விவரமாக பதிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சோம்பல்பட்டு விட்டுவிட்டேன். இப்போது மழை காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பின்னூட்டம் இட்டவுடன், மழை இடியுடன் கூடிய புயலாய் மாறுவதற்குமுன் இதோ பதிவிட்டுவிடுகிறேன். :)
ரஷ்யா தன் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் எண்பது சதவிகிதம் வரை உக்ரைனின் குழாய்களையே நம்பியிருக்கிறது. மிக முக்கியமாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு. இதில் உக்ரைனுக்கு நிறுத்திவிட்டால் ஐரோப்பாவிற்கும் போகாதே என்று ஷ்ரேயா கேட்டிருந்தார். எண்ணெய், எரிவாயு, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கு குழாயை மூடுவது என்றால், நேரடிப் பொருள் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு ரஷ்யாவிலிருந்து அனுப்பப்படுகின்றது என்றால், அதில் 750 ஐரோப்பாவிற்கும், 250 உக்ரைனுக்கும் என்று வைத்துக்கொள்வோம். இதில், குழாயை மூடியது என்றால், 750 மட்டுமே ஜெர்மனிக்கென்று உக்ரைனின் குழாய்கள் வழியே ரஷ்யாவால் அனுப்பப்படும். இந்த 750-க்யூ.மீ பணம் கொடுத்து வாங்கி இருப்பது ஜெர்மனி. இப்போது இந்த 750-இருந்து உக்ரைன் தன் பங்கை எடுத்துக்கொள்ளுமானால் அது ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைப் பொருத்தவரை திருட்டு. சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு இந்த மாதிரி திருட்டை செய்ய தைரியம் வராது. தனியாக, இதுவரை இருபத்தியைந்து பில்லியன் டாலர்கள் அளவிற்கு உக்ரைன் ஏற்கனவே எரிவாயு திருடியிருப்பதாக காஸ்ப்ரோம் குற்றம் சாட்டியுள்ளது. அதை உக்ரைன் வன்மையாக மறுத்துள்ளது. ஜெர்மனி புத்தாண்டு தினத்தன்று தனக்கு வரவேண்டிய அளவிற்கு எரிவாயு வந்து சேரவில்லை என்று புகார் செய்தது. ரஷ்யா தான் உண்டான அளவு அனுப்பிவிட்டதாக சொல்லி, உக்ரைனில் தான் காணாமல் போயிருக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டது. இந்த மாதிரி புகார்கள் வந்தால் அது நாட்டின் integrity ஐ பெருமளவில் பாதிக்கும்.
அடுத்து, செவாஸ்தபோலில் உள்ள ரஷ்யாவின் கடற்படை. சோ.யூ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வழக்கம். உதாரணத்திற்கு, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி வகித்தாலும் ரஷ்யா தன் செயற்கைக்கோள்களை அனுப்ப இன்றுவரை கஸக்ஸ்தானில் இருக்கும் பைக்கானூரைத்தான் பயன்படுத்திவருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்படும் கோள்கள் போன்றவை கூட பைக்கானூரிலிருந்துதான் பறக்கின்றன. சோ.யூ பிரிந்த பிறகு, பைக்கானூருக்கென்று பணமாகவோ, பொருளாகவோ, சேவைகளாகவோ வாடகையொன்று கொடுக்கப்பட்டுவருகிறது. அதுவே தான் உக்ரைனின் செவாஸ்தபோல் நகரில் இருக்கும் கடற்படைக்கும். இதன் வாடகையை ஏற்றுகிறேன் என்று உக்ரைன் சீறியது தேவையின்றி பிரச்சனையை பெரிதாக்க உதவியதே தவிர பயனொன்றுமில்லை.
