185. உத்திரட்டாதியில் புதிய உதயம்

சற்றுமுன் நடந்த ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. எங்கள் வீட்டு குட்டிப்பெண்ணுக்கு தலைப்பிரசவம். சுகப்பிரசவமும் கூட.

இன்று நல்ல உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில மாலை சுமார் 530 மணிக்கு புதிய அங்கத்தினர் வருகை.

தாயும் சேய்களும் நலம்.

இதோ கையோடு எடுத்த படங்கள்.

மொத்தம் ஐந்தில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். இன்னுமொரு குழந்தை பிறந்திருந்து அவர் ஸுவாஹா செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த செய்தி.

குட்டிகளைக் கண்டவுடன் தந்தையார் எஸ்கேப் ஆகிவிட்டார். சுமார் இரண்டு மணிநேரமாகியும் மறைந்திருந்து தாயையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரேயொழிய அருகில் சென்று பார்க்க தைரியம் வரவில்லை. எப்படி படிக்க வைத்து வளர்த்து திருமணம் செய்துகொடுக்க போகிறோம் என்ற கவலையாக இருக்கலாம், பாவம்.

கண் தொறக்க இன்னும் இரண்டு வாரங்களாவது ஆகும். அதுக்கப்புறம் வீடே களேபரம் தான். :))

184. பச்சைக்கிளி முத்துச்சரம்!


கவுதம் மேனன் இயக்கத்தில் மேக்கப்பில்லாத சரத், ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் மற்றும் ஜோதிகா நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. படத்திற்கான பப்ளிசிடி பயங்கரமாய் இருக்க படம் ரிலீஸான ரெண்டாவது நாளில் டிக்கட் கிடைக்குமா என்று அச்சத்துடன் சென்றால் சரத் ரசிகர்களைக் கூடக்காணோம். டிக்கட் எளிதாகக்கிடைக்க பால்கனியில் முன் சீட்டில் காலை நீட்டியவாறு சொகுசாய் இடம்பிடித்தோம் நானும் என் கஸினும்.படம் ஆரம்பிக்குமுன்னர் வரும் வழக்கமான விக்கோவை காணோம். அதற்கு பதில் சச்சின் அவசர அவசரமாக வந்து ரேனால்ட்ஸ் வாங்கச் சொன்னார். அதற்கு Qube சினிமா வும் DTS ஒலிக்குமான விஷ் விஷ்கள். அதற்கும் விசிலடிக்கும் ரசிகர்களைக் கண்டு நோவதா என்பதற்குள் சார்மினார் பாக்ரவுண்டில் ஒரு சிறுவன் ஓடிவர கறுப்பு சாண்ட்ரோவிலிருந்து இறங்கும் சரத் பையனுக்கு ஊசி போட்டுவிட்டு அம்மாவைத் அழைத்துக்கொண்டு வருவோம் வா என்று சொல்ல, டைட்டில்கள்.

கதைச்சுருக்கம்: சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் ரெப். ஆண்ட்ரியா ஹோம் மேக்கர். அவர்களுக்கு அழகான பையன். க்யூட்டாய் டைட் க்ளோசப்பில் மூன்று பேரும் கட்டிக்கொண்டபடி சிரித்து பாட்டு பாடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு type-I நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் நொறுங்கிப்போகிறார்கள். அவர்களுக்குள் இருந்த சந்தோஷம், spark காணாமல் போகிறது. இதற்கு நடுவில் சரத் வழக்கமாய் பயணிக்கும் சபர்பன் ரயிலில் அதிரடி அழகு இராட்சசியாய் நுழைகிறார் ஜோதிகா.stolen looks மற்றும் இன்னபிற ரத்ன சுருக்க சம்பாஷணைகளுக்குப் பிறது சரத்தை பிடித்திருப்பதாக குண்டைத் தூக்கிப்போடுகிறார் ஜோதிகா. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் சரத், மனைவி சில விஷயங்களில் ஒத்துழைக்காமல் வேறு போக சபலப்பட்டு, ஜோதிகா ரூம் போட ஈ.சி.ஆர் ரோட்டிலுள்ள ரிசார்டுக்கு அழைக்க, போகிறார். அங்கு நடக்கும் விஷயத்தால் சரத் வாழ்க்கையில் அடிக்கும் புயலை எப்படி சமாளிக்கிறார் என்பதே பச்சைக்கிளி முத்துச்சரம்.

