2006 க்கு ஒரு நொடி பொறுமை காக்கவும்!

முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த வருடம் பூமியின் புண்ணியத்தால் மாஜிக் போல நமக்கு ஒரு leap second கிடைத்திருக்கிறது. அதாவது நேரத்தின் வேகம் குறைந்து, இன்றைக்கு ஒரு நொடி நீளப்போகிறது.

காரணம் நிலவின் புவியீர்ப்பு சக்தியால் பூமியின் சுழற்சியின் வேகம் குறைகிறது. பதறத்தேவையில்லை. உடனே பூமி நின்றுவிட்டால் நம் கதி என்னவென்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல மில்லியன் வருடங்கள் கழித்துத்தான் இருபத்துநான்கு மணிநேரம் இருபத்தைந்து மணி நேரங்களாகும்.

இந்த ஒரு நொடி சரியாக இன்று இரவு GMT 0000க்கு கூட்டப்படும். அதாவது 2359லிருந்து 0000க்கு மாற வழக்கத்திற்கு மாறாய் பூமியின் புண்ணியத்தில் 61 நொடிகள் இருக்கும். நம்பிக்கையில்லையென்றால் சோதித்துப்பார்த்துவிட்டு அந்த லீப் நொடியை உருப்படியாய் செலவு செய்த்தாக பிறகு பெருமையும் பட்டுக்கொள்ளலாம்.

மீண்டும் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


Slowing planet affords us an extra second

ரஷ்யாவின் துருப்புச்சீட்டு: 1 - Gazprom

Gazprom என்பது ரஷ்ய அரசினால் (க்ரெம்ளின் தலைகளால் என்று படிக்கவும்) நடத்தப்படும் நிறுவனம். ரஷ்யாவின் மிகப்பெரியது என்பதுடன் உலகிலேயே இயற்கை எரிவாயுவில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம். உலகின் 25 சதவிகித இயற்கை எரிவாயு கிணறுகளை தன்வசம் கொண்டுள்ளது. க்ரெம்ளினின் பல பெரும் தலைகள் காஸ்ப்ரோமின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள். அதனால் க்ரெம்ளினை எதிர்க்கும் எந்தக் குட்டி கம்பெனியையும் ஸ்வாஹாஹா பண்ண காஸ்ப்ரோமின் பணபலம் பயன்பட்டுவந்தது.

சிறந்த உதாரணம் தன் வியாபாரத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத NTV தொலைக்காட்சி ஐ அதன் எதிர்க்கட்சி சார்பிற்காக forceful ஆக க்ரெம்ளினின் ஆணையின்பேரில் கைப்பற்றியது சில வருடங்களுக்கு முன்னர் உலக அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. பயனொன்றும் தான் இல்லை. இன்றைக்கு NTV அரசின் புகழ்பாடும் பல்வேறு ஊடகங்களில் ஒன்றாகிவிட்டது.

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளுக்கு மிகக்குறைந்த விலையில் எரிவாயுவை விற்றுக்கொண்டிருந்தது காஸ்ப்ரோம். அந்த நாடுகளில் உக்ரைனும் அடக்கம். இப்போது புதிய பிரச்சனை வெடித்து காஸ்ப்ரோமின் பக்கமும் க்ரெம்ளின் ஆளுமையின் பக்கமும் சர்வதேச ஆர்வத்தை திருப்பியிருக்கிறது. பிரச்சனை இதுதான். இதுவரை ஆயிரம் சதுரமீட்டர் எரிவாயுவிற்கு ஐம்பது அமெரிக்க டாலர்கள் என்று இருந்த விலையை திடுமென இருநூற்றிமுப்பது அமெரிக்க டாலர்கள் என்று தடாலடியாக ஏற்றியிருக்கிறது. உலக எரிவாயு விலைகளுக்கு சமமாக விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில்தான் விலையுயர்த்தப்பட்டது என்பது காஸ்ப்ரோமின் கருத்து. இந்த விலையுயர்வும் பொதுவானதாய் இல்லாமல் நாடுகளுக்கு தக்கவாறு arbitraryஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஆர்மேனியா, ஜியார்ஜியா போன்ற நாடுகளுக்கு நூறிலிருந்து நூற்றைம்பது டாலர்கள் வரை விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மிகவும் நட்புநாடான பெலாரஸுக்கு நாற்பத்தியேழு டாலர்கள் என்ற தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று காஸ்ப்ரோம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மட்டுமே அதிகபட்சமாக இருநூற்றிமுப்பது டாலர்கள். உக்ரைன் இந்த விலையை அளிக்கவேண்டும் இல்லை ஐரோப்பாவிற்கு உக்ரைன் வழியாகச் செல்லும் எரிவாயுக்குழாய்களில் பங்குகளோ அல்லது மொத்தமாகவோ உக்ரைன் காஸ்ப்ரோமிற்கு தருமானால் விலை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் காஸ்ப்ரோம் கூறியிருக்கிறது. பெலாரஸுக்கு அளிக்கப்படும் சலுகைக்கு குழாய்கள் மீதான் உரிமையை அந்த நாடு விட்டுக்கொடுத்ததால் மலிவான விலையென்றும் சொல்லப்படுகிறது.

மேலும் உக்ரைன் இந்த விலையுயர்வுக்கு உடன்படாவிட்டால் ஜனவரி ஒன்றாம் தேதி காலை பத்துமணிக்கு உக்ரைனுக்கு அளிக்கப்படும் எரிவாயு நிறுத்தப்படும் என்று காஸ்ப்ரோம் அறிக்கைவிட்டது. அதன்பின்னர் இரண்டு புறங்களும் மாறி மாறி அறிக்கைகளில் அடித்துக்கொண்டனர். உக்ரைன் தன் பங்குக்கு Black Sea இல் இருக்கும் செவாஸ்தப்போல் என்னும் துறைமுகத்தில்தான் ரஷ்ய கடற்படையின் Southern Fleet இருக்கிறது. இதற்கான வாடகையை உயர்த்தும் எண்ணத்தில் உக்ரைன் இருப்பதாய் அறிக்கைவிட்டது. அதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அதுவே மேலும், ஐரோப்பாவிற்கு காஸ்ப்ரோம் வழங்கும் எரிவாய் உக்ரைனின் குழாய்கள் வழியேதான் செல்கிறது. அவ்வாறு காஸ்ப்ரோம் அனுப்பும் எரிவாயுவில் பதினைந்து சதவிகிதம் வரை தனக்கென எடுத்துக்கொள்ள குழாய் உரிமையாளர் என்ற வகையில் உரிமை இருப்பதாக அறிவித்தது. அப்படி செய்வது திருட்டு என்று காஸ்ப்ரோம் பதிலறிக்கை விட்டது. மேலும் இந்தவகையில் உக்ரைன் திருடினால் Arbitration Institute of the Stockholm Chamber of Commerce க்கு இப்பிரச்சனையை எடுத்துச்செல்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென்றும் எச்சரித்தது.

இதற்கு நடுவில் இதுவரை மௌனம் காத்துவந்த ரஷ்ய அதிபர் பூடின் நேற்று உக்ரைனுக்கு இந்த விலையேற்றத்தை சமாளிக்க ரஷ்யா மூன்றரை பில்லியன் டாலர்கள் வரை கடனாய் வழங்கத் தயாராக இருப்பதாய் அறிவித்தார். மேலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயத்தை உலகச்சந்தியில் சிரிக்கவைத்துவிட்டதாய் இரண்டு தரப்புகளையும் கடிந்தும் கொண்டார். ஆனால் அவரின் கடன் தேவையில்லை என்று உக்ரைன் நிராகரித்துவிட்டது.

இந்த வருடத்திய குளிர்காலத்தை ஓட்டிவிடும் அளவிற்கு உக்ரைனிடம் கைவசம் எரிவாயு இருக்கிறதெனினும் காஸ்ப்ரோம் சொன்னவாறு எரிவாயுவை நிறுத்திவிட்டால் பிரச்சனை வராமலிருக்க, கவனமாய் உபயோகப்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டியிருக்கிறார் உக்ரைனிய அதிபர் யூஷென்கோ. பிரச்சனையின் குறியே அவர் தான் என்பதுதான் இதில் காமெடி. மிகவும் நீண்டுவிட்டதால் இதற்கு பின்னாலிருக்கும் அரசியலை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

28/12 - நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகளில் உங்களுடையதும் இருக்கலாம். சமூகத்தில் மிகுந்த அவமானமும் மன அழுத்தமும் என்றென்றைக்கும் கொடுக்கவல்லன இவை. இவ்வளவு சின்ன சமாச்சாரம் என்று புறந்தள்ள முடியாது. ஏனெனில் இவற்றால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் கண்டிப்பாய் ஏற்படும். பெரும்பாலான சமயங்களில் உங்களின் social interaction குறைந்துபோக இவைகளில் ஒன்றே காரணியாக இருக்கும். இன்னும் தீவிரமான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்புக்கே கூட வேட்டு வைக்கும் சக்தி பெற்றன இவை. மிகவும் முற்றிப்போனால் கண்டிப்பாய் நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்ல வேண்டும். ஜோக்காக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள்.

கீழேயுள்ள சுட்டியிலுள்ள பத்தியின் முதல் சிலவரிகளின் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளேன்.

மேலதிக விபரங்களுக்கு
சுட்டி

தத்து(பி)த்துவம் - 3: Extinction - R

முதல்ல ஒரு புது பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கு பத்தி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இந்தோனேசியாவில் இருக்கும் போர்னியோ பகுதில பூனை சைஸுக்கு இருக்கும் இந்த புதுவகை மிருகம் காமிராவில மாட்டியிருக்கு. இருக்கறது ரெண்டே ரெண்டு போட்டோதான். லீமர் (Lemur) என்று அழைக்கப்படும் வகை தான் இது என்றும் இல்லை கீரிப்பிள்ளைப் போன்றது என்றும் சொல்வோர் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இது புது வகை மிருகம் தான் நம்பறாங்க. இதுவரைக்கும் உயிரோட பிடிக்க முடியவில்லை. அதுக்கப்புறந்தான் சந்தேகம் நிரந்தரமாத் தீரும். முழுசா பிடிக்கணும்னு கூட இல்லை. அதோட முடியோ, கழிவுகளோ கிடைச்சா கூட போதும். டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் என்ன வகைன்னு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இப்ப வரைக்கும் இது மாமிசபட்சினியாக இருக்கும்னும், prehensile tail இருப்பதால் arboreal ஆக இருக்கலாம்னும் யூகிக்கறாங்க. Stephan Wulffraat கறவர் தான் WWF சார்பா இந்த குழுவை வழிநடத்துகிறார். எதுக்கு இவ்வளவு முக்கியமா இதுபத்தி பதிவுன்னு கேக்கறீங்களா? கடைசியா இவ்வளவு பெரிய புது விலங்கினம் கண்டுபிடிச்சு நூறு வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது!
Al-Jazeera

உலகிலேயே மொத்தமா 5000 பாலூட்டி ஸ்பிஸீஸ்கள் தான் இருக்கின்றன. ஆனா, இதப் பத்தி உண்மை தெரியாமலேயே கூட போய்விடலாம். ஏன்னா, இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட காடுகளை அழித்து உலகின் மிகப் பெரிய பனை எண்ணெய் தோப்பை உருவாக்க இந்தோனேஷிய அரசு முயன்று வருகிறது. 1.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் (தமிழ்நாட்டின் பரப்பளவில் 15%!). தவிரவும் வருடாவருடம் முறையற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் மட்டுமே 2.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் காடுகள் அழிக்கப்படுகின்றன (தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் 20% வருடாவருடம்!). இவற்றை எதிர்த்து WWF ம் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்களும் போராடி வருகின்றன. இதுவரை விடியலில்லை. இதுவெறும் இந்தோனேஷியாவில் மட்டுமல்ல தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டம், இந்தியத்துணைக்கண்டம்னு எல்லா பகுதிகளிலும் 15million ஹெக்டேர்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் ஆயிரக்கணக்கான வகை உயிரினங்களை விரைவில் ஜூக்களில் மட்டுமே நம் பிள்ளைகள் பார்க்கமுடியுமென்ற நிலைக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.

கடந்த நானூறு ஆண்டுகளில் மட்டும் 89 பாலூட்டி விலங்கினங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 169 பாலூட்டி இனங்களை Critically Endangered என்று வகைப்படுத்தி அவற்றையும் சீக்கிரமே பரமபதம் அனுப்பவும் முயன்றுகொண்டிருக்கிறோம். எல்லாவகை உயிரினங்கள் என்று கணக்கிலெடுத்தால் (நுண்கிருமிகள், காளான்கள் முதல் திமிங்கிலங்கள் வரை) ஆண்டுதோறும் 27,000 வகை உயிரினங்கள் அழிந்துவருவதாய் பயமுறுத்துகிறார்கள். 27,000. ஓவ்வொரு ஆண்டும்! அதாவது சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு விலங்கு வகை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. கடைசி வரியை திரும்ப படித்துப்பாருங்கள். பார்த்துவிட்டு படிப்பதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசியுங்கள். பிரச்சனையின் தீவிரம் எளிதாகப் புரியும். இதே விகிதத்தில் சென்றால் இன்னும் நூறே ஆண்டுகளில் இப்போதுள்ள உயிரினங்களில் சரிபாதி அழிந்திருக்குமென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

extinct ஆவது ஒன்றும் இயற்கைக்கு மாறானதல்ல. உலகம் தோன்றியதிலிருந்து 99.9% உயிரினங்கள் அழிந்து மீண்டும் புதிய இனங்களாக உருவெடுத்துத்தான் வந்திருக்கின்றன. ஆனால் விகிதமே பிரச்சனை. ஒரு இனம் அழிந்து அதற்கு ஈடாக புதிய இனம் மூலம் replenish ஆவதற்கு 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் வரை பிடிக்கும். 200,000 மனித தலைமுறைகள்! இதுதான் பிரச்சனையே. பொருளாதார, அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் குறைந்தபட்ச ஆயுள் நீடிக்கிறது. இதனால் ஒரு vicious cycle ஆக மக்கட்தொகை விண்ணை நோக்கி பாய்கிறது.

பெருகப்பெருக நகரங்களில் இடமின்றி, resources காகவும், இருக்க இடத்திற்காகவு சகட்டுமேனிக்கு காடுகள் அழிப்பது அதிவேகமாய் நடந்துவருகிறது. இந்த 5,700 கோடி மக்கள்தொகைக்கே இவ்வளவு என்றால், இன்னும் நாற்பத்திமூன்றே ஆண்டுகளில் 10,000 கோடியாகிவிடும் என்கிறது ஒரு கணிப்பு. அதுவரை எத்தனை இனங்கள் தாக்குப்பிடிக்குமோ என்று தெரியவில்லை.

நம் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சூழலான சுந்தர்பன்களில் பெங்கால் புலிகளின் மொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டாது என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பேரழிவை சீக்கிரம் தடுத்து நிறுத்தாவிட்டால் காடுகளும், அதனோடு கூடவே பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான். அடுத்த செய்தியில் உள்ள உயிரினம் இதற்கு ஒரு எச்சரிக்கை மணி. மனிதனின் அழிக்கும் சக்திக்கு ஒரு அருமையான உதாரணம்.

மோரீஷியஸின் டோடோ (போர்த்துகீஸ் மொழியில் முட்டாள் என்று அர்த்தம்) (Raphus cucullatus) பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சுமார் 20 கிலோ வரை எடையும், மனிதர்களை கண்டால் பயப்படாத தன்மையும், பறக்கமுடியாதவையாகவும் இருந்தன. பறக்கமுடியாததால் எளிதில் உணவாகின. மனிதர்களுக்கல்ல. காலனியாளர்கள் கொண்டு வந்த மற்ற மிருகங்களினாலும், தமது காடுகள் அழிக்கப் பட்டதாலும். மோரிஷியஸில் பல மில்லியன் ஆண்டுகள் எந்த இன்னலுமின்றி வாழ்ந்து வந்த டோடோக்கள் (natural predators இல்லாததால்; மோரிஷியஸ் காலனியாளர்களுக்கு முன் uninhabited ஆக இருந்தது) 1600 -களில் முதல் டச்சுக்கள் வந்து எண்பதே ஆண்டுகளில் மொத்த டோடோ இனத்திற்கும் பரலோக டிக்கெட் கொடுத்துவிட்டனர். வெறும் 80 ஆண்டுகள்.

மேலும் விவரங்களுக்கு,
Red List
Bagheera

---
சரி நம்ம தத்து(பி)த்துவத்துக்கு வருவோமா? என்னுதில்ல. எங்க படிச்சதுன்னு நினைவில் இல்லை.

மனிதனே இவ்வுலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலும் most adaptible, most sentient, most intellectual இனமா? அதாவது நாமே மற்ற்அ ஜீவராசிகளைவிட முதன்மையானவர்களா?

ஒரு பாக்டீரியாவை எடுத்துக்கொள்ளுவோம். ஒரே செல் உயிரினம். எல்லா இனங்களும் இருப்பது இனப்பெருக்கத்திற்காகத்தானே உயிரியல் படி பார்த்தால். தங்களின் ஜீன்கள் அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டால் பயலாஜிக்கலாக நம் கடமை முடிந்துவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு வாழ்வில் ஒரு headstart கொடுக்கலாம். அதுவும் எல்லா உயிரினங்களும் செய்வதில்லை. 'இருப்பது (live)' 'இனப்பெருக்கம்' இந்த ரெண்டுத்தையும் ஒரு ஒரே செல் உயிரினம் நம்மைவிட பலமடங்கு அருமையாக செய்து கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து எங்கும் வியாபித்திருக்கின்றன. நமக்குள்ளும் வெளியும் என பாக்டிரியாக்கள் இல்லாத இடத்தை இந்த உலகில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை. ஆனால், இதே பயாலாஜிக்கல் கடமைக்கு நமக்கு பில்லியன்கள் கணக்கில் செல்கள் தேவைப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பொருட்களின் எவல்யுஷ்னைப் பார்த்தால் உண்மை எளிதில் விளங்கும். ஒரு அறை சைஸில் இருந்த கணினிகள் இன்று கையடக்கமாகிவிட்டன. ஆக, போகப்போக பொருட்களின் அளவு குறைகின்றது. ஆனால் திறன் அதிகரிக்கிறது. ஆகவே, பாக்டிரியாக்கள் மனித இனத்தை விட மேன்மையானவை.

