213. மன்னர்களின் கிராமம்!

எழுத ஒண்ணும் மேட்டர் பெரிசா இல்லாததால போட்டோ போட்டு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன். Tsarskoye Selo (மன்னர்களின் கிராமம்) பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பல அரண்மனை வளாகங்களில் முக்கியமானது.

இந்த வளாகத்தில் இரண்டு முக்கியமான அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றின் உள்ளே பிறிதொரு நாள் செல்லலாம். அதுவரைக்கும் வெளியே சுற்றுவோம்.

மென்ஷிக்கோவ் என்பவருக்கும் சொந்தமான இடத்தை 1708-ல் பீட்டர் மன்னர் (Peter the Great) தன் மனைவி கேத்தரீனுக்கு பரிசாக அளித்தார். கேத்தரீன் ராணியானபின் உருப்பெற்றதே இந்த வளாகம். சுமார் 750 ஏக்கர்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது அரண்மனைகளும் சுற்றியுள்ள தோட்டங்களும். அரச குடும்பத்தினரின் கோடைக்கால வாசஸ்தலமாக சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பிரபலமாக இருந்தது. அதற்கப்புறம் என்னாயிற்று என்று கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னர் வளாகத்தினுள் நுழைவோம்.

சீராக பராமரிக்கப்படும் தோட்டமும் அதிலுள்ள சிற்பங்களும் அட்டகாசமானவை. அரண்மனையின் பிராதான கட்டடத்துக்கு செல்லும் அழகிய பாதை இதோ...


1. The Main Alley




இதே பாதையில் முன்னே சென்றால் இரு குளங்களைக் காணலாம். வலப்புறம் இருப்பது கண்ணாடிக்குளம் என்றழைக்கப்படுவது. ஏன் என்று சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதில் தெரியும் மஞ்சள் கட்டடம் அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட குளியல் குதூகலங்களுக்கானது. :) இரண்டாம் உலகப்போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தாலும் 1950 களில் அசலுக்கு இணையான முறையில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.


2. The Mirror Pond and The Washroom of their Highnesses




முதலாவது எகேத்தரீன் ராணி (Catherine the Great) இங்கே தன் வாழ்க்கையின் பெரும்பாதியை கழித்த அரண்மனை. முற்றிலுமாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு கண்ணைக்கவரும் ரஷ்யன் பரோக் வடிவமைப்பில் ஜொலிக்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹெர்மிடாஜ் அரண்மனைக்கும் இதற்கும் வடிவமைப்பில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். இதன் பிரம்மாண்டத்தையும் நீலம், வெள்ளையுடன் தங்கம் ஜொலிப்பதை போட்டோவில் justify செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். உலகப்போரின் போது பெரும் சேதமடைந்த இந்த அரண்மனையில் மொத்தம் 57 அறைகள் இருந்திருக்கின்றன. இப்போதோ வெறும் 29 மட்டுமே பொதுப்பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளன. மற்றவற்றில் இன்னமும் வேலைகள் நடைபெறுகின்றன. இவ்வரண்மனைக்குள் இருக்கும் அறைகள் உலகின் மற்ற அரச குடும்பங்களையே கூனிக்குறுக செய்துவிடும் அளவுக்கு இருப்பவை. உதாரணமாக இங்கே சென்று பார்க்கலாம்.

அரண்மனையைச் சுற்றி ஆங்கில ஸ்டைலில் சிறிய structured parkஉம் அதைச் சுற்றி பரந்த landscaped parkஉம் இருக்கின்றன.


3. Baroque Facade of The Catherine Palace




சார்லஸ் கேமரோன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கட்டிடவியல் வல்லுநரை பணிக்கமர்த்தி உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் கட்டிட சின்னங்களை ஒரே இடத்தில் கொண்டு வர கேத்தரீன் ராணி விரும்பினார். விளைவு ரோமன் தூண்களும், பாபிலோனியா ஸ்டைலில் தொங்கும் தோட்டங்கள் என புதையலே இருக்கிறது.

4. Cameron Gallery









அருகிலுள்ள பெரிய ஏரியை சுற்றி அழகான நடைபாதை போட்டு வைத்திருப்பதால் நடக்க அருமையான இடம். பகோடாக்கள், எகிப்தின் ஓபெலிஸ்க்கள் என பல காட்சிகளில் முதன்மையானது முற்றிலும் மார்பிளால் ஆன இந்தப் பாலம்.

