பொதுவாக நிறைய இந்திப்படங்கள பார்க்கும் வழக்கமில்லை. பெரும்பாலான இந்திப்படங்களில் show இருக்குமே தவிர substance இருக்காது என்பது என் கருத்து. உதாரணம், கரண் ஜோஹர் படங்கள். பெரும்பாலான தமிழ் படங்களும் ஒன்றும் பெரிய தரம் வாய்ந்தவை இல்லையென்றாலும், நம் தாய் மொழியில் பார்க்கும் போது அத்தகைய அபத்தங்களை பொறுத்து கொள்வது சுலபம் என்பது என் கருத்து. நேற்று இரவு ராம் கோபால் வர்மா இயக்கம், அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்கள், "தி காட்பாதர்" திரைப்படத்தின் இந்திய ஆக்கம், மிகப்பெரிய ஹிட் என்றெல்லாம் பெரிய ரெகமண்டேஷனுடன் நண்பர் கொண்டு வரவே, சர்க்கார் பார்க்க உட்கார்ந்தாகிவிட்டது.
படத்தின் டைட்டிலிலேயே இந்தப் படம் பிரான்ஸிஸ் போர்ட் காப்போலாவின் பாதிப்பில் உருவானதென்றும் இப்படம் அவருக்கு tribute என்றும் போட்டுவிடுகிறார்கள். கதை கிட்டத்தட்ட மரியோ பூசோவின் ஒரிஜினலை தழுவியிருந்தாலும், இந்தியாவுக்கு தகுந்த மாதிரி சில இடங்களில் மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். டான் கார்லியோனேவின் கதாப்பாத்திரத்தையும் நம்மூர் பால் தாக்கரேவையும் கலந்து சர்கார் ஆக்கியிருக்கிறார்கள். பலருக்கும் தெரிந்த கதை ஆதலால், இந்தப் படத்தை பற்றி என் கருத்துகளை மட்டுமே எழுதலாம் என்று நினைக்கிறேன்.
பல இடங்களில் அசலின் நேரடி பாதிப்பு தெரிகிறது. உதாரணமாக ஆரமப காட்சி: ஒரிஜினலின் போனசெரா கதாப்பாத்திரத்தைப் போலவே கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டு சர்கார் முன் நிற்கும் தந்தை. அவருடன் கூடவே நாமும் அந்தப் பெரிய காம்பவுண்டிற்குள் நுழைந்து துப்பாக்கிகள் ஏந்திய குண்டர்களைத் தாண்டி சர்க்காரை அடைகிறோம்.
என்னதான் ஒப்பிட வேண்டாம் என்று நினைத்தாலும், மார்லன் பிராண்டோவின் டான் கார்லியோனேவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வார்த்தைகள் அதிகம் பேசாமல், பேசும் சில வார்த்தைகளையும் அளந்து பேசும் கார்லியோனேவைப் போலவே சர்க்காரையும் சித்தரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில், டான் கார்லியோனே சொன்னதில் நமக்கு புரிந்தது பாதி, நமக்கு புரியாமல் அவர் சொன்னதில் அர்த்தங்கள் எத்தனையோ என்று பதைபதைக்க வைக்கும் eerie presence பிராண்டோவிற்கு இருந்தது. அதற்கேற்றார் போல் அவரின் ஓவ்வொரு அசைவிற்கும் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டவராக ராபர்ட் டுவால் மற்றும் ஏனையோர். அமிதாப்பிற்கு இது போதவில்லை என்பது என் கருத்து. ரொம்ப சாதாரணமான ஒரு சோர்வான பெரியவராகத்தான் தென்படுகிறார். கார்லியோனே என்னும் அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாத ஒருவருக்கு மற்றவர் தரும் மரியாதை வியப்பளிக்கும். ஆனால் இதில் அமிதாப்பின் அடிப்பொடிகள் பெரும்பாலும் பேசிக்கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் இருக்கிறார்கள். ஒழுங்கு இல்லாத ரவுடிகள் அதிகம் போலும் இந்தியாவில். "யாரிடம் பேசுகிறாய் தெரியுமா? சர்ககாரிடம்" என்று வெறு நொடிக்கொருதரம் வருவோர் போவோருக்கெல்லாம் நினைவு படுத்தி எரிச்சல் மூட்டுகிறார்கள். இதனால் அமிதாப், கார்லியோனே மாதிரி புத்திசாலித்தனமான அமைதி காக்கிறாரா இல்லை இந்த அடிப்பொடிகளிடம் பேசி வாங்கி கட்டிக்கொள்ள பயந்து கொண்டு சும்மா இருக்கிறாரா என்று சந்தேகம் வருகிறது. இவர்களின் இந்த கூச்சலால் சர்க்காரின் மீது நமக்கு இருக்கும் மதிப்பு குறைகிறது. கடைசிவரை புத்திசாலித்தனமான விஷயங்களை எல்லாம் அபிஷேக்கும் மற்றவரும் சொல்ல, இவருக்கு வெறுமனே தலையாட்டி கொண்டும் கூரையை வெறித்துப் பார்த்தபடி இருப்பதும் தான் வேலை. வீட்டில் இருக்கும் ஒரு வயசான, சோர்ந்த பெரியவர் கேரக்டர் தான் கடைசிவரை. இந்த சர்க்கார் ஒரு பெரிய டான். அவரின் பவர் சர்க்கிள்கள், எதிரிகள், நண்பர்கள் ஆகியோரை பிரஸ்தாபிப்பதில் அவசரம் காண்பிப்பதும் சர்க்கார் ஒரு தனிமனித அரசாங்கம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது. பெரிய ஏமாற்றம்.
