229. எலே எடுபட்ட பயலே! வேலைய ஒழுங்காப் பாருவே!

நிகழ்வு 1:
எங்க தெருவுல ஒரு பால்காரர் பலகாலமா பால் ஊத்திகிட்டிருந்தாரு. கொஞ்ச நாளா என்ன கெரகமோ அவர் குடுக்கற பால்ல காபி போட்டா சுடுதண்ணியாட்டமா மாறிடுச்சு. தயிர் கெட்டியாவே ஆகலை. என்ன காரணமின்னு பார்த்தா பால்காரரு காசுக்கு ஆசைபட்டு தண்ணி கலக்க ஆரமிச்சுட்டாருனு தெரிஞ்சுது. தண்ணி கலக்கறது எல்லாரும் வழக்கமா செய்யறதுதானு சொன்னாலும், இவருக்கு சரியா தண்ணி கலக்க தெரியல. அதிகமா விட்டு பாலே தண்ணியாயிடுச்சு. எங்க தெருக்காரங்கள்லாம் சேர்ந்து முடிவு பண்ணி பால்காரர மாத்திட்டாங்க.

நிகழ்வு 2:
எங்களோட தெருவுல ஒரு பொட்டிக்கடை இருந்துச்சு. முனுசாமி அண்ணாச்சி வச்சுருந்தாரு. முனுசாமி அண்ணாச்சிக்கு மூணு பசங்க. அவங்க படிக்கணும்கறதுக்காக ராவு பகலா அவரும் கட வச்சிருந்தாரு. வியாபாரம் வளந்துச்சு. காய்கறி, பலசரக்குனு கொஞ்சம் பெரிய கடையா வச்சாரு. ஆரமிச்ச ஜரூர்ல நாலு வேலையத்த பசங்களுக்கு பொட்டலம் மடிக்க வேலையும் கொடுத்தாரு. ஆனா பாருங்க அவரோட போறாத காலம், பக்கத்துல் ஏசியோட ஸ்பென்சர் ப்ரெஷ் திறந்துட்டாங்க. இப்ப அண்ணாச்சி வியாபாரம் படுத்துருச்சு. காய்கறி மட்டுமே இன்னும் அவர்கிட்ட வாங்கினாங்க எங்க தெருக்காரவுக. வர்ற காசு தன் குடும்பத்துக்கே போறாத போது இந்த நாலு பசங்க வேற. என்ன செய்வாரு அண்ணாச்சி.

நிகழ்வு 3:
இப்படித்தான் லண்டன்ல பத்துவருஷம் படிச்சுட்டு ஒரு டாக்டரு எங்க தெருவுல பந்தாவா லோக்கல் அமைச்சர கூப்பிட்டு க்ளினிக் தொறந்தாரு. அவரு கிளினிக் தொறந்தாரா வைகுண்ட வாசல தொறந்தாரானு சந்தேகம் வர அளவுக்கு அவர்கிட்ட வைத்தியம் பாக்க போன கேஸுகளில் பத்துக்கு நாலு அவுட். தொறந்து வச்ச அமைச்சரே ‘டாக்டரே வெளியேறு'னு தெருவுல போராட்டம் நடத்தி அவருக்கு செருப்பு மாலை போட்டு படையல் நடத்திட்டாரு. கேபிள் டிவி, சன் டிவில வேற இவரு பேரு வந்துருச்சுனா இவரு எவ்வளவு பாப்புலர்னு பாத்துக்கோங்க.

நிகழ்வு 4:
இன்னொருத்தர் கதையும் சோகம். அவனவன் கம்பூட்டர் பொட்டி தட்ட படிக்கற காலத்துல இவரு அதிசயமா கட்டிடக்கலை படிச்சுட்டு வந்தாரு. ஒரு ஏக்கரா குடும்ப சொத்து இருந்துச்சா.. அடுத்தவன நம்பி என்ன பொழப்பு, நாமளே ஷாப்பிங்க் செண்டர் கட்டி வாடகைக்கு விடுவோம்னு பேங்க்ல எல்லாத்தியும் அடமானம் வச்சு, அதிகமில்ல, ஒரு நாலுகோடி வாங்கி ‘நம்மூருல நான் கட்டுறேன் பாருடா உலக வர்த்தக செண்டரை'னு அடிக்கல் நட்டாரு. அவர் போட்ட டிசைன்ல ஏதோ டேமேஜாம். கட்டிடம் பாதிலேயே இடிஞ்சு விழுந்திருச்சு.

