என் வழி... தனி வழி... இல்ல! - Q தான்

கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்தது இது. இரவு 1030 மணி இருக்கும். வீடு திரும்ப நேரமாகிவிட்டது. கையில் பணம் ரொம்ப குறைவா இருந்தது. சரி, citi தான் never sleeps ஆச்சேன்னு பக்கத்துல உள்ள சிட்டி ஏ.டி.எம் போனேன். இத்தனை மணிக்கும் நீண்....ட க்யூ. அடுத்த ஏடிம்முக்கு இன்னும் 5 நிமிடமாவது நடக்க வேண்டும். அங்கே எத்தனை பேர் இருப்பார்களோ, அதற்கு இந்த வரிசையில் நிற்பதே மேல். சரி க்யூவில் இடம் பிடிச்சாச்சு. எனக்கு முன்னர் ஒரு 7-8 பேர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரு வயதான மூதாட்டி நாலைந்து கார்டுகளை வைத்துகொண்டு போடுவதும் எடுப்பதுமாய் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்.

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம். பொதுப் போக்குவரத்துகளில், குறிப்பாய் மெட்ரோவில் செல்லும்போது கூட பொழுதுபோக்காய் சக பயணிகளை பார்த்துக் கொண்டிருப்பேன். stare என்பது மாதிரியல்ல. சும்மா வெறும் பார்வை தான். மிகவும் இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும். சிலர் இடமிருந்தாலும் நின்று கொண்டேயிருப்பர். வேறு சிலரோ, இடம் கிடைக்காதா என்று சுற்றும்முற்றும் லுக் விட்டுக்கொண்டேயிருப்பர். பலர் புத்தகங்களில் முகம் புதைத்தபடி (பொதுவாகவே அதிகமாக படிப்போர் இருக்கும் நாடு இது - 99.6% சராசரிஆண்-பெண் படிப்பறிவு), கதையோ பாடப்புத்தகமோ தன் கடன் படிப்பதே என்று பயணம் செய்வர். வேறு சிலர் எங்கேயாவது வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பர். சிலர் நடக்கும்மனிதன்
(அதாங்க..வாக்-மேன்) வைத்துக்கொண்டு தாளத்திற்கு தகுந்தாற்போல் தலையாட்டுவர். சில சமயம் ஆட்டத்தில் சாதுவாக கால்களும் சேரும். மிச்சவர் என்னைப் போன்றே இந்தமாதிரி சுற்றும்முற்றும் முகங்களை பார்த்துக்கொண்டே இருப்பர். கையில் பியர் இருந்தால், மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே இரு மடங்கு தெம்புடன் நடக்கும். கதை ரூட் மாறுவதால், மீண்டும் சிட்டி பாங்க் மூதாட்டி.

பாட்டி தெரியாமற்தான் திண்டாடுகிறாரோ என்று ஒரு இளைஞர் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் அதை மறுத்து விட்டு இப்படி இவர் விளையாடிக்கொண்டிருக்கையில் களைப்பு, இன்னும் உணவுக்கு வழியில்லை அதற்குமேல் இந்த தாமதம் எனக்கோ பிரஷர் எகிறுகிறது. சரி, மற்றவர் என்னதான் செய்கிறார்கள் பார்ப்போமே என்றால் என்னைத் தவிர யாரும் visibly tense ஆகத் தெரியவில்லை. அவரவரும் புத்தகம், வெறிப்பது,பேச்சு என்று ஜாலியாக இந்த தாமதத்தைப் பற்றி கவலையே படாமல் நின்று கொண்டிருந்தனர். பாட்டியின் சூழ்ச்சியால வரிசை நகருவதற்கான அறிகுறிகளே இல்லை. எய்தோன் எங்கோ இருக்க -ங்கற மாதிரி பாட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்றவர் மீது என் கோபம் திரும்பியது. என்னடா இது, இவங்களுக்கெல்லாம் வீடு வாசலுக்கு போகவேணாமா? சாப்பிட்டாங்களா? நாளைக்கு காலையில எழுந்து ஓடுவதற்கு வேலை இல்லியா? இப்படி எருமை மாடுகளைப் போல் சுரணை அற்று இருக்கிறார்களே என்று நொந்தபடியே நின்றபோதுதான் ஆஹா.. என்று ஒளிவிளக்கு எரிந்தது.