இது எப்டி இருக்கு?

Merry Christmas!

தத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி

பிஸியாலஜி என்பது என்னன்னு உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் உடலிலுள்ள உறுப்புகளின் செயற்பாடுகளை பற்றிய படிப்பாகும். (science of the normal functions of the body, its organs, systems : physios - nature; logos - study). ரொம்ப ரொம்ப சுருக்கமா கண்/பார்வை பற்றி. கொஞ்சம் ஆங்கிலத்திற்கு தாவலாமா? தங்கிலீஷுல எழுதறத விட இது மேல்னு நினைக்கிறேன். புரியறதுக்கு கஷ்டமா இருந்தா ரொம்ப வருத்தப்படாதீங்க. எவ்வளவு சிக்கலானது, எத்தனை நிலைகளுக்கு பின்னர் நாம் 'பார்க்கிறோம்' என்பதை காட்டவே பின்வருவது.

1. Retinal Photoreceptor layer

a. rods
i. absorb light
ii. do not differentiate color (only shades of greys)
iii. sensitive to low light levels
iv. more present in peripheral areas of retina (outside central fovea)

b. cones
i. absorb light of particular wavelengths (red, green, or blue)
ii. less sensitive in low light levels
iii. concentrated in central fovea

2. "Dark current" in photoreceptors

a. Na+ (sodium) stay open in photoreceptor when NO LIGHT is being absorbed
b. constant current of Na+ into cell keeps photoreceptor MOST ACTIVE IN DARKNESS
c. active photoreceptor (in dark) continually releases inhibitory neurotransmitters onto neuronal cells in retina

3. Light reactions

a. light photon absorbed by retinal
b. opsin releases "energetic" retinal ("bleaching")
c. opsin then activates transducin molecule
d. active transducin activates phosphodiesterase enzymes
e. active phosphodiesterase enzymes cause Na+ CLOSURE
f. Na+ channel closure reduces "dark current"
g. photoreceptor releases less of the inhibitory neurotransmitters onto neuronal retinal cells
h. neuronal retinal cells fire action potentials, carried by optic nerve to brain...

இது தான் 'பார்ப்பது'இனி என்னென்ன பாகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று பார்ப்போமா..
After passing through cornea, lens and finally Retina, the information is transmitted to the optic disc and onto the optic nerve. The Optic Nerves from both eyes are then criss-crossed and straightened out at a point called Optic Chiasma. From there, passes on to a part of brain called Thalamus. The thalamus then passes the information to visual cortex (occipital lobe: rear brain). Then midbrain also receives information from where reflexes are regulated.

என்ன, போரடிச்சுடுச்சா? இது ஒரு பெரிய கடலில் ஒரு சாம்பிள். இந்த மாதிரி உணர்வுகள், உணவு, மூச்சு, இதயம், ரத்தஓட்டம், வளர்ச்சி என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இதெல்லாம் எதுக்கு இப்போ? தம்பட்டமா? இல்லை. இல்லை.. நம்ம தத்து(பி)த்துவத்துக்கு அடிப்படையே இதுதான். இத வச்சு பிஸியாலஜி பேராசிரியரை கலாய்ச்சதுண்டு.

அதாவது, பரிட்சையில் கேள்வி வருதுன்னு வச்சுக்குங்க. நாம எப்படி பார்க்கிறோம்-கறதுன்னு? அப்ப பதில் சொல்லத் தெரியலேன்னு வச்சுக்குங்க. ஆனாலும் அவங்க ஒங்களுக்கு 100/100 போட்டுத்தான் ஆகணும். எப்படின்னு யோசிச்சா அதுல தத்துவமே இருக்குது. மேலே சொன்ன பார்வை விஷயத்த பத்தி உங்களின் அறிவு 0. ரெட்டினான்னா என்ன ரொட்டியோட கஸினா, தாலமாஸ்னா பொடிமாஸ் மாதிரியா அப்படின்னு கேக்கற அளவு நம்ம அறிவுன்னு வச்சுக்குங்க. இருந்தாலும், 'பார்க்கிறோமா' இல்லியா? மேலே சொன்ன ஒரு விஷயமும் உங்களுக்கு சொல்லத்தெரியாட்டியும், உங்க மூளைக்கு என்ன செய்தா பாக்க முடியும்னு தெரியுமா தெரியாதா?

இன்னொரு உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் அதிகமாச்சுன்னு வச்சுக்கோங்க. அத எந்த பேரோமீட்டர் வச்சு அளக்கனும், எது நார்மல் அளவு, இவ்வளவுக்கு மேலே போனா எந்தெந்த ஸ்விட்ச தட்டிவிடனும், அதனால எப்படியெல்லாம் திரும்பவும் நார்மலுக்கு கொண்டுவரணும் எல்லாம் மூளைக்கு தெரியும்தானே?

படிக்கிறது எதுக்கு? மண்டையில ஏறறதுக்கு? ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்த திரும்ப படிக்க வேண்டிய அவசியமில்லேல்லியா? தெரிஞ்சிருக்கிற விஷயத்த வெளியில் எப்படி சொல்லணும்னு தெரியல அவ்ளோதான். அதுதானே பிரச்சனை? வெறும் communication gap மட்டுந்தானே? அதனால பிஸியாலஜி படிக்க தேவையில்ல. என்ன, லாடுலபக்கு சாயல் வருதா? :))

Owning Mahowny

போன வருடம் வந்த படம். Bowling for Columbineஉடன் காம்போவில் திருட்டு டிவிடி கிடைத்தது! BFC பத்தி சொல்லவேண்டாம். மைக்கேல் மூரின் மற்றுமொரு ஜெம். தனிப்பதிவு போடுவது மட்டுமே will do justice. அது பின்னர். இந்த Owning Mahowny பற்றி ஒன்றுமே தெரியாதபோதும், Philip Seymour Hoffman நடிப்பதால் மோசமாய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வாங்கியாகிவிட்டது. என்ன பெரிசா.. 2.5$. இருந்தாலும், கலெக்ஷன்னு வரப்போ பாத்து வாங்கனுமில்லியா?

ஒரு gambling addict ஆன வங்கிப் பணியாளர் பற்றியது கதை. இது உண்மைக்கதை. Brian Molony என்ற கனடியர் மஹோனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மின்னி ட்ரைவர் அவரின் கேர்ள்பிரெண்ட்.

பதவியுயர்வு பெற்றாலும் டப்பா காரில் உலா வரும் ம்ஹோனிக்கு ஒரே வீக் பாயிண்ட். சூதாட்டம். சின்ன அளவில் $10 ஆயிரத்தில் ஆரம்பிக்கும் அவரின் கையாடல், 10.2 மில்லியன் டாலர்களுக்கு உயர்கிறது. அதுவரை வங்கியோ, மற்றோரோ அவரை சந்தேகப்படாதது வியப்பளிக்கிறது. Atlantic Cityயில் ஒரு காஸினோவின் வி.ஐ.பி ஆகிறார். லாஸ்வேகாஸிற்கும் பரவுகிறது அவரின் அடிக்ஷன் நோய்.

ஹாஃப்மான் மிக நிதானமாக non-confrontationalஆக வாழ்ந்திருக்கிறார். அதிர்ந்து பேசாத, அமைதியான கேரக்டர். அவருக்குள் இத்தனை கொடுரமான சூதாட்ட அடிக்ஷன் இருக்குமென்பது நினைக்கவும் முடியாது. "He wins so he can lose more". "the only lady he believes in is Lady Luck" என்பது போன்ற நச் வசனங்கள். நமக்கு கதாநாயகன் மேல் ஒருவித சிம்பதி வரும்படி மிக அருமையான நடிப்பு. மின்னி டிரைவர் சராசரி கேர்ள்பிரண்ட்.

இந்த படம் சூதாட்டம் என்பதல்லாமல், என்ன வகை அடிக்ஷன் ஆக இருந்தாலும், சோபித்திருக்கும். மது, போதைமருந்து போன்ற எதுவானாலும். காரணம், ஜெயிப்பதோ தோற்பதோ அடிக்டின் goalஅல்ல. மாறாக, playing-ஏ. அதுவே எல்லா அடிக்ஷன்களுக்கும் அடிப்படை. ஒரு dealஉக்கு 10 ஆயிரம் டாலர்கள் வைத்து விளையாடும் விபரீத விளையாட்டு ஆடுகிறார். அவரிடம் அவ்வளவு பணம் கிடையாது. பணம் வர வழி. வங்கியில் கையாடல் தான். ஹாஃப்மேனின் நடிப்பிற்காகவே பார்க்கவேண்டிய படம்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இம்மாதிரி சிக்கல்களில் மாட்டியிருக்கிறோம். அது போதை, சூதாட்டம் என்று இருக்க தேவையில்லை. ஆனால், சில விஷயங்களுக்காக எந்த காரியமும் செய்யத் துணிந்திருக்கிறோம். அதனால் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வருமாயினும், சில நொடி இன்பத்திற்காக வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு அவ்வகை எண்ணங்கள் வரும்போது நம்முடைய reasoning நம்மை தடுத்தாட்கொண்டிருக்கிறது. அவ்வாறு ரீசனிங் செய்ய முடியாத ஒருவரின் கதை. கண்டிப்பாக பாருங்கள்.

---
கூடவே பார்த்த படங்கள்
HP & Goblet of Fire - நல்லா இருந்தது. ஆனா அஸ்காபான் அளவுக்கு பிடிக்கவில்லை

Batman Begins - மஷினிஸ்டில் நடித்த க்ரிஸ்டியன் பேலா? அட்டகாசம்.

Manchurian Candidate - பரவாயில்லை.

The Shining - Jesus. Must Watch! Jack Nicholson. Period!

15/12 - கணக்குப் புலிகளா நீங்க?

இந்தவாரம் தத்து(பி)த்துவ வாரம் போலிருக்கு. என் பங்குக்கு.

சரி, 1=2 அப்டின்னு நிருபிக்க முடியுமாங்கறது கேள்வி.

முதல்ல,
a=b

அப்புறம் a ஆல் பெருக்குவோம்.
a*a=b*a

அத இப்படியும் எழுதலாமில்லியா?
a^2=ab


b^2 ஐ ரெண்டு பக்கத்திலேர்ந்தும் கழிப்போம்.
a^2-b^2=ab-b^2

a^2-b^2 பார்முலா பல யுகங்களுக்கு முன்னாடி படிச்சது நினைவுக்கு வருதா? அப்படியே வலப்பக்கத்திலேர்ந்து b ய வெளியில எடுப்போம். அப்ப,
(a+b)(a-b)=b(a-b)

ரெண்டு பக்கமும் இருக்கற (a-b) அடிச்சிட்டா,
(a+b)(a-b) = b(a-b)

a+b=b

இதையே மாத்தினா
b+b=b
2b=b

இப்போ என்ன வருது???
2=1


என்ன.. கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாத்தானே வருது?:))

ஸ்கூல் படிக்கும்போது என் நண்பன் ஒருவன் சொன்னது. அவன் தான் கண்டுபிடிச்சானானு தெரியாது. ஆனா, சுவாரசியமா இருந்தது. இப்பவும். ஏன்னா, நமக்கும் கணக்குக்கும் அவ்ளோ தூரம். என்ன மாதிரி எத்தன கணக்குப்புலிகள் இருக்குன்னு தெரிஞ்சிக்க வேணுமில்ல? அதனால உடனே விடைய போட்டு உடச்சிடாதீங்க. :)

கொம்பா முளைச்சிருக்கு? ver 2.0!

இது சுஹாசினி பற்றிய பதிவல்ல. பின்னூட்டங்களில் சிலரின் கருத்துகளை (குறிப்பாய் ஷ்ரேயா) பார்த்தபின் முழுக்க ஆராயாமல் இந்த கொம்பா முளைச்சிருக்கு பதிவை இட்டிருப்பேனோ என்று சந்தேகம் வந்ததால் மீள்பதிவு. பதிவில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. பின்னூட்ட கருத்துகளை பற்றி இன்னும் சிலரின் கருத்துகளை அறியும் ஆவலால் மீள்பதிவு செய்கிறேன். நன்றி.

---------

ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் பிரச்சனை. ஆஸ்திரேலிய குடிமகனான (வியட்நாம் அகதி வழி) ங்யென் வான் டூவான் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். பல வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில், கடந்த மூன்று வாரங்களில் நடந்தது சரியான காமெடி.

இந்தத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும், இவரை ஆஸ்திரேலியாவிற்கு extradite செய்யவேண்டும், சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனம், சிங்கப்பூரை புறக்கணி, sanctions போடு என்றெல்லாம் கடந்த வாரங்களாக ஒலித்துக்கொண்டிருந்த ஆஸியின் பிரதமரின் உட்பட குரல்களை சற்றும் சிங்கப்பூர் சட்டை செய்யாததால், நேற்றைக்கு புது காமெடி நடந்திருக்கிறது. அதாவது இவர் இறக்கும் நேரத்தில் இவரின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிட நாடுதோறும் அமைதி காக்கப்போகிறார்களாம். இது இன்று நடந்ததா இல்லையா என்று இன்னும் செய்திகள் கிடைக்கவில்லை. ஆஸியில் உள்ளவர்கள் தான் சொல்லவேண்டும்.

சரி, அப்படியென்ன இவர் சத்தியாகிரக தியாகம் செய்து இந்தத்தண்டனை பெற்றார் என்று இன்றுதான் விழித்துக்கொண்டோருக்காக: ஆஸிக்கு வரும் வழியில் ட்ரான்ஸிட்டில் சிங்கப்பூர் விமானநிலையத்தில் போதை மருந்துகள் வைத்திருந்தற்காக பிடிபட்டார். இருபத்தி ஆறாயிரம் ஊசிகளுக்கு போதுமான அளவு போதை மருந்துகள் இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூரில் போதைபொருட்களை கடத்துவோருக்கு தூக்குதண்டனை என்பது தெரிந்தே தான் இந்த புண்ணியாத்மா செய்துள்ளார். அப்படி இருக்க என்ன கரிசனம்? பாலி பாம்பர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வலியுறுத்தியது இதே ஜான் ஹோவர்ட் அரசுதானே? இப்போதுமட்டும் தூக்குத்தண்டனை கசக்கிறது.

ஆஸ்திரேலியாவின் தன் குடிமகன்களை வெளிநாடுகள் தண்டிக்கவே கூடாது, ஆனால் தங்கள் நாட்டில் வேண்டியதை செய்துகொள்வோம் என்ற பாலிஸி நெடுநாளாகவே நாற்றமடிக்கிறது. இந்தோனேஷியாவில் ஆஸி முஸ்லிம் மாடல், அதற்கு முன்னர் இன்னொரு போதை கடத்திய பெண் என்று எல்லோரும் என்னவோ நாட்டுக்காக உயிரைக்கொடுத்தவர் ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டு பொறுப்பில்லாமல் ஆஸி மீடியாவும், அரசும் அலட்டிக்கொள்கின்றன.

தூக்குத்தண்டனைக்கு நான் ஆதரவாளனல்ல. அதற்கு பதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் உள்ளதைப் போல ஒரு 200 ஆண்டுகளுக்கு உள்ளே போட்டுவிடுவது இல்லை இன்னும் கொடுமையான குற்றங்களுக்கு இஸ்ரேலில் உள்ளதைப் போல solitary confinement போன்றவை பயன்படுத்தலாம். இதெல்லாம் வாதத்திற்கு ஒத்துவந்தாலும், சிங்கப்பூர் என்னும் sovereign நாட்டின் சட்டவிதிகளை விமர்சிக்க ஆஸ்திரேலியாவிற்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன், ஆயிரமாவது தூக்குதண்டனை நிறைவேற்றப்போகும் அமெரிக்காவை கண்டிக்கவேண்டியதுதானே? செய்யாது. இதில் பல ஆஸி குரல்கள் வேடிக்கையானவை. சிங்கப்பூர் காட்டுமிராண்டி ஊராம். ஆஸியில் இவர்கள் எப்படி குடியேறினார்கள் என்று அதற்குள்ளா மறந்துபோய்விட்டது. அடுத்த ஊரில் உள்ள தண்டனையை தெரிந்தே அந்த ஊரில் தவறு செய்தபின், ஆஸிக்காரனை நீ எப்படி தண்டிக்கலாம் என்ற வெட்டிப்பேச்சு எதற்கு?

இதில் ஒருபுறம், இதுவே வெள்ளை ஆஸியாயிருந்தால், அவரை இந்த அரசு எப்படியாவது மீட்டிருக்கும் என்று சந்தர்ப்பவாத குரல்வேறு.

----
ஆனால் இந்த குழப்பத்தில் ஒரு ஆறுதலான விஷயம். நேர்மையான நீதிபதிகளுக்கு உதாரணமாய் ஒருவர்.

அண்ணனின் கடன் பிரச்சனையே தீர்க்கவே வான் டுவான் போதைப்பொருள் கடத்தி மாட்டி தூக்குத்தண்டனையும் பெற்றாகிவிட்டார். ஆனால், அண்ணனின் மேலுள்ள 1998 பழைய வழக்கு ஒன்றை இன்று தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி. படிக்க வேண்டிய சுட்டிஇதுThe Age

IHT

Advertiser News

--
'மழை' ஷ்ரேயாவின் பதிவு

Scrubs

இந்த வீக்கெண்டிற்கு புகழ்பெற்ற, எனக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றான அமெரிக்க சிட்காமான Scrubs டிவிடிகள் கிடைத்தன. மெகாத்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசமானதாகவும், மருத்துவ சம்பந்தப் பட்டதாகவும் இருப்பதாலும் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது. ஏனோ, friends போன்றவை மனதில் ஒட்டுவதில்லை. இந்தியாவில் ரீரன் ஏதேனும் வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள். நகைச்சுவையும், செண்டியும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட அட்டகாசமான தொடர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இதுவரையில் நான் பார்த்த பல மருத்துவமனைகளில் மருத்துவர்களில், குறிப்பாய் சர்ஜன்கள் மிகவும் ஜாலியான பேர்வழிகளாய் இருப்பர். ஏகப்பட்ட macho ஜோக்குகள், பல விரசமானவை ஆப்பரேஷன் டேபிள்களில் கூட பறக்கும். மருத்துவர்களும் இந்த விஷயத்தில் குறைந்தவர்களில்லை. நோயாளிகளின் முன்னேயே பல சமயங்களில் ஜோக்கடிப்பர். அது எப்பேர்ப்பட்ட critical நோயாளிகளாயிருந்தாலும். இன்று இந்தத் தொடரில் நான் விட்டுப்போன ஒரு பகுதியை பார்க்கும்வரை நானும் பலசமயம் முகம் சுளித்ததுண்டு. என்னடா இது, நோயாளிகளிடத்தில் இவ்வளவு insensitive ஆக இருக்கிறார்களேயென்று. ஒரு முறை யூராலஜி வகுப்பு. ரவுண்டுஸுக்கு போயிருந்தோம். ESWT செய்யபடவேண்டியுள்ள கிட்னி ஸ்டோன் உள்ள நோயாளி. அவரின் ஹிஸ்டரியை ஆசிரியரிடம் விளக்கிக்கொண்டிருந்த நான் என்ன காரணத்தாலோ, நோயாளிக்கு பெல்ட் போல வலி இருக்கிறது என்பதை என் இடுப்பை சுற்றி சைகையால் காண்பித்தவாறே சொன்னேன். இடைமறித்த ஆசிரியர் "I hope you wont ever have to work in gynaecology" என்று ஒரு போடு போட்டார். எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. அதே நேரத்தில் இப்படி பொறுப்பில்லாமல், இன்ஸென்ஸிடிவ்வாக கமெண்ட் அடிக்கிறாரே என்று வேறு கோபம். இது ஒரு உதாரணம் தான்.