-------------------------------------------------------
இதுல என்ன வந்துச்சு காலம் காலமா நம்ம நாட்டுல நடக்கறதுதானேனு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. ஆனா பாருங்க... 'திறமையின்மை' காரணமா மட்டும் ஒருத்தர வேலைலேர்ந்து தூக்கிட கூடாதாம். ஏன்னா அவங்களுக்கு குடும்பம் குட்டி இருக்காம். பேங்க்ல லோன் வாங்கிருப்பாங்களாம். வீடு கட்டிருப்பாங்களாம். அதையெல்லாம் கருத்துல எடுத்துக்கணுமாம். இதே மாதிரி பரந்துபட்ட நெஞ்சத்தோட நம்ம நாட்டுல நல்லவங்க இத்தன பேரு இருக்கறதுனாலதான் மழை நல்லா பெய்யுது.

அப்படியே இந்த பால்காரர், முனுசாமி அண்ணாச்சி, டாக்டரு, கட்டிடக்கலை வல்லுநரு எல்லாருக்கும் கொஞ்சம் பொதுமக்களாகிய நீங்க எதுனாச்சும் பெரிய மனசு பண்ணி அவங்களோட ‘திறமையின்மை', ‘அதிருஷ்டமின்மை' அல்லது ‘பணத்தாசை' மட்டுமே காரணமா கொண்டு இவங்கள புறக்கணிக்காம அவங்களும் வாங்கின லோன திருப்பி அடைச்சு, காரு வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் கட்டி, குழந்தை பெத்து, அது காலேஜ் முடிச்சு, பேத்திக்கு சீரு கொடுக்கற வரைக்கும் உங்களோட பேராதரவ கொடுக்கணும்.

இது வேண்டுகோள் இல்ல கட்டளை. அதுமட்டுமல்ல இது உங்க கடமை.

திறமையா வேலை செய்யலேனாலும் வேலைய விட்டுத் தூக்கக்கூடாது. கம்பெனியே திவாலாப்போனாலும் கம்பெனியோட CEO அவரோட குடும்பச் சொத்த வித்தாவது வேலைசெய்யறவங்களுக்கு சம்பளம் தரணும்.

இப்ப நீங்க mac sys-adminனு வச்சுக்கோங்க. உங்க கம்பெனி இன்னிலேந்து exclusiveஆ விண்டோஸுக்கு மாறப்போறதா பாலிஸி முடிவு பண்ணிருச்சு. ஆனாலும் உங்கள வேலைய விட்டு போயிடுனு சொல்லமுடியாது. 'செல்லம்.. நீ போயி இசைத்தமிழ்.நெட்ல டிவி பாரு, வலையுலகத்துல தமிழ வளரு... உன் சேவை காலத்துக்கும் இந்த கம்பெனிக்கு தேவை'னு பாசமுள்ள அப்பாவாட்டம் பொத்தி பொத்தி வளர்க்கணும். ஏன்னா பணம் இன்னிக்கு போகும். நாளைக்கு வரும். மனுசங்க வருவாங்களா?

அப்புறம் இதே லாஜிக்படி, ஐடி உட்பட எந்த கம்பெனியிலும் ஒருவாட்டி சேர்ந்துட்டீங்கன்னா, அப்புறம் இன்னொரு கம்பெனி வந்து ஜாஸ்தி பணம் தரேனு சொன்னா நீங்க மாறிடக்கூடாது. ஏன்னா உங்களுக்கு சோறு போட்டு அந்த சோத்துல உப்பையும் போட்ட தாய்க்கம்பெனிக்கு துரோகியாக முடியுமா?

------------------------------------------------------
'எலே முத்து! களத்துமேட்டில வேலை பாக்காம கவர்ன்மெண்ட் குடுத்த டிவில தேன்மொழியாள் பாத்துகினு மத்தியானத்து நேரத்துல கனவா? இந்த மாதிரி பாசக்கார பயலுகளா முதலாளிங்க காண்ட்ராக்ட் போட்ட வேலையில் இருக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும்தான் சலுக காட்டணுமாம். நீ இப்படி வேலை செய்யாம சொகமா கெடக்கேனு பண்ணையாருக்கு தெரிஞ்சுது... வேலைய விட்டு துரத்துறதோட இல்லாம பன மரத்துல கட்டி வெளாசிருவாரு' னு லட்சுமி வந்து சத்தம் போடவும் பழய சோத்தையும் பச்ச மொளகாயும் கொட்டிகிட்டு திரும்பவும் களத்துமேட்டுக்கு போரடிக்க போனேன்!

டிஸ்கி: No Offence intended or otherwise.

21 Comments:

  1. உண்மைத்தமிழன் said...

    இராமநாதன் ஸார்,

    உங்களுடைய குத்தல்கள் மிகச் சரிதான்..