கூடவே, பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது...மொதல்ல நிற்பதற்கு காரணம் என்னன்னு யோசிச்சா, ரஷ்யர்களுக்குத்தான் வரிசையில் நிற்க பிடிக்குமே. ஒரு சின்ன சான்ஸ் கிடச்சாலும் போது... நாம ரசிகர் மன்றம் பார்ம் பண்றா மாதிரி, இவங்க குடுகுடுன்னு க்யூ பார்ம் பண்ணிடுவாங்க. நான் கிண்டலாக சொல்லவில்லை. நிஜமாகவே, எங்கு சென்றாலும் வரிசைக் கிரமப்படிதான் வேலை நடக்கும் (எல்லா ஊரைப் போலவே மிகப் பெரிய மனிதர்கள் எல்லாம் வரிசையிலேயே வராமல், போனிலேயே வேலை முடித்துவிடுவார்கள்). ஒரு கடையில் பிரஷ்ஷாக சிப்ஸ் போட்டுத்தரானா..வரிசை. ரயில் நிலையமா? வரிசை. போன் பில் கட்டபோறியா? வரிசை. மெட்ரோ ஸ்டேஷனில் வண்டி வந்தவுடன் மேடையில் இருப்போர், வண்டியின் கதவுகளின் அருகில் பவ்யமாய் ஒதுங்கி இறங்குவோர்க்கு வழி கொடுத்து நிற்கும் அழகே தனி. பேருந்துகளிலும் இப்படித்தான். அது கூட்டம் மொய்க்கும் அலுவலக நேரமாயிருந்தாலும் சரி, இரவு நேரமானாலும் சரி, உடனே வரிசை. ஒழுங்காய் நிற்க வேண்டும் என்று தானாகவே வருகிறது அவர்களுக்கு.

ஒருமுறை தினமலரில் என்று நினைக்கிறேன். ரஷ்யர்கள் வரிசையாய் நிற்கும் படம். அதனோடுகூட ரஷ்யர்கள் இந்த மாதிரி வரிசையில் நின்று பிரெட் வாங்கும் அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்கிற tone-இல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு உடனே போன் செய்து என் தூக்கத்தை நிசமாகவே கெடுத்தார் அம்மா.. 'என்னடா, இப்படியெல்லாம் போட்டுருக்கான். நீ என்னவோ சவுகரியமாகத்தான் இருக்கேன் னு சொல்றியேன்னு'. (ஆமாம்.. கஷ்டந்தான் படுகிறேன் என்று ஒரு ஆக்ட் கொடுத்திருந்தால், 'வரும் படி' அதிகமாகி இன்னும் ஜாலியாக இருந்திருக்கலாம்..ஹூம்ம்) அம்மாவிற்கு எப்படி புரியவைப்பது. (சே..கஷ்டமாவது ஒன்னாவது.. அதெல்லாம் இல்லைன்னு அப்போதைக்கு சமாளிச்சு அப்புறம் போட்டோ போட்டோவா நிசமாவே ஆயிரக்கணக்கில் எடுத்து அனுப்பிச்சப்பிறகு தான் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்கள்) எனக்கு கடுப்பாகி விட்டது. தேவையத்த ஒரு கவலை. ஒரு டென்ஷன். காரணம் - தினமலரின் முட்டாள்தனம். யாராவது இப்போ கேட்டார்களா? ரஷ்யாவைப் பத்தி செய்தியே போடலையேன்னு. இல்லியே.. சரி, படம் எடுத்ததுதான் எடுத்தீங்க. அப்படியே எதுக்கு நிக்கிறாங்கன்னு ஒரு வார்த்தை நிக்கறவங்களையே கேட்டிருக்கலாமில்ல. வெயிட். கேட்டிருந்தீங்கன்னா. அவங்க பிரட்டுக்கு நிற்கிறோம்னு தான் கண்டிப்பா சொல்லிருப்பாங்க. அந்த மாதிரி கேட்டு தான் தினமலரின் ரஷ்ய செய்தியாளரும் (இப்படி வேற ஒருத்தர் இருக்காரா?) ரஷ்யாவில் பிரெட் பஞ்சம் அப்டின்னு தத்துப்பித்துன்னு நியூஸ் போட்டிருக்கிறார். பிரெட்டிற்கு நிற்பது தான் உண்மைனாலும், அவங்க ஏன் நிக்கிறாங்ககற காரணத்தை நான் சொல்றேன். எல்லோருக்கும்
பொருள் கிடைக்கணும்னா வரிசையாத்தான் நிக்கனும். ஒழுங்கு இல்லேன்னா பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சும் என்று புரிந்து இதுனாலதான் வரிசையா நிக்கிறாங்க. உடனே நம்ம ஊர் ரஜினிபட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ வரிசையை நினைக்காதீங்க. இது சற்று வேறமாதிரி. நம்மூர்லே பார்க்கறது கொஞ்சம் அபூர்வம் தான். அமைதியா, தள்ளுமுள்ளுங்கறதே இல்லாம ஒழுங்குடன் நிக்கிறது.

