கு. போ. கதை - 4: குறும்பலா ஈசர், இசைப்புயல், மூன்றருவி

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே

அரவி னணையானு நான்முகனும் காண்பரிய அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
குரவமுறு வல்செய்யும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே


என்று சம்பந்தர் பெருமான் திருக்குறும்பலாப்பதிகமும்...

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே

என்று திரிகூடராசப்பருடன் இணைந்து இசைப்புயலும் பாடல் அருளிச்செய்த திருத்தலம் திருக்குறும்பலா ஈசர் குழல்வாய்மொழியம்மையுடன் காட்சிதரும் திருக்குற்றாலம்.

குற்றாலம் என்பது ஏதோ இக்காலத்தில் பிரபலமானது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வற்றாத வடவருவியில் (பேரருவி) நீராடி அகத்திய முனிவரில் தொடங்கி பலரும் வழிபட்ட சிறப்பான கோயில் இங்கு இருக்கிறது. நாங்கள் சென்றபோது இரவு குற்றாலநாதருக்கு கோயிலின் மாதக்கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு பள்ளியறைப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று கூறப்படும் தலமரம் என்று ஒரு பலாமரத்தின் கிளைகளை வைத்திருக்கின்றனர்.

இரவு 12 மணிக்குமேல் அருவிகளில் கூட்டம் குறையும் என்று சொல்லப்பட்டதால், அந்த நேரத்தில் சென்றோம். ஆனால், எங்களின் insider
info குத்தாலம் வந்த அனனவருக்கும் தெரிந்திருந்தது போலும். கூட்டம் நிறையவே இருந்தது. இருந்தாலும், மதியம் பெற்ற அனுபவத்தால் இந்த முறை அருவியில் நுழைவது அவ்வளவு கஷ்டமாக இல்லை. இராத்திரியில் குளிர் கொஞ்சம் அதிகமென்றாலும், அது ஒரு புதுவித அனுபவம். ஏதோ பகல் வேளை போல கூட்டமும், கூச்சலும் சேர்ந்து உற்சாகமாய் இருந்தது. மதியம் இருந்த காவலர்களே, பாவம் இன்னும் உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அங்கு மீண்டும் ஒரு மணிநேரம். அதற்குப் பிறது ஐந்தருவிக்கு சென்றோம்.

ஐந்தருவிக்கு சுமார் 6-7 கீ.மீ ஊரை விட்டு செல்லவேண்டும். வழியில் இசக்கி ரிசார்ட்ஸ் என்று பெரிதாக கட்டிவைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டி, ஐந்தருவிக்கு சென்றால் அங்கு பேரருவியைவிட கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது வெறும் மூன்றருவியாகத்தான் இருந்தது. அங்கேயும், உள்ளே தவம் புரியும் கணவான்கள் நிறைய. இருபாறைகளுக்கு மத்தியில் அதிவேகத்துடன் கொட்டுவதால் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியில் வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தனர். அடித்துப்பிடித்து உள்ளே நுழைந்து அங்கேயும் குளித்துவிட்டோம். பேரருவியை விட அதிக வேகத்துடன் இங்கே கொட்டுகிறது. வெளியில் வந்து சூடாய் பஜ்ஜியும், காபியும் குடிப்பதில் ஒரு தனி சுகம்.

புலியருவியில் தண்ணீர் வரத்து இல்லையென்று நண்பர் சொன்னதால் அதை விட்டுவிட்டு, பழைய குத்தாலம் அருவிக்கு சென்றோம். அங்கும் தண்ணீர் குறைவு. மக்களோ நிறைய. குளிக்காமல், வெறுமனே பார்த்து மட்டும் விட்டு அங்கிருந்து கிளம்பி சிற்றருவிக்கு வந்து சேர்ந்தோம். மிச்ச அருவிகளெல்லாம் இலவசம். வாகனத்திற்கு மட்டும் தான் வரி. இங்கே, குளிக்கவே பணம் கொடுக்கவேண்டும். இங்கும் ஒரு மாதிரி குளித்துவிட்டோம். சிற்றருவிக்கு செல்லும் பாதையிலிருந்துதான் செண்பகாதேவி அருவிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். சிற்றருவிக்கு போவதைவிட செண்பகா அருவிக்கு செல்லும் மக்கள் அதிகமாகத் தெரிந்தனர். சுமார் முக்கால் மணி நேரம் மலைப்பாதையில் நடக்க வேண்டுமென்பதால், போகவில்லை.

