இந்த வீக்கெண்டிற்கு புகழ்பெற்ற, எனக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றான அமெரிக்க சிட்காமான Scrubs டிவிடிகள் கிடைத்தன. மெகாத்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசமானதாகவும், மருத்துவ சம்பந்தப் பட்டதாகவும் இருப்பதாலும் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது. ஏனோ, friends போன்றவை மனதில் ஒட்டுவதில்லை. இந்தியாவில் ரீரன் ஏதேனும் வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள். நகைச்சுவையும், செண்டியும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட அட்டகாசமான தொடர்.
சரி, விஷயத்துக்கு வருவோம். இதுவரையில் நான் பார்த்த பல மருத்துவமனைகளில் மருத்துவர்களில், குறிப்பாய் சர்ஜன்கள் மிகவும் ஜாலியான பேர்வழிகளாய் இருப்பர். ஏகப்பட்ட macho ஜோக்குகள், பல விரசமானவை ஆப்பரேஷன் டேபிள்களில் கூட பறக்கும். மருத்துவர்களும் இந்த விஷயத்தில் குறைந்தவர்களில்லை. நோயாளிகளின் முன்னேயே பல சமயங்களில் ஜோக்கடிப்பர். அது எப்பேர்ப்பட்ட critical நோயாளிகளாயிருந்தாலும். இன்று இந்தத் தொடரில் நான் விட்டுப்போன ஒரு பகுதியை பார்க்கும்வரை நானும் பலசமயம் முகம் சுளித்ததுண்டு. என்னடா இது, நோயாளிகளிடத்தில் இவ்வளவு insensitive ஆக இருக்கிறார்களேயென்று. ஒரு முறை யூராலஜி வகுப்பு. ரவுண்டுஸுக்கு போயிருந்தோம். ESWT செய்யபடவேண்டியுள்ள கிட்னி ஸ்டோன் உள்ள நோயாளி. அவரின் ஹிஸ்டரியை ஆசிரியரிடம் விளக்கிக்கொண்டிருந்த நான் என்ன காரணத்தாலோ, நோயாளிக்கு பெல்ட் போல வலி இருக்கிறது என்பதை என் இடுப்பை சுற்றி சைகையால் காண்பித்தவாறே சொன்னேன். இடைமறித்த ஆசிரியர் "I hope you wont ever have to work in gynaecology" என்று ஒரு போடு போட்டார். எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. அதே நேரத்தில் இப்படி பொறுப்பில்லாமல், இன்ஸென்ஸிடிவ்வாக கமெண்ட் அடிக்கிறாரே என்று வேறு கோபம். இது ஒரு உதாரணம் தான்.
ஆனால், பல சமயம் இந்த துணுக்குகள் insider jokes ஆகவே இருக்கும். அதாவது, மருத்துவம் சாராதவர்களுக்கும் பெரும்பாலும் புரிய வாய்ப்பில்லை. எங்கள் தெரபி ஆசிரியை எங்களை வாருவதுண்டு "I asked you to auscultate her heart, not palpate her tuberculi". இதில் வெளியாட்களுக்கு என்ன நடக்கிறதென்று புரியாது. மருத்துவமோ லத்தீனோ தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். பல இருக்கிறது இந்த மாதிரி. அதற்கு பதில், இந்த தொடரிலிருந்து தெரிந்து கொண்டேனென்றால் நம்புவீர்களா? எனக்கும் அதிசயமாக இருந்தது.
இத்தனை (என்ன பெரிசா, 7 வருஷம்) அனுபவமிருந்தும் நம்மால் இந்த சின்ன சைக்காலாஜிக்கல் விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லையே என்று. அது என்னவென்றால், நோயாளியை third person ஆக கருதுவது. அதாவது, எந்தப் பிரச்சனையுமே, நோய்கள் உட்பட, நமக்கோ நம் நெருங்கிய உறவினர்/நண்பர்களுக்கோ வந்தால் அதை நாம் எதிர்கொள்ளும் விதமே வேறு. அப்போது, எப்போதுமில்லாத ஒரு personal dimension, வந்து நம்மை படுத்திவிடும். அதனாலேயே, தீவிரமான நோய்களுக்கு அடுத்த மருத்துவரின் உதவியை நாடுவது வழக்கம். இதற்கு என்னுடைய psychiatry cycle தான் நினைவுக்கு வருகிறது. அதில் தினமும் படிக்கும் ஒவ்வொரு மனநோயும் நமக்கோ நம் உறவினருக்கோ இருக்கிறதோ என்று தேவையற்ற பயம் தொற்றிக்கொள்ளும். எங்கள் ஆசிரியர், தினமும் முன்னுரையாக, "Never Diagnose, especially self diagnose, if you aint a competent, qualified doctor yet!" என்று எச்சரித்தாலும், அது தவிர்க்கமுடியாத ஒன்று. ஏனென்றால், நம் சொந்தம், நாம், நம் உறவு போன்ற பந்தங்கள் often cloud our judgements. அவற்றிலிருந்து விலகி objective ஆக அணுகுவதற்கு மிகவும் அனுபவம் வேண்டும்.
வசூல்ராஜா படத்தில் 'நோயாளிகளை objects ஆக பார்க்காதீர்கள், subjects ஆக பாருங்கள்' என்ற holier-than-thou அறிவுரையை கமல் வழங்குவார். அது தவறென்பது என் கருத்தாகும். நோயாளி உங்கள் நண்பரென்றால், அவருக்கு கீமோதெரபிக்கு ரெகமண்ட் செய்வதற்கோ இல்லை scalpel வைக்கவோ ஒரு நிமிடம் மனது பதைபதைக்கும். ஏனென்றால், மருத்துவர்களும் மனிதர்கள்தானே. ரோபாட்கள் அல்லவே. அதனால், குடும்ப டாக்டர் என்பவர் நண்பர் என்ற உறவில் சிக்காமல் இருப்பதே நலம். நோயாளியில் gratitude இனால் அவரின் குடும்ப நிகழ்ச்சிகளிலோ, பிரச்சனைகளிலோ தலையிடும் உரிமையை தங்கள் மருத்துவர்களுக்கு தருகின்றனர். அவ்வகையில், கலந்து கொள்ளலாம். ஆனால், அதற்கு ஒரு limit இருக்கிறது. என்று ஒரு நோயாளியை உங்கள் நண்பராகவோ, சொந்தமாகவோ கருத ஆரம்பிக்கிறோமோ அன்றே objectivity போய்விடுகிறது. இதற்கு exceptions உண்டு. ஆனால், முன்கூறியவாறு அதற்கு மிகவும் அனுபவம் வேண்டும். என்னைப் போன்ற சின்னப்பசங்களுக்கு இது மிகவும் கஷ்டமான விஷயம். பந்தம் என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம். தேன் துளி, தாணு போன்ற அனுபவம் வாய்ந்தோர் இதை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை அறிய ஆவல்.
