மருதைக்கு போலாமா? - 4

மருதைக்கு போலாமா? - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

இது சென்ற பதிவின் தொடர்ச்சி..

என் தந்தை ஏன் அப்படி சொன்னார் என்று ஊரினுள் நுழைந்த பின்னரே புரிந்தது. city center-ல் ஆடி, ஆவணின்னு ஆயிரக்கணக்கான வீதிகள். எது எங்கே போகுதுன்னு தலைகால் புரியல. இதுல பாதிக்குமேல் ஒருவழிச்சாலை. போக்குவரத்த ஒழுங்குபடுத்த இது தேவைதான் என்றாலும், நமக்குன்னு வரப்போ ரொம்ப கடியா ஆயிடுது. ஒரு தெருவ விட்டா திரும்ப ஊர் முழுக்க சுத்தி சுத்தி வந்தீகன்னு தான் பாடிக்கொண்டே வலம் வரணும். இதேபோல சிஸ்டத்தை நெல்லையப்பர் கோயிலச் சுத்தியுள்ள வீதிகளிலேயும் பார்த்தேன். ஆனா இங்க சைஸ் ரொம்ப பெரிசு.

தெருப் பெயர்கள் எல்லாம் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கறது வேற குழப்பம். மேற்கு ஆடி வீதியா? ஆவணி வீதியா ன்னு சர்ச்சை முடியறதுக்குள்ளே சித்திரை வீதின்னு ஒன்னு புதுசா வந்துடும். கோயிலைச் சுற்றி மாட வீதிகள், அவற்றின் ஊடேயும், சுற்றியும் மாதப் பெயர்கள் கொண்ட வீதிகள்னு ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டேன். அதில பல தெருக்கள் மிகக் குறுகலானவை. தெரியாம உள்ள நுழஞ்சிட்டீங்கனா, அப்புறம் அபிமன்யு கதைதான்.

இந்த ஆர்த்தி இருப்பது பெருமாள் கோயில் மேற்கு மாட வீதியில். கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு பின்புறம் இருக்கு. அதனால் கண்டுபிடிக்கறது அவ்வளவு கஷ்டமா இல்லேன்னாலும், மேற்சொன்ன மாதிரி, அந்த தெருவ விட்டுட்டு, பக்கத்து சந்தில நுழைந்து எதிரே வந்த மாட்டு வண்டி, டெம்போ போன்றவற்றை தாண்டிக்குதித்து கொஞ்சம் சர்க்கஸ்காரைப் போல ரெண்டு சக்கரம் பெருமாள் கோயில் மதில்சுவற்றின் மேலெல்லாம் ஓட்டி வெற்றிகரமா ஓட்டலை அடைந்தோம். உள்ளே பரவாயில்லை. பெரிய இடம் இருக்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு பயணிகள் கூட்டம் வேற. ரூம் பத்தி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒண்ணுமில்ல.

ஆதிசொக்கநாதர் கோயில் என்று ஒன்று இருக்கிறது, அதப் போய் பார்த்துட்டு வான்னு யாரோ ஒரு மாமி பத்தி வைக்க இவ்ளோ பெரிய மதுரையில எங்க போய் தேடறது? இனி வண்டியெல்லாம் எடுத்துகிட்டு இந்த ஒன்-வே விளையாட்டெல்லாம் ஆடமுடியாதுன்னு முடிவு பண்ணி வாசல்ல ஒரு ஆட்டோ புடிச்சோம். மீனாட்சியம்மன் கோயிலுக்கெல்லாம் முற்பட்டதுன்னு சொல்லப்படற இந்தக் கோயில் சைஸ் என்னவோ ரொம்ப சின்னது. அது exact-அ எங்கே இருக்குன்னு கேட்காதீங்க. ஏன்னா, எனக்கும் தெரியாது. மாட்டுத்தாவணி என்பது போன்ற மிக செக்ஸியான புறநகர்ப்பெயர்கள் கொண்ட ஊர் மதுரை. அந்த மாடுக்கு தினமும் தன்னோட தாவணிய பஸ்ஸிலெல்லாம் ஏலம் விடுறாங்களேன்னு தெரிஞ்சா பாவம், வருத்தப்படும்.

