சமீபத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது MRP பற்றியும் பேச்சு வந்தது. அவர்கள் ஊரில் கிடையாது, அதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை என்றார். முதல்ல, இந்தியாவில் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த அனைவருக்கும் இந்த MRPன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு MRP=Maximum Retail Price. உதாரணத்திற்கு.. லைப்பாய் சோப் பின் MRP 20 ரூபாய்னா, இந்தியாவெங்கிலும் எக்காரணத்தைக் கொண்டும், அது சிலுக்குவார்ப்பட்டி (உபயம்: முகமூடி) பொட்டிகடையோ மும்பை சூப்பர் மாலோ, இந்த 20 ரூபாய்க்கு மேல் அதிக விலையில் விற்கக் கூடாது.
ஒரு அரசாங்கத்திற்கு இந்த வகைப் பொருள் இந்த விலையில் தான் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும் என்று விதிக்க என்ன உரிமை இருக்கிறது? இம்மாதிரி கட்டுப்பாடுகள் இருப்பின் அது முழு சுதந்திரம் இல்லையே? அந்த வகையில் முழு சுதந்திரமுடையதாய் இருக்கவேண்டிய சந்தைப் பொருளாதாரத்திற்கு குறுக்கே நிற்கிறதல்லவா? மக்களுக்கு எங்கே மலிவாய் கிடைப்பதாய் தோன்றுகிறதோ, அங்கே வாங்கிக் கொண்டு விட்டு போகிறார்கள். இது மக்களின் குற்றமேயன்றி, எவ்வகையில் அரசின் பொறுப்பாகும்? என்று பல கேள்விகள் எழுப்பினார். அந்தக் கேள்விகள் பற்றி எனக்கு தெரிந்த பதில்களை அளித்தேன். அதை ஒரு பதிவாவும் போட்டுடலாமேன்னு போட்டுட்டேன்.
ஆனால் எனக்கென்னவோ இந்த MRP என்பது அவசியமானதொன்றாகவே படுகிறது. குறிப்பாக அது Fixed Retail Price என்றில்லாமல் Maximum (Suggested) Retail Price ஆக இருப்பதால். அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்ட் கிடையாது. அதனால் நடக்கும் குளறுபடிகள் பல. உதாரணத்திற்கு நான் சிட்டி செண்டரில் இருக்கிறேன். இங்கு ஒரு லிட்டர் எண்ணெய் ஒரு டாலருக்கு கம்மியாக கிடைக்காது. எங்கே சுற்றினாலும் இந்த ஏரியாவில்: ஆனால் அதுவே புறநகர்ப்பகுதிகளில் 70,80 செண்ட்களுக்கு கிடைக்கும். இதே நிலைதான் காய்கறிகளிலிருந்து ஹை டெக் பொருட்கள் வரை. நகரின் மையப்பகுதியில் இருப்பதனால் நான் அதே பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பது அநியாயம் தானே?
இது தயாரிப்பிற்கான செலவுகள் மற்றும் ஓவர்ஹெட் போக, குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் கிடைக்கும் விலையில் வரிக்குட்பட்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் செலவுகளும் இதில் உள்ளடங்கும். ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் இந்த MRP க்கு குறைவான விலையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அதனபடி நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வால்யூம் பேஸ்ட் சேல்ஸ் ஐட்டங்களே பெரும்பாலானவை என்பதால் இதில் கடைக்காரருக்கோ, விநியோகஸ்தருக்கோ, தயாரிப்பாளருக்கோ நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையே. மாறாக ஆரோக்கியமான விலைப்போட்டி உருவாவதால், விலைகள் குறைந்து நுகர்வோருக்கு சாதகமாகவே இருப்பதாய் தெரிகிறது. முழு சந்தைப் பொருளாதாரமான அமெரிக்காவிலும் MSRP இருக்கிறது என்று அறிவேன். ஆனால், இந்தியாவைப் போல் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறதா என்று தெரிந்தோர் கூறினால் நன்றாக இருக்கும்.
அடுத்த விஷயம், அரசாங்கத்திற்கு உரிமையிருக்கிறதா இல்லையா என்பது பற்றியது. சோஷலிஸ் ஹேங்க் ஓவர் என்று சொன்னாலும் கூட, என்னைப் பொருத்தவரை கண்டிப்பாக இருக்கிறது. வரி விதிக்கும் அரசுக்கு விதிக்கப்படும் மக்கள் ஏமாறுவதை தடுப்பதிலும் பங்கிருக்கிறதல்லவா? ஏற்கனவே 20 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். லாபம் என்பது அவசியம் தான். ஆனால், அது பேராசையாகாமல் தடுப்பது அரசின் கடமையல்லவா?