நம்ம ஊர்லேயும் இந்த வரிசையில் நின்று வாங்குகிற கான்செப்டு இருக்குது. ஆனா, அது பின்பற்றப்படும் இடங்கள் குறைவு. பின்பற்றப்படும் இடங்களிலே கூட பலசமயம் தாத்தாக்களின் புராணமும், 'அண்ணனின்' உறவும் மிக சத்தமாக விவாதிக்கப்படும். எங்க ஊர் ரயில்வே நிலையத்திலேயே பார்த்திருக்கிறேன். வரிசை இருக்கும். ஆனால் அதில் ஒழுங்கு என்பது இருக்காது. கவுண்டர் ஜன்னலில் ஒரே சமயத்தில் எப்படியும் நாலு பேர் கையில் காகிதத்துடன் நிப்பார்கள். ரிசர்வேஷமன் பார்ம் வாங்கணும் சாமர்த்தியமா நம்மளையெல்லாம் பைபாஸ் பண்ணி ஜன்னல் அருகிலேயே வாங்கி நின்று பூர்த்திசெய்துவிட்டு, சந்திலே சிந்து பாடும் புத்திசாலிகளும் இருப்பார்கள். ஆனால் இதிலும் சில மழை வரவழைக்கக்கூடிய அளவு பெரியவர்கள் பொறுமையாய் காத்துக்கொண்டிருப்பார்கள். பஸ்பயணம், ரயில் பயணம் எல்லாம் விடுங்கள். அதைப் பத்தியெல்லாம் நொந்து பேசுவது வீணானது. பிளேனில் பறக்கும் பெரிய மனிதர்கள் கூட இப்படித்தான். தரையிறங்கி விட்ட உடனே அடுத்த செகண்ட், ஹேண்ட் பேகேஜ் எடுத்துகிட்டு வாசலுக்கு ஒடுவதற்கு ஒரு பெரிய போட்டியே இருக்கும். crew எல்லாம் வந்து மைக்கிலேயும், நேர்லேயும் கெஞ்சுவாங்க... மாட்டோமே. நம்ம காரியம் நமக்கு.

எந்த அலுவலகம் ஆகட்டுமே... உதாரணத்திற்கு வங்கிக்கு போனால் நம்மில் பலர் என்ன செய்வோம். வரிசையிலா நிற்கிறோம்? தெரிந்தவர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அவர் கையில் கொடுத்தால், பல கை மாறி வேலை முடிந்து நமக்கே திரும்ப வந்துவிடும். வரிசைப்பக்கம் போகவே வேண்டாம். அதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள் நிற்பதற்கு. இது கொஞ்சம் கீழ் மட்டம். ஓரளவு பெரிய பார்ட்டியாக இருந்தால், நேராக கிளை மேலாளர் அறைக்கு சென்று அமர்ந்துகொண்டு அங்கேயிருந்து வேலை வாங்குவார்கள். இந்த மாதிரி எந்த வகையிலாவது பை-பாஸ் தானே நம்மில் பலரும் செய்கிறோம்?

