மீனாட்சி, அனுமார்கள், சூப்பர் டிரைவர்
மதுரையின்னு சொன்னாலே மீனாட்சியம்மன் கோயில் aerial shot ஒண்ணுதான் காமிப்பாங்க. பிரமிப்பூட்டும் இமேஜ் அது. அப்படியெல்லாம் நம்மால பாக்க முடியாதே. பொற்றாமரைக் குளம் அருகிலுள்ள வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். எங்கோ ஒருமுறை படித்தது, கோயிலில் உள்ள மெயின் விக்கிரகங்கள் மட்டும் எண்ணூறுக்கு மேல். கோபுரம் மற்றும் சுற்றும் முற்றும் உள்ளவை என்று கணக்கில் கொண்டால் சுமார் ஐந்தாயிரம் சிலைகள் இருக்குமென்றும் அதே கட்டுரையில் படித்தேன். ஒரிஜினல் சுட்டி கிடைக்கவில்லை.
கல்யாணம் புரிந்த இடமென்றாலும் அதற்குள் கணவன் மனைவியிடையே என்ன சண்டையோ தெரியல, தனித்தனியாத்தான் இருக்காங்க.சுந்தரேசுவரர் எல்லா சிவன் கோயிலையும் போலவே, லிங்கவடிவாகவே இருக்கிறார். இந்த ஊருக்குத் தான் எத்தனை விசேஷமோ, அந்தக் பொற்றாமரை குளத்திற்கு தான் எத்தனை மகிமையோ என்று எண்ணும் வகையில் ஒரு ஆச்சரியமான உண்மை, கோயிலின் பிராகரங்களில் சுற்றியபோதுதான் புரியவந்தது. சர்வேஸ்வரன் நடத்திய திருவிளையாடல்கள் எல்லாமே அநேகமாக மதுரை நகரிலும் அதனை சுற்றியும் தான் நடந்திருக்கிறது.
ஞானசம்பந்தப் பெருமானும் இதைப் புரிந்து தான்..
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே
என்று மதுரையை விட்டு அகலாத சிவனே என்று பாடினார் போல.
மதுரையைப் பொறுத்தவரையில் மெயின் மீனாட்சிதானே? நகைநட்டு எல்லாம் எக்கச்சக்கமாய் போட்டு என்று தானே இன்னும் மதுரையின் அரசி என்ற மாதிரி கம்பீரமாக இருக்கிறாள். பிரம்மாண்ட கோயிலை முழுவதும் சுற்றிவர நாட்கணக்கில் ஆகுமென்று நினைக்கிறேன். இந்தக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை ஒரு மினி அருங்காட்சியகமாக்கி இருக்கின்றனர்.
மீனாட்சி கோயிலை ஒருவாறு சுற்றிவிட்டு, கிளம்பி 108 திவ்யதேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயிலுக்கு சென்றோம். அடுக்கடுக்கான அமைப்பு கொண்ட கோயில். மிகவும் விசேஷமானதும்கூட. பெரியாழ்வார் இந்தத் தலத்தில் தான்
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே
என்று தம் திருப்பல்லாண்டு பாடி வழிபட்டார் என்று கூறுகிறார்கள்.