எத்தனை நாட்களுக்கு பத்து ரூபாய் பெறாத பொருளை நாற்பது ரூபாய்க்கு விற்க முடியும்? நுகர்வோர் புறக்கணிக்கலாமே என்று ஒரு வாதமும் உண்டு. அதாவது மக்களே தங்கள் சுய சிந்தனையுடன் நாற்பது ரூபாய் கொடுத்து வாங்குவதால், அரசின் தலையீடு தேவையற்றது என்பது. இதற்கு நான் முன்னே கூறிய சிட்டி செண்டர் உதாரணமே பதில். மேலும், சமீபத்தில் சாம்ஸங், ஹைனிக்ஸ் போன்ற மெமரி நிறுவனங்கள் artificialஆக விலைகளை ஏற்றியதற்கு அபராதம் செலுத்தியதை நினைவில் கொள்ளவும். நான் ஒவ்வொருமுறையும் whole sale ஆகவோ, வேலைமெனக்கெட்டு பல நேரம் பயணம் செய்தோ குறைந்த விலைக்கு வாங்க முடியுமா? இன்னும்விட்டால், சிலுக்குவார்பட்டியில் (மீண்டும் நன்றி: முகமூடி) விலை இன்னும் குறைவாக இருக்குமென்பதற்காக, ஒவ்வொரு முறை எண்ணெய் வாங்கவும் நான் அங்கே போக முடியுமா? இதுவும் நியாயமில்லாத வாதமாக படவில்லை. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ரம்யா அக்கா போட்ட ஒரு துண்டு துணி பதிவு. MRP அமலில் இருந்தும் இந்த அடிப்படையான பொருள் பெரும்பாலனவர்களுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது.
கடைசியில் என்னதாம்பா சொல்றேன்னு பொறுமை இழந்தவர்களை மேலும் சோதிக்காமல்: MRP மிகவும் அவசியம் என்று கூறி முடிக்கிறேன். நீங்க இருக்கற ஊர்லேல்லாம் என்ன நடைமுறைன்னு எழுதினா உபயோகமா இருக்கும்.
பின் குறிப்பு: பொருளாதாரம் எனது துறைக்கு சிறிதும் சம்பந்தமற்றது. இன்னிக்கு சீரியஸும் வேணாம், ஜாலியும் வேணாம்னு (நவரச நேசன்?? மதுமிதா எங்கே இருக்கீங்க??) ஒரு சேஞ்சுக்காக ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா மாதிரி பெரியோர் ஸ்டைல்ல ஒரு பதிவு போடலாம்னு நினச்சு செய்யறேன். பொருளாதாரம் பற்றி அறிந்தவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்துகள் இருந்தால், கண்டிப்பா அதை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். பதிவு சுத்தமா பிடிக்காதவங்களும் எதையாவது சம்பந்தமா எழுதி வையுங்க (மணியன் மன்னிக்கவும்!), ஏன்னா பம்பர் பரிசு என்னன்னு வாரக்கடைசியில் அறிவிப்பு வரும். அப்புறம், சான்ஸ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பிரயோசனமில்ல. சொல்லிட்டேன்.
MRP - தேவையா இல்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
41 Comments:
என்னமோப்போங்க எதையெடுத்தாலும் பின்னுறீங்க
nanum commenters list la sernthukkaren ...
more NAME DROPPINGS!
twice MUGAMOODI
//MRP மிகவும் அவசியம்//
Good, VASOOL RAAJA!
ராமநாதன்,
MRP நம்ம ஊர் மாதிரி இடங்களுக்கு கண்டிப்பா வேணும். வியாபார போட்டிகளால் நிறைய கடைகளில் கொள்முதல் விலையிலேயே கூட பொருள்கள் விற்கப்படுவதால் நுகர்வோர் பயனடைகிறார்கள். ஆனால் MRPஐ பிக்ஸ் பண்ற அரசாங்கம் நிறைய நேரங்களில் பொறுப்பாக இருப்பதில்லை. அதனால் ஒரே தரத்தில் விற்பனையாகும் பொருட்கள், தயாரிக்கப்படும் நிறுவனத்தின் லோஹோவைப் பொறுத்து மலைக்கும் மடுவுக்கும் உண்டான வித்தியாசத்தில் விற்கப்படுகிறது. அநேகமாக இத்தைகைய பாரபட்சம் மருந்து பொருட்களில் மிக அதிகம். (உ-ம்) மல்டி நேஷனல் கம்பெனியின் branded paracetamol tablet ரூ.1.50க்கு விற்கப்படும். அதே கம்பெனியின், அதே raw materialஇல் தயாரிக்கப்படும் பெயரற்ற( ஸ்பெஷல் பெயரில்லாமல், மூலப் பொருள் பெயர் மட்டும் கொண்ட) Generic product வெறும் 0.60 காசுக்கு விற்கப்படுகிறது. இந்த மாதிரி நேரங்களில் MRP என்பதே உபயோகமில்லாமல் போய்விடுகிறதே. இதே நிலைமை மற்ற நுகர்வோர் ஐட்டம்களிலும் இருக்குமென்று நினைக்கிறேன். அது பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை. MRP அமல்படுத்துமும், தரக் கணிப்பு, அதனடிப்படையில் விலை நிர்ணயம் என்று இருந்தால் இன்னும் சரியாக இருக்கும்.
