தீயினால் சுட்ட புண்...

எனக்கும் வார்த்தைகளை அளந்து, நிதானமாய் பேச வேண்டும் என்று ரொம்ப நாளாய் ஆசை. மிகவும் பிரயத்தனப்பட்டு இப்போது ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். சரிக்கு சமானமவரிடத்தில் பேசுவது வேறு வகை. ஆனால், சமூகத்தில் நம்மை விட தாழ்ந்த (பொருளாதார), என்று நாம் கருதும் நிலையில் இருப்பவர்களிடம் பேசும் போது ஓவர் கரிசனம் காட்டினால் - patronizing என்றும் ஓவர் ஏளனம் செய்தால் - கர்வமென்றும் - ரெண்டுமே வெறுக்கப்படும். கத்திமேல் நடப்பது போன்றது இது. எவ்வித நிலைப்பாடும் இன்றி, சாதாரணமாக பேசும்போது ஓரளவிற்கு சிந்தித்துப்பேசினாலும், கோபம் தலைக்கேறிவிட்டால் என்ன சொல்கிறோம், அதை அடுத்தவர் எப்படி புரிந்துகொள்வார்கள் என்பது என்னை உட்பட பலருக்கும் மறந்தே போய்விடுகிறது என்பதை கவனித்திருக்கிறேன். ஏன், இங்கே வலைப்பூக்களிலும் இதுதானே நடக்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகளே பல இடங்களில் நிறைந்திருக்கின்றன. நான் என் வாழ்க்கையில் என்னையே மன்னிக்க முடியாதபடி சில முறைகள் அவ்வாறு கோபத்தில் பேசியது உண்டு. அவற்றைக் குறித்து பின்னர் சிந்திக்கும்போது, ஏன் இப்படி நம் வாயிலிருந்து இப்படிப்பட்ட குரூர வார்த்தைகள் வந்தது எண்ணிப்பார்ப்பதுண்டு.

ஒருமுறை எங்கள் ஹாஸ்பிடல் வாசலில் விண்டர் ஜாக்கெட் வைக்குமிடம். நான் என் ஜாக்கெட்டை கழற்றி காத்திருந்த வயதான பெண்மணியிடம் கொடுக்கலாம் என்று திரும்பியபோது பலநாள் சந்திக்காத நண்பன் வந்தான். கோட்டை என் கையிலேயே வைத்துக்கொண்டு அவனிடம் பேசலானேன். பொறுத்துப்பார்த்த பெண்மணி "அஞ்சு நிமிஷமா வெயிட் பண்றேன். கோட்ட கொடுத்துட்டு பேசக்கூடாதா?" கற மாதிரி சாதாரணமாகத்தான் கேட்டாள். என்ன நடந்ததோ தெரியவில்லை, ஏன் அப்படி கோபம் வந்ததென்றும் புரியவில்லை. "கோட்டை நாங்க எப்ப கொடுக்கறோமோ அப்ப வாங்கிக்கத்தான் வேலைக்கு உங்கள வச்சுருக்காங்க. அதனால, எப்ப கொடுக்கணும்னு நீங்க சொல்ல வேணாம். நிக்க ரொம்ப கஷ்டமாயிருந்தா வேற வேல தேடிக்கலாமே" னு சத்தமா சொல்லிட்டேன். அறையில் எல்லோரும் ஒரு நிமிஷம் சைலன்ட் ஆயிட்டாங்க. அந்தப் பெண்மணி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டவுடன் உறைத்தது. 'அடப்பாவி, இப்படி அவமானப்படுத்தனுமா.. கோட்டைக் கொடுத்துட்டு பேசினா என்ன குடியா முழுகிப்போகிறது' என்று என் மனம் பதைபதைத்தாலும், எல்லாரின் பார்வையும் என் மீது இருந்ததால் சட்டென மன்னிப்பு கேட்க ஈகோ இடம் கொடுக்கவில்லை. திகைத்துப் போய் நின்ற நண்பனுடன், ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் தொடரலானேன். ஆனால், கூட்டம் சற்றும் கரையும் வ்ரையில் தொடர்ந்த வெட்டிப்பேச்சில் ஒரு வார்த்தைகூட மனதில் நிக்கவில்லை. மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. இப்படி பேசிவிட்டோமே. நாம் அந்தப் பெண்மணியின் இடத்தில் இருந்து இப்படி கேட்க வேண்டியிருந்தால் எப்படி வலித்திருக்கும் என்று புல்லட் ட்ரெயின் கணக்காய் கில்ட் பீலிங் ஓடிக்கொண்டிருந்தது. நண்பன் விடை பெற்றுக் கொண்டபின், மெதுவாய் அந்தப் பெண்மணியிடம் சென்று கோட்டை கொடுத்தேன். பதிலேதும் சொல்லாமல் டோக்கன் கொடுத்தாள். 'நான் அப்படிப்பேசியிருக்கக்கூடாது. மன்னித்து விடுங்கள்' என்றேன். பெருந்தன்மையாய் 'இருக்கட்டும் தம்பி, உங்களுக்கு என்ன டென்ஷனோ.. அது என்மேல கோவமா திரும்பிடுச்சு. பரவாயில்ல. Have a good Day'னு சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க. அப்பெண்மணி அவ்வாறு பெருந்தன்மையோடு மன்னித்தது என் குற்ற உணர்வை அதிகரிக்க செய்ததே தவிர குறைக்கவில்லை.