    திறமை இல்லையேல் வேலையும் இல்லைதான்.. எம்.பி.பி.எஸ்ஸே படித்தாலும் அந்த பேட்ச்சிலேயே கடைசியாக வந்தவருக்கும், முதலிடத்தில் தங்கப்பதக்கம் வாங்கியவருக்கும் இடையிலேயே வித்தியாசம் உண்டே.

    நோயாளிகள் தங்கப்பதக்கத்திடம் செல்வார்களா..? கடைசி ஆளிடம் செல்வார்களா..?

    இதுவெல்லாம் காலம், காலமாக உணர்வுப்பூர்வமாகவே வாழ்ந்து பழகிவிட்டவர்கள் சட்டென்று தங்களது மனத்தை மாற்ற இயலாமல் அல்லது தெரியாமல் அங்கலாய்ப்பதுதான்.. அதற்காக அவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களால் தங்கள் மனதில் முதலில் எழுந்த கருத்தை மறைக்க முடியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

    அரசு அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள்.. கடிதம் அனுப்புகின்ற செக்ஷனில் வேலை பார்ப்பவர்களில் பாதி பேருக்கு இன்னமும் மிகச் சரியாகத் தமிழ் எழுதத் தெரியாது.. நமக்கு வருகின்ற கடிதங்களில், முகவரியிலேயே நிறைய பிழைகள் இருக்கும்.

    இது இந்தப் பதவிக்கு இந்தப் படிப்பு படித்திருப்பவர் போதுமானது என்று சொல்லி ஆள் எடுப்பதனால்தான்.. அப்படியே அந்தப் படிப்பு வரை போதுமென்றாலும், அடிப்படை தமிழ் அறிவையே கற்பிக்காத வகையில்தான் நமது கிராமப்புற ஆரம்பப் பள்ளிகள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன.

    தவறு நமது வளர்ப்பின் அடிப்படையிலேயே இருக்கின்றது.. மீண்டு வர காலங்கள் ஆகும் ஸார்..


  2. G.Ragavan said...

    இது கதையா? கதை போலத் தோன்றும் நிகழ்வா? நிகழ்வுகளின் வழியாக நீங்கள் சொல்ல வரும் கருத்தா? கருத்துகளுக்குள்ளே ஒழிந்து கொண்டிருக்கும் ஆதங்கமா? அவைகளையும் சொல்லுங்கள் ஐயா! :)


  3. rv said...

    உண்மைத்தமிழன்,
    //திறமை இல்லையேல் வேலையும் இல்லைதான்.. எம்.பி.பி.எஸ்ஸே படித்தாலும் அந்த பேட்ச்சிலேயே கடைசியாக வந்தவருக்கும், முதலிடத்தில் தங்கப்பதக்கம் வாங்கியவருக்கும் இடையிலேயே வித்தியாசம் உண்டே.//

    இந்தப் பதிவு அதைப்பற்றியதேயில்லை. நீங்கள் qualification பற்றி பேசுகிறீர்கள். நான் efficiency பற்றி பேசுகிறேன்.

    உங்கள் டாக்டர் உதாரணம் தவறு. காரணம், டாக்டர் என்ன மார்க் எடுத்து பாஸ் செய்தார் என்று அவரிடம் வரும் நோயாளிகளுக்கு தெரியாது. அவர் அப்படிப்பினைக்கொண்டு எவ்வாறு மக்களிடம் நற்பெயர் பெறுகிறார் என்பதை வைத்தே ஒருவரை திறமையான அல்லது கைராசியான டாக்டர் என்று சொல்லமுடியும். (இது என் ஆணித்தரமான கருத்து. ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா என்ற என் பழைய பதிவில் இன்னும் விரிவாக சொல்லியிருக்கிறேன்.)

    //. அதற்காக அவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களால் தங்கள் மனதில் முதலில் எழுந்த கருத்தை மறைக்க முடியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.//
    யாருமே முட்டாள்களுமல்ல. அறிவாளிகளுமில்லை. இங்கு அப்படிப்பட்ட பட்டங்கள் கொடுக்கப்படுவதும் தேவையில்லை. குறிப்பாக இந்த வலைப்பூவுலகில் நடக்கும் விவாதங்கள் குறித்து.

    //தவறு நமது வளர்ப்பின் அடிப்படையிலேயே இருக்கின்றது.. மீண்டு வர காலங்கள் ஆகும் ஸார்..//
    வளர்ப்பின் அடிப்படையில் தவறு என்பது மிக கடுமையாக தோன்றுகிறது. நம் சமூகம் ஊடகங்கள் வழியாக கட்டமைத்து வைத்துள்ள ‘celebration of mediocrity' இதற்கு ஒரு முக்கிய காரணி என்று எனக்கு தோன்றுகிறது.