---------------
Scrubs
ஈ நாட்டி நோமு பலமு!
ஈ நாட்டி நோமு பலமு! ஏ தான பலமு-ன்னு பாடத்தோணுது. பின்ன, எனக்கும் ஒருவார நட்சத்திரமா இருக்க வாய்ப்பு கிடச்சுதே. அதுக்கு முதல்ல
மதி மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.
அப்புறம், வஞ்சனையில்லாம வாழ்த்தி, பின்னூட்டி ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு (பம்பர் பரிசு வச்சது ஒரு காரணம்னாலும். சரி, அடிக்க வராதீங்க) ரொம்ப ஸ்பெஷல் நன்றி.
பரிசு என்னன்னும் யார் வெற்றி பெற்றாங்கன்னும் நாளக்கி சொல்றேன். இன்னிக்கு வேலை. மன்னிச்சுடுங்க. ஞாயித்துகிழமதானே. மத்தியானமா பதிவு
போடலாமுன்னு நினச்சேன். ஆனா, எதிர்பாரா விதமா முடியாம போச்சு. அதனால ரொம்ப நாள் முன்னாடி எழுதினத பதிச்சிட்டேன்.
நாளைக்கு நட்சத்திரமா போறவர்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இந்த வாரம் தேறிச்சா இல்லியான்னு நீங்க தான் சொல்லணும்.
எல்லோருக்கும் மீண்டும் நன்றி!!
சில புகைப்படங்கள்
இன்னிக்கு நம்மூர் படங்கள் சில.. (குமரன் மன்னிக்கவும்)
1. சூரிய அஸ்தமனம் - கூடவே சில முனிவர்கள்
2. வெண்ணார் வெட்டார் பிரியும் இடம்.
3. தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரம் - காவேரியில்ல. பெயர் தெரியாத குளம்
4. தஞ்சாவூர் அரண்மனை - டும் டும் டும் படத்துல வருமே?
5. பொங்கி வரும் காவேரி
6. கோயில் படமில்லாமயா? பிள்ளையார் மற்றும் பிரகதீஸ்வரர் கோயில்கள்
*ஏற்கனவே போட்ட பெரிய கோயில் படங்கள். 1, 2
* சூரிய அஸ்தமனம்
விடுதலை
இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கு. அதுக்கப்புறம் இந்த சிறையிலிருந்து விடுதலை. இருக்கறது வேலூர் சிறைன்னு நினச்சுட்டீங்களா? இல்லீங்க, என் அம்மாவோட வயித்துக்குள்ளேர்ந்து தான் பேசறேன். அட, பிறக்காத குழந்தையும் பேசுமான்னு கேக்காதீங்க. மகாபாரதம் படிச்சதில்லியா? அதுல கிருஷ்ணன் சொல்றத அபிமன்யு அம்மா வயித்துலேர்ந்து கேட்டதா வருது இல்ல. அது மாதிரி தான்.
போன ஜன்மத்துல பட்டாம்பூச்சியா பறந்துகிட்டிருந்தேன். அடடா, என்ன ஒரு வாழ்க்கை. பூவுக்கு பூவுக்கு தாவி பறந்துகிட்டே இருக்கறது மட்டும்தான் வேலை. தேன் குடிக்க கசக்குமா என்ன? கஷ்டமே இல்ல. என்ன, குருவி மாதிரி என்னைய விட பெரிய மிருகங்கள பாத்தா கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். ஏன்னா, எங்கள் மாதிரி பூச்சிங்க தானே முக்கிய உணவு அவங்களுக்கு? அவங்களாவது பரவாயில்ல, ஒரு தடவ சும்மா நான் என் தங்கச்சிங்க கூட பறந்து பிடிச்சு விளையாடிகிட்டு இருந்தப்போ, சில மனுச பசங்க வந்து என்னோட இரண்டு தங்கைகள பிடிச்சுகிட்டு போயிட்டாங்க. ஆனா, நான் அவ்வளவு பெரிய உருவங்கள எதிர்த்து எதுனாவது செய்ய முடியுமா? முடியாதில்ல. அதனால, மறைஞ்சு இருந்து பாத்தேன். ஒவ்வொரு இறக்கையா பிச்சு பிச்சு விளையாடிக்கிட்டிருந்தாங்க. பாவம், வலியும் பயமும் தாங்காம என் சின்னத் தங்கைகள் எல்லாம் துடிச்சாங்க. அவங்க துடிக்க துடிக்க இன்னும் துன்புறுத்தல் ஜாஸ்தியாத்தான் ஆச்சு. எனக்கு கோவம் கோவமா வந்திச்சு. ஆனா, என்ன செய்யறது. என்னால அதுக்கு மேல அந்த இடத்தில இருக்க முடியல. உடனே பறந்து எங்க கூட்டுக்குப் போய் அம்மாகிட்ட சொல்லி அழுதேன். அம்மா வருத்தத்துல துவண்டு போயிட்டாங்க. இருந்தாலும் என்னைய கட்டிபிடிச்சு, 'இந்த சின்ன வயசுல பாக்கக்கூடாத கொடுமையை பாத்துட்டப்பா..நீ அண்ணனா உன் தங்கைகளுக்கு உதவி செய்ய முடியாமப் போச்சே. ஆனா, நீ வருத்தப்படாதேடா கண்ணா..கடவுள் அவங்கள சும்மா வுடமாட்டார். வாழ்க்கைனா இப்படித்தான்.. எல்லாமே விதிப்படிதாம்பா நடக்கும். அம்மா, நான் இருக்கேன் உனக்கு. கவலப்படாதே' அப்படீன்னு தேத்தினாங்க. என்னைய தேத்தினாலும், இராத்திரியெல்லாம் தூங்காம அவங்க அழுதுகிட்டிருந்தாங்க. ஆனா அது எனக்கு தெரியும்னு அவங்களுக்கு தெரியாது பாவம். மறுநாள்லேர்ந்து கொஞ்ச நாளைக்கு, நான் எங்கேயும் மாட்டிடக்கூடாதேன்னு அவங்களே போய் தேன் தேடி எடுத்துகிட்டு வந்து கொடுத்தாங்க. அவங்க வரவரைக்கும் எனக்கு திக் திக்னு இருக்கும்.