இந்தியாவிலும் அ.சி.வி முறை நீக்கப்படப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ரீடிப்பில் படித்த ஞாபகம். நம் ஊருக்கு அ.சி.வி மிக அவசியம். அ.சி.வி இருக்கும்போதே பல இடங்களில் இஷ்டத்துக்கு விலை விற்கிறார்கள் (சினிமா தியேட்டர், பேருந்து நிலைய கடைகள், நெடுஞ்சாலையோரக் கடைகள், மற்றும் பல)
//குறிப்பாக அது Fixed Retail Price என்றில்லாமல் Maximum (Suggested) Retail Price ஆக இருப்பதால்//
ஒரு வாக்கியத்திற்காக '+' குத்திட்டேன் மாமு...
இந்தப் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நான் ரொம்பவே வீக். ஒவ்வொரு வருஷமும் வருமானவரி பதிவு செய்யுறதுதான். ஆனாலும் ஒவ்வொரு வாட்டியும் முழிப்பேன். கடைசியில் 100 ரூவா கொடுத்து form fillup பண்ணுவேன்.
இந்த MRP ஒரே பொருளோட வெவ்வேற கம்பெனிக்கு மாறுதே. நான் காலைல சாப்பிடுறது கார்ன்பிளேக்ஸ். கெலோக்ஸ் வாங்குனா 150 ரூபா. அதே மோகன் கம்பெனின்னா 65 ரூபா. இதுல மோகன் இந்தியக் கம்பெனி. அதே நேரத்துல நல்லாவும் இருக்கு.
அதே மாதிரி, கறிக்கடைல போய் கோழி வாங்குனாலும் பேக்கிங்குல வர்ர ரியல் குட் (காட்ரெஜ் கம்பெனியோடது) கோழி வாங்குனாலும் ஒரே வெலதான் இருக்கு.
எனக்கு இதுக்கு மேல பொருளாதாரம் பேசத் தெரியாது. மன்னிச்சுக்கிருங்க.
எல்லோரும் பொருளாதாரம் பேசும்போது நாம மட்டும் கம்முனு இருந்தா எப்புடி?
MRP முறை சரியாத் தவறா என்று அலசுற அளவுக்கு பொருளாதார அறிவு இல்லை தான்.
ஆனா இந்த தீபாவளி சமயத்துல பட்டாசுக்கு ஒரு MRP விலை வைக்கறாங்களே.. பார்த்ததுண்டா?
புஸ்வாணப் பாக்கெட்டுக்கு MRP 230 ரூபா போட்டிருப்பார்கள்.
45 ரூபாவுக்கு எடுத்துக் கொள்ள சொன்னால் 230ஐயும் 45ஐயும் ஒப்பிட்டு வாங்கி விடுவோம்...
அப்புறம் பார்த்தால் அதேப் பாக்கெட்டை 30 ரூபாவுக்கு நண்பர் வாங்கியிருப்பார்.
இது MRPயின் "+"ஆ , "-"ஆ
தெரிந்தவர்கள் விளக்கவும்!
மோகன்தாஸ்,
வஞ்சப்புகழ்ச்சியோ?? :))
சரண்யா,
அரைமணி முக்காமணி நேரம் போதும். ஆங்கிலத்துல அடிச்சு தமிழ்ல மாத்தறதால சொல்றேன். நீ எப்போ ஆரமிக்கபோற?
ஜெகதீஸ்வரன்,
தாராளமா சேர்ந்துக்கோங்க, :)
ஏஜெண்டு,
//Good, VASOOL RAAJA! //
இது டூ டூ மச்! நாங்களும் MRP வக்கணும்னு சூசகமா சொல்றீங்களா?
தாணு,
//அதனால் ஒரே தரத்தில் விற்பனையாகும் பொருட்கள், தயாரிக்கப்படும் நிறுவனத்தின் லோஹோவைப் பொறுத்து மலைக்கும் மடுவுக்கும் உண்டான வித்தியாசத்தில் விற்கப்படுகிறது. //
இது சந்தைப் பொருளாதாரத்தில் தவிர்க்கப்பட முடியாத ஒன்று. இதைப் பற்றி எழுத மறந்து விட்டது. மெர்சிடிஸ்ஸுக்கும் மாருதிக்கும் உள்ளதைப் போல - QoS!. இதில் கார் என்னும் பொருளைத்தான் பார்க்கவேண்டுமே தவிர ப்ராண்டை அல்ல என்பது என் கருத்து.
//மல்டி நேஷனல் கம்பெனியின் branded paracetamol tablet ரூ.1.50க்கு விற்கப்படும். அதே கம்பெனியின், அதே raw materialஇல் தயாரிக்கப்படும் பெயரற்ற( ஸ்பெஷல் பெயரில்லாமல், மூலப் பொருள் பெயர் மட்டும் கொண்ட) Generic product வெறும் 0.60 காசுக்கு விற்கப்படுகிறது. //
இதுவும் quality assurance-க்கு கொடுக்கற வித்தியாசம். நான் எழுத வந்தது: ஒரே பொருள் வரைமுறையில்லாத விலையில் வெவ்வெறு இடங்களில் விற்கப்படுவதைப் பற்றித்தான்.