(அதிகாரமில்லா) ஏழைகள் என்றால் இளக்காரம் என்பது இல்லை. அந்தப் புரிதலெல்லாம் உண்டு என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால், sub conscious ஆக அது இன்னமும் இருக்கிறதோ என்று சிந்திக்க வைத்த நிகழ்ச்சி இது. 'க்ளாசுக்கு கரெக்ட் டைமிற்கு வரவேண்டும்' என்று சொல்லும் பிரின்ஸிபாலிடம், 'நான் பணம் கட்டறேன். எப்போ வேணா வருவேன். உனக்கு என்ன பிரச்சனை'னு சொல்ல முடியுமா? நம் கையில் அப்போது அதிகாரமில்லை. அவரைக்காட்டிலும் கீழ்நிலையில் இருக்கிறோம். நம் ஆசிரியர்களிடமும், பாஸ்களிடமும் நாம் சொல்வதை அவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணும் சமயத்திலேயே, உங்கள் வீட்டில் வேலைசெய்வோர், 'இப்படிப் பண்ணக்கூடாது தம்பி'னு சொன்னா அந்த நிமிடத்திற்கு சரியென்று ஒத்துக்கொண்டாலும், உள்மனதில் 'சே, இவனுக்கு என்ன யோக்கியதை நமக்கு சொல்றதுக்கு'னு ஒரு வினாடியாவது தோணும். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று வெறும் லெவலைப் பார்த்து வரும் கோபமேயன்றி, அவர் சொல்லும் கருத்தில் நமக்கு பயனுள்ளதா என்று பார்ப்பதில்லை. நமக்கு கீழே இருப்போர் நமக்கு அறிவுரை சொல்லத் தகுதியற்றவர்கள் என்று சொல்வதைப் போல் முட்டாள்தனம் என்பதை பலரும் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், இந்தத் தெரிவுடனேயே எந்நேரமும் சிந்திக்க முடிகிறதா, என்றால் இல்லை. நமக்கு மேலே இருப்பவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று எண்ணும் நமக்கு நாம் கீழேயிருப்போரை எப்படி நடத்துகிறோம் என்று உறைப்பதில்லை. கீழே இருப்போர் என்று நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது பொருளாதார அளவில்தான். அவர்களை மதிப்பதில் என்னென்னவோ ஈகோ பிரச்சனைகள். இல்லையென்று மேம்போக்காக மறுத்தாலும்.. இந்தப் பேய் நம்மில் பலரை இன்னும் விட்டு அகலவில்லை என்றுதான் தோன்றுகிறது. என்னளவில் மாற முயற்சி செய்துகொண்டுதானிருக்கிறேன்.

56 Comments:

  1. பூனைக்குட்டி said...

    இராமநாதன் அசத்தலாக இருக்கு உங்க தீயினால் சுட்ட புண்... அனுபவம்.

    Mohandoss Ilangovan.


  2. Ganesh Gopalasubramanian said...

    இராமநாதன் நல்ல பதிவு.
    மனிதர்களின் குணாதிசயம் இதுவென்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன விசயம் பொருளாதார ரீதியானது. இதுவே அறிவு சார்ந்த ஒன்றாகவும் உண்டு. இரண்டு வருடம் வேலை பார்த்தவன் புதிதாய் சேர்ந்தவனை ஏளனமாக பார்ப்பது. (இதை நான் செய்திருக்கிறேன்). காலேஜில் ராகிங் நடப்பதும் ஒரு வகையில் இந்த கண்ணோட்டம் இருப்பதனால் தானோ நம்ம தாணு கிட்ட கேட்டாத் தெரியும்.

    மக்களுடன் பழகும் போது ஏற்றத் தாழ்வுகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அப்போ தான் மனிதனாக வாழ முடியும். இல்லையென்றால் அந்த நினைவு மனதில் பதிந்து விடும் பிறகு என்றுமே அது ஒரு பிரச்சனைதான்.

    அது சரி ரஷ்யாவிலிருந்து யாராவது ஒருத்தர் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டுட்டே இருக்காங்க.... ரொம்ப செல்வாக்கோ சாரி சொல்வாக்கோ...


