புதுசா இன்னொரு இடத்துல உளறலாம்னு இருக்கேன்.
பார்க்க
நன்றி
128. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!
தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.
ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.
பாடியது: விஜய் சிவா
கேட்க
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
கேட்டுப்பாருங்கள்.
---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின், இப்பதிவின் இடப்பக்கத்தில் உள்ள கந்தர் அநுபூதிக்கான சுட்டிக்கு பக்கத்தில் இருக்கும் [?] கிளிக்கவும்.
ரஷ்யா - பிரிட்டன் சர்ச்சை
என்னதான் நட்பு பாராட்டிக்கொண்டாலும், உளவுத்துறையை பயன்படுத்தாத நாடுகளே இருக்கமுடியாது. ஏன், கணவன் மனைவி போல் கூடிக்குலாவும் அமெரிக்காவும் பிரிட்டனுமே லண்டனிலும் வாஷிங்டனிலும் என்ன நடக்கிறது, நடக்கும் என்று உளவறியாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு வெளிநாட்டு தூதரகத்திலும் அந்நாட்டின் சர்வதேச உளவுத்துறையின் அலுவலகம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் பெரும்பாலும் வெளிப்படையாக இயங்குவார்கள். இவர்களின் நடவடிக்கையும் தூதரகம் இருக்கும் நாட்டின் உளவுத்துறைக்கு தெரிந்தே நடக்கும். அநேகமாக இருபத்திநான்கு மணி நேரமும் இவர்கள் பின் தொடரப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கை வரலாறே உள்நாட்டுத்துறையிடம் இருக்கும். சரி, இப்படி தொடர்ந்து பின்தொடரப்படுவதால் அவர்கள் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமிருக்காது. அநேகமாக Co-ordinators, background planning, recon என்றே திரையின் பின் இருப்பர்.
அடுத்தவகை, டிப்ளமாட்கள் அல்லது பிரதிநிதிகள். இவர்களுக்கு உளவுத்துறையினரைக் காட்டிலும் நிறையவே சுதந்திரம் உண்டு. அதனால் பல நாடுகள் அடுத்த நாடுகளில் intelligence சேகரிக்க இவர்களை உளவாளிகளாக பயன்படுத்துவது காலந்தொட்டு நடந்துவருகிறது. Press Attache என்கிற மாதிரி போலிப்பதவிகளில் இருந்துகொண்டு உளவு வேலையும் செய்வது. சரி, எதுக்கு இவ்வளவு நீண்ட முன்னுரை என்றால் இப்படி செய்து வந்த பிரிட்டனின் பிரதிநிதிகள் நாலுபேர் ரஷ்ய உளவுத்துறையால் கையுங்களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள்.
Federal Security Bureau என்றழைக்கப்படும் ரஷ்யாவின் முக்கிய உளவு நிறுவனம் சாட்டியுள்ள குற்றம்: பிரிட்டனின் மாஸ்கோ தூதரகத்தில் அரசியல் பிரதிநிதிகள் நான்கு பேர் ரஷ்யர்களை agentகளாக மாற்றி அவர்கள் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் குறிப்பாக மனித உரிமை சார்ந்தவற்றிற்கும் இன்னபிற அரசு சாராத சமூக நிறுவனங்களுக்கும், அரசுக்கு எதிராய் புரட்சியைத் தூண்டநினைக்கும் நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக நிதியளித்துள்ளனர். 'மாஸ்கோ-ஹெல்சின்கி' என்னும் அரசு எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் குழுவுக்கு மட்டும் கடந்த அக்டோபரில் நாற்பத்தியோராயிரம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்குப் புறம்பான முறையில் பிரிட்டன் அளித்துள்ளதற்கு சாட்சியாய் ஆவணங்கள் கிட்டியுள்ளன் என்று FSB கூறியிருக்கிறது. இதுபோல இன்னும் பன்னிரண்டு முக்கிய குழுக்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கும் முக்கியமான ஆவணங்களும் கையில் மாட்டியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது. இதனை பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தாலும், மாஸ்கோ தூதரகம் அவ்வளவு காரமாக ஒன்றும் பதிலளிக்காமல் இருப்பதை வைத்தே இதில் உண்மையிருக்கக்கூடும் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மாஸ்கோ-ஹெல்சின்கியின் தலைவி ல்யுட்மிலா அலெக்ஸியேவா இது போலி ஆவணம் என்றும் சோவியத் கால அடக்குமுறைகளை பூடினின் சர்வாதிகார அரசு வெட்கமில்லாமல் கையாள்கிறதென்றும் காட்டமாக மறுப்பு அறிவிக்கை விட்டுள்ளார்.
மேலும் சாதாரண கல் போல் தோற்றமளிக்கும் ஒன்றை மாஸ்கோவின் முக்கிய சதுக்கங்களில் ஒன்றில் வைத்து அதன் மூலம் உளவுத்தகவல்கள் பரிமாறப்பட்டுவந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கால்பந்தின் அளவுக்கு இருக்கும் இந்தக் கல்லின் மதிப்பு பல மில்லியன்கள் இருக்குமென்று FSB நம்புகிறது. இம்மாதிரி இரண்டு மாஸ்கோவில் பிரிட்டனால் இயக்கப்பட்டு, ஒரு கல் மட்டும் எக்காரணத்தாலோ அப்புறப் படுத்தப்பட்டது என்றும் கூறுகிறது. அடுக்குமாடிக்கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே வீசியெறிந்தாலும் உடையாத அளவுக்கு திடமும், பலமணி நேரங்கள் தண்ணீரிலும், குளிரிலும் நம்பகமாக சேவைசெய்யக்கூடிய திறனும் பெற்றிருக்கிறது என்கிறார்கள். மேலும் Wireless (WiFi) இணைப்பின் மூலம், செய்திகளை இருபுறமும் பரிமாறிக்கொள்ளமுடியும். அவ்வாறு வயர்லெஸ் இணைப்பில் பிரிட்டனின் பிரதிநிதிகள் தகவல்களை இறக்கிக்கொண்டிருந்தபோது, மறைந்திருந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கையுங்களவுமாக பிடிக்கப்பட்டார்கள் என்று FSB சொல்கிறது. இவர்களுக்கு Diplomatic Immunity இருப்பதால் கைதுசெய்ய முடியாது. வெளியேற்றத்தான் முடியும். அப்படி வெளியேற்றினால் கூடியவிரைவிலேயே பிரிட்டனும் தன் பங்குக்கு சில ரஷ்ய பிரதிநிதிகளை வெளியேற்றும். ஆனால் சமயோசிதமாகவும் கிண்டலுமாக பூடின் விட்ட அறிக்கையில் "இவர்களை ரஷ்யா வெளியேற்றாது. அப்படி வெளியேற்றினாலும், புதிதாக இன்னும் திறமைவாய்ந்த உளவாளிகளைத்தான் மாற்றாக பிரிட்டன் அனுப்பும். அதற்கு இத்தகைய கையாலாகாத உளவாளிகளே இருப்பது நலம்" என்று சொல்லியிருக்கிறார். இப்போது பிரிட்டனுக்கு தர்மசங்கடம். அவர்களாகவே திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் போட்டிக்காக ரஷ்ய பிரதிநிதிகளை வெளியேற்றவும் முடியாது.
