கு. போ. கதை - 2 : கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

அப்படியென்ன விசேஷம் இந்த நெல்லை கோவிந்தரிடம் என்றால்... ஸ்டைலுதான்.

பிரம்மா மற்றும் ஏனையோர் புடைசூழ, மஹாலக்ஷ்மி பதமாய் காலை அழுத்திவிட தன் இடக்கையால் தலைக்கு முட்டுக் கொடுத்தபடியே ஆதிசேஷனின் மீது சாவகாசமாக படுத்துக்கொண்டு, புன்முறுவலுடன் சயனித்திருக்கும் பெருமாள், இதே போஸில் படுத்தபடியே சாவகாசமாக வலக்கையை நீட்டி, கீழேயிருக்கும் சிவலிங்கத்தினைப் பூக்களால் பூசித்தபடி ஆனந்தமாய் இருக்கிறார். இதன் அழகை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. நீங்கள் ஒருகணம் கற்பனை செய்து பார்த்தாலே தெரியும் காட்சியின் அழகு.

கடவுள் என்பவர் ஒன்றும் ஒரு அடி ஸ்கேலுடன் மிரட்டும் ஸ்கூல் டீச்சர் இல்லை. 2 ரூபாய் எலுமிச்சை வைக்காததற்கும், 10 ரூபாய் தேங்காய் உடைக்காததற்கும் லாரி ஏற்றிக் கொல்லும் கொடூரனல்ல. பக்தியோடு வந்தாயா, பக்தியில்லாமல் வந்தாயா, வேட்டி கட்டி வந்தாயா, காரிலே வந்தாயா, நடந்து வந்தாயா, திருநீறு பூசிக்கொண்டு சென்றாயா, பயபக்தியுடன் சரணாகதி அடைந்தாயா என்றெல்லாம் ஒவ்வொன்றையும் கண்கொத்திப் பாம்பாய் எதிர்ப்பார்ப்பவரும் இல்லை என்பதைத் எவ்வளவு அழகாக சொல்லாமல் சொல்கிறார் பெருமாள். பிறவி கொடுத்து, உன்னை நடத்திச் செல்பவன் நானென்ன கொடுங்கோலனா என்னைக் கண்டு பயந்து நடுங்குவதற்கு? அன்பு போதும். பயம் தேவையில்லை என்றல்லவோ சொல்கிறார். மனிதனாகப் பிறப்பது என்பதையே என்னவோ பெரும்பாவம் என்கிற ரேஞ்சுக்கு பல மதங்களும் முக்கியமாக இந்து மதம் திரித்திருக்கும்போதும், 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்' என்று தொண்டரடிப்பொடியார் பாடியதுதான் எவ்வளவு சரி என்பது புரிந்தது. இதையே தானே சிவனடியார்களும் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று மனிதனாய்ப் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பாடினார்கள். இதைத்தான் கோவிந்தரும் காட்டுகிறார் போலும். மொத்தத்தில் சயனப்பெருமாள்களில் வித்தியாசமானவர் தான் இல்லையா?

பாளையங்கோட்டை முழுவதும் தோண்டி வைத்திருக்கிறார்கள். எந்த டிபார்ட்மெண்ட் என்று தெரியவில்லை. இனிவரும் சாலைக்கும் இதுதான் முன்னோடி என்பது போல், திருச்செந்தூர் ரோடு மகா மட்டம். வழியிலே திருவைகுண்டம் வைகுண்டநாதர், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் ஆகியோரை முன்னரே ஒருசமயம் பார்த்திருப்பதால், வெளியிலிருந்தே ஹாய் சொல்லிவிட்டு திருச்செந்துர்ர் போய் சேருவதற்குள் பிரஷர் எகிறிவிட்டது. திருச்செந்தூர் - சிவந்தி ஆதித்தன் அவர்களின் ஊர். ஊருக்கு வெளியில் பெரிய கல்லூரி. வளைச்சு போட்டிருக்கார்னு சொல்வாங்களே, அதைப் பண்ணிருக்கார்.

திருச்செந்தூரில் இருக்கும் ஒரே டீஸண்டான ஓட்டல் எனக்கு தெரிந்து சிவமுருகன் லாட்ஜ் தான். தேவஸ்தான தங்குமிடங்கள் எல்லாம் ரொம்ப சுமாராகத் தான் இருக்கும். முருகனைப் பாக்க போனியா, இல்ல ஓட்டல் ரூம்ல படுத்துகிட்டு டீவி பாக்கப்போனியான்னு நீங்கள் நினைப்பது கேக்குது. இருந்தாலும், சிவமுருகனுக்கே போனோம். ரூம் ரெடியாக லேட்டாகும்னு சொன்னதால வெளியில வெயிட் பண்ணிக்கொண்டிருந்தபோது, பறவை முனியம்மா குடும்பத்தோட வந்திருந்தாங்க. எங்களைத்தான் அவங்களுக்கு அடையாளம் தெரியல.