  3. G.Ragavan said...

    ஆகா.....நல்ல பதிவு இராமநாதன். நாம் செய்த குற்றத்தைச் சொல்லி அடுத்தவரைச் செய்யக்கூடாது என்று சொல்வது.

    உண்மையிலேயே யாகாவாராயினும் நாகாக்க என்பது உண்மைதான்.

    நானும் சிலபல பொழுதுகளில் பேச்சை விட்டு விட்டு அப்புறம் முழித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுதெல்லாம் முன்னேற்றம் தெரிகிறது. முழுக்கத் திருந்துவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


  4. வெளிகண்ட நாதர் said...

    தன்னை தானே நிலை நிறுத்திக் கொண்டு அந்தந்த சந்தர்ப்பங்கள், சூழ்நிலைக்கேற்ப வீழ்ந்தும் தாழ்ந்தும் போவதென்பது மனித இயல்பு. ஆக அடுத்தவர் புண்படா வண்ணம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை மனமுதிர்ச்சியால் நம்மை நாமே மாற்றி கொள்ளும் முயற்சினை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்ற அரிய கருத்தினை கூறிய உங்கள் பதிவு ஒரு முத்து.


  5. துளசி கோபால் said...

    'செல்லிடத்துக்காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்

    காக்கில் என் காவாகால் என்'

    இப்படியெல்லாம் அப்பவே சொல்லிவச்சுப் போனவரை என்ன செய்ய?

    நல்ல பதிவு.


  6. மணியன் said...

    அருமையான பதிவு. அனைவரையும் தங்கள் நினைவுகளை மீள்பார்வை பார்க்க வைக்கும் பதிவு.


  7. சிங். செயகுமார். said...

    நண்பரே நல்ல பதிவு. தவறுகளை உணருபவன் ஞானியாகிண்றான்



    மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன்
    மன்னிப்பு கேக்கதெரிஞ்சவன் வீரன்
    - நன்றி கமலஹாசன்


  8. Kasi Arumugam said...

    மனந்திறந்த அலசல் பதிவு. துளசி கோபால் மேற்கோளிட்ட வள்ளுவன் வாக்குதான் நினைவுக்கு வருகிறது ராமநாதன். இன்னும் முயற்சி செய்யவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நன்றி.


  9. Ramya Nageswaran said...

    நல்லா எழுதியிருக்கீங்க இராம்ஸ்..நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் நம்மை எப்படி நடத்தணும்னு விரும்பறோமோ நாமும் அதே போல மற்றவர்களை நடத்தணும்ங்கிறது நான் கடைபிடிக்க முயலும் லாஜிக்.


  10. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    நல்ல பதிவு ராமநாதன். நல்லா எழுதியிருக்கீங்க.

    -மதி


  11. அன்பு said...

    திறந்தமனதோடு அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

    பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ, அதையே நீ பிறருக்குச் செய்
    இது யாரு சொன்னான்னு தெரியாது... ஆனாலும் எப்போதும் மனதில் இருக்கிறது... பயனளிக்கிறது.


  12. பத்மா அர்விந்த் said...

    ராமனாதன்: நான் 20 வருடங்கள் முன்பு இருந்ததைவிட இப்போது பொறுமை கூடி இருக்கிறது. ரம்யாவின் கருத்தே என் கருத்தும். இப்போது பல சிறுவர்களுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக வருவதும், சில வன்முறை தொலை காட்சி நிகழ்ச்சிகலை பார்த்து செய்யும் விபரீத செயல்களும் அமெரிக்காவில் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுகுறித்து நான் எழுதியது:http://domesticatedonion.net/blog/thenthuli.php?itemid=550


  13. யாத்ரீகன் said...

    அட.. அடுத்த பதிவுலயே பார்ம்க்கு வந்துட்டீங்க போல ;-) கலக்குங்க...

    எங்க வீட்டுக்கு முன்பு துணி சலவை செய்ய வரும் வண்ணான் தாத்தா, நான் சின்ன பையனா இருந்தாலும் அவர் என்கிட்ட பேசுற விதம் எனக்கு ரொம்பவே வித்யாசமா இருந்தது... நல்ல வேலை,எனக்கு நல்ல தாத்தா இருந்தார், அறிவுரை மட்டும் பண்ணாம முன்மாதிரியாவும் இருந்தார்...

    especial-ஆ... சாவு வீடுகளில் இறுதி காரியங்கள் பண்ணுபவருக்கு கொடுக்கப்படும் மரியாதையை கண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டுருக்கேன்...

    நம்மிலிருந்து இனிவரும் தலைமுறையாவது, ஏட்டுக்கல்வியோடு இதையும் நம்மகிட்ட இருந்து கத்துகிடனும்..

    -
    செந்தில்/Senthil


  14. rv said...

    எல்லோருக்கும் நன்றி.

