சுவற்றில் கிறுக்கும் கிறுக்கன்கள்!

நடராஜப் பெருமானின் ஆடும் திருக்கோலம் பல கோயில்களில் இருந்தாலும், தமிழகத்தில் ஐந்து இடங்களில் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மற்ற நான்கில் விக்கிரக உருவமாக உள்ள நடராசர் ஓவிய ரூபமாய் ஆடும் திருத்தலம் திருக்குற்றாலம். இதற்கு 'சித்திர சபை' என்ற பெயருமுண்டு (மற்ற நான்கு--- கனகசபை - சிதம்பரம்; வெள்ளிசபை - மதுரை; தாமிரசபை - திருநெல்வேலி; இரத்தினசபை - திருவாலங்காடு).

சுமார் 500-600 வருடங்களுக்கு பராக்கிரம பாண்டியன் காலத்தில் இந்த சபை கட்டப்பட்டது. முற்றிலும் மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட நடராசர், மற்றும் பல்வேறு உருவங்கள் மிக அழகாக வரையப்பட்டுள்ளன. நான் எழுத வந்தது இந்த ஓவியங்களின் சிறப்பை பற்றியல்ல. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

ஆனால் இத்தகைய பழங்கால சிறப்புமிக்க ஓவியங்களின் மீது சில மூடர்கள் கிறுக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். கிறுக்குவதையும் ஓரமாக செய்து விட்டு போனால் ஏதோ ஆர்வக்கோளாறு என்று எண்ணி விட்டு தொலையலாம். ஓவியங்களில் உள்ள உருவங்களின் மேல் எழுதியும் உருவங்களின் கண்கள் உள்ள இடத்தை சுரண்டியும் சென்றிருக்கின்றன இந்த குரங்குகள். மாரி என்பவர் செல்வராணி என்ற தன் துணையோடு 1991- ஆம் வருடம் மே மாதம் வந்து விட்டு போனதாக 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய ஓவியங்களில் மேல் கிறுக்குவெட்டு விட்டு சென்றிருக்கிறார். வற்றாத வடவருவி என்ற சிறப்புமிக்க அருவியில் குளித்ததில் மூளை கலங்கித்தான் விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தெய்வங்களின் மீது நம்பிக்கையில்லாதோர் ஆயினும் கலை என்ற அளவிலாவது இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு மரியாதை கூட கொடுக்கத்தெரியாத மூடராகவா ஒருவர் இருக்க முடியும்?

ஒரு ஓவியத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் கிறுக்கல்கள். மாரி அவர்களின் பெயரைச் சொல்ல காரணம் அவர் ஒரு இடம் என்றில்லாமல் பல ஓவியங்களை களங்கப்படுத்தியிருந்தார். தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பேரரசன் இராசராசனே, தன் சிலையை தான் கட்டிய கோயிலில் நிறுவவில்லை. அவ்வளவு பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் அவன் பெயர் தட்டுபடுவதே மிக அரிது. ஆனால் இந்த மாரி போன்றோர்களோ தானும் கட்டவில்லை, இருப்பதையும் அழிப்பவர்களாய் இருக்கின்றனர். நம்மூரில் கோயில்களுக்கு 100 ரூபாய்க்கு ட்யூப் லைட்டு வாங்கிவிட்டு வெளிச்சமே வெளியே வராமல் மறைத்து உபயம் என்றெழுதும் பண்பு செழிப்பாக இருக்கிறது. அதுவாவது அவர்கள் 100 ரூபாய், எழுதிக்கொள்ளட்டும். சும்மா வந்துவிட்டு பொதுசொத்துக்களை நாசமடிக்கும் கூட்டத்தை என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய், இப்போதுதான் அரசாங்கமும் இரும்பு வேலியமைத்திருக்கின்றனர். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. என்ன செய்து என்ன பயன்? அழிக்கப்பட்ட ஓவியங்களை திரும்பப் பெற முடியுமா? வரலாற்று சின்னங்களை இவ்வளவு துச்சமாகக் கருதும் அலட்சியம் அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த கெட்ட பழக்கம் இங்கு மட்டுமில்லை. கோயில்கள், வரலாற்று சிறப்புமிக்க வேறு இடங்கள் என்று எல்லா பொது இடங்களிலும் கிறுக்கிவிட்டு செல்கின்றனர். அதற்கு உதாரணமாக 30.04.05 அன்று ஆடும் நடராசப் பெருமானுக்கு பதில் கிறுக்கும் நடராஜ் அவர்கள் தமிழ்ச்செல்வி என்ற தமது துணையுடன் தஞ்சை அரண்மனை கோபுரத்தினுள்ளே எழுந்தருளியிருந்தார் என்பதற்கான அரிய வரலாற்று நினைவுச் சின்னத்தை காண்க. கண்டு களிப்புறுக.




வரலாற்றுச் சிறப்புமிக்க கிறுக்காகிப்போன இந்த நடராஜ்!
Image hosted by Photobucket.com

1 Comments:

  1. Anand V said...

    எங்க ஊரு கோயில் சுவற்றில் எழுதி இருப்பதை எல்லாம் நான் படமாய் போட்டால் அவ்வளவுதான்..
    தமிழ்செல்வியும் நடராசரும் நன்றாக இருக்கட்டும் :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்