கவனம் தேவை: plot details maybe revealed.
படத்தின் தூண் என்றால் சரத். அடிதடி ஹீரோவுக்கான எந்த லாஜிக் அபத்தமும் இல்லாமல் மிட்-லைப் க்ரைஸிஸில் இருக்கும் ஒரு சாதாரண நடுத்தர வயது ஹீரோவாக: மனைவியிடமும் குழந்தையிடமும் காட்டும் அன்பிலாகட்டும்: ஜோ மீது ஏற்படும் ஈர்ப்பை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பதிலாகட்டும்:முட்டாள்தனமாக மாட்டிக்கொள்வதிலாகட்டும்: பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் கலங்குவதாகட்டும்: அசட்டுத் துணிச்சலாகட்டும்: அதன் பயனாய் குடும்பத்திற்கே ஆபத்து வருவதைக் கண்டு நொறுங்கிப்போய் பின்னர் பொங்குவது என எல்லா பரிமாணங்களிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சரத். சரத், தைரியமாக இதுபோன்ற படங்களில் நடியுங்கள். 'சமுத்திரம், ஐயா'விலேயே நடிக்க நன்றாக வருமென்று காட்டினீர்கள். இதில் முத்திரையே பதித்தாகிவிட்டது. நடுவில் வந்த பஞ்ச் டயலாக், அடிதடி குப்பைகளை விட்டுத்தள்ளுங்கள்.

சரத்தின் மனைவியாய் வரும் ஆண்ட்ரியா அழகாக இருக்கிறார். பெரும்பாலும் சராசரி குடும்பத்தலைவி என்ன செய்வாரோ, சொல்வாரோ அதையே செய்கிறார். சரத் தன் பிரச்சனையைச் சொல்லி அழும்போது ஆறுதலாய் பேசுபவர் திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடுவதெல்லாம் ஓவர். அதுவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக கருவையே கலைக்க முன்வருபவர் சரத்தின் வாக்குமூலத்திற்கு பிறகு குழந்தையையும் விட்டுச்செல்வது அபத்தம்.

ஜோதிகா: சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசி காட்சிகளில் சந்திரமுகி - II. "I want to make love to you" என்று இப்படத்தில் சரத்திடம் சொல்கிறார். மிலிந்திடமும் இன்னொரு ராமச்சந்திரனிடமும் சொன்னதாகக்கூட நினைவு. இது காக்க காக்கவிலிருந்து சொல்லிவரும் டயலாக் என்பதால் அப்போதிலிருந்தே ஒரே ஸ்க்ரிப்டையே படித்துக்கொண்டிருக்கிறாரோ என்று எனக்கொரு சந்தேகம். அழகான ராட்சசியாய் இல்லாமல் படத்தில் பார்க்க கொஞ்சம் வயசானவராய்த் தெரிகிறார். காமிராக்காரரும் மேக்கப்மேனும் சதி செய்திருக்கிறார்கள்.

மிலிந்த் சோமன்: முன்னாள் சூப்பர் மாடல். மிரட்டுகிறார். குரல் (கவுதம் மேனன்) ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால் நிறைய காக்க காக்க ஜீவா சாயல். இது டைரக்டரின் தவறு. நடிகருடையதல்ல என்று நினைக்கிறேன்.

காமிரா: அரவிந்த் கிருஷ்ணா: காமிராவில் வித்தியாசப்படுத்திக்காட்ட வேண்டும் என்ற ஆவல் தெரிகிறது. முன்பாதியில் வரும் ரயில் காட்சிகள், சரத் குடும்ப காட்சிகள் போன்றவை முழுமையாய் அழகாய் இருக்கின்றன.

இசை: மின்னலே, காக்க காக்க தகடு வைத்திருந்தீர்களானால் புதிதாய் ஒன்றுமில்லை. வழக்கமான புரியாத பாஷையில் பிளிறல்கள், ஒரே மாதிரியான ஹை பிட்ச் ஆண் குரல் என்று போரடித்துத் தள்ளுகிறார் ஹாரிஸ். தீம் கூட வேட்டையாடு விளையாடுவை நினைவுபடுத்துகிறது.

கவுதம் மேனன்: பல இடங்களில் வசனங்கள் நெருடுகிறது. அவற்றின் contentஐ நான் குறை சொல்லவில்லை. ஆனால் revolutionary என்ற போர்வையில் அச்சுபிச்சுத்தனமாய் இருக்கிறது. த்ரில்லரை நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார். பாதியிலேயே கதையை கெஸ் செய்ய முடிவது என் கோணங்கி புத்தியினால் கூட இருக்கலாம். முந்தைய படங்களை ரொம்பவே நியாபகப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், லொக்கேஷன்களையும் தவிர்த்திருக்கலாம்.

பல இடங்களில் வில்லன்/ஜோவின் செயல்பாடுகள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. அதற்கும் மேல் திடிரென சரத் hulk ஆக மாறுவதும் நம்பமுடியவில்லை.....ஜோவுடனான obsessionஐ விட வேண்டும். வேட்டையாடு விளையாடுவை பார்க்க இது நல்ல படமே தான்.

மொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

---------------------------------------


இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
மொத்த ப்ராஸஸ் பத்து நிமிடம் ஆகும். ஒரு மெயில் ஐடி தேவைப்படும். பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.