இந்த மாதிரி பெயர்களைக் கேட்டும் குழம்பாதவர்களுக்கு சிம்மக்கல், யானைக்கால் போன்ற வித்தியாசமான பெயர்களும் உண்டு. இதனால் எந்த ஏரியாவுக்கு போனோமெல்லாம் தெரியாது. கோயில் பேர் சொன்னோம். ஆட்டோக்காரர் அழகாக கொண்டு சேர்த்துவிட்டார். கரை சேர்த்துவிட்டார்னு தான் சொல்லனும். பின்ன.. நானும் பல ஊருகள்ள டிராபிக் பார்த்திருக்கேன். ஆனா, இந்த மதுரை மாதிரி வராதுங்க. சென்னையில் ஓட்டுவோர்க்குக் கூட தனித்தனியே கோயிலெழுப்பலாம்ங்கற மாதிரி ஓட்றாங்க. சிக்னல் விழுந்துட்டா போதும், இந்த நேஷனல் ஜியோல காட்டற locust attack மாதிரி நம்மள் சுத்தி சூழ்ந்து மூழ்கடிச்சிட்டு போய்டறாங்க. புதுசா ஊருக்கு வர்றவங்களயும் கூட்டத்தோடு கூட்டமா ஒன்-வேயில அடிச்சுகிட்டு போய், மினி மதுரைச் சுற்றுலா காமிச்சுருவாங்க. அதனால.. ஆட்டோ ரிக்ஷா தான் சரியான வழி.

ஆனா, ஒண்ணு சொல்லணும். எவ்வளவு மரியாதையா இருக்காங்க மக்கள். ஆட்டோக்காரர் கூட சண்டையெல்லாம் போடாம, மிக மரியாதையாய் சொன்னதக் கேட்டு தலையாட்டினார். நாங்க கோயிலுக்கு போய்ட்டு வரமட்டும் வெயிட் பண்ரேன்னு சொல்லிட்டு அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் கூட வாங்கல. இந்த மரியாதை விஷயம், இந்த முறைதான் நான் மிகவும் கவனிச்சு பார்த்தேன். ஒருத்தர் ரெண்டு பேரில்ல.. பல பேரு வெள்ளை கதர்வேட்டி, சட்டை போட்டு, தோளுல ஒரு துண்டு, நெத்தியில வீபூதின்னு மதுரை மாநகரமே ஒரு சட்டசபை மாதிரி இருக்கு. ஏதோ என்னய போய் மதிச்சு சார்-னு ரெண்டு பேர் கூப்பிட்டத மட்டும் வெச்சு சொல்லல.. பேசறதிலேயே ஒரு பதவிசு. நல்ல மக்கள். மரியாதை தெரிஞ்ச மக்கள்.