சுதர்ஸன்,
//சினிமா தியேட்டர், பேருந்து நிலைய கடைகள், நெடுஞ்சாலையோரக் கடைகள், மற்றும் பல//
சினிமா தியேட்டர் consumer products ற்குள் வருமா? மற்றவை பற்றித் தெரியவில்லை.
கணேஷ்,
//ஒரு வாக்கியத்திற்காக '+' குத்திட்டேன் மாமு... //
நன்றி.. நல்லா குத்துங்க.. :)
ராகவன்,
//கெலோக்ஸ் வாங்குனா 150 ரூபா. அதே மோகன் கம்பெனின்னா 65 ரூபா. இதுல மோகன் இந்தியக் கம்பெனி. அதே நேரத்துல நல்லாவும் இருக்கு//
தாணுவும் நீங்களும் தவறா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். கம்பெனிக்கு கம்பெனி Quality மாறும். அதற்கான வித்தியாசத்தை நாம் தந்துதான் ஆகவேண்டும் இல்லியா?
அருட்பெருங்கோ,
//அதேப் பாக்கெட்டை 30 ரூபாவுக்கு நண்பர் வாங்கியிருப்பார்//
தீபாவளி பட்டாசு என்பது மிக குறுகிய காலத்திற்குள் விற்கப்பட வேண்டிய ஒன்று. வரவரைக்கும் லாபம் என்று காய்கறி மார்க்கெட் விவகாரங்கள் தான் அங்கே நடக்கும் என்று நினைக்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி
//நகரின் மையப்பகுதியில் இருப்பதனால் நான் அதே பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பது அநியாயம் தானே?//
நகரத்தில் வசதிகள் இருப்பதால் விலைகள் அதிகம்., புற நகர்களில் வசதிகள் குறைவு எனவே விலையும் குறைவு. வாங்கும் வாய்ப்புகள் உள்ள இடத்தில் அதிகம் விலை வைப்பதுதானே வியாபாரம்?. உதாரணத்திற்கு.. நகர்புறத்தில் உள்ள ஒருவர் 20 நிமிடங்களில் அலுவலகம் சென்று விடலாம்., புற நகரில் இருக்கும் ஒருவருக்கு 2 மணி நேரம் ஆகும். இருவரும் பெட்ரோலுக்கு ஒரே விலையை எப்படிக் கொடுக்க முடியும்?. இது எங்கும் உள்ளதுதான் பெட்ரோலில் இல்லையென்றாலும் வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியத் தேவையில். இவ்வளவு ஏன் வீட்டு வரி வித்திக்கின்ற அரசே ஒவ்வொரு இடத்திலும் ஒரே அளவு கோலிலா வரி வித்திக்கிறது?. நகரின் மையப் பகுதியில் ஒரு வியாபாரத்தை நடத்த அந்த வியாபாரி செய்யும் செலவு அதிகம். எனவே விலையும் அதிகம்.
அப்டிபோடு,
//நகரின் மையப் பகுதியில் ஒரு வியாபாரத்தை நடத்த அந்த வியாபாரி செய்யும் செலவு அதிகம்//
நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே போல, 24 மணிநேர கடைகளில் விலை அதிகம் இருப்பதையும் சேவைக்காகவென்று விட்டுவிடலாம்.
நகர்பகுதிகளில் அதிகமாகவும், சிறுநகரங்களில் குறைவாகவும் விலை இருப்பது தவறென்று நான் சொல்லவில்லை. மாறாக, அதிகபட்ச விலையென்று நிர்ணயித்துவிட்டால், கன்னாபின்னாவென்ற விலையில் நகர்பகுதிகளில் விற்க முடியாது என்பதுதான். உங்கள் சிட்டி செண்டர் block-இல் இருக்கும் எல்லாக் கடைகளும் கட்டுப்பாடற்ற வகையில் அதிகபட்ச விலைக்கே விற்றால், அதில் தோற்கப்போவது நீங்கள்தானே.
//வீட்டு வாடகை //
இது நான் குறிப்பிடும் பொருட்களின் வகையில் வருமா? வராது என்றே நினைக்கிறேன்.
நன்றி
அ.வி.வி. (அதிகபட்ச விற்பனை விலை) என்பது தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. இந்த விலைக்கு வாங்குவதா வேண்டாமா என்ற முடிவுக்கு வாங்குபவர் தான் வர வேண்டும். விபரத்திற்காக என்ன விலை என்று எழுதலாமே தவிர, ஒரு பொருளின் மதிப்பை வாங்குபவரோ/விற்பவரோ அல்லாது மற்றவர் முடிவு செய்வது (அது அரசாங்கமாக இருந்தாலும் சரி) தேவையில்லாத ஒன்று.
//வீட்டு வாடகை //
இது நான் குறிப்பிடும் பொருட்களின் வகையில் வருமா? வராது என்றே நினைக்கிறேன்.
உதாரணத்துக்குச் சொன்னேன். சொன்னத சரியாச் சொல்லலை. நங்கெல்லாம் இப்படித்தான் ... பரீட்சையிலயே தோன்றுவதை எழுதுவோம்... ஆசிரியை அவர் நினைக்கிறதுக்கு மார்க் போட்டுக்குவார். இல்ல... பினூட்டமெல்லாம்...சீரீயஸாப் போயிட்டு இருக்குதா...அதான்...