(கொத்ஸின் ஆசைக்காக)
திமுக, அதிமுக என்று மாறி மாறி எந்தக்கட்சியிலிருக்கிறோம் என்றே தெரியாத குழப்பத்தில் இருந்த சரத்தை மேலும் குழப்பி, ஏமாந்த சமயத்தில் எனக்காக வோட்டு கேட்டு உங்களைக் கும்பிட்டபடி பிரச்சாரம் செய்ய போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

எல்லோரையும் ஆசையுடன் வோட்டு போட அழைக்கும் முண்டக்கண்ணழகி (நன்றி: வெளிகண்டநாதர்) ஜோவுக்காகவாவது எனக்கே இண்டிப்ளாக்கீஸில் போடுங்கள். செவ்வாய் கடைசி!
ரஜினியையும் எனக்காக பிரச்சாரம் செய்யக் கூப்பிடப்போனேன்!!!


அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.படங்கள் உதவி: ஜோதிகா, சரத்


---------------------------------------------------------
பெனாத்தலாரின் கடைசி கட்ட அதிரடி பிரச்சார பதிவு:
ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி

183. மயில் குயில் ஆச்சுதடி

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி - அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி

துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி - அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி

-அருட்காட்சி: திருவருட்பா: இராமலிங்க அடிகளார்

இப்பாடலை எம்.எஸ் பாடி இங்கே கேட்கலாம்.

---
டிஸ்கி: இப்பாடலை இங்கே இட்டதற்கும் வேறெந்த தற்போதைய நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை. அதோடு பாடலில் வரும் கதாபாத்திரங்களான மயில், குயில், ஐயர், சோதி, வள்ளல் யாவும் ஆசிரியரின் கற்பனையே. அதனால் எக்குத்தப்பாக முடிச்சுப்போட்டு பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

182. செட்டிக்கோட்டையில் ஒரு வெட்டி - 2

காரைக்குடி திரும்பி வரும் வழியில், ஒரு கிராமத்தில் பெரிய மைதானத்தில் பள்ளிக்குழந்தைகள் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். லைவ் வர்ணனை எல்லாம் லவுட் ஸ்பீக்கரில் அமர்க்களப்பட்டுக்கொண்டு ஏதோ பள்ளி விழா போலிருந்தது. வேடிக்கை பார்க்க ரெண்டு நிமிடம் நிறுத்தினால் முன்பு அவ்வழியே சென்றபோது தென்படாத போர்ட் ஒன்று தென்பட்டது. அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தார் ப.முத்துராமலிங்கத்தேவர் நினைவுச்சின்னம் என்று.

மெயின் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கினாற்போல ஒரு பீடம். அதன் மேல் ஒரு bust. தோளுக்கும் தலைக்கும் சம்பந்தமில்லாதாவாறு மேற்படி தேவரின் ஜென்மப்பகையாளி ஒருவர் செய்த காரிகேச்சர் போன்று இருந்ததை பார்க்க அருகில் சென்றால் வழக்கமாய் கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக சிலைகளுக்கு நடக்கும் அனைத்து டெக்கரேஷன்களோடும் சிரித்துக்கொண்டிருந்தார் தேவர். இவர் தான் அந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரா என்று தெரியவில்லை. கண்டதேவி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை. அவராகவும் இருக்கலாம் என்று மேலும் விவரமாக போர்ட் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் தேடினால் இன்னும் சற்று உள்ளடங்கினாற்போல ஒத்தையடி பாதையின் கடைசியில் ஒரு வேலி. அதில் வரிசையாக துணிமணிகள் காயப்போடப்பட்டிருந்தன. அவற்றை விடவும் கண்களை பறித்தது சிதிலமடைந்த ஒரு மண்டபமும் தொல்லியல் துறையின் பளிச்சென்ற அறிவிப்புப்பலகையும். முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் அந்த மண்டபம் எந்நேரம் இடிந்து விழும் என்கிற துர்பாக்கிய நிலையிலும் சகலவிதமான எண்டர்டெயின்மெண்ட் செண்ட்ராக சிலர் பயன்படுத்திவருகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் சுற்றிலும்.


போர்டிலிருந்த விவரம்: சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டு பின் மருதுபாண்டியர்களிடம் வந்துள்ள பெரிய கோட்டை. அவர்கள் பலசமயம் இங்கே தங்கி ஆங்கிலேயருக்கு எதிராய் போர் தொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட கோட்டை இன்றைக்கு வெறும் சிதிலமடைந்த மண்டபமாய் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் சுமாரான ஷேப்பில் கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். சேர சோழ பாண்டிய காலத்து சமாச்சாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. கோயில்கள் நிலைத்திருக்கும் அளவிற்கு கோவின் இல்லங்கள் நிலைக்காமல் போன மர்மம் என்னவோ?

