசேஷமான பரிகாரத்தலம் இது. சனிப்பெயர்ச்சியின் போது மிகவும் கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள்.

சரி, குச்சனூர் முடிந்துவிட்டது. இனியென்ன. மருத தான். தேனியிலிருந்து மதுரை செல்லும் சாலையை மிகவும் ரசித்தேன். மலைகளுக்கு நடுவேயெல்லாம் புகுந்து வளைந்து செல்லுகிறது இந்த NH-49. மதுரைக்கு சற்று முன்னரே, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரெதிரில் பிரிந்தால் அந்தப்பக்கம் திருமங்கலத்தில் திருநெல்வேலி-கன்னியாகுமரி செல்லும் NH-7ல் சேர்ந்து அங்கிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சென்று விடலாம்.

குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு இன்னொரு உதாரணமாக இங்கேயும் மலை தான். சூரனை வதஞ்செய்த முருகப்பெருமான் இம்மலையில் அமர்ந்து அயர்ச்சி நீக்கி, சிவபார்வதி முன்னிலையில் தெய்வானையை மணஞ்செய்து திருத்தலம் இது. மலையிலேயே கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் குடைந்து, மலைப்பாறையிலேயே முருகப்பெருமானையும் செதுக்கியிருக்கிறார்கள். பார்க்கவேண்டிய கோயில் இது.

அங்கிருந்து கிளம்பி, பெஸ்ட் வெஸ்டர்ன் ஜெர்மானஸ் போகலாம் என்று நானும் தம்பியும் கூற, 'உங்க ரெண்டு பேருக்கும் மதுரையைப் பத்தி ஒண்ணுமே தெரியில.. இப்படி ஊருக்கு வெளியிலலாம் தங்கினா, கத கந்தல் தான்.. அதனால் கூடலழகர் கோயிலுக்கு எதிர்த்தாற்போல் ஆர்த்தி என்று ஒரு ஓட்டல் இருக்கிறது. அங்கே தான் போகப் போகிறோம்' என்று முடிவாக சொல்லி விட்டார் அப்பா. மனதிற்குள் ஆர்த்தியை சபித்துக்கொண்டே மதுரைக்குள் நுழைந்தோம்.

(தொடரும்..)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

PS: As usual, got carried away with the title for this post. எத்தன தடவை ப்ளாக்கர் தலையில் குட்டினாலும், மரமண்டையில ஏற மாட்டேங்குது :(

மருதைக்கு போலாமா? - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

இது சென்ற பதிவின் தொடர்ச்சி.

பழநிக்கு சுமார் 5 கி.மீ முன்னாடியே மலை தரிசனம் செய்யலாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் மலை ஜெகஜ்ஜோதியாய் ஜொலிப்பது அழகு. எப்போது பழநி சென்றாலும் திருப்பூர் லாட்ஜில் தான் தங்குவது. comfortable என்று சொல்வார்களே அந்த வகை ஓட்டல் தான் இது. குறிப்பாய் ஓட்டலின் சைடில் புதிதாய் கட்டப்பட்டிருக்கும் ரூம்கள். மெயின் பில்டிங்கினுள் சுமாராகத்தான் இருக்கும். நல்ல சீசன் வேளையில் சென்றால் ரூம் கிடைப்பது கஷ்டம், அதனால் முன்பதிவு செய்துகொள்வது நல்லது. தண்டாயுதபாணிக்கு கேரளாவில் பக்தர்கள் அதிகம் போல. பல KL வண்டிகளைப் பார்க்கலாம். மாலையாகி விட்டதால் தங்கரதம் பார்ப்பது இயலாத காரியம் என்பதாலும், அடுத்த நாள் காலை பூஜைக்கு டிக்கட் இருந்ததாலும் நேராக நளபாகம் தான். எங்களுது இல்லை. ஹோட்டலின் உணவகத்தின் பேரிது. பெரும்பாலும் நன்றாக இருந்தாலும், அங்கே சமைக்கும் ஹெட் நளனின் மூடிற்கு தகுந்தாற்போல் தரமும் மாறுவதுண்டு. குளிரில் காது வெடவெடக்க ஏசிக்கு நேர் அருகில் தான் இடம் கிடைத்தது.

அதென்னவோ தெரியவில்லை, இங்கே வெளியூரில் இருப்பதாலோ என்னவோ, இல்லை எங்கள் வீட்டில் இதெல்லாம் செய்வதில்லை அதனாலோ, வெளியில் சாப்பிடச் சென்றால் அநேகமாக நான் சாப்பிடுவது பரோட்டா தான். இந்த வடக்கத்திய நான், நீ எல்லாம் சாப்பிட்டு போரடித்துவிட்டது. சும்மா இந்த மசாலா, அந்த மசாலா என்று அலட்டுவது வட இந்திய சமையல். ஆனால், நம்மதிலோ மிஞ்சிப்போனால் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி, காரப்பொடி. இதை வைத்தே வித்தைகள் காட்டுவது தமிழ்ச்சமையால் ஆயிற்றே. பரோட்டா..ஆஹா, பல லேயர்களை கொண்ட பரோட்டாவை கஷ்டப்பட்டு லாவகமாக ஒரே கையால் பிய்த்து கூட தொட்டுக்க இருக்கும் வெங்காயப் பச்சடியில் முக்கி சாப்பிட்டால் தெய்வாம்ருதம் தான். குருமாவை விட பச்சடியே பரோட்டாவிற்கு சிறந்தது என்பதுதான் என் கட்சி. தோசையை விட பரோட்டாவின் மேன்மை அதிகம்! ஒன்று தின்றாலும் வயிறு நிரப்பும். தோசைக்கு வேண்டியதைப் போல தேங்காய்ச்சட்னி, காரச்சட்னி, சாம்பார், தோசை மிளகாய்ப் பொடி போன்ற அக்ஸெஸரிகள் தேவையில்லை. வெறும் வெங்காயப் பச்சடி போதும். இப்படி நிறைய. தன்னைப் போலவே வாழ்க்கையும் பல லேயர்களைக் கொண்டது என்று சூசகமாக ஒரு வாழ்க்கைமுறையையே காட்டுகிறது இந்த பரோட்டா. இந்தப்பதிவின் தத்துவக் கோட்டா ஓவர், இல்லை?

பரோட்டாவை விடுங்கள். இந்த சில்லி பரோட்டா இருக்கே. அடாடாடா! ஒரு முறை மதுரைக்கு சென்ற போது என் அப்பா மலரும் நினைவில் மூழ்கி காலேஜ் ஹவுஸில் சாப்பிடுவோம் என்றார். பேர் பந்தாவாக இருக்கிறதே என்று நானும் தம்பியும் அப்பாவியாக தலையாட்ட, ஓட்டல் வாயிலில் நுழைந்தவுடன் தான் நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஏதோ திருவல்லிக்கேணி மேன்ஷன் மாதிரி ஒரு ஓட்டல். இதுக்கு ஏதோ ஆக்ஸ்போர்டில் இருக்கா மாதிரி காலேஜ் ஹவுஸ்னு ஒரு பந்தாவான பேரு என்று நொந்துகொண்ட எனக்கு, அப்பா சொன்னது.. 'சாப்ட்டு பாரு. அப்புறம் சொல்லு'. முதல் இம்ப்ரெஷனே சரியில்லை. இதில சாப்பாடா என்று யோசித்துகொண்டிருந்த போது, என்னவோ குருட்டு தைரியத்தில் சில்லி பரோட்டா ஆர்டர் செய்தேன். வந்ததோ பல பீஸ்களை கொத்து பரோட்டாவாக செய்து அதை நன்றாக காரப்பொடியில் மிக்ஸ் செய்து ஆங்காங்கே சிம்லா மிர்ச்சி. காரம் பிய்த்தாலும் விடாமல் மூன்று பிளேட் வாங்கி சாப்பிட்டேன். அவ்வளவு நன்றாக இருந்தது. சரி, ரிடர்ன் டு நளபாகம்.

இங்கேயும் பரோட்டா தான். சாப்பிட்டுவிட்டு ரூமில் WWF பார்த்துவிட்டுத் தான் தூக்கம். இந்தியாவில் இருக்கும் வரை ரெகுலராய் தினமும் பார்க்கும் விஷயம் இந்த WWF. ஸ்டாரில் TNA சரியில்லை. அவ்வாறில்லாமல் தினமும், ஏதாவது லூட்டி அடிப்பார்கள் இந்த WWF-ல். இந்தக் கோடையில் Eddie Guerrero-Rey Mysterio போன்ற சூடான பல நிகழ்வுகள். ஆமா, இந்த சம்மர் ஸ்லாமில் என்னங்க ஆச்சு? யார் ஜெயிச்சது? ஹல்க்-கா இல்ல ஷானா?

அடுத்த நாள் காலை 530க்கெல்லாம் எழுந்து ரெடியாகி 545க்கெல்லாம் விஞ்ச் ஸ்டேஷனிற்கு சென்றாகிவிட்டது. இந்த விஞ்ச்க்கு புதிய ரோப்-கார்கள் வந்தபின் கூட்டம் குறைவாம். காலை வெட்டியெடுத்துக் கொண்டுதான் பெட்டிகளில் உட்காரவேண்டும் என்ற அளவிற்கு சிறிய கார்கள் கொண்டது இந்த விஞ்ச். காலை வேளையில் சூலமங்கலம் சகோதரிகள் கந்தர் சஷ்டி கவசம் பாட மிகப் பொறுமையாய் மலைமேல் ஏறுகிறது. வழிநெடுக தேவஸ்தானம் Terrace பூங்காக்கள் அமைத்துள்ளனர். பூக்கள் குலுங்க பார்க்கவே அழகாய் இருக்கிறது.

இந்த இடத்தில் எனது முதல் திருப்பதி பயணம் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு என் தாத்தா பாட்டியுடன் சென்றிருந்தேன். அப்போது சாமி தரிசனம் எல்லாம் செய்துவிட்டு திரும்புகையில் APSRTC கேண்டீனில் ஆவக்காயை பிசைந்து சாதம் சாப்பிட்டுவிட்டு வயிறு பிராண்ட கீழ்த்திருப்பதி பஸ்ஸில் ஏறினோம். பஸ் கிளம்ப வண்டியை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்தவுடன், ஏதோ ஒரு புண்ணியவான் "கோயிந்தா கோயிந்தா!" என்றார்! அவருடன் சேர்ந்து பலரும் இந்த மாதிரி கோவிந்தனை கூப்பிட ஆரம்பித்தனர்! எங்களுக்கு ஆவக்காயை சாப்பிட்டது மறந்தே போய் விட்டது. என்னடா, பஸ் மிகவும் ஆபத்தான மலைப்ப்ப்பாதையில் இறங்கும் போது, இவர் இப்படி கோவிந்தன் சரணடி அடைய அவசரம் காட்டுகிறாரே என்று. பல வளைவுகளில் பஸ் திரும்பும்போதும் அதே ஆசாமி கதற அவர் கூடவே சக பயணிகளும் கத்த அது ஒரு காமெடி.

இப்போது விஞ்ச் பொறுமையாய் உச்சியை அடைந்தவுடன், இறங்கி, பிரகாராத்தை சுத்தி கோயிலின் பின்புறத்தில் ஒரு நுழைவு வழியே நுழைந்தோம். அங்கே சிறப்பு தரிசன க்யூவிற்கான கம்பிதடுப்புகளை எல்லாம் தாண்டி, உள்ளே சென்று ஒருமுறை முருகனை அவசரமாய் தரிசித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு இடப்பக்கமாய் வெயிட்டிங் பிரகாரம் இருக்கிறது. அதில் காத்துக்கொண்டிருந்தோம்.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?

மருதைக்கு போலாமா -1

மருதைக்கு போலாமா? - 1: திண்டுக்கல், இராஜகாளி, பழநி

லட்சக்கணக்கான வாசகர்களின் (சரி சரி) அன்புக்கட்டளைக் கிணங்கி இதோ அடுத்த பயணத் தொடர். இதுவும் முந்தைய குத்தாலம் போன கதை போல் மெகா வெற்றித்தொடர் (?) ஆகுமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. :) இந்த முறை தொட்டுச்செல்லப் போகும் இடங்கள்: திண்டுக்கல், தெத்துப்பட்டி, பழநி, குச்சனூர், மதுரை: மீனாட்சி, ஆதி சொக்கநாதர் (மீனாட்சி கோயிலுக்கு முந்தியது), கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், கூடலழகர் (கள்ளழகர் இல்லை, வேற பழமையான பெருமாள் இவர்). இனி பயணத்தை தொடங்குவோமா?

வருடமொரு முறை பழநி செல்வதுண்டு. அதுபோலவே இந்த வருடமும் கிளம்புகையில் கூடவே, பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் மதுரைக்கும் சென்று திரும்புவோம் என்று முடிவு செய்தோம். என்னைப் பொறுத்தவரை திருப்பதியும் பழநியும் எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடங்கள். பழநி என்ற பேரைக்கேட்டாலே தனியாய் கே.பி.எஸ் வந்து நம் பின்மண்டையில் வெண்கல குரலெடுத்து 'பழம் நீ அப்பா' என்று ரீ-ரெக்கார்டிங் பாடுகிறார் இல்லையா? முருகப் பெருமானும் ஏ.பி.என் படங்களில் வருவது போல் சாதாரணமாய் மிகவும் accessible mood-இல் இருக்கும் இடம் பழநி என்று தோன்றுவதுண்டு எனக்கு. திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தாண்டினால் பழநி. சுமார் நான்கு மணி நேரப் பயணம்.

திண்டுக்கல்லை பற்றி ஒரு விஷயம். இத்தனை வருடங்கள் பல முறைகள் (30-ஆவது இருக்கும்) திண்டுக்கல் சென்றிருக்கிறோம். ஆனால் எனக்கு தெரிந்த திண்டுக்கல் பை-பாஸ்ஸோடு முடிந்துவிடும். ஊரின் உள்ளே ஒருமுறைகூட போனதே கிடையாது (இந்த லீவில் முதல் தடவையாய், ஊருக்குள் சென்றேன் வேறு விஷயமாக). சேவரிட் சேமியாவின் பிரம்மாண்ட விளம்பரத்தைத் தாங்கிய பாலத்தை தாண்டி சென்று கொண்டேயிருந்தால் பெங்களூர் சாலையையும் கொடைக்கானல் சாலையையும் தாண்டி நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் பழநி சாலை.