சர்வதேச அளவில் நட்புநாடுகளுக்குள்ளேயே இந்த மாதிரி சண்டைகள் நடப்பது வழக்கம் தான் என்றாலும் இது ஏன் முக்கியத்துவம் பெருகிறது? இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருக்கும் தன்னார்வக் குழுக்கள் தான் காரணம். இவற்றில் பல மனித உரிமை மீறல், சர்வாதிகார ஆட்சி என்று அதிபர் பூட்டினை தீவிரமாக எதிர்த்துவருகின்றன. அவற்றிற்கு நிதி பெருமளவில் அளித்துவருவது மேற்கத்திய நாடுகள் தான். ரஷ்ய சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவதே இக்குழுக்களின் முக்கிய நோக்கம் என்று அரசு குற்றஞ்சாட்டிவந்தது. இதனை தடுக்கவேண்டியே சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை ரஷ்ய பாராளுமன்றம் சில வாரங்களுக்கு முன் இயற்றியது. அச்சட்டத்தின் படி, வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் பெரும் கெடுபிடிக்களை ஏற்படுத்தி அதன்மூலம் என்.ஜி.ஓ க்களின் பணவரவை பெருமளவில் தடுக்கமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நேரத்தில் இப்பிரச்சனை லட்டுவாக பூடினுக்கு வந்துள்ளது. பொதுமக்களிற்கு என்.ஜி.ஓக்கள் மேல் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் ஒரே கல்லில் அடித்தாகிவிட்டது. இப்போது மக்கள் என்.ஜி.ஓக்கள் மேல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமானவையே என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். பூடினிற்கு இன்னுமொரு தலைவலி குறைந்தது.
ஏன் புடினுக்கு இந்த என்.ஜி.ஓக்களை பார்த்து இவ்வளவு பயம்? காரணம் இவைகளே லாதிவியா, ஜியார்ஜியா போன்ற முன்னாள் ரஷ்ய விசிலடிச்சான்நாடுகள் மேற்கு பக்கம் சாயக் காரணம் சமூகப்புரட்சியென்ற பெயரில். மேலும் ஏன் குறிப்பாக பிரிட்டன் குறிவைக்கப்பட்டது? இரு காரணங்கள். ஒன்று க்ரெம்ளினுக்கு எதிராய்ச் செயல்பட்டு நாட்டைவிட்டு ஓடிய ரஷ்ய அகதிகள் பிரிட்டனில்தான் இருக்கின்றனர். இவர்களை ரஷ்யா தன் கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டனின் சட்டம் தடையாக இருக்கிறது. நேற்று கூட போரிஸ் பெரஸோவ்ஸ்கி என்னும் முன்னாள் oligarch (கோடர்க்கோவ்ஸ்கி வருமுன்னே இவரே முதன்மையான பணக்காரர். இப்போது க்ரெம்ளினுக்கு பயந்து லண்டன் வாசம்) ரஷ்யாவில் பூடினை எதிர்த்து coup நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக தன் அத்தனை சொத்துகளையும் இழக்கவும் தயாரென்றும் நம்ம சு.சுவாமி மாதிரி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.
இரண்டாவது இன்னும் முக்கியமானது. உலகிலேயே அதிக அளவில் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது அமெரிக்கா. அதன் பயனாலேயே கிழக்கு ஐரோப்பாவில் நன்றாக கால்பதித்துள்ளது. அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாது. அதனால், அதன் உயிர் நண்பனான பிரிட்டன் குறிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரஷ்யாவில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவிற்குத்தான் மறைமுக எச்சரிக்கை விட்டுள்ளார் பூடின். ஆனால், நேரந்தான் சரியில்லை. உகரைனுடனான சண்டைக்கான அதிருப்தியே இன்னும் அடங்காதபோது, இது தேவையற்ற சர்ச்சை. முக்கியமாக ரஷ்யா ஜி-8 தலைமையேற்கும் தருணத்தில்.
BBC
மூன்று லட்சத்தில் மூச்சு இருக்குது!
என்னடா இது, போனதுல முன்னூறுன்னு சொல்லி வாங்கிட்டு பேராசைப்பட்டு லட்சத்துக்கெல்லாம் ஆசைப்படறேன்னு பயந்துடாதீங்க. பழைய நியூஸ் போலிருக்கு. இருந்தாலும் இன்னிக்குதான் ஒரு ரஷ்ய கைத்தொலைபேசிகள் குறித்த இதழ்ல கண்ல பட்டது.
நம்மூர் ஆளு ஒருத்தர் பத்திதான்.
பேரு: தீபக் ஷர்மா
இருக்கறது: லூதியானா, பஞ்சாப்.
கின்னஸ் புக்குல பேரு வந்திருக்கு. என்ன செஞ்சு? அதுலதான் விஷயமே!
ஒரு மாசத்துக்கு 1,82,689 (ஒரு லட்சத்து எண்பத்தியிரண்டாயிரத்து அறுநூத்தி எண்பத்தி ஒன்பதுதான்! தப்பால்லாம் படிக்கல நீங்க) SMS கள தன்னோட நோக்கியா 6600 (போனுக்கு வாயிருந்தா அழும்) அனுப்பியிருக்காரு. ஒரு நாளைக்கு ஆறாயிரத்து சொச்சம்! இதுல விசேஷமென்னன்னா ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸும் தனித்துவமானவை. அதாவது உள்ளடக்கம் ஒரே மாதிரியான பார்வர்ட் அல்ல!!
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப சராசரியா மூணு செகண்டு ஆகுதாம் இவருக்கு.
இதுவரைக்கும் அனுப்பிச்சது 5.25 லட்சத்து சொச்சம்.
ஏர்டெல் நிறுவனம் இந்த மாசம் இவருக்கு ஸ்பெஷலா பில்லனுப்பிருக்காங்க. பில் அறிக்கை எவ்ளோ நிளம் தெரியுமா? 4102 பக்கள். 12.5 கிலோ எடை!