சின்ன வயசு பாருங்க. கொஞ்ச நாள்ல அதப் பத்தி சுத்தமா மறந்துட்டேன். மறுபடியும் ஜாலியா பறக்க ஆரமிச்சேன். வளர்ந்து பெரியவனும் ஆனேன். வாலிப வயசா, நீங்க பண்ணாததா..நமக்கும் பக்கத்து கூட்டு பொண்ணு மேல ஒரு டாவு. நான் நல்ல சிவப்பு கலர்ல வேற இருப்பேனா, அதுக்கும் நம்ம மேல ஒரு கண்ணு. நீங்கள்லாம் பார்க், பீச் போற மாதிரி இப்படியா நாங்க ஒரு நாள் ரோஜாப்பு, ஒரு நாள் அல்லிப்பூன்னு போய்கிட்டிருந்தோம். அம்மாவும் ஒத்துகிட்டாங்க. கல்யாணம், காட்சி யெல்லாம் ஆச்சு. அதுவரைக்கும் யாருக்குமே நான் மனசார கூட தீங்கு நினச்சதில்ல. நான் மாட்டுக்கு என் வேலை உண்டு, குடும்பம் உண்டுன்னு இருந்தேன். இருந்தது பிடிக்கல போல இருக்கு அந்தக் கடவுளுக்கு. ஒரு நாள், நல்ல பெரிய அல்லிப்பூ மேல உக்காந்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சுவையான தேன். சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பாக்காதது என் தப்புதான். அதுக்காக இப்படியா? எங்கிருந்தோ பாஞ்சு வந்து என்ன பிடுச்சுடுச்சு ஒரு நாக்கு. அப்படியே சடார்னு என்ன இழுத்து ஒரு தவளையோட வாயில போட்டுடுச்சு.
அப்புறம் பாத்தீங்கன்னா, உங்க சினிமால்லேல்லாம் வருமே அது மாதிரி ஒரே புக மண்டலம். பாத்தா நான் மேலே மேலே பறந்துக்கிட்டிருக்கேன். மேலே ஒரு பெரிய மண்டபம். அங்க வரிசையில எல்லா வகை ஜீவராசிகளும் தங்களோட டர்னுக்காக வெயிட் பண்றாங்க. என் டர்ன் வந்தோன்ன, எமராஜா பாத்தாரு. 'பட்டாம் பூச்சி, நீ இதுவரைக்கும் என்ன நல்லது செஞ்சிருக்க'ன்னு கேட்டாரு. 'இவ்ளோ குட்டி பூச்சி நானு, என்ன செய்ய முடியும்?'. 'சரி, எதுனாவது கெட்டது பண்ணிருக்கியா'.'இல்லீங்க'.'டேய்.. பொய் சொன்னா என்னோட கணக்கு புஸ்தகத்த பாத்தா தெரிஞ்சி போயிடும்'னு மிரட்டுனாரு.'சாமி, என்னோட அம்மா சத்தியமா, கெட்டது நினச்சுது கூட கிடையாதுங்க'னு நான் கெஞ்சினேன். பக்கத்துல குள்ளமா ஒரு ஆளு ஆனக்குட்டி சைஸுல ஒரு பொஸ்தகத்த பாத்துட்டு 'இந்தப்பய சொல்றது சரிதான், இதுவரைக்கும் இவன் தப்பே பண்ணலே தர்மராஜா' னு சொல்லி என்னயப் பாத்து சிரிச்சாரு. எமராஜா பாத்துட்டு 'அப்படியா, சரிடா.. நீ இனிமே உயிரினமா பொறக்க வேணாம். மனுசனா பொறக்க நான் உனக்கு வரம் தரேன்'னு சொன்னாரு. எனக்கு சந்தோஷம் தாங்கல. ஆனா, அதே சமயத்தில எனக்கு என் தங்கச்சிங்க ஞாபகம் வந்துச்சு. அந்த சண்டாளப் பாவிங்க இருக்கற ஊராவே பொறக்கணும். அவங்கள, அவங்க என் தங்கைகள கொடுமப்படுத்தினமாதிரியே நானும் படுத்தணும்னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன். அவங்க கையக் காலப் பிச்சுப்போடணும்னு நினச்சுகிட்டேன்.
பாருங்க.. பேசிகிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. வெளிய வர டைம் ஆச்சு போலிருக்கு. தண்ணியெல்லாம் குறையுது. ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருக்கீங்களா? வெளில வந்துட்டு உங்க கூட பேசறேன். சரியா?
இருக்கீங்களா, நான் பேசுறது கேக்குதா? எனக்கும் விடுதலை வந்தாச்சு. ஆஹா, எவ்வளவு சுதந்திரமா இருக்கு. இந்த ஒன்பது மாசமும் உள்ள கூனிக்குறுகி இருந்தது பத்தாதுன்னு வெளிய வரும்போதும் ரொம்ப கஷ்டமாப் போச்சுங்க. யாரோ ஒரு வயசான அம்மா தான் வெளில எடுத்தாங்க. நல்ல வேள உதவி செஞ்சாங்களே. நம்ம பாட்டியா இருக்குமோ? தனியா இருந்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும். இருங்க ஒரு நிமிஷம் என்னோட புது அம்மாவ பாத்துட்டு வரேன். பாவம் இத்தன மாசம் எத்தன கஷ்டப்பட்டுருப்பாங்க. அட, இவ்வளவு அழகா இருக்காங்களே. ஆனா, பாவம் அழறாங்க. ரொம்ப வலிக்குது போலிருக்கு. எங்க? அப்பாவக் காணோமே? அநேகமா ஓடி வந்துகிட்டிருப்பாரு. அட பாருங்க, என் மேல எவ்வளவு ஆசை அம்மாக்குன்னு. எனக்காவே ஸ்பெஷலா கைல கொட்டாங்கச்சியில என்னவோ வெள்ளையா செஞ்சு வச்சிருக்காங்களே. குடிச்சு பாத்தேன். நல்லாத்தான் இருந்துது. பாலான்னு தெரியல. என்னவா இருந்தா என்ன, நம்மள பெத்தவங்க நமக்கு நல்லதத்தானே செய்வாங்க. சரிங்க, எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு. இன்னொரு நாள் உங்களோட பேசறேன்.
பீட்டர்ஸ்பர்க் - சில புகைப்படங்கள்
1. பனியில் உறைந்திருக்கும் பூங்கா
2. Church of Spilt Blood - இதப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுருக்கேன் இங்க
3. Anichkov Bridge பார்த்தோமில்லியா. அது பக்கத்தில இருக்கற ஒரு கட்டிடத்தின் facade. டியோடரண்ட் நல்லா வேலை செய்யுதா இல்லியான்னு பாக்கறாங்க
4. Peter & Paul Fortress இல் இருக்கற சர்ச். இந்த அரண்மனை தான் முதல் முதலில் பீட்டர்ஸ்பர்க்கின் ஆதாரம். பீட்டர்ஸ்பர்க் பத்தின பழைய பதிவு இங்கே.
5. Vladimirskyi Cathedral - வீட்டுப் பக்கத்தில இருக்கற கதீட்ரல்.
நம்மூர் போட்டோ இல்லாமலியா.. நாள நாளன்னிக்கு போடறேன்.
Click on Images to view Full size
MRP - தேவையா இல்லையா?