சரி, அவரை விட்டுவிட்டு செந்திலாண்டவனைப் பார்க்க கிளம்பினோம். சந்தன அலங்காரம் ரொம்ப அழகு. மூலவருக்கு பின்னாடி பஞ்ச லிங்கங்கள் வச்சுருக்காங்க. உள்ளே குனிஞ்சு போயிட்டு வரதுக்குள்ள பெண்டு நிமிர்ந்து விட்டது. மூலவருக்கு இடப்பக்கத்தில் உற்சவர் சன்னதி. அவருக்குத்தான் சண்முகார்ச்சனை என்று சொல்லி நம்மை ஒரு அரைமணி கீழே உட்காரச்சொல்லிவிடுகிறார்கள். இந்த உற்சவரைப் பார்த்தால் முருகப்பெருமானின் official வாகனம் மயிலா இல்லை கரப்பான்பூச்சியான்னு ஒரு fundamental சந்தேகம் வரும். அவ்வளவு கரப்புகள். அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும், நம்மேலும், எதன்மேலும் ஓடி விளையாடுகின்றன. முருகன் மேலுள்பட. எப்படி இப்படி ஒரு மினி கரப்பு ஆராய்ச்சி மையம் வைத்து உங்களால் பராமரிக்க முடிகிறது என்று அவர்களை கேட்க நினைத்தேன். ஆனால் எப்படா விடுவார்கள்.. நாம் இந்த "fear factor" செட்டிலிருந்து தப்பிப்போம் என்று நினைத்து ஓடி வந்துவிட்டேன்.

அடுத்த நாள் ஒரு குட்டி விசிட் பீச்சிற்கு. அங்கிருந்து கிளம்பி அதே டப்பா ரோட்டில் திருநெல்வேலி டவுண் ரொம்ப டவுனாய் வந்தடைந்து ஒருவழியாக தென்காசி செல்லும் சாலையில் சேர்ந்தோம். நல்ல வேளையா, இது ரொம்ப நல்லாவே போட்டிருக்காங்க.

காத்துதான் பேய்க்காத்து. சாலையோரம் இருக்கிற மரங்களின் கிளைகள் எல்லாம் ஒரே திசையாகவே வளர்ந்திருந்தன.

தென்காசி - சின்ன ஊர். உலகம்மையுடன் இருக்கும் விசுவனாதரின் திருக்கோயில்தான் பிரதானம். கோயில் கோபுரத்தின் வழி நுழையும்போது அடிக்குது பாருங்க ஒரு காத்து. ஏதோ wind tunnel-க்குள்ள நுழஞ்ச மாதிரி ஒரு எப்பெக்ட். ஆளையே தூக்கிக்கிட்டு போற பலத்தோட அடிக்குது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு பராக்கிரம பாண்டியன்.. இல்லை.. ஜடிலவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி அரிகேசரிதேவ பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (அப்பா. இதுக்கே தனியா பதிவு போடணும் போலிருக்கே) கட்டிய கோயில். திருநெல்வேலியைப்போலவே இங்கும் இசைத்தூண்கள் உண்டு.

தென்காசி வரை பொறுத்தீங்க. குத்தாலம் இன்னும் 5 கிலோ மீட்டர் தானே.. கொஞ்சம் தூரம் தான்...பொறுத்துக்குங்க...ப்ளீஸ்

(தொடரும்)

குத்தாலம் போன கதை - 1-ன் தொடர்ச்சி இந்தப் பதிவு.

9 Comments:

 1. துளசி கோபால் said...

  தொடர் சூப்பராப் போகுது.

  ம்ம்ம்... அப்புறம்?

  கதை கேக்கற சுவாரசியத்துலே இருக்கேன்.

  அக்கா


 2. rv said...

  ரொம்ப நன்றி துளசியக்கா..

  நாளைக்கு அடுத்தது.. மூணு நாள் நடந்ததை கஷ்டப்பட்டு மூணு நாளுக்கு மூணு பதிவாக இழுத்த்த்த்திருக்கேன்..

  எப்படித்தான் மெகாசீரியலுக்கெல்லாம் திரைக்கதை எழுதறாங்களோ தெரியல..


 3. Anand V said...

  //எப்படித்தான் மெகாசீரியலுக்கெல்லாம் திரைக்கதை எழுதறாங்களோ தெரியல..

  You are on the right track buddy !

  :)


 4. rv said...

  ஆனந்த்,
  வாங்க வாங்க. வந்ததுக்கு வாரிட்டீங்க :)

  சொன்னா நம்ப மாட்டீங்க. இப்போதான் ஒரு 10 நிமிஷம் முன்னாடி நினைச்சேன். என்ன உங்க பதிவுகள் எல்லாம் ஒரு நாலஞ்சு நாளா update பண்ணாம இருக்கே? எங்க காணோம்னு?

  பிஸியா?


 5. Anand V said...

  இராமநாதன்
  Long weekend எங்களுக்கு. நானும் கூட இரண்டு நாள் extra எடுத்துக்கிட்டேன்.


 6. rv said...

  நல்லா எஞ்சாய் பண்ணீங்களா?

  இங்க இனிமே லாங் வீக்கெண்டெல்லாம் new year சமயத்திலதான்.

  குளிர வேற ஆரம்பிச்சுடுச்சி. அங்க எப்படி? :(


 7. Anand V said...

  Ramanathan
  I sent you a mail to your .ru id.
  Did you get it ?

  Anand


 8. rv said...

  இப்பதான் வந்துச்சு ஆனந்த்.

  பதில் மெயில்-ல அனுப்பறேன்.


 9. G.Ragavan said...

  // பறவை முனியம்மா குடும்பத்தோட வந்திருந்தாங்க. எங்களைத்தான் அவங்களுக்கு அடையாளம் தெரியல. //

  நல்ல கலக்கல்.

  அவங்க பேரு பரவை முனியம்மான்னு நெனைக்கிறேன்.

  திருச்செந்தூர்க்கு தூத்துக்குடி வழியில் போவதுதான் சுகம். என்னவோ தூத்துக்குடியை இழுத்தாலே ஒரு சந்தோசந்தான்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்