இங்கேயோ வரிசையென்று வந்துவிட்டால் எல்லா மக்களும் சமம், எவர் முன்னதாக வந்தாரோ அவருக்கே முன்னுரிமை. அவரின் status என்ன, அவர் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர், இவர் எந்த காட்டுக்கு ராஜா என்பதெல்லாம் அறவே செல்லுபடியாகாது. உன் turn என்றால் அதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. இது இனிக்கிறது, நமக்கு வேண்டும். இது வேண்டுமென்றால், இதைப்போலவே நீ அடுத்தவனின் வரிசையையும் தட்டிப்பறிக்க முடியாது என்பது கசந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது சோஷலிஸத்தின் hang-over ஆக இருக்கலாம், ஆனால் நல்ல விஷயம். இந்த எல்லோரும் சமம் என்பதற்கு இங்கே இருக்கும் இன்னொரு விஷயம் சொல்கிறேன். மேல்கூறிய வங்கியையே வைத்துக்கொள்வோமே. நம்மூரிலென்றால் கிளார்க், மானேஜரை சார் என்பார்; குப்பை கூட்டுபவரோ அய்யா என்பார். இங்கே. ஹா ஹா. இராமசாமி தான். மேலாளரை அவர் பெயர் சொல்லியே அழைக்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் பேராசிரியர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பர். சார், மோரெல்லாம் கிடையாது. ஒரே இடத்தில் வேலைசெய்தாலும், கீழ்நிலைப் பணியாளர் ஆனாலும் அவருக்கும் தன் சுயமரியாதை என்பது இருக்கிறது, கிளை மேலாளருக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என்பது எனது புரிதல். இதுவும் நல்ல விஷயம் தானே. இதைத்தானே தேவுடா தேவுடா பாட்டில் தலைவரும் பாடுகிறார்.

வரிசையில நிக்கிறதுன்னு சொன்னாலே அது ஏழ்மையின் காரணமாய்த்தான் என்று தப்பான முடிச்சு போடுவதில் தான் பிரச்சனையே. படித்தவரும் பணம் படைத்தவரும் பண்போடு வரிசையில் நிற்கிறார்கள் என்று ஏனோ நமக்கெல்லாம் உறைக்க மறுக்கிறதல்லவா? நமக்கு தலைக்குமேல் ஆயிரம் வேலை இருக்கிறது, என் தாத்தா அவ்வளவு பெரிய ஆள், நாளைக்கு காலையிலே ஆபிஸ் போகணும்.. நம்ப போய் இந்த பிசாத்து க்யூவிவில நிக்கறதா?.. இப்படி வரிசையை விடுவதற்கு ஆயிரம் காரணங்கள். ஏன் இதெல்லாம் நம் ஒருவருக்கு மட்டுந்தானா இருக்கிறது? வரிசையில் நிற்கும் மற்றவர்களுக்கும் இதே மாதிரி தானே பல பிரச்சனைகள் இருக்கவேண்டும் என்று சிந்திக்க நமக்கு நேரமில்லை. ரஷ்யர்கள் எல்லாம் அலுவலகம் போகாதவர்களா? அவர்கள் நிற்கிறார்களே? ஏன் நம்மால் முடியவில்லை? இதற்கு பதில் கூற எனக்கு தெரியவில்லை.

இந்த தினமலர் கட்டுரையை மேற்கோள் காட்டி என்னை துக்கம் விசாரித்தவர் பலர். நாம் மறுக்கப்போனால் ஆயிரம் விஷயங்கள் - சிலது சொந்தக்கற்பனை; பலது இந்த மாதிரி வந்த கற்பனை. அவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் (தனிச்செய்தி: ரஷ்யப் பெண்கள் பற்றி என்னிடம் கேட்காத ஆண்கள் மிகமிக குறைவு.. ஷரபோவா, மிஸ்கினா பத்தி மட்டுமில்லை :) ). ஆமாம், அப்படித்தான் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு விலகிவிடுதல் நலம். சரி, இப்போ புரியுதா? ஏன் வரிசையில நிக்கிறாங்க ரஷ்யர்கள்னு?