ரங்கா,
//விபரத்திற்காக என்ன விலை என்று எழுதலாமே தவிர, ஒரு பொருளின் மதிப்பை வாங்குபவரோ/விற்பவரோ அல்லாது மற்றவர் முடிவு செய்வது //
தனிப்பட்ட customised/scaled products எனில் நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ள முடியும். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
நன்றி
அப்டிபோடு,
//பரீட்சையிலயே தோன்றுவதை எழுதுவோம்... ஆசிரியை அவர் நினைக்கிறதுக்கு மார்க் போட்டுக்குவார். இல்ல//
No Comments!!! :P
வாய்ச்சொல்வீரன்,
//-ve -ve சேர்ந்தா +ve ஆயிடுமே அதுபோலவா? ஒரே குழப்பமா இருக்கு//
தப்புத்தாங்க. நியாமுள்ள வாதமாக படவில்லை என்றிருந்திருக்க வேண்டும்.
நன்றி.
//புஷ் சொல்றதக்கூட புரிஞ்சிக்கலாம் போல இருக்கு...// யாருப்பா இது உண்மையை எல்லாம் இங்க வந்து சொல்றது? இராமநாதன் கவனிக்கலை பாருங்க.
அது சரி...அப்டிபோடு அந்த பக்கம் போயிட்டாங்களா? இல்லைன்னா அப்புறமா வந்து என் பின்னோட்டத்தைப் போடறேன் :-)
MRPஇல்லைன்னா யார்வேணுமாலும் விலை ஏத்திருவாங்கல்லே? இப்பவாவது இவ்வளவு விலைன்னு
தெரிஞ்சிருது. அதனாலே கட்டாயம் வைக்கணும்.
உதாரணத்துக்கு:
ரயில்வே டைம்டேபிள் இல்லேன்னா எப்படி ரயில் லேட், எவ்வளவுநேரம் லேட்டுன்னு கண்டுபிடிக்கறதாம்?:-)
நம்மூர்லே டாக்டர்களைப் பாருங்களேன்.
அம்பது ரூபாய்க்கும் வைத்தியம், அஞ்சுநூறு ரூபாக்கும் வைத்தியம்னு இல்லையா? கிராமத்துலே போனா இன்னும்
மலிவா இருக்கலாம்.
இங்கேயும் பாருங்க. டாக்டர் ஃபீஸ் ஒவ்வொரு க்ளினிக்கும் வெவ்வேறயா இருக்கு.
ஆனா கடைகளிலே MRP இல்லை. அதுவும் அவுங்க விளம்பரம் பண்ணறதைப் பார்க்கணுமே.
'Why to pay more?' இங்கே வா, விலை குறைச்சிருக்கேன்னு சொல்றாங்க.
ஆமா, நமக்கெல்லாம் ஆசை பாருங்க pay more க்கு:-)
நல்ல பதிவுதான். ஆழமா எழுதத் தீர்மானிச்சுட்டீங்களாக்கும்:-)
எங்க ஊருல (மினசோட்டாவுல) நீங்க கார் வாங்கப் போனீங்கன்னா டீலர் எடுத்தவுடனே MSRPலயிருந்து தான் விலைபேச ஆரம்பிப்பார். அப்புறம்தான் பேரம் பேசி கீழ இறக்கணும். அந்த மாதிரி பேரம் பேசுறதுக்கு இங்க MSRP ரொம்ப usefullaa இருக்கு.
//அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா. இங்கு இந்த கான்செப்ட் கிடையாது. அதனால் நடக்கும் குளறுபடிகள் பல. உதாரணத்திற்கு நான் சிட்டி செண்டரில் இருக்கிறேன். இங்கு ஒரு லிட்டர் எண்ணெய் ஒரு டாலருக்கு கம்மியாக கிடைக்காது. எங்கே சுற்றினாலும் இந்த ஏரியாவில்: ஆனால் அதுவே புறநகர்ப்பகுதிகளில் 70,80 செண்ட்களுக்கு கிடைக்கும்.//
நம்ம ஊர்லயும் இது உண்டு. MRP எல்லாம் பாக்கெஜ்ட் புராடக்டுங்களுக்கு தான். அதுவும் சிட்டி,டவுண் மாதிரி இடத்தில. கிராமத்தில இன்னும்மும் இந்த லூஸ் ப்ரொடெக்ட் சேல்ஸ் உண்டு. இதயம் நல்லண்ணை பாக்கட்டை உடச்சி ஊத்தி சில்லரையா விக்கிற வியாபாரிங்களுக்கு இந்த எம் ஆர் பி கிம் ஆர் பிலாம் ஒன்னும் கிடையாது.