    கணேஷ்,
    //நம்ம தாணு கிட்ட கேட்டாத் தெரியும்//
    அத்தைக்கு என்ன கோவமோ.. இன்னும் வரக்காணோம்.

    //இதுவே அறிவு சார்ந்த ஒன்றாகவும் உண்டு//
    படிப்பு பத்தி சொல்றீங்களா.. ஹூம், அதுவும் இருக்கத்தான் செய்யுது.

    //ரஷ்யாவிலிருந்து யாராவது ஒருத்தர் உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டுட்டே இருக்காங்க.... //
    நீங்க வேற, நேத்திக்காவது ராட் அண்ணா உருப்படியான சைட்டுக்கு வரச்சொன்னார். ஜிம் அண்ணா குடுத்தது சென்ஸார்ட் மெட்டிரியல். அதான் தூக்கிட்டேன். (தனியா ஜிமெயில்-ல பத்திரமா இருக்கு >:-) )


  15. rv said...

    ராகவன்
    //பேச்சை விட்டு விட்டு அப்புறம் முழித்திருக்கிறேன்//
    உண்மைதான். நமக்கு வேடிக்கையாக தோன்றுவது அடுத்தவருக்கு எப்படி இருக்குமோ என்று எண்ணிப்பாராமல் பேசுவதுதான் பிரச்சனையே.

    வெளிகண்ட நாதர்,
    நன்றி.. எப்படிங்க இப்படியெல்லாம் எழுதறீங்க? தப்பா நினச்சுக்காதீங்க.. :)


  16. Anonymous said...

    ராமநாதன்., நானெல்லாம் ரொம்ப ஒல்லியான உருவமா (ஒரு காலத்துல., இப்ப இல்லிங்கோ!) அப்ப., நம்மளையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்கனும்னா., சட்ன்னு கோபப் படணும்னு நானாவே ஒரு 'தியரி' செட் பண்ணிக்கிட்டேன். அதுவே பழக்கமாகி., என்கூட வேலை பார்க்கிறவங்களை, ஏதாவது தப்பு பண்ணினா காச்., மூச்ன்னு கத்திருவேன். கோபம் ஒரு உரிமை, அக்கரைன்னு நான் சொல்லுவேன்., இது வரைக்கும் நான் கத்துன யாரும் எதுத்து கத்தினதில்லை!!( நல்லா கத்திட்டு, சயந்தரம் இந்தா., போய் வேணும்னா சினிமா பாரு., பேசுனத மனசுல வச்சுக்காதன்னு தெண்டம் அழுவேன்.). ஒரே ஒரு ஆள் துள்ளினாரு., அந்த ஆள இப்ப அடக்கிப் போட்டாச்சு., தினமும் என் கத்த கேட்கிறதுதான் அவரோட விதி!!!.


  17. rv said...

    துளசியக்கா,
    //சொல்லிவச்சுப் போனவரை என்ன செய்ய//
    அவர் எல்லா நல்லதையும் சொல்லிட்டு போயிட்டார். அத நாமும் மனப்பாடம் பண்ணி பலமுறை ஒப்பிச்சிருக்கோம். ஆனா, எல்லா நேரமும் மனசுல நிக்க மாட்டேங்குதே. அதான் பிரச்சனை.

    செயக்குமார்,
    //மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன்
    மன்னிப்பு கேக்கதெரிஞ்சவன் வீரன்//
    கமலின் சில முத்துக்களில் அதுவும் ஒண்ணு.


  18. Chandravathanaa said...

    நல்ல பதிவு


  19. rv said...

    ரம்யா அக்கா,
    //நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் நம்மை எப்படி நடத்தணும்னு விரும்பறோமோ நாமும் அதே போல மற்றவர்களை நடத்தணும்ங்கிறது நான் கடைபிடிக்க முயலும் லாஜிக். //
    நான் முப்பது வரியில எழுதுனத அழகா ஒரே வரியில சொல்லிட்டீங்க.

    அன்பு,
    //பிறர் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ, அதையே நீ பிறருக்குச் செய்
    //
    இதோட corollary ஏசு சொன்னதுன்னு நினைக்கிறேன்.


  20. குமரன் (Kumaran) said...

    இராமநாதன். அதென்ன நட்சத்திர வாரத்துக்குன்னே சில தலைப்புகளை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டீர்களோ? நல்ல பதிவு. எல்லோரும் செயவது இது. மனைவியிடம் கணவன் சில நேரம் நடந்துகொள்வது கூட இதில் சேர்த்தி என்று எண்ணுகிறேன். (எங்க வீட்டுல போய் கேட்டுடாதீங்க...கதை கதையா சொல்வாங்க). :-)

    //*//இதுவே அறிவு சார்ந்த ஒன்றாகவும் உண்டு//
    படிப்பு பத்தி சொல்றீங்களா.. ஹூம், அதுவும் இருக்கத்தான் செய்யுது.*//
    பொருளாதாரம், படிப்பு மட்டும் இல்லை. அலுவலகத்தில் இருக்கும் Senior Junior விஷயமும் இப்படிதான். என்ன செய்வது...நாம் அப்படி வளர்க்கப்பட்டுவிட்டோம்.