சிறிது நேரத்திலேயே ரெட்டியார் சத்திரம் என்று நினைக்கிறேன். இது ஒரு சிறிய கிராமம். இந்த ஊர்க்காரர்கள் யாராவது இருந்தால் உதைக்க வராதீர்கள். பயணத்தில் ஒரு நிமிடம் கண்மூடினால் இந்த ஊர் வந்து போனதே உங்களுக்கு அநேகமாக தெரியாது. ஊரைத் தாண்டின உடனே, இடப்பக்கத்தில் மறைவாய் கோபிநாத சுவாமி திருக்கோயில் நுழைவு வளைவு இருக்கும். இந்த வளைவில் நுழைந்து வயல்வெளி, களத்துமேட்டு எல்லாம் கடந்தால் சிறுது தூரத்தில் தெத்துப்பட்டி என்னும் குக்கிராமம். இராஜகாளியம்மன் கோயில் இங்கே மிகவும் பிரசித்தமானது. இராஜகாளியம்மன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இருப்பதாய்க் கூட கேள்வி. இந்தக் காளியின் ஸ்பெஷாலிடி வாகன யோகம். வந்து போவோருக்கு கண்டிப்பாய் அடிக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாகன விஷயம் என்னவோ எங்கள் விஷயத்தில் நடக்கத்தான் செய்தது. ஒருமுறை அல்ல, இரு முறைகள். என் பெரியப்பாவும் இதையே தான் சொன்னார். ஆனால், நம்பிக்கை வரவில்லை. பின்ன, நாங்கள் கேட்டது E320. 'ஏண்டா, உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல' என்று காளி நினைத்துவிட்டாள் போல. கேட்டத கொடுக்காட்டியும், புதுசு என்னவோ கொடுக்கத்தான் செய்தாள். இந்த முறை என்ன செய்யப்போகிறாளோ தெரியவில்லை. மத்தபடி மிகவும் அமைதியான கோயில், கூட்டமெல்லாம் அறவே கிடையாது. ஆடி மாதம் எல்லா காளி கோயில்களையும் போல் கும்பல் இருக்கும் என்று சொன்னார்கள்.

அங்கிருந்து திரும்ப இந்த குண்டுகுழி ரோட்டில் வரத்தேவையில்லை. மதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் சேர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒன்றும் ஆஹா ஓஹோவென்று இருக்காது என்றாலும், மேற்சொன்ன வயல்வெளி நடுவே வரத்தேவையில்லை. வயல்வெளி ரோட்டிலே இயற்கையை ரசித்தபடி பயணம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே, இவன் என்ன உளறுகிறான் என்று நினைப்போர்க்கு ஒரு எச்சரிக்கை. டப்பா ரோட்டில் வயலைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்வது ஒரு 10 நிமிடம்..மிஞ்சிப் போனால் அரைமணி சுகமாயிருக்கலாம். கிராமத்து மண்வாசனை வேண்டும் என்று மெனக்கெட்டு டப்பா ரோட்டில் திரும்பிவிட்ட பின் இது சரியில்லை என்று சொல்வதற்கு ஈகோ இடம் கொடுக்காது. கடுகடு சிடுசிடுவென்று சக பயணியரை முறைத்துக் கொண்டிருப்பதுதான் கடைசியில் நடக்கும். இது என் அனுபவத்தில் சொல்வது. Zen & the Art of Motorcycle Maintenance படித்த பலரைப்போலவே, பிர்ஸிக்கின் back-road புராணத்தில் மயங்கி சில மாதங்களுக்கு நானும் இந்த மாதிரி ஆர்வமாய் திரிந்து கொண்டிருந்தேன். அந்த ஆர்வத்தையெல்லாம் பஞ்சராக்கி விட்டது சில அனுபவங்கள். இந்தியாவில் இதெல்லாம் ஒத்துவராது என்பது என் எண்ணம். NH வேண்டாம் குறைந்தபட்சம் SH என்று கண்ணில் பட்டாலே, இந்த பாக்யராஜ் படங்களில் வருவது போல் கிராமத்திற்கு சென்று இறங்கலாம் என்பது போன்ற அசட்டு ஆசையையெல்லாம் மறந்து மெயின் ரோட்டில் சேர்ந்து விடுங்கள். கிராமங்களையே சொந்த ஊராக கொண்டவருக்கு இது பொருந்தாது. குண்டோ குழியோ, சுற்றாரைப் பார்க்க போகத்தான் வேண்டும். ஆனால், தேவையற்று இழுத்துக் கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

இன்னுமொரு விஷயம். ரோட்டில் வழி கேட்கும் போது அவர்கள் சொல்வதை கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே காதில் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே கூறுவது கிடையாது. நமக்கு உதவவேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பலரும் சொல்வர். வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் நம் நாட்டினருக்கு, குறிப்பாய் கிராமப்புற மக்களுக்கு இணையே கிடையாது. ஆனால், அவ்வாறு உதவுவதாய் நினைத்து சொல்வதில் பல சமயம் நமக்கு கசப்பான அனுபவமே கிடைக்கும். ஒரு முறை, இப்படித்தான் அருமையான NH-45-ல் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிறுத்தி திருக்கோவிலூருக்கு வழி கேட்டபோது ஒருவர் கொளுத்திவிட்டார். 'ஏன் சார், தேவையில்லாம் சுத்தறீங்க. இந்த குறுக்கு ரோட்டில் போனா ஒரு 30 கி.மீட்டர் கம்மி!". உடனே என் தலையில் விளக்கெறிந்தது! எதற்கு அநாவசியமாக சுத்தவேண்டும் என்று! எதற்கும் 'ரோடு எப்படீங்க இருக்கும்?' ன்னு கேட்டதற்கு 'சூப்பரா இருக்கும் சார். மெயின் ரொடு மாதிரித்தான்' என்று சொன்னார் அந்தப் புண்ணியவான். திருப்பு வண்டியை. விடு கிராமத்திற்குள் என்று திரும்பிய முட்டாள்தனத்தை நினைத்து இன்றும் சிரிப்பு வருகிறது. பல முறை இந்த மாதிரி நடந்திருக்கிறது.

சரி, அதை விடுங்கள். மதுரை ரோட்டின் வழியே ஒட்டன்சத்திரம் வந்தடைந்தோம். பல ஊர்களைப் போல் பஸ்-ஸ்டாண்டு தான் பிரதானம். அந்த நெரிசலைத் தாண்டினால், பழநி ரோடு தான். பழநி சீக்கிரமே வந்துடும். ரெடியா இருங்க.

(தொடரும்)

வாங்கு வாங்கென்று வாங்குகிறது நம் India

சில நாட்களுக்கு முன் பிபிசியின் தெற்க்காசிய பக்கங்களைப் புரட்டியதில் ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது. முன்னேறி வரும் நாடுகளில் உலகிலேயே அதிக அளவு ஆயுதங்களை வாங்கிக்குவிப்பது எந்த நாடு தெரியுமா? சீனா, சவூதி அரேபியா, இரான் என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்தால்.. ஒரு நிமிடம். ஆயுதங்களை அதிகமாய் வாங்கிக்குவிப்பது நம் இந்தியா தான். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதா?

1997-2004 எட்டு ஆண்டு காலத்தில் உலகம் முழுவதும் நடந்த ஆயுத ஒப்பந்தங்களில் 10% இந்தியாவுடையது. இந்த காலத்தில் நாம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் 69 ஆயிரம் கோடி (15.7 bln US$). 2001-2004-ல் சீனா முன்னணி வகித்தாலும், 2004-ல் நம். 1 இடத்தை நாம் மீண்டும் கைபற்றியிருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா வாங்குவதாய் கையெழுத்திட்ட ஆயுதங்களின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி (5.7 bln US$). இதற்காகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்டவற்றிற்காகவும், வரும் நிதியாண்டில் 18% அதிக நிதி ஒதுக்கியுள்ளார் சிதம்பரம். inflation-ஐ கணக்கில் கொண்டால் உண்மையில் 6-7% வளர்ச்சி என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

சரி, அப்படி என்னதான் வாங்குகிறோம்? சில சாம்பிள்கள்.

1. Admiral Gorshkov - Aircraft Carrier
கொடுப்பது: ரஷ்யா
விலை: இலவசம்!

என்னடா, இலவசம் என்று இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். 80-களின் ஆரம்பத்தில் முடிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் இந்தியாவிற்கு எங்கள் பரிசு என்று இனிப்பாய் சொன்னாலும், இதை நவீனப்படுத்த ஆகும் செலவு சுமார் 3000 கோடி என்று பில் கொடுக்கிறார்கள் ரஷ்யர்கள். மேலும், இதுதவிர இடம்பெற 18-20 ரஷ்ய MiG-29k ரக போர்விமானங்கள் வாங்க தனியாக சுமார் 4500 கோடி. இந்த கப்பல் வாங்குவது ஒரு பெரிய தவறென்று முன்னாள் கடற்படை அட்மிரல் ஒருவர் எழுதியுள்ளது இங்கே.

2. Mirage போர்விமானங்கள்
கொடுப்பது: பிரான்ஸ்
விலை: 126 விமானங்கள் ஒவ்வொன்றும் 132 கோடி என்ற விலையில் மொத்தம் 16 ஆயிரம் கோடி

3. Hawk Trainer Fighters
கொடுப்பது: இங்கிலாந்து
விலை: 48 கோடி மதிப்புடைய 66 விமானங்கள். மொத்தம் 3,100 கோடி

4. Howitzer Guns
கொடுப்பது: தெற்கு ஆப்பிரிக்கா, இஸ்ரேல், ஸ்வீடன்
விலை: 1200-1500 ஆயுதங்கள் வாங்குவது குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. கடைசியில் மொத்த பில் மதிப்பு 13,200 கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

5. Scorpene class Submarines
கொடுப்பது: பிரான்ஸ், ஸ்பெயின்
விலை: 1,300 கோடி மதிப்பில் ஆறு சப்மரீன்கள்: மொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 7,800 கோடி

இவைதவிர இஸ்ரேலிடமிருந்து Phalcon ரக Early Warning Systems விமானங்கள் வேறு போன்ற மற்றவை தனி.

இவற்றில் பாதி ஒப்பந்தங்கள் கடந்த பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டவை. அவற்றையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு மேல் சொந்தமாகவும் வாங்க அதிக அளவு நிதியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ளதாக செய்தித்தளம் கூறுகிறது.

துக்கடாவாக ஆயுதங்கள் வாங்குவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான ஒப்பீடும் பிபிசியில் செய்துள்ளார்கள். அது கீழே

Image courtesy: news.bbc.com


தகவலுக்கு நன்றி: BBC செய்தித்தளம்

சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம்

என் வழி... தனி வழி... இல்ல! - Q தான்

கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்தது இது. இரவு 1030 மணி இருக்கும். வீடு திரும்ப நேரமாகிவிட்டது. கையில் பணம் ரொம்ப குறைவா இருந்தது. சரி, citi தான் never sleeps ஆச்சேன்னு பக்கத்துல உள்ள சிட்டி ஏ.டி.எம் போனேன். இத்தனை மணிக்கும் நீண்....ட க்யூ. அடுத்த ஏடிம்முக்கு இன்னும் 5 நிமிடமாவது நடக்க வேண்டும். அங்கே எத்தனை பேர் இருப்பார்களோ, அதற்கு இந்த வரிசையில் நிற்பதே மேல். சரி க்யூவில் இடம் பிடிச்சாச்சு. எனக்கு முன்னர் ஒரு 7-8 பேர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரு வயதான மூதாட்டி நாலைந்து கார்டுகளை வைத்துகொண்டு போடுவதும் எடுப்பதுமாய் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்.

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம். பொதுப் போக்குவரத்துகளில், குறிப்பாய் மெட்ரோவில் செல்லும்போது கூட பொழுதுபோக்காய் சக பயணிகளை பார்த்துக் கொண்டிருப்பேன். stare என்பது மாதிரியல்ல. சும்மா வெறும் பார்வை தான். மிகவும் இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும். சிலர் இடமிருந்தாலும் நின்று கொண்டேயிருப்பர். வேறு சிலரோ, இடம் கிடைக்காதா என்று சுற்றும்முற்றும் லுக் விட்டுக்கொண்டேயிருப்பர். பலர் புத்தகங்களில் முகம் புதைத்தபடி (பொதுவாகவே அதிகமாக படிப்போர் இருக்கும் நாடு இது - 99.6% சராசரிஆண்-பெண் படிப்பறிவு), கதையோ பாடப்புத்தகமோ தன் கடன் படிப்பதே என்று பயணம் செய்வர். வேறு சிலர் எங்கேயாவது வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பர். சிலர் நடக்கும்மனிதன்
(அதாங்க..வாக்-மேன்) வைத்துக்கொண்டு தாளத்திற்கு தகுந்தாற்போல் தலையாட்டுவர். சில சமயம் ஆட்டத்தில் சாதுவாக கால்களும் சேரும். மிச்சவர் என்னைப் போன்றே இந்தமாதிரி சுற்றும்முற்றும் முகங்களை பார்த்துக்கொண்டே இருப்பர். கையில் பியர் இருந்தால், மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே இரு மடங்கு தெம்புடன் நடக்கும். கதை ரூட் மாறுவதால், மீண்டும் சிட்டி பாங்க் மூதாட்டி.

பாட்டி தெரியாமற்தான் திண்டாடுகிறாரோ என்று ஒரு இளைஞர் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் அதை மறுத்து விட்டு இப்படி இவர் விளையாடிக்கொண்டிருக்கையில் களைப்பு, இன்னும் உணவுக்கு வழியில்லை அதற்குமேல் இந்த தாமதம் எனக்கோ பிரஷர் எகிறுகிறது. சரி, மற்றவர் என்னதான் செய்கிறார்கள் பார்ப்போமே என்றால் என்னைத் தவிர யாரும் visibly tense ஆகத் தெரியவில்லை. அவரவரும் புத்தகம், வெறிப்பது,பேச்சு என்று ஜாலியாக இந்த தாமதத்தைப் பற்றி கவலையே படாமல் நின்று கொண்டிருந்தனர். பாட்டியின் சூழ்ச்சியால வரிசை நகருவதற்கான அறிகுறிகளே இல்லை. எய்தோன் எங்கோ இருக்க -ங்கற மாதிரி பாட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்றவர் மீது என் கோபம் திரும்பியது. என்னடா இது, இவங்களுக்கெல்லாம் வீடு வாசலுக்கு போகவேணாமா? சாப்பிட்டாங்களா? நாளைக்கு காலையில எழுந்து ஓடுவதற்கு வேலை இல்லியா? இப்படி எருமை மாடுகளைப் போல் சுரணை அற்று இருக்கிறார்களே என்று நொந்தபடியே நின்றபோதுதான் ஆஹா.. என்று ஒளிவிளக்கு எரிந்தது.

கூடவே, பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது...மொதல்ல நிற்பதற்கு காரணம் என்னன்னு யோசிச்சா, ரஷ்யர்களுக்குத்தான் வரிசையில் நிற்க பிடிக்குமே. ஒரு சின்ன சான்ஸ் கிடச்சாலும் போது... நாம ரசிகர் மன்றம் பார்ம் பண்றா மாதிரி, இவங்க குடுகுடுன்னு க்யூ பார்ம் பண்ணிடுவாங்க. நான் கிண்டலாக சொல்லவில்லை. நிஜமாகவே, எங்கு சென்றாலும் வரிசைக் கிரமப்படிதான் வேலை நடக்கும் (எல்லா ஊரைப் போலவே மிகப் பெரிய மனிதர்கள் எல்லாம் வரிசையிலேயே வராமல், போனிலேயே வேலை முடித்துவிடுவார்கள்). ஒரு கடையில் பிரஷ்ஷாக சிப்ஸ் போட்டுத்தரானா..வரிசை. ரயில் நிலையமா? வரிசை. போன் பில் கட்டபோறியா? வரிசை. மெட்ரோ ஸ்டேஷனில் வண்டி வந்தவுடன் மேடையில் இருப்போர், வண்டியின் கதவுகளின் அருகில் பவ்யமாய் ஒதுங்கி இறங்குவோர்க்கு வழி கொடுத்து நிற்கும் அழகே தனி. பேருந்துகளிலும் இப்படித்தான். அது கூட்டம் மொய்க்கும் அலுவலக நேரமாயிருந்தாலும் சரி, இரவு நேரமானாலும் சரி, உடனே வரிசை. ஒழுங்காய் நிற்க வேண்டும் என்று தானாகவே வருகிறது அவர்களுக்கு.

