மருதைக்கு போலாமா? - 1: திண்டுக்கல், இராஜகாளி, பழநி

லட்சக்கணக்கான வாசகர்களின் (சரி சரி) அன்புக்கட்டளைக் கிணங்கி இதோ அடுத்த பயணத் தொடர். இதுவும் முந்தைய குத்தாலம் போன கதை போல் மெகா வெற்றித்தொடர் (?) ஆகுமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. :) இந்த முறை தொட்டுச்செல்லப் போகும் இடங்கள்: திண்டுக்கல், தெத்துப்பட்டி, பழநி, குச்சனூர், மதுரை: மீனாட்சி, ஆதி சொக்கநாதர் (மீனாட்சி கோயிலுக்கு முந்தியது), கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், கூடலழகர் (கள்ளழகர் இல்லை, வேற பழமையான பெருமாள் இவர்). இனி பயணத்தை தொடங்குவோமா?

வருடமொரு முறை பழநி செல்வதுண்டு. அதுபோலவே இந்த வருடமும் கிளம்புகையில் கூடவே, பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் மதுரைக்கும் சென்று திரும்புவோம் என்று முடிவு செய்தோம். என்னைப் பொறுத்தவரை திருப்பதியும் பழநியும் எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடங்கள். பழநி என்ற பேரைக்கேட்டாலே தனியாய் கே.பி.எஸ் வந்து நம் பின்மண்டையில் வெண்கல குரலெடுத்து 'பழம் நீ அப்பா' என்று ரீ-ரெக்கார்டிங் பாடுகிறார் இல்லையா? முருகப் பெருமானும் ஏ.பி.என் படங்களில் வருவது போல் சாதாரணமாய் மிகவும் accessible mood-இல் இருக்கும் இடம் பழநி என்று தோன்றுவதுண்டு எனக்கு. திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தாண்டினால் பழநி. சுமார் நான்கு மணி நேரப் பயணம்.

திண்டுக்கல்லை பற்றி ஒரு விஷயம். இத்தனை வருடங்கள் பல முறைகள் (30-ஆவது இருக்கும்) திண்டுக்கல் சென்றிருக்கிறோம். ஆனால் எனக்கு தெரிந்த திண்டுக்கல் பை-பாஸ்ஸோடு முடிந்துவிடும். ஊரின் உள்ளே ஒருமுறைகூட போனதே கிடையாது (இந்த லீவில் முதல் தடவையாய், ஊருக்குள் சென்றேன் வேறு விஷயமாக). சேவரிட் சேமியாவின் பிரம்மாண்ட விளம்பரத்தைத் தாங்கிய பாலத்தை தாண்டி சென்று கொண்டேயிருந்தால் பெங்களூர் சாலையையும் கொடைக்கானல் சாலையையும் தாண்டி நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் பழநி சாலை.

சிறிது நேரத்திலேயே ரெட்டியார் சத்திரம் என்று நினைக்கிறேன். இது ஒரு சிறிய கிராமம். இந்த ஊர்க்காரர்கள் யாராவது இருந்தால் உதைக்க வராதீர்கள். பயணத்தில் ஒரு நிமிடம் கண்மூடினால் இந்த ஊர் வந்து போனதே உங்களுக்கு அநேகமாக தெரியாது. ஊரைத் தாண்டின உடனே, இடப்பக்கத்தில் மறைவாய் கோபிநாத சுவாமி திருக்கோயில் நுழைவு வளைவு இருக்கும். இந்த வளைவில் நுழைந்து வயல்வெளி, களத்துமேட்டு எல்லாம் கடந்தால் சிறுது தூரத்தில் தெத்துப்பட்டி என்னும் குக்கிராமம். இராஜகாளியம்மன் கோயில் இங்கே மிகவும் பிரசித்தமானது. இராஜகாளியம்மன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இருப்பதாய்க் கூட கேள்வி. இந்தக் காளியின் ஸ்பெஷாலிடி வாகன யோகம். வந்து போவோருக்கு கண்டிப்பாய் அடிக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாகன விஷயம் என்னவோ எங்கள் விஷயத்தில் நடக்கத்தான் செய்தது. ஒருமுறை அல்ல, இரு முறைகள். என் பெரியப்பாவும் இதையே தான் சொன்னார். ஆனால், நம்பிக்கை வரவில்லை. பின்ன, நாங்கள் கேட்டது E320. 'ஏண்டா, உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல' என்று காளி நினைத்துவிட்டாள் போல. கேட்டத கொடுக்காட்டியும், புதுசு என்னவோ கொடுக்கத்தான் செய்தாள். இந்த முறை என்ன செய்யப்போகிறாளோ தெரியவில்லை. மத்தபடி மிகவும் அமைதியான கோயில், கூட்டமெல்லாம் அறவே கிடையாது. ஆடி மாதம் எல்லா காளி கோயில்களையும் போல் கும்பல் இருக்கும் என்று சொன்னார்கள்.

