கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்

மைடியர் பெனாத்தலாரே என்று சமீபத்தில் நீங்கள் பெனாத்தலார் இன்னும் சமீபத்தில் எழுதிய பதிவொன்றினுக்கு எதிர்வினையாக எழுதியதை கண்டேன்.

இதுவரை பின்னூட்டக்கயமைத்தனம் மட்டும் செய்துவந்த தாங்கள் பறிமானக் கோட்பாட்டின்படி முன்னேறி இப்போது ஒருவர் இட்ட பதிவையே வைத்து கயமைத்தனம் செய்துள்ளதில் - வலையுலக முதிர்ச்சியின் இளவேக பாய்ச்சலைக் கண்டு ஒரு புறம் பூரித்தாலும், மறுபுறம் இத்தகைய இடுகையமைத்தனம் செய்வது வலைப்பூவுலகின் தற்போதைய ஆரோக்கியமான போக்கிற்கு எவ்வாறான கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணுகையில் முன்னர் உப்பிய பூரி சப்பென்று அடங்கிவிடுகிறது. அதன் காரணமாகவே இக்கடிதம்.

*******************************************
ஐபிஎல்லை தமிழ் படுத்துகிறதா அல்லது ஐபிஎல் தமிழைப்படுத்துகிறதா என்று இனமானக்காவலர்கள் வெகுண்டெழுந்து வேட்டியவிழ்த்து போராடிவரும் வேளையில்: ஐபிஎல்லுக்கு பதிலாக மாநிலகிட்டிப்புற்கழகம் சார்பில் இனி மாவட்டத்துக்கு ஒன்றாக சர்வதேச கிட்டிப்புல் வீரர்களை விலைபேசி: அவர்களுக்கு தமிழக நகரங்களின் தெருக்களில் இருக்கும் கோடிகளில் சிலவற்றை கொடையாகத்தந்து சிறப்பு கிட்டிப்புல் கூட்டுசம்பந்தத்தில் சேர்த்துக்கொண்டு, ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கலாச்சாரத்துடன் விளையாட்டார்வத்தை வளர்த்துவருவதுடன்; 2011ல் சிறப்புப் கிட்டிப்புல் வளர்ச்சி மண்டலங்களுக்கான வெள்ளையறிக்கையும் தயாராகிவருவது தெரிந்தும் இவ்வாறான கேள்வியை நீர் எழுப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல விஷமானதும்கூட.

*******************************************
தமிழகத்தில் பிறநது தமிழ் நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள், ஏதுமறியாதவரைப்போல, கருநாக்காவுக்கும் புதரகத்துக்கும் கொடி பிடிக்கும் சூட்சுமம் எங்களுக்கு புரியாமலில்லை. இன்று தமிழர்கள் தண்ணியடிக்கிறார்கள் தண்ணீரில்லை என்று கருநாடகாவும், சோறு சாப்பிடுகிறார்கள் சோறில்லை என்று அமெரிக்காவும் சொல்வதை ஒப்புக்கொண்டால், நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது என்று இந்தோனேஷியா புலம்ப வாய்ப்புகள் உண்டு என்று அறியாதவரா தாங்கள்? இந்தச் சமூக அவலத்தினை தோலுரித்துக்காட்டி - அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல முயன்ற அருமை பெனாத்தலாரின் கருத்தை, நகைச்சுவை என்ற பெயரில் பூசி மெழுகுவது அழகா?
*******************************************
ஆச்சரியத்தை ஆச்சர்யமாக வெளிப்படுத்துவது தவறா இல்லை எல்லாவற்றிலும் ஆச்சார்யங்களை - உங்களைப்போல் - தேடுவது தவறா? சினிமா போஸ்டரில்கூட நாம் தேடும் விஷயத்தை மட்டும்தான் தேடுவோம் என்று ஆடுகிறீர்களே? ஆச்சார்யங்களை வலிந்து தொலைத்த கமலே, ஆச்சார்யர்களைப் பற்றி படமெடுத்தால் படம் ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக்கண்டு பரிதாபப்பட்டு ப்ளாசில் அவரை விளாசாமல் விட்டார் நமது கொ.ப.செ. மேலும் ப்ளாசில் அதைப் போட்டால் வேறு 'எதெதை' போடுவது என்ற குழப்பமும் குட இருந்திருக்கலாம்
*******************************************
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பிரமிட் ஸ்கீம்களை முதன்முதலில் வகுத்து அதன் மூலமாய் சொத்துகளை குவித்தவர்கள் பண்டைய எகிப்தியர்கள் தான். அப்படி சுரண்டியவர்களை பின்னர் சுரண்டியது ஒரு கூட்டம். இங்கேயும் அதே கதைதான் நடக்கும். மன்மோகன் சிங்கிற்கு நம்ம கைச்செலவில் நாலு லெட்டர்பேட் அடித்துக்கொடுத்தால் வேலையாயிற்று. அவரே பிரதியெல்லாம் எடுத்து அனுப்பவேண்டியவர்களுக்கு அனுப்பி சபாநாயகருக்கு அறிவுரைத்து அனைத்தையும் அமுக்கிவிடுவார். சொல்ல முடியாது, இப்போது கம்ப்ளெயிண்ட் கொடுத்த பொதுமக்கள் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்கள். ஸோ கவலைப்படாமல் நைஜீரியன் திட்டத்தினை விரைவில் தொடங்கவும்.
*******************************************
புதிய தமிழ்மணம்/மறுமலர்ச்சி தமிழ்மணம் பற்றியும் உத்தப்புரம் மற்றும் அது குறித்து தலைவர்கள் தந்த பொன்மொழிகள் பற்றியும் பலரும் பல்வேறு கோணல்களில் ஆராய்ச்சி செய்து ஆகிவிட்டபடியால் அப்பகுதிகளுக்கு 'பாஸ்'
*******************************************
வலைப்பூக்களில் எழுதுவது மன அழுத்தத்தை குறைக்கிறதா அல்லது மன அழுத்தத்தை எகிறடித்து கல்யாணியை விட்டு ஆத்த வைக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை படிப்போர்களிடமே விட்டுவிடுகிறேன்.
*******************************************
டிஸ்கி 1: கொத்ஸைக்குறித்து சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டி இக்கடிதத்தினை சாதாரண தபாலில் நடுவண் அரசிற்கு எழுதியனுப்பாமல், இன்ஷ்டண்டாக அனைவரையும் சென்றடையும் மின்னணு தகவற்தொடர்பு ஊடகத்தை பயன்படுத்துவது தமிழகத்தின் நாகரிகத்திற்கு எதிரானதொன்று என்றாலும் சூடு ஆறுவதற்குள் சுடவேண்டும் என்ற பொறுப்பும் சொரணையும் இருந்ததால், ஏற்பட்ட இப்பிழையினை பொறுத்தருள வேண்டும்.

டிஸ்கி 2: மேட்டர் இல்லாத வறட்சியில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எனது அவலநிலையை அறிந்து அவலாய் பதிவொன்று தந்த பெனாத்தலாருக்கும் அதையே வறுத்தெடுத்து நூறடித்த கொத்ஸிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்