    இந்த மாதிரி பதிவுகள் தான் நாம் இப்படி செய்கிறோம் என்பதை நமக்கே உணர்த்தி குறைந்த பட்சம் அடுத்த முறை திருத்திக்கொள்ள முயற்சியாவது செய்யவைக்கும்.

    ஆஹா...உங்க போட்டி விதிகளை மறந்து போயி எல்லாத்தையும் இந்த ஒரு பின்னோட்டத்திலயே போட்டுட்டேனே...இன்னொரு பின்னோட்டத்துக்கு விஷயம் தேடணும்...ஹும்...


  21. rv said...

    தேன் துளி,
    //இப்போது பல சிறுவர்களுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக வருவதும், சில வன்முறை தொலை காட்சி நிகழ்ச்சிகலை பார்த்து செய்யும் விபரீத செயல்களும் அமெரிக்காவில் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன//
    இதையும் பார்த்திருக்கிறேன். சில இடங்களில் அப்பா அம்மாவையே, ' நீ வாய மூடு' என்று பொதுவில் கோபப்படும் சிறுவர்களும் உண்டு.

    யாத்திரீகன்,
    //especial-ஆ... சாவு வீடுகளில் இறுதி காரியங்கள் பண்ணுபவருக்கு கொடுக்கப்படும் மரியாதையை கண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டுருக்கேன்...
    //
    நீங்கள் சொல்வது சரிதான். துப்புரவுப்பணியாளர்கள், இறுதி காரியங்கள் செய்வோர் போன்றோர் இன்றியமையாதாவர்கள் ஆயினும், அவர்கட்கு மரியாதையென்னமோ கிடையாது.


  22. rv said...

    அப்டிபோடு,
    //நானெல்லாம் ரொம்ப ஒல்லியான உருவமா (ஒரு காலத்துல., இப்ப இல்லிங்கோ!) அப்ப., நம்மளையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்கனும்னா., சட்ன்னு கோபப் படணும்னு நானாவே ஒரு 'தியரி' செட் பண்ணிக்கிட்டேன். //
    டிஃபென்ஸ் மெக்கானிஸமாக கோபத்தை வெளிபடுத்துவது நிறைய பேரிடம் உண்டு.

    //ஒரே ஒரு ஆள் துள்ளினாரு., அந்த ஆள இப்ப அடக்கிப் போட்டாச்சு., தினமும் என் கத்த கேட்கிறதுதான் அவரோட விதி!!!.
    //
    அடப்பாவமே.. சரி, சமையல்னு ஒரு ப்ளாக் வச்சுருக்கீங்களே.. அதெல்லாம் அவரோட குறிப்புகளா?


  23. rv said...

    குமரன்,
    //சில தலைப்புகளை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டீர்களோ//
    நேத்தியது மட்டும்தான் போன வாரம் எழுதியது. இன்னியது நேத்து இராத்திரி தருமி கூட பேசிட்டு எழுதுனது. அதனால, கிட்டத்தட்ட எக்ஸ்டெம்போர் தான். அதனால் தான் வரிகளும் வார்த்தைகளும் அளவுக்கதிகமாவே இருக்கும். கவனிச்சு பாத்தீங்கனா.. :)

    //இந்த ஒரு பின்னோட்டத்திலயே போட்டுட்டேனே//
    நீங்க போற ஸ்பிடுல மிச்சவங்கல்லாம் அதைரியப்பட்டு போயிட்டாங்க போல. அதான் எல்லாரும் ஒண்ணோட நிறுத்திகிட்டாங்க.


  24. rv said...

    மோகன்தாஸ், மணியன், காசி, மதி, சந்திரவதனா

    நன்றி


  25. Anonymous said...

    //அடப்பாவமே.. சரி, சமையல்னு ஒரு ப்ளாக் வச்சுருக்கீங்களே.. அதெல்லாம் அவரோட குறிப்புகளா?//

    சேச்சே... நான் அவ்வளவு கொடுமைக்காரியில்ல. சமையல்ன்ற பெரிய்ய்ய வேலை எனக்கு.... வீட்ட சுத்தம் பண்றது, துணிகளை மெஷின்ல போடறது, பாத்திரங்களை மெஷின்ல போடறது, அப்புறம் குட்டியப் பார்த்துக்கிறது இந்த மாதிரி சின்னச் சின்ன வேலையெல்லாம் அவருக்கு.


  26. குமரன் (Kumaran) said...

    அப்டிபோடு...எங்க வீட்டிலயும் இதே கதைதான். பெரிய்ய்ய வேலையெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. நீங்க சொன்ன மாதிரி சின்ன சின்ன வேலையெல்லாம் எனக்குதான்.