குத்தாலத்திற்கு ஒரு மணி நேரம் தள்ளி பாபநாசம் மற்றும் பாணதீர்த்தம் அருவிகள் இருக்கின்றன. (இதில் பாணதீர்த்தம் என்பது ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை எடுக்கப்பட்ட சூப்பர் அருவி என்பது ஊருக்கு திரும்பிவந்தவுடன் தான் தெரிந்தது.:( )

குத்தாலம் ஐந்து அம்பலங்களில் 'சித்திர சபை' என்றழைக்கப்படுகிறது. சிவபெருமான் இங்கே ஓவிய வடிவாய் இருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் மிக அழகு. ஆனால் மிகவும் சிதிலமடைந்திருக்கின்றன. இயற்கையால் அல்ல. மூளையற்ற மனிதர்களால். எல்லா ஓவியங்களின் மேலும் கிறுக்கி வைத்திருக்கின்றனர் சில புண்ணியவான்கள். இதைப்பற்றி ஏற்கனவே வேறு பதிவு போட்டுவிட்டதால், இங்கே எழுதவில்லை.

அடுத்து எங்கு போகலாம் என்று ஆர்வமாய் அப்பாவை கேட்டேன்.. 'அது சரி, ஊருக்கு போகலாம்' என்று சொல்லிவிட்டார், ஹூம்.. விட்டால் குத்தாலத்தில் உள்ள அருவிகளிலெல்லாம் குளித்துக் கொண்டேதான் இருக்கலாம். ஆனால், என்ன செய்வது. ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமாகிவிட்டதே.

கூட்டம் மிக அதிகம் என்றாலும், என்னதான் அசுத்தம் அதுஇதுவென்று தேவையற்ற எரிச்சல் பட்டாலும் குத்தால அருவிகளுக்குள் நுழைந்தபின் அவையெல்லாமே மறந்தே போய்விடுகின்றன. அருவியில் டமடமவென்று கொட்டும் நீர் கொடுக்கும் உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை. இயற்கை அன்புடன் கொடுத்த பல பரிசுகளில் அருவிகளுக்கு தனியிடம் உண்டு. யார் வந்தாலும் வராவிட்டாலும், நன்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இயற்கை அன்னை கொடையாய் மழையாய் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். மனிதர்களாகிய நாமும் வாங்கிக்கொண்டே இருக்கிறோம். வாங்கிமட்டும் விட்டால் பரவாயில்லை. நம்மால் இயன்ற வரையில் அவளுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். வருடம் முழுதும் கொட்டிக்கொண்டிருந்த அருவிகள் மெலிந்து மெலிந்து சிலமாதங்களே இப்போது கொட்டுகின்றன. இந்த சுகத்தை நாம் பெற்றால் மட்டும் போதுமா, நம் பின் வரும் மக்களும் பெறவேண்டாமா?

இந்த மூன்று நாட்களில் சென்ற இடங்கள் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், அவற்றின் வரலாற்றுச் சிறப்பும் தமிழ்ப் பெரியோரின் பக்தியும் வியக்க வைக்கிறது. நம் தமிழ்நாட்டில் தான் எத்தனை சிறப்பு, எத்தனை பழமை, எத்தனை மகான்கள். பெரிது பெரிதாக ஊர்களையே தமக்காய் வளைத்துப் போடும் காலத்தில், கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு மினி நகரம் என்றளவில் கட்டி பொதுச்சொத்தாய் கொடுத்த தன்னலமற்ற தமிழ் மன்னர்களும், வாகனவசதியெல்லாம் இல்லாத பழங்காலத்திலும் காடுமலைகளில் எல்லாம் நடையாய் நடந்து ஓவ்வொரு திருத்தலமாகத் தேடிச் சென்று அப்பரும், ஞானசம்பந்தரும் மற்ற பெரியோரும் வந்து ஈசனைப் பாடி தமிழும் பக்தியும் வளர்த்த புண்ணிய இடங்களில் நாமும் நிற்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பதற்கே நெகிழ்வாக இருக்கிறது.