ஆனால், பல சமயம் இந்த துணுக்குகள் insider jokes ஆகவே இருக்கும். அதாவது, மருத்துவம் சாராதவர்களுக்கும் பெரும்பாலும் புரிய வாய்ப்பில்லை. எங்கள் தெரபி ஆசிரியை எங்களை வாருவதுண்டு "I asked you to auscultate her heart, not palpate her tuberculi". இதில் வெளியாட்களுக்கு என்ன நடக்கிறதென்று புரியாது. மருத்துவமோ லத்தீனோ தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். பல இருக்கிறது இந்த மாதிரி. அதற்கு பதில், இந்த தொடரிலிருந்து தெரிந்து கொண்டேனென்றால் நம்புவீர்களா? எனக்கும் அதிசயமாக இருந்தது.

இத்தனை (என்ன பெரிசா, 7 வருஷம்) அனுபவமிருந்தும் நம்மால் இந்த சின்ன சைக்காலாஜிக்கல் விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லையே என்று. அது என்னவென்றால், நோயாளியை third person ஆக கருதுவது. அதாவது, எந்தப் பிரச்சனையுமே, நோய்கள் உட்பட, நமக்கோ நம் நெருங்கிய உறவினர்/நண்பர்களுக்கோ வந்தால் அதை நாம் எதிர்கொள்ளும் விதமே வேறு. அப்போது, எப்போதுமில்லாத ஒரு personal dimension, வந்து நம்மை படுத்திவிடும். அதனாலேயே, தீவிரமான நோய்களுக்கு அடுத்த மருத்துவரின் உதவியை நாடுவது வழக்கம். இதற்கு என்னுடைய psychiatry cycle தான் நினைவுக்கு வருகிறது. அதில் தினமும் படிக்கும் ஒவ்வொரு மனநோயும் நமக்கோ நம் உறவினருக்கோ இருக்கிறதோ என்று தேவையற்ற பயம் தொற்றிக்கொள்ளும். எங்கள் ஆசிரியர், தினமும் முன்னுரையாக, "Never Diagnose, especially self diagnose, if you aint a competent, qualified doctor yet!" என்று எச்சரித்தாலும், அது தவிர்க்கமுடியாத ஒன்று. ஏனென்றால், நம் சொந்தம், நாம், நம் உறவு போன்ற பந்தங்கள் often cloud our judgements. அவற்றிலிருந்து விலகி objective ஆக அணுகுவதற்கு மிகவும் அனுபவம் வேண்டும்.

வசூல்ராஜா படத்தில் 'நோயாளிகளை objects ஆக பார்க்காதீர்கள், subjects ஆக பாருங்கள்' என்ற holier-than-thou அறிவுரையை கமல் வழங்குவார். அது தவறென்பது என் கருத்தாகும். நோயாளி உங்கள் நண்பரென்றால், அவருக்கு கீமோதெரபிக்கு ரெகமண்ட் செய்வதற்கோ இல்லை scalpel வைக்கவோ ஒரு நிமிடம் மனது பதைபதைக்கும். ஏனென்றால், மருத்துவர்களும் மனிதர்கள்தானே. ரோபாட்கள் அல்லவே. அதனால், குடும்ப டாக்டர் என்பவர் நண்பர் என்ற உறவில் சிக்காமல் இருப்பதே நலம். நோயாளியில் gratitude இனால் அவரின் குடும்ப நிகழ்ச்சிகளிலோ, பிரச்சனைகளிலோ தலையிடும் உரிமையை தங்கள் மருத்துவர்களுக்கு தருகின்றனர். அவ்வகையில், கலந்து கொள்ளலாம். ஆனால், அதற்கு ஒரு limit இருக்கிறது. என்று ஒரு நோயாளியை உங்கள் நண்பராகவோ, சொந்தமாகவோ கருத ஆரம்பிக்கிறோமோ அன்றே objectivity போய்விடுகிறது. இதற்கு exceptions உண்டு. ஆனால், முன்கூறியவாறு அதற்கு மிகவும் அனுபவம் வேண்டும். என்னைப் போன்ற சின்னப்பசங்களுக்கு இது மிகவும் கஷ்டமான விஷயம். பந்தம் என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம். தேன் துளி, தாணு போன்ற அனுபவம் வாய்ந்தோர் இதை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை அறிய ஆவல்.
---------------

ஈ நாட்டி நோமு பலமு!

ஈ நாட்டி நோமு பலமு! ஏ தான பலமு-ன்னு பாடத்தோணுது. பின்ன, எனக்கும் ஒருவார நட்சத்திரமா இருக்க வாய்ப்பு கிடச்சுதே. அதுக்கு முதல்ல
மதி மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.


அப்புறம், வஞ்சனையில்லாம வாழ்த்தி, பின்னூட்டி ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு (பம்பர் பரிசு வச்சது ஒரு காரணம்னாலும். சரி, அடிக்க வராதீங்க)
ரொம்ப ஸ்பெஷல் நன்றி.

பரிசு என்னன்னும் யார் வெற்றி பெற்றாங்கன்னும் நாளக்கி சொல்றேன். இன்னிக்கு வேலை. மன்னிச்சுடுங்க. ஞாயித்துகிழமதானே. மத்தியானமா பதிவு
போடலாமுன்னு நினச்சேன். ஆனா, எதிர்பாரா விதமா முடியாம போச்சு. அதனால ரொம்ப நாள் முன்னாடி எழுதினத பதிச்சிட்டேன்.

நாளைக்கு நட்சத்திரமா போறவர்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இந்த வாரம் தேறிச்சா இல்லியான்னு நீங்க தான் சொல்லணும்.

எல்லோருக்கும் மீண்டும் நன்றி!!

சில புகைப்படங்கள்

இன்னிக்கு நம்மூர் படங்கள் சில.. (குமரன் மன்னிக்கவும்)

1. சூரிய அஸ்தமனம் - கூடவே சில முனிவர்கள்

2. வெண்ணார் வெட்டார் பிரியும் இடம்.
3. தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரம் - காவேரியில்ல. பெயர் தெரியாத குளம்
4. தஞ்சாவூர் அரண்மனை - டும் டும் டும் படத்துல வருமே?5. பொங்கி வரும் காவேரி6. கோயில் படமில்லாமயா? பிள்ளையார் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில்கள்
*ஏற்கனவே போட்ட பெரிய கோயில் படங்கள். 1, 2

* சூரிய அஸ்தமனம்

விடுதலை

இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கு. அதுக்கப்புறம் இந்த சிறையிலிருந்து விடுதலை. இருக்கறது வேலூர் சிறைன்னு நினச்சுட்டீங்களா? இல்லீங்க, என் அம்மாவோட வயித்துக்குள்ளேர்ந்து தான் பேசறேன். அட, பிறக்காத குழந்தையும் பேசுமான்னு கேக்காதீங்க. மகாபாரதம் படிச்சதில்லியா? அதுல கிருஷ்ணன் சொல்றத அபிமன்யு அம்மா வயித்துலேர்ந்து கேட்டதா வருது இல்ல. அது மாதிரி தான்.

போன ஜன்மத்துல பட்டாம்பூச்சியா பறந்துகிட்டிருந்தேன். அடடா, என்ன ஒரு வாழ்க்கை. பூவுக்கு பூவுக்கு தாவி பறந்துகிட்டே இருக்கறது மட்டும்தான் வேலை. தேன் குடிக்க கசக்குமா என்ன? கஷ்டமே இல்ல. என்ன, குருவி மாதிரி என்னைய விட பெரிய மிருகங்கள பாத்தா கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். ஏன்னா, எங்கள் மாதிரி பூச்சிங்க தானே முக்கிய உணவு அவங்களுக்கு? அவங்களாவது பரவாயில்ல, ஒரு தடவ சும்மா நான் என் தங்கச்சிங்க கூட பறந்து பிடிச்சு விளையாடிகிட்டு இருந்தப்போ, சில மனுச பசங்க வந்து என்னோட இரண்டு தங்கைகள பிடிச்சுகிட்டு போயிட்டாங்க. ஆனா, நான் அவ்வளவு பெரிய உருவங்கள எதிர்த்து எதுனாவது செய்ய முடியுமா? முடியாதில்ல. அதனால, மறைஞ்சு இருந்து பாத்தேன். ஒவ்வொரு இறக்கையா பிச்சு பிச்சு விளையாடிக்கிட்டிருந்தாங்க. பாவம், வலியும் பயமும் தாங்காம என் சின்னத் தங்கைகள் எல்லாம் துடிச்சாங்க. அவங்க துடிக்க துடிக்க இன்னும் துன்புறுத்தல் ஜாஸ்தியாத்தான் ஆச்சு. எனக்கு கோவம் கோவமா வந்திச்சு. ஆனா, என்ன செய்யறது. என்னால அதுக்கு மேல அந்த இடத்தில இருக்க முடியல. உடனே பறந்து எங்க கூட்டுக்குப் போய் அம்மாகிட்ட சொல்லி அழுதேன். அம்மா வருத்தத்துல துவண்டு போயிட்டாங்க. இருந்தாலும் என்னைய கட்டிபிடிச்சு, 'இந்த சின்ன வயசுல பாக்கக்கூடாத கொடுமையை பாத்துட்டப்பா..நீ அண்ணனா உன் தங்கைகளுக்கு உதவி செய்ய முடியாமப் போச்சே. ஆனா, நீ வருத்தப்படாதேடா கண்ணா..கடவுள் அவங்கள சும்மா வுடமாட்டார். வாழ்க்கைனா இப்படித்தான்.. எல்லாமே விதிப்படிதாம்பா நடக்கும். அம்மா, நான் இருக்கேன் உனக்கு. கவலப்படாதே' அப்படீன்னு தேத்தினாங்க. என்னைய தேத்தினாலும், இராத்திரியெல்லாம் தூங்காம அவங்க அழுதுகிட்டிருந்தாங்க. ஆனா அது எனக்கு தெரியும்னு அவங்களுக்கு தெரியாது பாவம். மறுநாள்லேர்ந்து கொஞ்ச நாளைக்கு, நான் எங்கேயும் மாட்டிடக்கூடாதேன்னு அவங்களே போய் தேன் தேடி எடுத்துகிட்டு வந்து கொடுத்தாங்க. அவங்க வரவரைக்கும் எனக்கு திக் திக்னு இருக்கும்.

சின்ன வயசு பாருங்க. கொஞ்ச நாள்ல அதப் பத்தி சுத்தமா மறந்துட்டேன். மறுபடியும் ஜாலியா பறக்க ஆரமிச்சேன். வளர்ந்து பெரியவனும் ஆனேன். வாலிப வயசா, நீங்க பண்ணாததா..நமக்கும் பக்கத்து கூட்டு பொண்ணு மேல ஒரு டாவு. நான் நல்ல சிவப்பு கலர்ல வேற இருப்பேனா, அதுக்கும் நம்ம மேல ஒரு கண்ணு. நீங்கள்லாம் பார்க், பீச் போற மாதிரி இப்படியா நாங்க ஒரு நாள் ரோஜாப்பு, ஒரு நாள் அல்லிப்பூன்னு போய்கிட்டிருந்தோம். அம்மாவும் ஒத்துகிட்டாங்க. கல்யாணம், காட்சி யெல்லாம் ஆச்சு. அதுவரைக்கும் யாருக்குமே நான் மனசார கூட தீங்கு நினச்சதில்ல. நான் மாட்டுக்கு என் வேலை உண்டு, குடும்பம் உண்டுன்னு இருந்தேன். இருந்தது பிடிக்கல போல இருக்கு அந்தக் கடவுளுக்கு. ஒரு நாள், நல்ல பெரிய அல்லிப்பூ மேல உக்காந்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சுவையான தேன். சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பாக்காதது என் தப்புதான். அதுக்காக இப்படியா? எங்கிருந்தோ பாஞ்சு வந்து என்ன பிடுச்சுடுச்சு ஒரு நாக்கு. அப்படியே சடார்னு என்ன இழுத்து ஒரு தவளையோட வாயில போட்டுடுச்சு.

அப்புறம் பாத்தீங்கன்னா, உங்க சினிமால்லேல்லாம் வருமே அது மாதிரி ஒரே புக மண்டலம். பாத்தா நான் மேலே மேலே பறந்துக்கிட்டிருக்கேன். மேலே ஒரு பெரிய மண்டபம். அங்க வரிசையில எல்லா வகை ஜீவராசிகளும் தங்களோட டர்னுக்காக வெயிட் பண்றாங்க. என் டர்ன் வந்தோன்ன, எமராஜா பாத்தாரு. 'பட்டாம் பூச்சி, நீ இதுவரைக்கும் என்ன நல்லது செஞ்சிருக்க'ன்னு கேட்டாரு. 'இவ்ளோ குட்டி பூச்சி நானு, என்ன செய்ய முடியும்?'. 'சரி, எதுனாவது கெட்டது பண்ணிருக்கியா'.'இல்லீங்க'.'டேய்.. பொய் சொன்னா என்னோட கணக்கு புஸ்தகத்த பாத்தா தெரிஞ்சி போயிடும்'னு மிரட்டுனாரு.'சாமி, என்னோட அம்மா சத்தியமா, கெட்டது நினச்சுது கூட கிடையாதுங்க'னு நான் கெஞ்சினேன். பக்கத்துல குள்ளமா ஒரு ஆளு ஆனக்குட்டி சைஸுல ஒரு பொஸ்தகத்த பாத்துட்டு 'இந்தப்பய சொல்றது சரிதான், இதுவரைக்கும் இவன் தப்பே பண்ணலே தர்மராஜா' னு சொல்லி என்னயப் பாத்து சிரிச்சாரு. எமராஜா பாத்துட்டு 'அப்படியா, சரிடா.. நீ இனிமே உயிரினமா பொறக்க வேணாம். மனுசனா பொறக்க நான் உனக்கு வரம் தரேன்'னு சொன்னாரு. எனக்கு சந்தோஷம் தாங்கல. ஆனா, அதே சமயத்தில எனக்கு என் தங்கச்சிங்க ஞாபகம் வந்துச்சு. அந்த சண்டாளப் பாவிங்க இருக்கற ஊராவே பொறக்கணும். அவங்கள, அவங்க என் தங்கைகள கொடுமப்படுத்தினமாதிரியே நானும் படுத்தணும்னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன். அவங்க கையக் காலப் பிச்சுப்போடணும்னு நினச்சுகிட்டேன்.

பாருங்க.. பேசிகிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. வெளிய வர டைம் ஆச்சு போலிருக்கு. தண்ணியெல்லாம் குறையுது. ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருக்கீங்களா? வெளில வந்துட்டு உங்க கூட பேசறேன். சரியா?

இருக்கீங்களா, நான் பேசுறது கேக்குதா? எனக்கும் விடுதலை வந்தாச்சு. ஆஹா, எவ்வளவு சுதந்திரமா இருக்கு. இந்த ஒன்பது மாசமும் உள்ள கூனிக்குறுகி இருந்தது பத்தாதுன்னு வெளிய வரும்போதும் ரொம்ப கஷ்டமாப் போச்சுங்க. யாரோ ஒரு வயசான அம்மா தான் வெளில எடுத்தாங்க. நல்ல வேள உதவி செஞ்சாங்களே. நம்ம பாட்டியா இருக்குமோ? தனியா இருந்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும். இருங்க ஒரு நிமிஷம் என்னோட புது அம்மாவ பாத்துட்டு வரேன். பாவம் இத்தன மாசம் எத்தன கஷ்டப்பட்டுருப்பாங்க. அட, இவ்வளவு அழகா இருக்காங்களே. ஆனா, பாவம் அழறாங்க. ரொம்ப வலிக்குது போலிருக்கு. எங்க? அப்பாவக் காணோமே? அநேகமா ஓடி வந்துகிட்டிருப்பாரு. அட பாருங்க, என் மேல எவ்வளவு ஆசை அம்மாக்குன்னு. எனக்காவே ஸ்பெஷலா கைல கொட்டாங்கச்சியில என்னவோ வெள்ளையா செஞ்சு வச்சிருக்காங்களே. குடிச்சு பாத்தேன். நல்லாத்தான் இருந்துது. பாலான்னு தெரியல. என்னவா இருந்தா என்ன, நம்மள பெத்தவங்க நமக்கு நல்லதத்தானே செய்வாங்க. சரிங்க, எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு. இன்னொரு நாள் உங்களோட பேசறேன்.

பீட்டர்ஸ்பர்க் - சில புகைப்படங்கள்

1. பனியில் உறைந்திருக்கும் பூங்கா
2. Church of Spilt Blood - இதப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுருக்கேன் இங்க3. Anichkov Bridge பார்த்தோமில்லியா. அது பக்கத்தில இருக்கற ஒரு கட்டிடத்தின் facade. டியோடரண்ட் நல்லா வேலை செய்யுதா இல்லியான்னு பாக்கறாங்க4. Peter & Paul Fortress இல் இருக்கற சர்ச். இந்த அரண்மனை தான் முதல் முதலில் பீட்டர்ஸ்பர்க்கின் ஆதாரம். பீட்டர்ஸ்பர்க் பத்தின பழைய பதிவு இங்கே.5. Vladimirskyi Cathedral - வீட்டுப் பக்கத்தில இருக்கற கதீட்ரல்.