சமீபத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது MRP பற்றியும் பேச்சு வந்தது. அவர்கள் ஊரில் கிடையாது, அதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை என்றார். முதல்ல, இந்தியாவில் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த அனைவருக்கும் இந்த MRPன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு MRP=Maximum Retail Price. உதாரணத்திற்கு.. லைப்பாய் சோப் பின் MRP 20 ரூபாய்னா, இந்தியாவெங்கிலும் எக்காரணத்தைக் கொண்டும், அது சிலுக்குவார்ப்பட்டி (உபயம்: முகமூடி) பொட்டிகடையோ மும்பை சூப்பர் மாலோ, இந்த 20 ரூபாய்க்கு மேல் அதிக விலையில் விற்கக் கூடாது.
ஒரு அரசாங்கத்திற்கு இந்த வகைப் பொருள் இந்த விலையில் தான் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும் என்று விதிக்க என்ன உரிமை இருக்கிறது? இம்மாதிரி கட்டுப்பாடுகள் இருப்பின் அது முழு சுதந்திரம் இல்லையே? அந்த வகையில் முழு சுதந்திரமுடையதாய் இருக்கவேண்டிய சந்தைப் பொருளாதாரத்திற்கு குறுக்கே நிற்கிறதல்லவா? மக்களுக்கு எங்கே மலிவாய் கிடைப்பதாய் தோன்றுகிறதோ, அங்கே வாங்கிக் கொண்டு விட்டு போகிறார்கள். இது மக்களின் குற்றமேயன்றி, எவ்வகையில் அரசின் பொறுப்பாகும்? என்று பல கேள்விகள் எழுப்பினார். அந்தக் கேள்விகள் பற்றி எனக்கு தெரிந்த பதில்களை அளித்தேன். அதை ஒரு பதிவாவும் போட்டுடலாமேன்னு போட்டுட்டேன்.
ஆனால் எனக்கென்னவோ இந்த MRP என்பது அவசியமானதொன்றாகவே படுகிறது. குறிப்பாக அது Fixed Retail Price என்றில்லாமல் Maximum (Suggested) Retail Price ஆக இருப்பதால். அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்ட் கிடையாது. அதனால் நடக்கும் குளறுபடிகள் பல. உதாரணத்திற்கு நான் சிட்டி செண்டரில் இருக்கிறேன். இங்கு ஒரு லிட்டர் எண்ணெய் ஒரு டாலருக்கு கம்மியாக கிடைக்காது. எங்கே சுற்றினாலும் இந்த ஏரியாவில்: ஆனால் அதுவே புறநகர்ப்பகுதிகளில் 70,80 செண்ட்களுக்கு கிடைக்கும். இதே நிலைதான் காய்கறிகளிலிருந்து ஹை டெக் பொருட்கள் வரை. நகரின் மையப்பகுதியில் இருப்பதனால் நான் அதே பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பது அநியாயம் தானே?
இது தயாரிப்பிற்கான செலவுகள் மற்றும் ஓவர்ஹெட் போக, குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் கிடைக்கும் விலையில் வரிக்குட்பட்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் செலவுகளும் இதில் உள்ளடங்கும். ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் இந்த MRP க்கு குறைவான விலையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அதனபடி நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வால்யூம் பேஸ்ட் சேல்ஸ் ஐட்டங்களே பெரும்பாலானவை என்பதால் இதில் கடைக்காரருக்கோ, விநியோகஸ்தருக்கோ, தயாரிப்பாளருக்கோ நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையே. மாறாக ஆரோக்கியமான விலைப்போட்டி உருவாவதால், விலைகள் குறைந்து நுகர்வோருக்கு சாதகமாகவே இருப்பதாய் தெரிகிறது. முழு சந்தைப் பொருளாதாரமான அமெரிக்காவிலும் MSRP இருக்கிறது என்று அறிவேன். ஆனால், இந்தியாவைப் போல் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறதா என்று தெரிந்தோர் கூறினால் நன்றாக இருக்கும்.
அடுத்த விஷயம், அரசாங்கத்திற்கு உரிமையிருக்கிறதா இல்லையா என்பது பற்றியது. சோஷலிஸ் ஹேங்க் ஓவர் என்று சொன்னாலும் கூட, என்னைப் பொருத்தவரை கண்டிப்பாக இருக்கிறது. வரி விதிக்கும் அரசுக்கு விதிக்கப்படும் மக்கள் ஏமாறுவதை தடுப்பதிலும் பங்கிருக்கிறதல்லவா? ஏற்கனவே 20 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். லாபம் என்பது அவசியம் தான். ஆனால், அது பேராசையாகாமல் தடுப்பது அரசின் கடமையல்லவா?
எத்தனை நாட்களுக்கு பத்து ரூபாய் பெறாத பொருளை நாற்பது ரூபாய்க்கு விற்க முடியும்? நுகர்வோர் புறக்கணிக்கலாமே என்று ஒரு வாதமும் உண்டு. அதாவது மக்களே தங்கள் சுய சிந்தனையுடன் நாற்பது ரூபாய் கொடுத்து வாங்குவதால், அரசின் தலையீடு தேவையற்றது என்பது. இதற்கு நான் முன்னே கூறிய சிட்டி செண்டர் உதாரணமே பதில். மேலும், சமீபத்தில் சாம்ஸங், ஹைனிக்ஸ் போன்ற மெமரி நிறுவனங்கள் artificialஆக விலைகளை ஏற்றியதற்கு அபராதம் செலுத்தியதை நினைவில் கொள்ளவும். நான் ஒவ்வொருமுறையும் whole sale ஆகவோ, வேலைமெனக்கெட்டு பல நேரம் பயணம் செய்தோ குறைந்த விலைக்கு வாங்க முடியுமா? இன்னும்விட்டால், சிலுக்குவார்பட்டியில் (மீண்டும் நன்றி: முகமூடி) விலை இன்னும் குறைவாக இருக்குமென்பதற்காக, ஒவ்வொரு முறை எண்ணெய் வாங்கவும் நான் அங்கே போக முடியுமா? இதுவும் நியாயமில்லாத வாதமாக படவில்லை. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ரம்யா அக்கா போட்ட ஒரு துண்டு துணி பதிவு. MRP அமலில் இருந்தும் இந்த அடிப்படையான பொருள் பெரும்பாலனவர்களுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது.
கடைசியில் என்னதாம்பா சொல்றேன்னு பொறுமை இழந்தவர்களை மேலும் சோதிக்காமல்: MRP மிகவும் அவசியம் என்று கூறி முடிக்கிறேன். நீங்க இருக்கற ஊர்லேல்லாம் என்ன நடைமுறைன்னு எழுதினா உபயோகமா இருக்கும்.