    மீண்டும் சொல்கிறேன். ஒருவனின் படிப்பை பற்றியோ தகுதியைப் பற்றியோ அறிவுத்திறனைப் பற்றியோ இங்கு பேசப்படவில்லை. மாறாக அந்த படிப்பை, தகுதியை, திறனைக் கொண்டு அவனின் உற்பத்தித்திறனை (efficiency) பற்றி மட்டுமே பேசப்படுகிறது.


  4. Anonymous said...

    இவ்வளவு ஏத்த இறக்கமா பேசுறீங்களே, கோயில்ல நாம வேண்டிகிட்டது நடக்கலைன்னா அங்க வெட்டிக்கு மணியாட்டற பசங்கள வேலைய விட்டு தூக்கலாம்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?


  5. rv said...

    ஜிரா,
    //இது கதையா? கதை போலத் தோன்றும் நிகழ்வா? நிகழ்வுகளின் வழியாக நீங்கள் சொல்ல வரும் கருத்தா? கருத்துகளுக்குள்ளே ஒழிந்து கொண்டிருக்கும் ஆதங்கமா?//

    ஒளிந்திருக்கும் ஆதங்கம் ஒரேயடியாக ஒழிந்துவிடாமல் இருக்கவே நீங்க குறிப்பிட்ட அனைத்துமே கலந்த இந்த பதிவு!


  6. rv said...

    வெளங்காதவன்,
    :))))))

    ”என்னத்த சொல்வேனுங்கோ.. வடுமாங்கா ஊறுதுங்கோ! வடுமாங்க ஊறட்டுங்கோ! தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ” கதையா சூப்பரு கேள்வி கேட்டிருக்கிரு. பதில் ரிஸர்வ்ட். :))


  7. பினாத்தல் சுரேஷ் said...

    ராமநாதன்,

    Point well driven! எனக்கும் இந்த மேட்டரில் ஏறத்தாழ இதே கருத்துதான். ட்ரிப்யூனல், ஆம்புட்ஸ்மேன் போன்ற அமைப்புகள் நீதி பரிபாலனத்துக்கு உதவலாமே ஒழிய, கம்பெனி இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதையே தவறு என்று சொல்லமாட்டேன்.


  8. கால்கரி சிவா said...

    //இவ்வளவு ஏத்த இறக்கமா பேசுறீங்களே, கோயில்ல நாம வேண்டிகிட்டது நடக்கலைன்னா அங்க வெட்டிக்கு மணியாட்டற பசங்கள வேலைய விட்டு தூக்கலாம்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?

    //

    தெருவுக்கு நாலு பிள்ளையார் கோவில் இருந்தாலும் பிள்ளையார் பட்டி கோவிலுக்குதான் மவுசு.

    ஊருக்கு ஆயிரம் பெருமாள் கோவில் இருந்தாலும் எழுமலையானுக்கு தான் மவுசு.

    "பெர்பார்மன்ஸ்" சரி இல்லையென்னா கோவிலையே தூக்கறவன் நம்மாளு.

    மணியாட்டறவன், வெங்காயம் உரிக்கிறவன், அடுக்கு மொழி பேசுவறன், நடிக்கிறவன் எவனாயிருந்தாலும் பெர்பார்மன்ஸ் இல்லேன்னா நம்மாளு தூக்கிடுவான் :)


  9. rv said...

    பெனாத்தலார்,
    //ட்ரிப்யூனல், ஆம்புட்ஸ்மேன் போன்ற அமைப்புகள் நீதி பரிபாலனத்துக்கு உதவலாமே ஒழிய, கம்பெனி இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதையே தவறு என்று சொல்லமாட்டேன்.//

    உண்மைதான். ஒரே விதமான தட்டையான பார்வையுடன் கம்பெனிகளையும் முதலாளிகளையும் மக்களின் எதிரிகள் என்று demonize பண்ண வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. அது நியாயமும் இல்லை என்னைப் பொறுத்தவரை.


  10. rv said...