நம்மூர் போட்டோ இல்லாமலியா.. நாள நாளன்னிக்கு போடறேன்.

Click on Images to view Full size

MRP - தேவையா இல்லையா?

சமீபத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது MRP பற்றியும் பேச்சு வந்தது. அவர்கள் ஊரில் கிடையாது, அதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை என்றார். முதல்ல, இந்தியாவில் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த அனைவருக்கும் இந்த MRPன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு MRP=Maximum Retail Price. உதாரணத்திற்கு.. லைப்பாய் சோப் பின் MRP 20 ரூபாய்னா, இந்தியாவெங்கிலும் எக்காரணத்தைக் கொண்டும், அது சிலுக்குவார்ப்பட்டி (உபயம்: முகமூடி) பொட்டிகடையோ மும்பை சூப்பர் மாலோ, இந்த 20 ரூபாய்க்கு மேல் அதிக விலையில் விற்கக் கூடாது.

ஒரு அரசாங்கத்திற்கு இந்த வகைப் பொருள் இந்த விலையில் தான் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும் என்று விதிக்க என்ன உரிமை இருக்கிறது? இம்மாதிரி கட்டுப்பாடுகள் இருப்பின் அது முழு சுதந்திரம் இல்லையே? அந்த வகையில் முழு சுதந்திரமுடையதாய் இருக்கவேண்டிய சந்தைப் பொருளாதாரத்திற்கு குறுக்கே நிற்கிறதல்லவா? மக்களுக்கு எங்கே மலிவாய் கிடைப்பதாய் தோன்றுகிறதோ, அங்கே வாங்கிக் கொண்டு விட்டு போகிறார்கள். இது மக்களின் குற்றமேயன்றி, எவ்வகையில் அரசின் பொறுப்பாகும்? என்று பல கேள்விகள் எழுப்பினார். அந்தக் கேள்விகள் பற்றி எனக்கு தெரிந்த பதில்களை அளித்தேன். அதை ஒரு பதிவாவும் போட்டுடலாமேன்னு போட்டுட்டேன்.

ஆனால் எனக்கென்னவோ இந்த MRP என்பது அவசியமானதொன்றாகவே படுகிறது. குறிப்பாக அது Fixed Retail Price என்றில்லாமல் Maximum (Suggested) Retail Price ஆக இருப்பதால். அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்ட் கிடையாது. அதனால் நடக்கும் குளறுபடிகள் பல. உதாரணத்திற்கு நான் சிட்டி செண்டரில் இருக்கிறேன். இங்கு ஒரு லிட்டர் எண்ணெய் ஒரு டாலருக்கு கம்மியாக கிடைக்காது. எங்கே சுற்றினாலும் இந்த ஏரியாவில்: ஆனால் அதுவே புறநகர்ப்பகுதிகளில் 70,80 செண்ட்களுக்கு கிடைக்கும். இதே நிலைதான் காய்கறிகளிலிருந்து ஹை டெக் பொருட்கள் வரை. நகரின் மையப்பகுதியில் இருப்பதனால் நான் அதே பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பது அநியாயம் தானே?

இது தயாரிப்பிற்கான செலவுகள் மற்றும் ஓவர்ஹெட் போக, குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் கிடைக்கும் விலையில் வரிக்குட்பட்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் செலவுகளும் இதில் உள்ளடங்கும். ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் இந்த MRP க்கு குறைவான விலையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அதனபடி நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வால்யூம் பேஸ்ட் சேல்ஸ் ஐட்டங்களே பெரும்பாலானவை என்பதால் இதில் கடைக்காரருக்கோ, விநியோகஸ்தருக்கோ, தயாரிப்பாளருக்கோ நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையே. மாறாக ஆரோக்கியமான விலைப்போட்டி உருவாவதால், விலைகள் குறைந்து நுகர்வோருக்கு சாதகமாகவே இருப்பதாய் தெரிகிறது. முழு சந்தைப் பொருளாதாரமான அமெரிக்காவிலும் MSRP இருக்கிறது என்று அறிவேன். ஆனால், இந்தியாவைப் போல் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறதா என்று தெரிந்தோர் கூறினால் நன்றாக இருக்கும்.

அடுத்த விஷயம், அரசாங்கத்திற்கு உரிமையிருக்கிறதா இல்லையா என்பது பற்றியது. சோஷலிஸ் ஹேங்க் ஓவர் என்று சொன்னாலும் கூட, என்னைப் பொருத்தவரை கண்டிப்பாக இருக்கிறது. வரி விதிக்கும் அரசுக்கு விதிக்கப்படும் மக்கள் ஏமாறுவதை தடுப்பதிலும் பங்கிருக்கிறதல்லவா? ஏற்கனவே 20 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். லாபம் என்பது அவசியம் தான். ஆனால், அது பேராசையாகாமல் தடுப்பது அரசின் கடமையல்லவா?

எத்தனை நாட்களுக்கு பத்து ரூபாய் பெறாத பொருளை நாற்பது ரூபாய்க்கு விற்க முடியும்? நுகர்வோர் புறக்கணிக்கலாமே என்று ஒரு வாதமும் உண்டு. அதாவது மக்களே தங்கள் சுய சிந்தனையுடன் நாற்பது ரூபாய் கொடுத்து வாங்குவதால், அரசின் தலையீடு தேவையற்றது என்பது. இதற்கு நான் முன்னே கூறிய சிட்டி செண்டர் உதாரணமே பதில். மேலும், சமீபத்தில் சாம்ஸங், ஹைனிக்ஸ் போன்ற மெமரி நிறுவனங்கள் artificialஆக விலைகளை ஏற்றியதற்கு அபராதம் செலுத்தியதை நினைவில் கொள்ளவும். நான் ஒவ்வொருமுறையும் whole sale ஆகவோ, வேலைமெனக்கெட்டு பல நேரம் பயணம் செய்தோ குறைந்த விலைக்கு வாங்க முடியுமா? இன்னும்விட்டால், சிலுக்குவார்பட்டியில் (மீண்டும் நன்றி: முகமூடி) விலை இன்னும் குறைவாக இருக்குமென்பதற்காக, ஒவ்வொரு முறை எண்ணெய் வாங்கவும் நான் அங்கே போக முடியுமா? இதுவும் நியாயமில்லாத வாதமாக படவில்லை. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ரம்யா அக்கா போட்ட ஒரு துண்டு துணி பதிவு. MRP அமலில் இருந்தும் இந்த அடிப்படையான பொருள் பெரும்பாலனவர்களுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது.

கடைசியில் என்னதாம்பா சொல்றேன்னு பொறுமை இழந்தவர்களை மேலும் சோதிக்காமல்: MRP மிகவும் அவசியம் என்று கூறி முடிக்கிறேன். நீங்க இருக்கற ஊர்லேல்லாம் என்ன நடைமுறைன்னு எழுதினா உபயோகமா இருக்கும்.

பின் குறிப்பு: பொருளாதாரம் எனது துறைக்கு சிறிதும் சம்பந்தமற்றது. இன்னிக்கு சீரியஸும் வேணாம், ஜாலியும் வேணாம்னு (நவரச நேசன்?? மதுமிதா எங்கே இருக்கீங்க??) ஒரு சேஞ்சுக்காக ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா மாதிரி பெரியோர் ஸ்டைல்ல ஒரு பதிவு போடலாம்னு நினச்சு செய்யறேன். பொருளாதாரம் பற்றி அறிந்தவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்துகள் இருந்தால், கண்டிப்பா அதை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். பதிவு சுத்தமா பிடிக்காதவங்களும் எதையாவது சம்பந்தமா எழுதி வையுங்க (மணியன் மன்னிக்கவும்!), ஏன்னா பம்பர் பரிசு என்னன்னு வாரக்கடைசியில் அறிவிப்பு வரும். அப்புறம், சான்ஸ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பிரயோசனமில்ல. சொல்லிட்டேன்.

தீயினால் சுட்ட புண்...

எனக்கும் வார்த்தைகளை அளந்து, நிதானமாய் பேச வேண்டும் என்று ரொம்ப நாளாய் ஆசை. மிகவும் பிரயத்தனப்பட்டு இப்போது ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். சரிக்கு சமானமவரிடத்தில் பேசுவது வேறு வகை. ஆனால், சமூகத்தில் நம்மை விட தாழ்ந்த (பொருளாதார), என்று நாம் கருதும் நிலையில் இருப்பவர்களிடம் பேசும் போது ஓவர் கரிசனம் காட்டினால் - patronizing என்றும் ஓவர் ஏளனம் செய்தால் - கர்வமென்றும் - ரெண்டுமே வெறுக்கப்படும். கத்திமேல் நடப்பது போன்றது இது. எவ்வித நிலைப்பாடும் இன்றி, சாதாரணமாக பேசும்போது ஓரளவிற்கு சிந்தித்துப்பேசினாலும், கோபம் தலைக்கேறிவிட்டால் என்ன சொல்கிறோம், அதை அடுத்தவர் எப்படி புரிந்துகொள்வார்கள் என்பது என்னை உட்பட பலருக்கும் மறந்தே போய்விடுகிறது என்பதை கவனித்திருக்கிறேன். ஏன், இங்கே வலைப்பூக்களிலும் இதுதானே நடக்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகளே பல இடங்களில் நிறைந்திருக்கின்றன. நான் என் வாழ்க்கையில் என்னையே மன்னிக்க முடியாதபடி சில முறைகள் அவ்வாறு கோபத்தில் பேசியது உண்டு. அவற்றைக் குறித்து பின்னர் சிந்திக்கும்போது, ஏன் இப்படி நம் வாயிலிருந்து இப்படிப்பட்ட குரூர வார்த்தைகள் வந்தது எண்ணிப்பார்ப்பதுண்டு.

ஒருமுறை எங்கள் ஹாஸ்பிடல் வாசலில் விண்டர் ஜாக்கெட் வைக்குமிடம். நான் என் ஜாக்கெட்டை கழற்றி காத்திருந்த வயதான பெண்மணியிடம் கொடுக்கலாம் என்று திரும்பியபோது பலநாள் சந்திக்காத நண்பன் வந்தான். கோட்டை என் கையிலேயே வைத்துக்கொண்டு அவனிடம் பேசலானேன். பொறுத்துப்பார்த்த பெண்மணி "அஞ்சு நிமிஷமா வெயிட் பண்றேன். கோட்ட கொடுத்துட்டு பேசக்கூடாதா?" கற மாதிரி சாதாரணமாகத்தான் கேட்டாள். என்ன நடந்ததோ தெரியவில்லை, ஏன் அப்படி கோபம் வந்ததென்றும் புரியவில்லை. "கோட்டை நாங்க எப்ப கொடுக்கறோமோ அப்ப வாங்கிக்கத்தான் வேலைக்கு உங்கள வச்சுருக்காங்க. அதனால, எப்ப கொடுக்கணும்னு நீங்க சொல்ல வேணாம். நிக்க ரொம்ப கஷ்டமாயிருந்தா வேற வேல தேடிக்கலாமே" னு சத்தமா சொல்லிட்டேன். அறையில் எல்லோரும் ஒரு நிமிஷம் சைலன்ட் ஆயிட்டாங்க. அந்தப் பெண்மணி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டவுடன் உறைத்தது. 'அடப்பாவி, இப்படி அவமானப்படுத்தனுமா.. கோட்டைக் கொடுத்துட்டு பேசினா என்ன குடியா முழுகிப்போகிறது' என்று என் மனம் பதைபதைத்தாலும், எல்லாரின் பார்வையும் என் மீது இருந்ததால் சட்டென மன்னிப்பு கேட்க ஈகோ இடம் கொடுக்கவில்லை. திகைத்துப் போய் நின்ற நண்பனுடன், ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் தொடரலானேன். ஆனால், கூட்டம் சற்றும் கரையும் வ்ரையில் தொடர்ந்த வெட்டிப்பேச்சில் ஒரு வார்த்தைகூட மனதில் நிக்கவில்லை. மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. இப்படி பேசிவிட்டோமே. நாம் அந்தப் பெண்மணியின் இடத்தில் இருந்து இப்படி கேட்க வேண்டியிருந்தால் எப்படி வலித்திருக்கும் என்று புல்லட் ட்ரெயின் கணக்காய் கில்ட் பீலிங் ஓடிக்கொண்டிருந்தது. நண்பன் விடை பெற்றுக் கொண்டபின், மெதுவாய் அந்தப் பெண்மணியிடம் சென்று கோட்டை கொடுத்தேன். பதிலேதும் சொல்லாமல் டோக்கன் கொடுத்தாள். 'நான் அப்படிப்பேசியிருக்கக்கூடாது. மன்னித்து விடுங்கள்' என்றேன். பெருந்தன்மையாய் 'இருக்கட்டும் தம்பி, உங்களுக்கு என்ன டென்ஷனோ.. அது என்மேல கோவமா திரும்பிடுச்சு. பரவாயில்ல. Have a good Day'னு சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க. அப்பெண்மணி அவ்வாறு பெருந்தன்மையோடு மன்னித்தது என் குற்ற உணர்வை அதிகரிக்க செய்ததே தவிர குறைக்கவில்லை.

(அதிகாரமில்லா) ஏழைகள் என்றால் இளக்காரம் என்பது இல்லை. அந்தப் புரிதலெல்லாம் உண்டு என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால், sub conscious ஆக அது இன்னமும் இருக்கிறதோ என்று சிந்திக்க வைத்த நிகழ்ச்சி இது. 'க்ளாசுக்கு கரெக்ட் டைமிற்கு வரவேண்டும்' என்று சொல்லும் பிரின்ஸிபாலிடம், 'நான் பணம் கட்டறேன். எப்போ வேணா வருவேன். உனக்கு என்ன பிரச்சனை'னு சொல்ல முடியுமா? நம் கையில் அப்போது அதிகாரமில்லை. அவரைக்காட்டிலும் கீழ்நிலையில் இருக்கிறோம். நம் ஆசிரியர்களிடமும், பாஸ்களிடமும் நாம் சொல்வதை அவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணும் சமயத்திலேயே, உங்கள் வீட்டில் வேலைசெய்வோர், 'இப்படிப் பண்ணக்கூடாது தம்பி'னு சொன்னா அந்த நிமிடத்திற்கு சரியென்று ஒத்துக்கொண்டாலும், உள்மனதில் 'சே, இவனுக்கு என்ன யோக்கியதை நமக்கு சொல்றதுக்கு'னு ஒரு வினாடியாவது தோணும். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று வெறும் லெவலைப் பார்த்து வரும் கோபமேயன்றி, அவர் சொல்லும் கருத்தில் நமக்கு பயனுள்ளதா என்று பார்ப்பதில்லை. நமக்கு கீழே இருப்போர் நமக்கு அறிவுரை சொல்லத் தகுதியற்றவர்கள் என்று சொல்வதைப் போல் முட்டாள்தனம் என்பதை பலரும் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், இந்தத் தெரிவுடனேயே எந்நேரமும் சிந்திக்க முடிகிறதா, என்றால் இல்லை. நமக்கு மேலே இருப்பவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எண்ணும் நமக்கு நாம் கீழேயிருப்போரை எப்படி நடத்துகிறோம் என்று உறைப்பதில்லை. கீழே இருப்போர் என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது பொருளாதார அளவில்தான். அவர்களை மதிப்பதில் என்னென்னவோ ஈகோ பிரச்சனைகள். இல்லையென்று மேம்போக்காக மறுத்தாலும்.. இந்தப் பேய் நம்மில் பலரை இன்னும் விட்டு அகலவில்லை என்றுதான் தோன்றுகிறது. என்னளவில் மாற முயற்சி செய்துகொண்டுதானிருக்கிறேன்.

தேவதையைக் கண்டேன்!

என்னோட காப்பி அனுபவம் ரொம்ப கம்மி. அட, நெஸ்காபே, ப்ரூ காப்பி இல்ல. பரிட்சையில் காப்பியடிக்கறது. இந்த மாதிரி படிக்காம சகட்டுமேனிக்கு காப்பியடிச்சா நம்மள நாமே ஏமாத்திக்கறதுங்கறது சின்ன வயசிலேர்ந்து கொள்கைன்னு பீலா விடலாம். ஆனா, உண்மையச்சொன்னா அதுக்கு காரணம், பயமும் மாட்டிக்கொண்டால் பேர் நாறிடுமேங்கற வெட்கமும் தான். இங்க எப்படின்னா, ஒரு எக்ஸாம் தேதி கொடுக்கும் போதே peresdacha - அதாவது பெயிலானா இல்லாட்டி கொடுக்காட்டா திரும்பி எப்பக் கொடுக்கறதுன்னு தேதியும் சேர்த்துக் கொடுத்திடுவாங்க. அந்த குறிப்பிட்ட எக்ஸாமுக்கு அப்பியர் ஆக முடியாதவங்க அந்த இரண்டாம் தேதியில் கொடுத்துக்கலாம். வெறுமனே காப்பியடிச்சு பாஸ் பண்ணனும்கற எண்ணம் குறையும். படிக்கறவங்களுக்கு ஏத்த சிஸ்டம் இது. நம்மூர் போல ஒண்ணு இரண்டு எக்ஸாம்ல பெயிலா, ஒரு வருஷம் போச்சுன்னு கிடையாது. மெடிசின் ஒண்ணும் சாதாரணப்பட்டதில்ல இல்லியா? பெயில் ஆகறவங்க நிறைய பேர். இந்த மாதிரி pre-med இல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் முதல் முறையா வாழ்க்கையில் ஒரு பரிட்சையில் பெயிலானேன். 'அதனாலென்ன, அடுத்த முறையாவது பாஸ் 'பண்ணிடு'ன்னு ஈஸியா சொல்லி அனுப்பிச்சுட்டாங்க எங்க டீச்சர். சரி, அத விடுவோம். என்னோட மேஜர் காப்பி அனுபவம் பத்தி சொல்லவே இந்தப் பதிவு. இங்க இன்னொரு விஷயம். 5 - னா புல்லரிக்குது. 4 - குட் . 3- இந்த தடவ பொழச்சு போ. 2,1 - பூட்ட கேஸ். இதுதான் மார்க்கிங் சிஸ்டம்.

