என் overbooking அனுபவம்!

உங்களில் பெரும்பாலானாவர்கள் ஒரு தடவையாவது இந்த ஓவர்புக்கிங்கினால் அவதிப்பட்டிருப்பீர்கள். விமான பயணச்சீட்டு வைத்திருந்தாலும் விமானத்தில் பறக்க இடமில்லை என்று சொல்லி துரத்திவிடுவார்கள். கூடவே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும், சாப்பாடு கூப்பன்கள், தொலைபேசி அட்டைகள் மற்றும் இன்னபிற.

பெரும்பாலும் அதிக டிமாண்ட் உள்ள ரூட்களில் எகானமி பிரிவில் தான் நடக்கும். சரி, ஓவர்புக்கிங் எப்படி சாத்தியம்? பயணச்சீட்டு இருந்தால் விமானத்தில் இடமில்லை என்று எப்படி உரிமை மறுக்கலாம் என்று கேட்கலாம். ஆனால், IATA விதிகளின் படி இது சாத்தியம். சராசரியாக ஒரு ப்ளைட்டில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாகவே இருக்கும். இவற்றிற்கு "no shows" என்று பெயர். இதனை சரி செய்ய, எத்தனை பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே predict செய்து அதற்கு தகுந்தாற்போல் அதிக அளவு டிக்கட்டுகள் விற்கப்படும். இவற்றின் எண்ணிக்கை, மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும். இந்த ஓவர்புக்கிங்குகள் தினந்தினம் நடந்து வருவதுதான் என்றாலும், சில நேரங்களின் "no shows" எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தால் இருக்கைகளைவிட அதிக பயணிகள் என்றாகிவிடும். ஸ்டாண்டிங், புட்போர்ட் மற்றும் கிரில் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்றவை சாத்தியமில்லையதனால் பயணிகளை குழுக்களாக பிரிப்பார்கள். முதலில் டிரான்ஸிட் மற்றும் connection flights உள்ளோர். இவர்களுக்கு முன்னுரிமை. இவையில்லாமல் ப்ளைட்டின் destination-னே final destination ஆக இருக்கும் பயணியர்க்கு first come, first served அடிப்படையில் இடம் கிடைக்கும். பிஸினஸ் பிரிவில் இடமிருந்தால் இலவசமாக மாற்றிக்கொடுத்துவிடுவர். உங்கள் பயணத்தேதி அவ்வளவு முக்கியமாக இல்லாதவர்கள் தங்கள் ப்ளைட்டில் ஓவர்புக்கிங் என்று தெரிந்தால் மிக லேட்டாக செக்-இன் செய்யுங்கள். இந்த டிரிக் சிலசமயம் வேலைசெய்து, பயனாய் இலவசமாக பிஸினஸில் பறக்கலாம். அப்படி வேலை செய்யவில்லையென்றாலும், என்னாகிவிட்டது! நட்சத்திர தங்கும் வசதி கண்டிப்பாய் உண்டு. அது எந்த டகால்டி ஏர்லைனாக இருந்தாலும் ஓவர்புக்கிங்கால் விமானத்தில் இடம் மறுக்கப்பட்டவர்களுக்கு இந்த வசதிகளை செய்துதர வேண்டும். மறுக்க முடியாது.

சரி இனி என் கதை. இந்த மாதிரி ஓவர்புக்கிங்கில் டில்லியில் மாட்டிக்கொண்டேன். ட்ரான்ஸிட் பயணிகள் பலர் இருந்ததால், கண்டிப்பாய் இடம் கிடையாது என்று தெரிந்துவிட்டது. இரவு மணி இரண்டு. 'உங்களுக்கு தில்லியில் தங்க இடம் இருக்கிறதா? இல்லை ஓட்டல் வேண்டுமா?" என்று கேட்பதற்கே காத்திருந்தமாதிரி "ஓட்டல் தான்". "சாகெத்தில் உள்ள மேரியட்டில் இடமிருக்கிறது, பரவாயில்லையா?". "ஏன், மவுர்யாவில் இல்லையா?!" என்று என்னவோ மேரியட் டப்பா ஓட்டல் மாதிரி திருப்பிக்கேட்டேன். "சாரி சர், இப்போதைக்கு மிஞ்சியிருப்பது மேரியட்டும் ஏர்போர்ட் செண்டாரும் தான்". "சரி சரி, என்னவோ, செண்டாருக்கு மேரியட்டே தேவல!" (திரும்பவும்) என்று அலம்பல் செய்த என்னிடம் ஓட்டல் கூப்பன் கொடுத்தவாறே இலவச பஸ்ஸிற்கும் இடம்காட்டினாள் பணிப்பெண். விமான நிலையத்திலிருந்து சாகெத் கொஞ்சம் தள்ளி இருப்பதால் முக்கால்மணி நேரப் பயணம்.