அமெரிக்காவிலிருந்து துணையுடன் வரும் இளைய மகன் அபிஷேக் பச்சன். பெரியவன் கோபக்காரன், தந்தையையே பல சமயங்களில் எதிர்ப்பவன் கே கே மேனன். கே கே மேனன் black friday வில் என்னை மிகவும் கவர்ந்தார். அவரின் stare க்குக்காகவே அவர் நடிக்கும் படங்களைப் பார்க்கலாம். இதில் ஒரு முரடன் கேரக்டருக்கு கூட புத்திசாலித்தன tone கொடுத்து நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் பாத்திரப் படைப்பில் இவரின் சினிமா சம்பந்தம் போன்றவை சரியாக விளக்கப்படவில்லை. தன் பட ஹீரோயினின் மேலுள்ள வெறியையும் சரியாக காட்டவில்லை. அந்தக் கொலைதான் பிற்பாடு தன் தந்தையையே கொல்லத்துணியும் அளவிற்கு கொண்டு செல்கிறது என்பதால் இதையெல்லாம் விட்டது ஏனென்று தெரியவில்லை. முக்கியமான இரவு உணவுக் காட்சியில் சோபிக்கிறார் கேகே. இதில் அமிதாப் கொஞ்சம் தன் அதிகாரத்தை நிலை நாட்ட முயற்சி செய்தாலும், ஜெயிப்பது என்னவோ கேகே தான். அபிஷேக் பச்சனை இந்தக் காட்சியில் கவனித்துபாருங்கள். யதார்த்தத்தின் மறுவுருவம்.
அபிஷேக் தான் ஹீரோ. அவர்தான் உண்மையான சர்க்கார். வெகுளியாக வந்திறங்கி, பின்னர் குடும்ப 'பிஸினஸை' ஏற்றுக் கொள்ளும் கடினமான பாத்திரம். வெளுத்து வாங்கியிருக்கிறார். காவல்துறை உயரதிகாரி அவமானப்படுத்தும் போது அமைதியாக வாங்கி கொள்ளும் அதே மனிதரா பின்னர் முதலமைச்சரையே சர்வசாதாரணமாக மிரட்டுகிறார் என்று பிரமிப்பு ஏற்படுத்துகிறது.
வசனகர்த்தாவும் அபிஷேக்கும் சேர்ந்து பட்டையை கிளப்புகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் என்றால் தன் அண்ணனை கொன்றுவிட்டேன் என்று தந்தையிடம் சொல்வது; வீரேந்த்ர சுவாமியை மிரட்டுவது; முதலமைச்சரிடம் 'உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் சிபிஐ கையில். கூடிய சீக்கிரம் உள்ளே செல்லப் போகிறீர்கள்' என்கிறார். அதற்கு சி.எம்மோ 'என் அதிகாரத்தை வைத்துக்கொண்டு ரெண்டே நாளில் வெளியில் வந்து விடுவேன்' என்று ஏளனமாக பதிலளிக்க அதற்கு அபிஷேக் சளைக்காமல் 'நீங்கள் சீக்கிரம் வெளியில் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்' என்று கூறி விட்டு ஒரு ஸ்லோ-மோ வாக் விடுகிறார். தியேட்டரில் விசில் பறந்திருக்கும். சூப்பர் சீன். அதே போல் கடைசியில் வில்லன் ரஷீதை கடலில் தள்ளும் போதும் 'உன்னைக் கொல்வதற்கு நான் வரவேண்டும் என்பதில்லை. ஆனால் நீ இறப்பதன் மூலம் கிடைக்கும் சுகத்தை நான் இழக்க விரும்பவில்லை' என்று பஞ்ச் கொடுக்கிறார். அசத்தல். மொத்தத்தில் பபீதா இவ்வளவு திறமையான அபிஷேக்கை ஒரு failed actor என்று சொன்னதை நினைத்து இப்போது கண்டிப்பாக வருந்துவார்.