அங்கிருந்து திரும்ப இந்த குண்டுகுழி ரோட்டில் வரத்தேவையில்லை. மதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் சேர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒன்றும் ஆஹா ஓஹோவென்று இருக்காது என்றாலும், மேற்சொன்ன வயல்வெளி நடுவே வரத்தேவையில்லை. வயல்வெளி ரோட்டிலே இயற்கையை ரசித்தபடி பயணம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே, இவன் என்ன உளறுகிறான் என்று நினைப்போர்க்கு ஒரு எச்சரிக்கை. டப்பா ரோட்டில் வயலைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்வது ஒரு 10 நிமிடம்..மிஞ்சிப் போனால் அரைமணி சுகமாயிருக்கலாம். கிராமத்து மண்வாசனை வேண்டும் என்று மெனக்கெட்டு டப்பா ரோட்டில் திரும்பிவிட்ட பின் இது சரியில்லை என்று சொல்வதற்கு ஈகோ இடம் கொடுக்காது. கடுகடு சிடுசிடுவென்று சக பயணியரை முறைத்துக் கொண்டிருப்பதுதான் கடைசியில் நடக்கும். இது என் அனுபவத்தில் சொல்வது. Zen & the Art of Motorcycle Maintenance படித்த பலரைப்போலவே, பிர்ஸிக்கின் back-road புராணத்தில் மயங்கி சில மாதங்களுக்கு நானும் இந்த மாதிரி ஆர்வமாய் திரிந்து கொண்டிருந்தேன். அந்த ஆர்வத்தையெல்லாம் பஞ்சராக்கி விட்டது சில அனுபவங்கள். இந்தியாவில் இதெல்லாம் ஒத்துவராது என்பது என் எண்ணம். NH வேண்டாம் குறைந்தபட்சம் SH என்று கண்ணில் பட்டாலே, இந்த பாக்யராஜ் படங்களில் வருவது போல் கிராமத்திற்கு சென்று இறங்கலாம் என்பது போன்ற அசட்டு ஆசையையெல்லாம் மறந்து மெயின் ரோட்டில் சேர்ந்து விடுங்கள். கிராமங்களையே சொந்த ஊராக கொண்டவருக்கு இது பொருந்தாது. குண்டோ குழியோ, சுற்றாரைப் பார்க்க போகத்தான் வேண்டும். ஆனால், தேவையற்று இழுத்துக் கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

இன்னுமொரு விஷயம். ரோட்டில் வழி கேட்கும் போது அவர்கள் சொல்வதை கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே காதில் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே கூறுவது கிடையாது. நமக்கு உதவவேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பலரும் சொல்வர். வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் நம் நாட்டினருக்கு, குறிப்பாய் கிராமப்புற மக்களுக்கு இணையே கிடையாது. ஆனால், அவ்வாறு உதவுவதாய் நினைத்து சொல்வதில் பல சமயம் நமக்கு கசப்பான அனுபவமே கிடைக்கும். ஒரு முறை, இப்படித்தான் அருமையான NH-45-ல் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிறுத்தி திருக்கோவிலூருக்கு வழி கேட்டபோது ஒருவர் கொளுத்திவிட்டார். 'ஏன் சார், தேவையில்லாம் சுத்தறீங்க. இந்த குறுக்கு ரோட்டில் போனா ஒரு 30 கி.மீட்டர் கம்மி!". உடனே என் தலையில் விளக்கெறிந்தது! எதற்கு அநாவசியமாக சுத்தவேண்டும் என்று! எதற்கும் 'ரோடு எப்படீங்க இருக்கும்?' ன்னு கேட்டதற்கு 'சூப்பரா இருக்கும் சார். மெயின் ரொடு மாதிரித்தான்' என்று சொன்னார் அந்தப் புண்ணியவான். திருப்பு வண்டியை. விடு கிராமத்திற்குள் என்று திரும்பிய முட்டாள்தனத்தை நினைத்து இன்றும் சிரிப்பு வருகிறது. பல முறை இந்த மாதிரி நடந்திருக்கிறது.