----
Microbiology. பல நாள் கிளாஸ் கட் அடிச்சிருந்தேன். அந்த நேரத்திலேல்லாம் என்ன பண்ணேன்னு இப்ப நினச்சாலும் வியப்பா இருக்குது. எல்லாம் வயசு. ஒருத்தர் டெட்லைன், டைம்டேபிள் எல்லாம் கொடுத்து இத செய்னு ஸ்ட்ரிக்டா சொன்னா, அதுக்காகவே அந்த காரியத்தை செய்யக்கூடாதுன்னு ஒரு வித rebel: anti-authority மனப்பான்மை கூட காரணமா இருக்கலாம். இப்ப மட்டும் என்ன வாழுது..:(

எனக்கு இந்த மைக்ரொஸ்கோப்னாலே அலர்ஜி. அதுல பாத்த ஒரு விஷயம் கூட நினைவில் இல்லை. என்ன பாக்கிறோம், எப்படிப் பாக்கணும்னு எல்லாம் நிறைய விளக்கங்கள் கொடுத்தாலும் என் மண்டையில ஒண்ணுமே ஏறுனது கிடையாது. இப்பவும் ஸ்லைட் பாத்தா, வெறும் வெத்து காகிதம் பாக்குறத போலத்தான். ஒரு மண்ணும் புரியாது. ஆனா, என் டீச்சர் ரொம்ப நல்லவங்க. க்ளாஸுக்கு வரலேன்னா என்ன, விஷயம் தெரிஞ்சா போதும்னு என்ன இலகுவாக விட்டுட்டாங்க. பின்ன, போட்டோல இருக்கற பால் வழியும் மூஞ்சியப் பாத்துட்டும் உங்களுக்கு திட்டத் தோணுமா? ஒரு செமஸ்டர்க்குரிய டெஸ்ட் எல்லாம் ஒரே வாரத்தில கொடுத்திட்டேன். MCQ தான். இருக்கற variant பதில் எல்லாம் blind -ஆ மனப்பாடம் பண்ணி, ஆன்ஸர் கொடுத்ததுல, சரி பையனுக்கு விஷயம் தெரியும்னு தப்பா impress ஆயிட்டாங்க. பாவம்.

எக்ஸாமும் வந்தது. நமக்கோ ஸ்லைட் ஓண்ணும் தெரியாது. அதனால் முன்னாடியே பிரண்டுகிட்டே உதவி பண்ணுன்னு சொல்லிட்டேன். ஆனா விதி பாருங்க. அவனோட இடம், என் பக்கத்தில இல்லாம அடுத்த டேபிளில் இருந்தது. வினாத்தாள் எடுத்து வந்து எல்லாத்துக்கும் விடை கொடுத்தாச்சு. interferons, மலேரியான்னு ஈஸி கேள்விகள். இது தியரி. அப்புறம் ஸ்லைட் கொடுத்தாங்க. ஸ்லைடுக்கு பதில் கொடுக்கலேன்னா பெயில் தான். அது என்னன்னு வழக்கம் போல தெரியல. என்னவா இருக்கும்னு கூட ஊகம் செய்ய முடியாதது போல இருந்தது. நொந்தபடியே, பக்கத்து டேபிள் நண்பனின் டேபிள் ஓரத்தில் அந்த ஸ்லைடை வைத்து இது என்னன்னு பாத்து சொல்லுன்னு வச்சேன். அவனும் பாத்துட்டு என்னன்னு சொல்லிட்டு திரும்பவும் நான் எடுக்கறதுக்கு வாகா அவன் டேபிள் முனையில் வச்சான். எடுக்கலாம்னு பாக்குறதுகுள்ள ஸூபர்வைஸர் வந்துட்டார். 'என்னப்பா, ஸ்லைட இங்கே வச்சிருக்கே?' அதுக்குள்ள அவன் மைக்ரோஸ்கோப்பிலும் ஸ்லைட் இருப்பதையும் பாத்துட்டார். 'ஓ, எக்ஸ்ட்ராவா கொடுத்துட்டாங்களா? I will take this' னு சொல்லிட்டு எடுத்துட்டு போய்ட்டார்.

எனக்கு பயங்கர டென்ஷனாயிடுச்சு. ஹாலில் என் கிட்ட மட்டும் தான் இப்ப ஸ்லைட் இல்ல. ஒருவழியா தைரியம் வரவழச்சுகிட்டு போய் சூபர்வைசரிடம் 'எனக்கு ஸ்லைட் தரலேயே'ன்னு சொன்னேன். 'அதெல்லாம் இல்ல. நான் அறையில் உள்ள எல்லாருக்கும் எண்ணிப்பாத்து கரெக்டா கொடுத்திருக்கேன். எங்கேயாவது கீழப் போட்டுருப்பேயொழிய நான் கொடுக்காம இருந்திருக்க முடியாது. போய்த் தேடிப்பாரு'ன்னு சொல்லிட்டாங்க. :(. என்ன செய்யறது. 'சரி தேடுறேன்'னு சொல்லிட்டு வந்து உக்காந்தேன். என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டிருந்தப்போ ஒரு தேவதை வந்தாள்!

தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும். என்னோட க்ளாஸ் டீச்சர். 'என்ன ஸ்லைட்?'னு கேட்டாங்க. ஸ்லைட் கொடுக்கலேன்னு சொன்னேன். அநேகமா அவங்களுக்கும் என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்கணும். 'அதெப்படி?. சரி, என்னவோ..இரு, நான் எடுத்துகிட்டு வரேன்' சொல்லிட்டு போய் ஸ்லைட் கொண்டு வந்தவங்க.. 'பாரு, புரியுதா இல்லியா?'. எனக்கு புரியலேன்னு சொல்லவும் என்னன்னு விளக்கமும், என்ன பதில் சொல்லணும்னும் சொல்லிட்டாங்க. புது தைரியத்தோடு, நான் முடிச்சிட்டேன்னு எக்ஸாமினர் முன்னே போய் நின்னேன். அவர் பல புதுக்கேள்விகள் கன்னாபின்னாவென்று கேட்க ஆரம்பித்தார். அப்போதும் கைகொடுத்தார் என்னோட டீச்சர் தேவதை. 'விடுங்க. இவன் என் கிளாசுலே பிரில்லியண்டான ஸ்டுடண்ட்ஸில் ஒருத்தன்! ஒரு செமஸ்டரை ஒரே வாரத்தில் முடிச்சுட்டான் (எப்படி முடிச்சேன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் :) ). 5 தவிர வேற எதக்கொடுத்தாலும் ஒத்துக்கமாட்டேன்!' அப்படீன்னு ஒரு போடு போட்டாங்க. அதன் படியே '5' கிடைத்தது. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அய்யோ, இப்படியாக நம்ம மேல நம்பிக்கை வச்சுருக்கவரவங்கள ஏமாத்திட்டோமேன்னு வருத்தமும் வந்தது.

இன்னொரு விஷயம், தேர்வுகளில் நமக்கு தெரியாதவற்றை 'தெரியலே' ன்னு நேரடியா சொல்றது நல்லது. கண்டதையும் உளறினா குறுக்கு கேள்வி கேட்டு மானத்தை வாங்கிடுவாங்க. ஒரு தடவை, ஹிஸ்டாலஜி பரிட்சை. அந்தப் பாடத்திலே முழு நேரமும் ஸ்லைடுதான். அந்த பரிட்சையில் ஒரு ஸ்லைடில் என்னன்னு தெரியாம உளறப்போய் டீச்சர் அதுக்கு ஒரு பதிலடி கொடுத்தாங்க பாருங்க. "If this is brain tissue, then am a crocodile". அதுகூட பரவால்ல.. நம்ம கூட படிக்கற பசங்க தானே.. அவுங்களும் டர்ன் வந்தா வாங்கித்தானே ஆகனும்னு இதையெல்லாம் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. ஆனா, ரவுண்ட்ஸ் போகும்போது, சீப் கிட்ட மாட்டினோம்.. தொலஞ்சோம்.. நேரா ஜன்னல் வழியா குதிச்சிடலாமாங்கற மாதிரி சில சமயம் பேஷண்ட்கள் முன்னாடியே நார் நாரா கிழிச்சுத் தோரணம் கட்டிடுவாங்க. அதுக்கப்புறம் நாம அந்த வார்ட் பக்கம் தலகாட்டும் பொழுதெல்லாம், 'வாடா வசூல் ராஜா, பொஸ்தகத்த கொஞ்சமாவது புரட்டிட்டு வந்தியா? இல்ல இன்னிக்கும் வாங்கிக் கட்டிக்கப்போறியா?'ன்னு நக்கல் சிரிப்புதான் நம்மள பாத்து.. அதப்பத்தி தனிப்பதிவே போடலாம்.

எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு க்ளோஸ் கால் அனுபவம் இருக்கும். இல்லியா? காப்பி, பிட் டெக்னிக்குகளில் கைதேர்ந்தவர்கள் அவர்கள் அனுபவங்கள பகிர்ந்துகிட்டா மிச்சவங்களுக்கு பிரயோசனமா இருக்குமே.

----
குறிப்பு: ஸ்பெஷல் பட்டர் மசால்களையே நட்சத்திரங்களின் மூலமா சாப்பிட்டு வந்த வாசகர்களுக்கு, சாதா பரோட்டா வித் வெங்காயப் பச்சடியும் ஒரு சேஞ்சுக்காக பரிமாறாலாம் என்றிருக்கிறேன். ஏன்னா நமக்கு அவ்வளவுதான் செய்ய வரும். அதனால, ரொம்ப அலட்டிக்காம இந்த ஸ்பெஷல் வாரத்தின் பதிவுகளுக்கு வஞ்சனையில்லாம பின்னூட்டம், குத்து போடறவங்க எல்லாம் பின்னர் தனியாக கவனிக்கப்படுவார்கள் என்று நினைவு படுத்துகிறேன். இரண்டுக்கும் மேற்பட்ட பின்னூட்டமிடுபவர்கள் பம்பர் முறையில் குலுக்கப்படுவார்கள்.

உங்களுக்கு 56 கோடி வேணுமா?

என்ன நட்வர் மட்டும் ஈராக்கிலேர்ந்து சாப்பிட்டா போதுமா? நீங்க சாப்பிட வேணாமா? அதான், எல்லாருக்கும் எல்லாம்னு பெருந்தன்மையா நினச்சு உங்களுக்கு 56 கோடி வேணுமானு ஐ.நா வோட செக்ரெட்டரி-ஜெனரல் கோபி அன்னன் கேக்கறார். வேணும்னா பதில் மெயில் போடுங்க அவருக்கு.

---

I, Dr. Kofi Annan, Secretary-General of the United Nations, would like to ask your partnership in reprofilling funds over $250m in excess, the funds would be coming via a string of selected banks in Europe and Asia. The Funds in question were generated by me during the oil for food program in Iraq. I have been getting scandals/ controversy in this regards, you can read more on the links below-
http://www.wsws.org/articles/2005/apr2005/anna-a05.shtml
http://www.canadafreepress.com/2003/main042803.htm

You would be paid 5% as your management fee. Please do not write back directly to me via my official email address. All further correspondence should be sent to my private mail box ( kofiannan4un@o2.pl ). As soon as you indicate your interest I will give further details. Remember to treat this mail and transaction as strictly confidential. I will await your urgent correspondence via my private mail box-

Dr.Kofi Annan.
SECRETARY- GENERAL
kofiannan@un.org
www.un.org

---
419-ers வர வர கலக்கறாங்க இல்ல?

நன்றி El Reg

Indians - safest, most committed and most satisfied

வருடாவருடம் போலவே இந்த ஆண்டும் 41 நாடுகளில் 317,000 மக்களிடம் உலகின் மிகப்பெரும் ஆணுறை நிறுவனமான டியுரெக்ஸ் தனது DGSS எனப்படும் செக்ஸ் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. அதில் இந்தியர்கள் அளித்த சில பதில்கள் இதோ..

முன்பின் தெரியாதவர்களுடன் உடலுறவு கொள்வோர் - 21% (global ave. 47%)

வாழ்நாளவில் உறவு கொள்ளும் பார்ட்னர்களின் எண்ணிக்கை - 3 (9 - துருக்கியில் 14.5 பேர்!)

One Night Stands - 13% (44%)

வர்ஜினிடி இழக்கும் சராசரி வயது: 19.8 (17.6, ஐஸ்லாந்து - 15.6)

தங்கள் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாய் இருப்பதாய் சொன்னவர்கள்: 46 (44%)

தங்கள் செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாய் சொன்னவர்கள்: 3 (7%)

போர்னோகிராபி வழக்கமாய் படிப்போர்/பார்ப்போர் - 37%

மக்களிடம் எதைப் பற்றி இன்னும் அதிக விழிப்புணர்வு வரவேண்டியிருக்கிறது? எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி - 87%

வருடத்திற்கு - 75 நாட்கள் (103, கிரீஸ் - 138, க்ரோயேஷியா - 134, ஜப்பான் - 45)

47% இந்தியர்கள் பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை 14 வயதிலிருந்து புகுத்த வேண்டுமென்று சொல்லியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: Durex GSS05

இந்த கணிப்பு நம் நாட்டில் எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. பிரத்தியேக ஆணுறைகள் உபயோகிப்பதாக 28% இந்தியர்கள் வாக்களித்துள்ளதால் நகரங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. அதே போல பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை புகுத்த வேண்டும் பாதிக்கு பாதி பேராவது சொல்லியிருப்பதும் ஆறுதலானாலும் மிச்ச 50 சதவிகிதம் பேர் என்ன நினைக்கிறார்கள் என்று விளங்கவில்லை. நாடெங்கும் எய்ட்ஸ் அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும்போது மக்களிடையே இதைக்குறித்த விழிப்புணர்வு, நகரங்களுக்கு மட்டுமாவது வந்து சேர்ந்திருக்கிறதோ? இல்லை இதுவே வெறும் பகல்கனவா? இன்னமும் கிராமப்புறங்கள்..

ஐ.நா சபை மீது வழக்கு தொடர முடியுமா?

சதாம் உசேன் ஆட்சியில் இருந்தபோது இருந்த oil-for-food திட்டத்தின் கீழ் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மற்றும் காங்கிரஸ் மறைமுகமாக பலனடைந்தார்கள் என்று Volcker கமிட்டி சமர்ப்பித்துள்ள ரிப்போர்டிற்கு எதிராய் ஐ.நா சபை மேல் வழக்கு தொடுப்போம் என்கிற தொனியில் பதிலறிக்கை கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஐ.நா சபை மே வழக்கு தொடுப்பது சாத்தியமேயில்லை என்று தான் நான் இதுவரையில் நினைத்துக்கொண்டிருந்தேன். தனி நபர், ஐ.நா.வைச் சேர்ந்தவரென்ற பட்சத்தில், அவர் மேல் வழக்கு தொடரலாமேயன்றி ஓட்டுமொத்த அமைப்பின் மீதும் வழக்கு தொடர வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இப்போது இரான் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் அதிபர் விடுத்த இஸ்ரேலை ஒழிப்போம் என்கிற அறிக்கைக்கு ஐ.நா உட்பட அதன் உறுப்பு நாடுகளும் பெரும் கண்டனம் தெரிவித்தன. இதை முகாந்திரமாக கொண்டு வழக்கு தொடர இயலுமா? அதேபோல் அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி இராக்கிடம் WMD இருக்கிறது என்று பொய்யாக ஐ.நா சபையில் வாதிட்டது. இதை வைத்து defamation கேஸ் மாதிரி அவரை எதிர்த்தோ அதை அனுமதித்த ஐ.நாவை எதிர்த்தோ தொடர இயலுமா? முடியுமெனில், எங்கே தொடர முடியும்? ஹேக்-கிலா இல்லை அமெரிக்க செனட் ஹியரிங்கில் பதிலளித்த பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் போல் தன் நாட்டிற்கு அழைத்து விளக்கமளிக்க நிர்பந்தப்படுத்த முடியுமா?


மொத்தத்தில், இந்தியா நிரந்தர SC பதவி வேண்டும் சமயத்தில் இந்த பிரச்சனை தேவையற்ற ஒன்று.

தீபாவளி நூறு!

முதல்ல எல்லாருக்கும் என்னோட தீபாவளி நல்வாழ்த்துகள். பட்டாசெல்லாம் வெடிக்க கிடைக்கல இங்கே. இருந்தாலும் வீக்கெண்ட் சின்ன பார்ட்டினு முடிவு பண்ணிருக்கோம். பாப்போம். நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்க. ஆனா, ஜாக்கிரதையா இருங்க.

---

அடுத்தது, இது என்னோட நூறாவது பதிவு. நூறாவது பதிவுன்னா கொசுவத்தி கொளுத்த வேண்டாமா? சில ஹைலைட்ஸ். இதுதான் இப்போ டெம்ப்ளேட் ஆயிடுச்சே. மார்ச் 2005-ல் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்தேன், தங்கமகனின் ஊக்கத்தால். நிறைய நண்பர்களையும் பல வாசகர்களையும் ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நேரில் பார்க்காமலேயே ஏதோ நெருங்கிய உறவு போல் ஒரு அன்னியோன்யத்தை உருவாக்க வல்ல வலைப்பூக்களின், இல்லை.... தமிழின் தாக்கத்தை உணர்ந்து கொண்டேன்.

இனி சில நம்பர்கள். இதுவரை இந்த தளத்திற்கு வருகை தந்தவர்கள் 9115 பேர்கள் (என்னைச் சேர்க்காமல், என்னோடது மட்டும் இன்னுமொரு ஆயிரமாவது இருக்கும் :-) ).

இதெல்லாம் சில அக்காக்களுடனும் தலைகளுடனும் ஒப்பிடும் போது ஜுஜுபின்னாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

அதிகமாக கவனிக்கப்பட்ட பதிவுகள்: மறக்க முடியாத விளம்பரங்கள், சூப்பரின் சாதனையை இருட்டடிக்கும் ஆங்கில வெப்சைட்கள்


அதிகமான பதிவுகள் எழுதியது: அக்டோபர் 2005 - 24 பதிவுகள் இதையும் சேர்த்து.

மிகக் குறைவான பதிவுகள்: மே 2005 - 0!

