179. திருவையாறு தண்ணிப்பக்கம் - நாள் 0.5

சதிலீலாவதியில் கோவை சரளாவின் immortal டயலாக் இது. பாகவதர்களெல்லாம் தண்ணிப்பக்கம் உக்காந்துக்கிட்டு பாட்டுபடிக்கும் காலம். நேற்றைக்குத்தான் விழா தொடக்கம். ஏழு மணிக்கு பாம்பே சகோதரிகள் பாடுவதால், ஆறுமணிக்கெல்லாமாவது தஞ்சாவூரிலிருந்து கிளம்பவேண்டிய நிலை. விசாகா ஹரியின் அருமையான ஹரிகதையை (உபயம்: ஜெயா டிவி) விட்டுவிட்டு கிளம்பினோம்.

போய்ச்சேர்ந்தால் எங்கும் 'கை'வண்ணம். பரம்பரை செயலர் திரு. ஜி.ஆர். மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் உத்சவத்தை தொடங்கிவைக்க, வந்திருக்கவேண்டிய ஆந்திர ஆளுநர் தன் செயலரை அனுப்பிவைத்திருந்தார் போல. அவரும் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. ஏன் இருக்கிறது என்றால் என் நியுஸ் உபயமும் தினமலர் தான். காரணம் இந்த 'கை'களின் புண்ணியத்தால் காரை ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு தள்ளிநிறுத்த வேண்டிய கட்டாயம். வாசனை கரித்துக்கொண்டே உத்சவ பந்தலுக்குள் நுழைவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

வைத்திருந்த ஸ்பெஷல் பாஸின் பலனால் மேடைக்கு பின்னால் விறுவிறுவென்று சென்றுவிட்டோம். நேர் எதிரில் மிகவும் தெரிந்த முகம். எங்கேடா பார்த்திருக்கிறோம் இந்த முகத்தை என்று நினைத்தவாறே இடம்தேட ஆரம்பித்தோம்.

செக்யூரிட்டி, செக்கிங் எல்லாம் ஒன்றையுமே காணோம். நானாவது பரவாயில்லை. வேட்டியில் சென்றிருந்தேன். ஏதோ வித்வான் என்று நினைத்து விட்டிருக்கலாமென்றால் என் நண்பன் ஏதோ காலேஜ் கெட் டுகெதர் செல்வது போல ஒரு பழைய டிஷர்டும், அதற்கு ஏற்றதாக சுருணைத்துணி போன்ற ஜீன்ஸும். அவனையும் சாவகாசமாக கேள்வியின்றி உள்ளே விட்டனர் போலீஸார். அவர்களின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி எங்கே செல்வது என்று அவர்களிடமே கேட்டு மேடைக்கு அருகில் காலியாய் இருந்த இடத்தில் வந்தமர்ந்தோம். அதற்குள் பாம்பே சிஸ்டர்ஸ் "மீ வல்ல" என்று காபியின் கடைசி வாய்க்கு வந்திருந்தார்கள்.






ஏன் அந்த இடம் காலியாக இருந்தது என்று புரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. There's a reason why some roads are less travelled என்று ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தில் கேட்டது நினைவுக்கு வந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் மேலே இருந்த விளக்குகளினால் எங்களுக்கு விட்டில் பூச்சி அபிசேகம் நடந்துகொண்டிருந்தது. ஒரு மட்டமான ஹாலிவுட் horror படத்திலில் பங்கெடுத்த எபெக்ட் இருந்தது. அதனால் அவசர கதியாக காப்பியை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்கு தாவத்தேடினோம்.

நாங்கள் இடம்பிடிக்கவும் முன்னர் பார்த்த பரிச்சயமான முகம் மேடையில் வந்தமரவும் சரியாக இருந்தது. அவர் எல்.சுப்ரமண்யம் என்று அறிவிப்பாளர் சொன்னவுடன் தான் பரிச்சயம் ஏன் என்று புரிந்தது. அடடா, அவருடன் கொஞ்சம் பேசியிருக்கலாமே. வித்வானாட்டம் மேடைக்குபின் வரை போய்வந்தும் கோட்டைவிட்டோமே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் அருகிலேயே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அம்பி சுப்ரமண்யமாம். அசுர வாசிப்பு. ஆரம்பமே அமர்க்களமாக நிரவதிசுகதா என்று பூர்ணரவிச்சந்திரிகாவில். நிரவதி சுகதா சாதாரண ஆட்கள் வாசித்தாலே பட்டையக் கிளப்பும் ஒரு பாட்டு. அப்படிப்போடு போடு போடு மாதிரி ஒரு மாஸ்ஹிட் நம்பர். அதில் எல்.எஸ் வேறு வாசித்தால் கேட்கவும் வேண்டுமா? கூட ஹரித்துவராமங்கலம் ஏ.கே. பழனிவேல் தவிலும் சேர்ந்தால்?