சில்வர் மணி என்னும் நண்பன் / எதிரி கதாப்பாத்திரத்தில் 'சாமி' வில்லன் கோட்டா சீனிவாச ராவ். "பார்ன் இன் சவுத். பட் ஆப்பரேஷன் கம்ப்ளீட் நார்த்' என்று கலக்குகிறார். மற்றவர் ரஷீதாக வரும் ஜாகிர். இவரும் கூர்மையாய் லுக் விடுகிறார். ஒருவித cold villainy தெரிகிறது. சபாஷ். இன்னொருவர் விஷ்ராம் என்ற கதாப்பாத்திரம். மற்றவர் சந்திராசாமியின் பாதிப்பாய் வீரேந்தர் சுவாமி. புசுபுசுவென்று lhasa apso குட்டி மாதிரி இருக்கிறார். முட்டை கண்கள் வெளியே பிதுங்கி விழுந்துவிடும் போலிருக்கிறது. நல்ல வில்லன். இதே ஜீவா, நானா படேகரின் அப் தக் சப்பன்-னிலும் கலக்கியிருப்பார். சில்வர் மணி உதிர்க்கும் சில முத்துக்களில் ஒன்று. தாங்கள் போட்ட திட்டத்தின் படி சர்க்கார் இன்னும் சாகவில்லை என்று தெரிந்து பரிதவிக்கும் சமயத்தில் சாமியாரிடம் 'நல்ல full volume-இல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டிரு', வான் நோக்கி கையை காட்டியபடியே, 'சீக்கிரம் மீட்டிங் நிச்சயம்.' :)
இப்படி வசனகர்த்தா ஆங்காங்கே ஜொலிக்கிறார். அமிதாப்பிற்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டிவிட்டார். திரைக்கதை என்ற வகையில் வேகமாக நகரும் படம், அபிஷேக்-காத்ரீனா-தனுஷா முக்கோணத்தில் தேவையில்லாமல் சிக்கிக் கொள்கிறது. படத்திற்கு அது தேவையானதென்று எனக்கு தோன்றவில்லை. அசலில் உள்ள கே-வுடனான மைக்கேலின் காதலின் பாதிப்போ என்னவோ?
காமிரா: அமித் ராய். அனேகமாக கச்சிதம் என்று சொல்லலாம். பல சமயங்களில் extreme wide angle-ம் சில மிக வினோதமான பெர்ஸ்பெக்டிவ்களையும் தைரியமாக பயன்படுத்துகிறார். அமிதாப் டீ கப் எடுப்பது, ஹாஸ்பிட ஸ்ட்ரெச்சர் வழி அபிஷேக், ரஷீதின் கறுப்பு ஆப்ட்ராவின் எண்ட்ரீ என்று குறிப்பிட்டு சொல்லலாம். அதே சமயம், மிகவும் சீரியஸான வசனங்கள் இடம்பெறும் போது காமிராக்கோணங்கள் திசைதிருப்புவதாகவும் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், அந்த இரவு உணவுக்காட்சி அமைக்கப்பட்ட விதம் பிடித்தமாக இல்லை. முன்று பேருக்கு மத்தியில் நிகழும் காட்சி. கேகே மேனனும், அபிஷேக்கும் காமிராவுக்கு அருகில் டைனோசார்கள் போல் வளர்ந்திருக்க அந்தக்காட்சியின் நாயகனான அமிதாப் தள்ளி இருப்பதால் சின்னதாய், அதிகாரமில்லாதவராய் தெரிகிறார். வசனங்களும் காட்சியமைப்பும் நேர்மாறான எப்பெக்ட்டுகளை உருவாக்குகின்றன. இதே மாதிரி இறுக்கமான டின்னர் காட்சிக்கு அருமையான உதாரணமாக நினைவுக்கு வருவது 'american beauty'. மூன்று பேருக்கு மத்தியில் நிகழும் அந்த உரையாடலுக்கு பக்கவாட்டிலிருந்து மிக மிக ஸ்லோவான push in கொடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர். பிரமாதமாக இருக்கும். முன்பு சொன்னமாதிரி, கொஞ்சம் நெருடல்களை தவிர்த்திருந்தால் நல்ல ஒளிப்பதிவு. காமிராவைப் பற்றி சொல்லும்போதே குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம். color grading. prime focus நிறுவனத்தார் பண்ணியிருக்கிறார்கள். ஒருவித sepia tone கொடுத்து கதையின் போக்கிற்கு உகந்த மாதிரி இறுக்கமான palette-ஐ கொடுத்திருக்கின்றனர். மொத்தத்தில் அருமை.