எதிர்பாராமல் மருதுபாண்டியர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு லொகேஷனை பார்த்த திருப்தி. ஆனால் மருதுபாண்டியர்கள் பசிக்கு உதவுவார்களோ? அதனால் காரில் ஏறிய க்ஷணமே மருதுபாண்டியரை மறந்து சுபலட்சுமியைத் தேடி பயணம் தொடர்ந்தது. மதியம் ரெண்டு மணிக்கு ரெஸ்டாரண்டின் வாசலிலேயே நான்கு டேபிள் போட்டு கூரை வேய்ந்த உணவுக்கூடத்தில் அமர்ந்துகொண்டோம். செட்டிநாடு அரண்மனைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுக்கும் பிரபலமாயிற்றே. குழிப்பணியாரம், ஆப்பம், செட்டிநாட்டு 'கர்ரி'கள் பல. சைவபட்சினிகளுக்கு ஐட்டம்ஸ் கம்மிதான். மெட்ராஸிலும் இன்னும் எங்கெங்கேயெல்லாமோ செட்டிநாடு உணவு சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் ஊரில் சாப்பிடுவது போல வருமா என்று நல்ல பசிவேளையில் சித்தம் கலங்கி கனவு கண்டுகொண்டிருந்த எனக்கு பேரிடியாய் இன்முக சர்வர் வந்து மதியம் மூன்றுமணி மேல் சந்தியா வேளையில் சுபயோக நேரத்தில்தான் செட்டிநாடு உணவு கிடைக்கும் என்றார். இதைக் கேட்டு கடுப்பான என்னிடம் காரைக்குடியில் சாப்பிடும் நூடுல்ஸ் கூட செட்டிநாட்டு உணவுதானே என்று நேரம் காலம் புரியாமல் வேறு கடித்தார். ஒருவழியாக புலாவும் சில்லி பனீரும் அடித்துவிட்டு அடுத்து ஆயிரம் ஜன்னல் வீட்டிற்கு செல்வோமே என்று முடிவெடுத்தோம்.

சர்வர் அந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் இருப்பதாக வேறு சொன்னார். வழி கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையே ஆயிரம் ஜன்னல் வீடு என்று போர்டில் கோடு போட்டு ரோடு காண்பிக்கிறார்கள். ஒருவழியாக கண்டுபிடித்துச் சென்றால் வீடு ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை வெளியிலிருந்து பார்க்க. இதில் எப்படி ஆயிரம் ஜன்னல் என்று எண்ணியவாறே கதவைத்தட்டினேன். ஒரு சிறுமி வந்தாள். இது ஆயிரம் ஜன்னல் வீடா என்றேன். சற்று முழித்துவிட்டு "யூ மீன் தவுசண்ட் விண்டோ ஹவுஸ்?" "யா" "யா, திஸ் இஸ் இட்". நாங்கள் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப்பயணி என்று அவளுக்கு புரியவைத்து சுற்றி உலாவலாமா என்றால் "திஸ் இஸ் அ ப்ரைவேட் ஹவுஸ்" என்று போடு போட்டாள். என்ன அம்மணி, ஊர் பூராவும் போர்ட் வைத்திருக்கிறார்களே, என்ன வெளியிலிருந்து பார்த்துச் செல்வதற்கு மட்டும்தானா என்று நான் கேட்டு அவளுக்கு புரியவா போகிறது என்று விட்டுவிட்டேன். வெளியிலிருந்தே பார்த்து ஒரு கும்பிடு போட்டாகிவிட்டது.

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரின் நக்கலை நினைத்து கோபம் வந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. சுபலட்சுமி ஆசாமியும் முன்னரே சொல்லியிருக்கலாம். மறுபடியும் காரைக்குடியில் எங்களுக்குத் தெரிந்த ஓரே ஜீவன் சுபலட்சுமி சர்வரைப் பார்த்தால் 'சார், வேணாக்க ஆத்தங்குடி பெரிய மைனர் வீடு பாருங்களேன் ஆனால் திறந்துவிடுவார்களா என்று தெரியவில்லை' என்றார். அது எங்கேஎன்றால் சுமார் இருபது கிலோமீட்டர் செல்லவேண்டும் என்றார். ஆயிரம் ஜன்னல், ஏ.எம்.எம் போன்ற இன்னொரு அனுபவம் தேவையில்லை என்பதால் கானாடுகாத்தானுக்குச் செல்வோமென்று கிளம்பியாகிவிட்டது. காரைக்குடியிலிருந்து பத்துகிலோமீட்டரில் தான் அரியக்குடி இருக்கிறது. கர்நாட இசை லிஜண்ட் அரியக்குடி இராமானுஜையங்கார் ஊரான இதில் உள்ள நகரத்தார் கோயில் பிரசித்தம். முன்பொருசமயமே போயிருந்ததால் அதுவும் ஸ்கிப். அந்தக்கோயில் ஏன் நினைவுக்கு வருகிறதென்றால் கோபுரத்தின் மேல் அனுமாரா/கருடனா தெரியவில்லை. ஒருவர் இருப்பார். அவரைப் பார்த்து நாம் தேங்காயைக் கொண்டு சுவற்றில் போலிங்க் செய்யவேண்டும். தமாஷாக இருக்கும்.