6. The Marble Bridge





டூரிஸ்ட்களின் தாகம் தீர்க்க அரண்மனை வாயிலில் முளைத்திருக்கும் கபேயிலிருந்து...
7. The Regular garden - view from the cafe





ஓரளவுக்கு சுத்தியாச்சா.. சரி கொஞ்சம் தாண்டி அரண்மனைக்கு பின் பக்கம் போவோம். சுற்றுலாப்பயணிகளின் கண்களில் இன்னும் அவ்வளவா படாதது இது. அலெக்ஸாண்டர் அரண்மனை. கேத்தரீன் பாட்டி தன் செல்லப்பேரன் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச்சுக்காக ஆசைஆசையா கட்டினது இது. கேத்தரீன் அரண்மனைக்கும் முற்றிலும் மாறுபட்ட வடிவில் இருக்கும் இவ்வரண்மனையும் அதைச் சுற்றியிருக்கும் தோட்டமும் இன்னமும் முழுதாக புணரமைக்கப்படவில்லை. காரணம் முற்றிலுமாக ஜெர்மானியர்கள் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டதுதான்.

இவ்வரண்மனைக்கு இன்னும் ஒரு 'சிறப்பு' இருக்கிறது. பின்னால் இருக்கும் கேத்தரீன் ரஷ்ய அரச பரம்பரையின் பொற்காலத்தை காட்டுகிறது என்றால் இவ்வரண்மனையில் தான் அரச பரம்பரையே முடிவுக்கு வந்தது. 1917-ல் புரட்சிப்படையினரால் சைபீரியாவுக்குச் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அதே வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் நிக்கோலாஸ் II மன்னரும் அலெக்ஸாண்ட்ரா ராணியும் அவர்களின் ஐந்து குழந்தைகளும் இங்கேதான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நிக்கோலாஸும் அலெக்ஸாண்டராவும் தோட்டங்களில் உலாவ பெருந்தன்மையாக அனுமதிக்கப்பட்டிருந்தார்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?

அவர்கள் நினைவாக ஒரு சிறிய மார்பிள் தக்டு இருக்கிறது அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலில். அவ்வளவுதான். அரச பரம்பரையின் வரலாறு முற்றும் என்று நினைவுபடுத்தும் வகையில்.


8. Ruins of Alexander Palace




நியு யார்க் டைம்ஸில் 1917-ஆம் வருடம் நிக்கோலாஸின் வீட்டுச்சிறைப் பற்றி வந்த கட்டுரை.


அதிகாரப்பூர்வமான தளம்

----
இவற்றைத் தவிர அலெக்ஸாண்டர் லைசியம் (Lyceum) என்ற கல்வி நிறுவனமும் இங்கே இருக்கிறது. இதன் மிகப் பிரபலாமான மாணவர் அலெக்ஸாண்டர் செர்கெயெவிச் புஷ்கின். ரஷ்யாவின் முதன்மையான கவிஞர் என்று கருதப்பட்டவ்ர். இவரின் நூற்றாண்டை ஒட்டி 1930களில் இந்த ஊருக்கே புஷ்கின் என்று பெயர் சூட்டியது சோவியத் அரசு. பெரும்பாலான ஊர்களைப் போல் அதன் பழமையான பேரே மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது, சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.

23 Comments:

  1. வடுவூர் குமார் said...

    குளியல் குதூகலங்களுக்கானது. :)
    அப்படி என்ன குதூகலம்?? அதை கடைசியாக சொல்வீர்களா? :-))


  2. வடுவூர் குமார் said...

    என்னவோ புகைப்படம் எடுக்கவே கட்டப்பட்டது போல் உள்ளது அரண்மனை.


  3. நாகை சிவா said...

    ஊர் பொறுக்கும் கலை நல்லாவே வருது உங்களுக்கு...:)


  4. நாகை சிவா said...

    படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு.. கூடவே கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள் 1, 2 போட்டு இருக்கலாம்.... :)


  5. இலவசக்கொத்தனார் said...

    ரொம்ப அருமையா இருக்கு. வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு அழிச்சதை திரும்பி சரி செஞ்சுக்கிட்டு வராங்களே. நல்ல விஷயம்தான்.


  6. rv said...

    குமார்,
    //அப்படி என்ன குதூகலம்?? அதை கடைசியாக சொல்வீர்களா? //
    அட... sauna மற்றும் அந்தக்காலத்தில் இருந்த அனைத்து குளியல் சார்ந்த வசதிகளும்னு அர்த்தப்படுத்திக்கனும்.

    எதுக்கும் கேத்தரீனின் குளியல் குதூகலங்கள் யூட்யூப்ல இருக்கானு தேடிப்பார்க்கறேன். ஆராய்ச்சிக்காகத்தான்.

    நன்றி!!


  7. rv said...

    புலி,
    கண்ணுக்கு குளிர்ச்சியான படமா? என்ன எல்லாரும் சேர்ந்து என்னைய வேற மாதிரி டாக்டர்னு நினைச்சிகிட்டிருக்கறாப்புல இருக்கு???

    பொறுக்கச் சொல்லிக் கொடுக்கணுமா நமக்கு எல்லாம்? அதெல்லாம் பிறவியிலேயே வர்றதுப்பா...