  27. Anonymous said...

    குமரன்., பாதிக்கப்பட்ட ஆண்கள்... சங்கம் வைக்கிற அளவுக்கு சேர்ந்திருவிங்க போலருக்கே?. நாங்கள் விளையாட அனுப்பி வைக்கப் பட்ட பொம்மைகள் ஆண்கள். (என்ன முணுமுணுப்பு எத்தனை வருடங்கள் நாங்கள் அப்படியிருந்தோம்?). ஆனால் பாவம்... குமரன் போன்ற அப்பாவி ஆண்கள்தான் எங்களிடம் மாட்டுவது. எஞ்சாய்!!!.


  28. Anonymous said...

    குமரன்., உங்க பிளாக் லிஸ்ட் பார்த்தா., உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும் போலருக்கே?., கொஞ்சம் வீட்டு ஃபோன் நம்பரக் குடுங்க!.


  29. rv said...

    அப்டிபோடு,
    நானும் உங்க பின்னூட்டத்த ரெண்டு மூணு தடவை படிச்சேன். எனக்கு புரிஞ்சது..

    அப்டிபோடு: 1

    பாவப்பட்ட பொம்மை: 4

    ஏதோ, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு உதைக்குதே :P

    //பிளாக் லிஸ்ட் பார்த்தா., உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும் போலருக்கே?., கொஞ்சம் வீட்டு ஃபோன் நம்பரக் குடுங்க!. //
    குமரன், இது தேவையா, அட போங்கையான்னு பாடத்தோணுமே???


  30. குமரன் (Kumaran) said...

    நிச்சயமா ராமநாதன்...ஆஹா மாட்டிகிட்டோமேன்னு தோணிச்சு...தப்பித்தவறிக் கூட போன் நம்பர் கொடுக்க மாட்டேனே....ஏற்கனவே பாட்டு பாடிகிட்டு இருக்காங்க வீட்டுல.


  31. Anonymous said...

    //தப்பித்தவறிக் கூட போன் நம்பர் கொடுக்க மாட்டேனே//

    வுட்பெர்ரி, மினிசோட்டா., ஃபோன் டேட்டா பேஸ்ல ஆறே ஆறு குமரன் தான் ., கண்டுபிடிக்கிறது அப்படியொன்னும் கஸ்டமில்ல... சார்!.


  32. rv said...

    அடாடா,
    கன்ஃபைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா வரிசையில் இன்னொரு துப்பறியும் புலியா..

    புல்லரிக்குது அப்டிபோடு.. :))

    நான் கேட்ட 1: 4 கணக்க வாபஸ் வாங்கிக்கறேன்.. :)

    குமரன்,
    ஆண்டவன் உங்கள் மீது கருணை கொள்வாராக..


  33. தாணு said...

    ராமநாதன்
    பதிவை அப்பவே வாசிச்சுட்டேன். பின்னூட்டம் போடறதுக்குள் `அறுவை' வேலை வந்திடுச்சு. அதுக்குள்ளே பார்த்தா எல்லோரும் என்னை மாப்பிள்ளை பெஞ்சுக்குத் தள்ளீட்டாங்களே!

    தாணுவின் கோபம்ங்கிறதைப் பத்தி ராம்கி, சித்தன் இன்ன பிற நண்பர்களிடம் கேட்டால் ஒரு Bailey size புத்தகமே போடுருவாங்க. அதனால அடக்கமான ஆளா காட்டிட்டு , அமைதி காத்துவிட்டேன், இதற்கு விமர்சனம் எழுதாமல்!!!


  34. குமரன் (Kumaran) said...

    ஆஹா...நெஜமாவே மாட்டிகிட்டோம் போல இருக்கே...வீட்டுல ஏதாவது பேசி ரெடி பண்ணி வைக்கணும்.

    ஆண்டவன் (இல்லாட்டி அப்டிபோடு) என்மீது கருணை கொள்வாராக


  35. சிவா said...

    உண்மை தான் ராமநாதன். சில வினாடி கோபத்தினால், பல சமயம் நிறைய பேர் மனதை நோகடித்து விடுவோம். தப்பென்று உணர்ந்தாலும், உடனே நம் ஈகோ இடம் கொடுக்காது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நிறைவான பதிவு.


  36. சிவா said...
    This comment has been removed by a blog administrator.

  37. rv said...

    அத்தை,
    //அதுக்குள்ளே பார்த்தா எல்லோரும் என்னை மாப்பிள்ளை பெஞ்சுக்குத் தள்ளீட்டாங்களே!
    //
    மாப்பிள்ள பெஞ்சுல இருக்கறவங்க விடற சவுண்டுதான் எப்பவும் ஜாஸ்தியா இருக்கும்..