சரி, அதை விடுங்கள். மதுரை ரோட்டின் வழியே ஒட்டன்சத்திரம் வந்தடைந்தோம். பல ஊர்களைப் போல் பஸ்-ஸ்டாண்டு தான் பிரதானம். அந்த நெரிசலைத் தாண்டினால், பழநி ரோடு தான். பழநி சீக்கிரமே வந்துடும். ரெடியா இருங்க.

(தொடரும்)

17 Comments:

  1. தருமி said...

    வாங்க சீக்கிரம் மருதய்க்கு.....


  2. Balaji-Paari said...

    Pazhani patri Ezhunthunga...
    Appadiye athai naan continue seiren..:)


  3. Boston Bala said...

    ---'ரோடு எப்படீங்க இருக்கும்?' ன்னு கேட்டதற்கு 'சூப்பரா இருக்கும் சார். மெயின் ரொடு மாதிரித்தான்'---

    உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறதா :-)))


  4. rv said...

    தருமி,
    மருதய்க்கு வர இன்னும் கொஞ்சம் நேரமாகும்.. மெகாத்தொடராச்சே, அவ்ளோ சீக்கிரம் முடிச்சிட முடியுமா?? ;))

    மெயில் அனுப்பினேனே, வந்துதா?

    பாலாஜி-பாரி,
    பழநிக்காரரா நீங்க? தமிழகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று பழநி. ஏதோ ஒரு வகை அமைதியும் அழகும் இருக்கிறது அங்கே.. சீக்கிரம் நீங்களும் உங்க ஊரப் பத்தி எழுதுங்க.

    பாஸ்டன் பாலா,
    இந்த மாதிரி ஒரு தடவை இல்லீங்க. பல முறை நடந்திருக்கு. ஒரு தடவை காஞ்சிபுரம் சென்று திரும்புகையில் நடு இரவில் இந்த மாதிரி ஏதோ ஒரு ரோட்டில் புகுந்துவிட்டு, அத்துவான காட்டில் வண்டி டயர் பஞ்சராகி முழித்த அனுபவமும் இருக்கிறது. :))


  5. Anonymous said...

    இப்பதான் பார்த்தேன்., எங்க ஏரியாவில் வலம் வந்திருக்கிறீர்கள். திருச்சியிலிருந்து பழனி செல்லும் போது மணப்பாறை தாண்டினால் வையம்பட்டி என்ற ஊர் வரும்., அதைத் தாண்டினால் வரும் ஊர்களிலிருந்து பழனிவரை எங்கள் வேர்கள் விரவியிருக்கின்றது. வையம்பட்டி தாண்டியபின் சாலை இரு புறமும் உள்ள புளிய மரங்கள் எங்கள் மரங்கள் (ஏலத்தில் எடுப்பதுதான்., ஏதோ இந்தியா முழுவதும் புளி ஏற்றுமதி செய்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். இதெல்லாம் சும்மா ஒரு கவுரவத்திற்கு. குடிக்க நீர், புசிக்க உணவில்லாவிட்டால்கூட பாதகமில்லை., ஆனால் ஏலத்தில் வெல்ல வேண்டும். இப்படி ஒரு கூட்டம் நீங்கள் கடந்துவந்த பாதையில் இருக்கின்றது., இதையெல்லாம் பற்றி விரிவாக எழுத வேண்டும். அதைவிடுங்கள்)., அதையும் தாண்டிவரும் போது வரும் ஒரு குக்கிரமத்தில் என் உயிர்கள் சிதறிக்கிடக்கின்றன (பதறிவிடாதீர்கள்., என் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்). திண்டுக்கலில் அண்ணன்., இன்னும் பல சொந்தம். திண்டுக்கல் தாண்டியவுடன் ஒட்டன்சத்திரம் ரோட்டில் 'முருக பவனம்' என்ற வீடுண்டு., பேருந்தில் வந்தால் அது ஒரு நிறுத்தம். ('முருக பவனம் இறங்கு என்பார்கள்). அது எங்கள் அத்தைவீடு. தெத்துப்பட்டியில் இருக்கிற காளியும் உறவுதான். வார்த்தைகளில் வடிக்கமுடியா நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் பதிவு. மிக்க நன்றி. இத்தொடரை ஆவலுடன் படிப்பேன் என்பதை சொல்லத் தேவையில்லை. கலக்குங்கள்.