கீழே கூடலழகர், மதுரவல்லி. விமானத்தின் மீது ஏறினால் சூர்யநாராயணர், பள்ளிகொண்ட பெருமாள். வைணவக் கோயில்களில் அரிதான நவக்கிரகங்களும் இங்கே உண்டு. இந்தக்கோயில பாத்துட்டு, பரோட்டா ரெண்டு உள்ள தள்ளிட்டு மதுரையிலிருந்து சுமார் 20 கிமி தள்ளியுள்ள கள்ளழகரையும், சோலை முருகனையும் பார்க்க கிளம்பினோம். இந்த முறையும் கூட்டத்தில் சிக்கி அழகர்கோவில் ரோடை தவறவிட்டு, வைகைகரையோரமாகவே ஓடும் ஒரு குட்டி ரோட்டில் திரும்பி ஆற்றின் மட்டத்திலேயே ஓடும் ஒரு பாலத்தைக் கடந்து, ஒருவழியாய் பழமுதிர்ச்சோலை சென்றடைந்தோம். ஆஹா, ரம்மியமான பெயர். ஆனால் பழம் எல்லாம் இருப்பதாகத்தெரியவில்லை. இராமனின் வானரப் படை இப்படித்தான் இருந்திருக்கும் என்று சொல்லுமளவு திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் அனுமார்கள். ரோட்டின் குறுக்கே உட்கார்ந்து கொண்டு தங்கள் இஷ்டப்படி லூட்டியடிக்கின்றன. ஹார்ன் அடித்தால் "where's the fire, man?" என்று நக்கல் பார்வை பார்த்துவிட்டு தத்தம் காரியங்களுக்கு திரும்பி விட்டபடியால் மிக அருகில் போய் ஹார்ன் அடித்து மிரட்டலாம் என்றால் 'குரங்குகள் எல்லாம் அனுமார் அம்சம்டா, எங்கேயாவது அடிபட்டுடப் போகுதுங்க.. மஹா பாவம்'ன்னு பின் சீட்டிலிருந்து குரல். ஏன் மாடு, நாய், பன்னிக்குட்டியெல்லாம் அடிச்சா மட்டும் தப்பில்லியான்னு கேட்க நினச்சு, பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமலேயே விட்டுட்டேன்.
பழமுதிர்ச்சோலை - அறுபடை வீடுகளில் ஒன்று என்றாலும், மிச்ச ஐந்து படைவீடுகளைப்போல் பிரம்மாண்டமான கோயில் எல்லாம் இல்லாமல் சாதாரண farm house மாதிரி இருக்கிறது. சம்மருக்கு வந்த முருகப்பெருமான் அவ்வையிடம் 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கடி போட்ட இடமும் இதுதான். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே நூபுரகங்கை என்ற ஊற்று இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுக்கு போக நேரம் கிடைக்கவில்லை.
இங்கே பழமுதிர்ச்சோலையில் ஒரு விபரீதம் நடக்க இருந்தது. மலையின் ஸ்லோப்பில் நிற்கும் காரை ஸ்டார்ட் பண்ணும் முன் ஹேண்ட் பிரேக் எடுக்கக்கூடாது என்று தெரிந்தாலும் என்ன நினைப்பிலோ எடுத்தேன்.. ஹேண்ட் பிரேக் எடுத்தப்புறம் வண்டி பின்நோக்கி நகர ஆரம்பித்தபின் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால் அந்தப் பக்கம் பார்த்தபடி என் அம்மா வண்டி வருவதை கவனிக்காமல் நிற்கிறார். வண்டியோ மேடானதால் வேகமாக பின்நோக்கி நகருகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் பிரேக் சர்வோ வேலை செய்யாது அதனால் பிரேக் முழு அழுத்தத்துடன் பிடிக்கவில்லை. ஹேண்ட் ப்ரேக் போட்டு ஒருவாறு ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை புல்லா அமுக்கி, குதிரை கனைப்பு, டயர் புகை, ரோட்டில் கருப்பு தடம் என்று படுஜோரா கிளப்பினேன். இது நடந்தது ஒரு கணப்பொழுதில். இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. பார்க் செய்து வந்தபின், பூக்கடைக்காரர் 'நல்லா வண்டி ஓட்டறீங்க சார் நீங்க' ன்னு உள்குத்துடன் வஞ்சப்புகழ்ந்தார். கெக்கெபெக்கே என்று வழிந்துவிட்டு நகர்ந்தேன். வித்தியாசமான அனுபவம் இது. விபத்துகளுக்கு ஒன்றும் புதியவனில்லையென்றாலும், அம்மா என்று வந்தபின் பதட்டம் பலமடங்காகிவிட்டது. இந்த மாதிரி ரன்னிங் கமெண்டரி வச்சே ஒரு நாப்பது எபிசோட் ஓட்டிடலாம் என்று நினைக்கிறேன், என்ன சொல்றீங்க? :)
முருகனைப் பார்த்தாச்சு. அவன் மாமனைப் பாக்க வேண்டாமா? அதே மலையின் அடிவாரத்தில் தான் கள்ளழகர் இருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் கருங்கல் தரையின் மீது மூச்சிரைக்க ஓடி, தங்கையை மணமுடித்து தர வந்தமர்ந்த பெருமாளை தரிசனம் செய்தோம். இந்தக் கோயில்களைப் பற்றியெல்லாம் இன்னும் விரிவாக எழுதாதற்கு காரணம், எல்லாம் பலருக்கும் தெரிந்தவை என்பதாலேயே.