    //ராம்கி, சித்தன் இன்ன பிற நண்பர்களிடம் கேட்டால் ஒரு Bailey size புத்தகமே //
    அவங்கள்லாம் நம்ம பக்கம் வரதில்ல. நீங்க தைரியமா எழுதலாம். :)

    சிவா, நன்றி


  38. பாலராஜன்கீதா said...

    இராமநாதன் மன்னிக்கவும்
    இந்தப்பின்னூட்டம் அப்டிப்போடுக்கு

    // ஒரே ஒரு ஆள் துள்ளினாரு., அந்த ஆள இப்ப அடக்கிப் போட்டாச்சு., தினமும் என் கத்த கேட்கிறதுதான் அவரோட விதி!!!. //

    அப்டிப்போடு உங்கள் இயற்பெயரா / புனைப்பெயரா / இல்லை காரணப்பெயரா?:-))


  39. rv said...

    பாலராஜன்கீதா,
    அப்டிபோடுவ இப்டிபோடு போட்டீங்களே..

    கொஞ்ச நேரமா ஆளக்காணோம். மினசோட்டா டேட்டாபேஸ் ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க இருக்கற ஏரியால டேட்டாபேஸ் இல்லியான்னு வெரிஃபை பண்ணிக்கோங்க.. :))


  40. Anonymous said...

    //இயற்பெயரா / புனைப்பெயரா / இல்லை காரணப்பெயரா?//

    பாலராஜன் கீதா.... மனைவியின் பெயரை தன் பெயருடன் தாங்கியிருக்கிறீர்கள்தானே? உங்களுக்கு பதில் இங்கே., http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html
    (பின்னூட்டத்தில்) பின்ன எப்பத்தான் நீங்கெல்லாம் என் பதிவைப் படிப்பது?.


  41. Anonymous said...

    //நான் கேட்ட 1: 4 கணக்க வாபஸ் வாங்கிக்கறேன்.. //

    அத்து!!!


  42. பாலராஜன்கீதா said...

    இராமநாதன் மறுபடியும் மன்னிக்கவும்.
    இந்தப் பின்னூட்டமும் அப்டிப்போ(ட்)டு(த்தா)க்குத்தான்

    // பாலராஜன் கீதா.... மனைவியின் பெயரை தன் பெயருடன் தாங்கியிருக்கிறீர்கள்தானே? உங்களுக்கு பதில் இங்கே., http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html
    (பின்னூட்டத்தில்) பின்ன எப்பத்தான் நீங்கெல்லாம் என் பதிவைப் படிப்பது?. //

    அப்டிப்போடு,

    தங்களின் கேள்விக்குப்பதில் ஆம்.

    தாங்கள்

    //வணக்கங்க! என் பெயர் ஒரு மரத்தோட பெயருங்க! நான் இருக்கறது காட்டில இல்லைங்க... USA, DELAWARE லங்க...சரி! //

    என்று எழுதியதிலிருந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்:-))


  43. கீதா said...

    அருமையான பதிவு.

    என்னதான் கோவத்தை அடக்கி வச்சிருந்தாலும் சில சமயம் தலைக்கு மேலே ஏறி தாண்டவமாடுது. எக்குத்தப்பா வார்த்தைய விட்டுட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டி இருக்கு. நானும் முயற்சி செய்துக்கிட்டே தான் இருக்கேன். ம்ம்

    சுவாமி விவேகானந்தர்(அப்படித்தான் நியாபகம்) ஒரு கருத்து சொல்லி இருக்கார். மனசு நீர் நிறைஞ்ச ஒரு கண்ணாடி தொட்டி போல, அடிக்கடி சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கவேணும், இல்லைன்னா பாசி படிஞ்சு போயிடும்.

    அடிக்கடி நாம செஞ்சது சரியா? தப்பா? அப்படின்னு நம்மை நாமே கேள்வி கேட்டு திருத்திக்கணும்.


  44. Anonymous said...

    பாலராஜன் கீதா., நன்றி!. இந்த நன்றி நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை படிப்பதற்கல்ல... என் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னதற்காக.


  45. Sundar Padmanaban said...

    இராமநாதன்,

    பாராட்டுகள் இந்தப் பதிவிற்கு.

    ஒரு சின்ன திருத்தம்

    //அந்தப் புரிதலெல்லாம் உண்டு //

    *புரிதல்* என்றால் ஒரு காரியத்தைச் செய்தல்! புரிந்து கொள்ளல் என்பதே சரியான பிரயோகம். எல்லாரும் *புரிதல்* என்று புரிந்து கொள்ளாமலேயே எழுதுகிறார்கள். :)

    இதே போல பரவலாகத் தவறாகப் பிரயோகிக்கப் படும் இன்னொரு வார்த்தை 'என்னைப் பொறுத்தவரை' என்பது. அது 'பொருத்த வரை' என்றுதான் இருக்க வேண்டும்.

