144. ஆதலால் தானம் செய்வோம்

என்னதான் நவீன மருத்துவம் வளர்ந்திருந்தாலும், சில நேரங்களில் வாகன உதிரிப்பாகங்களைப் போலவே நோயினால் பழுதடைந்த உடற்பாகங்களை சரிசெய்ய முடியாமல் போய்விடுகிறது. ஆனால், நல்லவேளையாக இறந்த உடலிலிருந்தோ சில சமயங்களில் உயிருள்ளவர்களிடமிருந்தோ நல்ல பாகங்களை தேவைப்படுவோர்க்கு கொடுக்க இயலும். அது சாத்தியப்படுகிறது.

முதலில் என்னென்ன பாகங்களை தானமாக கொடுக்கலாம் என்று பார்ப்போம்.

1. எலும்புகள்
2. கண்கள்
3. சில வகை இரத்த நாளங்கள்
4. இருதயம் மற்றும் வால்வுகள்
5. சிறுநீரகம்
6. தோல்
7. கல்லீரல்
8. நுரையீரல்
9. பான்க்ரீயாஸ்
10. குடல்

இன்னும் சில உள்ளன ஆனால் மேற்கூறியவையே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளவை.

உயிருடன் இருக்கும்வரை இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுக்கத் தயங்காத மக்கள் உடல் பாகங்கள் என்று வரும்போது தயங்குவது வழக்கம். அதுவும் இறந்தபின்னும் கூட. சில நாடுகளில் இறந்தவர் வெளிப்படையாக தன் பாகங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உயிலில் தெரிவித்திருந்தாலேயொழிய de fault-ஆக உறுப்புகள் தானத்திற்கு என்று அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டங்கள் உள்ளன. இன்னும் சில நாடுகளில் உறவினர்களின் சம்மதத்தோடு செய்ய முடியும்.

இறக்காமல் brain-dead எனப்படும் சூழ்நிலைகளிலும் உறவினர்கள் தயங்குவதுண்டு. இதில் கொஞ்சம் சிக்கல் உண்டு. மூளை-இறப்பு என்பது முற்றிலுமாக மறுபடி உயிர் பெற வாய்ப்புகள் அறவே அற்ற இறந்த மூளையாகும். இதை நிறுவுவதற்கு சில ஆய்வுமுறைகள் உள்ளன. அவ்வாறு முற்றிலுமாக இறந்த மூளை என்று கருதப்படும் நோயாளியின் இருதயம் இன்னும் இயங்கக்கூடும். ஆனால், மூளை இறந்தது இறந்ததுதான். மருத்துவத்தைப் பொருத்தவரை vegetative state அதாவது ஒரு உயிரற்ற காய்கறி நிலைக்கு சமானம்.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து சொச்சம் மாற்று உறுப்புகள் தேவைப்படுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆவரேஜாக ஒரு நோயாளி மூன்று வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும் ஒரு சிறுநீரகத்துக்காக. ஆனால், இவ்வளவு donor கள் இருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் வரை ஆண்டொன்றுக்கு சிறுநீரக மாற்று தேவைப்படுகிறது. கிடைப்பதோ மூவாயிரத்தி சொச்சம்.


இருந்தாலும், சில நேரங்களில் பணவசதி முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் வரை செலவாகும் அறுவை சிகிச்சை பாதி விலையில் மூன்னேறும் நாடுகளில் சாத்தியம். இதனாலேயே இப்போது organ transpant tourism கூட வந்துவிட்டது.

மேலும் ஒரு இறந்த உடலிலிருந்து கிடைக்கும் உறுப்பு மிகக்குறைந்த நேரமே viable ஆக இருக்கும். அதற்குள் தகுந்த முறையில் பழைய உடலிலிருந்து எடுக்கப்பட்டு, சரியான முறையில் transport செய்யப்பட்டு நோயாளியின் உடலில் பொறுத்தப்படவேண்டும். இதுவும் ஒரு முக்கிய காரணம்.