ஒருமுறை தினமலரில் என்று நினைக்கிறேன். ரஷ்யர்கள் வரிசையாய் நிற்கும் படம். அதனோடுகூட ரஷ்யர்கள் இந்த மாதிரி வரிசையில் நின்று பிரெட் வாங்கும் அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்கிற tone-இல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு உடனே போன் செய்து என் தூக்கத்தை நிசமாகவே கெடுத்தார் அம்மா.. 'என்னடா, இப்படியெல்லாம் போட்டுருக்கான். நீ என்னவோ சவுகரியமாகத்தான் இருக்கேன் னு சொல்றியேன்னு'. (ஆமாம்.. கஷ்டந்தான் படுகிறேன் என்று ஒரு ஆக்ட் கொடுத்திருந்தால், 'வரும் படி' அதிகமாகி இன்னும் ஜாலியாக இருந்திருக்கலாம்..ஹூம்ம்) அம்மாவிற்கு எப்படி புரியவைப்பது. (சே..கஷ்டமாவது ஒன்னாவது.. அதெல்லாம் இல்லைன்னு அப்போதைக்கு சமாளிச்சு அப்புறம் போட்டோ போட்டோவா நிசமாவே ஆயிரக்கணக்கில் எடுத்து அனுப்பிச்சப்பிறகு தான் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்கள்) எனக்கு கடுப்பாகி விட்டது. தேவையத்த ஒரு கவலை. ஒரு டென்ஷன். காரணம் - தினமலரின் முட்டாள்தனம். யாராவது இப்போ கேட்டார்களா? ரஷ்யாவைப் பத்தி செய்தியே போடலையேன்னு. இல்லியே.. சரி, படம் எடுத்ததுதான் எடுத்தீங்க. அப்படியே எதுக்கு நிக்கிறாங்கன்னு ஒரு வார்த்தை நிக்கறவங்களையே கேட்டிருக்கலாமில்ல. வெயிட். கேட்டிருந்தீங்கன்னா. அவங்க பிரட்டுக்கு நிற்கிறோம்னு தான் கண்டிப்பா சொல்லிருப்பாங்க. அந்த மாதிரி கேட்டு தான் தினமலரின் ரஷ்ய செய்தியாளரும் (இப்படி வேற ஒருத்தர் இருக்காரா?) ரஷ்யாவில் பிரெட் பஞ்சம் அப்டின்னு தத்துப்பித்துன்னு நியூஸ் போட்டிருக்கிறார். பிரெட்டிற்கு நிற்பது தான் உண்மைனாலும், அவங்க ஏன் நிக்கிறாங்ககற காரணத்தை நான் சொல்றேன். எல்லோருக்கும்
பொருள் கிடைக்கணும்னா வரிசையாத்தான் நிக்கனும். ஒழுங்கு இல்லேன்னா பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சும் என்று புரிந்து இதுனாலதான் வரிசையா நிக்கிறாங்க. உடனே நம்ம ஊர் ரஜினிபட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ வரிசையை நினைக்காதீங்க. இது சற்று வேறமாதிரி. நம்மூர்லே பார்க்கறது கொஞ்சம் அபூர்வம் தான். அமைதியா, தள்ளுமுள்ளுங்கறதே இல்லாம ஒழுங்குடன் நிக்கிறது.

நம்ம ஊர்லேயும் இந்த வரிசையில் நின்று வாங்குகிற கான்செப்டு இருக்குது. ஆனா, அது பின்பற்றப்படும் இடங்கள் குறைவு. பின்பற்றப்படும் இடங்களிலே கூட பலசமயம் தாத்தாக்களின் புராணமும், 'அண்ணனின்' உறவும் மிக சத்தமாக விவாதிக்கப்படும். எங்க ஊர் ரயில்வே நிலையத்திலேயே பார்த்திருக்கிறேன். வரிசை இருக்கும். ஆனால் அதில் ஒழுங்கு என்பது இருக்காது. கவுண்டர் ஜன்னலில் ஒரே சமயத்தில் எப்படியும் நாலு பேர் கையில் காகிதத்துடன் நிப்பார்கள். ரிசர்வேஷமன் பார்ம் வாங்கணும் சாமர்த்தியமா நம்மளையெல்லாம் பைபாஸ் பண்ணி ஜன்னல் அருகிலேயே வாங்கி நின்று பூர்த்திசெய்துவிட்டு, சந்திலே சிந்து பாடும் புத்திசாலிகளும் இருப்பார்கள். ஆனால் இதிலும் சில மழை வரவழைக்கக்கூடிய அளவு பெரியவர்கள் பொறுமையாய் காத்துக்கொண்டிருப்பார்கள். பஸ்பயணம், ரயில் பயணம் எல்லாம் விடுங்கள். அதைப் பத்தியெல்லாம் நொந்து பேசுவது வீணானது. பிளேனில் பறக்கும் பெரிய மனிதர்கள் கூட இப்படித்தான். தரையிறங்கி விட்ட உடனே அடுத்த செகண்ட், ஹேண்ட் பேகேஜ் எடுத்துகிட்டு வாசலுக்கு ஒடுவதற்கு ஒரு பெரிய போட்டியே இருக்கும். crew எல்லாம் வந்து மைக்கிலேயும், நேர்லேயும் கெஞ்சுவாங்க... மாட்டோமே. நம்ம காரியம் நமக்கு.

எந்த அலுவலகம் ஆகட்டுமே... உதாரணத்திற்கு வங்கிக்கு போனால் நம்மில் பலர் என்ன செய்வோம். வரிசையிலா நிற்கிறோம்? தெரிந்தவர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அவர் கையில் கொடுத்தால், பல கை மாறி வேலை முடிந்து நமக்கே திரும்ப வந்துவிடும். வரிசைப்பக்கம் போகவே வேண்டாம். அதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள் நிற்பதற்கு. இது கொஞ்சம் கீழ் மட்டம். ஓரளவு பெரிய பார்ட்டியாக இருந்தால், நேராக கிளை மேலாளர் அறைக்கு சென்று அமர்ந்துகொண்டு அங்கேயிருந்து வேலை வாங்குவார்கள். இந்த மாதிரி எந்த வகையிலாவது பை-பாஸ் தானே நம்மில் பலரும் செய்கிறோம்?

இங்கேயோ வரிசையென்று வந்துவிட்டால் எல்லா மக்களும் சமம், எவர் முன்னதாக வந்தாரோ அவருக்கே முன்னுரிமை. அவரின் status என்ன, அவர் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர், இவர் எந்த காட்டுக்கு ராஜா என்பதெல்லாம் அறவே செல்லுபடியாகாது. உன் turn என்றால் அதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. இது இனிக்கிறது, நமக்கு வேண்டும். இது வேண்டுமென்றால், இதைப்போலவே நீ அடுத்தவனின் வரிசையையும் தட்டிப்பறிக்க முடியாது என்பது கசந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது சோஷலிஸத்தின் hang-over ஆக இருக்கலாம், ஆனால் நல்ல விஷயம். இந்த எல்லோரும் சமம் என்பதற்கு இங்கே இருக்கும் இன்னொரு விஷயம் சொல்கிறேன். மேல்கூறிய வங்கியையே வைத்துக்கொள்வோமே. நம்மூரிலென்றால் கிளார்க், மானேஜரை சார் என்பார்; குப்பை கூட்டுபவரோ அய்யா என்பார். இங்கே. ஹா ஹா. இராமசாமி தான். மேலாளரை அவர் பெயர் சொல்லியே அழைக்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் பேராசிரியர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பர். சார், மோரெல்லாம் கிடையாது. ஒரே இடத்தில் வேலைசெய்தாலும், கீழ்நிலைப் பணியாளர் ஆனாலும் அவருக்கும் தன் சுயமரியாதை என்பது இருக்கிறது, கிளை மேலாளருக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என்பது எனது புரிதல். இதுவும் நல்ல விஷயம் தானே. இதைத்தானே தேவுடா தேவுடா பாட்டில் தலைவரும் பாடுகிறார்.

வரிசையில நிக்கிறதுன்னு சொன்னாலே அது ஏழ்மையின் காரணமாய்த்தான் என்று தப்பான முடிச்சு போடுவதில் தான் பிரச்சனையே. படித்தவரும் பணம் படைத்தவரும் பண்போடு வரிசையில் நிற்கிறார்கள் என்று ஏனோ நமக்கெல்லாம் உறைக்க மறுக்கிறதல்லவா? நமக்கு தலைக்குமேல் ஆயிரம் வேலை இருக்கிறது, என் தாத்தா அவ்வளவு பெரிய ஆள், நாளைக்கு காலையிலே ஆபிஸ் போகணும்.. நம்ப போய் இந்த பிசாத்து க்யூவிவில நிக்கறதா?.. இப்படி வரிசையை விடுவதற்கு ஆயிரம் காரணங்கள். ஏன் இதெல்லாம் நம் ஒருவருக்கு மட்டுந்தானா இருக்கிறது? வரிசையில் நிற்கும் மற்றவர்களுக்கும் இதே மாதிரி தானே பல பிரச்சனைகள் இருக்கவேண்டும் என்று சிந்திக்க நமக்கு நேரமில்லை. ரஷ்யர்கள் எல்லாம் அலுவலகம் போகாதவர்களா? அவர்கள் நிற்கிறார்களே? ஏன் நம்மால் முடியவில்லை? இதற்கு பதில் கூற எனக்கு தெரியவில்லை.

இந்த தினமலர் கட்டுரையை மேற்கோள் காட்டி என்னை துக்கம் விசாரித்தவர் பலர். நாம் மறுக்கப்போனால் ஆயிரம் விஷயங்கள் - சிலது சொந்தக்கற்பனை; பலது இந்த மாதிரி வந்த கற்பனை. அவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் (தனிச்செய்தி: ரஷ்யப் பெண்கள் பற்றி என்னிடம் கேட்காத ஆண்கள் மிகமிக குறைவு.. ஷரபோவா, மிஸ்கினா பத்தி மட்டுமில்லை :) ). ஆமாம், அப்படித்தான் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு விலகிவிடுதல் நலம். சரி, இப்போ புரியுதா? ஏன் வரிசையில நிக்கிறாங்க ரஷ்யர்கள்னு?

சரி, ஏ.டி.எம் வில்லி பாட்டி என்னானாங்கன்னு கேட்கறீங்களா? அவங்க பாட்டுக்கு பொறுமையா பணம் எடுத்து முடிச்சிட்டு போகற வரைக்கும் பதில் பேசாம நின்னு பின்னாடி. வரிசையில் கடைசிவரை நின்னு பணம் எடுத்துகிட்டு வந்தேன். இந்த மாதிரி நின்னதுலே ஒரு பெரிய சமுதாய சீர்திருத்த சமத்துவ தத்துவமே*(1) இருக்கு இல்ல??


*1. பின்ன இந்த மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாட்டி, சும்மா ஏடிஎம் போய் பணமெடுத்தானாம்... டிலே ஆச்சாம்.. இதுக்கு வழவழன்னு முழ நீளத்துக்கு ஒரு பதிவாம்.. படிச்சு பதில் சொல்ல நம்மள மாதிரி வெட்டி வேறையான்னு உங்களை நீங்களே குறைச்சு எடைபோட்டுக் கொள்ளக்கூடாதில்ல. அதுக்குத்தான் :)

டாக்டர்..... நீங்க நல்லவரா? கெட்டவரா? - repost - 2

தாணு அவர்களின் பதிவை பார்த்தபின் நான் பலநாட்களுக்கு முன்னர் எழுதிய இரு பதிவுகளை மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியது. அந்த வரிசையில் இது இரண்டாவது பதிவு.
--------------

கோழியால் முட்டை வந்ததா என்பது மாதிரியான கேள்வி - இன்று மருத்துவர்களை services விற்கும் vendor-களாக மக்கள் பார்ப்பதனால் மருத்துவர்களும் business-ஆக தம் தொழிலை கருதுகிறார்களா இல்லை இதனால் அது வந்ததா?


இப்போதும் கிராமங்களிலிருந்து வரும் மக்கள், குடும்ப மருத்துவரை, தம் குடும்பத்தினராகவே கருதுவதை பார்க்கிறோம். ஆனால் அங்கேயும்சுகாதார மையங்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்பது பல இடங்களில் சந்தேகமென்று நினைக்கிறேன். இதைப்பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத்தால் தெரிந்தோர் கூறினால் நன்று. ஆனால் நமக்கு பழக்கப்பட்ட நகர்ப்புறங்களில், நான் பார்த்தவரையில். ஒரு டிவி வாங்கினோம். அதற்காக கடைக்காரனை என்ன கட்டிக்கொள்கிறோமா? அதே போல ஒரு மருத்துவ நிபுணர் நம்மை குணப்படுத்துகிறார் என்றால் சும்மா ஒன்னும் செய்யலியே. பணம் கொடுத்துத்தானே அவரோட service-ஐ வாங்குகிறோம் என்ற மனப்பான்மை பெருகிவருகிறது.


நமக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால். ஏன், அச்சமூகத்தைச் சேர்ந்த பத்துப்பேரைக் கூட நமக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை, wrong context-இல் எடுத்துக்கொண்டு சர்வசாதாரணமாக generalize பண்ணுவது நம் பழக்கமாகிவிட்டது. அரசியல் என்றாலே சாக்கடை. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள். இதெல்லாம் இந்த அறிவற்ற generalization வரும் inference-கள் என்று சொல்லலாம். இதுபோல் தனியார் மருத்துவர்கள் காசு புடுங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் பில்-ஏற்றி ஹார்ட் அட்டாக் கொடுக்கும் என்பதும். இவை நகைச்சுவைக்காக சொல்வதெனில் பரவாயில்லை. அல்லது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நடப்பதை எடுத்துச் சொல்லலாம். ஆனால் generalize செய்வதால் பிரச்சனை.


ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் என்று வைத்துகொள்வோம். ரத்த அழுத்தத்திற்கு 2 ரூபாய்க்கும் மாத்திரை எழுதலாம். 100 ரூபாய்க்கும் எழுதலாம். இதில் மருத்துவருக்கும் dilemma இருக்கும். உங்களின் நிலையைப் (status) பொறுத்தே மருந்து கொடுக்க வேண்டும். அதேசமயம் அது நோய்க்கான தீர்வாகவும் இருக்க வேண்டும். 100Rs க்கு எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன 2 ரூபாய், 100 ரூபாய் மாத்திரைகள் இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துபவைதானே. இவர் ஏன் 100 Rs க்கு எழுதுகிறார் என்ற கேள்வி நியாயமாக எழக்கூடிய ஓன்று. அதற்கு பதில் - ரிசல்ட் ஒன்றானாலும், உங்களின் உடலிற்கேற்ப, conditions-களுக்கேற்ப எது தேவையோ அதைத்தான் எழுதமுடியும். ஆனால், யோசிக்காமல் மக்கள் உடனே கூறுவது, "doctor-க்கு மருந்து கடைலேர்ந்து கமிஷன் போது போல"-னு சர்வ சாதாரணமாக இகழ்வர். நீங்கள் போகும் மருத்துவர் தெரியாத்தனமாக சைடு பிஸினஸாக
மருந்துகடை வைத்திருந்தாரென்றால் இன்னும் மோசம். "கடை ஆரம்மிச்சாலும் ஆரம்மிச்சார், இப்டி எழுதி தள்ளிகினே போறாரே" என்று டயலாக் வரும். இதில் நல்லது செஞ்சாலும் கெட்ட பேர்தான்.

