என்னதான் நட்பு பாராட்டிக்கொண்டாலும், உளவுத்துறையை பயன்படுத்தாத நாடுகளே இருக்கமுடியாது. ஏன், கணவன் மனைவி போல் கூடிக்குலாவும் அமெரிக்காவும் பிரிட்டனுமே லண்டனிலும் வாஷிங்டனிலும் என்ன நடக்கிறது, நடக்கும் என்று உளவறியாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு வெளிநாட்டு தூதரகத்திலும் அந்நாட்டின் சர்வதேச உளவுத்துறையின் அலுவலகம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் பெரும்பாலும் வெளிப்படையாக இயங்குவார்கள். இவர்களின் நடவடிக்கையும் தூதரகம் இருக்கும் நாட்டின் உளவுத்துறைக்கு தெரிந்தே நடக்கும். அநேகமாக இருபத்திநான்கு மணி நேரமும் இவர்கள் பின் தொடரப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாறே உள்நாட்டுத்துறையிடம் இருக்கும். சரி, இப்படி தொடர்ந்து பின்தொடரப்படுவதால் அவர்கள் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமிருக்காது. அநேகமாக Co-ordinators, background planning, recon என்றே திரையின் பின் இருப்பர்.
அடுத்தவகை, டிப்ளமாட்கள் அல்லது பிரதிநிதிகள். இவர்களுக்கு உளவுத்துறையினரைக் காட்டிலும் நிறையவே சுதந்திரம் உண்டு. அதனால் பல நாடுகள் அடுத்த நாடுகளில் intelligence சேகரிக்க இவர்களை உளவாளிகளாக பயன்படுத்துவது காலந்தொட்டு நடந்துவருகிறது. Press Attache என்கிற மாதிரி போலிப்பதவிகளில் இருந்துகொண்டு உளவு வேலையும் செய்வது. சரி, எதுக்கு இவ்வளவு நீண்ட முன்னுரை என்றால் இப்படி செய்து வந்த பிரிட்டனின் பிரதிநிதிகள் நாலுபேர் ரஷ்ய உளவுத்துறையால் கையுங்களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள்.
Federal Security Bureau என்றழைக்கப்படும் ரஷ்யாவின் முக்கிய உளவு நிறுவனம் சாட்டியுள்ள குற்றம்: பிரிட்டனின் மாஸ்கோ தூதரகத்தில் அரசியல் பிரதிநிதிகள் நான்கு பேர் ரஷ்யர்களை agentகளாக மாற்றி அவர்கள் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் குறிப்பாக மனித உரிமை சார்ந்தவற்றிற்கும் இன்னபிற அரசு சாராத சமூக நிறுவனங்களுக்கும், அரசுக்கு எதிராய் புரட்சியைத் தூண்டநினைக்கும் நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக நிதியளித்துள்ளனர். 'மாஸ்கோ-ஹெல்சின்கி' என்னும் அரசு எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் குழுவுக்கு மட்டும் கடந்த அக்டோபரில் நாற்பத்தியோராயிரம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்குப் புறம்பான முறையில் பிரிட்டன் அளித்துள்ளதற்கு சாட்சியாய் ஆவணங்கள் கிட்டியுள்ளன் என்று FSB கூறியிருக்கிறது. இதுபோல இன்னும் பன்னிரண்டு முக்கிய குழுக்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கும் முக்கியமான ஆவணங்களும் கையில் மாட்டியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது. இதனை பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தாலும், மாஸ்கோ தூதரகம் அவ்வளவு காரமாக ஒன்றும் பதிலளிக்காமல் இருப்பதை வைத்தே இதில் உண்மையிருக்கக்கூடும் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மாஸ்கோ-ஹெல்சின்கியின் தலைவி ல்யுட்மிலா அலெக்ஸியேவா இது போலி ஆவணம் என்றும் சோவியத் கால அடக்குமுறைகளை பூடினின் சர்வாதிகார அரசு வெட்கமில்லாமல் கையாள்கிறதென்றும் காட்டமாக மறுப்பு அறிவிக்கை விட்டுள்ளார்.