  8. சேதுக்கரசி said...

    உள்ளேன்!


  9. G.Ragavan said...

    எத்தனை அழகான இடங்கள். கட்டிடங்கள். அப்பப்பா. அத்தனையையும் வைத்து வாழ்ந்தாலும்...மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.

    படத்துலயே இப்பிடி இருக்கே. நேருல பாத்தா எப்படியிருக்கும்.


  10. துளசி கோபால் said...

    ஹைய்யோ.............. அட்டகாசம். நிங்க அங்கெ இருக்கும்போதே ஒரு சுற்றுலாவுக்கு வந்துறனுமுன்னு கோபால் சொல்லிக்கிட்டெ இருக்கார்.


  11. துளசி கோபால் said...

    ஹைய்யோ.............. அட்டகாசம். நீங்க அங்கெ இருக்கும்போதே ஒரு சுற்றுலாவுக்கு வந்துறனுமுன்னு கோபால் சொல்லிக்கிட்டெ இருக்கார்.


  12. தருமி said...

    என்ன எல்லாரும் சேர்ந்து என்னைய வேற மாதிரி டாக்டர்னு நினைச்சிகிட்டிருக்கறாப்புல இருக்கு??? //

    நானெல்லாம் அப்படி இல்லங்க ..!


  13. rv said...

    கொத்ஸ்,
    //வரலாற்றின் சிறப்பு தெரிஞ்சு அழிச்சதை திரும்பி சரி செஞ்சுக்கிட்டு வராங்களே.//

    என்ன செய்ய.. எல்லா ஊர்லயும் இதே கதைதான்.. முதல்ல அழிச்சுட்டு.. அப்புறமா வரலாற தோண்டுறது... போனது திரும்ப வரப்போவுதா என்ன?

    ஆனா இங்க நிறைய எதிரிங்க அழிச்சது. அது ஒண்ணுதான் வித்தியாசம்!


  14. rv said...

    சேதுக்கரசி,
    என்ன 'பள்ளிக்கூடம்' சமீபத்துல பாத்தீங்களா??

    உள்ளேனு சொல்லிட்டு பின்னாடி ஒளிஞ்சிகிட்டா எப்படி?


  15. rv said...

    ஜிரா,
    //.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//

    சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?

    இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா?


  16. rv said...

    அக்கா,
    வாங்க வாங்க ரெண்டு பேரும்...

    எப்பனு சொன்னீங்கன்னா அதுக்குள்ள கேத்தரீனோட நகைசெட்டெல்லாம் கிடைக்குதான்னு பாக்கறேன்... :)))


  17. rv said...

    அக்கா,
    பி.க வுக்கு நன்றி. :)


  18. G.Ragavan said...

    // இராமநாதன் said...
    ஜிரா,
    //.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//

    சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?

    இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா? //

    கூடாது. கூடவே கூடாது. ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.


  19. ILA (a) இளா said...

    இரண்டாவது படம் சூப்பர். படிச்சுட்டு வந்து அடுத்த பின்னூட்டம் போடுறேன்


  20. rv said...

    பெரீய்யப்பா,
    அப்படி நினைக்கலேனு சிம்பிளா சொல்லாம 'நானெல்லாம் அப்படி இல்லங்க ..!'னு சொல்றத புரிஞ்சுக்கறதுக்கு எனக்கு ஏதாவது பொடிமட்டை தேவைப்படுமா???? :))))))))))))))))


  21. rv said...

    ஜிரா,
    //ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.//

    ஆஹா.. சமத்துவம்கறது இதுதானய்யா... பின்றீரு...


  22. rv said...

    விவசாயி,
    நன்றி..

    //படிச்சுட்டு வந்து அடுத்த பின்னூட்டம் போடுறேன//

    படிச்சு முடிக்க ஒருநாள் பத்தலியா??? :)))


  23. cheena (சீனா) said...

    மிகவும் மகிழ்ந்து போடப்பட்ட பின்னூட்டம் - இணையச் சதி காரணமாக We are sorry சொல்லப்பட்டு விட்டது. என்ன செய்வது. திரும்ப முயற்சிக்கிறேன்.

    கண்ணுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்கள் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய விளக்கங்கள் மிக மிக அருமை. ரசித்தேன். அரச குடும்பங்கள் அனுபவிப்பதற்காக, கலை உணர்வுடன், உலகில் உள்ள அனைத்துக் கட்டடக் கலைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்த மாபெரும் கலைஞர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆக்கலும் அழித்தலும் காலச் சக்கரம் சுழலும் போது மாறி மாறித் தான் வரும். அருமையான ஒரு பதிவு படித்து, பார்த்து ரசித்த ஒன்று.வாழ்த்துகள்


 

வார்ப்புரு | தமிழாக்கம்