அதுக்காக மருத்துவர்கள் எல்லோரும் தேவையானவற்றையே எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்காதீர்கள். நான் யாருக்கு சப்போர்ட்-னு உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் பரவாயில்ல. சொல்ல வந்தத சொல்லிடறேன். சும்மா கமிஷன் வாங்கிண்டு கன்னாபின்னானு எழுதும் டாக்டர்களும் பலர் உள்ளார்கள். உங்களுக்கு எழுதப்படும் ஒவ்வொரு மருந்தும் மாத்திரையும் என்னது, எதற்க்காக கொடுக்கப்படுகின்றது, இது இல்லையென்றால் வேறென்ன சாப்பிடலாம் என்பவற்றை எல்லாம் விவரமாக மருத்துவரைக் கேளுங்கள். படித்தவர்கள் கூட சிவப்பு கலர் capsule, மஞ்ச கலர் மாத்திரை என்ற நிலையிலேயே நம்மூரில் இருக்கிறார்கள். இப்பல்லாம் மருத்துவமனைகளிலேயே நோயாளிக்கென ஒரு folder போட்டு விடுகிறார்கள். அதிலேயே மருந்துசீட்டின் கூடவே இந்த விவரங்கள் பின் பண்ணி வைத்துகொள்ளுங்கள். தனியாக ஒரு பேப்பரில் எழுதி உங்க ப்ளட் க்ருப் கூடவே இந்த விவரங்களையும் எழுதி பர்ஸ்-ல வெச்சுக்கறதும் நல்லது. இத்துடன் இன்று ஒரு தகவல் முடிவடைகிறது.


இப்பல்லாம் ரத்த பரிசோதனைக்கூடம் , ஸ்கேன் சென்டர் ஏன் மருத்துவமனைகள் கூட ஒரு நோயாளிக்கு இவ்வளவு என்று
கொட்டிக்கொடுப்பதும் நடக்கிறது. இதைத்தவிர, மருந்து கம்பெனிகள் கொடுப்பது தனி. சும்மா ஏனோதானோனு எழுதினிங்கனால்லாம் வெறும் நோட்பாட், பென் ஸ்டாண்ட் காலெண்டர் தான். ஆனா, கிட்டத்தட்ட அவங்க சொன்ன டார்கெட் தொட்டுட்டீங்கன்னா ஏசி, பிரிட்ஜில் ஆரம்பிக்கும். எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனி எங்க ஊர்லேயே Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு. உனக்கு எப்படிடா தெரியும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் தெரிஞ்சுதானே மருத்துவம் படிக்கணும்னே முடிவு பண்ணேன்! :)

அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? -repost - 1

தாணு அவர்களின் பதிவை பார்த்தபின் நான் பலநாட்களுக்கு முன்னர் எழுதிய இரு பதிவுகளை மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியது.
-------
இன்றைய தேதியில் அரசியலைத் தொழிலாகக் கொண்டோரைத் தவிர மிகவும் சாடப்படும் வர்க்கம் மருத்துவர்கள் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு மருத்துவரையும் விட்டு வைப்பதில்லை. முதலிலேயே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எல்லாத்துறைகளைப் போல இத்துறையிலும் பெருச்சாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி பேசுவதில் சிறிதும் பிரயோசனமில்லை.

ஆனால் அத்தகைய சிறுபான்மையினரால் ஒட்டுமொத்த மருத்துவ வர்க்கமே அநியாயமாக கெட்ட பெயருக்குள்ளாகின்றது.முக்கியமாக அரசு மருத்துவர்களைப் பற்றி. முன்பே கூறியது போல், ஊழல்க்காரர்களைப் பற்றி பேசவில்லை. அரசு மருத்துவரென்றாலே அவர் அத்தகையவர் என்ற கருத்து நிலவுகின்றது. இதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். மிகச்சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் பார்வையாளனாய் (observer) இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மருத்துவத்துறையை சார்ந்தவனாயினும்,அயல்நாட்டில் படித்ததால் அங்கே சேரும்முன்னர் எனக்கும்கூட கொஞ்ச கெட்ட அபிப்பிராயம் இருந்தது..அதைத்தவிர இந்தியன், ரமணா பார்த்தது கூட காரணமாக இருக்கலாம்!

முதலில் இந்த எ.மு.சி பிரிவின் அமைப்பை பற்றி கூறிவிடுகிறேன். 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர், இரு மருத்துவர்கள், நான்கு பட்டதாரி மாணவர்கள். ஒரு குழு அறுவைச் சிகிச்சையும், ஒரு குழு வெளிநோயாளிகளையும் கவனித்துக் கொள்ளும். இதில் மூன்றாவது குழு மற்ற இரு குழுக்கள் பணி முடிந்தபின்னர், 24 மணி நேர அவசர சிகிச்சையை கவனித்துக்கொள்ளும். இது சுழற்சி முறையில் நடைபெற்று வரும்.

வெளிநோயாளிகள் பிரிவைப் பற்றி இப்போது. காலை 8-ல் இருந்து 8 30க்குள் இரு மருத்துவர்களும் வந்திடுவர். தலைமை மருத்துவர்களுக்கு அநேகமாக அலுவலக காரியங்களுக்கே நேரம் சரியாகப்போய்விடும். இந்த போர்ட், அந்த போர்ட் என்று சொல்லி அவர் வருவதற்கே 11 ஆகிவிடும். காலை 8 மணிக்கு முன்னர் நானே ஒரு நாளும் போனது கிடையாது. ஆனால் அப்போது இருக்கும் கூட்டம் சொல்லிமாளாது. ஒரு நாளைக்கு 200-300 என்பது சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது. இதில் என்ன பெரிய விஷயம், தனியார் பொது மருத்துவர்கள் பார்ப்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பொது மருத்துவமல்ல இது. ஒரு நாளைக்கு 150 வெளிநோயாளிகளைப் பார்க்கும் நிபுணர்களை அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அதிகபட்சம் 50. அதுவே மிக அதிகம். இதில் குழுவிற்கு வரும் கூட்டத்தில் அட்மிட் செய்யவேண்டியோர் குறைந்தபட்சம் 20 என்று வைத்துக்கொள்வோம். இந்நோயாளிகள் டிஸ்சார்ஜ்- ஆகும் வரை இக்குழுவே கவனித்துக் கொள்ளும்.

இப்போது அறுவைச் சிகிச்சை பற்றி. நான் பார்த்த வரையில் காலை 745-க்குள் பட்டதாரி மாணவர்கள் வந்து நோயாளிகளை தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவர். 830-9பதுக்குள் மற்ற இரு மருத்துவர்கள் அவர்களின் முந்தைய நாளின் அட்டவணையின்படி 24-மணி நேரச் சிகிச்சைப் பிரிவிலிருந்தோ வீட்டிலிருந்தோ வந்துவிடுவர். வாரத்தில் பாதி நாட்கள் அங்கு தான் காலைச் சிற்றுண்டி அவர்களுக்கு. தலைமை மருத்துவர்களும் வந்திடுவர். ஓரு நாளில் surgery-யின் தன்மையை பொறுத்து 3-4 வரை செய்ய முடியும். அதுவும் எ.மு.சி அறுவை சிகிச்சைகள் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது அதிக physical exertion உண்டாக்கக் கூடியவை. (பெரும்பாலும் சுத்தியலும் கையுமாய் அலைவதால் தான் எ.மு. மருத்துவர்களை 'carpenters' என்று மற்ற மருத்துவர்கள் கிண்டலடிப்பர்.) இந்நிலையில் ஒருநாளில் அதிகபட்சமாக 7 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யமுடியும்.

இப்போது முந்தைய பத்தியைப் பார்த்தீர்களானால் அதில் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் அட்மிட் செய்யப்படுகின்றனர். ஆனால் அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்யமுடிவதோ 7 பேருக்கு மட்டுந்தான். மிச்சம் 14 முடிக்கவே இன்னும் இரு அறுவைச் சிகிச்சை நாட்கள்
தேவைப்படும். ஆனால் அவ்விரு நாட்களுக்குள் அட்மிட் ஆகியும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியாமல் மேலும் தள்ளிப்போடப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40! உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தாலேயொழிய seniority முறையில் தான் நடக்கும். இது ஒரு குழுவிற்கு மட்டும். மற்ற இரு குழுக்களுக்கும் இதே நிலைதான்.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியவில்லையெனின் நோயாளியின் நிரந்தர disability-களும் இன்னபிற complications-um வர வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படிப்பட்ட நிலையில், சிகிச்சையால் முழுகுணமாகாமல் போகலாம். இப்படி ஆவதில் மருத்துவர்களைக் குறை கூற முடியுமா என்று சிந்தித்து பாருங்கள்.

நான் இதுவரை சொன்னது எல்லாம், எவ்வித தங்குதடையின்றி இந்த சிகிச்சை மையம் இயந்திரம் போல் செயல்பட்டால். எ.மு. சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் அடிதடி, சாலைவிபத்துக்கள் போன்ற MLC(medico-legal cases) வழக்குகள் போன்றவற்றிற்கு சாட்சி சொல்ல போகவேண்டும். undergraduate மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் மற்றும் லெக்சர்கள் எடுக்கவேண்டும். அதைத்தவிர அவர்கள் குடும்ப சூழ்நிலைகள். அடுத்தது bureaucracy. சில நோயாளிகளுக்கு அவ்வளவு அவசரம் இல்லையாயினும் அரசியல் பின்னணியோடு வருவோர் ஏராளம். அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் என்று dean தன் கைப்பட எழுதிய கடிதங்களை நான் அங்கு இருந்த குறைந்தகாலத்திலேயே ஏராளமாக பார்த்திருக்கிறேன்.

இவைத்தவிர அறுவைச்சிகிச்சைக்கான உபகரணங்கள் பழைமையானதாகவும், பல நேரம் வேலையே செய்யாதாகவும் இருக்கும். நம்பினால் நம்புங்கள். மின்சாரம் இல்லாமல் unipolar hemiarthroplasty செய்யப்பட்டு பார்த்திருக்கிறேன். இவ்வகை சிகிச்சை இப்போது மேல்நாடுகளில் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் bipolar வந்துவிட்டது. ஆனால் அதை செய்வதற்கான உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. அதே போல் ஒருமுறை open செய்த பின்னர் மின்சாரம் கட் ஆனதால் bleeders-ஐ கட்டுப்படுத்த மருத்துவர்கள் பட்டபாடு பார்த்தால் தான் தெரியும். நான் டார்ச் லைட் பிடிக்க, மற்ற மருத்துவர்கள் லிகேட் பண்ணுவதற்குள் திண்டாட்டமாகிவிட்டது. பாதி நாட்கள் குளிர்சாதன வசதி இருக்காது. கையுறைகளை autoclave முறையில் recycle செய்வதையும் இங்குதான் பார்த்தேன். எ.மு அறுவை சிகிச்சை தியேட்டர்களில் check X-Ray எடுக்க வசதி கிடையாது. இதெல்லாம் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரிவதில்லை.

அதே போல் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துசீட்டுகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள். இந்த துறையை பொறுத்தவரை இருப்பது 6 மருந்துகள் தான். அதில் ஒரு பாரசிட்டமால், டைக்லோபினாக், பி காம்ப்ளெக்ஸ், அமாக்ஸிசிலின் இன்னும் எதொ ரெண்டு இருக்கும். ஞாபகமில்லை. எந்த condition-க்கும் இதுதான் available மாத்திரைகள். புதிய தலைமுறை மருந்துகள் எவ்வளவோ வந்தபின்னும், இந்த மருந்துகள் பயனில்லை என்று கூறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட conditions- களுக்குத்தான் பயன்படுத்த முடியும். மருந்துகளை நிர்ணயிப்பது இந்த மருத்துவர்கள் அல்ல. அதற்கென்று ஒரு மாநில குழு இருக்கிறது. அது என்ன செய்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை.

நல்ல மருத்துவர்கள் பலர் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. கைகட்டி நின்று கொண்டு, இருக்கின்றவற்றை வைத்துக்கொண்டு தங்களால் இயன்றவரை சிறப்பாக செய்யமுயன்றும், பலனின்றி அந்நோயாளிகளிடமிருந்தே தாங்கள் செய்யாத தவறுகளுக்காக வசவும் வாங்கிக்கொண்டு இருந்து வருகின்றனர். இது தமிழ்நாடு முழுக்கவும் முக்கால்வாசி அரசு மருத்துவர்களின் நிலை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட கொடுமை நவீன உபகரணங்கள் கிடங்கில் கிடந்தாலும், திறப்பு விழா நடத்த 5-வது கூட பாஸ் பண்ணாத ஒரு வட்டத்திற்கோ மாவட்டத்திற்கோ காத்துகிடக்க வேண்டிய அவலநிலையே நம்நாட்டில் இருக்கிறது. யாரை குற்றஞ்சொல்ல?

--------------
இதற்கு அச்சமயத்தில் வந்த பின்னூட்டங்கள்
BR said...
Dear Ramanathan

An excellent vivid description of the chores of a standard government hospital. I have met some extraordinary committed and talented clinicians who have done their level best given the resources. Hope you have more experiences to share

1:32 AM, March 30, 2005


Moorthi said...
அரசு மருத்துவர்களின் நிலையையும் யோசிக்க வைத்த ராமநாதன் அண்ணா... நீர் வாழ்க! இந்தமாதிரி தொல்லையே வேனாம்னுதான் டாக்டருங்க... பார்ட்டிங்கள அப்படியே தன் கிளினிக்குக்கு நவுத்திட்டு போறாங்களா... சரி சரி புரியுது.. அங்க கொண்டு போயி சுகப் பிரசவமானாலும் எடு கத்தியன்னு சொல்லி வயித்த வெட்டி... அடப்பாவிங்களா... கெடைக்கிற 10ஓ..15 ஆயிரத்துக்கோ பொம்பளப் புள்ளைங்க வயித்த வெட்டி.. நெனைக்கவே நெஞ்சு அதிருது! அவங்க வீட்டு பெண்கள்னா வெட்டுவானுங்களா? எத்தனை மருத்துவனுக்கு தமிழ் உணர்வு இருக்குது? எத்தனை பேர் குழுமங்களில் எழுதறாங்க? எத்தனைபேர் வலைப்பூ வச்சிருக்காங்க..? தமிழுணர்வு கொஞ்சமாச்சும் இருக்கா அவங்க கிட்ட? எழுதுற இங்கிலிபீசே நம்மால படிக்க முடியலை!