தமிழ்மணத்தில் மிகவும் சந்தோஷப்பட்டது: 8 செப்டம்பர் - மதி கந்தசாமி அவர்கள் ஒருவார நட்சத்திரமாக இருக்க அழைப்பு விடுத்தது. ஆனால், என்னுடைய ஜாகையை மாற்றும் எண்ணத்தில் இருந்ததால், இருப்பதால் பின்னர் நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லை. விரைவில் வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

வருத்தப்பட்டது: சின்னவன், குசும்பன் பதிவுகள் தூக்கப்பட்டபோது.

சில தொடர்கள்:
கு.போ.கதை

மருதைக்கு போலாமா


சில படப்பதிவுகள்:
வயிரவன் கோயில் எறும்புகள்

Spider-Man

தஞ்சைப் பெரியகோயில்

சூரிய அஸ்தமனம்நான் மிகவும் ரசிக்கும் பதிவர்கள்: ஆனந்த், துளசியக்கா, ராகவன், ரம்யா அக்கா, தாணு அத்தை, பரணீ, முகமூடி, குழலி

இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று என்னோட blogroll-ஐ பார்த்தாலே தெரியும்.

என் பதிவுகளையும் படித்து frequent ஆக பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய பெயர்களையும் போடணும்னா அப்புறம் தொடர் தான் ஆரம்பிக்கணும். அதனால், கோச்சுக்காம என் நன்றிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

--
சுய புராணம் ஜாஸ்தியாப் போச்சு. அதனால் இதோட நிறுத்திக்கிறேன். நூறாவது பதிவு டெம்ப்ளேட்டின் (updated) காப்பிரைட் இப்ப என்கிட்ட! :)

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்

தீபாளி நல்வாழ்த்துகள்

பனிவிழும் பொழுதில் - புகைப்படங்கள்

என்னோட 'வந்தாச்சு வந்தாச்சு' பதிவில் போட்டோ போட முடியல. அதனால போன வருஷம் எடுத்த சில படங்கள். எல்லாம் சான்க்ட் பீட்டர்புர்க்கில் எடுத்தது.

1. உறைந்து போன நேவா நதி. சில்ஹவுட்டில் வலமிருந்து இடம். ராஸ்டரெல்லி தூண், இசாக்கியெவ்ஸ்கி கதீட்ரல், அட்மிரால்ட்டி, ஹெர்மிடாஜ் அருங்காட்சியகம்.


2. Church of the Spilt Blood - பின்புறமுள்ள ஒரு பார்க்.3. Peter and Paul Fortress அருகில் எடுத்தது. பாலத்துக்கு அந்தப் பக்கம் நான் இன்னும் போய்பாத்தில்லை!

4. Summer Garden அருகில் ஒரு canal.

5. Anichkov Palace - அருகில். இடது பக்கம் கொஞ்சமாத் வெள்ளை பில்டிங் தெரியுது இல்லையா? இந்த நதிக்கு பேர் fontanka. இந்தப் பாலத்தின் பெயர் அனிச்கவ் மோஸ்ட் (பாலம்). மிகவும் பிரபலமானது. முக்கிய சாலையான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டில் இருக்கிறது. இந்த பாலத்தில் இருக்கும் நான்கு சிலைகளும் - குதிரையை அடக்கும் வீரர்கள் - ரொம்ப பிரபலம். போட்டோ எடுக்காத டுரிஸ்ட்களே இல்லேன்னு சொல்லலாம்.சில கூத்துகள்

ஜென்சன், நாராயண் மற்றும் இரான் அதிபர்

BAR Honda வின் ஜென்சன் பட்டன் சொல்லிருக்காரு
"And one week of the month you wouldn't want to be on the circuit with them, would you?"

"A girl with big boobs would never be comfortable in the car."

"And the mechanics wouldn't concentrate. Can you imagine strapping her in?"

சுட்டி
இதப் படிச்சப்பறம் என்ன சொல்றதுன்னு தெரியல..

நூறு ஸ்டார்ட்க்கு அப்புறமும் ஒரு ரேஸ் கூட ஜெயிச்ச பாடில்ல. நடுவுல காண்ட்ராக்ட் பிரச்சனை வேற. 2006 -லேயாவது ஒரு ரேஸாவது ஜெயிக்க வழி செய்யாம, அலட்டலா வாய்ச் சவடால் மட்டும் செஞ்சுருக்கறது தேவையா? பெண்களே இல்லாத விளையாட்டு F1. இருக்கலாம். ஆனா, ஜென்சன் என்ன நினைச்சுகிட்டு பேசுறார்னு புரியவேயில்ல. இவர மாதிரி சில ஆள்ங்களால தான் இன்னும் பெண்கள் F1 இல் இல்லியோ? டானிகா பாட்ரிக் போன்றவர்களுக்கு கண்டிப்பா சான்ஸ் கிடைக்கணும். எப்ப நடக்கப் போகுதோ? எம்மா பார்க்கர் போல்ஸ் சரியான பதிலடி கொடுத்திருக்காங்க. "Oh grow up. If he spent less time staring at grid girls' breasts he might win more races "

------
அடுத்த கூத்து நம்ம நாராயண். நாப்பது கோடி ரூபாய் கொடுத்து டாடாவும், ஜேகேவும் ரொம்ப மெனக்கெட்டாங்க. ஆனா சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டாரு. அடுத்த வருஷம், பணத்துக்காக டப்பா டீம்கள் கேக்கலாம். அதிலேயும் மினார்டி இனிமே இல்ல. ஜோர்டன் கைமாறியாச்சு.

ட்ராக்க விட்டு வெளிய ஓட்ட ரொம்ப பிடிக்கும்போல. சமீபத்திய ரேஸ்களில் எல்லாம் ராலி ட்ரைவர்களுக்கு போட்டியா ஓட்டறாரு மனுஷன். f1 ன்னுக்கு வரத்துக்கு முன்னாடியும் ஒண்ணும் பெரிசா சாதிச்சதில்லங்க்றத நினைவில் கொள்ளவும். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பெராரி தவிர வேற எந்த டீஸண்ட் டீமுமே பங்கெடுக்காத இண்டி ரேஸில் கூட தன் டீம் மேட்டிடம் தோற்றபோதே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு.

ரெட் புல்லோட ரெண்டாவது டீமிற்கும் ஆட்கள் ரெடி. டொயோட்டா, வில்லியம்ஸ் எல்லாம் வெறும் பகல் கனவு. என்ன பொறுத்தவரை, நாராயண் இன்னொரு alex yoong மாதிரி has been. ஆனா, வியாபாரம் தானே. பணம் நிறைய கொடுத்து அடுத்த வருஷம் ஸீட் வாங்கலாம். but he is not F1 material.

இன்னும் பல திறமையான இளம் டிரைவர்கள் சான்ஸ் கிடைக்காம அலைகிறார்கள். ஜப்பானுக்கு சாட்டோ மாதிரி நாராயண் இந்திய விளம்பரத்துக்காக சேர்த்துக்கொள்ளப்படலாம். அதனால் இழப்பு, F1 விசிறிகளுக்கு தான்.

-------
இன்றைய டாப்!
காலையில் பார்த்தவுடனே இதப் பத்தி யாராவது பதிவு செய்திருப்பார்கள்னு நினச்சேன். இல்ல அதனால்.. படிச்சுப் பாத்துட்டு சிரிக்கறதா கவலப்படறதான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

இரானின் புதிய ஜனாதிபதியின் அறிக்கை.

highlight இதுதான்

``no doubt the new wave in Palestine will soon wipe off this disgraceful blot (Israel) from the face of the Islamic world.

``Anybody who recognizes Israel will burn in the fire of the Islamic nation's fury,''

Bloomberg

Al-Jazeera

எங்க போய் முட்டிக்கறது?

வந்தாச்சு வந்தாச்சு!

இன்னும் அக்டோபர் முடியறதுக்கே அஞ்சு நாள் இருக்கு. ஆனா, இன்னிக்கு காலம்பற எழுந்து பாத்தா வெள்ளிப் பனி மழை மீதுலவுவோம் தான். முதல் ஸ்னோபால்கறதாலே நல்ல ஸ்ட்ராங்காவே பெஞ்சுருக்கு. தரையே காணும். ஒரே ராத்திரில ஊருக்கே வெள்ளையடிச்சாச்சு. திரும்ப மத்தியானம் பெரிய பனிமழை. இப்பவும் பெஞ்சுகிட்டுதான் இருக்கு. ஜன்னல் வழியா பாக்க ரொம்ப அழகா இருக்கு. மரங்களுக்கெல்லாம் டைம்டேபிள் மாறுனது தெரியல போலிருக்கு. இன்னும் முழுசா இலையையெல்லாம் உதிர்க்காததால, இலையெல்லாம் வெள்ளையா உறைஞ்சு படு சூப்பரா இருக்கு. குளிர் இன்னும் அவ்வளவு இல்லை. மைனஸ் மூணு நாலு தான். ஆனா இந்த வருஷம் நல்ல குளிரப்போதுன்னு பயமுறுத்திருக்காங்க. பாப்போம்.

முதல்முதல்லா பாத்தது 98-ல். ஏன்னா அதுவரைக்கும் சந்தோஷ் சிவன் புண்ணியத்துல 'புது வெள்ளை மழை' தான் பனின்னா என்னங்கறதுக்கு எனக்கெல்லாம் டெபனிஷன். மெக்டானல்ட்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 'ஸ்னோ பெய்யறதுடா'னு ஒரு சவுண்ட். சாப்பாட்டல்லாம் விட்டுட்டு நேரா தெருவுக்கு ஓடினோம். இத்தன வருஷமானாலும் முததடவை பாத்தா மாதிரியே பரவசமா இருக்கு. அலுக்கவேயில்ல. குளிரும் காத்தும் தான் பிரச்சனை. ஸ்னோல விளையாடறது பயங்கர தமாஷ். நடந்து போய்க்கொண்டிருக்கும் பிரண்ட்ஸோட விண்டர் ஜாக்கெட் குள்ளெல்லாம் திடீர்னு கட்டி போடறது இல்லேன்னா 7-stones கணக்கா டமால் டமால்னு பனிக்கட்டி அடிதடி இந்தமாதிரி நடக்கும்.

குழந்தைகள்லாம் இனிமே ஆளுக்கு ஒரு குட்டி போர்ட் எடுத்துக்கிட்டு சறுக்கிக்கிட்டே இருப்பாங்க. சின்ன குழந்தைகள் சும்மாவே அழகு. அதுல மொத்து மொத்துன்னு ரெண்டு மூணு ஸ்வெட்டர், அதுக்கு மேல தலை வரைக்கும் மூடற ஜாக்கெட்னு உப்பின பொம்மைகளாட்டம் தத்தக்கா பித்தக்கான்னு நடக்கறது பாத்தா பொழுது போறதே தெரியாது. குழந்தைகள்னு இல்ல. பெரிய ஆளுகளும் தான்.. சைட் வாக்கில பாத்தீங்கன்னா, சில சமயம், பனி எல்லாம் கெட்டியாகி ஐஸாகி இருக்கும். அதுல சர்சர்னு வழுக்கிகிட்டே விளையாடுவாங்க. நானும் ட்ரை பண்ணேன். வழுக்கி விழுந்து இடுப்பு போனதுதான் மிச்சம்.

போன வருஷம் மட்டும் தான் ஒருதடவை கூட வழுக்கி விழாம சாதனை படைச்சேன். இல்லாட்டி வருஷாவருஷம் குறஞ்சது அஞ்சாறுதடவை சறுக்கு விளையாட்டுதான். முத வருஷம் மட்டும் முப்பது நாப்பது தடவையாவது இருக்கும். ஒரு நாள் ரோடு க்ராஸ் பண்ணும்போது நடு ரோடுல நான் விழவும், க்ரீன் விழவும் சரியா இருந்தது. முதல்ல நிக்கறதோ பஸ். ஆனா பாவம், நல்ல ஆளு அந்த பஸ் ட்ரைவர், நான் ரெண்டு மூணு தடவை எழ முயற்சித்தும் திரும்ப திரும்ப விழுவத பார்த்து பரிதாபப்பட்டு கிளப்பாமல் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார். என் ப்ரண்டோ அந்தப் பக்கம் நின்னு நான் விழுந்து வாரரதை ஏதோ சர்க்கஸ் போல வேடிக்கை பாத்துகிட்டே பெரிய ஹாஹா வெல்லாம் போட்டு எஞ்சாய் பண்ணிக்கிட்டுருந்தான்.. "யூ *****, வந்து தூக்கிவிடு"னு நான் கத்தினதுக்கப்புரம் தான் என் நிலம புரிஞ்சு வந்து தூக்கிவிட்டான். எல்லாரும் வேடிக்கை பார்க்க, பயங்கர அசிங்கமா போச்சு. அன்னிலேர்ந்து பனிக்காலத்தில குனிஞ்ச தலை நிமிராம, ஒத்தையடிப் பிரதட்சணம் மாதிரி பாத்து பாத்துத்தான் கால வைக்கிறேன். அப்படியும் சில சமயம் பனி பகவான் காலவாரி விட்டுடறாரு.

போட்டோ போடலாம்னா கைல காமிரா இல்ல. :(

Are you Mobile?

1998-ல் தான் முதல் முதலா (என் சொந்தக் காசெல்லாம் இல்லை) மொபைல் வாங்கினேன். அதுவரைக்கும் மொபைல்னா என்னன்னு கேள்வி மட்டுந்தான். என் நண்பனை கூட்டிக்கொண்டு போய் ரொம்பத் தேடித்தேடி நூத்தி ஐம்பது டாலருக்கு Ericsson A1018 கிடைத்தது. ஆஹா, அதெல்லாம் பொற்காலம். பந்தா விடறதுக்கு மொபைல் தான் சரியான சாதனம். அப்பல்லாம் இந்தியாவிலேயும், ஏன் இங்கேயும் கூட அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தது. போன் வருதோ இல்லியோ, அப்பப்போ காதுல வச்சுகிட்டே தெருவில நடந்து போனா எல்லாரும் திரும்பிப் பாப்பாங்க. பைத்தியம்னு இல்ல. ஏதோ பெரிய மனுஷன் போலிருக்கு. மொபைல் வச்சுருக்காரு. கூடவே அதில பேசவும் செய்யறாரேன்னு. ஏன்னா, ஒரு நிமிஷம் அவுட்கோயிங் அப்போதிக்கு முப்பது செண்ட். அது கூட வரி அது இதுன்னு சேர்த்து நாப்பது செண்டுக்கு வந்துடும்.

கடவுள் தந்த வரம் ஒண்ணு இந்த எஸ்.எம்.எஸ். எங்கேயிருந்து எங்கே வேணும்னாலும் அனுப்பலாமில்லியா.இப்பல்லாம் ஈமெயில் அனுப்பறதே விட்டுப்போச்சு. எனக்கு மட்டுமில்ல பலருக்குந்தான். ஆமா, முழ நீளத்துக்கு அனுப்பி அது பல சமயம் பவுன்ஸாகி இல்லேன்னா 'அய்யய்யே, அந்த மெயில் ஐடிக்கு அனுப்பினியா, நா அத விட்டு மாறி மூணு மாசமாச்சுன்னு. இப்பத்தான் எதேச்சையா செக் பண்ணேன்' - அப்படீன்னு ஆறுமாசம் கழிச்சு பதிலனுப்புவாங்க. அதாத்தப்பி, மெயில் கிடைச்சு பதில் வந்திருக்கா வரலையான்னு அத அரைமணிக்கு ஒரு நொடி செக் பண்ணிகிட்டு வேற இருக்கணும். இந்த தொல்லையெல்லாம் இல்லாத வஸ்து நம்ம sms. இந்தியாவுக்கு போனபோதுதான் பார்த்தேன். ஏர்டெல்-ல ஏதோ sms ப்ரீன்னு போட்டுருந்தாங்க போலிருக்கு. விடுவானுங்களா நம்ம பசங்க. sms mania னே சொல்லலாம். ஒரு நாளைக்கு இருநூறாவது குறைஞ்ச பட்சம். பாதிக்குமேல் பார்வர்ட் தான். நொடிக்கொருதரம், இதோ எழுந்தாச்சு, தூங்கப்போறேன், அம்மா வச்ச ரசம் சரியில்லன்னு ரன்னிங் கமெண்டரி வேற. அந்த அளவுக்கு மோசமாகல நான். நம்ம அடிக்ஷனெல்லாம் இப்ப வலைப்பூக்களிலேயே மேயறதுதானே.

சில சுவாரஸ்யமான விஷயங்களும் மொபைல்களோட நடந்திருக்கு. ஆரம்பத்துல எங்க மொத்த பாட்சிலேயே மொபைல் வச்சுருந்தது ரெண்டு மூணுபேர் தான். பந்தாவுக்கு கேக்கணுமா என்ன? அப்புறம் கொஞ்ச கொஞ்சமா விலையும் குறைய ஆரமிச்சு மொபைல் இல்லாத ஆளே இல்லைன்னு ஆயிடுச்சு. அதுல ஒரு அசட்டு விளையாட்டு. லெக்சர், கிளாஸ் நடக்கும்போது வரிசையா அட்ரஸ் புக்கிலேர்ந்து கூப்பிடறது. ஏதாவது ஒரு ஆளு போன வைப்ரோ மோட்-ல போடாம அது பாட்டுக்கு அலற, பயங்கர காமெடியாயிருக்கும். சலிக்காத விளையாட்டு.

அப்புறம், ஒரு வெள்ளிக்கிழமை பாத் டப்பில் தண்ணிய ரொப்பிட்டு போமர் போடறதுக்கு குனிஞ்சா தொப்புன்னு என்னவோ தண்ணிக்குள்ள விழுந்துருச்சு. என்னன்னு ஒரு நிமிஷம் புரிஞ்சு பார்த்தால் நான் அப்போதான் புத்தம்புதுசா வாங்கின Ericsson T18. எடுத்துப்பார்த்தா ஆன் ஆக மாட்டேங்குது. அப்புறம் ஹீட்டர் மேல ஒரு அரைமணி வச்சுட்டு எடுத்தா வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. அன்னிலேர்ந்து சோனி எரிக்ஸன் தான். :)

இங்க எப்படின்னா, எல்லா கால்களும் முத அஞ்சு செகண்ட் இலவசம். மிகவும் எரிச்சலான விஷயம். என் நண்பன் ஒருத்தன் இப்படித்தான் பண்ணா பை செகண்ட் தான். அவனுக்கு அதுவே பேராவும் வச்சாச்சு. ஒரு விஷயத்த சொல்றதுக்கு முப்பது போன்கால்.