மணி மூன்றாகிவிட்டது, இருப்பினும் சுறுசுறுப்புடன் அதிர்ஷ்டவசமாய் தனி ரூம் கொடுத்துவிட்டார்கள். இனியென்ன, வீட்டிற்கு சொல்லணுமில்ல? தொலைபேசி கார்டு வாங்க மறந்துட்டோமே. நட்சத்திர ஓட்டல்னா STDக்கு தீட்டிவிடுவார்களே என்று கவலையிருந்தாலும், இந்த நடுநிசியில் எங்கு போய் கால் செய்வது. தூக்க கலக்கத்தில் இருந்த அப்பாவிடம் இது கனவில்லை, நான் எங்கிருக்கிறேன், எதனால் பறக்கவில்லை, ஓட்டல் நம்பர் என்றெல்லாம் விளக்கவே பத்துநிமிடமாகிவிட்டது.

அடுத்த நாள் காலை 930க்கு ரிசப்ஷனிலிருந்து போன். "Good Morning Sir, Sorry to have woken you up! காலை உணவு buffet முடிய இன்னும் அரைமணிதான் இருக்கிறது. சொல்வதற்குத்தான் கூப்பிட்டோம்". அடாடாடா. இதுதாண்டா சர்வீஸ் என்று நன்றி சொல்லிவிட்டு காலைஉணவு புப்பேவிற்கு போனேன். பிரமாதமான ஸ்ப்ரெட். காண்டினண்டல், சவுத் இந்தியன், ரோட்டி, சப்பாத்தி என்று பிரமாதம். buffet இல் ஒரு சவுகரியம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று மற்றவர்க்கு தெரியாது. a la carte வாக இருந்து சர்வருக்கு டிப்ஸ் வைக்கலேன்னா, "ஒசின்னு சொன்னோன்ன நல்லா துன்றான் பாரு கடோத்கஜனாட்டம்.. ஆனா பக்கி! ஒரு முப்பது ரூவ வக்கத் துப்பில்ல"னு வைதல்கள் வர சாத்தியக்கூறுகள் அதிகம். புப்பேவில் இந்த கவலையெல்லாம் இல்லாமல், எல்லாத்தையும் வேணுங்கற அளவு எடுத்துப் போட்டு பயமில்லாம சாப்பிடலாம். ஆனா கேக் போன்றவற்றை முன்னரே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு விட வேண்டும். கடைசியாப் போனீங்கன்னா கீரிம், செர்ரி எல்லாம் இல்லாம வெறும் பிரெட் மட்டுந்தான் மிஞ்சியிருக்கும். மத்தியான சாப்பாடு எப்போன்னு முக்கியமா கேட்டுகிட்டு கிளம்பினேன். டில்லியில் செய்யறதுக்கு வேலை ஒன்றுமில்லையதனால், ரூமில் டிவி பார்த்தே பொழுதுபோக்கியாச்சு.