ஆனா, மனுஷனுக்கு இன்னும் மோகம் போகலை. ஒரு மாசத்துக்கு மூணு லட்சம் அனுப்ப முயற்சி செய்யப்போறாராம். அதாவது தினமும் பத்தாயிரம். ஒரு மணி நேரத்துக்கு 416!!!
வாழ்க வளர்கன்னு வாழ்த்திக்கறேன்!!!! ஏர்டெல்லுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! :))
1
2
பிகு: இந்த விஷயத்துல நிறைய குழப்பம் இருக்கு. இண்டியன் எக்ஸ்பிரஸ் வேற விதமா (நம்பர்கள் விஷயத்தில்) சொல்லுது. ஆனா, நான் படிச்ச ரஷ்ய இதழ் மேற்சொன்ன சுட்டியைத்தான் தந்திருந்தது.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
'மூன்றெழுத்து கெட்டவார்த்தை அந்த வார்த்தை, சிஷ்யா'னு நினச்சு வந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. இது ஒரு அறிவுப்பூர்வமான ஆழமான பதிவாக்கும், சொல்லிட்டேன். மூன்று எழுத்துகள்கறது ரொம்ப முக்கியமானது. ஆங்கிலத்துல இருக்கற இருபத்தியாறு எழுத்துகளையும் மாத்தி மாத்தி போட்டா பதினேழாயிரத்தி சொச்சம் தடவை இந்த மூணேழுத்த வச்சே வித்த காட்டலாம். சரி, இப்போ எதுக்கு மூணெழுத்து? காரணம் இருக்கே. இன்னிக்கு மெட்ரோல வரச்சே என்ன காரணத்தாலோ நம்ம மூளை வேலை செய்ய ஆரமிச்சது. அது என்னடா அது, எல்லா abbreviation-களும் (பெரும்பாலான) மூன்றெழுத்துகளில் தான் இருக்குதுன்னு. ஏன் மூணெழுத்துன்னு விடை கண்டுபிடிக்க முடியல. ஆனா, இதப்பத்தியும் என்னைய மாதிரி புத்திமான்கள் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு புரிஞ்சு புளங்காகிதம் ஆயிடுச்சு. இதுக்கு ஆங்கிலத்துல TLA (three-letter abbreviation: இதுவும் TLA!)னு சொல்றாங்க.
உதாரணங்கள்
1. விண்டோஸ் OS இல் பயன்படுத்தும் அனைத்து file extensions
.jpg, .htm
2. கணினி சார்ந்தவை
FDD, HDD, RAM, CPU, IBM, AMD
3. ஊடகங்கள்
BBC, CNN, CBS, PBS, ABC, AIR
4. மோட்டார் வாகனங்கள் சார்ந்தவை
BMW, ABS, EBD, SUV, KIA, MUL, CDI
5. தயாரிப்பு நிறுவனங்கள்
TDK, DAC
6. ஃபார்மாட்கள்
DVD, VCD, VHS
7. அரசு நிறுவனங்கள்
FBI, KGB, FSB, CIA, CID, RAW, ISI
8. பொறுப்புகள்
CEO, CTO, COO, CFO
9. Time Zones
IST, MST, GMT, PST, EST, CST
10. உலகெங்குமுள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் மூன்றெழுத்து குறியீடுகள் தான்
LED, SVO, LAX, SFO
11. பணங்கள் பற்றிய குறியீடுகள்
FRA, USD, RUR, INR
ஏன் மூணு எழுத்து மட்டும்?
ஏன்? ஏன்? ஏன்?
இன்னும் நிறைய மூன்றெழுத்து குறியீடுகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும். அங்க போய் கத்துகிட்டு இங்க வந்து சமத்தா உங்களுக்கு தெரிஞ்ச TLA வ பின்னூட்டத்துல போட்டுடுங்க. அப்பாடா, பதினாறாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களுக்கு வழி செஞ்சாச்சு. இதுல தமிழ்மணம் மட்டுமில்ல, ப்ளாக்கர்.காமே திணறிடணும்...பின்னூட்ட புரட்சியாளர்னு உங்களுக்கு பட்டமும் கொடுத்திடலாம்.
குளிருது குளிருது
ரெண்டு மூணு வருஷமா குளிர் அவ்வளவா இல்லாம அதாவது மைனஸ் பதினஞ்சுக்குக் கீழே போகாம சவுகரியமா இருந்தோம். இப்ப என்னடான்னா ரெண்டு நாளா பகல்ல - 25 இரவுகளில் -20 னு போட்டு வாங்குது. யார் விட்ட சாபமோ? ஆர்க்டிக்லேர்ந்தும் மேற்கு சைபீரியாவுலேர்ந்தும் (அங்க இன்னும் மோசம்: -50 வரைக்கும் போய் emergency னு அறிவிச்சுருக்காங்க) குளிர்காத்து திடீர்னு வந்துடுச்சுன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணிருக்காங்க. இந்த வாரமும் அடுத்த வாரமும் பூராவும் இப்படித்தான் -20க்கு கீழே தான் ஆவரேஜே (பொதுவா -5) இருக்கும்னு பயமுறுத்த வேற செஞ்சிருக்காங்க.
மாஸ்கோல நிலம இன்னும் மோசம். அம்பது வருஷத்துல இல்லாத அளவுக்கு குளிர் இருக்குப்போகுது. -35 வரைக்கும்கூட போகலாம். அக்டோபர்லேயே இங்க விண்டர் வந்தாச்சுன்னாலும், புதுவருஷம் வரைக்கும் போக்குதான் காட்டிக்கிட்டிருந்தது. சொல்லப்போனா ஜனவரி 1, +1 கூட வந்தது. எங்க மரியாதையில்லாம போயிடுமோன்னு வருணபகவானும், வாயுபகவானும் சேர்ந்து நமக்கு பனி காமிக்கறாங்க. :(
Bloomberg.com: Europe
Yahoo! Weather
நேத்து இராத்திரி.. யம்மா.. தூக்கம் போச்சுதே
நேத்து இராத்திரி பல யுகங்களுக்கு பிறகு, டிஸ்கோவிற்கு வந்தே ஆக வேண்டுமென்ற நண்பனின் வற்புறுத்தலின் பேரில் (நிஜமா, நம்புங்க.. இத்தனை வருஷத்துல் முழுசா ஏழெட்டு தடவை போயிருந்தாலே ஜாஸ்தி), இரவு ஒன்பதரைக்கெல்லாம் கிளம்பியாச்சு. க்ளப் பேரு ரோஸ்ஸி (Rossi). இந்த ஊர்ல டிஸ்கோனா நூத்துக்கணக்கில இருக்கு. அதனால எது சரியா (அதாவது பாட்டெல்லாம்) நமக்கு தோதுபட்டுவரும்னு கண்டுபிடிக்கறதுக்கு நாளாகும். நம்ம பிரண்டு, வாரந்தோறும் போகும் டிஸ்க் ப்ரோங்கறதால, ரோஸ்ஸி தான் போறோம்னு முடிவு பண்ணியாச்சு.