மேலும் சாதாரண கல் போல் தோற்றமளிக்கும் ஒன்றை மாஸ்கோவின் முக்கிய சதுக்கங்களில் ஒன்றில் வைத்து அதன் மூலம் உளவுத்தகவல்கள் பரிமாறப்பட்டுவந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கால்பந்தின் அளவுக்கு இருக்கும் இந்தக் கல்லின் மதிப்பு பல மில்லியன்கள் இருக்குமென்று FSB நம்புகிறது. இம்மாதிரி இரண்டு மாஸ்கோவில் பிரிட்டனால் இயக்கப்பட்டு, ஒரு கல் மட்டும் எக்காரணத்தாலோ அப்புறப் படுத்தப்பட்டது என்றும் கூறுகிறது. அடுக்குமாடிக்கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே வீசியெறிந்தாலும் உடையாத அளவுக்கு திடமும், பலமணி நேரங்கள் தண்ணீரிலும், குளிரிலும் நம்பகமாக சேவைசெய்யக்கூடிய திறனும் பெற்றிருக்கிறது என்கிறார்கள். மேலும் Wireless (WiFi) இணைப்பின் மூலம், செய்திகளை இருபுறமும் பரிமாறிக்கொள்ளமுடியும். அவ்வாறு வயர்லெஸ் இணைப்பில் பிரிட்டனின் பிரதிநிதிகள் தகவல்களை இறக்கிக்கொண்டிருந்தபோது, மறைந்திருந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கையுங்களவுமாக பிடிக்கப்பட்டார்கள் என்று FSB சொல்கிறது. இவர்களுக்கு Diplomatic Immunity இருப்பதால் கைதுசெய்ய முடியாது. வெளியேற்றத்தான் முடியும். அப்படி வெளியேற்றினால் கூடியவிரைவிலேயே பிரிட்டனும் தன் பங்குக்கு சில ரஷ்ய பிரதிநிதிகளை வெளியேற்றும். ஆனால் சமயோசிதமாகவும் கிண்டலுமாக பூடின் விட்ட அறிக்கையில் "இவர்களை ரஷ்யா வெளியேற்றாது. அப்படி வெளியேற்றினாலும், புதிதாக இன்னும் திறமைவாய்ந்த உளவாளிகளைத்தான் மாற்றாக பிரிட்டன் அனுப்பும். அதற்கு இத்தகைய கையாலாகாத உளவாளிகளே இருப்பது நலம்" என்று சொல்லியிருக்கிறார். இப்போது பிரிட்டனுக்கு தர்மசங்கடம். அவர்களாகவே திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் போட்டிக்காக ரஷ்ய பிரதிநிதிகளை வெளியேற்றவும் முடியாது.
சர்வதேச அளவில் நட்புநாடுகளுக்குள்ளேயே இந்த மாதிரி சண்டைகள் நடப்பது வழக்கம் தான் என்றாலும் இது ஏன் முக்கியத்துவம் பெருகிறது? இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருக்கும் தன்னார்வக் குழுக்கள் தான் காரணம். இவற்றில் பல மனித உரிமை மீறல், சர்வாதிகார ஆட்சி என்று அதிபர் பூட்டினை தீவிரமாக எதிர்த்துவருகின்றன. அவற்றிற்கு நிதி பெருமளவில் அளித்துவருவது மேற்கத்திய நாடுகள் தான். ரஷ்ய சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவதே இக்குழுக்களின் முக்கிய நோக்கம் என்று அரசு குற்றஞ்சாட்டிவந்தது. இதனை தடுக்கவேண்டியே சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை ரஷ்ய பாராளுமன்றம் சில வாரங்களுக்கு முன் இயற்றியது. அச்சட்டத்தின் படி, வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் பெரும் கெடுபிடிக்களை ஏற்படுத்தி அதன்மூலம் என்.ஜி.ஓ க்களின் பணவரவை பெருமளவில் தடுக்கமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நேரத்தில் இப்பிரச்சனை லட்டுவாக பூடினுக்கு வந்துள்ளது. பொதுமக்களிற்கு என்.ஜி.ஓக்கள் மேல் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் ஒரே கல்லில் அடித்தாகிவிட்டது. இப்போது மக்கள் என்.ஜி.ஓக்கள் மேல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமானவையே என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். பூடினிற்கு இன்னுமொரு தலைவலி குறைந்தது.
