160. வாழ்க வளமுடன்!

இரண்டு சம்பவங்கள். ஒன்றுகொன்று சம்பந்தமில்லாதவை.

ஆனாலும் சம்பந்தமுண்டு. இப்படிச் சொல்லி சில மாசங்கள் முன்னாடி இங்க விளையாட்டு நடந்துது. அது மாதிரி இது ரெண்டும். எனக்கு ஏதோ ஷங்கர் படம் பார்ப்பது போலிருந்தது இந்த ரெண்டு கதைகளையும் கேட்டுவிட்டு. ஒன்றும் சொல்லிக்கொள்கிறா மாதிரி இல்லை.

1) தெரிந்தவரொருவர் அவர் வளர்ந்த கிராமத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணினார். இப்போது பெருநகரங்களுக்கு அவரும் அவர் பிள்ளைகளும் குடிபெயர்ந்துவிட்டாலும், அவரின் பூர்வாங்க வீடு கிராமத்தில் தான் இருக்கிறது. அதை ஒரு முதியோர் இல்லம் மற்றும் இலவச மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென்று முடிவு செய்து பழைய கால வீட்டை நான்கைந்து லட்ச ரூபாய் செலது செய்து புனரமைத்து, மருத்துவமனை புதிதாய்க் கட்ட மேலும் சில லட்சங்களும், மாதந்தோறும் அதை நடத்த தேவையான பணத்தை corpus fund ஆகவும் போட்டு ஒரு அறக்கட்டளை நிறுவி, கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை அறங்காவலர்களில் ஒருவராக நியமித்தார்.

விஷயத்துக்கு வருவோம். இதில் இலவச முதியோர் இல்லம்/மருத்துவமனை நடத்த தேவையான தீயணைப்புத்துறை உரிமம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து உரிமம் மற்றும் இன்னபிற உரிமங்கள் சில பெற வேண்டியிருக்கிறது. உரிமம் தருவதற்கு தாசில்தார் சோதனைக்கு வரவேண்டுமல்லவா? ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நண்பரால் இங்கே வந்துபோவது நடக்கக்கூடியதா? அவர் அனுப்பிய ஆள் இந்த ஆபீஸுகளுக்கு போகும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாக்குபோக்கு சொல்லி இழுத்தடித்து வந்துள்ளனர். ஒருவழியாக வர ஒத்துக்கொண்ட தாசில்தார் கிளம்புமுன் அவரின் ஜீப் ட்ரைவர் "வண்டி ஸ்டார்ட் ஆகாது போலிருக்கு சார்" என்று பல்லவி பாட, அவரையும் 'கவனிக்கிறேன்' என்று நண்பர் சார்பில் சென்றவர் சைலண்டாய் சைகை காண்பிக்கவும், மேஜிக் போல் மக்கர் செய்த வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. டிரைவருக்கு நூறு ரூபாய். பைல் தூக்கி வந்த பியூனுக்கு நூறு ரூபாய் என்று அங்கேயும் இங்கேயும் தாசில்தார் ஆபீஸில் மட்டும் அழுதது ஐயாயிரம் ரூபாய்.

தீயணைப்புத்துறை, நண்பரின் நல்ல காலம், இளம் அலுவலர் ஒருவர் புதிதாய் பொறுப்பேற்றிருந்ததால் 'கவனிப்பு' எல்லாம் கேட்காமல் நேர்மையாய் வேலையை செய்துவிட்டார். ஏன் பணம் கொடுத்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்றால், நண்பரின் அவசரம் அவருக்கு. தன்னால் நேரடியாக எதையும் வந்து செய்ய முடியாது. அனுப்பும் ஆட்களும் மற்றவர்களுடையவர்கள். அவர்களையும் நிரந்தரமாக அலையவிட முடியாது. அதனால் கொடுப்பதை கொடுத்து வாங்க வேண்டிய சான்றிதழ்களை வாங்கிவிடவேண்டும் என்கிற அவசரம். இந்த ஐயாயிரம் ரூபாய் இன்னும் ஓரிரு நோயாளிகளுக்காவது/முதியோர்களுக்காவது பயன்பட்டிருக்கும்.

பொதுச்சேவைக்காக தன் சொந்த வீட்டையும் கொடுத்து, பணத்தையும் லட்சக்கணக்கில் செலவு செய்பவரிடம் 'அட்டை'களைப் போல பணத்தை உரியும் இந்த ஜந்துக்கள் வளமாகத் தான் வாழ்கிறார்கள். வாழட்டும்!

2) இது இன்னும் மோசம். இவரும் தெரிந்தவர்தான். வசதிகள் கொஞ்சம் குறைவுதான். இருபது வயது நிரம்பிய இவரின் மகன் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்துபோனார். அரசு பிரேதக் கிடங்கிலிருந்து பிரேதத்தை கொடுக்க போலிஸ் அனுமதி தரவேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கின்றனர். ஆனால், சென்றவர்களிடம் எல்லாம் சேர்த்து பார்த்ததில் எழுநூற்றி சொச்சம் தான் இருந்திருக்கிறது. பிரேதத்தை வாங்க வந்தவர்களிடம் ஆயிரம் ரூபாயை வைத்துவிட்டுத்தான் நகரவேண்டும் என்று அடாவடி செய்த போலிஸாரிடம் நியாயம் கேட்க.. அவர்கள் சொன்னது 'என்ன ஊர் உலகத்துல எல்லாரும் பணம் கொடுத்துதானே எடுத்துகிட்டு போறான். உங்களுக்கு மட்டும் என்ன தனியா சொல்லி வாங்கிக்கணுமா.. பணத்த வச்சுட்டு நகருய்யா'. இவர்களிடம் முட்டைகோஸ் வியாபாரம் போல் பேரம் பேசி கடைசியில் எழுநூற்றியைம்பது ரூபாய்க்கு தங்கள் ரேட்டை பெரியமனது செய்து குறைத்துக்கொண்டு பிரேதத்தை எடுத்துச் செல்ல அனுமதி தந்துள்ளனர் போலீஸார். எல்லாரும் நல்லா இருங்கய்யா! இந்தியா உருப்படும்.