சரி, ஏன் உக்ரைன் மட்டும் குறிவைக்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம் முன்பே கூறியபடி சென்ற நாடாளுமன்றத்தேர்தல் தான். முன்னாள் அதிபர் லியோனிட் குச்மா ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிந்தபின் நடந்த தேர்தலில் ரஷ்யா யனுகோவிச் என்ற ரஷ்ய சார்பு வேட்பாளரை ஆதரித்தது. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் விளையாடியதில் "ஆரஞ்சு புரட்சி" என்று ஒன்று நடந்து மேற்குநாடுகளுக்கு நேசமான யூஷென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பையும் ரஷ்யாவிற்கு குறிப்பாக அதிபர் பூடினுக்கு அவமானத்தைத் தேடித்தந்தது. இதே மாதிரி ஜியார்ஜியாவிலோ, லாத்வியாவிலோ நடந்திருந்தால் ரஷ்யா பெரிதாக அலட்டிக்கொண்டிருக்காது. ஏனென்றால் ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இருக்கும் உறவு அத்தகையது. ரஷ்யன் மட்டுமே பேசும் மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
உக்ரைனுக்கு என்று பெரிய வரலாறு ஒன்றுமில்லாவிட்டாலும், சோ.யூ வில் உக்ரைனின் தலைநகரமான "கியவ்"விற்கு தனி மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. Kyiv is the mother of all cities என்று ஒவ்வொரு ரஷ்யனும் பள்ளிக்கூடத்தில் படித்தனர். கலாச்சாரம், மதம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஒற்றுமை இருந்தது இரு மக்களுக்கும். குச்மாவின் ஆட்சியில் அதிருப்தியடைந்த மக்கள் அமெரிக்க சார்பு யூஷென்கோவை தேர்ந்தெடுத்ததும் வேண்டுமென்றே தன்னை அவமதிப்பு செய்கின்றது உக்ரைன் என்று ரஷ்யா கருதத்தொடங்கியது. கருவிக்கொண்டே இருந்த போது லட்டுவாய் அமைந்தது காஸ்ப்ரோம் விவகாரம். மேலும், யூஷென்கோ பதவிக்கு வந்து கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற சாத்தியக்கூறுகள் இருப்பதாய் தெரியாமல் உக்ரைனியர்கள் குழம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், உக்ரைனின் (யூஷென்கோ) எதேச்சாதிகார மேற்கத்திய சார்பு நிலையால் நட்பு நாடான ரஷ்யாவை பகைத்துக்கொண்டால், எரிவாயு தட்டுபாடு அதன் மூலம் பொருளாதார முடக்கம் என்று விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்த கிடைத்த நல்ல வாய்ப்பொன்றை ரஷ்யா நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது. இத்தனை காலம் கிடைத்துவந்த மலிவுவிலை எரிவாயுவால் inefficient ஆக இருந்த உக்ரைனிய கம்பெனிகள் பதறத்தொடங்கின. பொருளாதாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. யூஷென்கோவின் மேலும் அதிருப்தி வளரத்தொடங்கியிருக்கிறது. அதனால் தான், சென்ற பதிவில் இப்பிரச்சனை அதிக நாள் நீடிக்காது என்று எழுதியிருந்தேன். நீடித்திருந்தால் ரஷ்யாவிற்கு லாபமே கிட்டியிருக்கும், யூஷென்கோ மேல் ஏற்படும் அதிருப்தியால்.
குட்டி செய்தி: இந்த விளையாட்டில் ஒரு இந்தியரும் சம்பந்தப்பட்டுள்ளார். வேறு யாருமில்லை. உலகின் மூன்றாம் பெரும்பணக்காரரான லக்ஷ்மி மிட்டல் தான். இரண்டு பில்லியன் மதிப்புள்ள உக்ரைனின் மிகப்பெரிய இரும்பு ஆலையை ஐந்து பில்லியனுக்கு (இதுவே உக்ரைனின் சுதந்திர வரலாற்றிலேயே மிகப்பெரும் தனி முதலீடாகும்) அவர் வாங்கியதற்கு முக்கிய காரணமே ரஷ்யாவில் இருந்து வந்த மலிவுவிலை எரிவாயுதான். இந்தப் பிரச்சனையால் இப்போது எரிவாயுவிலிருந்து கரிக்கு மாறப்போவதாய் அறிவித்திருக்கிறது அவரின் நிறுவனம்.
சரி, அரசியல் போதும். இப்போது கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாட்டு பார்ப்போமா? இந்த விவகாரம் சென்ற வாரம் ரஷ்யாவிற்கு சாதகமாய் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ரஷ்யா கேட்ட 230$ கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் ஒப்புக்கொண்டது உக்ரைன் அல்ல. நடுவில் இருக்கும் ஒரு மர்ம நிறுவனம். குச்மா ஆட்சிக்காலத்தில் ஸ்விட்ஸர்லாந்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் RosUkrEnergo என்ற இந்த நிறுவனத்தில் ரஷ்யா முதலீட்டாளர்களும், பெயர் தெரியாத உக்ரைனிய