கோயிலுக்குப் போனோமில்லியா? அங்க ஆதிசொக்கநாதர் இருக்கார். அந்த கோயில் அர்ச்சகர்கிட்ட இந்தக் கோயில்ல என்ன விசேஷம், புராணம்னு கேட்டோம். பெரும்பாலான கோயில்களுக்கு இந்த மாதிரி கதைகள் கேட்கவே போலாம். ஆனா, நிறைய கோயில்கள்ல தட்டுல இருபது ரூவாக்கு குறைச்சலா போட்டா தீபாராதனையே காட்ட மாட்டேங்கறாங்க. அப்புறம் புராணமாவது.. ஆனா, இங்க இவர் பாவம் காது அவ்வளவா கேளாதவர் போல. சரின்னு அவரை விட்டுட்டு பிரகாரம் சுத்தி வந்தோம். அப்போ ஒரு நடுத்தர வயது தம்பதி வெயிட் பண்ணிக்கொண்டிருந்தனர். எங்கள் கூடவே ஆதிசொக்கநாதரையும் பார்த்தவர்கள் அவர்கள். எதற்காகவோ நிற்கிறார்கள் என்று நினைத்து நாங்கள் கிளம்புகையில் அந்தக் கணவர் என்னைக் கூப்பிட்டு 'எந்த ஊருங்க உங்களுக்கு?இப்பத்தான் முததடவையா வர்றீங்களா' னார். 'ஆமா'ன்னு சொல்லவே.. 'நீங்க அர்ச்சகர் கிட்ட கேட்கும் போதே நினைச்சேன். சரி நீங்கள் கும்பிட்டுவிட்டு வரட்டும்னு தான் காத்திருக்கிறேன்' னு சொன்னார். இத்தன நேரம் காத்திருந்து தல வரலாறு சொல்ல வேண்டும் என்று நினைத்தாரா? எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. தலவரலாறு புத்தகம் அலுவலகத்தில் ஸ்டாக் இல்லையென்று அதற்குள் விசாரித்துவைத்து சொன்னவர் பிறகு மிகப் பொறுமையாக எங்களோட cross-questionsக்கும் பதில் சொல்லி அந்தப் பழம்பெரும் கோயிலின் இடைக்காடகர் புராணத்தை சொன்னார். விசிட்டிங் கார்ட் பரிமாற்றம் முடிந்த பின்னர் அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினோம். எங்களுக்கோ இன்னும் அதிசயம். வெளியூரிலிருந்து வந்து அவங்க ஊர் கோயில் பத்திக் அவர நேரடியாக் கேட்கலேன்னாலும் நின்னு நிதானமா எடுத்துச் சொல்லணும்னு தோணுதே.. அதுவே பெரிய விஷயமில்லியா? அதைவிட ஆச்சரியம், நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய ரெண்டாவது நாள் ஒரு கூரியர். ஆதிசொக்கநாதர் திருக்கோயிலின் தலவரலாற்று புத்தகம் அனுப்பியிருந்தார் அதே மதுரைக்காரர். சொந்தங்களுக்கே நிற்க நேரமில்லைன்னு ஓடும் இந்தக் காலத்திலே இப்படி ஒருவரா? மறக்க முடியாத நிகழ்ச்சி இது.

வந்த ஆட்டோக்காரர் லேட்டாக வந்ததற்கு ஒரு வசை கூட பாடாமல், பேசியதற்கு மேல் ஒரு நயாபைசா கேட்காமல் ஹோட்டலில் இறக்கிவிட்டார். அங்கே அடுத்த ஆச்சரியம். சர்வரின் வடிவில். ஓட்டலின் உணவகம் மூடும் நேரம். முப்பது வயது கூட இருக்காது. பார்ப்பதற்கு அச்சு அசல் நம்ம சினிமா நடிகர் முரளி போலவே இருந்தார். என் தம்பி நான்-ஓ எதையோ ஆர்டர் செய்ய ஆரம்பித்தான். 'ஏண்டா, பாவிப்பசங்களா, நடைய சாத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம்னு பாத்தா இப்படி கோயில் மாடுங்க மாதிரி வந்து ஒக்காந்துகிட்டு நானு வேணும் பேனு வேணும்னு எகத்தாளம் பண்றீங்க? இரு இரு.. நான் தரேண்டா உனக்கு ஒரு நான்.. இதுவரக்கும் வாழ்க்கையில இந்த மாதிரி நான மவனே நீ சாப்டிருக்கவே மாட்ட பார்' அப்படீன்னு சப்-டெக்ஸ்ட்டுடன் லுக் விடாமல் இன்முகமும், கனிவான பேச்சும் மாறாமல் "சார், இப்ப லேட்டாயிடுச்சு. முன்னாடி செஞ்சதத்தான் சூடு பண்ணி எடுத்துவரணும். அதுக்கு பதிலா, சூடா இட்லி இருக்கு. அது பரவாயில்லியா?"ன்னு கேட்டார். எனக்கு மாரடைப்பே வந்துடுச்சு! 'சொக்கா, இன்னிய நாளுக்கு கோட்டா ஓவர்! இதுக்கு மேல நல்லவங்கள பாக்குறத நம்மால தாங்க முடியாதுடாப்பா'..அப்படின்னு சொல்லி சாப்டு நேரே ரூமிற்கு கொஞ்சம் அலைபாய்ந்த மனம் கொஞ்சம் நிம்மதி பெறுவதற்காக WWF பார்த்துட்டு தூங்கப்போயாச்சு.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?
இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்