சரி, ஏ.டி.எம் வில்லி பாட்டி என்னானாங்கன்னு கேட்கறீங்களா? அவங்க பாட்டுக்கு பொறுமையா பணம் எடுத்து முடிச்சிட்டு போகற வரைக்கும் பதில் பேசாம நின்னு பின்னாடி. வரிசையில் கடைசிவரை நின்னு பணம் எடுத்துகிட்டு வந்தேன். இந்த மாதிரி நின்னதுலே ஒரு பெரிய சமுதாய சீர்திருத்த சமத்துவ தத்துவமே*(1) இருக்கு இல்ல??


*1. பின்ன இந்த மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாட்டி, சும்மா ஏடிஎம் போய் பணமெடுத்தானாம்... டிலே ஆச்சாம்.. இதுக்கு வழவழன்னு முழ நீளத்துக்கு ஒரு பதிவாம்.. படிச்சு பதில் சொல்ல நம்மள மாதிரி வெட்டி வேறையான்னு உங்களை நீங்களே குறைச்சு எடைபோட்டுக் கொள்ளக்கூடாதில்ல. அதுக்குத்தான் :)

12 Comments:

 1. சுந்தரவடிவேல் said...

  உங்க எல்லாப் பதிவுகளையும் வரிசையாப் படிக்கலன்னாலும் குறுக்க குறுக்க வந்து படிச்சுட்டுப் போறேன்!
  நல்ல பதிவு.


 2. rv said...

  நன்றி sundaravadivel

  தொடர்ந்து வருகை தாருங்கள்.


 3. Suresh said...

  நல்ல பதிவு.


 4. தாணு said...

  //இதுசோஷலிசத்தின் hang-over ஆக இருக்கலாம்,ஆனால் நல்ல விஷயம்//
  நடைமுறை வாழ்க்கை கஷ்டமானதாகத் தோன்றினாலும் அதன் தாத்பர்யம் புரிந்த உணர்வுகள் நல்ல படிவைத் தந்துள்ளது.

  அடுத்த ஏடிஎம் 5 நிமிட நடையில் என்று எழுதியிருந்தீர்கள், சொந்த வாகனம் வைத்துக் கொள்ளும் தன்மை அங்கே எப்படி உள்ளது? தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்


 5. துளசி கோபால் said...

  //பிளேனில் பறக்கும் பெரிய மனிதர்கள் கூட இப்படித்தான். தரையிறங்கி விட்ட
  உடனே அடுத்த செகண்ட், ஹேண்ட் பேகேஜ் எடுத்துகிட்டு வாசலுக்கு
  ஒடுவதற்கு ஒரு பெரிய போட்டியே இருக்கும். crew எல்லாம் வந்து
  மைக்கிலேயும், நேர்லேயும் கெஞ்சுவாங்க... மாட்டோமே. நம்ம காரியம் நமக்கு.//

  அதுலேயும் இந்த சிங்கப்பூர் ஃப்ளைட் சென்னையைத் தொட்டவுடனே, 'டபார் டபார்'னு
  நம்ம தலைக்குமேலெ இருக்கற கேபினெட்டைத் திறக்கரது இருக்கே அப்பப்பா....
  அதுலேயும் ச்சும்மா உக்காந்திருக்கற நம்மைப் பார்த்து.'தோடா இளிச்சவாயன்'னு ஒரு பார்வை வேற!


 6. rv said...

  சுரேஷ் செல்வா, துளசியக்கா
  நன்றி.

  //அதுலேயும் ச்சும்மா உக்காந்திருக்கற நம்மைப் பார்த்து.'தோடா இளிச்சவாயன்'னு ஒரு பார்வை வேற!
  //

  சரியாச் சொன்னீங்க. இது பிளேன்ல மட்டுமல்ல, மத்த இடங்களிலும் க்யூவை கட் பண்ணமுடிஞ்ச திருவாளர்கள் அதே வரிசையில் நிற்போர் மீது வைக்கும் ஏளனப் பார்வை.

  போன பதிவு பின்னூட்டங்கள திரும்பப் பாக்கலியோ?? :)))


 7. Anand V said...

  நல்ல பதிவு இராமநாதன்


 8. rv said...

  தாணு,
  //சொந்த வாகனம் வைத்துக் கொள்ளும் தன்மை அங்கே எப்படி உள்ளது?//
  எல்லா metropolis-களை மாதிரியே தான் வாகனங்கள் வைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சனைகள். ஸ்பெஷலாக ஒன்னும் எனக்கு தெரிந்து இல்லை.

