குத்தாலம் போன கதை - 1

கொடைக்கானல் போயிட்டு வந்தாச்சு. சரி அடுத்து எங்கே போகலாம்னு பார்த்தப்போ அப்பாவோட நண்பர் திருக்குத்தாலத்துக்கு வரச் சொல்லி சொன்னார். இந்த குத்தாலம், கித்தாலம்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்றுவிட்டு கடுப்பாகிவிட்டது. கூட்ட நெரிசல்னா சாதாரணமில்ல. தள்ளுமுள்ளு பயங்கரமா இருக்கும். அருவியில குளிக்கப்போகும்போது சோப்பு, ஷாம்பு, எண்ணெயெல்லாம் எடுத்துப்போக தேவையே இல்ல. இருக்கற கூட்டத்தில பக்கத்திலிருக்கறவங்க நல்லா நமக்கும் சேத்துத் தடவி விட்டு போய்டுவாங்க. அதனாலேயே common shower மாதிரி ஒரு அருவி, அதுல அடுத்தவன் சோப்பு போட இவ்வளவு தூரம் (450 கிமீ) போகணுமா? என் தம்பிக்கும் எனக்கும் அவ்வளவு
இஷ்டமில்லை. கடைசியில என்ன.. நம்ப சொல்லி யாரு கேக்கறா, அங்கதான் போகணும்னு மேல சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டாச்சு. சரி, போறது போறோம் அப்படியே அந்தப் பக்கமிருக்கற கோயில் கொஞ்சத்துக்கும் போவோம்னாங்க அம்மா. திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், நெல்லையப்பர், திருச்செந்தூர், திருக்குத்தாலநாதர் அப்படீன்னு பெரிய லிஸ்ட் ரெடி.

தஞ்சாவூர்-திருச்சி-மதுரை ரோடெல்லாம் பிரமாதமா போட்டு வெச்சுருக்காங்க. மதுரைக்கு இதற்கு சில நாட்கள் முன்னர்தான் சென்று வந்ததால் பை-பாஸ். தமிழ்நாட்டில் இப்படியும் சில நல்லவர்களாங்கற மாதிரி ஒருத்தற அங்க சந்திச்சோம். அவரைப் பத்தியும் மதுரையைப் பற்றியும் தனியே அப்புறம்.

மதுரையிலிருந்து தென்காசி சாலையில் உள்ள திருவில்லிபுத்தூரைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்த ஊருக்கு போகாதவர்கள் கூட தமிழ் நாடு அரசின் புண்ணியத்தில் அந்த ஊர் கோயிலின் கோபுர தரிசனம் கண்டிப்பாக செய்திருப்பார்கள். ஆண்டாள் பிறந்த ஊர் என்பதைவிட தற்காலத்தில் தாமரைக்கனியின் ஊர் என்பதும் பால்கோவாவும் பிரபலமாக மற்ற காரணங்கள்.

ஊரை நெருங்கும்போதே விண்ணையே அளப்பது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் வடபத்ரசயனப் பெருமாள் திருக்கோயிலின் - சிற்ப வேலைகள் எல்லாம் இல்லாமல் சிம்பிளான ஆனால் பிரம்மாண்ட கோபுரம் - தெரிகிறது. ஆண்டாளும் பெரியாழ்வாரும் வாழ்ந்த ஊர். அவர்கள் கதையெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும். வடபத்ர சயனப் பெருமாள் கோயிலுக்கு அருகில் ரங்கமன்னார் திருக்கோயிலும், இவற்றிற்கு இடையில் ஆண்டாள் பூப்பறித்த நந்தவனமும் இருக்கின்றன.ஆண்டாள் தினமும் தான் மாலை சூடிய அழகை பார்த்தது என்று சொல்லப்படும் கண்ணாடிக் கிணறு ரங்கமன்னாரின் சன்னதியிலேயே இருக்கிறது. திருவில்லிப்புத்தூரில் காட்சியளித்தாரே தவிர திருவரங்கத்தில் தான் ஆண்டாளை ஏற்றுக்கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் திருவரங்கப் பெருமான் தனியாகப் படுத்திருக்கிறார் என்றும், லட்சுமி, பிரம்மா மற்றும் ஏனையோர் இல்லையென்றும் சொன்னார்கள். அப்படித்தனியாகத்த இருக்கிறார். அதையும் பார்த்தாகிவிட்டது (திருமால் பெருமை திரைப்படத்தில் கொஞ்சம் கதையை மாற்றி விட்டார்கள். அந்தப் படத்தில் வரும் திருமங்கையாழ்வாரின் சரித்திரமும் வேறுவிதமாக காட்டப்படுகிறது).