5:52 AM, March 30, 2005


Ramanathan said...
இரவிக்குமார், மூர்த்தி
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
இதில் மூர்த்தி கிண்டலடிக்கிறாரா இல்லை serious-a சொல்றாரானு தெரியல!

இருந்தாலும் ப்ளாக் பண்ணி கழுத்தறுப்பதே என் தலையாய கடன் என்பதால் பதில் கூறிவிடுகிறேன். நீங்கள் கூறுவதுபோல் சும்மாவே வெட்டற மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மறுக்கவில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்தையும் குற்றம் சொல்வது சரியானதன்று. இல்லையா? அரசு மருத்துவர்கள் தனியாருக்கு நோயாளிகளை தள்ளிக்கொண்டு போகின்றவர் அல்லர். நம் வீட்டின் முன் குழி அவர்களாகவே வெட்டிவிட்டு, பின்னர் அதை மூட நகராட்சிப்பணியாளர்கள் பணம் கேட்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். இதில் மருத்துவப்படிப்பு சேர்வோரும் ஒன்றும் வானிலிருந்து குதித்தவரல்லர். அதிலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சேரவேண்டிய நிலை வேறு. அதற்காக அவர்கள் செய்வதை நான் நியாயப்படுத்தவரவில்லை. இத்தகையோர் எல்லாத்துறைகளையும் போலவே இங்கும் இருக்கின்றனர்.

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? இப்போது caesarian section வேணும்னு கேட்கிற பெண்மணிகள் எவ்வளவு என்று? சுகப்பிரசவமா? வேண்டாம். வலி தாங்க முடியாது. நல்ல நேரத்தில், ஜாதகப்படி எடுக்கவேண்டும் என்று ஏகப்பட்ட condition-கள் வரும். நான் சொல்வது என்னவென்றால், மருத்துவர்களின் கண்ணோட்டத்திலேயும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இன்னும் இருக்கிறது. அதை தனிப்பதிவாகவே சில தினங்களில் செய்கிறேன்.

மருத்துவர்கள் தம் வேலை நேரம் முழுதும் கணினிகளின் அருகினில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லையென்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னைப் போன்ற வேலையற்றோர்க்கு இது பொருந்தாது!

9:42 PM, March 30, 2005


Moorthi said...
எனது கூற்று கிண்டல் அல்ல. மன வேதனை மட்டுமே. மற்றபடி தாங்கள் சொல்வதுபோல நல் மாணிக்கங்களும் மருத்துவத் தொழிலில் உண்டு. அடுத்த ஆக்கம் விரிவாய் இடுங்கள் ராமநாதன் அண்ணா.

3:23 PM, March 31, 2005


அல்வாசிட்டி.சம்மி said...
உண்மையான கருத்துக்கள். சில நேர்மையான மருத்துவர்கள் தான் இத்தகைய சிக்கலில் மாட்டுகிறார்கள். மற்றவர்கள் அரசியல் மற்றும் பணபலத்தால் இக்குற்றச்சாட்டுகளில் மாட்டுவதில்லை.

எனது மனைவி பல் மருத்துவராகையால், இறுதியாண்டில் (அரசு மருத்துவமனையில்) அவர்கள் பட்ட கஷ்டங்களை கூறுவார், அது நீங்கள் விளக்கிய கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது.

அரசு மருத்துவமனைக்கான பண ஒதுக்கீட்டில் செலவு விகிதம் பார்க்கவும்.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளப்பணம் 60%
மருந்து வாங்க - 20%
பராமரிப்பு செலவு - 20%

இதில் மருந்து வாங்கியதில் 15% அமுக்கப்படுகிறது, 5% மட்டுமே மக்களை சென்றடைகிறது.

இந்திய மருத்துவமனைகளின் அவலம் என்று மாறும்?

Sarkar - திரைப்படம் என் பார்வையில்

பொதுவாக நிறைய இந்திப்படங்கள பார்க்கும் வழக்கமில்லை. பெரும்பாலான இந்திப்படங்களில் show இருக்குமே தவிர substance இருக்காது என்பது என் கருத்து. உதாரணம், கரண் ஜோஹர் படங்கள். பெரும்பாலான தமிழ் படங்களும் ஒன்றும் பெரிய தரம் வாய்ந்தவை இல்லையென்றாலும், நம் தாய் மொழியில் பார்க்கும் போது அத்தகைய அபத்தங்களை பொறுத்து கொள்வது சுலபம் என்பது என் கருத்து. நேற்று இரவு ராம் கோபால் வர்மா இயக்கம், அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்கள், "தி காட்பாதர்" திரைப்படத்தின் இந்திய ஆக்கம், மிகப்பெரிய ஹிட் என்றெல்லாம் பெரிய ரெகமண்டேஷனுடன் நண்பர் கொண்டு வரவே, சர்க்கார் பார்க்க உட்கார்ந்தாகிவிட்டது.

படத்தின் டைட்டிலிலேயே இந்தப் படம் பிரான்ஸிஸ் போர்ட் காப்போலாவின் பாதிப்பில் உருவானதென்றும் இப்படம் அவருக்கு tribute என்றும் போட்டுவிடுகிறார்கள். கதை கிட்டத்தட்ட மரியோ பூசோவின் ஒரிஜினலை தழுவியிருந்தாலும், இந்தியாவுக்கு தகுந்த மாதிரி சில இடங்களில் மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். டான் கார்லியோனேவின் கதாப்பாத்திரத்தையும் நம்மூர் பால் தாக்கரேவையும் கலந்து சர்கார் ஆக்கியிருக்கிறார்கள். பலருக்கும் தெரிந்த கதை ஆதலால், இந்தப் படத்தை பற்றி என் கருத்துகளை மட்டுமே எழுதலாம் என்று நினைக்கிறேன்.

பல இடங்களில் அசலின் நேரடி பாதிப்பு தெரிகிறது. உதாரணமாக ஆரமப காட்சி: ஒரிஜினலின் போனசெரா கதாப்பாத்திரத்தைப் போலவே கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டு சர்கார் முன் நிற்கும் தந்தை. அவருடன் கூடவே நாமும் அந்தப் பெரிய காம்பவுண்டிற்குள் நுழைந்து துப்பாக்கிகள் ஏந்திய குண்டர்களைத் தாண்டி சர்க்காரை அடைகிறோம்.

என்னதான் ஒப்பிட வேண்டாம் என்று நினைத்தாலும், மார்லன் பிராண்டோவின் டான் கார்லியோனேவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வார்த்தைகள் அதிகம் பேசாமல், பேசும் சில வார்த்தைகளையும் அளந்து பேசும் கார்லியோனேவைப் போலவே சர்க்காரையும் சித்தரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில், டான் கார்லியோனே சொன்னதில் நமக்கு புரிந்தது பாதி, நமக்கு புரியாமல் அவர் சொன்னதில் அர்த்தங்கள் எத்தனையோ என்று பதைபதைக்க வைக்கும் eerie presence பிராண்டோவிற்கு இருந்தது. அதற்கேற்றார் போல் அவரின் ஓவ்வொரு அசைவிற்கும் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டவராக ராபர்ட் டுவால் மற்றும் ஏனையோர். அமிதாப்பிற்கு இது போதவில்லை என்பது என் கருத்து. ரொம்ப சாதாரணமான ஒரு சோர்வான பெரியவராகத்தான் தென்படுகிறார். கார்லியோனே என்னும் அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாத ஒருவருக்கு மற்றவர் தரும் மரியாதை வியப்பளிக்கும். ஆனால் இதில் அமிதாப்பின் அடிப்பொடிகள் பெரும்பாலும் பேசிக்கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் இருக்கிறார்கள். ஒழுங்கு இல்லாத ரவுடிகள் அதிகம் போலும் இந்தியாவில். "யாரிடம் பேசுகிறாய் தெரியுமா? சர்ககாரிடம்" என்று வெறு நொடிக்கொருதரம் வருவோர் போவோருக்கெல்லாம் நினைவு படுத்தி எரிச்சல் மூட்டுகிறார்கள். இதனால் அமிதாப், கார்லியோனே மாதிரி புத்திசாலித்தனமான அமைதி காக்கிறாரா இல்லை இந்த அடிப்பொடிகளிடம் பேசி வாங்கி கட்டிக்கொள்ள பயந்து கொண்டு சும்மா இருக்கிறாரா என்று சந்தேகம் வருகிறது. இவர்களின் இந்த கூச்சலால் சர்க்காரின் மீது நமக்கு இருக்கும் மதிப்பு குறைகிறது. கடைசிவரை புத்திசாலித்தனமான விஷயங்களை எல்லாம் அபிஷேக்கும் மற்றவரும் சொல்ல, இவருக்கு வெறுமனே தலையாட்டி கொண்டும் கூரையை வெறித்துப் பார்த்தபடி இருப்பதும் தான் வேலை. வீட்டில் இருக்கும் ஒரு வயசான, சோர்ந்த பெரியவர் கேரக்டர் தான் கடைசிவரை. இந்த சர்க்கார் ஒரு பெரிய டான். அவரின் பவர் சர்க்கிள்கள், எதிரிகள், நண்பர்கள் ஆகியோரை பிரஸ்தாபிப்பதில் அவசரம் காண்பிப்பதும் சர்க்கார் ஒரு தனிமனித அரசாங்கம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது. பெரிய ஏமாற்றம்.

அமெரிக்காவிலிருந்து துணையுடன் வரும் இளைய மகன் அபிஷேக் பச்சன். பெரியவன் கோபக்காரன், தந்தையையே பல சமயங்களில் எதிர்ப்பவன் கே கே மேனன். கே கே மேனன் black friday வில் என்னை மிகவும் கவர்ந்தார். அவரின் stare க்குக்காகவே அவர் நடிக்கும் படங்களைப் பார்க்கலாம். இதில் ஒரு முரடன் கேரக்டருக்கு கூட புத்திசாலித்தன tone கொடுத்து நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் பாத்திரப் படைப்பில் இவரின் சினிமா சம்பந்தம் போன்றவை சரியாக விளக்கப்படவில்லை. தன் பட ஹீரோயினின் மேலுள்ள வெறியையும் சரியாக காட்டவில்லை. அந்தக் கொலைதான் பிற்பாடு தன் தந்தையையே கொல்லத்துணியும் அளவிற்கு கொண்டு செல்கிறது என்பதால் இதையெல்லாம் விட்டது ஏனென்று தெரியவில்லை. முக்கியமான இரவு உணவுக் காட்சியில் சோபிக்கிறார் கேகே. இதில் அமிதாப் கொஞ்சம் தன் அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சி செய்தாலும், ஜெயிப்பது என்னவோ கேகே தான். அபிஷேக் பச்சனை இந்தக் காட்சியில் கவனித்துபாருங்கள். யதார்த்தத்தின் மறுவுருவம்.

அபிஷேக் தான் ஹீரோ. அவர்தான் உண்மையான சர்க்கார். வெகுளியாக வந்திறங்கி, பின்னர் குடும்ப 'பிஸினஸை' ஏற்றுக் கொள்ளும் கடினமான பாத்திரம். வெளுத்து வாங்கியிருக்கிறார். காவல்துறை உயரதிகாரி அவமானப்படுத்தும் போது அமைதியாக வாங்கி கொள்ளும் அதே மனிதரா பின்னர் முதலமைச்சரையே சர்வசாதாரணமாக மிரட்டுகிறார் என்று பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

வசனகர்த்தாவும் அபிஷேக்கும் சேர்ந்து பட்டையை கிளப்புகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் என்றால் தன் அண்ணனை கொன்றுவிட்டேன் என்று தந்தையிடம் சொல்வது; வீரேந்த்ர சுவாமியை மிரட்டுவது; முதலமைச்சரிடம் 'உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் சிபிஐ கையில். கூடிய சீக்கிரம் உள்ளே செல்லப் போகிறீர்கள்' என்கிறார். அதற்கு சி.எம்மோ 'என் அதிகாரத்தை வைத்துக்கொண்டு ரெண்டே நாளில் வெளியில் வந்து விடுவேன்' என்று ஏளனமாக பதிலளிக்க அதற்கு அபிஷேக் சளைக்காமல் 'நீங்கள் சீக்கிரம் வெளியில் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்' என்று கூறி விட்டு ஒரு ஸ்லோ-மோ வாக் விடுகிறார். தியேட்டரில் விசில் பறந்திருக்கும். சூப்பர் சீன். அதே போல் கடைசியில் வில்லன் ரஷீதை கடலில் தள்ளும் போதும் 'உன்னைக் கொல்வதற்கு நான் வரவேண்டும் என்பதில்லை. ஆனால் நீ இறப்பதன் மூலம் கிடைக்கும் சுகத்தை நான் இழக்க விரும்பவில்லை' என்று பஞ்ச் கொடுக்கிறார். அசத்தல். மொத்தத்தில் பபீதா இவ்வளவு திறமையான அபிஷேக்கை ஒரு failed actor என்று சொன்னதை நினைத்து இப்போது கண்டிப்பாக வருந்துவார்.

சில்வர் மணி என்னும் நண்பன் / எதிரி கதாப்பாத்திரத்தில் 'சாமி' வில்லன் கோட்டா சீனிவாச ராவ். "பார்ன் இன் சவுத். பட் ஆப்பரேஷன் கம்ப்ளீட் நார்த்' என்று கலக்குகிறார். மற்றவர் ரஷீதாக வரும் ஜாகிர். இவரும் கூர்மையாய் லுக் விடுகிறார். ஒருவித cold villainy தெரிகிறது. சபாஷ். இன்னொருவர் விஷ்ராம் என்ற கதாப்பாத்திரம். மற்றவர் சந்திராசாமியின் பாதிப்பாய் வீரேந்தர் சுவாமி. புசுபுசுவென்று lhasa apso குட்டி மாதிரி இருக்கிறார். முட்டை கண்கள் வெளியே பிதுங்கி விழுந்துவிடும் போலிருக்கிறது. நல்ல வில்லன். இதே ஜீவா, நானா படேகரின் அப் தக் சப்பன்-னிலும் கலக்கியிருப்பார். சில்வர் மணி உதிர்க்கும் சில முத்துக்களில் ஒன்று. தாங்கள் போட்ட திட்டத்தின் படி சர்க்கார் இன்னும் சாகவில்லை என்று தெரிந்து பரிதவிக்கும் சமயத்தில் சாமியாரிடம் 'நல்ல full volume-இல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டிரு', வான் நோக்கி கையை காட்டியபடியே, 'சீக்கிரம் மீட்டிங் நிச்சயம்.' :)

இப்படி வசனகர்த்தா ஆங்காங்கே ஜொலிக்கிறார். அமிதாப்பிற்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டிவிட்டார். திரைக்கதை என்ற வகையில் வேகமாக நகரும் படம், அபிஷேக்-காத்ரீனா-தனுஷா முக்கோணத்தில் தேவையில்லாமல் சிக்கிக் கொள்கிறது. படத்திற்கு அது தேவையானதென்று எனக்கு தோன்றவில்லை. அசலில் உள்ள கே-வுடனான மைக்கேலின் காதலின் பாதிப்போ என்னவோ?