அது என்ன ஒன்பதரைக்கெல்லாம் டிஸ்கோ போவீங்களான்னா.. பின்ன.. வியாழன்தோறும் அந்த கிளப்புல லேடீஸ் நைட். பெண்களுக்கு அனுமதி இலவசம். அதுவும் தவிர அவங்களுக்குன்னு பிரத்தியேகமா free flowing Champagne. அதனால பொண்ணுங்க கூட்டம் அலைமோதும். அவிங்க கூட்டம் ஜாஸ்தியாயிருக்குமுன்னா வாலிப வயோதிக அன்பர்கள் கூட்டத்துக்கு பஞ்சமிருக்குமா என்ன? நிக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் இருக்கும். பத்தரை மணிக்கு மேல தான் டிஸ்கோ உண்மையிலெயே சூடு பிடிக்கும். நடக்கிற தூரம்தான்கறதால பதினஞ்சே நிமிஷத்திலே போய் சேர்ந்தாச்சு. குளிரும் அவ்வளவு இல்லை. வாசல்ல மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் வச்சு நல்லாவே பந்தா காட்டறாங்க. தலைக்கு நூத்தியைம்பது ரூபிள் அழுதோம்.
உள்ளே நாங்க போனபோது இன்னும் கூட்டம் வந்திருக்கவில்லை. ஏற்கனவே ரெண்டு நண்பிகள் (இந்த நண்பிகள்-கற சொல சரியானதா?) துண்டு போட்டு தோதான இடம் பிடிச்சு வச்சுருந்தாங்க. அது ஏன் தோதான இடம்கறதுல கொஞ்சம் விவகாரம் இருக்கு. அது பின்னாடி. ஷாம்பெயின் ஃப்ரியா ஓடிச்சா, எல்லா பொண்ணுங்களும் ரொம்ப ஓவர் பிரண்ட்லியாவே சுத்திகிட்டிருந்தாங்க. சரி, ஏற்கனவே ஒரு ஹாட் பதிவு போட்டுருக்கேன். இங்க இருக்க நிலை எப்படின்னு, அதப்பாத்தீங்கனா, நீங்களா யூகிச்சுக்கலாம். முதல்ல, வந்தோன்ன, இத்தன நாள் கழிச்சு வந்தியேடா கண்ணான்னு ஷாம்பெயின். நமக்கு அது பிரச்சனையில்லை. ஆனா, அதுக்கப்புறம் நொடிக்கொரு தரம் கிளம்பற ஸ்டீம் எஞ்சின் தான் பிரச்சனை.
எல்லாருக்கும் கைல ஆறாவதா ஒரு வெள்ளை விரல் முளைச்சா மாதிரி அது கையவிட்டு கீழ இறக்குவேனான்னு ஊதி ஊதி தள்ளுறாங்க. அவங்க பாடு அவங்களுக்கு. நம்ம பாடு நமக்கு. அதான் சாப்பாடு. சுக்லாம்பரதரம் சொல்லி பிரஞ்சு (ஃப்ரீடம்) ஃப்ரை. கொஞ்ச நேரம் அரட்டை. அப்படியே பார்த்தா மணி பத்தரை ஆச்சு. இனிமே வரதெல்லாம் கொஞ்சம் ஏ மேட்டர். தயவு செஞ்சு வேண்டாதவங்க அடுத்த ரெண்டு பத்திய ஸ்கிப் செஞ்சுடுங்க. படிச்சுட்டு என்னைய திட்டக்கூடாது. நடந்ததச் சொல்றேன்.
ஏன் வாகான இடம் பிடிச்சு வச்சுருந்தாங்கன்னா.. எங்க டேபிளுக்கு நேர் எதிர்த்தாப்போல தான் ஸ்ட்ரிப்-டீஸ் டேபிள். ஆனா, நேத்திக்கு லேடீஸ் நைட்கறதால, பெரிய பெரிய எருமை சைஸுல ஆம்பிளைங்கதான் வந்து ஆடிக்கிட்டுருந்தாங்க. அவங்க ஆடறதோட விட்டா பரவாயில்லியே. கூட்டத்திலே இருந்து சாதாரண சில பொண்ணுங்கள்லாம் டேபிள் மேல ஏறி அவங்களுக்கு போட்டி குத்தாட்டம் போட்டாங்க. ஓவ்வொரு பதினஞ்சு நிமிஷத்துக்கும் இது நடக்கும். மொத்த டான்ஸ் ஹாலுமே டேபிள சுத்தி நின்னு ரகளை பண்ணினாங்க. சரி, நமக்கு அடுத்தது என்னன்னு மெனுவப் பார்த்தா காளானுடன் வறுத்த உருளைக்கிழங்கு. சே. தமிழ்ல சொல்றச்சே ஏதோ மாதிரி இருக்கே. Roasted Potatoes with Mushrooms. இப்படியாக பன்னிரண்டரை வரை ஓட்டியாச்சு. இன்னும் டான்ஸ் ப்ளோர் பக்கமே போகலியே, உக்காந்து தின்னுகிட்டே இருக்கியேன்னெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.
பன்னிரண்டரைலேர்ந்து பெண்கள் ஸ்ட்ரிப்டீஸ். என்ன இருந்தாலும் ப்ரொபஷனலா செய்யும்போது ஒரு அழகு. கூரையிலிருந்து கீழே பரவும் கம்பியில் சர்க்கஸ், குரங்கு வித்தை, தலைகீழா சுத்தறதுன்னு நிறைய விளையாட்டு. இதுக்கும் சுத்தி சரி கூட்டம். இதுக்கு நடுவுல, இரண்டு ஆளுக ஆர்வப்பட்டு, பொண்ணு ஆடிக்கிட்டிருக்கும்போதே அதே மேடையில் ஏற, எங்கேர்ந்து வந்தாங்கன்னே தெரியல.. நாலு பெரிய செக்யூரிட்டி வந்து ரெண்டு பேரயும் அலாக்கா தூக்கிக் கொண்டு வெளியில கடாசிட்டாங்க. பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் இது. இப்படியே ரெண்டரை வரை நல்லா பொழுதுபோச்சு.