உடல் உறுப்பு தானத்திற்கு மக்கள் தயங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. முக்கியமாக மத சம்பந்தப்பட்ட விஷயங்கள். கண் கொடுத்தால் அடுத்த ஜென்மத்திற்கு என்ன செய்வது என்பது மாதிரியான சந்தேகங்கள். இவை அறிவின்மை என்று ஒதுக்கித்தள்ள முடியாது. ஏனெனில் மக்களின் நம்பிக்கைகள் அப்படி. மேலும், தானம் தர சுயநினைவோடு ஒத்துக்கொண்டாலும் பின்னர் தான் தானம் தர ஒப்புக்கொண்டதால் தனக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று சஞ்சலங்கள் நோயாளியின் மனதிலும், அவர் நினைவிலில்லாத பட்சத்தில் உறவினர்கள் மனதிலும் தோன்றக்கூடும். இன்னும் சில இடங்களில் துக்கம் விசாரிக்க வருகிறவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலில் ஏதேனும் disfigurement இருக்கக்கூடுமோ என்ற அச்சம். இதைத்தவிர யார் உறுப்புகள் கொடுத்தார்கள் என்று பெறுபவருக்கோ, பெறுபவர் யார் என்று கொடுப்பவருக்கோ தெரிந்துவிடுமோ என்கிற அச்சம். (இதற்கு 21 கிராம்ஸ் படம் நல்ல உதாரணம்)

இரண்டாவது சொன்ன மூளை இறந்த நோயாளிகளின் (இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000) விஷயத்தில் பெரும்பாலும் மனைவி மக்கள் போன்றவர்களே, நோயாளி வெளிப்படையாக எதுவும் அறிவிக்காத பட்சத்தில், முடிவெடுக்கிறார்கள். மருத்துவப் பார்வையில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று 100% சொன்னாலும், அவர்களுக்கு படுத்தவர் எழுந்து வரமாட்டாரா என்கிற ஆவல் தானத்திற்கு குறுக்கே நிற்கிறது.

இவ்வளவு பேருக்கு பாகங்கள் தேவைப்படுகிறது. ஆனால் சப்ளை இல்லையே என்கிற உடன் முளைக்கிற விஷயம் தான் கள்ள மார்க்கெட். இது உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் பணத்தட்டுப்பாட்டிற்கு கிட்னியை விற்பது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகப் போய்விட்டது. அவர்கள் தானம் கொடுப்பது நல்லதுதான் என்றாலும், கொடுப்பவர்களுக்கு பெரும்பாலும் அதில் நஷ்டமே. தரகர்களுக்கும் சில unscrupulous மருத்துவர்களும் கமிஷன் அடித்து பின் அவர்களுக்கு வருகிற தொகை சொற்பமானதாகவே இருக்கும். தைவானிற்கும் இஸ்ரேலுக்கும் நம்மூரிலிருந்து கிட்னிகள் போகின்றன என்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். இம்மாதிரி ஏழைகள் வெறும் ஆயிரம் டாலர் (50,000 INR) பெற்றாலே பெரிய விஷயம். சர்வதேச சந்தையில் விற்கப்படும் நாட்டைப்பொறுத்து இருபதாயிரம் டாலர்கள் வரைக்கும் விலை போகும். கிட்னி எடுப்பது என்பதொன்றும் ஒரு நட் போல்ட் கழட்டுவது போலல்ல. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தகுந்த முறையில் post-op care, இதர செலவுகள் வேறு இருக்கின்றன. தானம் கொடுப்பவருக்கு சொல்லப்போனால் ஒழுங்காக செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையால் ஒரு கோளாறும் வரக்கூடாதென்றாலும், பல இடங்களில் பணமே பிரதானம் என்று வந்தபின் கொடுப்பவர், அவர் ஏழைஎன்றுவேறு ஆகிவிட்டால், அரைகுறையாக செய்யப்படுவதால் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். இதற்கு சர்வதேச அளவில் human trafficking, drug trafficking போல organ trafficking இருக்கிறது. இதற்கென்று தனி மாபியாவும் உண்டு. பல பின் தங்கிய நாடுகளில் ஏழைகள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் டிமாண்டை நேர்மையான வழிகளில் அரசுகளால் சமாளிக்க முடியாததுதான்.