காமிரா: அமித் ராய். அனேகமாக கச்சிதம் என்று சொல்லலாம். பல சமயங்களில் extreme wide angle-ம் சில மிக வினோதமான பெர்ஸ்பெக்டிவ்களையும் தைரியமாக பயன்படுத்துகிறார். அமிதாப் டீ கப் எடுப்பது, ஹாஸ்பிட ஸ்ட்ரெச்சர் வழி அபிஷேக், ரஷீதின் கறுப்பு ஆப்ட்ராவின் எண்ட்ரீ என்று குறிப்பிட்டு சொல்லலாம். அதே சமயம், மிகவும் சீரியஸான வசனங்கள் இடம்பெறும் போது காமிராக்கோணங்கள் திசைதிருப்புவதாகவும் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், அந்த இரவு உணவுக்காட்சி அமைக்கப்பட்ட விதம் பிடித்தமாக இல்லை. முன்று பேருக்கு மத்தியில் நிகழும் காட்சி. கேகே மேனனும், அபிஷேக்கும் காமிராவுக்கு அருகில் டைனோசார்கள் போல் வளர்ந்திருக்க அந்தக்காட்சியின் நாயகனான அமிதாப் தள்ளி இருப்பதால் சின்னதாய், அதிகாரமில்லாதவராய் தெரிகிறார். வசனங்களும் காட்சியமைப்பும் நேர்மாறான எப்பெக்ட்டுகளை உருவாக்குகின்றன. இதே மாதிரி இறுக்கமான டின்னர் காட்சிக்கு அருமையான உதாரணமாக நினைவுக்கு வருவது 'american beauty'. மூன்று பேருக்கு மத்தியில் நிகழும் அந்த உரையாடலுக்கு பக்கவாட்டிலிருந்து மிக மிக ஸ்லோவான push in கொடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர். பிரமாதமாக இருக்கும். முன்பு சொன்னமாதிரி, கொஞ்சம் நெருடல்களை தவிர்த்திருந்தால் நல்ல ஒளிப்பதிவு. காமிராவைப் பற்றி சொல்லும்போதே குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம். color grading. prime focus நிறுவனத்தார் பண்ணியிருக்கிறார்கள். ஒருவித sepia tone கொடுத்து கதையின் போக்கிற்கு உகந்த மாதிரி இறுக்கமான palette-ஐ கொடுத்திருக்கின்றனர். மொத்தத்தில் அருமை.

சுனில் நிக்வேக்கரின் கலையும் மிக அருமை. அமிதாப்பின் வீடு அவரின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. அடிக்கிற வண்ணங்களில் அல்ல. subtlety-இல். எடிட்டிங்: நிபுன் குப்தா மற்றும் அமித் பர்மார். பல இடங்களில் jumpy effect இருக்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லை தவறா என்று தெரியவில்லை. ஆனால், அவ்வளவு எடுபடவில்லை. ஒருவகையில் திசைதிருப்புவதாய் இருக்கிறது. அதே மாதிரி ஒரு காட்சியில், ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் நிற்கும் இடம், போஸ் எல்லாம் அடிக்கடி மாறும்படி கட் செய்திருக்கின்றனர். இதுவும் குழப்பத்தை கொடுக்கிறது.

பின்னணி இசை என்பதை விட முன்னணி இசை என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இரைச்சல். நடுநடுவில் கோவிந்தா கோவிந்தா என்று வேறு பின்னணியில் கதறுகிறார்கள். அமைதியாக இருக்கவேண்டிய காட்சிகளில் கூட குனல் மேத்தாவும்/பரீக்ஷித் லால்வாணியும் இந்த மாதிரி இரைச்சல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நம் இளையராஜா தைரியமாக அமைதி-யை பிஜிஎம்-மாய் பயன்படுத்துவார். silence-இன் virtues-ஐ அவரைப் போன்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது நலம்.

மரியோ புஸோவின் மூன்று interwoven கதைகளை நிதானமாக பிரித்து ஆராய்ந்து நம் கண்முன்னே நம்பும்படி படைத்தது கோப்போலாவின் வெற்றி. ஒரே படமென்பதால் அமிதாப்பின் செல்வாக்கிற்கு காரணங்களை அவ்வளவு விரிவாக சொல்ல முடியாமல், power play விஷயங்களையும் தொட்டுதொட்டு செல்ல மட்டுமே முடிகிறது வர்மாவினால். ஆனால் நடிகர்களை நன்கு வேலை வாங்கி திறமையான இயக்குனர் தான் என்பதில் சந்தேகமில்லை என்று நினைவுபடுத்துகிறார்.

காட்பாதரை போன்ற ஒரு timeless classicஐ தைரியமாக கையிலெடுத்து தில்லுடன் இந்தியாவுக்கு தகுந்தபடி பால் தாக்கரே மசாலாவையும் சேர்த்து நன்றாகவே செய்திருக்கிறார் ராம்கோபால். அபிஷேக்குக்கு திருப்புமுனை இந்தப்படம் என்பதில் சந்தேகம் கிடையாது. மொத்தத்தில் அசல் கார்லியோனேவிற்கு நிகரில்லையென்றாலும் ஏமாற்றவில்லை சர்க்கார்.

வெட்டவெளி தன்னில் - பாடல் பற்றி? - repost

வெட்டவெளி தன்னில் மெய்யென்றிருப்பார்க்கு பட்டயம் எதுக்கடி

மாங்காய்ப் பாலும் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப் பால் (உதம்பாய்?) எதுக்கடி


செந்தாமரைப் போல திரியும் மெய்ஞானிக்கு கைத்தாளம் எதுக்கடி

தாவாரம் இல்லை தனல்போல்(?) வீடில்லை (உதம்பாய்?) தேவாரம் எதுக்கடி

------
இந்தப் பாடலை சமீபத்தில் தான் முதன்முதலில் விஜய் சிவா பாடக்கேட்டேன். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. ஆனால் யார் இயற்றியது என்று தெரியவில்லை. பொருளும் சரியாக விளங்கவில்லை. கேட்பதை அப்படியே எழுதியுள்ளதால், வரிகள் தப்பாகவும் இருக்கலாம். googleஇல் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. தெரிந்தோர் விளக்கமுடியுமா? நன்றி.

கு. போ. கதை - 4: குறும்பலா ஈசர், இசைப்புயல், மூன்றருவி

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே

அரவி னணையானு நான்முகனும் காண்பரிய அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
குரவமுறு வல்செய்யும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே


என்று சம்பந்தர் பெருமான் திருக்குறும்பலாப்பதிகமும்...

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே

என்று திரிகூடராசப்பருடன் இணைந்து இசைப்புயலும் பாடல் அருளிச்செய்த திருத்தலம் திருக்குறும்பலா ஈசர் குழல்வாய்மொழியம்மையுடன் காட்சிதரும் திருக்குற்றாலம்.

குற்றாலம் என்பது ஏதோ இக்காலத்தில் பிரபலமானது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வற்றாத வடவருவியில் (பேரருவி) நீராடி அகத்திய முனிவரில் தொடங்கி பலரும் வழிபட்ட சிறப்பான கோயில் இங்கு இருக்கிறது. நாங்கள் சென்றபோது இரவு குற்றாலநாதருக்கு கோயிலின் மாதக்கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு பள்ளியறைப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று கூறப்படும் தலமரம் என்று ஒரு பலாமரத்தின் கிளைகளை வைத்திருக்கின்றனர்.

இரவு 12 மணிக்குமேல் அருவிகளில் கூட்டம் குறையும் என்று சொல்லப்பட்டதால், அந்த நேரத்தில் சென்றோம். ஆனால், எங்களின் insider
info குத்தாலம் வந்த அனனவருக்கும் தெரிந்திருந்தது போலும். கூட்டம் நிறையவே இருந்தது. இருந்தாலும், மதியம் பெற்ற அனுபவத்தால் இந்த முறை அருவியில் நுழைவது அவ்வளவு கஷ்டமாக இல்லை. இராத்திரியில் குளிர் கொஞ்சம் அதிகமென்றாலும், அது ஒரு புதுவித அனுபவம். ஏதோ பகல் வேளை போல கூட்டமும், கூச்சலும் சேர்ந்து உற்சாகமாய் இருந்தது. மதியம் இருந்த காவலர்களே, பாவம் இன்னும் உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அங்கு மீண்டும் ஒரு மணிநேரம். அதற்குப் பிறது ஐந்தருவிக்கு சென்றோம்.

ஐந்தருவிக்கு சுமார் 6-7 கீ.மீ ஊரை விட்டு செல்லவேண்டும். வழியில் இசக்கி ரிசார்ட்ஸ் என்று பெரிதாக கட்டிவைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டி, ஐந்தருவிக்கு சென்றால் அங்கு பேரருவியைவிட கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது வெறும் மூன்றருவியாகத்தான் இருந்தது. அங்கேயும், உள்ளே தவம் புரியும் கணவான்கள் நிறைய. இருபாறைகளுக்கு மத்தியில் அதிவேகத்துடன் கொட்டுவதால் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியில் வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தனர். அடித்துப்பிடித்து உள்ளே நுழைந்து அங்கேயும் குளித்துவிட்டோம். பேரருவியை விட அதிக வேகத்துடன் இங்கே கொட்டுகிறது. வெளியில் வந்து சூடாய் பஜ்ஜியும், காபியும் குடிப்பதில் ஒரு தனி சுகம்.

புலியருவியில் தண்ணீர் வரத்து இல்லையென்று நண்பர் சொன்னதால் அதை விட்டுவிட்டு, பழைய குத்தாலம் அருவிக்கு சென்றோம். அங்கும் தண்ணீர் குறைவு. மக்களோ நிறைய. குளிக்காமல், வெறுமனே பார்த்து மட்டும் விட்டு அங்கிருந்து கிளம்பி சிற்றருவிக்கு வந்து சேர்ந்தோம். மிச்ச அருவிகளெல்லாம் இலவசம். வாகனத்திற்கு மட்டும் தான் வரி. இங்கே, குளிக்கவே பணம் கொடுக்கவேண்டும். இங்கும் ஒரு மாதிரி குளித்துவிட்டோம். சிற்றருவிக்கு செல்லும் பாதையிலிருந்துதான் செண்பகாதேவி அருவிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். சிற்றருவிக்கு போவதைவிட செண்பகா அருவிக்கு செல்லும் மக்கள் அதிகமாகத் தெரிந்தனர். சுமார் முக்கால் மணி நேரம் மலைப்பாதையில் நடக்க வேண்டுமென்பதால், போகவில்லை.

குத்தாலத்திற்கு ஒரு மணி நேரம் தள்ளி பாபநாசம் மற்றும் பாணதீர்த்தம் அருவிகள் இருக்கின்றன. (இதில் பாணதீர்த்தம் என்பது ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை எடுக்கப்பட்ட சூப்பர் அருவி என்பது ஊருக்கு திரும்பிவந்தவுடன் தான் தெரிந்தது.:( )

குத்தாலம் ஐந்து அம்பலங்களில் 'சித்திர சபை' என்றழைக்கப்படுகிறது. சிவபெருமான் இங்கே ஓவிய வடிவாய் இருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் மிக அழகு. ஆனால் மிகவும் சிதிலமடைந்திருக்கின்றன. இயற்கையால் அல்ல. மூளையற்ற மனிதர்களால். எல்லா ஓவியங்களின் மேலும் கிறுக்கி வைத்திருக்கின்றனர் சில புண்ணியவான்கள். இதைப்பற்றி ஏற்கனவே வேறு பதிவு போட்டுவிட்டதால், இங்கே எழுதவில்லை.

அடுத்து எங்கு போகலாம் என்று ஆர்வமாய் அப்பாவை கேட்டேன்.. 'அது சரி, ஊருக்கு போகலாம்' என்று சொல்லிவிட்டார், ஹூம்.. விட்டால் குத்தாலத்தில் உள்ள அருவிகளிலெல்லாம் குளித்துக் கொண்டேதான் இருக்கலாம். ஆனால், என்ன செய்வது. ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமாகிவிட்டதே.

கூட்டம் மிக அதிகம் என்றாலும், என்னதான் அசுத்தம் அதுஇதுவென்று தேவையற்ற எரிச்சல் பட்டாலும் குத்தால அருவிகளுக்குள் நுழைந்தபின் அவையெல்லாமே மறந்தே போய்விடுகின்றன. அருவியில் டமடமவென்று கொட்டும் நீர் கொடுக்கும் உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை. இயற்கை அன்புடன் கொடுத்த பல பரிசுகளில் அருவிகளுக்கு தனியிடம் உண்டு. யார் வந்தாலும் வராவிட்டாலும், நன்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இயற்கை அன்னை கொடையாய் மழையாய் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். மனிதர்களாகிய நாமும் வாங்கிக்கொண்டே இருக்கிறோம். வாங்கிமட்டும் விட்டால் பரவாயில்லை. நம்மால் இயன்ற வரையில் அவளுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். வருடம் முழுதும் கொட்டிக்கொண்டிருந்த அருவிகள் மெலிந்து மெலிந்து சிலமாதங்களே இப்போது கொட்டுகின்றன. இந்த சுகத்தை நாம் பெற்றால் மட்டும் போதுமா, நம் பின் வரும் மக்களும் பெறவேண்டாமா?

இந்த மூன்று நாட்களில் சென்ற இடங்கள் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், அவற்றின் வரலாற்றுச் சிறப்பும் தமிழ்ப் பெரியோரின் பக்தியும் வியக்க வைக்கிறது. நம் தமிழ்நாட்டில் தான் எத்தனை சிறப்பு, எத்தனை பழமை, எத்தனை மகான்கள். பெரிது பெரிதாக ஊர்களையே தமக்காய் வளைத்துப் போடும் காலத்தில், கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு மினி நகரம் என்றளவில் கட்டி பொதுச்சொத்தாய் கொடுத்த தன்னலமற்ற தமிழ் மன்னர்களும், வாகனவசதியெல்லாம் இல்லாத பழங்காலத்திலும் காடுமலைகளில் எல்லாம் நடையாய் நடந்து ஓவ்வொரு திருத்தலமாகத் தேடிச் சென்று அப்பரும், ஞானசம்பந்தரும் மற்ற பெரியோரும் வந்து ஈசனைப் பாடி தமிழும் பக்தியும் வளர்த்த புண்ணிய இடங்களில் நாமும் நிற்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பதற்கே நெகிழ்வாக இருக்கிறது.

மொத்தத்தில், குத்தாலம் என்றவுடன் வெறுப்புடன் கிளம்பி பின்னர் அருவிகளில் உண்மையாகவே மதிமயங்கி இனி வருடம் ஒருமுறையாவது இங்கே வந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

(முற்றும்)

அப்பாடா.. ஒருவழியா முடிச்சாச்சு. அடுத்த மெகாத்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில். காத்திருங்கள்.

திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, திருஞானசம்பந்தரின் திருக்குறும்பலாப்பதிகம் முழுவதும் காண இங்கே செல்லவும்.



இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை - 2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி
3. கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

யப்போ! திருநெல்வேலி டவுண், டி.கல்லுப்பட்டி - repost

இங்க யாராவது திருநெல்வேலி டவுண், டி. கல்லுப்பட்டி -காரங்க இருக்கீங்களா??? என்னோட கு. போ. கதையிலேயே கேட்டிருந்தேன். ஆனா என்னுடைய வாழ்க்கையின் லட்சியப் பயணத்தொடரை பலரும் லட்சியம் பண்ணதாகவே தெரியவில்லை. அதனால் தனிப்பதிவு போட்டே கேட்கறேன்.. திருநெல்வேலிக்காரங்க யாராவது இருந்தா இதுக்கு தயவு செஞ்சு பதில் சொல்லுங்க. எனக்கு மண்ட குடையுது. அது ஏம்பா உங்க town-க்கு ரெண்டு சுழி 'னா' போடாம மூணு சுழி பெரிய "ண" போடறீங்க????

அதே மாதிரி மதுரைக்கு அந்தப்பக்கம் பாத்தீங்கன்னா வழி நெடுக 'டி. கல்லுப்பட்டி', 'வீ. ரெட்டிப்பட்டி'ன்னு வரிசையா ஊர் பேருகள எல்லாம் இனிஷியலோட எழுதிவச்சுருக்காங்க. அதுக்கும் என்ன காரணம்னு யாருக்காவது தெரியுமா? சும்மாங்காட்டி ஒரு நாவல்டியா இருக்கட்டும், இல்லாட்டி எந்த வேலையத்தபய நம்மூர பத்தியெல்லாம் பதிவுப் போடப்போறான்னு எழுதி வச்சுருக்காங்களா? இல்ல வேற ஏதேனும் தத்துவமெல்லாம் உள்ளாற இருக்குதா?

பி.கு: அதானே, என்னடா இரண்டு மூணு வாரமா ப்ளாக்கர் பிரச்சனை பண்ணாம இருக்கேன்னு பார்த்தேன்,, இன்னிக்கு ஆரம்பித்துவிட்டது. இந்த பதிவை தானாக அழித்து விட்டது.. அதான் மீள்பதிவு.

கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

தென்காசியிலிருந்து குத்தாலம் 5 கீ.மீ தான். மதியம் போய் சேர்ந்தவுடனே, அப்பாவின் நண்பர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பிரமாதமான சாப்பாடு உண்டு களைப்பாறிவிட்டு (ஆனந்த் சொல்வதுபோல் இந்த தொடருக்கு மெகா சீரியல் tone வந்துடுச்சுனு நினைக்கிறேன்.. என்ன என்னல்லாம் சாப்பிட்டோம்னு பொறுமையா எழுதலாம்னு நினைச்சேன். ஆனா படிப்பவர் மேல் பாவப்பட்டு விட்டுவிட்டேன். இன்னும் இந்த மாதிரி எப்படியெல்லாம் என்னுடைய இந்த லட்சியப் பயணத்தொடரை இழுக்கலாம் என்று ஐடியா தருவோரின் பதிவுகளுக்கு வழக்கம் போல் பின்னூட்டங்களும், நட்சத்திரங்களும் குத்தப்படும்), மாலை 5 மணி சுமாருக்கு மெயின் அருவி என்றழைக்கப்படும் பேரருவிக்கு கிளம்பினோம்.

ஆகஸ்ட 15 வீக்கெண்ட் முந்தைய தினமே முடிந்துவிட்டதால் ஓரளவிற்கு கூட்டம் குறைவுதான். அருவிக்கு அருகிலேயே "malish" கடைகள், அதான் ஆயில் மசாஜ்... ஏராளம். வேறுவேறு சைஸ்களில், பளபளவென்று எண்ணெய் கோட்டிங்-கோடு சிலர் குப்புறப்படுத்து நிஷ்டையில் ஆழ்ந்திருக்க, அவர்களின் முதுகிலே மத்தளம் வாசித்துக்கொண்டிருக்கின்றனர் மசாஜ் ஸ்பெஷலிஸ்ட்கள். அவர்கள் அடிக்கும் அடியில், நீவும் வேகத்தையும் பார்க்கும் நமக்கே வலிக்கிறது. இதற்கெல்லாம் பேரம் பேசி ஒரு ரேட் பிக்ஸ் செய்து கொள்ளலாம். ரேட்டுக்கு தகுந்தாற்போல் மசாஜ். ரொம்ப குறைச்சு கேட்டாலும் ஒத்துக்கிட்டு செஞ்சுவிடுவாங்க. என்ன, பக்கத்து டீக்கடையிலேர்ந்து முந்தைய நாள் வடை சுட்ட எண்ணெய் மசாஜ் கிடைக்கும். அவ்ளோதான்.

அருவியிலிருந்து வரும் தண்ணீர் ஒரு சிறு குட்டையாக தேங்கி, அதிலிருந்து ஆறாக கிளம்புகிறது. குட்டை மிகவும் அசுத்தமாக இருக்கிறது. காலியான சோப்பு, ஷாம்பு டப்பாக்கள் மற்றும் இன்னவென்று விளக்கமுடியாத ப்ளாஸ்டி குப்பைகள் - இவற்றுடன் அருவியில் குளிப்பவர்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் ஆகியவை எல்லாம் கலந்து ஒரு வித நுரையுடன் மிதக்கிறது. இந்த குட்டையிலும் சிறுவர்கள் ஏதோ pool மாதிரி குதித்து குதித்து விளையாடுகின்றனர். பெற்றோர்களும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றனர். இந்த குட்டையிலிருந்து கிளம்பும் ஆற்றில் கரையிலேயே உட்கார்ந்து, பிக்னிக் வந்த குடும்பத்து பெண்மணிகள் எல்லாம் சாப்பாடு பாத்திரங்களை கழுவிக்கொண்டும், துணிமணிகளை துவைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இவர்களைத்தாண்டினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் பகுதிகளாய் தடுப்பு கட்டி அழகாகப் பிரித்துள்ளனர். எல்லா நேரமும் இரு காவலர்கள் காவலுக்கு இருக்கின்றனர். ஆண்கள் பகுதியில் நுழைந்தால், சோப்பை முழுதாய் முகத்திற்கும் சேர்த்து தடவிக்கொண்டு, அருவி விழும் பாறையை துழாவியபடியே போவோர் வருவோர் மேலெல்லாம் இடித்துக்கொண்டே அலைகின்றனர் சிலர். இவர்களாவது பரவாயில்லை. தண்ணி பட்டால் சோப்பு போய்விடும். ஆனால் வெளியில் ஆயில் மசாஜ் செய்து கொண்டு வருவோரின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் புண்ணியத்தால், எல்லோருக்கும் எண்ணெய் குளியல் நிச்சயம். அடடா, இந்த தடவையும் சென்ற முறை மாதிரி ஒரு disgusting அனுபவம் தான் கிடைக்கப்போகிறது என்று பெரிய எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இல்லாமல் போனேன்.

அருவி கிட்டே வந்தாகிவிட்டது. உள்ளே போவதா, சாரலே இவ்வளவு குளிருகிறதே, அருவிக்குள் சென்றால் உறைந்தே போய்விடுவோம் என்று நினைத்துக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தால் டவுசர்கூட போடாத சின்னப் பசங்களெல்லாம் சர் சர்ரென்று அருவிக்குள் உள்ளே நுழைந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சரி, இவங்களே பண்ணும்போது நாமும் பண்ணினால் என்ன என்ற வேண்டாத திமிருடன் உள்ளே நுழைந்தது தான் தெரியும். அப்பா.. இத்தனைக்கு நாங்கள் உள்ளே நுழைந்த இடத்தில் அவ்வளவு வேகம் கூட இல்லை. ஆனால், வெடவெடக்கும் குளிர். போன மச்சான் திரும்ப வந்தான் கதையா திரும்பி வெளியே ஓடி வந்துவிட்டேன். ஒரு ஐந்து நிமிடத்திறகு ஒன்றும் புரியவில்லை. பழைய டைப் ரைட்டர் மாதிரி ஆகிவிட்டது. மறுபடியும் சகஜ நிலைக்கு வந்தவுடன், பார்த்தால் என் தம்பி அருவிக்குள் உள்ளே சென்று செட்டிலாகிவிட்டான். சரி, நாமும் போவோம் மறுபடியும் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் நுழைந்தேன்.

இந்தமுறை உள்ளே நுழைந்தபோது அவ்வளவு குளிரில்லை. இன்னும் தைரியம் வந்து, சரி அருவியின் நடுப்பகுதிக்கு செல்வோம் என்று பார்த்தால், க்யூ என்று ஒன்று பெயருக்குத்தான் இருக்கிறது. நகருவதற்கான அறிகுறிகளே இல்லை. புகுந்தவர் வந்திலர் என்று தான் சொல்லவேண்டும். அருவியின் உள்ளே சென்றோருக்கு வெளியில் வருவதாக எண்ணமே வந்ததாக தெரியவில்லை. அருவியின் உள்ளே புகுந்து பாறையில் சாய்ந்துகொண்டே தவம் செய்வது போல் கண்மூடி, கைகளை மேலே தூக்கிக்கொண்டே தியானத்தில் இருக்கின்றனர். சொல்வதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் எரிச்சல் மூட்டும் ஒரு விஷயம் இது. எல்லோரும் குளிக்கத்தானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் இடம் கொடுப்போமே என்றெல்லாம் சிறிதும் எண்ணமில்லாமல் தங்கள் private அருவி போல் ஆக்கிரமித்து கொள்கின்றனர். கூட்டமில்லாத சமயத்திலேயே இந்த மாதிரியென்றால், சீசன் நேரத்தில் இன்னும் மோசமாக இருக்கும் போல. க்யூவில் எங்களைப் போன்று பலர் பே வென்று நின்று கொண்டிருக்க, எண்ணெய் மசாஜ் போட்டவரெல்லாம் எங்களை பை-பாஸ் செய்து கொண்டு நேரடியாக அருவிக்குள் புகுந்துகொள்கின்றனர். எண்ணெய் தேய்க்காதோர் எல்லாம் இந்த எண்ணெய் பிசுக்கு மாபியா-வுக்கு பயந்து இடம் கொடுத்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. இதை எப்படியாவது ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும்.

கடைசியில் might is right - என்பதுதான் இந்தியாவில் செல்லுபடியாகும் என்றபடியால் நாங்களும் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தால்... ஷாக் தான். ஒரு சில கணங்களுக்கு என்ன நடக்கிறதென்றெ புரியவில்லை. தலையில் டமடமவென்று கற்கள் விழுவது போல் கொட்டுகிறது. கண்ணைத் ஒரு நொடிகூட திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு வேகம். இடிமுழக்கம் தான் கேட்கிறது. ஆனால் ஒரு இனம்புரியாத பரவசம். அப்படியொரு சுகம். விட்டால் நின்று கொண்டே இருக்கலாம் என்பது போல் தான் இருக்கிறது. இந்த பரவசம் தான் உள்ளே போனவரையெல்லாம் வெளியில் வரவிடாமல் செய்கிறது என்று புரிந்தது. வெளியே வந்தவுடன் விவரிக்க முடியாத ஒரு தனிப் புத்துணர்ச்சி.

ஒரு தடவையோடு வந்துவிட முடியுமா? மீண்டும் ஒரு நான்கைந்து முறை உள்ளே சென்று வந்தோம். வெளியில் வர மனமே வரவில்லை. அருவி விழும் பெரிய பாறை முழுவதும் சிவலிங்கங்கள், முனிவர்கள் சிற்பங்கள் எல்லாம் செதுக்கி வைத்துள்ளார்கள். ஆங்காங்கே சிவலிங்கங்களை சிறுசிறு cavity களில் வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி இடங்களில், ஒரு ஆள் உட்காரக்கூடிய அளவிற்கு இடம் இருப்பதால் இங்கு போய் செட்டில் ஆனால், சிவனோடு சேர்த்து நமக்கும் அபிசேகம் தான். வற்றாத வடவருவி என்பது இந்த பேரருவியின் பழங்காலப் பெயர். அகத்தியர் போன்றோர் நீராடிய மிகவும் புண்ணியமான அருவி என்று தலவரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அருவி சூப்பர். ஆனால் கூட்டத்தை இன்னும் கொஞ்சம் ஒழுங்கு படுத்தினால் வந்தவர் எல்லாரும் அனுபவிக்கலாம்.

ஒரு முக்கால் மணிநேரம் மற்றவர் எண்ணையாடி, அதைப் போக்க நீராடி ஒருவழியாக வெளியில் வந்தாச்சு. பேரருவியின் அருகிலேயே திருக்குத்தாலநாதர் கோயில். அவரைப் பற்றியும், மத்த அருவிகளைப் பற்றியும் அது அடுத்த முறை!!

(தொடரும்...)

இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த உருப்படாத கதையை இழுத்து இழுத்து ரம்பம் போடப்போகிறாய் என்று குமுறுவோர்க்கு ஒரு நற்செய்தி! அடுத்த பதிவுடன் மெகா பயணத்தொடர் முற்று பெறலாம். முற்றவேண்டும் என்று வேண்டி பிள்ளையாருக்கு இன்று ஒரு எக்ஸ்ட்ரா கொழுக்கட்டை போடுங்கள். ;-)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை -2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி

கு. போ. கதை - 2 : கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

அப்படியென்ன விசேஷம் இந்த நெல்லை கோவிந்தரிடம் என்றால்... ஸ்டைலுதான்.

பிரம்மா மற்றும் ஏனையோர் புடைசூழ, மஹாலக்ஷ்மி பதமாய் காலை அழுத்திவிட தன் இடக்கையால் தலைக்கு முட்டுக் கொடுத்தபடியே ஆதிசேஷனின் மீது சாவகாசமாக படுத்துக்கொண்டு, புன்முறுவலுடன் சயனித்திருக்கும் பெருமாள், இதே போஸில் படுத்தபடியே சாவகாசமாக வலக்கையை நீட்டி, கீழேயிருக்கும் சிவலிங்கத்தினைப் பூக்களால் பூசித்தபடி ஆனந்தமாய் இருக்கிறார். இதன் அழகை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. நீங்கள் ஒருகணம் கற்பனை செய்து பார்த்தாலே தெரியும் காட்சியின் அழகு.

கடவுள் என்பவர் ஒன்றும் ஒரு அடி ஸ்கேலுடன் மிரட்டும் ஸ்கூல் டீச்சர் இல்லை. 2 ரூபாய் எலுமிச்சை வைக்காததற்கும், 10 ரூபாய் தேங்காய் உடைக்காததற்கும் லாரி ஏற்றிக் கொல்லும் கொடூரனல்ல. பக்தியோடு வந்தாயா, பக்தியில்லாமல் வந்தாயா, வேட்டி கட்டி வந்தாயா, காரிலே வந்தாயா, நடந்து வந்தாயா, திருநீறு பூசிக்கொண்டு சென்றாயா, பயபக்தியுடன் சரணாகதி அடைந்தாயா என்றெல்லாம் ஒவ்வொன்றையும் கண்கொத்திப் பாம்பாய் எதிர்ப்பார்ப்பவரும் இல்லை என்பதைத் எவ்வளவு அழகாக சொல்லாமல் சொல்கிறார் பெருமாள். பிறவி கொடுத்து, உன்னை நடத்திச் செல்பவன் நானென்ன கொடுங்கோலனா என்னைக் கண்டு பயந்து நடுங்குவதற்கு? அன்பு போதும். பயம் தேவையில்லை என்றல்லவோ சொல்கிறார். மனிதனாகப் பிறப்பது என்பதையே என்னவோ பெரும்பாவம் என்கிற ரேஞ்சுக்கு பல மதங்களும் முக்கியமாக இந்து மதம் திரித்திருக்கும்போதும், 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்' என்று தொண்டரடிப்பொடியார் பாடியதுதான் எவ்வளவு சரி என்பது புரிந்தது. இதையே தானே சிவனடியார்களும் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று மனிதனாய்ப் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பாடினார்கள். இதைத்தான் கோவிந்தரும் காட்டுகிறார் போலும். மொத்தத்தில் சயனப்பெருமாள்களில் வித்தியாசமானவர் தான் இல்லையா?