அடுத்த ரவுண்டு என்ன.. இங்க க்ரென்கின்னு பேரு. கார்லிக் பிரட் மாதிரியே.. ஆனா டார்க் பிரட்டை வச்சு பண்ணி நீள நீள பீஸ்களா வெட்டிக் கொடுப்பாங்க. சூப்பரா இருக்கும். அதோட விட்டிருந்தா பரவாயில்லியே. நம்ம பிரண்டு நீ ஆப்ஸிந்த் (Absinthe) டேஸ்ட் பண்ணியிருக்கியான்னு கேட்டான். நமக்குத்தான் டேஸ்ட் பண்றதுல இதுவரைக்கும் பிரச்சனையே இருந்ததில்லையே. அதோட இன்னிவரைக்கும் அமெரிக்காவுல அப்ஸிந்த் விக்கறதுக்கு தடை. ஐரோப்பாவில் கூட இப்பத்தான் சில வருஷங்களுக்கு முன்னாடி திரும்ப விக்க அனுமதி கொடுத்திருக்காங்கன்னும் பயங்கர பில்டப் கொடுத்தோன, அப்படி என்னதான் மேட்டர்னு பாக்கணும்னு சபலம் வருமா வராதா?
சரின்னு ஆர்டர் செஞ்சோம். சர்வரம்மாவும் ரெண்டு க்ளாஸ்ல எலுமிச்சை ஜூஸ். ரெண்டு க்ளாசுல ஆப்ஸிந்தும் எடுத்துகிட்டு வந்தாங்க. ஆனா, அதுக்கப்புறம் ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க. "நீங்களே பத்தவச்சுபிங்களா, இல்லை நான் பத்த வக்கட்டுமா?" இது என்னடா, எதைப் பத்தவைக்கறதுன்னு நான் நம்ம connoisseur பிரண்டு பக்கம் திரும்பினா, நானும் இதுவரைக்கும் குடிச்சதில்லைன்னு ஹிந்தியில வழிஞ்சான். "நீங்களே பத்தவையுங்க" கேட்டதும் "யார் பர்ஸ்ட்". நேரா நண்பன் பக்கம் கைகாட்டினேன். பேப்பர் நாப்கின்ல ஸ்ட்ராவால ஓட்டை போட்டுவச்சுகிட்டு, அடுத்து லைட்டர் ஒண்ண எடுத்து க்ளாசுக்குள்ள இருந்த அப்ஸிந்த பத்த வச்சாங்க. நல்ல நீலமா அழகா எரிஞ்சுது. அது எரிஞ்சு முடிக்கறதுக்குள்ள எலுமிச்சை ஜூஸில் கொட்டிவிட்டு, காலி அப்ஸிந்த் க்ளாஸ பேப்பர் நாப்கின் மேல கவுத்துவச்சாங்க. சரி, இப்ப என்ன செய்யணும்னு அப்பாவியா அவங்கள நாங்க பார்த்து வழிஞ்சதும், நானே சொல்லித்தாரேன் சொல்லிக்கொடுத்தாங்க. அதாவது, ஸ்ட்ரா வழியா காலி ஆப்ஸிந்த் க்ளாஸ்குள்ளேர்ந்து புகைய நல்லா உள்ள இழுத்து, முழுங்காம வாயிலியே வச்சுருந்து, படக்குன்னு ஒன் ஷாட்ல அப்ஸிந்த் எலிமிச்சை கலவையை காலி பண்ணனுமாம். பண்ணோம். சரியான காரம். புகையோட கலந்த வித்தியாசமான எலுமிச்சை ஜூஸ். அதுக்கப்புறம் என்ன, ஒரு அரைமணிக்கு கிர் கிர் தான். நல்லவேளை, இதுவரைக்கும் நல்லா சாப்பிட்டிருந்தேனோ பொழைச்சேன். இத்தனைக்கும் வெறும் நாற்பது மில்லி தான். அதுக்கே ஆளத் தூக்கி அடிச்சுடுச்சு. நம்மூர்ல என்ன நிலவரம்னு தெரியல.
சரி, இதுக்கு மேல ரிஸ்க் எடுக்கக்கூடாதுன்னுட்டு கொஞ்சமா கொஞ்சம் ஆடுகளம் (டான்ஸ் ப்ளோர்தான்) பக்கம் போய் "Who Likes To Move it Move It?" க்கு "We Like To" ன்னு பிரஸண்ட் மார்க் கொடுத்துட்டு வந்து பார்த்தா மணி நாலேகால். சமையா தூக்கம் சொக்குது. முந்தின நாள் வழக்கம் போல் வேலைநாள்கறதால சாயங்காலம் வந்து ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கமுடிஞ்சது. டேபிள்ல ஒரு பத்து நிமிஷம் தூங்கியிருப்பேன். ஒரு பெரிய உருவம் வந்து உலுக்கி, தூங்கறாதா இருந்தா வீட்டுக்கு கிளம்பு ராசான்னு மிரட்டிட்டுப் போச்சு. கூட வந்த நண்பிகள் மெட்ரோ 545க்கு திறக்கற வரைக்கும் இருந்துட்டு போகணும்னு சொன்னதுனால, முழிச்சிகிட்டிருக்கறது எப்படி. அடுத்த ரவுண்டு சாப்பாடுதான். திரும்ப காளான், உருளைக்கிழங்கு, தெம்பூட்ட சூப்னு அடிச்சு முடிச்சா அஞ்சு ஆச்சு. பத்து நிமிஷம் கழிச்சு "Who Let the Dogs out" ஆரம்பமாச்சு. ரீமிக்ஸ் போல. ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் ஓடிச்சு. அதுலேயே எல்லாரும் களைச்சு போயாச்சு. இதுக்குள்ள டிஸ்கோவும் காலியாக ஆரம்பிச்சாச்சு. சரி, நாமளும் நடையக் கட்டுவோம்னு தூக்கக்கலக்கத்தோடயே வீட்டுக்கு வந்தா ஆறுமணி. ஒரு மணிநேரம் தூங்கினா, வேலைக்கு ஆகாது (போகாது!)ன்னு தூக்கத்துக்கு பை. இனிமேயென்ன ரெண்டு நாளைக்கு தூக்கந்தான்.