அங்கேயிருந்து என்ன, நேராக திருச்சி NH பிடிச்சு ஊருக்கு வந்தாச்சு.
தொடரின் முடிவுக்கு வந்துவிட்டது. இங்க ஒரு moral of the story எழுதணுமே... என் குத்தாலம் போன கதை தொடரிலேயே ட்ரை பண்ணேன். சரியா வரலை. அதனால சிம்பிளா மதுரை ரொம்ப நல்ல ஊரு, கூடவே பார்த்த ஊர்களும் மக்களும் ரோடுகளும் குரங்குகளும் மறக்கமுடியாதவை/வர்கள்னு சொல்லி இத்தோட முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன். ;)
இதுவரை பொறுமையுடன் படிச்சதற்கு நன்றி.
இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்
5. மருதைக்கு போலாமா? - 5:வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு
மருதைக்கு போலாமா? - 6
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
கார், ரிவர்ஸ்ன்னு கேட்டாலே உடம்பு நடுங்கிடுது. இப்படித்தான் விபத்துக்கள் எல்லாம் எதிர்பாராமலேயே
நடந்துருது. முதுகுலே அடிபட்டு இன்னும் பூரணகுணமாகாமல் வலியோடத்தான் வாழ்வு போய்க்கிட்டு
இருக்கு எனக்கு. நல்லவேளை. அம்மாவுக்கு ஒண்ணும் ஆகலை.
//மதுரையைப் பொறுத்தவரையில் மெயின் மீனாட்சிதானே? நகைநட்டு எல்லாம் எக்கச்சக்கமாய் போட்டு
என்று தானே இன்னும் மதுரையின் அரசி என்ற மாதிரி கம்பீரமாக இருக்கிறாள். //
அம்மனா கொக்கா? அம்மன்வேஷம் எதுக்கு இப்பப் புரிஞ்சிருக்குமே:-)
//கல்யாணம் புரிந்த இடமென்றாலும் அதற்குள் கணவன் மனைவியிடையே என்ன சண்டையோ தெரியல,
தனித்தனியாத்தான் இருக்காங்க//
சண்டையெல்லாம் கிடையாது. கணவன் மனைவியா இருந்தாலும் 'ஸ்பேஸ்' வேணுமுன்னு சொல்லாமச் சொல்றாங்க.
எப்பப்பார்த்தாலும் ஈஷிண்டே இருக்கணுமா? இருக்கத்தான் முடியுமா?
அதுசரி. அழகர்கோயிலிலே 'கல்தோசை' திங்கலையா?
அடுத்த தொடர் எப்போ?
ஆமாம் அக்கா,
விபத்துகள் நடப்பது நொடிப்பொழுதில். சில நிமிடங்கள் சுகத்திற்காக போகும் அதிவேகம், வாழ்க்கையையே திருப்பிப்போட்டுவிடுகிறது.
//அம்மன்வேஷம்//
அம்மன் எல்லா நகையெல்லாம் எல்லாம் போட்டுகிட்டதால, சிவனுக்கு பாம்பும் மண்டையோடுந்தான் மிச்சம். இந்த விஷயத்தில பெருமாள் கெட்டி!