M.R.P.-எல்லாம் அந்தந்த தயாரிப்பாளர்கள்தான் போட்டுக் கொள்கிறார்கள்; இது தயாரிப்பாளர்-வினியோகஸ்தர்கள்-வியாபாரிகள் சேர்ந்து நம்மை மொட்டை அடிப்பதற்கு 'சும்மானாச்சிக்கும்' போட்டுக்கொள்ளும் ஒரு குறிப்பு - இப்படித்தான் நான் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அரசாங்கம்தான் இதை முறைப்படுத்துகிறது என்று சொல்கிறீர்களே. நான்தான் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறேனோ?
இன்னொரு கொசுறு தகவல்:
எமர்ஜென்ஸிக்கு முந்தியெல்லாம் சோப், பேஸ்ட் மாதிரி ஐட்டங்களில் இஷ்டத்துக்கு பல வெயிட்களோடு வரும். உதாரணமா, பேஸ்ட் சிலர் 80கிராம் போட, வேறு ஒரு கம்பெனி 75கி. போடும். விலையை ஒத்துப் பார்ர்த்துக்கொள்ள நிறைய மனக்கணக்குப் போட வேண்டியதிருந்தது.
அன்புடன்...பெரீய்ய்யப்பா
ஏற்கனவே ஏமாத்தறதை வியாபாரத்தில சகஜம் என்றும் பிஸிணஸ் ட்ரிக் என்றும் சொல்லிக்கொள்ளும் நம்ப ஊர் வியாபாரிகள் இதுவும் இல்லாட்டி நம்பளை முழுங்கிருவானுங்க
Ramanathan,
Good try. Konjam Home work panna innum nalla varum!
இராமனாதன்,
'விளக்கமாக சொல்லவும்' அப்படின்னு சொல்லிட்டீங்க. மாட்டினீங்களா? இந்த அ.வி.வி. அல்லது உ.வி.வி. (உயர்ந்தபட்ச விற்பனை விலை) பற்றி என் கருத்து இது தான்.
வணிகம் ஆரம்பித்த போது பண்ட மாற்று முறை தான் இருந்தது. இதன் அடிப்படை விஷயமே - ஒருவரின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்பது தான். இந்த அடிப்படை விஷயம் இன்றும் மாறவில்லை. என்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் நான் எந்த அளவிற்கு என் உழைப்பைத் தரத் தயாராக இருக்கிறேன் என்பது என்னுடைய முடிவு. நான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், அல்லது அனுபவிக்கும் ஒவ்வொரு சுகத்திற்கும் பணம் கொடுத்தாலும், அந்தப் பணத்தை சம்பாதிக்க என் வாழ்க்கையில் எத்தனை மணி செலவிடுகிறேன் என்பதை நினைத்து, முடிவெடுக்க வேண்டியது நான். அதே போல் என் ஒரு மணி உழைப்பிற்கு எத்தனை மதிப்பு, எவ்வளவு பணம் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியதும் நான். இந்த முடிவும், என்னுடன் பண்ட மாற்றுபவரின் முடிவும் ஒத்துப் போனால் ஒரு வியாபாரம் நடக்கும். இல்லை என்றால் அங்கு வியாபாரம் இல்லை.
அதே சமயத்தில் சட்டம் என்பது ஒரு குறைந்தபட்ச பொது உடன்பாடு (minimum common denominator). அதில் சமூகத்தால் ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்கள் தான் காட்டப்படுகின்றன. சுய மதிப்பீடு சமூக முரண்பாடல்ல! என்னுடைய உழைப்பின் மதிப்பைப் பற்றி நான் செய்ய வேண்டிய முடிவை சட்டம் நிர்ணயிக்க முடியாது. ஒரு பொருளை வாங்குபவர் என்ற முறையில் நீங்கள் உ.வி.வி. நிர்ணயிக்கப் பட வேண்டும் என்கிறீர்கள். அதை விற்பவன் என்கிற முறையில் ஒரு கு.வி.வி. (குறைந்தபட்ச விற்பனை விலை) நிர்ணயிக்கப்பட்டு, மற்றவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று நான் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?
இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும், அது உயிர் காக்கும் மருந்தாய் இருந்தாலும் சரி. அந்த மருந்தைத் தயாரிப்பவர்களும், சுய லாபத்துக்காகவே விலையை நிர்ணயித்தாலும், மருந்தே விற்கவில்லை என்றால் நஷ்டப்பட்டுத்தான் போவார்கள். ஆக அவர்களும் வாங்குபவரின் முடிவை எதிர்பார்த்துத் தான் இருக்கிறார்கள். ஒரு இயல்பான, ஆரோக்கியமான வணிக சூழ்நிலையை உருவாக்குவதை விட இந்த மாதிரி நிர்ணயங்கள் சமூகத்திற்கு உதவாது.
நியூயார்க்கில் உள்ள அப்பார்ட்மென்ட் வாடகைகளை கட்டுப்படுத்தியதால் தான் சில பகுதிகளில் அவை சீரழிந்து போயின என்று பெரிய வாதம் உண்டு. அ.வி.வி. இதைப் போலத் தான். அயன் ரான்ட் (Ayn Rand) எழுதிய கதை (கொஞ்சம் பெரிய கதை) 'அட்லஸ் ஷ்ரக்ட்' (Atlas Shrugged) படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதில் ஹாங்க் ரியர்டன் (Hank Reardon) என்னும் கதாபாத்திரம் நீதிமன்றத்தில் பேசுவது போல் வரும் ஒரு காட்சியில் இதைப் போன்ற ஒரு வாதம் வரும். ;-)
குறைகள் இருந்தாலும்,இந்தியச் சந்தையில் MRP அவசியம் வேண்டும் என்பதே எனது கருத்து.