-----
உங்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
Gazprom: 3
விவரமாக பதிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சோம்பல்பட்டு விட்டுவிட்டேன். இப்போது மழை காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பின்னூட்டம் இட்டவுடன், மழை இடியுடன் கூடிய புயலாய் மாறுவதற்குமுன் இதோ பதிவிட்டுவிடுகிறேன். :)
ரஷ்யா தன் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் எண்பது சதவிகிதம் வரை உக்ரைனின் குழாய்களையே நம்பியிருக்கிறது. மிக முக்கியமாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு. இதில் உக்ரைனுக்கு நிறுத்திவிட்டால் ஐரோப்பாவிற்கும் போகாதே என்று ஷ்ரேயா கேட்டிருந்தார். எண்ணெய், எரிவாயு, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கு குழாயை மூடுவது என்றால், நேரடிப் பொருள் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு ரஷ்யாவிலிருந்து அனுப்பப்படுகின்றது என்றால், அதில் 750 ஐரோப்பாவிற்கும், 250 உக்ரைனுக்கும் என்று வைத்துக்கொள்வோம். இதில், குழாயை மூடியது என்றால், 750 மட்டுமே ஜெர்மனிக்கென்று உக்ரைனின் குழாய்கள் வழியே ரஷ்யாவால் அனுப்பப்படும். இந்த 750-க்யூ.மீ பணம் கொடுத்து வாங்கி இருப்பது ஜெர்மனி. இப்போது இந்த 750-இருந்து உக்ரைன் தன் பங்கை எடுத்துக்கொள்ளுமானால் அது ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைப் பொருத்தவரை திருட்டு. சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு இந்த மாதிரி திருட்டை செய்ய தைரியம் வராது. தனியாக, இதுவரை இருபத்தியைந்து பில்லியன் டாலர்கள் அளவிற்கு உக்ரைன் ஏற்கனவே எரிவாயு திருடியிருப்பதாக காஸ்ப்ரோம் குற்றம் சாட்டியுள்ளது. அதை உக்ரைன் வன்மையாக மறுத்துள்ளது. ஜெர்மனி புத்தாண்டு தினத்தன்று தனக்கு வரவேண்டிய அளவிற்கு எரிவாயு வந்து சேரவில்லை என்று புகார் செய்தது. ரஷ்யா தான் உண்டான அளவு அனுப்பிவிட்டதாக சொல்லி, உக்ரைனில் தான் காணாமல் போயிருக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டது. இந்த மாதிரி புகார்கள் வந்தால் அது நாட்டின் integrity ஐ பெருமளவில் பாதிக்கும்.
அடுத்து, செவாஸ்தபோலில் உள்ள ரஷ்யாவின் கடற்படை. சோ.யூ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வழக்கம். உதாரணத்திற்கு, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி வகித்தாலும் ரஷ்யா தன் செயற்கைக்கோள்களை அனுப்ப இன்றுவரை கஸக்ஸ்தானில் இருக்கும் பைக்கானூரைத்தான் பயன்படுத்திவருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்படும் கோள்கள் போன்றவை கூட பைக்கானூரிலிருந்துதான் பறக்கின்றன. சோ.யூ பிரிந்த பிறகு, பைக்கானூருக்கென்று பணமாகவோ, பொருளாகவோ, சேவைகளாகவோ வாடகையொன்று கொடுக்கப்பட்டுவருகிறது. அதுவே தான் உக்ரைனின் செவாஸ்தபோல் நகரில் இருக்கும் கடற்படைக்கும். இதன் வாடகையை ஏற்றுகிறேன் என்று உக்ரைன் சீறியது தேவையின்றி பிரச்சனையை பெரிதாக்க உதவியதே தவிர பயனொன்றுமில்லை.
சரி, ஏன் உக்ரைன் மட்டும் குறிவைக்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம் முன்பே கூறியபடி சென்ற நாடாளுமன்றத்தேர்தல் தான். முன்னாள் அதிபர் லியோனிட் குச்மா ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிந்தபின் நடந்த தேர்தலில் ரஷ்யா யனுகோவிச் என்ற ரஷ்ய சார்பு வேட்பாளரை ஆதரித்தது. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் விளையாடியதில் "ஆரஞ்சு புரட்சி" என்று ஒன்று நடந்து மேற்குநாடுகளுக்கு நேசமான யூஷென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பையும் ரஷ்யாவிற்கு குறிப்பாக அதிபர் பூடினுக்கு அவமானத்தைத் தேடித்தந்தது. இதே மாதிரி ஜியார்ஜியாவிலோ, லாத்வியாவிலோ நடந்திருந்தால் ரஷ்யா பெரிதாக அலட்டிக்கொண்டிருக்காது. ஏனென்றால் ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இருக்கும் உறவு அத்தகையது. ரஷ்யன் மட்டுமே பேசும் மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
உக்ரைனுக்கு என்று பெரிய வரலாறு ஒன்றுமில்லாவிட்டாலும், சோ.யூ வில் உக்ரைனின் தலைநகரமான "கியவ்"விற்கு தனி மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. Kyiv is the mother of all cities என்று ஒவ்வொரு ரஷ்யனும் பள்ளிக்கூடத்தில் படித்தனர். கலாச்சாரம், மதம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஒற்றுமை இருந்தது இரு மக்களுக்கும். குச்மாவின் ஆட்சியில் அதிருப்தியடைந்த மக்கள் அமெரிக்க சார்பு யூஷென்கோவை தேர்ந்தெடுத்ததும் வேண்டுமென்றே தன்னை அவமதிப்பு செய்கின்றது உக்ரைன் என்று ரஷ்யா கருதத்தொடங்கியது. கருவிக்கொண்டே இருந்த போது லட்டுவாய் அமைந்தது காஸ்ப்ரோம் விவகாரம். மேலும், யூஷென்கோ பதவிக்கு வந்து கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற சாத்தியக்கூறுகள் இருப்பதாய் தெரியாமல் உக்ரைனியர்கள் குழம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், உக்ரைனின் (யூஷென்கோ) எதேச்சாதிகார மேற்கத்திய சார்பு நிலையால் நட்பு நாடான ரஷ்யாவை பகைத்துக்கொண்டால், எரிவாயு தட்டுபாடு அதன் மூலம் பொருளாதார முடக்கம் என்று விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்த கிடைத்த நல்ல வாய்ப்பொன்றை ரஷ்யா நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது. இத்தனை காலம் கிடைத்துவந்த மலிவுவிலை எரிவாயுவால் inefficient ஆக இருந்த உக்ரைனிய கம்பெனிகள் பதறத்தொடங்கின. பொருளாதாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. யூஷென்கோவின் மேலும் அதிருப்தி வளரத்தொடங்கியிருக்கிறது. அதனால் தான், சென்ற பதிவில் இப்பிரச்சனை அதிக நாள் நீடிக்காது என்று எழுதியிருந்தேன். நீடித்திருந்தால் ரஷ்யாவிற்கு லாபமே கிட்டியிருக்கும், யூஷென்கோ மேல் ஏற்படும் அதிருப்தியால்.