எனிவே, இரண்டு நாள் தங்கியிருந்து பார்க்க விஷயம் இல்லாததால் பாக்கியிருந்த கானாடுகாத்தானைப் பார்த்துவிட்டு கிளம்புவதாக முடிவுசெய்தோம். அங்கேயாவது இதுவரை ஓவர் பில்டப் கொடுத்து கண்ணிலேயே காட்டாமல் விட்ட செட்டிநாட்டு அரண்மனையை பார்க்கவிடுவார்களா என்பது எம்.ஏ.எம் மீது பாரத்தைப் போட்டு கிளம்பினோம்.

(தொடரும்)
---
இன்னும் காளையார்கோயில் படங்கள்தொடர் என்று போட்டதால் மூன்றாவதாக ஒன்று இழுக்க வேண்டிய நிர்பந்தம். பொறுத்தருள்க.

--------
எம்.ஏ.எம் அருள்செய்தாரா இல்லையா? 'தாவணி போட்ட தீபாவளி'யும் 'கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா' என்று ஆடிய வண்ணத்துப்பூச்சியும் ஆடி அருளிய புனிதத்தலத்தை நான் காண முடிந்ததா இல்லையா? காத்திருப்பீர்! :)

182. செட்டிக்கோட்டைக்குள் ஒரு வெட்டி - 1

பணியிடத்தில் பழுதுவேலைகள் நடைபெறுவதால் இரண்டு நாள் விடுமுறை என்றாயிற்று. சரி, நமது வழக்கமான ஹாலிடே டெஸ்டினேஷனுக்கு செல்வோமென்றால் (அதாங்க கொடைக்கானல் - இந்த ஊருக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்னு நினைக்கிறேன். வருஷா வருஷம் பக்தர்கள் சபரிமலை போற மாதிரி நமக்கு கொடைக்கானல். இனிமேல் அங்க பார்க்க ஒண்ணுமே இல்லாவிட்டாலும் ஹோட்டலில் தூங்கி, கோக்கர்ஸ் வாக்கில் நடந்து, தூறலில் போட்டிங் சென்று, கார்ல்டனில் புப்பே கொட்டிக்கொண்டு இப்படி பலது பொழுது போவதே தெரியாமல் போகும்) அங்கே மதியநேரங்களில் வெயில் பட்டையை கிளப்புகிறது என்று நண்பர்கள் தகவல் சொன்னார்கள்.

இரண்டு நாட்களுக்கு சுற்றி வருவதுபோல பக்கத்தில் வேறு என்ன இருக்கிறது என்று அலசு அலசென்று அலசினால் ஒண்ணுமேயில்லை என்று நொந்துபோனேன். எதேச்சையாக எங்கள் ஊர் சோழன் சிலைக்கு பக்கத்தில் பெரிதாக தமிழ்நாடு சுற்றுலாக்கழகத்தின் விளம்பரம் பார்க்க நேரிட்டதில் (பல வருஷங்களாக துருப்பிடித்து அங்கேயேதான் இருக்கிறது - சிக்னலில் நின்று சென்றால்தானே கண்ணில்படும்) செட்டிநாட்டு பக்கம் சென்றால் என்ன என்று பல்ப் எரியவே காரைக்குடி பற்றி நெட்டில் தேடினேன்.
செட்டிநாடு என்று அறியப்படும் ஏரியா சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி போன்ற நகரங்களை உள்ளடக்கியது. பிரசித்திபெற்ற ஆலயங்களான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயமும், குன்றக்குடி முருகன் கோயிலும், காளையார்கோயிலும் - இவை தவிர நேமம், இளையாத்தன்குடி உள்ளிட்ட ஒன்பது நகரத்தார் கோயில்களும் இருக்கின்றன. நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் தமிழகத்தின் பெரும்பணக்காரர்கள் பலரை உள்ளடக்கிய சமூகம் செட்டியார்களுடையது. அந்தக்காலத்திலேயே பர்மாவுக்கு சென்று தேக்குமர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் தெற்காசியா முழுதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மூலம் சொல்லிமாளாத செல்வம். சேர்த்த செல்வத்தை வைத்து வீடுகளை கோட்டைகளைப் போல இழைத்து இழைத்து கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தெரு நீளத்திற்கு. இப்படியே மைல்நீளங்களுக்கு நீளும் குறுகலான தெருக்கள். கிராமங்களிலெல்லாம் பெருநகரங்களிலும் காணக்கிடைக்காத சைசுகளில் அரண்மனைகள். உண்மையில் ராஜாக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால் 'செட்டிநாடு சிமெண்ட், அண்ணாமலை பல்கலைக்கழகம்' எம். ஏ. எம். இராமசாமி ராஜா, 'ஸ்பிக்' ஏ. சி. முத்தையா, முருகப்பா குழுமத்தின் பரம்பரை வீடு எனத் தமிழகத்தின் செல்வந்தர்கள் பலரின் அரண்மனைகள் இங்கேதான் இருக்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படும் கையேடுகளில் இடம்பெற்றிருக்கும் இந்த ஏரியா நம்மூரில் ஏனோ அவ்வளவு ஆர்வமாக ப்ரமோட் செய்யப்படுவதில்லை தமிழக அரசால். தமிழ்நாடு டூரிஸம் வலைத்தளத்தையும் இன்னும் சில வலைப்பூக்களையும் மட்டுமே நம்பி கிளம்பியாகிவிட்டது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.புதுக்கோட்டையில் சாப்பிட நல்ல ஓட்டல் கூட கிடையாது. வழியில் நிறுத்திக்கேட்டால் ஊரிலேயே நல்ல ஓட்டல் கோர்டுக்கு பக்கத்தில் உள்ள "லெட்சுமிநாராயண பவன்" என்பார்கள். நம்பாதீர்கள். அங்கு சாப்பிடுவதற்கு பதில் பட்டினியாகவே கிடக்கலாம்.