    கால்கரி சிவா,
    //
    "பெர்பார்மன்ஸ்" சரி இல்லையென்னா கோவிலையே தூக்கறவன் நம்மாளு.//

    :))

    //மணியாட்டறவன், வெங்காயம் உரிக்கிறவன், அடுக்கு மொழி பேசுவறன், நடிக்கிறவன் எவனாயிருந்தாலும் பெர்பார்மன்ஸ் இல்லேன்னா நம்மாளு தூக்கிடுவான் :)//

    தெய்வமே! :))))


  11. Unknown said...

    திறமைகளின் யாதார்த்தத்தை இவ்வளவு எளிமையக போட்டு சிதறு தேங்காய்போல் உடைத்து சொன்ன தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்ககள்.IT compani கள் திறமையை மேம்படுத்தாத ஊழியர்களுக்கு "டா டா " சொல்வது உலகமெங்கும் அரங்கேற்றம் தொடங்கிவிட்டது( it is told that yahoo drops 1000 staff)

    -nellaikanna-19-02-2008


  12. மெளலி (மதுரையம்பதி) said...

    பெர்பார்மன்ஸ் மானிடரிங், பெர்பார்மன்ஸ் பேஸ்டு காம்பன்சேஷன் எல்லாம் இன்னும் ஆழ காலூன்ற வேண்டும். நல்லா சொல்லியிருக்கீங்க. :)


  13. rv said...

    நெல்லை கண்ணா,
    //தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்ககள்.//

    வஞ்சப்புகழ்ச்சியா..

    நன்றி...


  14. rv said...

    மதுரையம்பதி,
    பெர்பார்மன்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலேன்னா என்னாகும்னு ஏற்கனவே ஒரு சூப்பர் பவரா இருந்து கழுதையான கதை பார்த்தப்புறமும் திருந்தலேன்னா..

    ஹூம்..

    நன்றி.


  15. Geetha Sambasivam said...

    //அப்படியே இந்த பால்காரர், முனுசாமி அண்ணாச்சி, டாக்டரு, கட்டிடக்கலை வல்லுநரு எல்லாருக்கும் கொஞ்சம் பொதுமக்களாகிய நீங்க எதுனாச்சும் பெரிய மனசு பண்ணி அவங்களோட ‘திறமையின்மை', ‘அதிருஷ்டமின்மை' அல்லது ‘பணத்தாசை' மட்டுமே காரணமா கொண்டு இவங்கள புறக்கணிக்காம அவங்களும் வாங்கின லோன திருப்பி அடைச்சு, காரு வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் கட்டி, குழந்தை பெத்து, அது காலேஜ் முடிச்சு, பேத்திக்கு சீரு கொடுக்கற வரைக்கும் உங்களோட பேராதரவ கொடுக்கணும்.//

    நல்லா இருக்கே! ரொம்பவே நல்லா இருக்கு! எங்க பேர் ஆதரவு எப்போவும் உண்டு. அது சரி, என்ன இந்த முறை லேட்டாத் தகவல் கொடுத்திருக்கீங்க?


  16. சேதுக்கரசி said...

    நச்சு நச்சுன்னு நச்சிட்டீங்க. சூப்பர் :-)))


  17. தி. ரா. ச.(T.R.C.) said...

    ரமானாதன் அண்ணே ஏதோ இந்த மாதிரி நடந்து நம்மளை விட்டுபோன பையன்வுகோ திரும்பி வருவாங்கோன்னு ஒரு நம்பிக்கை வரும் சமயத்தில் இப்படியெல்லாம் பதிவை போட்டு ஏய்யா எங்களை வியர்க்க வைக்கிறீங்க


  18. rv said...

    அக்கா,
    நன்னி.

    //என்ன இந்த முறை லேட்டாத் தகவல் கொடுத்திருக்கீங்க?//
    இந்த மாசம் பதிவு எண்ணிக்கை ஜாஸ்தியாப்போவுது. அப்புறம் என் மெயிலெல்லாம் ஸ்பாம் லிஸ்ட்ல போட்டுட்டாங்கன்னா என்ன செய்யறது.. அதான் :)


  19. rv said...
    This comment has been removed by the author.

  20. rv said...

    சேதுக்கரசி,
    :)))

    நன்னி நன்னி.


  21. rv said...

    தி.இரா.ச,

    //நம்மளை விட்டுபோன பையன்வுகோ திரும்பி வருவாங்கோன்னு ஒரு நம்பிக்கை //

    ஆகமொத்தம் வேலைய விட்டு தொறத்தலேன்னா பசங்கள்லாம் ஊர் திரும்ப மாட்டாங்கனு சொல்றீங்களா...

    அமெரிக்காவுல பையன் வீட்டுல ரெண்டு வாரத்துக்கு மேல இருக்க முடியாம போரடிச்சு ஊரப்பாக்க வந்துடற பெற்றோர்கள் தான் பையனோட பாஸுக்கு மொட்டக்கடுதாசி போட்டு வேலைய காலி செய்யறாங்களோ? :)))


 

வார்ப்புரு | தமிழாக்கம்