மத்தியானம் மணி சரியா ரெண்டு அடிச்சோன்ன மறுபடியும் ரெஸ்டாரண்ட். எனக்கு முன்னரே சக பயணிகள் சிலர் இருந்தனர். அதனால் கூச்சமெல்லாம் படாமல் களத்தில் நேராக இறங்கினேன். முதல்ல ரெண்டு குலாப் ஜாமூன், அப்புறம் பெங்காலி ஸ்வீட் சில என்று தனியாய் லவட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டேன். அடுத்து சூப் மல்லிகாடானி (மல்லி ரசம்), தக்காளி, லெண்டில் (பருப்பு) என்று வகைக்கொன்று கா கா கிண்ணம். புலாவில் ஆரம்பிக்கலாமா, இல்லை ரோட்டியா என்று மினி பட்டி மன்றம் நடத்தி முடித்து ரோட்டி பக்கம் போனேன். அங்கே கோபி பராத்தா, லசூன் நான் அப்புறம் புல்கா என்று வகைக்கொன்று. தொட்டுக்க வேணுமே. அதில எனக்கு ரொம்ப பிடிச்ச பைங்கன் பர்த்தா (கத்திரிக்கா) மற்றும் பன்னீர் கோப்தா, அப்புறம் அருகில் நின்ன செப் மனசு வருத்தப்படக்கூடாதே மிச்சமிருந்த ஆலு மட்டரும், கோபி மஞ்சூரியனும் என்று அள்ளியாச்சு. இது முதல் ரவுண்ட். அவசர அவசரமா சாப்பிட்டாத் தான் நிறைய சாப்பிட முடியாது. அதனால பொறுமையா ஒரு முக்கா மணி நேரம் நின்னு ஒவ்வொரு கடி (bite) ஆ அனுபவிச்சு முடிச்சேன். அடுத்த ரவுண்டுக்கு வெஜ் புலாவ், புதுசா ஐட்டங்களில் அப்போதுதான் சேர்ந்திருந்த கார்லிக் ப்ரெட். அப்புறம் தொட்டுக்கற செக்சன். பன்னீர் கோப்தாவும், கோபி மஞ்சூரியன் எடுத்துட்டு பார்த்தா அதுக்குள்ள கத்திரிக்காயக் காணோம். வெறும் கர்ரி மட்டும் தான் பாக்கியிருந்தது. பேரரிடம் கேட்கவே நானே கொன்டுவந்துகொடுக்கறேன் சொல்லி சொன்னா மாதிரியே கொடுத்தார். இதுக்கு ஒரு அரை மணி. அப்புறம் கொறிக்க வெண்டக்கா பிரை. இது மட்டுமே ரெண்டு பிளேட். ஏன்னா, நான் முன்னாடி தட்ட வெச்சுட்டு ரீபில் பண்ணப்போனப்ப யாரோ அபேஸ் பண்ணிட்டாங்க. சாப்பிட்ட தட்டுகளையெல்லாம் எடுத்துப் போட்டவர் இதையும் சேர்த்து அள்ளியிருக்க வேண்டும். விடுவேனா? எடு இன்னொரு பிளேட். எப்படி இத்தனையும் சாப்பிட்டேன்னு எனக்கே தெரியலை. சாப்பிட்டு முடிச்சு நிஜமாவே உண்ட களைப்பில் படுத்தவன் தான். ரெண்டு மணி நேரம் ஓடியாச்சு. ஆறு மணிக்கு போன் பண்ணி, நீச்சல் குளம் வேலை செய்கிறது என்று தெரிந்தவுடனே ஓடி ஊறிக் கொண்டிருந்தபடியே ஒரு பன்னீர் டிக்கா. பொதுவா இப்பல்லாம் நீச்சல் குளம் போனா நீச்சலெல்லாம் அடிக்கிறதில்ல. நல்ல குட்டையில் ஊறற எரும மாதிரி ஊறுவதுதான்.

இராத்திரி பத்து மணிக்கு பஸ் மீண்டும் விமான நிலையத்திற்கு புறப்படும் என்று முன்னரே தகவல் சொல்லியிருந்தனர். அதனால் 8 மணிக்கெல்லாம் டின்னர் புப்பே. இந்த முறை முதல் ரவுண்ட் ஒரு வித்தியாசத்திற்காக ஸ்பாகெட்டி நியோபாலிட்டானே, ஒரு துண்டு பீட்ஸா. கூடவே நவரத்தன் குருமா, டால் மக்கனி அப்புறம் stuffed குடைமிளகாய்.

என்னிடம் இருந்தது ஒரேயொரு மீடியம் சைஸ் பெட்டி மட்டும் தான். கூடவே குட்டி ப்ரீப் கேஸ். சென்னையிலிருந்து ப்ளைட்ல யார் உதவியுமில்லாம தூக்கிகிட்டு, டில்லி விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு வந்தது நான் தான் என்றாலும், பெல் டெஸ்க் எதுக்கு இருக்கு. 950க்கு ரிசப்ஷனுக்கு போன் செய்து பெல்பாய் வரச்சொல்லுங்கள் என்று கேட்டேன். இதோ அனுப்பறேன் என்று சொன்னவர்கள் மறந்தே போனார்கள். காரணம் நாற்பதுக்கும் மேற்பட்ட இதே விமானப் பயணிகள் செக்-அவுட் செய்து கொண்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ரிசப்ஷனுக்கு முன்னிருந்த உள்ள லவுஞ்சில் அவர்கள் கண்ணில் படும்படியே போய் அமர்ந்தேன். ஆனால், வேலை பிஸியில் கவனிக்கவில்லை. பத்தேகாலுக்கு பஸ் புறப்பட்டபிந்தான் என்னை கவனித்தார் ரிசப்ஷனில் வேலை செய்பவர். சாரியெல்லாம் பவ்யமாக சொன்னவரிடம் வீம்பாக "அரைமணிக்கு முன்னர் பெல் பாய் அனுப்பச்சொன்னேன். இன்னும் அனுப்புகிறீர்கள். இப்போ எப்படி நான் ஏர்போர்ட் போறது? என்ன மாதிரி ஓட்டல் நடத்துகிறீர்கள்" என்று வீண் சண்டை போட்டேன். "ஏண்டா வரும்போது எப்படி வந்தே? பொதி கழுதை மாதிரி நீயே தானே தூக்கிண்டு வந்தே? இப்ப பெரிய இஷ்டாரு கணக்கா பெல் பாய் எங்கேன்னு கேட்கற"ன்னு நான் அவரிடத்தில் இருந்தாலும் கேட்டிருப்பேன். ஆனால் மேரியட்டாச்சே. மிகவும் மன்னிப்பு கேட்டு ஒரு ஏஸி மாருதி எஸ்டீம் ஏற்பாடு செய்து தந்தார். டெலிபோன் பில்லும் வாங்கவில்லை. நீச்சல் குளத்தில் சாப்பிட்ட பன்னீர் டிக்காவுக்கு டிஸ்கவுண்ட். டாக்ஸிக்கும் பணம் கேட்கவில்லை. பஸ்ஸிற்கு முன்னரே ஏர்போர்ட் வந்து சேர்ந்து, எகானமி பிரிவில் முதல் ரோவில் இடம் வாங்கி பறந்துவிட்டேன்.