புதுக்கோட்டையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டரில் இருக்கிறது திருமயம். திருமயம் கோட்டை மிகவும் பிரபலமானது. அடையாளம் காண்பது ஒன்றும் கஷ்டமில்லை. மிகவும் சக்திவாய்ந்த கோட்டை பைரவர் கோயிலில் நிறுத்தி வணங்கிவிட்டுத்தான் அனைத்து வண்டிகளுமே செல்லும். கோட்டை பெரும்பாலும் சிதிலமடைந்தே இருக்கிறது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் சிவன் மற்றும் விஷ்ணுவின் கோயில்கள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு கோயிலை பார்த்திருந்தபடியால், ஞானாம்பிகை உடனுறை சத்தியகிரீஸ்வரரின் திருக்கோயிலுக்கு சென்றோம். சமணம் விடுத்து சைவம் தழுவிய மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய குடவரைக்கோயில்களில் ஒன்று இது. காலை எட்டு மணிக்கு குருக்கள் கிடையாது. சிப்பந்திகள் ஒருவர் கூட இல்லை. நாங்களும் ஒரே ஒரு வி.வி.ஐ.பி மட்டுமே. சந்திப்பின் அடையாளமாக ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். அந்த வி.வி.ஐ.பியும் "எக்ஸார்ஸிஸ்ட் போல அவுட் ஆப் போகஸில்" விழுந்துதொலைக்காமல் படத்தில் தெளிவாகவே விழுந்திருக்கிறார். மிகவும் அமைதியான சூழல். பிரகாரத்தை சுற்றிவந்தபோது கண்ட கஜலக்ஷ்மியின் அழகு சொக்கவைக்கும்படி இருந்ததால் அவளும் கோச்சுக்காமல் கேமராவில் வந்தமர்ந்தாள். பொறுமையாக படங்கள் எடுத்துக்கிளம்பும்வரை ஆள் அரவம் இல்லை. சத்தியகீரிஸ்வரனுக்கு ஒரு நன்றி சொல்லி கிளம்பினால் அடுத்த ஸ்டாப் பள்ளத்தூர்.