பின் குறிப்பு: பொருளாதாரம் எனது துறைக்கு சிறிதும் சம்பந்தமற்றது. இன்னிக்கு சீரியஸும் வேணாம், ஜாலியும் வேணாம்னு (நவரச நேசன்?? மதுமிதா எங்கே இருக்கீங்க??) ஒரு சேஞ்சுக்காக ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா மாதிரி பெரியோர் ஸ்டைல்ல ஒரு பதிவு போடலாம்னு நினச்சு செய்யறேன். பொருளாதாரம் பற்றி அறிந்தவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்துகள் இருந்தால், கண்டிப்பா அதை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். பதிவு சுத்தமா பிடிக்காதவங்களும் எதையாவது சம்பந்தமா எழுதி வையுங்க (மணியன் மன்னிக்கவும்!), ஏன்னா பம்பர் பரிசு என்னன்னு வாரக்கடைசியில் அறிவிப்பு வரும். அப்புறம், சான்ஸ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பிரயோசனமில்ல. சொல்லிட்டேன்.
தீயினால் சுட்ட புண்...
எனக்கும் வார்த்தைகளை அளந்து, நிதானமாய் பேச வேண்டும் என்று ரொம்ப நாளாய் ஆசை. மிகவும் பிரயத்தனப்பட்டு இப்போது ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். சரிக்கு சமானமவரிடத்தில் பேசுவது வேறு வகை. ஆனால், சமூகத்தில் நம்மை விட தாழ்ந்த (பொருளாதார), என்று நாம் கருதும் நிலையில் இருப்பவர்களிடம் பேசும் போது ஓவர் கரிசனம் காட்டினால் - patronizing என்றும் ஓவர் ஏளனம் செய்தால் - கர்வமென்றும் - ரெண்டுமே வெறுக்கப்படும். கத்திமேல் நடப்பது போன்றது இது. எவ்வித நிலைப்பாடும் இன்றி, சாதாரணமாக பேசும்போது ஓரளவிற்கு சிந்தித்துப்பேசினாலும், கோபம் தலைக்கேறிவிட்டால் என்ன சொல்கிறோம், அதை அடுத்தவர் எப்படி புரிந்துகொள்வார்கள் என்பது என்னை உட்பட பலருக்கும் மறந்தே போய்விடுகிறது என்பதை கவனித்திருக்கிறேன். ஏன், இங்கே வலைப்பூக்களிலும் இதுதானே நடக்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகளே பல இடங்களில் நிறைந்திருக்கின்றன. நான் என் வாழ்க்கையில் என்னையே மன்னிக்க முடியாதபடி சில முறைகள் அவ்வாறு கோபத்தில் பேசியது உண்டு. அவற்றைக் குறித்து பின்னர் சிந்திக்கும்போது, ஏன் இப்படி நம் வாயிலிருந்து இப்படிப்பட்ட குரூர வார்த்தைகள் வந்தது எண்ணிப்பார்ப்பதுண்டு.
ஒருமுறை எங்கள் ஹாஸ்பிடல் வாசலில் விண்டர் ஜாக்கெட் வைக்குமிடம். நான் என் ஜாக்கெட்டை கழற்றி காத்திருந்த வயதான பெண்மணியிடம் கொடுக்கலாம் என்று திரும்பியபோது பலநாள் சந்திக்காத நண்பன் வந்தான். கோட்டை என் கையிலேயே வைத்துக்கொண்டு அவனிடம் பேசலானேன். பொறுத்துப்பார்த்த பெண்மணி "அஞ்சு நிமிஷமா வெயிட் பண்றேன். கோட்ட கொடுத்துட்டு பேசக்கூடாதா?" கற மாதிரி சாதாரணமாகத்தான் கேட்டாள். என்ன நடந்ததோ தெரியவில்லை, ஏன் அப்படி கோபம் வந்ததென்றும் புரியவில்லை. "கோட்டை நாங்க எப்ப கொடுக்கறோமோ அப்ப வாங்கிக்கத்தான் வேலைக்கு உங்கள வச்சுருக்காங்க. அதனால, எப்ப கொடுக்கணும்னு நீங்க சொல்ல வேணாம். நிக்க ரொம்ப கஷ்டமாயிருந்தா வேற வேல தேடிக்கலாமே" னு சத்தமா சொல்லிட்டேன். அறையில் எல்லோரும் ஒரு நிமிஷம் சைலன்ட் ஆயிட்டாங்க. அந்தப் பெண்மணி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டவுடன் உறைத்தது. 'அடப்பாவி, இப்படி அவமானப்படுத்தனுமா.. கோட்டைக் கொடுத்துட்டு பேசினா என்ன குடியா முழுகிப்போகிறது' என்று என் மனம் பதைபதைத்தாலும், எல்லாரின் பார்வையும் என் மீது இருந்ததால் சட்டென மன்னிப்பு கேட்க ஈகோ இடம் கொடுக்கவில்லை. திகைத்துப் போய் நின்ற நண்பனுடன், ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் தொடரலானேன். ஆனால், கூட்டம் சற்றும் கரையும் வ்ரையில் தொடர்ந்த வெட்டிப்பேச்சில் ஒரு வார்த்தைகூட மனதில் நிக்கவில்லை. மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. இப்படி பேசிவிட்டோமே. நாம் அந்தப் பெண்மணியின் இடத்தில் இருந்து இப்படி கேட்க வேண்டியிருந்தால் எப்படி வலித்திருக்கும் என்று புல்லட் ட்ரெயின் கணக்காய் கில்ட் பீலிங் ஓடிக்கொண்டிருந்தது. நண்பன் விடை பெற்றுக் கொண்டபின், மெதுவாய் அந்தப் பெண்மணியிடம் சென்று கோட்டை கொடுத்தேன். பதிலேதும் சொல்லாமல் டோக்கன் கொடுத்தாள். 'நான் அப்படிப்பேசியிருக்கக்கூடாது. மன்னித்து விடுங்கள்' என்றேன். பெருந்தன்மையாய் 'இருக்கட்டும் தம்பி, உங்களுக்கு என்ன டென்ஷனோ.. அது என்மேல கோவமா திரும்பிடுச்சு. பரவாயில்ல. Have a good Day'னு சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க. அப்பெண்மணி அவ்வாறு பெருந்தன்மையோடு மன்னித்தது என் குற்ற உணர்வை அதிகரிக்க செய்ததே தவிர குறைக்கவில்லை.