22 Comments:

 1. DSD said...

  Your blog is great If you have unwanted hair, I'm sure you'd be interested in Laser Hair Removal Cost Stop shaving & visit Laser Hair Removal Cost


 2. rv said...

  சே... நக்கல் நையாண்டி ஜாஸ்தியாப் போச்சு.. ஏதோ டிஜிடல் காமிரா, கிரெடிட் கார்ட்னு ஸ்பாம் வந்தாலாவது பந்தாவா இருக்கும்..

  // If you have unwanted hair// அப்டீன்னு போட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே :((


 3. Unknown said...

  //தூங்கப்போயாச்சு//

  மதுரை தூங்கா நகரமில்ல?, நம்மாளுக மரியாதையான ஆளுகதான்., அவிங்க கால மிதிக்காத வரைக்கும். கோயம்புத்துர் பக்கம் போகனுங்க மரியாதைக்கு., பேருந்து நடத்துனர்கூட 'அக்கா., எங்க போறிங்க?' 'எங்கங்ண்ணா?' ந்னு கேட்பாங்க. ஆனா தமிழ் நாட்டுல மரியாதை கிலோ என்ன விலைன்னு கேட்கின்ற ஊர் எது தெரியுமா?., எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்., நம்ம தலைநகர். பதிவு அருமை.


 4. rv said...

  apdipodu,
  //கோயம்புத்துர் பக்கம் போகனுங்க மரியாதைக்கு//

  ஆமாங்க.. சாதாரணமா பேசும்போதே நீங்க சொல்ற மாதிரி ஏனுங்கண்ணா-னு தான் பேசுவாங்க... பலசமயம் அது குசும்புக்காகவும் சொல்வாங்க

  மெட்ராஸ்-அந்தத் தமிழோட லெவலே வேற! ;)

  நன்றி


 5. சின்னவன் said...

  Template மாத்தியாச்சா ?
  ஏதோ புது இடத்துக்கு வந்த மாதிரி இருக்கு ?


 6. rv said...

  சின்னவன்,
  ஆமா.. பொழுது போகல.. அதான் மாத்திட்டேன்..

  புடிச்சுருக்கா?

  துளசியக்கா என்னவோ மிஸ்ஸிங் னு சொல்லிட்டாங்க..


 7. தருமி said...

  "பேசறதிலேயே ஒரு பதவிசு. நல்ல மக்கள். மரியாதை தெரிஞ்ச மக்கள்."

  நம்ம ஊர ஒரு தூக்கு தூக்கிட்டீங்க, போங்க. ரொம்ப சந்தோஷமா போச்சுங்க. ஆனாலும் ஒரு + மட்டும்தானே போட முடிஞ்சுதுன்னு சோகமா ஆயிடுச்சுங்க..


 8. தாணு said...

  ஆயிரம் தடவை மாட்டுத்தாவணின்னு சொல்லியிருப்போம், பேர் மனசிலேயே பதிஞ்சதில்லே. இப்போ மாட்டுக்கு தாவணியாக்கி கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுட்டீங்க. மதுரைக்கூ பைபாஸ் ரோடுன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா, ஊருக்கு நடுவாலே போறமாதிரி.


 9. rv said...