ஏன் புடினுக்கு இந்த என்.ஜி.ஓக்களை பார்த்து இவ்வளவு பயம்? காரணம் இவைகளே லாதிவியா, ஜியார்ஜியா போன்ற முன்னாள் ரஷ்ய விசிலடிச்சான்நாடுகள் மேற்கு பக்கம் சாயக் காரணம் சமூகப்புரட்சியென்ற பெயரில். மேலும் ஏன் குறிப்பாக பிரிட்டன் குறிவைக்கப்பட்டது? இரு காரணங்கள். ஒன்று க்ரெம்ளினுக்கு எதிராய்ச் செயல்பட்டு நாட்டைவிட்டு ஓடிய ரஷ்ய அகதிகள் பிரிட்டனில்தான் இருக்கின்றனர். இவர்களை ரஷ்யா தன் கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டனின் சட்டம் தடையாக இருக்கிறது. நேற்று கூட போரிஸ் பெரஸோவ்ஸ்கி என்னும் முன்னாள் oligarch (கோடர்க்கோவ்ஸ்கி வருமுன்னே இவரே முதன்மையான பணக்காரர். இப்போது க்ரெம்ளினுக்கு பயந்து லண்டன் வாசம்) ரஷ்யாவில் பூடினை எதிர்த்து coup நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக தன் அத்தனை சொத்துகளையும் இழக்கவும் தயாரென்றும் நம்ம சு.சுவாமி மாதிரி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.
இரண்டாவது இன்னும் முக்கியமானது. உலகிலேயே அதிக அளவில் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது அமெரிக்கா. அதன் பயனாலேயே கிழக்கு ஐரோப்பாவில் நன்றாக கால்பதித்துள்ளது. அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாது. அதனால், அதன் உயிர் நண்பனான பிரிட்டன் குறிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரஷ்யாவில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவிற்குத்தான் மறைமுக எச்சரிக்கை விட்டுள்ளார் பூடின். ஆனால், நேரந்தான் சரியில்லை. உகரைனுடனான சண்டைக்கான அதிருப்தியே இன்னும் அடங்காதபோது, இது தேவையற்ற சர்ச்சை. முக்கியமாக ரஷ்யா ஜி-8 தலைமையேற்கும் தருணத்தில்.
BBC
ரஷ்யா - பிரிட்டன் சர்ச்சை
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
அட,
பாஸ்டன் பாலா மற்றும் ஞான்ஸ்
லின்க் கொடுத்தமைக்கு நன்றி.
எல்லாம் மட்டுறுத்தல் படுத்தும் பாடோ? :(
நல்ல பதிவு... நட்பு நாடுகள் என்பதற்கான அடையாளம் என்ன என்பதையே மறந்து விட்டன உலக நாடுகள்
ம்ம்ம்ம்ம்....ஒருத்தரையொருத்தர் குத்தஞ் சொல்லிக்கிட்டே இருந்தா வெளங்கீரும். குத்தம் பாக்கின் சுத்தமில்லைன்னு சொல்லமலா சொல்லீருக்காங்க....
ராம்ஸ்,
நன்றி.
உங்க மயில் வந்தது. சீக்கிரம் பதில் பறக்க விடறேன். :)
ஜிரா,
அப்படியெல்லாம் இருந்துட முடியுமா? மாத்தி மாத்தி உளவு பாத்துகிட்டே தான் இருக்க வேண்டியிருக்கு. :)
Post a Comment