  6. துளசி கோபால் said...

    //---'ரோடு எப்படீங்க இருக்கும்?' ன்னு கேட்டதற்கு 'சூப்பரா இருக்கும் சார். மெயின் ரொடு மாதிரித்தான்'---//

    நடு இரவுகூட இல்லை. நல்லப் பட்டப்பகல்லே தாம்பரத்துலே இருந்து காஞ்சீபுரம் போனப்ப பட்ட பாடு இருக்கே! அப்பப்பா......

    நல்லா இருக்கு தம்பி!


  7. Anand V said...

    //தாம்பரத்துலே இருந்து காஞ்சீபுரம்

    காஞ்சிபுரம் வருவதை பற்றி முன்னமே சொல்லி இருந்தால்
    கொஞ்சம் களி செய்து கொண்டு வரச் சொல்லி இருப்பேனே.


  8. rv said...

    apdipodu,
    உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் இருக்குன்னு சொன்னீங்களே. NH-லேர்ந்து திரும்பினதுக்கு அப்புறமா?

    //இரு புறமும் உள்ள புளிய மரங்கள் எங்கள் மரங்கள் //
    இதெல்லாம் கூட ஏலத்தில் எடுக்க முடியுமா? இது எனக்கு நியூஸ். ஏலத்தில் எடுத்தா பராமரிச்சுகிட்டே, அதிலிருந்து வரும் வரும்படி நமக்கா?

    தொடர்ந்து வாங்க.


  9. rv said...

    துளசியக்கா,
    நன்றி. தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வந்து, பாலத்திற்கு அப்புறம் வலப்பக்கமா திரும்பி தானே காஞ்சிபுரம்? அந்த ரோடு முன்னாடி ரொம்ப மட்டமா இருந்திச்சு. இப்ப ரெண்டு மூணு வருஷமா நல்லா போட்டிருக்காங்க.

    ஆனந்த்,
    என்ன களி? திருவாதிரை அன்னிக்கு பண்ணுவாங்களே? அதுவா? காஞ்சிபுரத்தில விசேஷமா அது?


  10. G.Ragavan said...

    அடுத்த தொடர் தொடங்கியாச்சா? வாழ்த்துகள் ராமநாதன்.

    திண்டுக்கல் வழியாக மட்டுமே நான் போயிருக்கிறேன். ஆகையால் நீங்கள் சொல்கின்ற விஷயங்கள் எனக்குப் புதிதாகவே இருக்கும். தெரிந்து கொள்ளும் ஆவலில் அடுத்த பதிப்பிற்குக் காத்திருக்கிறேன்.


  11. rv said...

    நன்றி ராகவன் சார்.


  12. Anonymous said...

    இராமநாதன், 'தென்னை' போன்ற மரங்களை வருடா, வருடம் குத்தகைக்கு விடுவார்கள். ஆனால் சாலையின் இருமருங்கிலும் உள்ள புளிய மரங்களை 10 ஊர்., 15 ஊர் என்று ஏலம் விடுவார்கள். அதை ஏலத்தில் எடுத்தால் பராமரிப்பது சற்று சிரமம்தான். அந்தந்த ஊர் மக்கள் புளியம் பழங்களை பறித்து விடுவார்கள். ஒன்றும் சொல்ல முடியாது., மேற்பார்வை பார்ப்பதுகூட சாலையில் நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். மரங்களுக்கு பின்புறம் உள்ள நிலங்கள் வனத்துறைக்கோ அல்லது அடுத்த ஊர் கரார்களுக்கோ சொந்தமாக இருக்கும் என்பதால், இரு சக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டே பார்வையிட வேண்டியதுதான். எங்கள் ஊர் மற்றும் பக்கத்தில் உள்ள சில ஊர்கள் வரை மட்டுமே ஒழுங்காக பராமரிக்க முடியும். ஏலம் எடுத்த மரங்களிலிருந்து புளி பறித்து., காய வைத்து, விதைகளை நீக்கிய பின் வியாபரிகள் வந்து வாங்கிக் கொள்வார்கள். (எங்கள் வீட்டில்., சொந்த பந்தங்களுக்கு கொடுத்து எஞ்சியுள்ளவையே விற்பனைக்கு). கூட்டிக் கழித்துப் பார்த்தால் அப்படியொன்றும் லாபம் இருக்காது. ஆனால் அதை ஏலம் எடுக்கும்போது நடக்கும் பிரச்சனைகள் கணக்கிலடங்காது. எல்லாவற்றையும் மீறி அடித்துக் கொண்டு எடுப்பது ஏன் என்றால்., யாரோ ஒரு புண்ணியவான் எங்கள் குடும்பத்தில், என்றோ ஒருநாள் ஆரம்பித்து வைத்ததை விட மனமில்லை.