(அதிகாரமில்லா) ஏழைகள் என்றால் இளக்காரம் என்பது இல்லை. அந்தப் புரிதலெல்லாம் உண்டு என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால், sub conscious ஆக அது இன்னமும் இருக்கிறதோ என்று சிந்திக்க வைத்த நிகழ்ச்சி இது. 'க்ளாசுக்கு கரெக்ட் டைமிற்கு வரவேண்டும்' என்று சொல்லும் பிரின்ஸிபாலிடம், 'நான் பணம் கட்டறேன். எப்போ வேணா வருவேன். உனக்கு என்ன பிரச்சனை'னு சொல்ல முடியுமா? நம் கையில் அப்போது அதிகாரமில்லை. அவரைக்காட்டிலும் கீழ்நிலையில் இருக்கிறோம். நம் ஆசிரியர்களிடமும், பாஸ்களிடமும் நாம் சொல்வதை அவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணும் சமயத்திலேயே, உங்கள் வீட்டில் வேலைசெய்வோர், 'இப்படிப் பண்ணக்கூடாது தம்பி'னு சொன்னா அந்த நிமிடத்திற்கு சரியென்று ஒத்துக்கொண்டாலும், உள்மனதில் 'சே, இவனுக்கு என்ன யோக்கியதை நமக்கு சொல்றதுக்கு'னு ஒரு வினாடியாவது தோணும். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று வெறும் லெவலைப் பார்த்து வரும் கோபமேயன்றி, அவர் சொல்லும் கருத்தில் நமக்கு பயனுள்ளதா என்று பார்ப்பதில்லை. நமக்கு கீழே இருப்போர் நமக்கு அறிவுரை சொல்லத் தகுதியற்றவர்கள் என்று சொல்வதைப் போல் முட்டாள்தனம் என்பதை பலரும் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், இந்தத் தெரிவுடனேயே எந்நேரமும் சிந்திக்க முடிகிறதா, என்றால் இல்லை. நமக்கு மேலே இருப்பவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எண்ணும் நமக்கு நாம் கீழேயிருப்போரை எப்படி நடத்துகிறோம் என்று உறைப்பதில்லை. கீழே இருப்போர் என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது பொருளாதார அளவில்தான். அவர்களை மதிப்பதில் என்னென்னவோ ஈகோ பிரச்சனைகள். இல்லையென்று மேம்போக்காக மறுத்தாலும்.. இந்தப் பேய் நம்மில் பலரை இன்னும் விட்டு அகலவில்லை என்றுதான் தோன்றுகிறது. என்னளவில் மாற முயற்சி செய்துகொண்டுதானிருக்கிறேன்.
தேவதையைக் கண்டேன்!
என்னோட காப்பி அனுபவம் ரொம்ப கம்மி. அட, நெஸ்காபே, ப்ரூ காப்பி இல்ல. பரிட்சையில் காப்பியடிக்கறது. இந்த மாதிரி படிக்காம சகட்டுமேனிக்கு காப்பியடிச்சா நம்மள நாமே ஏமாத்திக்கறதுங்கறது சின்ன வயசிலேர்ந்து கொள்கைன்னு பீலா விடலாம். ஆனா, உண்மையச்சொன்னா அதுக்கு காரணம், பயமும் மாட்டிக்கொண்டால் பேர் நாறிடுமேங்கற வெட்கமும் தான். இங்க எப்படின்னா, ஒரு எக்ஸாம் தேதி கொடுக்கும் போதே peresdacha - அதாவது பெயிலானா இல்லாட்டி கொடுக்காட்டா திரும்பி எப்பக் கொடுக்கறதுன்னு தேதியும் சேர்த்துக் கொடுத்திடுவாங்க. அந்த குறிப்பிட்ட எக்ஸாமுக்கு அப்பியர் ஆக முடியாதவங்க அந்த இரண்டாம் தேதியில் கொடுத்துக்கலாம். வெறுமனே காப்பியடிச்சு பாஸ் பண்ணனும்கற எண்ணம் குறையும். படிக்கறவங்களுக்கு ஏத்த சிஸ்டம் இது. நம்மூர் போல ஒண்ணு இரண்டு எக்ஸாம்ல பெயிலா, ஒரு வருஷம் போச்சுன்னு கிடையாது. மெடிசின் ஒண்ணும் சாதாரணப்பட்டதில்ல இல்லியா? பெயில் ஆகறவங்க நிறைய பேர். இந்த மாதிரி pre-med இல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் முதல் முறையா வாழ்க்கையில் ஒரு பரிட்சையில் பெயிலானேன். 'அதனாலென்ன, அடுத்த முறையாவது பாஸ் 'பண்ணிடு'ன்னு ஈஸியா சொல்லி அனுப்பிச்சுட்டாங்க எங்க டீச்சர். சரி, அத விடுவோம். என்னோட மேஜர் காப்பி அனுபவம் பத்தி சொல்லவே இந்தப் பதிவு. இங்க இன்னொரு விஷயம். 5 - னா புல்லரிக்குது. 4 - குட் . 3- இந்த தடவ பொழச்சு போ. 2,1 - பூட்ட கேஸ். இதுதான் மார்க்கிங் சிஸ்டம்.
----
Microbiology. பல நாள் கிளாஸ் கட் அடிச்சிருந்தேன். அந்த நேரத்திலேல்லாம் என்ன பண்ணேன்னு இப்ப நினச்சாலும் வியப்பா இருக்குது. எல்லாம் வயசு. ஒருத்தர் டெட்லைன், டைம்டேபிள் எல்லாம் கொடுத்து இத செய்னு ஸ்ட்ரிக்டா சொன்னா, அதுக்காகவே அந்த காரியத்தை செய்யக்கூடாதுன்னு ஒரு வித rebel: anti-authority மனப்பான்மை கூட காரணமா இருக்கலாம். இப்ப மட்டும் என்ன வாழுது..:(
எனக்கு இந்த மைக்ரொஸ்கோப்னாலே அலர்ஜி. அதுல பாத்த ஒரு விஷயம் கூட நினைவில் இல்லை. என்ன பாக்கிறோம், எப்படிப் பாக்கணும்னு எல்லாம் நிறைய விளக்கங்கள் கொடுத்தாலும் என் மண்டையில ஒண்ணுமே ஏறுனது கிடையாது. இப்பவும் ஸ்லைட் பாத்தா, வெறும் வெத்து காகிதம் பாக்குறத போலத்தான். ஒரு மண்ணும் புரியாது. ஆனா, என் டீச்சர் ரொம்ப நல்லவங்க. க்ளாஸுக்கு வரலேன்னா என்ன, விஷயம் தெரிஞ்சா போதும்னு என்ன இலகுவாக விட்டுட்டாங்க. பின்ன, போட்டோல இருக்கற பால் வழியும் மூஞ்சியப் பாத்துட்டும் உங்களுக்கு திட்டத் தோணுமா? ஒரு செமஸ்டர்க்குரிய டெஸ்ட் எல்லாம் ஒரே வாரத்தில கொடுத்திட்டேன். MCQ தான். இருக்கற variant பதில் எல்லாம் blind -ஆ மனப்பாடம் பண்ணி, ஆன்ஸர் கொடுத்ததுல, சரி பையனுக்கு விஷயம் தெரியும்னு தப்பா impress ஆயிட்டாங்க. பாவம்.