  பெட்ரோல் விலை - அதிகமில்லை ஒரு லிட்டர் பெட்ரொல் 40 அமெரிக்க செண்ட்கள். நம்மூர் ரூபாய் கணக்குக்கு 19ரூ.

  டிராபிக். ஜாம். இது ரொம்பப் பெரும் சிக்கல்.

  மத்தபடி எனக்குத் தோன்றுவது பனிக்காலம்.

  ------------
  இவற்றையெல்லாம் பார்த்தால் நகரில் நன்கு ஊடுருவியிருக்கும் பொதுப் போக்குவரத்துகளில் செல்வதனால் அலைச்சல் மிக குறைவு. பரந்து விரிந்த மெட்ரோக்களும், பஸ்களும் தம்முடைய அட்டவணைகளை அநேகமாக மீறுவதில்லை.


 9. rv said...

  Thanks Anand.


 10. Ganesh Gopalasubramanian said...

  //வரிசையில நிக்கிறதுன்னு சொன்னாலே அது ஏழ்மையின் காரணமாய்த்தான் என்று தப்பான முடிச்சு போடுவதில் தான் பிரச்சனையே. //
  நல்ல கருத்து.

  // நீங்களே குறைச்சு எடைபோட்டுக் கொள்ளக்கூடாதில்ல. அதுக்குத்தான் :) //
  அடடா என்ன ஒரு அக்கறை. அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம் ராம்ஸ். நாங்க எங்க சகாக்களை என்னைக்குமே விட்டு கொடுக்கறதில்லை.

  இருந்தாலும் இந்த walkman மொழிபெயர்ப்பெல்லாம் ரொம்ப ஓவர்.

  //இந்த மாதிரி எந்த வகையிலாவது பை-பாஸ் தானே நம்மில் பலரும் செய்கிறோம்?//
  இப்போ எல்லாம் தெரிஞ்சவங்கள பேங்கில் போய் பார்ப்பதில்லை. காலையில் அவங்க வீட்டுக்கே போய் withdrawl form பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது. மாலையில் போய் பணத்தை வாங்கி வர வேண்டியது.

  ஆனா ஏடிஎம் செண்டர்கள் வந்த பிறகு இந்த தவறு கொஞ்சம் குறையவே செய்திருக்கிறது


 11. Karthikeyan said...

  //நம்ம ஊர்லேயும் இந்த வரிசையில் நின்று வாங்குகிற கான்செப்டு இருக்குது. ஆனா, அது பின்பற்றப்படும் இடங்கள் குறைவு//
  அத ஏன் கேக்கிறிங்க சென்னையில கிட்டதட்ட எல்லா ரயில் நிலையத்திலையும் பெண்களுக்கு தனி வரிசை கிடையாதுன்னு போட்டு இருக்காங்க ஆனா அத யாரும் பொருட்படுதுறதே கிடையாது

  //ஏன் இதெல்லாம் நம் ஒருவருக்கு மட்டுந்தானா இருக்கிறது? வரிசையில் நிற்கும் மற்றவர்களுக்கும் இதே மாதிரி தானே பல பிரச்சனைகள் இருக்கவேண்டும் என்று சிந்திக்க நமக்கு நேரமில்லை.//

  சிந்திக்க வேன்டிய விஷயம்


 12. rv said...

  கணேஷ்,
  ஏதோ நம்மாலான ஒரு தமிழ்ச்சேவை. பொதுவாக இந்த நல்ல பழக்கம் நம்முரில் குறைவு என்பது என் கருத்து.

  கார்த்திக்,
  //அத ஏன் கேக்கிறிங்க சென்னையில கிட்டதட்ட எல்லா ரயில் நிலையத்திலையும் பெண்களுக்கு தனி வரிசை கிடையாதுன்னு போட்டு இருக்காங்க ஆனா அத யாரும் பொருட்படுதுறதே கிடையாது//

  தனி லைன் வேணாங்கறீங்களா? எனக்கு என்னவோ தனி வரிசை தான் நல்லதுன்னு தோணுது. patronizing- ஆ சொல்லலே. பொதுவாகத்தான் சொல்கிறேன்.

  நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்