திருவில்லிபுத்தூர் வந்துவிட்டு பால்கோவா வாங்காமல் போவதா என்பதால் கோயிலுக்கு வெளியே உள்ள கடை ஒன்றில் நான்கு பொட்டலம் கேட்டோம். கண்முன்னே நான்கு வைக்கிறார் என்று நம்பி வாங்கிவிட்டு காரினுள்ளே பின்னர் பிரித்துப் பார்த்தால் மூன்று தான் இருந்தது. திருட்டு என்றாலும் திருந்தச் செய்த கடைக்காரரின் மேஜிக் திறமையைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். சுவையும் அவ்வளவு நன்றாக வேறு இல்லை. சரி, நேரமின்மையால் சண்டை போடாமல் அங்கிருந்து கிளம்பி அடுத்து சங்கரன்கோயில் சென்றோம். இராஜபாளையம் தாண்டி தென்காசி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து திருநெல்வேலி போகும் வழியில் இருக்கிறது சங்கரன்கோயில்.

போகும்போதே மணி 1330. சங்கரலிங்கத்திற்கும், கோமதியம்மனுக்கும் மதிய சாப்பாடு நேரம். இருந்தாலும் ஆகஸ்ட் 15 கூட்டத்தால் எங்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார்கள். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மாதிரி வித்தியாசமான கான்சப்ட் கோயில் இது. 'அரியும் சிவனும் ஒன்று' என்பதற்கேற்ப சங்கரநாராயணர் இங்கே இருக்கிறார். ஒரே சிலையில்
வலப்புறம் சிவனின் சின்னங்களும், புலித்தோலும் அணிந்து இடப்புறம் நாராயணனின் சின்னங்களையும் பட்டு வேட்டியும் அணிந்து இருக்கிறார். சங்கரலிங்கமும், சங்கரநாராயணரும் இருந்தாலும் கோமதியம்மனுக்குத்தான் இங்கு கூட்டம். இதுவும் நல்ல பெரிய கோயில்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் சாலை ரொம்ப சுமார். வழி நெடுக windmills. அடிக்கிற புயல் காத்திலும் வெய்யிலிலும் அவை சுற்றிக்கொண்டிருந்தது அழகு.

திருநெல்வேலி - எல்லா இடத்திலேயும் மூணு சுழி "ண" போட்டு திருநெல்வேலி 'டவுண்' என்றே எழுதி வைத்துள்ளார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. ஏன் இப்படித் தப்பா எழுதியிருக்கீங்கன்னு நேரா கேட்க தைரியம் வரல. விவேக் சொல்வது போல் அருவாளை ஸ்டாண்டிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவோர் அதிகம் உள்ள ஊராச்சே ;)

நெல் வயலைக் காத்த நெல்வேலியப்பர் திருக்கோயில் - பிரம்மாண்டம் என்பதற்கு அருமையான example. 17.5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் கோயிலுக்குள்ளே இன்னொரு "திருநெல்வேலி டவுண்" இருக்குமோ என்னும் சந்தேகம் வரும். உண்மையில் நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் தனித்தனி பெரியகோயில்கள் கட்டி ரெண்டையும் இணைத்து மெகாக்கோயில் ஆக்கியுள்ளனர். நெல்லையப்பர் சன்னதியின் வெளியில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகு (திருநெல்வேலிக்கு அருகிலேயே கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கும் கிருஷ்ணாபுரம் என்ற கோயில் இவ்வகை சிற்பங்களுக்காகவே பார்க்கப்படவேண்டியது). அதே போல் இங்கே இன்னொரு அதிசயம். கல்லால் ஆன musical தூண்கள். தூணைத்தட்டினால் ஒரு ஸ்வரம் கேட்கிறது. ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வரம். ரொம்ப வருடங்களுக்கு இதேபோல் தூண்களை ஹம்பியிலோ அதன் அருகிலோ பார்த்த ஞாபகம். சரியாகத்தெரியவில்லை.

பொதுவாகவே சிவன் லிங்கவடிவாகவே கோயில்களில் இருப்பதால் அவ்வளவு இண்ட்ரெஸ்டிங்காக இருக்காது. இந்த மாதிரி இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பவர் பெருமாள். பெருமாளென்றால் விதவிதமாக அலங்கராமென்ன, போஸ்கள் என்ன என்று life-ஐ அனுபவித்துக் கொண்டிருப்பார். பார்க்கும் நமக்கும் ஆர்வம் வரும். இந்தக் கோயிலிலும் ஜாலியாக படுத்துக் கொண்டிருக்கும் பெருமாள் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நெல்லை கோவிந்தர்.