//சண்டையெல்லாம் கிடையாது. கணவன் மனைவியா இருந்தாலும் 'ஸ்பேஸ்' வேணுமுன்னு சொல்லாமச் சொல்றாங்க.
எப்பப்பார்த்தாலும் ஈஷிண்டே இருக்கணுமா? இருக்கத்தான் முடியுமா?
//
கரெக்ட். இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவேயில்ல.
அதானே பார்த்தேன். கல்தோசையா? அது என்னது? எல்லா தோசையும் கல்லில் தானே வாப்பாங்க?
தொடர் தானே! போட்டா போச்சு! இப்பல்லாம் ஒரு வரிக்கதையை நீட்டி முழக்கி எழுதறதுதான் கைவந்த கலையாயிடுச்சே!
//நீட்டி முழக்கி எழுதறதுதான் கைவந்த கலையாயிடுச்சே!
நான் அப்பவே சொன்னேன் !! இராமநாதன் வருங்கால மெகா சீரியல் கதாசிரியர் ஆக இப்பவே பயிற்சி எடுக்கிறார் என்று..
ஆனந்த்,
மெகா சீரியல் கதாசிரியர்கள் தான் தமிழ் நாட்டின், பண்பாட்டின் போக்கையும் பெரும்பாலான கணவன்களின் சாப்பாடு நேரங்களையும் நிர்ணயிக்கிறார்கள். அதனால், அவ்வளவு மோசமில்லை. :)
டாக்டராகி கொல்லணும், இல்லை சீரியல் கதாசிரியர் ஆகி கொல்லணும்..
நல்ல முடிவோடத்தான் இருக்கீங்க !
:-)
அப்படியே காஞ்சிபுரம் போனதை பத்தியும் எழுதி இருக்கலாம்.
ஆனந்த்,
கதாசிரியரான கொல்வதற்கான ஸ்கோப் பலமடங்கு அதிகமாகுதில்ல?
காஞ்சிபுரந்தானே? அடுத்த தொடர் எதைப் பத்தின்னு யோசிச்சுகிட்டிருந்தேன். இதையே போட்டுடவேண்டியதுதான்.
ஆகா ராமநாதன் பிரமாதம்.
மதுரை எனக்கும் பழக்கமான ஊர்தான். அங்கயற்கண்ணியைக் கண்டார் கண்ணெடார் என்று கலியுகப் புலவர் ஒருவர் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியாது போல. அந்தப் புலவர் நானென்று தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. உண்மையிலேயே பார்த்தால் பசி தீரும். சிவனைப் பார்த்தால் எளிமையாக இருப்பார். ஆனால் இந்தப் பாண்டிய ராணியின் அலங்காரம் அருமையும் அழகுமாய் இருக்கும். பீட்டர் பாண்டியன் கொடுத்த ஆபரங்களும் அதில் அடக்கம்.
அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் மதுரையில்தான். அத்தனை பெருமை அந்த ஊருக்கு. கதையோ கற்பனையோ....படிக்கச் சுகமே.
பழமுதிர்சோலைக்கும் போயிருக்கின்றீர்கள். நூபுரகங்கையையும் பார்த்து விட்டு வந்திருக்கலாம். நான் அடிவாரத்திலிருந்து நடந்துதான் மேலே ஏறுவேன். மிகவும் இனிய எளிய டிரெக்கிங் அது. வழியில் விற்கும் முந்திரிப் பழங்களும் கொடுக்காப்புளிகளும் சுவையோ சுவை.
அழகர்மலை விவகாரத்தில் ஒரு பழங்கதை உண்டு. உண்மையிலேயே கீழே இருக்கும் அழகர் கோயில்தான் முருகன் கோயில் என்றும் பிற்காலத்தில் அது அழகன் என்பதற்கான வடமொழிப் பெயரான சவுந்திரராஜன் என்ற பெயரோடு பெருமாளாய் ஆனதாயும் சொல்வார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஏனென்றால் பிற்கால நூல்களில் பழமுதிர்ச்சோலையைச் சொல்கின்றவர்கள் அழகர்மலையைக் கோடிட்டுக் காட்டுவார்கள். ஆனால் நக்கீரர் பழமுதிர்ச்சோலையைச் சொன்னவர் சவுந்தரராஜனைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. எது எப்படியோ...எல்லாம் ஒரே தெய்வம்.