பாளையங்கோட்டை முழுவதும் தோண்டி வைத்திருக்கிறார்கள். எந்த டிபார்ட்மெண்ட் என்று தெரியவில்லை. இனிவரும் சாலைக்கும் இதுதான் முன்னோடி என்பது போல், திருச்செந்தூர் ரோடு மகா மட்டம். வழியிலே திருவைகுண்டம் வைகுண்டநாதர், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் ஆகியோரை முன்னரே ஒருசமயம் பார்த்திருப்பதால், வெளியிலிருந்தே ஹாய் சொல்லிவிட்டு திருச்செந்துர்ர் போய் சேருவதற்குள் பிரஷர் எகிறிவிட்டது. திருச்செந்தூர் - சிவந்தி ஆதித்தன் அவர்களின் ஊர். ஊருக்கு வெளியில் பெரிய கல்லூரி. வளைச்சு போட்டிருக்கார்னு சொல்வாங்களே, அதைப் பண்ணிருக்கார்.

திருச்செந்தூரில் இருக்கும் ஒரே டீஸண்டான ஓட்டல் எனக்கு தெரிந்து சிவமுருகன் லாட்ஜ் தான். தேவஸ்தான தங்குமிடங்கள் எல்லாம் ரொம்ப சுமாராகத் தான் இருக்கும். முருகனைப் பாக்க போனியா, இல்ல ஓட்டல் ரூம்ல படுத்துகிட்டு டீவி பாக்கப்போனியான்னு நீங்கள் நினைப்பது கேக்குது. இருந்தாலும், சிவமுருகனுக்கே போனோம். ரூம் ரெடியாக லேட்டாகும்னு சொன்னதால வெளியில வெயிட் பண்ணிக்கொண்டிருந்தபோது, பறவை முனியம்மா குடும்பத்தோட வந்திருந்தாங்க. எங்களைத்தான் அவங்களுக்கு அடையாளம் தெரியல.

சரி, அவரை விட்டுவிட்டு செந்திலாண்டவனைப் பார்க்க கிளம்பினோம். சந்தன அலங்காரம் ரொம்ப அழகு. மூலவருக்கு பின்னாடி பஞ்ச லிங்கங்கள் வச்சுருக்காங்க. உள்ளே குனிஞ்சு போயிட்டு வரதுக்குள்ள பெண்டு நிமிர்ந்து விட்டது. மூலவருக்கு இடப்பக்கத்தில் உற்சவர் சன்னதி. அவருக்குத்தான் சண்முகார்ச்சனை என்று சொல்லி நம்மை ஒரு அரைமணி கீழே உட்காரச்சொல்லிவிடுகிறார்கள். இந்த உற்சவரைப் பார்த்தால் முருகப்பெருமானின் official வாகனம் மயிலா இல்லை கரப்பான்பூச்சியான்னு ஒரு fundamental சந்தேகம் வரும். அவ்வளவு கரப்புகள். அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும், நம்மேலும், எதன்மேலும் ஓடி விளையாடுகின்றன. முருகன் மேலுள்பட. எப்படி இப்படி ஒரு மினி கரப்பு ஆராய்ச்சி மையம் வைத்து உங்களால் பராமரிக்க முடிகிறது என்று அவர்களை கேட்க நினைத்தேன். ஆனால் எப்படா விடுவார்கள்.. நாம் இந்த "fear factor" செட்டிலிருந்து தப்பிப்போம் என்று நினைத்து ஓடி வந்துவிட்டேன்.

அடுத்த நாள் ஒரு குட்டி விசிட் பீச்சிற்கு. அங்கிருந்து கிளம்பி அதே டப்பா ரோட்டில் திருநெல்வேலி டவுண் ரொம்ப டவுனாய் வந்தடைந்து ஒருவழியாக தென்காசி செல்லும் சாலையில் சேர்ந்தோம். நல்ல வேளையா, இது ரொம்ப நல்லாவே போட்டிருக்காங்க.

காத்துதான் பேய்க்காத்து. சாலையோரம் இருக்கிற மரங்களின் கிளைகள் எல்லாம் ஒரே திசையாகவே வளர்ந்திருந்தன.

தென்காசி - சின்ன ஊர். உலகம்மையுடன் இருக்கும் விசுவனாதரின் திருக்கோயில்தான் பிரதானம். கோயில் கோபுரத்தின் வழி நுழையும்போது அடிக்குது பாருங்க ஒரு காத்து. ஏதோ wind tunnel-க்குள்ள நுழஞ்ச மாதிரி ஒரு எப்பெக்ட். ஆளையே தூக்கிக்கிட்டு போற பலத்தோட அடிக்குது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு பராக்கிரம பாண்டியன்.. இல்லை.. ஜடிலவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி அரிகேசரிதேவ பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (அப்பா. இதுக்கே தனியா பதிவு போடணும் போலிருக்கே) கட்டிய கோயில். திருநெல்வேலியைப்போலவே இங்கும் இசைத்தூண்கள் உண்டு.

தென்காசி வரை பொறுத்தீங்க. குத்தாலம் இன்னும் 5 கிலோ மீட்டர் தானே.. கொஞ்சம் தூரம் தான்...பொறுத்துக்குங்க...ப்ளீஸ்

(தொடரும்)

குத்தாலம் போன கதை - 1-ன் தொடர்ச்சி இந்தப் பதிவு.

குத்தாலம் போன கதை - 1

கொடைக்கானல் போயிட்டு வந்தாச்சு. சரி அடுத்து எங்கே போகலாம்னு பார்த்தப்போ அப்பாவோட நண்பர் திருக்குத்தாலத்துக்கு வரச் சொல்லி சொன்னார். இந்த குத்தாலம், கித்தாலம்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்றுவிட்டு கடுப்பாகிவிட்டது. கூட்ட நெரிசல்னா சாதாரணமில்ல. தள்ளுமுள்ளு பயங்கரமா இருக்கும். அருவியில குளிக்கப்போகும்போது சோப்பு, ஷாம்பு, எண்ணெயெல்லாம் எடுத்துப்போக தேவையே இல்ல. இருக்கற கூட்டத்தில பக்கத்திலிருக்கறவங்க நல்லா நமக்கும் சேத்துத் தடவி விட்டு போய்டுவாங்க. அதனாலேயே common shower மாதிரி ஒரு அருவி, அதுல அடுத்தவன் சோப்பு போட இவ்வளவு தூரம் (450 கிமீ) போகணுமா? என் தம்பிக்கும் எனக்கும் அவ்வளவு
இஷ்டமில்லை. கடைசியில என்ன.. நம்ப சொல்லி யாரு கேக்கறா, அங்கதான் போகணும்னு மேல சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டாச்சு. சரி, போறது போறோம் அப்படியே அந்தப் பக்கமிருக்கற கோயில் கொஞ்சத்துக்கும் போவோம்னாங்க அம்மா. திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், நெல்லையப்பர், திருச்செந்தூர், திருக்குத்தாலநாதர் அப்படீன்னு பெரிய லிஸ்ட் ரெடி.

தஞ்சாவூர்-திருச்சி-மதுரை ரோடெல்லாம் பிரமாதமா போட்டு வெச்சுருக்காங்க. மதுரைக்கு இதற்கு சில நாட்கள் முன்னர்தான் சென்று வந்ததால் பை-பாஸ். தமிழ்நாட்டில் இப்படியும் சில நல்லவர்களாங்கற மாதிரி ஒருத்தற அங்க சந்திச்சோம். அவரைப் பத்தியும் மதுரையைப் பற்றியும் தனியே அப்புறம்.

மதுரையிலிருந்து தென்காசி சாலையில் உள்ள திருவில்லிபுத்தூரைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்த ஊருக்கு போகாதவர்கள் கூட தமிழ் நாடு அரசின் புண்ணியத்தில் அந்த ஊர் கோயிலின் கோபுர தரிசனம் கண்டிப்பாக செய்திருப்பார்கள். ஆண்டாள் பிறந்த ஊர் என்பதைவிட தற்காலத்தில் தாமரைக்கனியின் ஊர் என்பதும் பால்கோவாவும் பிரபலமாக மற்ற காரணங்கள்.

ஊரை நெருங்கும்போதே விண்ணையே அளப்பது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் வடபத்ரசயனப் பெருமாள் திருக்கோயிலின் - சிற்ப வேலைகள் எல்லாம் இல்லாமல் சிம்பிளான ஆனால் பிரம்மாண்ட கோபுரம் - தெரிகிறது. ஆண்டாளும் பெரியாழ்வாரும் வாழ்ந்த ஊர். அவர்கள் கதையெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும். வடபத்ர சயனப் பெருமாள் கோயிலுக்கு அருகில் ரங்கமன்னார் திருக்கோயிலும், இவற்றிற்கு இடையில் ஆண்டாள் பூப்பறித்த நந்தவனமும் இருக்கின்றன.ஆண்டாள் தினமும் தான் மாலை சூடிய அழகை பார்த்தது என்று சொல்லப்படும் கண்ணாடிக் கிணறு ரங்கமன்னாரின் சன்னதியிலேயே இருக்கிறது. திருவில்லிப்புத்தூரில் காட்சியளித்தாரே தவிர திருவரங்கத்தில் தான் ஆண்டாளை ஏற்றுக்கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் திருவரங்கப் பெருமான் தனியாகப் படுத்திருக்கிறார் என்றும், லட்சுமி, பிரம்மா மற்றும் ஏனையோர் இல்லையென்றும் சொன்னார்கள். அப்படித்தனியாகத்த இருக்கிறார். அதையும் பார்த்தாகிவிட்டது (திருமால் பெருமை திரைப்படத்தில் கொஞ்சம் கதையை மாற்றி விட்டார்கள். அந்தப் படத்தில் வரும் திருமங்கையாழ்வாரின் சரித்திரமும் வேறுவிதமாக காட்டப்படுகிறது).

திருவில்லிபுத்தூர் வந்துவிட்டு பால்கோவா வாங்காமல் போவதா என்பதால் கோயிலுக்கு வெளியே உள்ள கடை ஒன்றில் நான்கு பொட்டலம் கேட்டோம். கண்முன்னே நான்கு வைக்கிறார் என்று நம்பி வாங்கிவிட்டு காரினுள்ளே பின்னர் பிரித்துப் பார்த்தால் மூன்று தான் இருந்தது. திருட்டு என்றாலும் திருந்தச் செய்த கடைக்காரரின் மேஜிக் திறமையைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். சுவையும் அவ்வளவு நன்றாக வேறு இல்லை. சரி, நேரமின்மையால் சண்டை போடாமல் அங்கிருந்து கிளம்பி அடுத்து சங்கரன்கோயில் சென்றோம். இராஜபாளையம் தாண்டி தென்காசி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து திருநெல்வேலி போகும் வழியில் இருக்கிறது சங்கரன்கோயில்.

போகும்போதே மணி 1330. சங்கரலிங்கத்திற்கும், கோமதியம்மனுக்கும் மதிய சாப்பாடு நேரம். இருந்தாலும் ஆகஸ்ட் 15 கூட்டத்தால் எங்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார்கள். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மாதிரி வித்தியாசமான கான்சப்ட் கோயில் இது. 'அரியும் சிவனும் ஒன்று' என்பதற்கேற்ப சங்கரநாராயணர் இங்கே இருக்கிறார். ஒரே சிலையில்
வலப்புறம் சிவனின் சின்னங்களும், புலித்தோலும் அணிந்து இடப்புறம் நாராயணனின் சின்னங்களையும் பட்டு வேட்டியும் அணிந்து இருக்கிறார். சங்கரலிங்கமும், சங்கரநாராயணரும் இருந்தாலும் கோமதியம்மனுக்குத்தான் இங்கு கூட்டம். இதுவும் நல்ல பெரிய கோயில்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் சாலை ரொம்ப சுமார். வழி நெடுக windmills. அடிக்கிற புயல் காத்திலும் வெய்யிலிலும் அவை சுற்றிக்கொண்டிருந்தது அழகு.

திருநெல்வேலி - எல்லா இடத்திலேயும் மூணு சுழி "ண" போட்டு திருநெல்வேலி 'டவுண்' என்றே எழுதி வைத்துள்ளார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. ஏன் இப்படித் தப்பா எழுதியிருக்கீங்கன்னு நேரா கேட்க தைரியம் வரல. விவேக் சொல்வது போல் அருவாளை ஸ்டாண்டிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவோர் அதிகம் உள்ள ஊராச்சே ;)

நெல் வயலைக் காத்த நெல்வேலியப்பர் திருக்கோயில் - பிரம்மாண்டம் என்பதற்கு அருமையான example. 17.5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் கோயிலுக்குள்ளே இன்னொரு "திருநெல்வேலி டவுண்" இருக்குமோ என்னும் சந்தேகம் வரும். உண்மையில் நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் தனித்தனி பெரியகோயில்கள் கட்டி ரெண்டையும் இணைத்து மெகாக்கோயில் ஆக்கியுள்ளனர். நெல்லையப்பர் சன்னதியின் வெளியில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகு (திருநெல்வேலிக்கு அருகிலேயே கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கும் கிருஷ்ணாபுரம் என்ற கோயில் இவ்வகை சிற்பங்களுக்காகவே பார்க்கப்படவேண்டியது). அதே போல் இங்கே இன்னொரு அதிசயம். கல்லால் ஆன musical தூண்கள். தூணைத்தட்டினால் ஒரு ஸ்வரம் கேட்கிறது. ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வரம். ரொம்ப வருடங்களுக்கு இதேபோல் தூண்களை ஹம்பியிலோ அதன் அருகிலோ பார்த்த ஞாபகம். சரியாகத்தெரியவில்லை.

பொதுவாகவே சிவன் லிங்கவடிவாகவே கோயில்களில் இருப்பதால் அவ்வளவு இண்ட்ரெஸ்டிங்காக இருக்காது. இந்த மாதிரி இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பவர் பெருமாள். பெருமாளென்றால் விதவிதமாக அலங்கராமென்ன, போஸ்கள் என்ன என்று life-ஐ அனுபவித்துக் கொண்டிருப்பார். பார்க்கும் நமக்கும் ஆர்வம் வரும். இந்தக் கோயிலிலும் ஜாலியாக படுத்துக் கொண்டிருக்கும் பெருமாள் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நெல்லை கோவிந்தர்.

சயனப் பெருமாள் தானே, இதிலென்ன என்ன புதுசு என்றால்... இருக்கே...

(தொடரும்)

 

வார்ப்புரு | தமிழாக்கம்