இது வருவதற்கு முன்பு யார் என்ன வரி வசூலிக்கிறார்கள் என்று தெரியாது. சும்மா உள்ளூர் வரி என்று பொத்தாம் பொதுவாக இருக்கும்.
MRP வந்த பின்பும் வசூலிக்கப்படும் பற்றிய தகவல்களின் நிலைமை அதேதான் என்றாலும் இந்த நடைமுறை ஒரு நல்ல மாற்று ஏற்பாடே.
அமெரிக்காவில்:
1. ஒரே பொருள் பல விலைகளில் பல இடங்களில் விற்கப்படும்.
2. பெரும்பாலான (99%) பொருட்களில் விலை நேரடியாக அச்சிடப்பட்டு இருக்காது.
3. சும்மா "Bar Code" மட்டுமே இருக்கும்.
4. பொருளை வாங்கிய கடைகளுக்கும், அதை அந்தக் கடைக்கு விற்ற நிறுவனத்திற்கும் மட்டுமே அந்த "Bar Code" இரகசியம் தெரியும்.
நம் சாதாரணக் கண்களுக்கு அது தெரியாது.
5.ஒரே கடையில் அதே பொருள் ஒருமுறை அதிக விலையுடனும், மறுமுறை தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கும் விற்கப்படும்.
MRP இல்லாவிட்டாலும் நுகர்வோருக்கு கிடைக்கும் நல்லவைகள்:
1.பொருளின் விலையுடன் வசூலிக்கப்படும் வரி பற்றிய துல்லியமான தகவல்களை அச்சிட்டுத் தருவது. (கடைகளின் பணி)
2..பொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்வதில் எந்த முகச் சுழிப்பும் கிடையாது.
(விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்படமாட்டாது போன்ற சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பு எல்லாம் கிடையாது.)
3.கட்டும் வரி எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதை அந்த அந்த வட்டார (county,city ) அலுவலகங்கள் மக்களுக்கு அறியத்தருவது.
4.முக்கிய வரிகள் விதிக்கப்படுவதற்கு முன் மக்களிடம் அந்த அந்த வட்டார அரசு தரப்புகள் கலந்துரையாடுவது.
துளசியக்கா,
//நம்மூர்லே டாக்டர்களைப் பாருங்களேன்//
//அம்பது ரூபாய்க்கும் வைத்தியம், அஞ்சுநூறு ரூபாக்கும் வைத்தியம்னு இல்லையா? கிராமத்துலே போனா இன்னும்
மலிவா இருக்கலாம்.
இங்கேயும் பாருங்க. டாக்டர் ஃபீஸ் ஒவ்வொரு க்ளினிக்கும் வெவ்வேறயா இருக்கு.
//
நம்ம பக்கமே கோல் போடறீங்க. சரியான உதாரணம் இல்லைன்னு தோணுது. ஏன்னா, ட்ரீட்மெண்ட் என்பதை அளக்க முடியாது.. சரியா?? :)
குமரன்,
//அந்த மாதிரி பேரம் பேசுறதுக்கு இங்க MSRP ரொம்ப usefullaa இருக்கு.
//
அதுவும் கரெக்ட்தான். durables க்கு கண்டிப்பா MRP இருக்கணும்கறதுதான் என் கருத்து.
வெளிகண்டநாதர்,
//இந்த லூஸ் ப்ரொடெக்ட் சேல்ஸ் உண்டு//
அது சுத்தமா unregulated market ஆச்சே. ஒண்ணும் செய்யமுடியாது. ஆனா அங்கேயும், முழு விலையிலிருந்து எவ்வளவு வாங்கறோமோ அதப் பொறுத்தே கணக்கு போடுவாங்கன்னு நினைக்கிறேன்.
சரண்யா,
//so sema tight..:-)blog poda ellam neram illa...//
இது உனக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல..?? :P
பெரீய்ய்யப்பா, முத்து
// நம்மை மொட்டை அடிப்பதற்கு 'சும்மானாச்சிக்கும்' போட்டுக்கொள்ளும் ஒரு குறிப்பு//
நம்மள முழுக்க மொட்டை அடிச்சிடக்கூடாதுங்கறதுக்காக இருக்கறதுதான் இது!
ரஜினி ராம்கி,
நன்றி. ஸ்கூல்லேயே பண்ணதுகிடையாது. இங்க அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? :)
ரங்கா,
விளக்கியதற்கு நன்றி.