சுனில் நிக்வேக்கரின் கலையும் மிக அருமை. அமிதாப்பின் வீடு அவரின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. அடிக்கிற வண்ணங்களில் அல்ல. subtlety-இல். எடிட்டிங்: நிபுன் குப்தா மற்றும் அமித் பர்மார். பல இடங்களில் jumpy effect இருக்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லை தவறா என்று தெரியவில்லை. ஆனால், அவ்வளவு எடுபடவில்லை. ஒருவகையில் திசைதிருப்புவதாய் இருக்கிறது. அதே மாதிரி ஒரு காட்சியில், ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் நிற்கும் இடம், போஸ் எல்லாம் அடிக்கடி மாறும்படி கட் செய்திருக்கின்றனர். இதுவும் குழப்பத்தை கொடுக்கிறது.
பின்னணி இசை என்பதை விட முன்னணி இசை என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இரைச்சல். நடுநடுவில் கோவிந்தா கோவிந்தா என்று வேறு பின்னணியில் கதறுகிறார்கள். அமைதியாக இருக்கவேண்டிய காட்சிகளில் கூட குனல் மேத்தாவும்/பரீக்ஷித் லால்வாணியும் இந்த மாதிரி இரைச்சல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நம் இளையராஜா தைரியமாக அமைதி-யை பிஜிஎம்-மாய் பயன்படுத்துவார். silence-இன் virtues-ஐ அவரைப் போன்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது நலம்.
மரியோ புஸோவின் மூன்று interwoven கதைகளை நிதானமாக பிரித்து ஆராய்ந்து நம் கண்முன்னே நம்பும்படி படைத்தது கோப்போலாவின் வெற்றி. ஒரே படமென்பதால் அமிதாப்பின் செல்வாக்கிற்கு காரணங்களை அவ்வளவு விரிவாக சொல்ல முடியாமல், power play விஷயங்களையும் தொட்டுதொட்டு செல்ல மட்டுமே முடிகிறது வர்மாவினால். ஆனால் நடிகர்களை நன்கு வேலை வாங்கி திறமையான இயக்குனர் தான் என்பதில் சந்தேகமில்லை என்று நினைவுபடுத்துகிறார்.
காட்பாதரை போன்ற ஒரு timeless classicஐ தைரியமாக கையிலெடுத்து தில்லுடன் இந்தியாவுக்கு தகுந்தபடி பால் தாக்கரே மசாலாவையும் சேர்த்து நன்றாகவே செய்திருக்கிறார் ராம்கோபால். அபிஷேக்குக்கு திருப்புமுனை இந்தப்படம் என்பதில் சந்தேகம் கிடையாது. மொத்தத்தில் அசல் கார்லியோனேவிற்கு நிகரில்லையென்றாலும் ஏமாற்றவில்லை சர்க்கார்.
Sarkar - திரைப்படம் என் பார்வையில்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
உங்களுக்கு அசாத்திய பொறுமை !
என்ன ஆனந்த்
படம் பிடிக்கவில்லையா?
இல்லை நக்கலா?? :)) எழுத ஒன்றும் கிடைக்கவில்லை. என்ன செய்வது? மெயில் வந்துதா?
இந்த படங்களை மூன்று மணி நேரம் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. பாட்டு, சண்டை , அழுகை FFwd செய்து எங்க வீட்டில் படம் 1 மணி நேரத்தில் முடிந்து விடும்.
நான் அப்பவே உங்கள் மெயிலுக்கு பதில் அனுப்பினேன். கிடைத்ததா ?
//இதே ஜீவா, நானா படேகரின் அப் தக் சப்பன்-னிலும் கலக்கியிருப்பார். //
முதல்முதலில் தெலுகு 'குலாபி' படத்தில் பார்த்த நினைவு (தமிழில் 'இதயமே இதயமே'). ஒருஜாடைக்கு விஜயகாந்த் சாயல்.
தனிப்பட்ட முறையில், இந்தளவு சொதப்பலான ராம்கோபால் வர்மா படத்தை, அதுவும் gangster படத்தை இதற்குமுன்பு பார்த்த நினைவில்லை.
மாண்ட்ரீசர்,
நன்றி
படம் பிடிக்கலை போலிருக்கு உங்களுக்கு. நான் பார்த்தபோது அசல் காட்பாதர் பின்மண்டையிலே ஓடிக்கொண்டே இருந்ததால் நிறைய சொதப்பல்கள் எனக்கு தெரியவில்லை போலும்.
Post a Comment