குட்டி செய்தி: இந்த விளையாட்டில் ஒரு இந்தியரும் சம்பந்தப்பட்டுள்ளார். வேறு யாருமில்லை. உலகின் மூன்றாம் பெரும்பணக்காரரான லக்ஷ்மி மிட்டல் தான். இரண்டு பில்லியன் மதிப்புள்ள உக்ரைனின் மிகப்பெரிய இரும்பு ஆலையை ஐந்து பில்லியனுக்கு (இதுவே உக்ரைனின் சுதந்திர வரலாற்றிலேயே மிகப்பெரும் தனி முதலீடாகும்) அவர் வாங்கியதற்கு முக்கிய காரணமே ரஷ்யாவில் இருந்து வந்த மலிவுவிலை எரிவாயுதான். இந்தப் பிரச்சனையால் இப்போது எரிவாயுவிலிருந்து கரிக்கு மாறப்போவதாய் அறிவித்திருக்கிறது அவரின் நிறுவனம்.
சரி, அரசியல் போதும். இப்போது கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாட்டு பார்ப்போமா? இந்த விவகாரம் சென்ற வாரம் ரஷ்யாவிற்கு சாதகமாய் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ரஷ்யா கேட்ட 230$ கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் ஒப்புக்கொண்டது உக்ரைன் அல்ல. நடுவில் இருக்கும் ஒரு மர்ம நிறுவனம். குச்மா ஆட்சிக்காலத்தில் ஸ்விட்ஸர்லாந்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் RosUkrEnergo என்ற இந்த நிறுவனத்தில் ரஷ்யா முதலீட்டாளர்களும், பெயர் தெரியாத உக்ரைனிய பெருந்தலைகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்போது போட்டுள்ள ஒப்பந்தந்தின் படி, ரஷ்யாவிடமிருந்து 230$ RUE வாங்கி வெறும் 96$ உக்ரைனுக்கு விற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதெப்படி கட்டுபடியாகும் என்ற கேள்விக்கு, டுர்க்மெனிஸ்தானிலிருந்து மலிவுவிலை எரிவாயு வாங்கி சரிபாதி கலந்து விற்றால் லாபமே என்று RUE கருதுகிறது. இதில் கேள்வியென்னவென்றல் இத்தகைய ஒரு shady deal-இல் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யாரென்று வெளிப்படையாக தெரியாததுதான். இருப்பினும் காஸ்ப்ரோம், பூடின், யூஷென்கோ மற்றும் மேற்கத்திய நாடுகள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. மேலும் காஸ்ப்ரோம், குழாய்களை பயன்படுத்த ஆயிரம் க்யூ.மீ 1.06$ என்ற விலையை 1.90 என்று இனிமேல் உக்ரைனுக்கு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
ரஷ்யா இதில் அரசியல் இல்லை பொருளாதாரமே பிரச்சனைக்கு காரணம் என்றாலும் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு மலிவு விலை எரிவாயு தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அளித்துவந்தது. ஆனால், தற்போதைய நிலையில் தனக்கு எதிரான அரசு ஆளும் ஒரு நாட்டிற்கு எதற்கு தன் மக்களின் வரிப்பணத்தில் மலிவுவிலையில் வழங்கவேண்டும் என்பதுதான். அது நியாயமானதும்கூட. ஆனால், இப்பிரச்சனையால் கலங்கிப்போயிருப்பது ஐரோப்பாவும் தான். தங்கள் எரிவாயுத் தேவையின் 30 சதவிகிதம் வரை பூர்த்தி செய்வது ரஷ்யா தான். இதே மாதிரி விளையாட்டை தங்களிடமும் விளையாண்டால் என்ன நிலை உண்டாகும் என்று கவலைப்படத்துவங்கியுள்ளனர் ஐரோப்பாவின் பெருந்தலைகள். இதனால் alternate energy பக்கம் ஆர்வம் வளரலாம். மேலும் எகிப்து போன்ற நாடுகளை தங்கள் எரிவாயு தேவைகளுக்கு இன்னும் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கலாம்.
இந்தப் பிரச்சனை மூலம் ரஷ்யாவை புறக்கணிப்பார்களா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில் மாற்று சோர்ஸ்களை உருவாக்க பலவாண்டுகள் பிடிக்கும். பணமும், நேரமும் ஏராளமான அளவில் செலவிடவேண்டும். மேலும் எகிப்து போன்ற நாடுகளின் அரசியல் நிலையும் அவ்வளவு சாதமாக இல்லை. அதற்கு பதில், கொஞ்சம் விட்டுப்பிடித்தால் ரஷ்யாவை stable partner ஆக்க முடியும். அதைத்தான் செய்ய முற்படும் ஐ.யூனியன். அதனாலேயே உக்ரைன் பணிந்துபோனது. ஆனால், இந்த நேரத்திற்குள் இன்னும் ஒரு முறை கூட இந்த மாதிரி காஸ்ப்ரோம் விளையாடுமானால் ரஷ்யாவின் கனவான உலகின் energy superpower ஆவது வெறும் கனவாகவே ஆகிவிடும்.
முந்தைய பதிவுகள்
அலெக்ஸாண்டரும் ஸ்கந்தனும்
அலெக்ஸாந்தரும் ஸ்கந்தனும்
Skanda: The Alexander Romance in India
ரொம்ப பெரீரீய்ய கட்டுரை. படிக்க ரொம்பவே பொறுமை வேண்டும். ஆனால், சொல்லப்பட்டிருக்கும் விஷயம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. க்ரேக்க மன்னனான அலெக்ஸாண்டர் தான் மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் தெய்வமாக்கப்பட்டு ஸ்கந்தன் என்று வணங்கப்படும் கடவுளானார் என்கிறார் ஆசிரியர். தமிழ்க் கடவுளான முருகன் அலெக்ஸாந்தருக்கு முற்காலத்திலேயே வணங்கப்பட்டு வந்துள்ளார் என்றும் காலப்போக்கில் கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றானார்கள் என்றும் கூறுகிறார்.
முன்னரே இந்தப் பெயர்க்குழப்பம் குறித்து இராகவன் பதித்திருக்கிறார். அதையும் பார்க்கவும்.
சிவனைப் பற்றியும் Zeus பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.
படித்துவிட்டு கருத்துகளை கூறுங்கள்.
சுட்டிக்கு நன்றி: சன்னாசி
Gazprom - 2
போன தடவை பிரச்சனை என்னன்னு பார்த்தோம். மேலோட்டமா வெறும் விலைவாசி சண்டைங்கற மாதிரி தெரிஞ்சாலும் இதுக்கு பின்னாடி இருக்கற அரசியலைக் கொஞ்சம் இங்கே பார்ப்போம்.