உலகிலேயே உறுப்புதானத்தில் முன்னோடியாக இருப்பது ஸ்பெயின் தான். பத்து லட்சம் பேருக்கு (மக்கள் தொகையில்) 32 பேர் உறுப்பு தானம் செய்கிறார்கள். அங்கே சட்டப்படி, இறந்தவர் வெளிப்படையாக தானத்திற்கு சம்மதிக்காமல் உயில் வைத்திருந்தாலே தவிர, அரசு உறுப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில நூறுகோடி மக்கள்தொகையில் ஆண்டுதோறும வெறும் 30-40 உடல்தானங்களே நடக்கின்றன என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தது கொடுப்பதிலேயே பிரச்சனைகள். எய்ட்ஸ் தொடங்கி தொற்றுநோய்கள் மற்றும் பெறுபவரின் நோயெதிர்ப்புச் சக்தியுடன் ஒத்துப்போகும் தன்மை போன்றவையும் சப்ளை குறைவாய் இருப்பதற்கு காரணங்கள்.

இவற்றிற்கு மாற்றாக stem cell research, க்ளோனிங்க் முறைகள் மூலம் உறுப்புகள் உற்பத்தி சாத்தியம் என்பதற்கான கூறுகள் தெரிந்தாலும், அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளில் இவற்றிற்கு முழுக்க தடையோ அல்லது மிகவும் கட்டுப்பாடுகளுக்கிடையேயோ இயங்கவேண்டியிருக்கிறது.

வருடாவருடம் உறுப்புகள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதே மடங்குகளில் உயர்வதில்லை. இதற்கு மக்களிடம் இருக்கும் உறுப்புகள் தானம் பற்றிய அறியாமையையும், பயத்தையும் களைய வேண்டும். அதற்கு அரசு பொறுப்பாய் செயல்படவேண்டும். இளைஞர்களும் முன்மாதிரியாகவும், தம்மக்களிடமாவது விழிப்புணர்ச்சியை எழுப்ப பாடுபட வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வு எங்கிருக்கிறதென்பாவது கண்ணில் தெரியும்.

16 Comments:

  1. துளசி கோபால் said...

    ராம்ஸ்,

    அருமையான பதிவு. நானும் ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்கறப்ப கேக்கறாங்கன்னு
    தானம் எழுதிக் கொடுத்துருக்கேன். நாம போனபிறகாவது யாருக்காவது
    பிரயோஜனமா இருக்கலாமுல்லையா?

    ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அவசியமான பதிவு. வாழ்த்துகள். நல்லா இருங்க.


  2. Muthu said...

    ராமு,

    எனக்கெல்லாம் ரத்தத்தை பார்த்தா மயக்கம் போடற வியாதி..அதுக்காகவே ரத்தம் கொடுக்கறதில்லை..ஆனால் இந்த உடல் பாகங்களை கொடுக்கறதில உறுதியா இருக்கேன்...முகமூடி கண் தானம் பத்தி ஒரு அட்ரஸ் கொடுத்திருக்கார்...அந்த மாதிரி ஏதாவது தகவல் வைச்சிருக்கீங்களா?


  3. டிபிஆர்.ஜோசப் said...

    சில நாடுகளில் இறந்தவர் வெளிப்படையாக தன் பாகங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று உயிலில் தெரிவித்திருந்தாலேயொழிய de fault-ஆக உறுப்புகள் தானத்திற்கு என்று அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டங்கள் உள்ளன. //

    இங்கயும் அந்த மாதிரி சட்டம் வரணும். அப்பத்தான் இதுக்கு விமோசனம் வரும்.

    நல்ல அருமையான பதிவு இராமநாதன்.


  4. rv said...

    அக்கா,
    நல்ல காரியம் செஞ்சுருக்கீங்க.

    //ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அவசியமான பதிவு//
    அப்படியே நக்கலா.. சரி சரி.. :))


  5. rv said...

    முத்து,
    அட்ரஸ் எதுவும் கைவசம் இல்லை.
    இராமச்சந்திரா, CMC வேலூர், மெட்ராஸ் மிஷன், விஜயா இவங்கள்லாம் இதுல பெரியாளுங்க. முன்னாடி MOHAN foundation-னு சொல்லி சென்னைல ஒரு தொண்டு நிறுவனம் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல.