உதாரணம் சொல்லட்டா, தலை சுத்துதா இல்லியான்னு பாருங்க.

'ஹெல்லோ'-'ஹெல்லோ'-'நான் தான் பேசறேன்'-'சரி, சொல்லு, என்ன பண்றே?'-'சும்மாத்தான்.. ஒண்ணுமில்ல'-'நீ என்ன பண்ரே'-'அதேதான், டிவி பாக்கறேன்'-'அப்புறம்'-'வேரொன்னுமில்ல'-'சரி, நாளைக்கு கிளாசுக்கு வரியா'-'ஓ, வரேனே'-'சரி, அப்ப நாளைக்கு மீட் பண்லாம்'-'சரி'-'ஓகே, பை'-'ஓகே, பை'

பாத்தீங்களா. கிளாசுக்கு வரியான்னு கேக்க பதினஞ்சு கால். இதெப்படிருக்கு?

ஒரு சோகம், போன வருஷம் தான் முதல்முறையா என் வாழ்க்கையிலேயே பிக்-பாக்கெட்னா என்னன்னு நேரடி அனுபவம் கிடச்சது. மெட்ரோவில ஏறும்போது கூட்டத்துல படுபாவிப்பய எவனோ 'my precious' ஆன SE K700i சுட்டுட்டான். ஒரே வாரம் தான் என் கிட்ட இருந்தது. சுட்டவன இன்னிவரைக்கும் (இப்போகூட) சபிக்காம விட்டதில்ல. இப்படி பொறுப்பில்லாம் தொலச்சிதனால இனிமே விலை ஜாஸ்தி மொபைல்லாம் வாங்கினா தெரியும் சேதின்னு ஆர்டர் போட்டுட்டாங்க. :(

மொபைல் எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகமோ நிறைய கெட்ட விஷயங்களும் இருக்கு. நேரகாலமில்லாம கூப்டு டார்ச்சர் கொடுப்பாங்க. அப்புறம், இந்த எஸ்.எம்.எஸ் கொடுத்தா கொடுத்தவங்களுக்கு போய் சேர்ந்திருச்சுங்கற டெலிவரி ரிப்போர்ட். பல சம்யத்துல உதவின்னாலும் - 'இல்லியே, நீங்க அனுப்புன மெசேஜ் வரவேயில்லைன்னு' சால்ஜாப்பெல்லாம் சொல்ல முடியாது. இதே வகையில் கால் ரெஜிஸ்டர். 'நேத்திக்கு நாள் முழுக்க உங்களக் கூப்பிட்டேன். நீங்க போன எடுக்கவேயில்ல"ன்னு சொல்ல முடியாது. ஆனா இதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு லைன் கிடைக்கல. நெட்வர்க் பிஸின்னு சொல்லிக்கலாம். (இந்த தடவை பி.எஸ்.என்.எல் பல நேரம் இதையே தான் சொன்னது) இன்னொன்னு "Whole 10 Yards" படத்துல பாத்தேன். பேசிக்கிட்டே இருக்கும்போது, ஒரு பேப்பர போனோட மைக்கருகே கொண்டு வந்து கன்னாபின்னான்னு கசக்கிட்டு 'லைன் சரியில்லே'ன்னு எஸ்கேப் ஆகறது.

இப்பல்லாம் மொபைல் பத்து ரூபாய்க்கு ரெண்டுன்னு விக்கறாங்க. ரொம்ப நல்ல விஷயம். எல்லாருக்கும் தேவைப்படும் சாதனம் மலிவு விலையில் கிடைப்பது.

ஆனா, ஓண்ணு மட்டும். ரோடுல நடக்கறீங்களோ, ஓட்டறீங்களோ. சரியான இடத்தில பார்க் பண்ணிட்டு காலெல்லாம் அட்டெண்ட் பண்ணுங்க. ஓட்டும்போது கால் எடுத்தே ஆகனும்னா Handsfree-ஆவது யூஸ் பண்ணுங்க. சமீபத்துல, எனக்கு தெரிந்த டாக்டர் இந்த மாதிரி போன் பேசிகிட்டு வண்டியோட்டினதுல, மண் லாரிமேல் மோதி மிக பரிதாபகரமா இறந்தார். விதி அது இதுன்னு சொன்னாலும் 43 வயசு சாகற வயசில்லை. தவிர்க்கப்பட்டிருக்கலாம் இல்லையா? ஜாக்கிரதையா இருங்க.

மறக்க முடியாத விளம்பரங்கள்

நேத்திக்கு நண்பனுடன் ஸ்கூல் போன்ற கற்கால நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பேச்சு டிவியில் வந்த பிரபலமான விளம்பரங்கள் பக்கம் திரும்பியது. அவை விளம்பரம் செய்த பொருட்களை மறக்கமுடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொல்லவும் வேண்டுமா? அவற்றில சிலவற்றை இங்கே இடலாம் என்று எண்ணுகிறேன்.

1) பஜாஜ் ஸ்கூட்டர் - ஹமாரா பஜாஜ் என்ற அருமையான பாடலுடுடன் மிகவும் செண்டியான விளம்பரம்.

2) கெல்வினேட்டர் - ஓடுகளின் மேல் ஓடும் திருடன் வெப்பம் தாளாமல் தவிப்பான். ஆனால் ஓரே ஒரு வீட்டின் ஒடுகள் மட்டும் ஜில்லென்று இருக்கும்.

கெல்வினேட்டர் - இதே போல சில கலக்கல் விளம்பரங்கள் வைத்திருந்தனர். சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவரின் மனைவி பிரிட்ஜை ஓப்பன் செய்தால் பிர்ஹாக்களாக பொளந்து கட்டுவார். பல் செட்டை கழட்டி வைத்து பிரிட்ஜ் ஒப்பன் செய்யும் தாத்தா..

3) பெவிகுவிக் - மிகவும் புரபஷனல் உபகரணங்களோடு மீன் பிடிக்க திண்டாடும் ஆசாமி பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு குச்சியில் பெவிகுவிக் தடவி வரிசையாய் மீன் பிடிப்பான் ஒரு கோயிஞ்சாமி!

4) நேஷனல் எக் கார்ப்பரேஷன் - அண்டா கா பண்டா என்ற சூப்பர் பாட்டுடன் முட்டைகள் குறித்தது.

5) சோனி எரிக்ஸன் GF788 (மாடல் சரியாக நினைவிலில்லை) - ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் வழியப்போய், அந்தப் பெண் காபி பிளீஸ் என்று நக்கல் விடும் விளம்பரம். விருது கூட வாங்கியது என்று நினைக்கிறேன்.

6) க்ளோஸ் அப் - "மே ரோஸ் க்ளோஸ் அப் யூஸ் கர்த்தா ஹூ" என்ற ரீதியில் ஒரு வினோதமான குரல் பாட, சோடா பாட்டில் கண்ணாடி போட்டவர் ஆடும் வித்தியாச விளம்பரம்.

7) புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா??

8) விக்கோ டர்மரிக் கீரீம் - "விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்.." டீவியில் பார்த்ததாய் நினைவு இல்லை. எல்லா சினிமா தியேட்டர்களிலும் வரும். எரிச்சலூட்டும் என்றாலும் விக்கோவை மறக்க முடியாது.

9) ரீகல் சொட்டு நீலம் - சொட்டு நீலம் டோய் என்று குஷ்பு தீப்பந்தம் எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுவார்..

10) உஜாலா - நான் உஜாலவுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க?

நிறைய இருக்கு இந்த மாதிரி. உங்களுக்கு நினைவில் வருவதை சொல்லுங்களேன்.

Disclaimer: This Blog is not sponsored by any of the products mentioned above. The blogger doesnt endorse any of the products mentioned as well and hence doesnt receive any form of financial compensation from the respective companies, though wont mind if they decide to.

கந்தர் அனுபூதி: audio

நம்ம ராகவன் சைலண்டா கந்தர் அலங்காரம் பத்தி ஒரு அருமையான பதிவு ஆரம்பித்துள்ளார்.

எதோ என்னாலானது. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியிலிருந்து விஜய் சிவா சில பாடல்களை அருமையாகப் பாடியுள்ளார். எல்லாருக்கும் புரியற மாதிரி எளிமையான தமிழில் தான் பல பாடல்களும் இருக்கு. அதை வலையில் ஏற்றியுள்ளேன்.

சுட்டி இங்கே.

கேட்டுப்பாருங்க.
___________________________
குறிப்பு:
--
Чтобы скачать запрашиваемый вами файл, нажмите на ссылку:

http://ramblog.narod.ru/KandarAn.rm

Компания "Яндекс", владелец Народ.Ру, никак не связана с авторами и содержанием этого файла (см. Пользовательское Соглашение ). Оценка возможного риска , связанного с безопасностью загрузки данного файла, ложится на вас. Будьте внимательны!
---
மேலேயுள்ள பாட்டுக்கான லின்க்க க்ளிக் பண்ணா இப்படி வருதுன்னு சில பேர் சொன்னாங்க. தீர்வு: நடுவுல highlight-ஆன http://ramblog.narod.ru/KandarAn.rm லின்க்-க க்ளிக் பண்ணா ரியல் ப்ளேயர்ல பாடும். இல்ல லின்க்-க right click பண்ணி 'save target as' கொடுத்து உங்க வன் தகட்டிலும் இறக்கிக்கொள்ளலாம்.
__________________________


வரிகள் இங்கே
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி

காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. 1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே. 6

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51

திருச்சிற்றம்பலம்
---------
(courtesy: project madurai)

குட்டி பூக்கள்

சில குட்டி பூக்கள் - கொடைக்கானல் பிரையண்ட்ஸ் பார்க்கில் சுட்டவை..
இ.பி 5: புதிய மன்னர்கள்

கோர்பசேவ் பதிவியை விட்டு இறங்கியாச்சு. வந்தாரு போரிஸ் யெல்ட்ஸின்னு போன பதிவுல பார்த்தோமா? அவர் கூட ஒரு கூட்டமும் வந்தது. நியோ லிபரல்ஸ்னு சொல்லிக்கொண்ட கூட்டம். அனாடோலி சுபாய்ஸ், யிகோர் ஹைதர், போரிஸ் நெம்ட்ஸோவ் இப்படி பலர். கம்யூனிஸ்டுகளுக்கு கிட்டத்தட்ட கட்டம் கட்டிய பின் எதிர்ப்பு என்பதே இல்லாமல் இருந்தது. இதில் முக்கியமானவர் யிகோர் ஹைதர். "அதிர்ச்சி வைத்தியம்" என்ற தத்துவத்தின் படி ரஷ்யாவின் சோவியத் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நினைத்து அதன்படி அதிர்ச்சியும் கொடுத்தார்.

அதுவரையில் கட்டுப்பாடுக்குட்பட்டிருந்த பொருட்களின் விலைகள், தனியார்மயமாக்கத்தின் மேலிருந்த கெடுபிடிகள், நிறுவனங்களுக்கு அதுவரையில் கொடுக்கப்பட்டுவந்த சப்ஸிடிஸ் என எல்லாவற்றையுமே ஒரே நாளில் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் விளைவால் ஏற்பட்ட பணவீக்கத்தை "hyperinflation" என்று வருணித்தார்கள் என்றால் நீங்கள் நிலைமையில் தீவிரத்தை உணர முடியும். இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் செண்ட்ரல் வங்கி என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறதல்லவா? பொருளாதார மாற்றத்தை விரும்பாத வங்கி, ரூபிள்களை அச்சடிக்க ஆரம்பித்தது. ரூபிள் வெறும் பேப்பர் என்ற மதிப்பானது. ரூபிள்களில் ஊதியம் பெற்று வந்த சாமானிய ரஷ்யர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஆயிரக்கணக்கான ரூபிள்கள் சேமித்து வைத்திருக்கிறோம் என்று நினைத்தவர்களின் வாழ்க்கையளவிலும் சேர்த்த சேமிப்பு உப்புக்கு பெறாமல் ஆனது.

சோவியத் காலத்தில் கடைகளில் சில பொருட்களே கிடைத்தாலும், அவற்றை வாங்கும் சக்தி மக்களிடம் இருந்தது. ஆனால், சந்தைப் பொருளாதாரம் என்று வந்தபின் பொருட்கள் குவியத் தொடங்கின. வாங்கத்தான் ஆளில்லை. 1993-இல் 49 சதவிகித ரஷ்யர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தனர் என்று கூட ஒரு புள்ளிவிவரம் உண்டு. பல தொழிற்நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கதவை மூடின. மக்களும் வீதிக்கு வந்தனர்.

இந்த மாறுதல்களை எதிர்க்க ஆரம்பித்த மக்களையும், மற்றவர்களையும் அடக்குவதற்காக தன் கைப்பாவையான டூமாவின் (பாராளுமன்றம்) மூலமாய் சட்டமாய் இயற்றினார் யெல்ட்ஸின்.

1994-இல் இப்படி எல்லாப்புறத்திலிருந்தும் இடி வாங்கிக் கொண்டிருந்த ரஷ்யாவிற்கு வந்தது அடுத்த (இன்றளவும் தீராத) தலைவலி. செசன்யா. மிகவும் தெற்கிலுள்ள, அதிக இசுலாமியர்கள் உள்ள இந்த நாடு ரஷ்யாவிலிருந்து பிரிவதாய் சுதந்திர பிரகடனம் செய்தது. ஆனால், எண்ணெய் வளமிக்க அந்த ஏரியாவை விட்டுத்தர யெல்ட்ஸின் சம்மதிக்க வில்லை. படைகளை அனுப்பினார். ஆனால் morale இல்லாத படைகள் செசன்யர்களை கட்டுக்குள் வைக்க திண்டாடினர். ஒருவழியாய் பிப்ரவரி 95 இல் 25000 உயிரழப்புகளுக்கு செசன்யாவின் தலைநகர் கிராஸ்னியை கைப்பற்றினர். இது ஒரு புறம். வெளியுலகின் கவனமெல்லாம் இங்கே இருக்க, வரலாறு காணாத ஒரு நூதன மோசடி ரஷ்யாவினுள்ளே நடந்து கொண்டிருந்தது.

ரஷ்யாவையை விற்று ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தனர் யெல்ட்ஸினின் கூட்டாளிகளும் பார்ட்னர்களும். எனர்ஜி, தொலைதொடர்பு, யுடிலிட்டிஸ் ஆகியவற்றில் பல பிராந்திய, நாடு அளவிலான, தனி நகரங்களுக்கென பலநூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருந்தது சோவியத் யூனியனில். ஆனால், இந்த சமயம் என்ன செய்தனர் தெரியுமா? அரசுக் கம்பெனியின் CEO கம்பெனியின் தனியான முதலாளியாவார். மற்ற முக்கியஸ்தர்களுக்கு அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் கணிசமான பங்குகள் கொடுக்கப்படும். இப்படியாக அரசு நிறுவனம் தனியார் நிறுவனமாகும். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், யெல்ட்ஸின் ஆசியுடன் இதுதான் நடந்தது. பல பில்லியன் டாலர்கள் இந்த வகையில் அரசுத்தரப்பிலிருந்து தனியாருக்கு கைமாறின. சொந்தங்களுக்கு கொஞ்சம், மற்றவர்க்கு கொஞ்சம் என்று பெரிய ரஷ்ய ஆப்பத்தை பங்கு போட்டுக் கொடுத்தார் யெல்ட்ஸின். முக்கியமாய் 1996 அதிபர் தேர்தலில் தோல்வியடையும் நிலை வந்தபோது இந்த முதலாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில், சம்பள பாக்கி குறித்த போராட்டங்கள் வெடிக்காமல் வேலை செய்தவர்கள் 'சரி'யாக வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டதால். மிகவும் குறுகிய வெற்றி பெற்ற யெல்ட்ஸின் தன் பாலிஸியை தொடர்ந்தார்.

ஒரு உதாரணம். மிக்காயில் கோடர்கோவ்ஸ்கி. 2004 ஆம் ஆண்டில் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 16 ஆவது இடம். ரஷ்யாவின் மிகப்பெரும் பணக்காரர். (கொசுறு செய்தி: பில்லியனர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை நியு யார்க்கிடமிருந்து மாஸ்கோ சென்ற வருடம் கைபற்றியது! மாஸ்கோ: 33, நியு யார்க்: 31) அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று பூடின் மீது சேறு வாறி இறைக்கும் மேற்கத்திய ஊடகங்கள் அவர் எப்படி அவ்வளவு பெரும் பணம் ஈட்டினார் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவரின் எண்ணெய் நிறுவனமான யூகோஸ் இன்றைய சொத்துமதிப்பு 31 பில்லியன் $. அத்தகைய நிறுவனத்தின் 78 சதவிகித பங்குகளைப் பெற கோடர்கோவ்ஸ்கியின் மெனடெப் குழுமம் கொடுத்தது... வெறும் 450 மில்லியன் $. வாங்கி இருவருடங்களில் செய்த மதிப்பீடு படி அப்போதைய யூகோஸின் மதிப்பு 9 பில்லியன் $.உண்மைதான் பூடின் நடவடிக்கை எடுத்ததற்கு அரசியல் காரணமும் உண்டு. ஆனால், வெட்கமேயில்லாமல் சொந்த நாட்டையே சுரண்டி ஏப்பம் விட்டவருக்கு என்ன பெரிய வக்காலத்து வாங்க வேண்டியிருக்கிறது? இவர் ஒருவர் மட்டுமில்லை யெல்ட்ஸினின் காலத்தில் தலையெடுத்த இந்த சுரண்டல் கூட்டத்திற்கு பெயர் "oligarchs". போரிஸ் பெரஸோவ்ஸ்கி, வ்ளாடிமிர் குஸின்ஸ்கி என்று பத்து பன்னிரண்டு பேர் இருந்தனர். ஒவ்வொருவராய் பூடினின் நடவடிக்கைகளில் மாட்டிக்கொள்ள எஞ்சியிருப்பது மிகச்சிலரே. ரோமன் அப்ரமோவிச் அதில் மிகப் பிரபலம். ஆங்கில கால்பந்து அணியான செல்ஸியை வாங்கியவர். ஒரு மாநிலத்திற்கு கவர்னராகவும் தற்போது இருக்கிறார்.