ராமநாதன் பழமுதிர்ச்சோலை கோயில் மிகவும் சிறியதாக இருப்பதாகச் சொன்னீர்களே. அதற்கு அழகர் கோயிலும் ஒரு காரணம். மேலே கோயில் திருப்பணி செய்ய முற்பட்டால் இவர்கள் கேஸ் போட்டு முடக்குகின்றார்கள். ஒரு சின்னக் கோபுரம் கட்டுவதற்கு பழமுதிர்ச்சோலை கோயிலர்கள் பட்டபாடு இருக்கிறதே...அப்பப்பா...அதற்கு அழகர்கோயில்காரர்கள் செய்த இடைஞ்சலும் கொடுமையோ கொடுமை. அவர்கள் இது பழமுதிர்ச்சோலையே இல்லை என்று கூட வாதாடிப் பார்த்தார்கள் என்றால் நினைத்துப் பாருங்கள். கடைசியில் கோர்ட்டு தலையிட்டு கோபுரம் கட்ட அனுமதி கொடுத்தது.
அழகர்கோயிலில் பிரசாதமே தோசைதான். கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதை அப்படியே பிய்த்துத் திங்கலாம். சட்டியெல்லாம் ஒன்றும் வேண்டாம். அதைத்தான் பலகார ஸ்டாலில் வைத்து விற்கின்றார்களே. சாப்பிட்டிருக்கக் கூடாதா!

ராகவன்,
//பீட்டர் பாண்டியன் கொடுத்த ஆபரங்களும் அதில் அடக்கம்//
இவர் யார்?
// உண்மையிலேயே கீழே இருக்கும் அழகர் கோயில்தான் முருகன் கோயில் //
இது நான் கேட்டதேயில்லியே? திருப்பதி மாதிரி இங்கேயும் குழப்பமா?
//மேலே கோயில் திருப்பணி செய்ய முற்பட்டால் இவர்கள் கேஸ் போட்டு முடக்குகின்றார்கள்.//
இதுவேறையா? இவர்களுக்கு முருகன் கோயில் கோபுரம் கட்டினா என்ன? அருகருகில் இருந்தாலும் தனித்தனியாத்தானே இருக்கு? என்ன அரசியலோ?
ஓ.. கோயில் பிரசாதமா? நாங்க போனபோது நல்ல வெயில். அவசர அவசரமா திரும்பி ஓடிவந்ததில கவனிக்கல..
//பீட்டர் பாண்டியன் கொடுத்த ஆபரங்களும் அதில் அடக்கம்//
இவர் யார்?
இவர் பீட்டர் அல்லது பீற்றர் என்கிற வெள்ளைக்கார கலெக்டர். வெள்ளக்காரன் ஆட்சியில் இருந்திருக்கிறார். இவருதான் தஞ்சாவூரு கோயிலுக்குள்ள போய் வம்பு பண்ணி அம்மை போட்டு கண் போய், அப்புறமா வேண்டியதுக்கு அப்புறம் வந்ததாம். அதே மாதிரி மீனாட்சிதான் சிறுகுழந்தை வடிவில் வந்து தன்னையும் குடும்பத்தாரையும் மின்னல் தாக்கி இடிந்து போக இருந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்துக் காப்பாற்றியது என்று நம்பி, அவனும் நிறைய ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கின்றான். இன்றும் ஆண்டுக்கு ஒருநாள் பீட்டர் பேரில் பூஜை நடப்பதாகக் கேள்வி. ஆனால் என்றென்று விவரம் தெரியாது.