இதுக்கும் சோவியத் யூனியன்லேர்ந்துதான் ஆரம்பிக்கணும். சோவியத் யூனியன் இருந்தவரை அதன் துணைக்கோள்களான நாடுகளுக்கு மாஸ்கோ தான் எல்லா பிரச்சனைகளிலும் ultimate authority. ஆனால் சோ.யூ வீழ்ந்தபின் ரஷ்யா தன்னைத்தானே சோ.யூவின் ஏகோபத்திய வாரிசாக நினைத்து பிரிந்து சென்ற நாடுகளை CIS என்ற புதுப்பெயரில் ஒருங்கிணைத்து தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்பியது. ஆனால், மேற்கத்திய நிதி பெருமளவில் புனர்நிர்மாணத்திற்கு தேவைப்பட்டதால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கு பக்கம் சாயத்தொடங்கின.
ரஷ்யாவின் தயவு அவர்களுக்குத் தேவையாய் இருக்கவில்லை. மேலும், பல முன்னாள் சோவியத் நாடுகள் உதா: ஹங்கேரி, போலந்து, செக் ரிபப்ளிக் போன்றவை தங்களை proper ஐரோப்பியர்கள் என்றும், மாஸ்கோவின் சதியால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இத்தனை ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதத்தொடங்கின. எஸ்டோனியா, லாத்வியா, ஜியார்ஜியா போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையத்துடித்தன. அதற்கு விலையாய் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான தங்களின் நெருங்கிய படை மற்றும் பொருளாதாரத்தொடர்பை துண்டித்து, சோ.யூ ஜென்மப் பகையான நாட்டோவில் தங்களை இணைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தன.
இதில் ரஷ்யாவின் நிலைமை ஆற்றாமையே. சோ.யூவின் நேரடி வாரிசு என்று பிரகடனப்படுத்தியபின்னர், மேற்கோடு ஓவராக ஒட்டி உறவாட முடியாது. நிதிநிலைமை, படைபலம் எல்லாம் சீர்குலைந்து இருந்த முன்னாள் வல்லரசின் வாரிசுக்கு, வெந்தபுண்ணிலேயே வேலைப் பாய்ச்சுவதுபோல் முன்னாள் நட்புநாடுகள் பிரிந்துசென்றது ஆனது. அவர்களைத்தன் வழிக்குக் கொண்டுவர ஒரு ஆயுதம் கூட ரஷ்யாவின் கையில் இருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் அதை (அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்) பகிரங்கமாக ஒப்புக்கொள்வது சர்வதேச அளவில் மானப்பிரச்சனை. இந்த காலகட்டத்தில் வாய்மூடி மவுனியாய் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது. இந்த நாடுகள் தன் கையை விட்டுப்போவதில் பொருளாதார இழப்பு பிரதானமானதில்லை. strategic காரணிகளே முக்கியமானவை.
க்யூபன் மிஸ்ஸைல் பிரச்சனையும் இதே போன்றதுதான். சோ.யூ மிஸ்ஸைல்களை தன் நாட்டில் அமைக்க அனுமதிப்பது க்யூபாவின் பிரத்தியேக உரிமை. ப்ரெஷ்னேவ் அமெரிக்காவை ஒருபோதும் தாக்க எண்ணவில்லை, மாறாக சர்வதேச அரங்கில் "பார்த்தாயா, உன் வீட்டு முற்றத்திலேயே என் ஆயுதங்களை குவித்திருக்கிறேன்" என்று அமெரிக்காவிற்கு அவமானத்தை உண்டாக்கவே செய்த முயற்சி அது. அதை தடுக்க நினைத்து வெற்றியும் பெற்ற அப்போதைய அமெரிக்க நிலைப்பாட்டிலேயே இப்போது ரஷ்யா இருக்கிறது. ஆனால் படைபலமும் பொருள்பலமும் இல்லாத நிலையில், அமெரிக்கா அன்று அவமானப்பட்டதைவிட இன்று பலமடங்கு அவமானப்பட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளுக்கென்று விசிலடிச்சான்குஞ்சு நாடுகள் எப்போதும் இருக்கும். அவை விட்டுப்போனதுதான் பிரச்சனையே. இந்த அவமானம் எப்படியெல்லாம் வடிவெடுக்கிறது என்பது சர்வதேச அளவில் ரஷ்யாவின் இன்றைய இமேஜை வைத்தே தெரிந்துகொள்ளலாம். லாத்வியா, ஜியார்ஜியா போன்ற 'பச்சா' நாடுகளெல்லாம் ரஷ்யா ஒரு பல்லிழந்த கிழப்புலி என்ற ரேஞ்சிற்கு மானத்தை வாங்கி ஐரோப்பிய அரசியல் செய்யும்போது முன்னாள் வல்லரசு என்ற வகையில் ஏற்படும் கோபமும், ஆற்றாமையும் புரிந்துகொள்ளக்கூடியவையே இல்லையா? படைபலம் குறைந்தது உண்மைதான். ஆனால் இன்றளவும் உலகத்தையே மொத்தமாக சிலபல முறைகள் அழிக்கவல்ல பலம் பொருந்திய நாடு, பொருளாதாரச் சீர்கேட்டில் சிக்கி இருப்பதால் குட்டி நாடுகள் எல்லாம் போங்கு செய்வதை எப்படி தடுக்கலாம் என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கும்போது ஆபத்பாந்தவனாய் வந்திருக்கிறது காஸ்ப்ரோம்.
இப்போது உக்ரைன் இந்தப் பிரச்சனையில் சிக்கியிருப்பது மேற்சொன்ன அரசியலே காரணம். அதுவும் ரஷ்யா இவ்வளவு சர்வதேச பிரஷருக்கும் பின்னரும் விடாப்பிடியாக இருக்கிறதென்றால் அதற்கு மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் சென்ற தேசிய தேர்தலில் செய்த அரசியலே முழுமுதற்காரணம். அமெரிக்காவின் தயவில் நடத்தப்பட்ட 'ஆரஞ்சு புரட்சியே' இப்படியான கத்திமேல் நடப்பது போன்ற ஒருவிஷயத்தை இமேஜ் போனாலும் செய்வது என்று வரிந்துகட்டிக்கொண்டு ரஷ்யா செய்கிறது.
(தொடரும்)
ரொம்பவே நீட்டிமுழக்கி எழுதறேனோ? எனினும் ரொம்ப நாளா தொடர் போடாத குறையை இதுமூலமா தீர்த்துக்கொள்ளலாம்னு நினைக்கிறேன்.