எக்ஸாமும் வந்தது. நமக்கோ ஸ்லைட் ஓண்ணும் தெரியாது. அதனால் முன்னாடியே பிரண்டுகிட்டே உதவி பண்ணுன்னு சொல்லிட்டேன். ஆனா விதி பாருங்க. அவனோட இடம், என் பக்கத்தில இல்லாம அடுத்த டேபிளில் இருந்தது. வினாத்தாள் எடுத்து வந்து எல்லாத்துக்கும் விடை கொடுத்தாச்சு. interferons, மலேரியான்னு ஈஸி கேள்விகள். இது தியரி. அப்புறம் ஸ்லைட் கொடுத்தாங்க. ஸ்லைடுக்கு பதில் கொடுக்கலேன்னா பெயில் தான். அது என்னன்னு வழக்கம் போல தெரியல. என்னவா இருக்கும்னு கூட ஊகம் செய்ய முடியாதது போல இருந்தது. நொந்தபடியே, பக்கத்து டேபிள் நண்பனின் டேபிள் ஓரத்தில் அந்த ஸ்லைடை வைத்து இது என்னன்னு பாத்து சொல்லுன்னு வச்சேன். அவனும் பாத்துட்டு என்னன்னு சொல்லிட்டு திரும்பவும் நான் எடுக்கறதுக்கு வாகா அவன் டேபிள் முனையில் வச்சான். எடுக்கலாம்னு பாக்குறதுகுள்ள ஸூபர்வைஸர் வந்துட்டார். 'என்னப்பா, ஸ்லைட இங்கே வச்சிருக்கே?' அதுக்குள்ள அவன் மைக்ரோஸ்கோப்பிலும் ஸ்லைட் இருப்பதையும் பாத்துட்டார். 'ஓ, எக்ஸ்ட்ராவா கொடுத்துட்டாங்களா? I will take this' னு சொல்லிட்டு எடுத்துட்டு போய்ட்டார்.
எனக்கு பயங்கர டென்ஷனாயிடுச்சு. ஹாலில் என் கிட்ட மட்டும் தான் இப்ப ஸ்லைட் இல்ல. ஒருவழியா தைரியம் வரவழச்சுகிட்டு போய் சூபர்வைசரிடம் 'எனக்கு ஸ்லைட் தரலேயே'ன்னு சொன்னேன். 'அதெல்லாம் இல்ல. நான் அறையில் உள்ள எல்லாருக்கும் எண்ணிப்பாத்து கரெக்டா கொடுத்திருக்கேன். எங்கேயாவது கீழப் போட்டுருப்பேயொழிய நான் கொடுக்காம இருந்திருக்க முடியாது. போய்த் தேடிப்பாரு'ன்னு சொல்லிட்டாங்க. :(. என்ன செய்யறது. 'சரி தேடுறேன்'னு சொல்லிட்டு வந்து உக்காந்தேன். என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டிருந்தப்போ ஒரு தேவதை வந்தாள்!
தேவதை வந்தார்கள்னு தான் சொல்லணும். என்னோட க்ளாஸ் டீச்சர். 'என்ன ஸ்லைட்?'னு கேட்டாங்க. ஸ்லைட் கொடுக்கலேன்னு சொன்னேன். அநேகமா அவங்களுக்கும் என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்கணும். 'அதெப்படி?. சரி, என்னவோ..இரு, நான் எடுத்துகிட்டு வரேன்' சொல்லிட்டு போய் ஸ்லைட் கொண்டு வந்தவங்க.. 'பாரு, புரியுதா இல்லியா?'. எனக்கு புரியலேன்னு சொல்லவும் என்னன்னு விளக்கமும், என்ன பதில் சொல்லணும்னும் சொல்லிட்டாங்க. புது தைரியத்தோடு, நான் முடிச்சிட்டேன்னு எக்ஸாமினர் முன்னே போய் நின்னேன். அவர் பல புதுக்கேள்விகள் கன்னாபின்னாவென்று கேட்க ஆரம்பித்தார். அப்போதும் கைகொடுத்தார் என்னோட டீச்சர் தேவதை. 'விடுங்க. இவன் என் கிளாசுலே பிரில்லியண்டான ஸ்டுடண்ட்ஸில் ஒருத்தன்! ஒரு செமஸ்டரை ஒரே வாரத்தில் முடிச்சுட்டான் (எப்படி முடிச்சேன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் :) ). 5 தவிர வேற எதக்கொடுத்தாலும் ஒத்துக்கமாட்டேன்!' அப்படீன்னு ஒரு போடு போட்டாங்க. அதன் படியே '5' கிடைத்தது. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், அய்யோ, இப்படியாக நம்ம மேல நம்பிக்கை வச்சுருக்கவரவங்கள ஏமாத்திட்டோமேன்னு வருத்தமும் வந்தது.
இன்னொரு விஷயம், தேர்வுகளில் நமக்கு தெரியாதவற்றை 'தெரியலே' ன்னு நேரடியா சொல்றது நல்லது. கண்டதையும் உளறினா குறுக்கு கேள்வி கேட்டு மானத்தை வாங்கிடுவாங்க. ஒரு தடவை, ஹிஸ்டாலஜி பரிட்சை. அந்தப் பாடத்திலே முழு நேரமும் ஸ்லைடுதான். அந்த பரிட்சையில் ஒரு ஸ்லைடில் என்னன்னு தெரியாம உளறப்போய் டீச்சர் அதுக்கு ஒரு பதிலடி கொடுத்தாங்க பாருங்க. "If this is brain tissue, then am a crocodile". அதுகூட பரவால்ல.. நம்ம கூட படிக்கற பசங்க தானே.. அவுங்களும் டர்ன் வந்தா வாங்கித்தானே ஆகனும்னு இதையெல்லாம் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. ஆனா, ரவுண்ட்ஸ் போகும்போது, சீப் கிட்ட மாட்டினோம்.. தொலஞ்சோம்.. நேரா ஜன்னல் வழியா குதிச்சிடலாமாங்கற மாதிரி சில சமயம் பேஷண்ட்கள் முன்னாடியே நார் நாரா கிழிச்சுத் தோரணம் கட்டிடுவாங்க. அதுக்கப்புறம் நாம அந்த வார்ட் பக்கம் தலகாட்டும் பொழுதெல்லாம், 'வாடா வசூல் ராஜா, பொஸ்தகத்த கொஞ்சமாவது புரட்டிட்டு வந்தியா? இல்ல இன்னிக்கும் வாங்கிக் கட்டிக்கப்போறியா?'ன்னு நக்கல் சிரிப்புதான் நம்மள பாத்து.. அதப்பத்தி தனிப்பதிவே போடலாம்.
எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு க்ளோஸ் கால் அனுபவம் இருக்கும். இல்லியா? காப்பி, பிட் டெக்னிக்குகளில் கைதேர்ந்தவர்கள் அவர்கள் அனுபவங்கள பகிர்ந்துகிட்டா மிச்சவங்களுக்கு பிரயோசனமா இருக்குமே.