    அரசு மருத்துவமனைகளில் என்ன நடக்குதுன்னு எனக்கு இப்போ தெரியல. இன்னும் ரெண்டு மூணு நாள்ல கேட்டுச் சொல்றேன். அதுக்குள்ள தமிழ்நாட்டுல ப்ராக்டிஸ் செய்யற தாணு போன்றவர்களுக்கு இன்னும் நேரடி அனுபவம் இருக்கலாம்.


  6. rv said...

    ஜோசப் சார்,
    இறந்த உடல் சமுதாயத்துக்கு சொந்தமா குடும்பத்துக்கு சொந்தமாங்கறது சிக்கலான விஷயம்.

    கண்தானத்துல ஓரளவுக்கு நல்லா முன்னேறிட்டோம். ஆனா, உறுப்புகள்/உடல் தானத்துல இல்ல. இதுக்கு முக்கிய காரணம் வெளிநாடுகள் போல Centralized Donor System எதுவுமே இல்லாததுதான். அதுக்கு அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும்.


  7. G.Ragavan said...

    தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இதுல கட்டாயப் படுத்தக் கூடாது. முடியாது. அது தப்பு.

    அதே நேரத்துல உறுப்பு தான விஷயத்துல நமக்கே நெறைய புரியாமை இருக்கே. முறையான அறிவு பொதுவாகவே நமக்குக் குறைவு. எனக்கும் கண்தானம் செய்யனும்னு ஆசைதான். ஆனா கிட்டப்பார்வைக் கோளாறு உள்ளவங்க தானம் செய்ய முடியுமான்னு தெரியாது....என்ன செய்ய...இதுக்கான விழிப்புணர்ச்சி இப்ப ரொம்பத் தேவை.


  8. G.Ragavan said...

    முத்து சொல்ற மாதிரி...எனக்கெல்லாம் ரெத்தத்தப் பாத்துட்டா கண்ணக் கெட்டீரும். (ஆடு, மீன், கோழி தவிர ஹி ஹி) அப்படியிருக்கிறப்ப...மக்கள் தங்கள் உறுப்பைக் கொடுப்பதை இழப்பாத்தான் நெனப்பாங்கன்னு நெனைக்கிறேன். கண்தானம்னே வெச்சுக்குவோமே....குருட்டுப் பேயா அலையனுமோன்னு வருத்தப் பட்டாலும் படுவாங்க.....


  9. இலவசக்கொத்தனார் said...

    உடல் தானத்திற்கு தனியாய் உயிலில் எழுதி பதிவு செய்ய வேண்டுமா? வேறு என்ன வழிமுறைகள் இருக்கின்றன? உயிருடன் இருக்கும்வரை இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுப்பது போன்று வேறு ஏதேனும் கொடுக்க முடியுமா?


  10. இலவசக்கொத்தனார் said...

    நான் இந்தியாவில் இருந்த வரை தவறாமல் இரத்தம் கொடுத்து வந்தேன். ஆனால் அமெரிக்க அனுபவம் கொஞ்சம் கசப்பாகிவிட்டது. முதன் முறை சென்ற போது ஒரு நேர்காணலே நடந்தது. அதில் கடைசியாக, நான் இந்தியா சென்று வருவதால், என் ரத்தத்தில் ஏதேனும் இன்பெக்ஷன் இருக்கலாம் என்பதால் எனது ரத்தத்தை வேண்டாமென சொல்லிவிட்டார்கள். இந்தியா சென்று ஒரு வருடத்திற்கு மேலாகி இருக்க வேண்டுமாம். :(

    அதற்காக நான் இந்தியா செல்லாமல் இருக்க முடியுமா? ஒரு பக்கம் தருவார் இல்லை என்று சொல்கிறார்கள், மறு பக்கம் இப்படி எல்லாம். என்னவோ போங்க.


  11. Costal Demon said...

    உபயோகமான தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு இராம்ஸ்...


  12. Radha N said...

    இலவசக்கொத்தனாரே, ஆனாலும் அமெரிக்கனுங்கலுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான்.


  13. rv said...