மேலே இருக்கும் போர்டை உற்று நோக்கினீர்களானால் பள்ளத்தூரில் செட்டியார்களின் வீடுகளைச் சுற்றிப்பார்க்கலாம் எனறு பொருள்படும்படி இருக்கும். பள்ளத்தூரில் விசாரித்தால் அப்படி ஒருவீடும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஓரேயொருவர் மட்டும் ஏ.எம்.எம் ஹவுஸ் கேட்டுப்பாருங்கள். விட்டால் விடலாம் என்று சொல்லவே குறுகலான தெருக்களுக்குள் நுழைந்து ஒருவழியாய் கண்டுபிடித்தோம். முகப்பு சிறியதாய் தான் இருக்கிறது. ஏ.எம்.எம் என்றவுடன் யாரென்று ஸ்ட்ரைக் ஆகவில்லை. அப்புறம் சிலநிமிடங்கள் கதவைத்தட்டியதன் பயனாய் சற்றே சோர்வுடன் ஒரு சிப்பந்தி பிரத்தியட்சம் ஆனார். இப்படி அகாலங்களில் காமிராவும் கையுமாய் டூரிஸ்ட்கள் வந்துவந்து களைத்திருந்தார் போலும். அவர் இது ஏ. எம். முருகப்ப செட்டியார் வீடு என்று சொன்னபின்பும் புரியவில்லை. பின்னர் 'டி.ஐ. சைக்கிள்ஸ் தெரியுமா' என்று கேட்டார். அப்போதுதான் Tube Investments of India Ltd, Carborundum Universal Ltd, Coromandel Fertilisers Ltd, EID Parry India, Parry Agro Industries, Cholamandalam DBS Finance (இது பாதிதான்.. முழுசு இங்கே)என்று நீண்டுகொண்டே போகும் ஏழாயிரம் கோடிரூபாய் மதிப்புள்ள தென்னிந்தியாவின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பில்லியன் டாலர் தொழில் சாம்ராஜ்யங்களில் பிரதானமான முருகப்பா குரூப்புடைய வீடு என்று என் மூளையில் பல்ப் எரிந்தது. 1902-ஆம் ஆண்டு இங்கு பிறந்த ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் தென்னிந்தியாவின் தொழிற்துறை முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர். சென்ற வருடம் இந்திய அரசு இவரின் தபால்தலையைக் கூட வெளியிட்டது. விஷயத்துக்கு வருவோம். 'இது தனியார் வீடு சார். சுற்றிப்பார்க்க விடுவதில்லையே' என்று வருத்தப்பட்டார். பின்னர் எப்படி தேடி இங்கே வந்தீர்கள் என்றதற்கு இண்டர்நெட், ப்ளாக் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை என்ற நான் சொன்னபோது தங்களைக் கேட்காமலேயே போர்ட் வைத்து வலையில் போட்டது எப்படி என்று நொந்துபோனார். இன்னும் எத்தனை ஆயிரம்பேர் வந்து விடுமுறை நாள் தூக்கத்தை கலைப்பார்களோ என்ற கவலையாக இருந்திருக்கும். பள்ளத்தூரில் ஒரு செட்டிநாட்டு அரண்மனைகூட சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்துவிடப்படவில்லை என்று ஆணித்தரமாகச் சொன்னவர் 'கானாடுகாத்தான் சென்றால் எம்.ஏ.எம்.இராமசாமி ராஜாவின் அரண்மனையைப் பார்க்கலாம். அதுதான் இப்பகுதியிலேயே மிகப்பெரியது' என்று சொல்லியதால் ஏமாற்றத்துடன் (இவ்வளவு பெரிய தொழிலதிபரின் வீட்டு வாசல் வரை வந்து திரும்பிய சோகம்தான்) கிளம்பி காரைக்குடி சென்றோம்.

காரைக்குடியில் அனைவரும் "சுப்பலட்சுமி பேலஸை" ரெகமண்ட் செய்தார்கள். டிபன் பரவாயில்லை. இன்முகத்துடன் சர்வர். வழி சொல்வதில் மிகவும் உதவியாக இருந்தார். பக்கத்தில் சுப்பலட்சுமி மஹாலில் ஒரு கிறிஸ்தவ நிட்சயதார்த்தம். இவை சர்ச்களில் மட்டுமே நடக்குமென்று எண்ணிவந்த எனக்கு, விருந்துவைத்து நாதஸ்வரம் மேளம் கொட்டி ஒரு பாதிரியார் மந்திரங்கள் ஓத கல்யாண மஹாலில் நடந்தது கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. . அதற்கு பிறகு வழக்கம் போல 'முன்பே வா என் அன்பே வா' என்று ஷ்ரேயா கோஷல் வந்து மந்திரம் ஓதி என்னை கிளுகிளுக்கவைத்துவிட்டு சென்றார்.