பெருந்தலைகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்போது போட்டுள்ள ஒப்பந்தந்தின் படி, ரஷ்யாவிடமிருந்து 230$ RUE வாங்கி வெறும் 96$ உக்ரைனுக்கு விற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதெப்படி கட்டுபடியாகும் என்ற கேள்விக்கு, டுர்க்மெனிஸ்தானிலிருந்து மலிவுவிலை எரிவாயு வாங்கி சரிபாதி கலந்து விற்றால் லாபமே என்று RUE கருதுகிறது. இதில் கேள்வியென்னவென்றல் இத்தகைய ஒரு shady deal-இல் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யாரென்று வெளிப்படையாக தெரியாததுதான். இருப்பினும் காஸ்ப்ரோம், பூடின், யூஷென்கோ மற்றும் மேற்கத்திய நாடுகள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. மேலும் காஸ்ப்ரோம், குழாய்களை பயன்படுத்த ஆயிரம் க்யூ.மீ 1.06$ என்ற விலையை 1.90 என்று இனிமேல் உக்ரைனுக்கு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
ரஷ்யா இதில் அரசியல் இல்லை பொருளாதாரமே பிரச்சனைக்கு காரணம் என்றாலும் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு மலிவு விலை எரிவாயு தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அளித்துவந்தது. ஆனால், தற்போதைய நிலையில் தனக்கு எதிரான அரசு ஆளும் ஒரு நாட்டிற்கு எதற்கு தன் மக்களின் வரிப்பணத்தில் மலிவுவிலையில் வழங்கவேண்டும் என்பதுதான். அது நியாயமானதும்கூட. ஆனால், இப்பிரச்சனையால் கலங்கிப்போயிருப்பது ஐரோப்பாவும் தான். தங்கள் எரிவாயுத் தேவையின் 30 சதவிகிதம் வரை பூர்த்தி செய்வது ரஷ்யா தான். இதே மாதிரி விளையாட்டை தங்களிடமும் விளையாண்டால் என்ன நிலை உண்டாகும் என்று கவலைப்படத்துவங்கியுள்ளனர் ஐரோப்பாவின் பெருந்தலைகள். இதனால் alternate energy பக்கம் ஆர்வம் வளரலாம். மேலும் எகிப்து போன்ற நாடுகளை தங்கள் எரிவாயு தேவைகளுக்கு இன்னும் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கலாம்.
இந்தப் பிரச்சனை மூலம் ரஷ்யாவை புறக்கணிப்பார்களா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில் மாற்று சோர்ஸ்களை உருவாக்க பலவாண்டுகள் பிடிக்கும். பணமும், நேரமும் ஏராளமான அளவில் செலவிடவேண்டும். மேலும் எகிப்து போன்ற நாடுகளின் அரசியல் நிலையும் அவ்வளவு சாதமாக இல்லை. அதற்கு பதில், கொஞ்சம் விட்டுப்பிடித்தால் ரஷ்யாவை stable partner ஆக்க முடியும். அதைத்தான் செய்ய முற்படும் ஐ.யூனியன். அதனாலேயே உக்ரைன் பணிந்துபோனது. ஆனால், இந்த நேரத்திற்குள் இன்னும் ஒரு முறை கூட இந்த மாதிரி காஸ்ப்ரோம் விளையாடுமானால் ரஷ்யாவின் கனவான உலகின் energy superpower ஆவது வெறும் கனவாகவே ஆகிவிடும்.
முந்தைய பதிவுகள்
7 Comments:
திருட்டு என்று சொல்கிறிர்களே அங்கு வழங்கப்படுவதற்கு அளவு மீட்டர்கள் வைத்திருப்பார்கள் அல்லவா? ஓ அதிலும் கைவைத்து விடுகறார்களா? நம் ஊர் மின்திருட்டு போல.
அய்யா,
international திருட்டுக்கும் நம்மூர் லோக்கல் திருட்டுக்குக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா??? :)
பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!வேற இடத்திலே உங்க கமெண்டைப் படிச்சேன்!அதான் இங்க வந்தேன்.படிச்சுட்டு சொல்றேன்.ரஷ்யர்கள் கூட கிழக்கு ஜெர்மனியுலும், மதுரா ரிபைனரியிலும் வேலைப் பாத்திருக்கேன்.நீங்க ரஷ்யாவிலே என்னப் பண்றேள்.ரஷ்யாவை பத்தி நிறைய எழுதுங்கோ.
மிக்க நன்றி நடேசன்,
தொடர்ந்து வாங்க.
பெரீய்ய்ய்ய இவ மாதிரி (எவ??) சந்தேகம் கேட்டுட்டு பதிவு போட்டதும் கண்டுக்காம இருந்துட்டேன் என்று நினைக்காதீங்க கார். கொஞ்சம் வேலை அதிகமாப்போச்சு. ஆறுதலாக வாசித்து விட்டுப் பின்னூட்டம் போடுறேன். பதிவுக்கும்.. மழையில் போட்ட தந்திக்கும் நன்றி.
பரவாயில்லை மழை..
பொறுமையாக படித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி
விளக்கமா சொன்னதுக்கு நன்றி கார்.
உக்ரைனுக்குள்ளாலே போகிற குழாயை அடைத்தால், கலங்களுக்கான வாடகையை ஏற்றினாலெல்லாம் அரசியல்/இராஜதந்திர ரீதியா பிரச்சனை வரும் என்பதை யோசிக்கல்ல. அவ்ளோதான் நம்ம மேல்மாடி திறன்! ;O)
மீண்டும் நன்றி.
Post a Comment