  தருமி,
  சும்மா சொல்லலீங்க.. நிஜமாவே ரொம்ப பிடிச்சது உங்க ஊரும் மக்களும். என்னதான் பெரிய மெட்ரோபாலிஸானாலும் இன்னும் தமிழும் நம் பண்பும் மிஞ்சியிருக்குன்னு நினைக்கிறேன். இந்த ஒன்-வேக்களும் டிராபிக்கும் உங்களுக்கெல்லாம் பழகிப்போயிருக்குமோ? அதேபோல ஆடி, ஆவணின்னு தெருப்பேர்கள் இருக்கறதுக்கும் ஏதோ காரணம் இருக்கா? எங்கம்மா ஏதோ திருவிழா, சாமி ஊர்வலம் அங்கங்கே மாசத்துக்கு தகுந்தாப்போல நடக்குமுன்னு சொன்னாங்க.

  கள்ள வோட்டெல்லாம் போட்டதில்லியா?? ;))


 10. rv said...

  தாணு,
  மாட்டுத்தாவணிங்கற மாதிரி புறநகர்ப்பேர என் வாழ்க்கையில கேட்டதில்ல.. அதான் சொன்னேன். :)

  மதுரை பை-பாஸ் தானே.. குத்தாலம் போனபோது அதில தான் போனோம். இந்த உயர்நீதிமன்றமெல்லாம் தாண்டி, அப்புறம் மீனாக்ஷி மிஷன்னு நினைக்கிறேன். அதத்தாண்டி திரும்புறது தானே..? அத நல்லா போட்டுருக்காங்க. ஆனா, ஒரு அடிக்கொருதடவை, டோல் கேட் வெச்சு, சீட்டு காமிக்க சொல்லி படுத்திடறாங்க.


 11. துளசி கோபால் said...

  மாட்டுத் தாவணி, சிம்மக்கல்,
  யானைக்கால் ஆஹா ஆஹா. எங்க மதுரைன்னா மதுரைதான்.
  மிருகங்களையும் மதிக்கத் தெரிஞ்சவுங்க. அப்புறம் மனுஷங்களை மதிக்காம இருப்பாங்களாமா?

  என்ன தருமி,

  ராமநாதனுக்கு எதாவது செஞ்சு நம்ம நன்றியைக் காமிக்கவேணாமா?:-)


 12. rv said...

  அக்கா,
  உங்க மதுரையா?? இது வேறையா??
  சரி சரி..மதுரையில் எத்தன வருஷம் இருந்தீங்க??? :)

  //எதாவது செஞ்சு நம்ம நன்றியைக் காமிக்கவேணாமா?:-)
  //
  இது சொன்னீங்களே.. அது!.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்ன மாதிரிங்கற ஒன்னு இது :))


 13. G.Ragavan said...

  மதுரை மிகவும் மரியாதையான ஊர். நானும் அனுபவத்தில் பட்டதைத்தான் சொல்கிறேன். ஒரு வருடம் அந்த ஊரில் படித்தும் இருக்கிறேன். அதுவும் சிறு வயதில்.

  மாட்டுத்தாவணி என்றால் மாட்டுச் சந்தை. அங்குதான் முன்பு மதுரைக்கான மாட்டுச் சந்தை கூடும் என நினைக்கிறேன்.

  சிம்மக்கல்...ஆனைக்கல் பற்றி.....சிறுவயதில் மதுரையில் படித்தேன் என்று சொன்னேன் அல்லவா. அப்பொழுது பஸ்ஸில் போகும் பொழுது சிம்மக்கல் என்று நிறுத்தம் வரும். அந்த வயதில் அந்த நிறுத்தத்தின் அப்போதைய ஈர்ப்பு ஆனையின் சிலை. சிம்மக்கல் என்று பெயர் இருக்கிறதே. சிங்கத்தின் சிலை வைக்காமல் ஆனையின் சிலை இருக்கிறதே என்று யோசித்திருக்கிறேன். ஆனையின் சிலையிருப்பதால் ஆனைக்கல் என்று பெயர் வைத்திருக்கலாமோ என்றெல்லாம் பத்து வயதில் மூளை குண்டக்க மண்டக்க சிந்தித்தது.