// இது நான் கேட்டதேயில்லியே? திருப்பதி மாதிரி இங்கேயும் குழப்பமா? //
அது எனக்குத் தெரியாது. ஆனால் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில் பிற்கால இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. திருமுருகாற்றுப்படை கொஞ்சம் படித்திருக்கிறேன். அதில் பழமுதிர்ச்சோலையை விவரிக்கும் நக்கீரர், கோயில், மலைவளம், அருவி என்று சொல்லிக் கொண்டு போகிறார். ஆனால் இன்றைக்கு அந்த அருவிக்கு நூபுரகங்கை என்று பெயர்.
// இதுவேறையா? இவர்களுக்கு முருகன் கோயில் கோபுரம் கட்டினா என்ன? அருகருகில் இருந்தாலும் தனித்தனியாத்தானே இருக்கு? என்ன அரசியலோ? //
தனித்தனிக் கோயில்கள்தான். தனித்தனிப் பராமரிப்புகள்தான். ஆனாலும் பிரச்சனைதான். இது பழமுதிர்ச்சோலையேயில்லை என்று சொல்லி வாதாடுகின்றார்கள். இப்பொழுதே இப்படியென்றால் அந்தக் காலத்தில் என்னென்ன வம்பு செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எது எப்படியோ எல்லாம் ஒரு தெய்வந்தான். எனக்குத் தெரிந்து ராமானுஜர் காலத்திற்குப் பிறகே திருமாலிருஞ்சோலை பெயர் பெறத்துவங்கியது என நினைக்கிறேன்.
தகவலுக்கு நன்றி ராகவன்.
ராமனாதன், நன்றாக கதை சொல்கிறீர்கள். மேலும் தொடர் எழுதுங்கள். நான் மதுரைக்காரன் தான். ஆனால் இந்த அழகர் கோவில் - பழமுதிர்சோலை விவகாரத்தைக் கேள்விப்பட்டதில்லை.
நன்றி குமரன்...
தொடர்ந்து வாங்க..
//// இது நான் கேட்டதேயில்லியே? திருப்பதி மாதிரி இங்கேயும் குழப்பமா? //
அது எனக்குத் தெரியாது. ஆனால் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில் பிற்கால இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. திருமுருகாற்றுப்படை கொஞ்சம் படித்திருக்கிறேன். அதில் பழமுதிர்ச்சோலையை விவரிக்கும் நக்கீரர், கோயில், மலைவளம், அருவி என்று சொல்லிக் கொண்டு போகிறார். ஆனால் இன்றைக்கு அந்த அருவிக்கு நூபுரகங்கை என்று பெயர்.
// இதுவேறையா? இவர்களுக்கு முருகன் கோயில் கோபுரம் கட்டினா என்ன? அருகருகில் இருந்தாலும் தனித்தனியாத்தானே இருக்கு? என்ன அரசியலோ? //
தனித்தனிக் கோயில்கள்தான். தனித்தனிப் பராமரிப்புகள்தான். ஆனாலும் பிரச்சனைதான். இது பழமுதிர்ச்சோலையேயில்லை என்று சொல்லி வாதாடுகின்றார்கள். இப்பொழுதே இப்படியென்றால் அந்தக் காலத்தில் என்னென்ன வம்பு செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எது எப்படியோ எல்லாம் ஒரு தெய்வந்தான். எனக்குத் தெரிந்து ராமானுஜர் காலத்திற்குப் பிறகே திருமாலிருஞ்சோலை பெயர் பெறத்துவங்கியது என நினைக்கிறேன்.
//
இராகவன்.
உங்களது இந்தக் கருத்துகள் இந்த இரு வருடங்களில் மாறி இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி மாறவில்லை என்றால் சிலப்பதிகாரத்தில் அழகர் மலையில் பெருமாளைக் காணும் மாங்காட்டு மறையோனைக் கேளுங்கள். தெளிவாகச் சொல்லுவார். :-)
இராமானுஜரின் காலம் சிலப்பதிகாரக் காலத்திற்கு வெகு காலத்திற்குப் பின்னால் என்று தான் நினைக்கிறேன். தவறு என்றால் சொல்லுங்கள். :-)
Post a Comment