----
குறிப்பு: ஸ்பெஷல் பட்டர் மசால்களையே நட்சத்திரங்களின் மூலமா சாப்பிட்டு வந்த வாசகர்களுக்கு, சாதா பரோட்டா வித் வெங்காயப் பச்சடியும் ஒரு சேஞ்சுக்காக பரிமாறாலாம் என்றிருக்கிறேன். ஏன்னா நமக்கு அவ்வளவுதான் செய்ய வரும். அதனால, ரொம்ப அலட்டிக்காம இந்த ஸ்பெஷல் வாரத்தின் பதிவுகளுக்கு வஞ்சனையில்லாம பின்னூட்டம், குத்து போடறவங்க எல்லாம் பின்னர் தனியாக கவனிக்கப்படுவார்கள் என்று நினைவு படுத்துகிறேன். இரண்டுக்கும் மேற்பட்ட பின்னூட்டமிடுபவர்கள் பம்பர் முறையில் குலுக்கப்படுவார்கள்.
உங்களுக்கு 56 கோடி வேணுமா?
என்ன நட்வர் மட்டும் ஈராக்கிலேர்ந்து சாப்பிட்டா போதுமா? நீங்க சாப்பிட வேணாமா? அதான், எல்லாருக்கும் எல்லாம்னு பெருந்தன்மையா நினச்சு உங்களுக்கு 56 கோடி வேணுமானு ஐ.நா வோட செக்ரெட்டரி-ஜெனரல் கோபி அன்னன் கேக்கறார். வேணும்னா பதில் மெயில் போடுங்க அவருக்கு.
---
I, Dr. Kofi Annan, Secretary-General of the United Nations, would like to ask your partnership in reprofilling funds over $250m in excess, the funds would be coming via a string of selected banks in Europe and Asia. The Funds in question were generated by me during the oil for food program in Iraq. I have been getting scandals/ controversy in this regards, you can read more on the links below-
http://www.wsws.org/articles/2005/apr2005/anna-a05.shtml
http://www.canadafreepress.com/2003/main042803.htm
You would be paid 5% as your management fee. Please do not write back directly to me via my official email address. All further correspondence should be sent to my private mail box ( kofiannan4un@o2.pl ). As soon as you indicate your interest I will give further details. Remember to treat this mail and transaction as strictly confidential. I will await your urgent correspondence via my private mail box-
Dr.Kofi Annan.
SECRETARY- GENERAL
kofiannan@un.org
www.un.org
---
419-ers வர வர கலக்கறாங்க இல்ல?
நன்றி El Reg
Indians - safest, most committed and most satisfied
வருடாவருடம் போலவே இந்த ஆண்டும் 41 நாடுகளில் 317,000 மக்களிடம் உலகின் மிகப்பெரும் ஆணுறை நிறுவனமான டியுரெக்ஸ் தனது DGSS எனப்படும் செக்ஸ் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. அதில் இந்தியர்கள் அளித்த சில பதில்கள் இதோ..
முன்பின் தெரியாதவர்களுடன் உடலுறவு கொள்வோர் - 21% (global ave. 47%)
வாழ்நாளவில் உறவு கொள்ளும் பார்ட்னர்களின் எண்ணிக்கை - 3 (9 - துருக்கியில் 14.5 பேர்!)
One Night Stands - 13% (44%)
வர்ஜினிடி இழக்கும் சராசரி வயது: 19.8 (17.6, ஐஸ்லாந்து - 15.6)
தங்கள் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாய் இருப்பதாய் சொன்னவர்கள்: 46 (44%)
தங்கள் செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாய் சொன்னவர்கள்: 3 (7%)
போர்னோகிராபி வழக்கமாய் படிப்போர்/பார்ப்போர் - 37%
மக்களிடம் எதைப் பற்றி இன்னும் அதிக விழிப்புணர்வு வரவேண்டியிருக்கிறது? எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி - 87%
வருடத்திற்கு - 75 நாட்கள் (103, கிரீஸ் - 138, க்ரோயேஷியா - 134, ஜப்பான் - 45)
47% இந்தியர்கள் பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை 14 வயதிலிருந்து புகுத்த வேண்டுமென்று சொல்லியுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு: Durex GSS05
இந்த கணிப்பு நம் நாட்டில் எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. பிரத்தியேக ஆணுறைகள் உபயோகிப்பதாக 28% இந்தியர்கள் வாக்களித்துள்ளதால் நகரங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. அதே போல பள்ளிகளில் செக்ஸ் பாடத்திட்டத்தை புகுத்த வேண்டும் பாதிக்கு பாதி பேராவது சொல்லியிருப்பதும் ஆறுதலானாலும் மிச்ச 50 சதவிகிதம் பேர் என்ன நினைக்கிறார்கள் என்று விளங்கவில்லை. நாடெங்கும் எய்ட்ஸ் அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும்போது மக்களிடையே இதைக்குறித்த விழிப்புணர்வு, நகரங்களுக்கு மட்டுமாவது வந்து சேர்ந்திருக்கிறதோ? இல்லை இதுவே வெறும் பகல்கனவா? இன்னமும் கிராமப்புறங்கள்..
ஐ.நா சபை மீது வழக்கு தொடர முடியுமா?
சதாம் உசேன் ஆட்சியில் இருந்தபோது இருந்த oil-for-food திட்டத்தின் கீழ் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மற்றும் காங்கிரஸ் மறைமுகமாக பலனடைந்தார்கள் என்று Volcker கமிட்டி சமர்ப்பித்துள்ள ரிப்போர்டிற்கு எதிராய் ஐ.நா சபை மேல் வழக்கு தொடுப்போம் என்கிற தொனியில் பதிலறிக்கை கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
ஐ.நா சபை மே வழக்கு தொடுப்பது சாத்தியமேயில்லை என்று தான் நான் இதுவரையில் நினைத்துக்கொண்டிருந்தேன். தனி நபர், ஐ.நா.வைச் சேர்ந்தவரென்ற பட்சத்தில், அவர் மேல் வழக்கு தொடரலாமேயன்றி ஓட்டுமொத்த அமைப்பின் மீதும் வழக்கு தொடர வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இப்போது இரான் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் அதிபர் விடுத்த இஸ்ரேலை ஒழிப்போம் என்கிற அறிக்கைக்கு ஐ.நா உட்பட அதன் உறுப்பு நாடுகளும் பெரும் கண்டனம் தெரிவித்தன. இதை முகாந்திரமாக கொண்டு வழக்கு தொடர இயலுமா? அதேபோல் அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி இராக்கிடம் WMD இருக்கிறது என்று பொய்யாக ஐ.நா சபையில் வாதிட்டது. இதை வைத்து defamation கேஸ் மாதிரி அவரை எதிர்த்தோ அதை அனுமதித்த ஐ.நாவை எதிர்த்தோ தொடர இயலுமா? முடியுமெனில், எங்கே தொடர முடியும்? ஹேக்-கிலா இல்லை அமெரிக்க செனட் ஹியரிங்கில் பதிலளித்த பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் போல் தன் நாட்டிற்கு அழைத்து விளக்கமளிக்க நிர்பந்தப்படுத்த முடியுமா?
மொத்தத்தில், இந்தியா நிரந்தர SC பதவி வேண்டும் சமயத்தில் இந்த பிரச்சனை தேவையற்ற ஒன்று.