  மூன்று வருடங்களுக்கு முன்னர். அதாவது அந்தச் சிந்தனைக்குப் பதினைந்து வருடங்கள் கழித்து அலுவலகத்தில் ஒரு மதுரை நண்பரிடம் அதைக் கொட்டி விட்டேன். அவர் சொன்னது.

  "யோவ். அது ஆனைக்கல்தான். அங்க எறங்கி நடந்தா சிம்மக்கல் வரும். ஆனைக்கல்தான் முதல்ல இருந்ததாம். சிம்மக்கல் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பெரிசாயிருச்சு".


 14. rv said...

  ராகவன் சார்,

  //மாட்டுத்தாவணி என்றால் மாட்டுச் சந்தை//

  இதான் மேட்டரா.. சரி சரி..


 15. Karthikeyan said...

  சே... நக்கல் நையாண்டி ஜாஸ்தியாப் போச்சு.. ஏதோ டிஜிடல் காமிரா, கிரெடிட் கார்ட்னு ஸ்பாம் வந்தாலாவது பந்தாவா இருக்கும்..

  // If you have unwanted hair// அப்டீன்னு போட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே :(( //

  :-)))))))


 16. Thangamani said...

  //'ஏண்டா, பாவிப்பசங்களா, நடைய சாத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம்னு பாத்தா இப்படி கோயில் மாடுங்க மாதிரி வந்து ஒக்காந்துகிட்டு நானு வேணும் பேனு வேணும்னு எகத்தாளம் பண்றீங்க? இரு இரு.. நான் தரேண்டா உனக்கு ஒரு நான்.. இதுவரக்கும் வாழ்க்கையில இந்த மாதிரி நான மவனே நீ சாப்டிருக்கவே மாட்ட பார்' //

  :))
  மதுரை நல்ல ஊர்தான்!
  நன்றி!


 17. rv said...

  கார்த்திக், தங்கமணி
  நன்றி


 18. தருமி said...

  துளசி, ஒரு ஊடையும் விட்டு வைக்கிறது மாதிர் இல்லையா?
  இராமநாதனை என்ன செய்யலாம்... i mean..இராமனாதனுக்கு என்ன செய்யலாம்?

  ராமனாதன், அந்த சிம்மக்கல் இருக்கே, அதில் இருக்கிற சிங்கச் சிலை, அது வடக்க பாத்துதான் இருக்கணும்; ஒரு தடவை அதை தெக்க பாத்து வச்சாங்களாம்...வந்தது பாருங்க வெள்ளம்..அப்படி ஒரு வெள்ளம் வைகையில..! தெரிஞ்சுக்குங்க!


 19. rv said...

  தருமி,

  இத்துணூண்டு சிம்மக்கல்-ல டச் பண்ணா வருண பகவானுக்கு இவ்ளோ கோவம் வருதா? இனிமே எல்லா ஊர்லேயும் ஒரு சிலை வைக்கவேண்டியதுதான்..

  நன்றி


 20. Smallman said...
  This comment has been removed by a blog administrator.

 21. Frank said...
  This comment has been removed by a blog administrator.

 22. thiagu1973 said...

  நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே!

  இதை திருப்பூரில் இருக்கும் மக்கள் கண்டிப்பா படிக்கனும் .

  ஏன்னா மதுரைன்னாலே மோசமானவங்கன்னு ஒரு பொது புத்திய உருவாக்கி அதுலேயே வாழ்ந்துகிட்டு இருக்கானுக.

  நீ ஒருதடவையாவது மதுரைக்கு போயிருக்கியான்னா பதில் சொல்லமாட்டான் ஆனா.
  மதுரை மோசம்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டு போவான் .

  அவனை எல்லாம் சொந்த செலவிலாவது மதுரை சுத்தி காட்டனும்னு நினைப்பேன் .

  மற்றபடை எங்கள் மதுரையை பற்றி நல்லவிதமா சொன்னதுக்கு தாங்க்சுங்கோ :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்