நிற்க. இப்போது நான் கிளம்ப நேரமாகிவிட்டது. அதனாலேயே நாள் 0.5. மிச்ச அரை நாளை வரலாம். இன்று ஓ.எஸ். தியாகராஜன், சிக்கில் குருசரண், காயத்ரி கிரீஷ். போய் கேட்டுவிட்டு வந்து நாள் ஒன்றை பற்றி முழுக்க எழுதிவிடுகிறேன். ஆடியோ கிளிப்களை ஏற்றிக்கொண்டிருப்பதால் நேரம் பிடிக்கிறது. நேற்றைக்கு பாடியிருக்கவேண்டிய ஓ.எஸ். அருண் வரவில்லை. அதற்கு பதில் டி.என்.சேஷகோபாலன் ஒப்பேற்றினார். அவருக்கு அப்புறம் மகராஜபுரம் ஸ்ரீநிவாசன். அவற்றை பற்றியும் நேற்றைய எல்.எஸ்ஸின் கச்சேரியைப்பற்றியும் நாளை காலையில்.

(தொடரும்)

13 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    இராமநாதன். விசாகா ஹரியைப் பற்றி மேல் விவரம் தெரிந்து கொள்ளவேண்டும். எங்கே கிடைக்கும்? அவரது ஹரிகதையை இதுவரைக் கேட்டதாக நினைவில்லை. மலைநாடானும் அதனைப் பற்றி (ஜெயா டீவியில் பார்த்ததாக) சொல்லியிருந்தார்.


  2. rv said...

    குமரன்,
    ஸ்ரீரங்கம் விசாகா ஹரி என்பது ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமியின் மருமகள். ஹரிகதை சொல்வதில் வல்லவரென சமீபத்தில் பெயரெடுத்திருக்கிறார். வாய்ப்பாட்டும் நன்றாகவே பாடுவார். கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பிரபலம்.

    தியாகராஜரைப் பற்றிய இவரது பிரசங்கம் என்னிடம் இருக்கிறது. அனுப்பி வைக்கிறேன்.


  3. முகமூடி said...

    இரண்டு கேள்விகள் ::

    அ) வயலின் எல்.சுப்ரமண்யமும்ம் தவில் ஹரித்துவராமங்கலமும் தமிழில் வாசித்தார்களா இல்லையா?

    ஆ) வருடா வருடம் திருவையாற்றிலேயே ஆராதனை விழா நடத்தி ஆரிய இராமதாஸருக்கு விசுவாசம் காட்டும் ஆரிய-தமிழர்களுக்கு, திராவிட இராமதாஸின் இடமான திண்டிவனத்தில் விழா நடத்த மனம் வராதது ஏன் என்பதை கண்டித்து ப.ம.க சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மனம் உண்டா?


  4. rv said...

    தல,
    எல்.எஸ் தமிழில வாசிக்கலை. காரணம்: வாசித்தது எல்லாம் தியாகராஜரோட கிருதிகள். பழநிவேல் என்ன மொழியில வாசிச்சார்னு எனக்குத்தெரியாது.

    உங்கள் ரெண்டாவது கேள்வியில் (திருவையாற்றில் தியாகராஜரோடது - அவர் என்ன தான் இராமதாஸராக இருந்தாலும்!) பொருட்குற்றம் உள்ளதால் நான் பதிலளிக்கமாட்டேன். வேறெப்படி தப்பிப்பது?


  5. ramachandranusha(உஷா) said...

    முகமூடியாரே ஒரு டவுட்டூ, தவிலை தட்டினால் டொம் டொம் என்ற சப்தமும், வயலின் வாசித்தால் டொய், டொய்ன் என்ற சப்தமும் தானே வரும்? இதில் தமிழோ அல்லது ருஷயனோ நான் கேட்டதே இல்லையே!!!!

    குமரன், இன்றைய பத்திரிக்கை மற்றும் சங்கீத விமர்சகர்களின் பார்வை விசாக ஹரியின் மீது விழுந்துள்ளது. காரணமாய் நான் நினைப்பது அவரின் எளிமையான தோற்றம். (எல்லாம் பத்திரிக்கை செய்திதாங்க). சொல்லி வைத்தால்போல, குத்துவிளக்கு
    போன்ற தோற்றம் என்ற வர்ணனை. நம் கர்நாடக இசை பாடகிகள் நல்லி, குமரன், போத்தீஸ் பட்டில் மினிக்கிக் கொண்டு,பிரின்ஸ்,லலிதா,சரவணாஸ்டோர்ஸ் நகைகளில் பளபளக்க நாளோரு நகையும் பட்டுமாய் வர, வரும் மாமிகள் பாட்டை கவனிக்கிறார்களோ
    இல்லையோ, இவைகளை கவனிக்க தவறுவதில்லை. இதில் இருந்து முற்றும் மாறுப்பட்ட கோலத்தில் பக்தி பாவத்தில் பாடுவதால் பலர் கவனத்தை ஈர்க்கிறார். அடுத்த கேள்விக்கு பதில், நான் முழுக்க முழுக்க, ஒளரங்க சீப் பரம்பரை. பாட்டு என்றால்
    சினிமா பாடல்கள், அதுவும் முதலிரண்டு வரிகள் மட்டுமே தெரியும் :-)