மணி பத்தரை ஆகிவிட்டிருந்தபடியால் கானாடுகாத்தானை ஒத்திப்போட்டுவிட்டு மதியம் நடைசாத்துமுன் காளையார்கோயில் சென்றுவிடுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் திருப்பத்தூருக்கு பிரியும் சாலையில் மானகிரி என்ற ஊர் உள்ளது. அதை அடைந்து மெயின்ரோட்டில் இடதுபுறமாய் கள்ளல் செல்லும் சாலையில் திரும்பி கள்ளலை அடைந்தால்.. காளையார்கோயில் என்ற ஊருக்கு வழிசொல்லவேண்டும் என்று திடீர் ஞானோதயம் வந்ததாய் த.அ.நெடுஞ்சாலைத்துறை போர்ட் வைத்து வழிசொல்கிறது. காரைக்குடியிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் இருக்கும்.காளையார்கோயில் என்று சொன்னவுடன் நம்மில் பெரும்பாலோர்க்கு மண்டைக்குள் மணியடித்திருக்கும். ஏனென்றால் மருதுபாண்டிய சகோதரர்களை தூக்கிலிட்ட இடம் என்று வரலாற்றில் படித்து வழக்கம்போல மறந்திருப்போம். கோயிலின் விசேஷத்தை பார்த்துவிட்டு மருதுபாண்டியரிடம் வருவோம். இந்தியாவிலேயே மூன்று சிவன் சந்நிதிகள், அவர்களுக்கு மூன்று அம்பிகைகள் என்று இருக்கும் ஒரே கோயில் இதுதான். சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூவர். இதில் சொர்ணகாளீஸ்வரர் பிரதானம். ஊர் மட்டத்திலிருந்து நான்கு அடி கீழே தங்கக்கவசம் சாத்தப்பட்டு துளியூண்டு இருக்கிறார். இவரை வணங்கினால் பிள்ளைபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். வரகுணபாண்டிய மன்னன் மீனாட்சியை தினமும் தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டானாம். காளையார்கோயிலில் தங்கியிருந்தசமயம் அவன் பத்து மாற்று குதிரைகள் உதவியுடன் மதுரைக்குச் சென்று வணங்கி திரும்பி வருவானாம். ஆனால் ஒருநாள் அவ்வாறு செல்லமுடியாமல் போன காரணத்தால், மதுரை சுந்தரேஸ்வரரே மீனாட்சியைக் கூட்டிக்கொண்டு அவனைத்தேடி வந்ததாக புராணம்.

அஷ்டமாகாளிகள் காளையார்கோயிலை சுற்றி அருள்புரிவதால் காளிகளுக்கு ஈசனாய் அமர்ந்தவர் காளீஸ்வரர் ஆனார். இவருக்கு 1914 ஆம் ஆண்டு ஒரு செட்டியார் பெருமகனார் தங்கத்திலேயே பள்ளியறை செய்து பிள்ளைப்பேறு பெற்றார் என்று வரலாறு.

இப்போது மருதுபாண்டியர்கள். 1733-ஆம் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஒன்றாய் இருந்த இராமநாதபுரம் சமஸ்தானத்தை இரண்டாக பிரித்து ஒன்றை இராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் மற்றொன்றை சிவகங்கை வம்சத்தினருக்கும் கொடுத்தனர். முத்து வடுகநாதத்தேவரின் தளபதிகளாய இருந்த மருதுபாண்டியர், தேவரின் வீரமறைவுக்குப் பிறகு வேலுநாச்சியாரின் ஆக்ஞைப்படி ஆட்சியைப் பெற்றார்கள். ஆன்மிகப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர்கள் காளையார்கோயில் கோயில் பிரதான கோபுரத்திருப்பணி செய்திருந்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தப்பித்தலைமறைவாகிய நிலையில், ஆங்கிலேய அரசு மருதுபாண்டிய சகோதரர்களைப் பிடிக்க இயலாமல் தவித்தது. வழக்கம்போலவே சதித்திட்டம் சூப்பராய்த் தீட்டி அதன்படி மருதுபாண்டிய சகோதரர்கள் சரண்டர் ஆகவில்லையெனில் அவர்கள் திருப்பணி செய்த கோயில் கோபுரத்தை பீரங்கிகளைக் கொண்டு தகர்த்துவிடுவதாய் மிரட்டியது. தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சிவன்கோயில் கோபுரம் அழியக்கூடாது என்று எண்ணிய மருதுபாண்டியர் சரணடைந்தார்கள். அவர்களைத் தூக்கிலிட்டு அவர்களின் கடைசி விருப்பபடியே காளையார்கோயில் சிவ சந்நிதியைப் பார்த்தபடியே அவர்களைப் புதைத்தது ஆங்கில கம்பெனி.

கோயிலுக்காக உயிரையே கொடுத்த சகோதரர்களுக்கு கோயிலுக்குள்ளேயே சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை நம்மைப்போன்ற பொதுமக்களிடமிருந்து பாதுகாக்க இரும்பு க்ரில்லும் போடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான கோயிலை ஆற அமர சுற்றி வர சுமார் ஒன்றரை மணிநேரமாவது பிடிக்கும். அங்கு இருந்த குருக்கள் (பெயர் மறந்துவிட்டது) மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சந்நிதிக்கும் கூட்டிச்சென்று புராணம் சொல்லி, தேவாரம் பாடி - அனுபவம் இனிமையாய் இருந்தது. மருதுபாண்டியருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதாகக்கேள்வி.

கோயிலை விட்டுக்கிளம்பி ரோடு மாறிச் சென்றால் ஒரு ஆச்சரியம். அட்டகாசமான மண்டபத்துடன் தெப்பக்குளம். கொஞ்சம் நிறையவே க்ளிக்கிவிட்டு திரும்ப பேக் டு காரைக்குடி சுப்பலட்சுமி.

(தொடரும்)

 

வார்ப்புரு | தமிழாக்கம்