இதைப் போன்ற அரக்கர்களை 'சோரிகக்கக் கூரகட் டாரியிட்டோரிமைப் போதினிற் கொல்ல' அந்த முருகன் என்று வரப் போகிறானோ. அதுவரை எல்லோரும் வளமுடன் வாழட்டும்!

வெண்டைக்காய் - யாருக்காவது தெரியுமா?

அய்யாமார்களே! அண்ணிமார்களே! அக்காமார்களே!

தமிழ்நாட்டுல ஏதோ ஒரு கோயில்ல - அம்மனா, பெருமாளா, சிவனான்னு கூட தெரியாது. எந்த ஏரியான்னும் தெரியாது. - வெண்டைக்காய வச்சு அபிஷேகம் பண்ணுவாங்களாம். அதுதான் அந்த ஊர் கோவில்ல விசேஷமாம்.

இது எந்த ஊருன்னு யாருக்காவது பதில் தெரிஞ்சா இங்க பின்னூட்டமாகவோ, அல்லது தனிமடலிலோ சொன்னீங்கன்னா, போடற வெண்டக்காய்ல உங்க பேரையும் சொல்லி ரெண்டு சேர்த்து போடுவேன்.

வெண்டைக்காய் மட்டும் உசத்தியா? நம்மளோட புடலங்காய் விளையற பூமியில வெள்ளக்காரன் கொண்டு வந்த பீன்ஸ், வெண்டை, கேரட்டுக்கு என்ன அபிஷேகம் வேண்டிக்கிடக்குன்னு கேட்க வேண்டியவங்களும், வெண்டை மேல பட்டா வராத தீட்டு முட்டகோஸ் பட்டா மட்டும் வருமான்னு கேக்க நினைக்கறவங்களும் ஒருத்தருக்கொருத்தர் தாராளமா சாத்வீக முறையில பேசிக்கலாம்.

ஆனா, நடுவுல கேள்விக்கும் பதில் சொல்ல மறந்துடாதீங்கய்யா...

நன்றி

158. காலமெல்லாம் காதல் வாழ்க!

நீண்ட நாளாய் கையோடு கைகோர்த்து விளையாடியவள் சிறுவயதிலிருந்தே!
என் தோழி! அவளைத் அன்பாய் கொஞ்சாமல் ஒருநாளும் இருந்ததில்லை!
அப்போதும் நான் இராமனாயில்லை! அவளுக்கே மட்டுமாகவும் இல்லை!
காலமோர் சகுனியாகி என்னை அவளிடமிருந்து பிரித்தது!
நான் அவளை மறந்தேன்! நாளும் பொழுதும் வேறுசுகம் கண்டேன்!
குளித்தெழுந்தேன்! அமிழ்ந்தேன்!

இன்று மீண்டு வந்தேன் மீண்டும் வெட்கமில்லாமல்!
அவளருகே! என்னச் சொல்லப்போகிறாளோ
என்று பயந்தபடி உரிமையுடன் செல்லமாய் தட்டினேன்!
எட்டி ஓடுவாள் என்று நினைத்தவள் நகராமல் நின்றாள்!
நின்றிருந்தாலும் பரவாயில்லை! என் காலில் சட்டென விழுந்தாள்!

என் மனம் பதைபதைத்தது! நான் செய்த பாவத்திற்கு
அவள் விழுவதா? நானல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்?
பலவாண்டு ஒன்றாய் பழகி, பின் திடுமென தனியாய்
நட்டாற்றில் விட்டு என்வேலை பார்க்க ஓடினேனே!

விழுந்தவள் அங்கேயே கிடந்தாள்! என் கைகளால்
அவளை அள்ளி எடுத்தேன்! என் கண்களில் நீர் ஏனோ வரவில்லை!
அவளின் அழகிய மஞ்சள் நிறம் என்னை மயக்கியது!
அன்றைக்கு எதில் கட்டுண்டு விழுந்தேனோ, அதே மஞ்சள்!
அதே கட்டு! உடற்கட்டு கொஞ்சமும் சீர்குலையாமல்!

அடடா! அடாடாடா! அவள் அழகுருவை வடிவமைத்த பிரம்மாக்களுக்கு
மானசீக நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் செல்லமாய் தட்டினேன்!
இடைவெளி கடந்தும் காதல் வாழும் என்று நிருபிக்க
இந்த முறை சீறிப்பாய்ந்தாள் நெட்டைத் தாண்டி!
வில்சன் என்னும் என் காதலி!

----
கவிதைங்கறதுக்கு அத்தாட்சியா வரிக்கு வரி ஆச்சரியக்குறி (!) போட்டிருக்கேன். சரிதானப்பா?

 

வார்ப்புரு | தமிழாக்கம்