    ஹரியண்ணாவிடம் கற்றுக்கொண்டது - உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன்.

    அன்புடன்
    சுந்தர்.


  46. rv said...

    கீதா,
    நன்றி

    //மனசு நீர் நிறைஞ்ச ஒரு கண்ணாடி தொட்டி போல, அடிக்கடி சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கவேணும், இல்லைன்னா பாசி படிஞ்சு போயிடும்.
    //
    அருமையான கருத்து.

    அடிதடி அப்டிபோடு, பாலராஜன்கீதா,
    என்ன சமாதான கொடி பறந்தாச்சு போலிருக்கு? நல்லது..


  47. rv said...

    சுந்தர்,
    புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன். இனிமே மாத்திக்கிறேன்.

    நன்றி..


  48. rv said...

    செல்வநாயகி,
    நன்றி.


  49. Sundar Padmanaban said...

    //புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன்//

    அய்யோ. தலைவாஆஆஆஆஆ.. "புரிதல்"னா "செய்தல்". புரிந்து கொள்ளுதல் இல்லை!

    "என் புரிதல்கள்"னா "நான் செய்த செயல்கள்" என்று அர்த்தம். "புரிந்து கொள்ளல்" என்று முழுவதுமாக எழுதவேண்டும் என்று குறிப்பிட்டேன்! :)

    நன்றி.


  50. Sundar Padmanaban said...

    //புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் அர்த்தம் பண்ணிகிட்டேன்//

    ஓஹோ. "புரிதல்னா புரிந்து கொள்ளல்னு இங்க வலைப்பூக்கள் பாத்துதான் *தப்பா* அர்த்தம் பண்ணிகிட்டேன்"னு சொல்ல வர்றீங்களா? சரிதான். நீங்க சொன்னத நான் சரியா புரிஞ்சுக்கலை! ஸாரி! :(


  51. rv said...

    ஆமாம் சுந்தர்,
    //*தப்பா* //
    விட்டு போச்சு.

    மீண்டும் நன்றி..


  52. பரஞ்சோதி said...

    அருமையான பதிவு.

    நல்லா சொல்லியிருக்கீங்க. எல்லோருமே தவறு செய்தவர்கள் தான். நான் தெரிந்தும் இன்னமும் செய்து வருகிறேன். நாவினால் மட்டுமே சுட வில்லை, பலவகையில் செய்து வருகிறேன், அவ்வாறு இருக்கக்கூடாது என்றாலும் நம்மை அறியாமல் ஆத்திர அவசர புத்தியால் நடந்து விடுகிறது.

    கிரிக்கெட் போட்டிகளில் நான் நிறைய முறை அவ்வாறு நடந்திருக்கிறேன். பிடிக்காதவன் பீல்ட் செய்தால் வேகமாக பந்தை அவன் கையை உடைக்கும் அளவுக்கு வீசுவது, என்னை அவுட் ஆக்கிய ஒருவனை பவுன்சர் வீசி, அவன் பற்களை உடைத்து ரத்தக்களரியாக்கி இருக்கிறேன், இன்னமும் அவனை பார்க்கும் போது மனசு குத்தும்.


  53. rv said...

    பரஞ்சோதி,
    நன்றி.. நீங்கள் சொல்வதைப் போல எல்லோரும் செய்திருக்கிறோம். ஆத்திரத்தில் புத்தி மழுங்கிவிடுவது உண்மைதான்.


  54. Radha Sriram said...

    நல்லா சொல்லிருகிஙக வார்தைகள கொட்டிட்டா அள்ள முடியாதுன்னு பெரியவஙக சொல்லுவாஙக இல்லையா??எவ்வளவு உண்மை?? நல்ல செல்f அனல்ய்சிங் பதிவு.....எவ்வளவு பின்னூட்டம்??அடெஙகப்பா.....ஜமாயிஙக

    ராதா ஸ்ரிராம்


  55. rv said...

    இராதா ஸ்ரீராம்,
    நன்றி..

    //எவ்வளவு பின்னூட்டம்??//
    ஏங்க இப்டி கண்ணு போடறீங்க? பாருங்க, அதனால தான், நேத்திய போட்டோ பதிவுக்கு யாருமே வரமாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. :)


  56. குமரன் (Kumaran) said...

    நான் உண்மையைச் சொல்கிறேன் இராமநாதன். அந்த போட்டோ பதிவுக்கு என்ன பின்னூட்டம் எழுதுறதுன்னு நிஜமாவே தெரியலை. நானும் யோசிச்சு யோசிச்சு பாக்கறேன்.

    ரொம்ப வேலையோ? நட்சத்திர வாரத்துல இவ்வளவு வேலை வந்திருக்கக் கூடாது தான். பாவம் நீங்க.


 

வார்ப்புரு | தமிழாக்கம்