//என்னுடன் பண்ட மாற்றுபவரின் முடிவும் ஒத்துப் போனால் ஒரு வியாபாரம் நடக்கும். இல்லை என்றால் அங்கு வியாபாரம் இல்லை.//
//அதை விற்பவன் என்கிற முறையில் ஒரு கு.வி.வி. (குறைந்தபட்ச விற்பனை விலை) நிர்ணயிக்கப்பட்டு, மற்றவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று நான் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?//
நீங்க சொல்வது consumerism திற்கு எதிராக இருப்பது போல் புரிகிறது. சரியா? சமீபத்தில் சாம்ஸங், ஹைனிக்ஸ் அபராதம் கட்டியதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
கல்வெட்டு,
அமெரிக்காவில் இருக்கும் நிலையை பற்றிக் கூறியதற்கு நன்றி
//2. பெரும்பாலான (99%) பொருட்களில் விலை நேரடியாக அச்சிடப்பட்டு இருக்காது.
//
பெரும்பாலான இண்டர்நெட் கடைகளில் MSRP போட்டிருப்பதால் அதுவே வழக்கம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
//ஒரே கடையில் அதே பொருள் ஒருமுறை அதிக விலையுடனும், மறுமுறை தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கும் விற்கப்படும்.//
புதிதாய் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எந்தப் பொருளுமே பிரிமியம் கொடுப்பது எல்லா நாடுகளிலும் வழக்கம்தானே.
//1.பொருளின் விலையுடன் வசூலிக்கப்படும் வரி பற்றிய துல்லியமான தகவல்களை அச்சிட்டுத் தருவது. (கடைகளின் பணி)
//
இது நல்ல பழக்கம்தான். இங்கேயும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது.
//(விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்படமாட்டாது போன்ற சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பு எல்லாம் கிடையாது.)
//
வழக்கு போடுவதையே பொழுதுபோக்காய் கொண்ட நாடாச்சே! மாட்டேன்னு சொல்லிட முடியுமா? :)
மீண்டும் நன்றி
இராமனாதன், என்னுடைய கருத்து என்னவென்றால், உ.வி.வி. எழுதி ஒட்டுவதால் பிரச்சனை தீராது என்பது தான். விற்பவரும் வாங்குபவரும் ஒரு ஆரோக்கியமான நாணயமான வியாபாரத்தில் இறங்குவது என்பது முக்கியம். சாம்சங்க் பற்றிக் கேட்டிருந்தீர்கள். ஒரு உற்பத்தியாளர், மற்ற உற்பத்தியாளர்களோடு கலந்து பேசி எல்லோரும் விலையை நிர்ணயித்தார்கள் என்பது குற்றச்சாட்டு. இதை ஒப்புக் கொண்டு, அவர்கள் அபராதம் கட்டியிருக்கிறார்கள். இதை விலையை எழுதி ஒட்டுவதால் தீர்க்க முடியாது. விலையை நிர்ணயிக்க எப்போது ஒரு குழு (வாங்குபவர்/விற்பவர் தவிர) தனியாக முயல்கிறதோ அப்போது தொந்திரவுதான் - அது ஒபேக் ஆக இருந்தாலும் சரி அல்லது அரசாங்கமாயிருந்தாலும் சரி. இம்மாதிரி நாணயமற்ற வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனக்களைப் புறக்கணிப்பதால் அடையும் நன்மை அதிகம். அதற்குப் பதில் வியாபாரம் செய்பவர் அனைவரும் நாணயமற்றவர் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கும் உ.வி.வி. மீது எனக்கு நம்பிக்கையில்லை. நான் consumerismக்கு எதிரியல்ல. மாறாக நாணயமான வர்த்தகத்திற்கு ஆதரவாளன்.
இது சம்பந்தமா நானும் நம்ம ம்ன்மோகனும் பேச ஆரம்பிச்சோம், அது எங்கியோ போயிருச்சி... சரி.. சரி...
இந்தியாவுக்கு MRP தேவைங்கறது என்னோட கருத்தும். அமெரிக்க MSRP பத்தி பாகம் I, II, IIIன்னு எழுக்திகிட்டே போகலாம். நேரம் வாய்க்கும்போது
போன பின்னூட்டத்தை இரண்டாக பிளந்து போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்..
போன பின்னூட்டத்தில் சொன்னபடி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இதோடு மூன்று என்பதை நினைவில் கொள்ளவும்
நன்றி ரங்கா,
//மாறாக நாணயமான வர்த்தகத்திற்கு ஆதரவாளன்//
லாபமே குறியென்று பெரும்பாலும் ஆகிவிட்ட சந்தையில், ஒரு fall backற்காக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோமா? :)
தல,
நீங்க மட்டுந்தான் ஒழுங்கா ரூல்ஸ் பாலோ பண்றீங்க. இன்னும் மூணு நாள் தான்.. இதே ஆர்வத்தோட தொடர்ந்தா, கண்டிப்பா உங்களுக்குத்தான் பம்பர்.
:-) சரி...உங்களிஷ்டப்படியே ஆகுக! அடுத்த பதிவாக ஒரு பொருளின் உ.வி.வி. ஐ நிர்ணயிக்க எத்தனை பேர் வேண்டும்? என்று எழுதுகிறீர்களா? :-)
Post a Comment