சயனப் பெருமாள் தானே, இதிலென்ன என்ன புதுசு என்றால்... இருக்கே...

(தொடரும்)

6 Comments:

 1. துளசி கோபால் said...

  தம்பி,

  இந்தியாவுலே கீழே இருக்கற ஊர்னு காமிக்க 'டவுண்'ன்னு எழுதியிருப்பாங்களோ?

  நல்லா நகைச்சுவையா எழுதறதும் கைகூடி வந்திருக்கு.

  ஹையா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ.

  நல்லா இருங்க.

  என்றும் அன்புடன்,
  அக்கா


 2. rv said...

  துளசியக்கா,
  வாங்க வாங்க.

  ரொம்ப நன்றி.

  town-க்கு டவுன்னு தானே எழுதணும்?? டவுண்-னு மூணு சுழி போடறதில என்ன மேட்டர்னு தெரில.


 3. G.Ragavan said...

  // (திருமால் பெருமை திரைப்படத்தில் கொஞ்சம் கதையை மாற்றி விட்டார்கள். அந்தப் படத்தில் வரும் திருமங்கையாழ்வாரின் சரித்திரமும் வேறுவிதமாக காட்டப்படுகிறது). //

  ராமநாதன், பெண்ணைப் பெற்றவனைப் படித்தீர்களே. அதில் மாற்றம் செய்யாமல் எழுதியிருக்கிறேன் அல்லவா.

  // திருவில்லிபுத்தூர் வந்துவிட்டு பால்கோவா வாங்காமல் போவதா என்பதால் கோயிலுக்கு வெளியே உள்ள கடை ஒன்றில் நான்கு பொட்டலம் கேட்டோம். //
  கோயிலுக்குள்ளே பால்கோவா வாங்கக் கூடாது. வெளியே சொசைட்டி பால்கோவா வாங்க வேண்டும். பஸ்டாண்டில் கூட சொசைட்டி பால்கோவாவை தட்டில் வைத்து விற்பார்கள்.

  என் அம்மாவின் ஊர் திருவில்லிபுத்தூர் அருகில்தான் உள்ளது. ஆகையால் திருவில்லிபுத்தூர் பால்கோவா என்பது முன்பெல்லாம் தண்ணீர் பட்ட பாடு. இப்பொழுதும் தண்ணீர் பட்ட பாடுதான் (அடிக்கடி கிடைப்பதில்லை).

  சங்கரங்கோயிலும் எனக்குப் பிடித்த கோயிலே. எல்லாம் பக்கத்தில்தான். சங்கரங்கோயில் பிரியாணியும் மிகவும் பாப்புலர். நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என நினைக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். அதைச் சொல்லி விட்டேன்.


 4. rv said...

  இராகவன் சார்,
  நீங்கள் பெண்ணை பெற்றவனில் எழுதிய கதைதான் எனக்குத் தெரிந்ததும்.

  ஊருக்கு திரும்பும்போது, ரங்கமன்னார் கோயிலுக்கு மெயின் ரோட்டிலிருந்து பிரியும் சாலையின் ஆரம்பத்திலேயே ஒரு கடையில் வாங்கினோம். நன்றாகவே இருந்தது. போனஸாக திருநெல்வேலி அல்வாவும் விற்றார்கள். அதுவும் பிரமாதம்.

  சங்கரன்கோயில் பிரியாணியா..நாம் சாப்பிடாவிட்டாலும், சாப்பிடுவோர் போகையில் சொல்லலாம், இல்லையா?

  நன்றி


 5. குமரன் (Kumaran) said...

  ராகவன்,

  சங்கரன் கோவிலில் பிரியாணி நன்றாய் இருக்குமா? எந்த கடையில் என்று சொல்லுங்கள். அடுத்தமுறை போகும் போது ஒரு வெட்டு வெட்டிடலாம்ன்னு இருக்கேன். ஹூம்...அடுத்த முறை அப்படிங்கறது இன்னும் ஒரு வருடம் கழித்தோ இரண்டு வருடம் கழுத்தோ...


 6. Anonymous said...

  விவேக் சொல்வது போல் அருவாளை ஸ்டாண்டிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவோர் அதிகம் உள்ள ஊராச்சே ;)

  vivek enna solvathu.. naan solren yaarula ava.. edula aruvaala..
  ontum illa manvasanai
  summa... nalla eluthi irukeenga..

  oru suttu suti vantha thirupthi


 

வார்ப்புரு | தமிழாக்கம்