இதனால் தெரியும் உண்மையென்றால்... ஒவர்புக்கிங் சான்ஸ் கிடைத்தால் கோட்டை விட்டுவிடாதீர்கள்.

14 Comments:

 1. கூத்தாடி said...

  ஓசியில் கிடைச்சா யாரும் விடறது இல்லை..எஞ்சாய் பண்ணியிருக்கீங்க ..

  ஆமா ரஷ்யாவுல என்னா பண்ணுறீங்க


 2. துளசி கோபால் said...

  ஆஹா,
  நமக்கு இப்படி ச்சான்ஸ் இன்னும் அடிக்கலையேப்பா(-:


 3. அன்பு said...

  இதான் எல்லாம் நன்மைக்கே அல்லது கெடச்சத அனுபவிப்பது என்பார்களோ, சமாய்சிருக்கீங்க.


 4. அன்பு said...

  ஹாங்... சொல்ல மறந்துட்டேனெ...
  (சாப்பாடு மேட்டர்ல) எனக்குப் பிடிச்சவ்ங்க ரொம்ப பேரு இங்க இருக்கீங்கப்பா...


 5. பெத்தராயுடு said...

  ஒருமுறை, நானும் என்னுடன், பணிபுரியும் 8 பேரும் பாரிஸிலிருந்து பெங்களூர் போறோம். சார்ல் டி கால் போகும்போதே மழை கொட்டுது. ஏர் இந்தியா 2 மணி நேர தாமதத்துக்குப்பின் விமானம் ஏறப்போனா, ஒரு ஊழியர் மெதுவா கூப்பிட்டார். "Sir, would you mind travelling in business class? No problem." ஆசையா போய் உக்காந்தேன். பக்கத்து சீட்ல ஒரு யுவதி. கூபா (க்யூபா..., பின் நவீனத்துவ பாதிப்புங்கோவ்!)விலேர்ந்து டெல்லி போகுது. அவுங்க எம்பசில வேல செய்யுதாம். கடல போட்டிட்டு இருக்கும்போதே ஏதோ ஈரமா இருந்துச்சு. ஜொள்ளு இல்லீங்கோ. தலைக்கு மேல ஒழுகுது (சத்தியமா). பக்கத்து சீட் பைங்கிளி 'எங்க ஊரு ப்ளைட்தான் இப்படின்னு நெனச்சிட்டு இருந்தேன். உங்களுதுமா'னுது. ஹி.. ஹி..ன்னு வழிஞ்சேன். Airhostessஅ கூப்பிட்டு காட்டினா 'இதப்போயி பெருசா சொல்ல வந்துட்டான்'ங்கற மாதிரி பாத்துட்டு போயிட்டாங்க. ப்ளைட் கெளம்பி கொஞ்ச நேரம் கழிச்சுப் பின்னால போனேன். நம்ம நண்பர்களுக்கு ஒரே புகைச்சல். ஒழுகுதுன்னு சொன்னதுக்கப்புறம், எல்லாத்துக்கும் ஒரு (அல்ப) சந்தோஷம். அப்புறம், ஒரு சென்னை ஆன்ட்டி வந்து பறிமாறிபடியே சாப்ட்வேர் இஞ்சினீயரான்னு கேட்டுட்டு கதை பேசிட்டு போனாங்க.