    ஜிரா,
    //தானங்குறது தானா மனவுவந்து கொடுக்குறது...இதுல கட்டாயப் படுத்தக் கூடாத//
    இந்த விஷயத்தில் சிக்கல் தான். இறந்தவர்களுக்கு இறந்த பின்னும் முழூஉரிமை இருக்கிறதா என்பது மாதிரி. இறந்த ஒருவரின் நம்பிக்கைகளை காக்கப்போகிறோமா, இல்லை வாழ்ந்து கொண்டிருக்குமொருவருக்கு உதவப் போகிறோமா? என்னைப் பொருத்தவரை இரண்டாவதே சரி. ஆனால், மனித உறுப்புகள் assembly line இல் செய்ய முடியாத ஒன்று. அதனால் தேவைகள் இறந்தவர்களிடமிருந்துதான் இப்போதைக்கு பூர்த்தி செய்தாக வேண்டும். க்ளோனிங்கில் உள்ள சிக்கல்கள் இதைவிட பெரிய இடியாப்பச் சிக்கல். organ farming அளவுக்கெல்லாம் நாம் முன்னேறும் வரை தானத்தைத் தான் நம்பியாக வேண்டும்.

    //கிட்டப்பார்வைக் கோளாறு உள்ளவங்க தானம் செய்ய முடியுமான்னு தெரியாது.//
    முதல்ல ஒரு விஷயம். கண் தானம் னு சொன்னாலும் உண்மையில் தானம் செய்யப்படுபவது கார்னியா எனப்படும் திரை தான். இதுக்கு keratoplasty nu பேர். முழுக்கண்கள் ஆராய்ச்சிகளுக்கு வேண்டுமானால் தானமாக அளிக்கலாம்.

    இரண்டாவது என்னவிதமான பார்வைக்கோளாறுகள் இருந்தாலும் தானம் செய்யலாம். அப்படி வழங்கப்பட்ட கண்கள் பொருத்தப்படும் நோயாளிக்கு ஒத்துவராதென்று மருத்துவர்கள் கருதினால், அந்தத் திசுக்கள் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும். அதுவும் தவிர sclera என்றழைக்கப்படும் வெள்ளைப் பகுதிகளும் சில சமயங்களில் தானமாக வழங்கலாம். இதனால், கண் தானம் வீணாய் போனதே என்று எண்ணத்தேவையில்லை.

    இந்தியாவில் வருடந்தோறும் வெறும் நாலு முதல் ஆறாயிரம் கண்தானங்கள் நடக்கின்றன (அமெரிக்காவில் நாற்பதாயிரத்து சொச்சம்!). காத்திருக்கும் நோயாளிகளோ ஆறுலட்சத்துக்கும் மேல்.


  14. rv said...

    //மக்கள் தங்கள் உறுப்பைக் கொடுப்பதை இழப்பாத்தான் நெனப்பாங்கன்னு நெனைக்கிறேன். கண்தானம்னே வெச்சுக்குவோமே....குருட்டுப் பேயா அலையனுமோன்னு வருத்தப் பட்டாலும் படுவாங்க.//
    இது நமக்கு நகைப்புக்குரியதொன்றாக இருந்தாலும், மறுஜென்மத்தை ரொம்பவும் நம்பும் நம் மதம் மிக முக்கிய தடையாக இருக்கிறதென்பது என் எண்ணம்.

    இந்தியாவில் எப்படி இந்த விஷயத்தில் உதவலாம் என்று கேட்டு சில நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருக்கிறேன். விவரம் அவர்களிடமிருந்து வந்த பின்னர்.


  15. rv said...

    கொத்தனார்,
    உயிலில் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக உறவினர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இது வெளிநாடுகளில் உள்ளது. இந்தியா பற்றிக் கேட்டிருக்கிறேன். விரைவில் சொல்கிறேன்.

    //இரத்தமோ, விந்தணுக்களோ, கருமுட்டைகளோ கொடுப்பது போன்று வேறு ஏதேனும் கொடுக்க முடியுமா?//
    கொடுக்கலாமே.. சிறுநீரகம் (இதை ரெகமெண்ட் செய்வதில்லை. ஆனால் உறவினர்கள் மத்தியில் உண்டு), எலும்புகள் (சில சமயங்களில்) போன்றவற்றை செய்ய இயலும்.

    உங்கள் அமெரிக்க அனுபவம் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. தேன் துளியைக் கேட்டால் தான் தெரியும்.


  16. rv said...

    இராம்ஸ்,
    நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்