மொத்தத்தில், குத்தாலம் என்றவுடன் வெறுப்புடன் கிளம்பி பின்னர் அருவிகளில் உண்மையாகவே மதிமயங்கி இனி வருடம் ஒருமுறையாவது இங்கே வந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

(முற்றும்)

அப்பாடா.. ஒருவழியா முடிச்சாச்சு. அடுத்த மெகாத்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில். காத்திருங்கள்.

திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, திருஞானசம்பந்தரின் திருக்குறும்பலாப்பதிகம் முழுவதும் காண இங்கே செல்லவும்.இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை - 2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி
3. கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

7 Comments:

 1. தாணு said...

  அவ்ளோ தூரம் போயிட்டு பாணதீர்த்தம் பார்க்காமல் வந்திட்டீங்களே! நிஜமாவே ஒரு அமானுஷ்ய சூழல் கலந்த இடம்,ஆனால் இயற்கை அழகு கொள்ளை! அடுத்தமுரை கண்டிப்பாக போய் வாருங்கள்!
  தென் தமிழ்நாடு அதுக்குள் முட்டிந்துவிட்டதே என்றிருக்கிறது!


 2. Manjula said...

  இங்கிருந்தபடியே நானும் குற்றாலம் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன். அதுசரி, இது குற்றாலம் இல்லையோ, குத்தாலம் மாயவரத்து பக்கமாச்சே.


 3. rv said...

  தாணு
  ஆமாம், பாணதீர்த்தம் பற்றி பின்னர் தான் தெரியவந்தது. அடுத்த தடவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

  மஞ்சுளா,
  மாயவரம் அருகிலேயும் ஒரு குத்தாலம் இருக்கிறது. ஆனால் குத்தாலம், குற்றாலம் interchange-able என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். அந்த மாதிரி இல்லையா?

  நன்றி


 4. Manjula said...

  interchangeable-ஆகத் தான் இருக்கவேண்டும். ஆனால், மாயவரத்து குத்தாலம் (aka திருத்துருத்தி) தேவார ஸ்தலங்களுள் ஒன்று. ஸ்வாமியின் பெயர், உக்தவேதீஸ்வரர். ஸ்தல விருட்சம், உக்தால மரம். அதனால் ஊரின் பெயர் உக்தாலம் ஆயிற்று. அதுவும் மருவி இப்போது குத்தாலம்.


 5. G.Ragavan said...

  இந்த பாணதீர்த்தம் அருவியும் திற்பரப்பு அருவியும் பொதுப்பணித்துறையின் கீழ் வருகின்றன. அப்பாவின் பதவியால் இரண்டிலும் ஆட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் அளவுக்கு மீறியதில்லை. எல்லாருடனும் குளிப்பதுதான். ஆனால் கெஸ்ட் ஹவுஸ் இருப்பதால் பயன்படுத்திக் கொள்வோம்.

  ராமநாதன், நல்ல தொடர். முடிவது வருத்தமேயென்றாலும் அடுத்த தொடர் வருவதால் மகிழ்ச்சியே. காத்திருக்கிறோம்.


 6. துளசி கோபால் said...

  ராமநாதன் தம்பி,

  வரவர நீங்க போடற பதிவுகளில் ஒரு முதிர்ச்சி தெரியுது.
  ரொம்ப அழகான இயல்பான நடை!
  மெல்லிய நகைச்சுவை!

  ஆனந்தமான வாசிப்பு அனுபவம் கிடைச்சது.
  வாழ்த்துக்கள். நல்லா இருங்க.

  என்றும் அன்புடன்,
  அக்கா

  ( ரொம்பத் தமிழ் தெரிஞ்சவ. சொல்லவந்துட்டான்னு யாரும் திட்டறதுக்குள்ளே விட்டேன் ஜூட் )


 7. rv said...

  மஞ்சுளா
  அந்தக் குத்தாலத்தை பத்தி கேள்விப்பட்டிருக்கேனே தவிர போனதில்லை. உக்தாலம்-னா என்ன புரியலையே...

  g.ragavan
  திருப்பரப்பு.. இந்த அருவியப் பத்தியும் பார்த்தேனே தவிர போக நேரம் கிடைக்கவில்லை. நீங்க ஒரு பதிவு போடுங்களேன் நேரமிருந்தால் ப்ளீஸ்.

  துளசியக்கா,
  உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்