  - பெத்தராயுடு.


 6. rv said...

  கூத்தாடி,
  //ஓசியில் கிடைச்சா யாரும் விடறது இல்லை..எஞ்சாய் பண்ணியிருக்கீங்க ..
  //

  சான்ஸ் கிடச்சா விடுவாங்களா?

  //ஆமா ரஷ்யாவுல என்னா பண்ணுறீங்க //
  எலும்பு முறிவு மருத்துவம் படிக்கிறேன்!


 7. rv said...

  என்ன அக்கா,
  //நமக்கு இப்படி ச்சான்ஸ் இன்னும் அடிக்கலையேப்பா//

  இத்தன ஊருக்கு இத்தன வருஷமா பறக்கிறீங்க? இன்னுமா ஒவர்புக்கிங் தேவதை கருணை காட்டல??

  அன்பு,
  //சாப்பாடு மேட்டர்ல) எனக்குப் பிடிச்சவ்ங்க ரொம்ப பேரு இங்க இருக்கீங்கப்பா... //
  நன்றி. சாப்பாடு மேட்டர் போடறதுக்குத்தான் நம்மக்கா இருக்காங்களே.. தாணுவுக்கு மட்டும் தெரியாம ரகசியமா போடணும்.


 8. rv said...

  பெத்த ராயுடு,
  பிஸினஸிலுமா ஒழுகுது. நல்லா ஏர்லைன்ஸ் நடத்தறாங்கப்பா..


  // 'எங்க ஊரு ப்ளைட்தான் இப்படின்னு நெனச்சிட்டு இருந்தேன். உங்களுதுமா'னுது.//

  அப்பாடா, அவங்க ஊரிலேயும் இதே கததானா? அப்ப ரொம்ப அலட்டிக்க தேவையில்ல.

  //சென்னை ஆன்ட்டி வந்து பறிமாறிபடியே சாப்ட்வேர் இஞ்சினீயரான்னு கேட்டுட்டு கதை பேசிட்டு போனாங்க.
  //

  :)


 9. தாணு said...

  ராமனாதன் இந்த ரேஞ்சில் சாப்பிட்டா திரும்ப ப்ளைட் ஏறும்போது ரெண்டு டிக்கெட் கேட்டிருப்பானே. பந்திக்கு முந்து பஸ்ஸுக்கு பிந்துங்கிறது உங்க மொழியா? உண்மையாகவே உருப்படியான டிப்ஸ்தான்( நீங்க பேரருக்கு கொடுக்காம விட்டதைச் சொல்லலே, உங்க பதிவு பத்தி சொன்னேன்!)


 10. தாணு said...

  நீங்க எல்லாம் கண்ணு போட்டு நான் டயட்டில் இருக்கேன்.


 11. G.Ragavan said...

  அடடே ராமநாதன்...இப்படி வேறையா......பிளைட்டில் ஓவர் புக்கிங் வந்ததேயில்லை. காரணம் ஆஃபீசில் புக் பண்ணித் தருவார்கள். இல்லையென்றால் என்னுடைய சொந்தப் பயணத்தை நான் முறையாக பிளான் பண்ணியிருப்பேன். அடிக்கடி வெளிநாடு போகிறவர்களுக்கு இப்படி ஆகலாம்.

  ஆனால் ஆஃபீஸ் ஏற்பாடு செய்து தரும் நட்சத்திர ஓட்டலில் நீங்கள் செய்த அத்தனை அலும்புகளையும் நானும் செய்திருக்கிறேன். நீச்சல் குளத்தைத் தவிர. ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது.


 12. rv said...
  This comment has been removed by a blog administrator.

 13. rv said...

  //நீங்க எல்லாம் கண்ணு போட்டு நான் டயட்டில் இருக்கேன்.

  //

  என்ன தாணு, டயட்ன்னு எல்லோருக்கும் கிலி காட்டிகிட்டிருந்தீங்க? எப்டி இருந்த நீங்க ஏன் இப்டி ஆயிட்டீங்க?


 14. rv said...

  ராகவன்,
  அதிக டிமாண்ட் உள்ள ரூட்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. உதாரணம், ஆகஸ்ட் கடசி-செப்டெம்பர் ஆரம்பம் சென்னை-துபாய்.

  இது ஏர்லைன்ஸிண் பிரச்சனை. நாம் பிளானெல்லாம் போட்டாலும், அதை மாற்றுவதற்கு என்றேதான் ஒருத்தன் இருக்கானே! :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்