  6. இலவசக்கொத்தனார் said...

    கொடுத்து வைத்தவர். நல்லா எஞ்சாய் பண்ணும். :))


  7. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    அட நம்ம திருவையாத்துச்சாமீ கச்சேரிக்குப் போனீங்களாக்கும்! அதுவும் வேட்டி கட்டிக் கொண்டு!
    உங்கள் எளிமையே எளிமை!

    காவிரியில் தண்ணி பாத்தீங்களா?


  8. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    ramachandranusha அவர்கள் சொல்வது மிகவும் சரி!
    பரனூர் அண்ணாவின் மருமகள் விசாகா ஹரி, பக்தி பாவத்துடனும், எளிமை தவழவும் தான் ஹரிகதை சொல்கிறார்! சில பல புதுமை உத்திகளும் கையாள்வதால் ஊடகங்களில் வரவேற்பும் பெற்றுள்ளார்.

    கதையிலும் பெரும்பாலும் தமிழ்ப் பாசுரங்கள், பாடல்கள் என்று சொல்லி ஒன்ற வைக்கிறார்.

    மருத்துவர் ஐயா - இது ராமதாசரை அல்ல, ராமநாதரைத் தான் அழைத்தேன்!
    தியாகராஜ உரையை எனக்கும் அனுப்பி வையுங்களேன் - நன்றி!


  9. rv said...

    உஷா அக்கா,
    நீங்கள் சொல்லும் காரணம் சரியா என்று தெரியவில்லை. நான் நேரில் பார்த்ததில்லை. கேட்டவரை நன்றாகவே இருக்கிறது.

    இருந்தும் சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு விசாகா ஹரிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. திருவையாற்று உற்சவப்பந்தல் இரண்டு மணியிலிருந்து கும்பல் ரொம்பி வழிந்தது. கூட்டத்தில் அடியேனும் அடக்கம். ஆனால் மூன்றரை வரை வரவில்லை. ஜூரமாம். இந்த செய்தி தெரிந்த உடனேயே மொத்த பந்தலும் காலி! pulling power தவிர வேறென்ன. சுதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் கேஜேஒய்க்கு இருப்பதுபோன்ற ஒரு ஸ்டார் ஸ்டேட்டஸ் வந்துவிட்டதென்றுதான் நினைக்கிறேன் விசாகாவிற்கும்.


  10. rv said...

    கொத்ஸு,
    நன்றி. Cleveland பக்கத்தில் இல்லையா?


  11. rv said...

    என்ன கே.ஆர்.எஸ்,
    எனக்கு எளிமை, வலிமைன்னு அஷ்டோத்திரம் படிக்கிறீங்க?

    காவிரியில தண்ணிதானே? பிச்சுகிட்டு ஓடுது.

    நமக்கு எப்பவுமே வேட்டிதான் லாயக்கு. இதவிட சுகமான டிரஸ் வேறென்ன இருக்கு சொல்லுங்க?


  12. rv said...

    உரை அனுப்புவது இருக்கட்டும் கே.ஆர்.எஸ்.


    இங்கே சென்று பாருங்கள் முதலில்.


  13. Geetha Sambasivam said...

    விசாகா ஹரியின் கதா காலட்சேபத்தை ஜெயா டி.வியில் நாங்களும் கேட்டோம். தியாகராஜரைப் பத்தித் தான் சொல்லிக் கொண்டிருந்தார். மிகச் சமீபத்தில் பிரபலாமாயிருக்கும் இவர் ஒரு ஆடிட்டர் மற்றும் கம்பெனி செக்ரட்டரி என நினைக்கிறேன். திடீரென ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு கதை சொல்லப் போய் விட்டார். கதா காலட்சேபம் சோபிப்பது போல் தனிக் கச்சேரி சோபிப்பது இல்லைனு கல்கி வாரப் பத்திரிகை விமரிசனம் படிச்சேன். அவரோட கச்சேரி கேட்டது இல்லை.


 

வார்ப்புரு | தமிழாக்கம்