    திண்டுக்கல்லை விட்டு வெளியே வந்தவுடன் உள்ளது 'முருக பவனம்'.


  13. rv said...

    apdipodu,
    தகவலுக்கு நன்றி. இத்தன நாள் எனக்கு இதப் பத்தி தெரியவேயில்ல பாருங்க.

    //ஏலம் எடுக்கும்போது நடக்கும் பிரச்சனைகள் கணக்கிலடங்காது.//
    கௌரவப் பிரச்சனையாயிடுமில்ல.. இன்னுமும் இந்த மாதிரி விஷயமெல்லாம் கிராமங்களிலே நடக்கிறது நேர்ல பாக்கறச்சே அதிசயமா இருக்கு.

    இப்படித்தான் பாருங்க, போடியில வீட்டு கல்யாணத்துக்கு போனோம். மாப்பிள்ளைக்கு யார் மாலை போடறதுன்னு சொந்தக்காரங்கக்குள்ள சண்டை வந்துருச்சு. யாரு போட்டா என்னன்னு நம்மல்லாம் சர்வசாதாரணமா எடுத்துப்போமில்ல? ஆனா, அங்க அதுவே மரியாதைப் பிரச்சனை ஆயிடுச்சு. அப்ப ஒரு வயசான அம்மா தன் மகன்ட சொன்னாங்க பாருங்க, 'டேய், நீ போடுடா மாலைய.. எவன் தடுக்குறான்னு நா பாக்குறேன்'னு அவங்க சொன்ன தொனில எங்களுக்கு சர்வநாடியும் அடங்கிப்போச்சு! ஆனா, அந்தம்மா மட்டும் மிரட்டலேன்னா சின்னபசங்களெல்லாம் அடிதடிக்கே போயிருப்பாங்க. நல்ல அனுபவம் அது.


  14. துளசி கோபால் said...

    அட! ராமநாதா!

    என்னான்னு சொல்றது? இப்ப எதுக்காக 'போடி'?

    எங்க மாமியார்மாமனார் ஊராச்சே. ஒருவேளை அந்த வயசான அம்மா எங்க மாமியார்தானோ?:-)))

    அப்புறம் என்னைக் குத்தம் சொல்றது? எந்த ஊரைச் சொன்னாலும் அங்கே 'இருந்துருக்கேன்னு'


  15. rv said...

    ஆஹா அக்கா,
    இந்த விளையாட்டுக்கு நா வரலே..
    ஆத்தூர்ல ஒரு வருஷம் வேற இருந்திருக்கங்கறதும் எனக்கு தெரிஞ்சுபோச்சு!

    இது எப்படி? பூலோகத்துல மட்டும்தானா? இல்ல, சந்திரன், செவ்வாய்னு வேறு கிரகங்கள்லயும் ஒரு ரெண்டு வருஷம் இருந்திருக்கீங்களா? முன்னாடியே தெரிஞ்சுக்கறது நல்லதில்ல. அதான் கேட்டேன்..


  16. rv said...

    சந்தடி சாக்கில மாமியாருக்கு ஒரு பஞ்ச் கொடுத்திட்டிங்க.. பாவம், கோபால் சார் வெளியூர்ல இருந்துகிட்டு நீங்க மாமியார் மெச்சும் மருமகன்னு நினச்சுகிட்டு இருக்கபோறாரு.. :))


  17. Anonymous said...

    You should have added pictures too...good job


 

வார்ப்புரு | தமிழாக்கம்