இவர்கள் creme de la creme. சிறிய அளவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். 1998-ஆம் வருடம் ஆசிய பொருளாதார வீழ்ச்சியினாலும், எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு விழுந்ததனாலும் ரஷ்ய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஒரு டாலருக்கு 6000 ரூபிள்கள் என்று இருந்தது, 14000, 17000, 21000 என்று ஒரே வாரத்தில் வீழ்ந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல காலம். டாலர் கையிருப்பால். பின்னர், எப்போதென்று சரியாக நினைவில்லை. கடைசியில் இருக்கும் மூன்று ஜீரொக்களை மக்கள் வசதிக்காக நீக்கினார்கள். IMF கொடுத்த 22.5 பில்லியன் கடனாலும், உலகச் சந்தை ஒருவாறு ஸ்டபிலைஸ் ஆகி எண்ணெய் விலை மீண்டும் ஏறத்தொடங்கியதாலும் தட்டுத்தடுமாறி கிரைஸிஸிலிருந்து வெளிவந்தது.

அரசியல் நிலைமையும் சீரானதாய் அக்காலத்தில் இல்லை. செர்னோமிர்டின், கிரியென்கோ, ஸ்டெபாஷின், ப்ரிமாகோவ் என்று ஆறேழு பேர் பிரதமர்களாய் musical chair விளையாடினர். காரணம் யெல்ட்ஸின்!

இதைத்தவிர, சமூக அளவிலான பிரச்சனைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. குடிப்பழக்கம், கிரைம், போதை மருந்து, எய்ட்ஸ், டி.பி என்று திண்டாடினார்கள். காரணம், வேலைவாய்பின்மை, நிரந்தரமினமை.

1999-இல் ஒருவழியாய் நல்ல காலம் பிறந்தது. உலகச் சந்தையில் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதியான எண்ணெயின் விலை கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. யெல்ட்ஸின் திடீரென்று பதவி விலக முடிவு செய்து தம் வாரிசென்று அதுவரை அறியப்பட்டிராத முன்னாள் கேஜிபியான பூடினை நியமித்தார். பிரதமர் ஆனவர் பின்னார் அதிபராகவும் ஆனார். தலைவர் சொன்னதுபோல் பாய்ந்து ஓடும் குதிரையாய் துள்ளிக்குதித்து எழுந்து முன்நோக்கி பாயத்தொடங்கியது ரஷ்ய பொருளாதாரம்.

---------
Local Tips:
வெளியில் செல்லும்போது எந்நேரமும் பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். மூன்று நாட்களுக்குமேல் ரஷ்யாவில் தங்கினால் நீங்கள் தங்கும் நகரத்திலுள்ள உள்துறை அமைச்சகத்தின் "ரெஜிஸ்ட்ரேஷன்" எனப்படும் ஸ்டாம்ப் உங்கள் பாஸ்போர்டிலோ, அல்லது நுழைந்தபோது அளிக்கப்பட்ட migration card இலோ இருக்க்வேண்டும். பெரும்பான்மையான ஓட்டல்கள் இந்த ஸ்டாம்ப்பை இலவசமாக பெற்றுத்தந்துவிடுவர். டிரான்ஸிட் விசாவில் வருவோருக்கு 15 நாள் டைம் உண்டு.

ராண்டமாக டாகுமெண்ட் சோதனைகள் நடத்த போலிஸுக்கு அதிகாரமுண்டு. சரியான முறையில் இல்லையென்றால் அபராதம் கட்டவேண்டி வரும்.


---------
5 ரஷ்ய வார்த்தைகள்

1. தொலைபேசி: Thi-li-fon - телефон
2. கழிவறை: Thu-a-lyet - туалет
3. ஓட்டல்: Ga-sthi-ni-tsa - гостиница
4. உணவகம்: Ri-Stho-Ran - ресторан
5. ஹாஸ்டல்: Obshe-zhi-thi-ye - общежитие


(தொடரும்)முந்தைய பதிவுகள்: 1, 2, 3, 4

இந்த வருடத்திய நோபல் பரிசுகள்!

இதைக்குறித்து யாராவது எழுதுவார்கள் என்று பார்த்தேன். உம்மைத்தொகை போட்டு ஆழமான தலைப்புகள் கொடுக்கும் நையாண்டித் தலக கூட கண்டுக்கிட்டதா தெரியல. இந்த மாதிரி அறிவுப்பூர்வமான விஷயங்களில் தமிழ்மணத்தில உலக அறிவு கம்மியா இருக்கறத சரி பண்ண நானே கிளம்பிட்டேன்! இந்த வருஷத்திய விருது பெற்றோர் பட்டியல்..


துறை - இயற்பியல்: ஜான் மெயின்ஸ்டோன் மற்றும் தாமஸ் பார்னெல் - ஆஸ்திரேலியா

செய்தது: Pitch Drop Experiment
1927 ஆரம்பித்தது இவர்களின் ஆராய்ச்சி. ஒரு துளி தார் கண்ணாடி பனலின் வழி கீழே ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒழுகுவதை பொறுமையாய் பாலோ செய்தது.


---
துறை - உலக அமைதி: க்ளேர் ரிண்ட் மற்றும் பீட்டர் சிம்மன்ஸ் - பிரிட்டன்
சுட்டி

செய்தது: 'நட்சத்திர சண்டை' (மொழிபெயர்ப்பு உபயம்: ஆழக்குத்தர்) திரைப்படத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது லோகஸ்ட்கள் எனப்படும் பூச்சிகளின் மூளையில் ஏற்படும் நிகழ்வுகளை பதிவு செய்தது.

---
துறை - இரசாயனம்: எட்வர்ட் கஸ்லர், பிரையன் கெட்டல்பிங்கர் - அமெரிக்கா
சுட்டி

செய்தது: தண்ணீர் மற்றும் சிரப்(syrup). இந்த இரண்டு மீடியம்களில் எதில் மனிதர்கள் வேகமாக நீந்த முடியும் என்ற கேள்விக்கு விடை கண்டது.


---
துறை - உணவு: Dr. யோஷிரோ நகமாட்ஸ் - ஜப்பான்

செய்தது: கடந்த 34 ஆண்டுகளாக அவர் உண்ட அத்தனை உணவையும் படம்பிடித்து பின்னர் அவை குறித்து ஆராய்ச்சி செய்தது

---
என்ன இதெல்லாம் ஓண்ணுகூட நீங்க கேள்விப்படலையா?

சரி சரி, இது அசல் நோபல் இல்லை. ஆனா நோபல் மாதிரி. இங்க போய் பாருங்க. இன்னும் இந்த மாதிரி மணிமணியான ஆராய்ச்சிகளப் பத்தியெல்லாம் நிறைய போட்டுருக்காங்க.

இ.பி - 4: பூலோக வைகுண்டமா, நரகமா?

சென்ற பதிவில் KGB, GRU, அரசியல் கொலை என்றெல்லாம் பயங்காட்டினேன் இல்லையா? அதைப் படித்துவிட்டு மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் "SU was all evil" என்ற கருத்தில் நம்பிக்கை ஏற்படலாம். ஆனால், அது முழுக்கவும் உண்மையானதன்று. சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சோஷலிஸ தத்துவம், அந்த வகையில் சோவியத் யூனியன் மனிதர்களுக்கானது. வேலைப் பாதுகாப்பு, கல்வி, இருக்க இடம், உண்ண உணவு, ஆரோக்கியம் என்று எல்லாம் எல்லார்க்கும் வேண்டும் என்று வலியுறுத்திய மேன்மையான மார்க்கம் அது. அதே நேரத்தில், மேற்கத்திய சந்தைப் பொருளாதாரத்தை ஒரு அடி தள்ளியிருந்து ஆராய்ந்தால் அது ஒரு "jungle" சமூகம் என்று புரியும். survival of the fittest அல்லது strongest என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். ஆனால் சோஷலிஸம் வலிமையான குழந்தைகளுக்கு அளிப்பது போலவே நோஞ்சான் குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் அமைத்துத்தரும் மனித பெற்றோர் போன்றதாகும். நானும் சொல்வேன், சோவியத் யூனியன் சோஷலிஸத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டு இல்லை. அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களேயன்றி, கொள்கையல்ல. இருந்தாலும் சோவியத் அரசில் இன்றளவும் வளர்ந்த நாடுகளில் நடக்காத பல நல்ல விஷயங்கள் நடந்தன. அவையாவை என்று பார்க்கலாமா?

விவசாயத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருந்த ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சோவியத் யூனியன் என்னும் ஒரே காரணத்தினாலேயே தொழிற் சார்ந்த வளர்ந்த பொருளாதாரங்கள் ஆகின. ரஷ்யா அதுவரையில் ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் கட்டமைப்பு விஷயங்களில் வியத்தகு வளர்ச்சிபெற்றன.

முதலில், என்னைப் பொறுத்தவரை மிடில் ஏஜஸிலும், பிறகு ஸ்டீம் எஞ்சினால் ஐரோப்பாவில் நடந்த மாபெரும் தொழிற்புரட்சியும் பெரும்பாலும் ரஷ்யாவை அவ்வளவு எளிதில் வந்தடையவில்லை. இம்பீரியல் ரஷ்யாவை ஆண்டவர்கள் சுகமாய் வாழ்ந்தார்களைத் தவிர ஏழை மக்கள் நிலை சிறிதும் உயரவில்லை. கல்வியறிவின்றியும், ஏழ்மையிலும் சிக்கி தவித்தனர் பாமரர்.

1917 புரட்சிக்குப் பின் நிலைமை தலைகீழாய் மாறியது. இராட்சத வேகத்தில் தொழிற்புரட்சி நடந்து முப்பது ஆண்டு காலத்திற்குள் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாய கல்வியறிவு. ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அநேகமாக எல்லா ஊர்களிலும் மேல்நிலைப் பள்ளிகள், அடிப்படை கல்லூரிகள் அமைக்கப்பட்டன. முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. குறிப்பிட்டு சொல்லவேண்டியது மாஸ்கோவிலுள்ள Moscow State University மற்றும் St.Petersburg State Technical Univ போன்றவை. இவைத்தவிர, பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவற்றில் படிப்பதற்கும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. இந்த வகையில் வந்தது தான் 99.6 சதவிகித படிப்பறிவு.

வீட்டு வசதி என்று எடுத்துக்கொண்டால் அனைவருக்கும் வீடு என்ற கொள்கை இருந்தது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் முதலுரிமை அளிக்கப்பட்டது. பெரும் நகரங்களென்றும், Soviet Style குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டன. நம்மூரைப்போல தனித்தன்மையுடைய வீடுகள் இல்லாமல், அனைவருக்கும் ஒரேவிதமான வீடுகள் என்று வழங்கப்பட்டது. Квартира (குவார்த்தீரா) என்றழைக்கப்பட்டவை இந்த அப்பார்ட்மெண்ட்கள். pre-contructed blocks-ஆக கொண்டு வந்து ஓன்று சேர்த்து பலமாடிக் குடியிருப்புகளாய் மாறின. தனித்தன்மை இல்லாமல் இருந்தாலும் மக்களில் பெரும்பாலானோர்க்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த மாதிரி தனி அப்பார்ட்மெண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அம்மாதிரி முடியாதோரருக்காகவே communalka என்றழைக்கப்பட்ட கட்டிடங்களும் உண்டு. அவற்றில் மூன்று, நான்கு ரூம்கள் கொண்ட apt-இல் ஒவ்வொரு ரூமிற்கும் ஒரு குடும்பம். இவைகளுக்கு பொதுவாய் சமையலறையும், கழிவறை மற்றும் குளியலறை. அதே போல் பொதுவாக தொலைபேசி, மின் கட்டணம் போன்றவை. இதில் ஒரு சுவாரசியமான விஷயம். நம்மூரில் ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரு பெட்ரூம், ஒரு லிவிங் ரூம் மற்றும் கிச்சன், பாத்ரூம் இல்லியா? இங்கே அப்படியில்லை. ஒரு ரூம் அப்பார்ட்மெண்ட் என்றால் ஒரே ரூம் (லிவிங்/பெட்) அப்புறம் கிச்சன், பாத்ரூம்.

அடுத்தது healthcare. சோவியத் காலத்தில் காஸ்மெடிக் சிகிச்சைகள் தவிர முற்றிலும் இலவசம். போர் veteran-களுக்கும் 60 வயது தாண்டியவர்க்கும் முற்றிலும் இலவசம் இன்றளவும். வேறென்ன வேறென்ன வேண்டும் என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா? கர்ப்பிணிப் பெண்கள் உட்பட. குழந்தைகள் நலத்தில் கூட முன்னணி. இலவச க்ரெச்-கள் மற்றும் சுகாதார மையங்கள். ஆனால், தரத்தில் குறைந்தவை அல்ல. இந்த விஷயத்தில் இன்றளவும் மேற்கத்திய நாடுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வேலைவாய்ப்பு என்பது பிரச்சனையாகவே இல்லை. job security-உம் அதிகம். ஆனால் இந்த வகை உத்திரவாதத்தினால் உற்பத்தித்திரன் குறைந்ததென்னவோ உண்மை. மேலும், பணியுயர்வு சீனியாரிட்டி படியே நடந்தது. மெரிட்டினால் அல்ல. இது ஒரு புறமென்றால், டார்கெட்டை அடைவதற்குத் ஊக்கங்கள் கொடுக்கப்பட்டதேயொழிய பொருளின் தரம் குறித்து கவலைப்படவில்லை.

அடுத்து போக்குவரத்து. அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கும் முழுக்க இலவசம். மற்றவர்க்கும் ஒன்றும் அவ்வளவு விலையுயர்ந்ததல்ல. ஒப்பீடுக்கு இன்றைய தேதியில் மாஸ்கோவின் ஒரு மெட்ரோ பயணத்திற்கு டிக்கட் விலை - 13 ரூபிள்கள் (50 cents). அதுவும் மெட்ரோவிற்குள் நுழைவதற்குத்தான் இந்த விலை. உள்ளே சென்றுவிட்டால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை மெட்ரொவிற்குள்ளேயே சுத்தலாம். சோவியத் காலத்தில் இன்னும் மலிவாகவே இருந்திருக்கவேண்டுமல்லவா?

பெண்களின் நிலை முன்னேறியதாகவே இருந்தது. கட்டாயக் கல்வி ஆனதாலும், சமத்துவக் கோட்பாடு புகுத்தப்பட்டதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டில் அடைந்து கிடக்காமல் சுதந்திரமாய் வெளியில் வந்தனர். 99 சதவிகிதத்திற்கும் மேலான படிப்பறிவு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. டிரெடிஷனலான கல்வி மற்றும் மருத்துவத்துறையில் பெரும்பாலான இடங்கள் பெண்களுக்கே. இவை தவிர, பெண்கள் மற்ற நாடுகளில் அச்சமயத்தில் நுழையாத விஞ்ஞான, ஆராய்ச்சி, பொறியியல் என்றும் சக்கைபோடு போட்டார்கள். ஆண்களின் துணை தேவையில்லாமல், தனித்தே வாழ முடியும் என்று 30-40 வருடங்களுக்கு முன்னரே புரட்சி செய்தனர்.

விவசாயமும் நவீனப்படுத்தப்பட்டது. யாரோ ஒரு ஜமீந்தாருக்கு உழைத்துக் கொட்டாமல், கலெக்டிவைஸ்டு பார்ம்களின் பயன் உழைப்பாளிகளை நேரடியே சென்றடைந்தது.

அரசியல் செல்வாக்குடையவர்களுக்கு மரியாதை தனி. அதை விட்டு பார்த்தால் சமத்துவமே எங்கும். கடைநிலை பணியாளர் ஆனாலும், மேலாளர் ஆனாலும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மரியாதை உண்டு. இது சார்ந்த ஒரு பழைய பதிவு இங்கே.

மொத்தத்தில், அதுவரைக்கும் ஒன்றுமில்லா நாடுகள் ஒன்று சேர்ந்து உலகத்தையே மிரட்டும் அளவுக்கு அசாத்யமான அறிவியல் வளர்ச்சியும், ஆயுத பொருளாதார வளர்ச்சியும் பெற்றன. வெறும் 30 ஆண்டுகளுக்குள் உலக வல்லரசாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவிற்கு ஈடுகொடுத்து bipolar world என்று எல்லோரும் சொல்லும் வண்ணம் வலியுற்றிருந்தது. எல்லாம் சரி, ஆனால் இந்த அந்தஸ்து கிடைக்க அம்மக்கள் கொடுத்த விலை? தனிமனித சுதந்திரம் தான்.

-------
Local Tips
ரஷ்யாவிற்கு பயணிப்பதாய் இருந்தால் பணத்தை டாலராகவோ அல்லது உங்கள் ஊர் கரென்ஸி பெரிய அளவில் புழங்குவதென்றால் அதிலேயே கூட கொண்டு வரலாம். பாங்குகளிலும் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அதை விட வசதி: நம்மூர் பொட்டிகடை போல "கரென்ஸி எக்ஸ்சேஞ்" எல்லா இடத்திலும் இருக்கும். обмен валюты என்று எழுதி வைத்திருப்பார்கள். வெளியிலேயே எக்ஸ்சேஞ் ரேட்டும் போட்டிருப்பார்கள். சில இடங்களில் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள். ரஷ்ய மொழி தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. பணத்தையும், பாஸ்போர்ட்டையும் கொடுத்தால் அவர்களே ரூபிளாக மாற்றித் திருப்பித்தந்துவிடுவார்கள்.

பணமாக கொண்டுவராமல் உங்கள் சர்வதேச ஏடிம் கார்டுகளோ அல்லது டிராவலர்ஸ் செக்-காகவும் எடுத்து வரலாம். ஏ.டி.எம்-களுக்கு "Банкомат" என்று எழுதியிருக்கும். காசோலைகளை வங்கிகளிலோ அல்லது மேற்சொன்ன எக்ஸ்சேஞ்ச் செண்டர்களிலோ மாற்றலாம்.

-------
5 ரஷ்ய வார்த்தைகள்
1. car: ma-shyi-na - машина
2. Bus: avto-bu(உ)s - автобус
3. Metro/ Subway: Mi-thro - метро
4. Train: po-ezd - поезд
5. Plane: sa-ma-lyoth - самолёт

அடுத்த பதிவில் சோவியத் யூனியன் வீழ்ந்த பின் ரஷ்யர்களின் தலையில் விழுந்த இடி பற்றி.

(தொடரும்..)


முந்தைய பதிவுகள்: 1, 2, 3

 

வார்ப்புரு | தமிழாக்கம்