177. சக்கரவர்த்தி திரு(ட்டு)மகன்


தமிழ்நாட்டை விட்டு மாஸ்கோவுக்கு வந்தபுதிதில் கொஞ்சம் வியந்துதான் போனேன். இங்குள்ள கட்டிடங்களையும், அவற்றின் அழகையும் பார்த்துமட்டும் அல்ல. Piracy என்னும் பேய் செய்யும் அட்டகாசங்களை பார்த்து. நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டு ப்ளாட்-ஃபாரத்துல விற்கப்படும் கண்ணாடி, சீப்பு, சோப்பு டப்பாக்களைப்போல மைக்ரோசாஃப்டும், மாக்ரோமீடியாவும், அடோபியும் கூறுகட்டி விற்கப்பட்டதை பார்த்து. இது தவிர, உலகத்துல யாரெல்லாம் மென்பொருட்கள் பண்றாங்களோ அவங்களோட படைப்புகளையும் தெருவுக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்.

மென்பொருள்-னு நான் சொல்றது பீ.ஸி-விளையாட்டுக்களில் தொடங்கி அன்றாடம் நாம் பயன்படுத்தும் தளங்கள் (OS), மேசை பிரசுர செயலிகள் (Desktop Publishing), தினசரி உபயோகிக்கும் Media Players/Converters, CD-Writing, Anti-Virus, அறிவியல் மென்பொருள், உலக இசை படைப்புகள் (MP3 வடிவில்), இப்படி ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாமே கிடைக்கும். ஒரு மென் தட்டை (CD)
எடுத்துக்கொண்டால், அதனுடைய 650 MBக்குள் எத்தனை செயலிகளை நிரப்பமுடியுமோ அத்தனையும் நிரப்பி ஒரு கூட்டாஞ்சோறாக கொடுப்பார்கள். இதில் பல வகை உள்ளது. ஒன்று, ஒரு நிறுவனத்தின் பொருட்களை மட்டும் நிரப்புவது, எ.கா-வாக, மாக்ரோமீடியா என்று எடுத்துக்கொண்டால், அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கியது முதல் நேற்று வெளியிட்ட மென்பொருள் வரை அனைத்தையும் அதில் நிரப்பிவிடுவார்கள். இப்படி நிறுவனங்களுடைய செயலிகளை மொத்தமாக பிரித்துவிடுவது. இரண்டாவது, செயலிகளை ஜாதிவாரியா பிரித்து வெளியிடுவது. எ.கா-உலகின் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் மேசை பிரசுர செயலிகளினுள் மிகச்சிறந்தவையை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு தட்டில் நிரப்பிவிடுவது. இப்படி ஒன்ரிரண்டு தட்டுக்களை வாங்கிக்கொண்டுவந்து வீட்டில் உட்கார்ந்து அவைகளின் உண்மைவிலைகளை இணையதளங்களில் தேடிபார்த்தால், ஒரு மென்பொருள் தட்டின் விலை 1000 அல்லது 1500 டாலர்களைத்தாண்டும்.

Image hosted by Photobucket.com
படத்தில் காண்பது 'Multimedia' என்ற பிரிவில் வெளிவந்துள்ள ஒரு தட்டின் உறை (டிவிடி-யில்)


பல இடங்களில், மிகவும் விலை உயர்ந்த SAP, Oracle, Avid போன்ற நிறுவனங்களின் செயலிகளும் கிடைக்கும். இவைகளெல்லாம், பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் செயலிகள். ஒருமுறை வீடியோ படத்தொகுப்புக்கென ஒரு தட்டினை வாங்கினேன். அதில் Avid Newscutter XP என்ற ஒரு செயலி இருந்தது. அதனைப் பற்றி இணையத்தில் தேடியதில், அது உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களும், ஹாலிவுட் ஸ்டுடியோக்களும் பயன்படுத்தும் செயலி என்று அறிந்தேன். அதன் விலை? அதிகமில்லை ஜென்டில்மென், பிச்சைக்காசு 7000 டாலர்கள்தான். இத்தனைக்கும் அந்த செயலி, வாங்கிய தட்டிலிருந்த பல செயலிகளில் ஒன்றுதான். அதைத்தவிர, அடோபி, பின்னகிள், இப்படி பல நிறுவனங்களின் செயலிகளும் அதில் அடக்கம்.

Image hosted by Photobucket.com
மென்பொருள் தட்டு உறையின் பின்புறம்


இந்த திருட்டு தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்ப்பு இங்கே. இதற்கு பல காரணங்கள் உள்ளது. விலையில் இவை மிகக்குறைவு என்பது ஒரு காரணம். மாஸ்கோவிலோ, சான்க்ட் பீட்டர்புர்கிலோ நான் பார்த்தவரை அனைவருமே ஒரே விலைதான். அதாவது, ஃப்லாட் ரேட்டாக, ஒரு தட்டு 70 ரூபிள்கள் (Roubles). இது டாலர் கணக்கில் 2.4$ வரும். கிடைக்கும் பொருளின் தரத்தோடு ஒப்பிடும்போது, இது சில்லரைக் காசுதான். ஆனால், விலை குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு தட்டும், அதை அவர்கள் செய்திருக்கும் தரமும் வியக்கவைக்கும். முதலில், வெளிப்புரத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு சிடி-க்கும் கண்டிப்பாக ஒரு சிறப்பான Plastic Case கிடைக்கும். அந்த உறையின் முகப்பில், உள்ளிருக்கும் மென்பொருள்களில் சிறந்தவைகளை குறிப்பிட்டு அவற்றுக்கு தொடர்புடைய அழகான படம் ஒன்று பின்னணியில் இருக்கும். மேலும் பின்புறத்தில், உள்ளடங்கிய மென் பொருட்கள் ஒவ்வொன்றின் விபரம் அழகாக அச்சிடப்பட்டு காணலாம். பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு அசல் நிறுவனமே வெளியிடும் பொருளைப்போல இருக்கும்.

வெளியில் அப்படி என்றால், தட்டின் உள்ளேயும் ஒரு நேர்த்தியை காணலாம். தட்டை கனிணியுள் செலுத்தியவுடன் Auto-run ஆகும் பட்சத்தில், Flash அல்லது HTMLலில் செய்யப்பட்ட ஒரு பக்கம் தொடங்கிவிடும். உள்ளிருக்கும் செயலிகளைப்பற்றி அறிந்துகொள்ளவும், பிடித்தவற்றை இறக்கிக்கொள்ளவும் வசதியாக சுட்டிகளும், விவரங்களும் அதில் இருக்கும். மேலும், தேவைப்படும் செயலிகளுக்கு உறிய Crack-களும் இருக்கும். இதுவரை நான் வாங்கியுள்ள தட்டுகளில் ஒன்றுகூட மாறி இருந்ததில்லை. அனைத்திலும் ஒரு நேர்த்தி, அழகு. உலகின் பல இடங்களில் இப்படிப்பட்ட கொள்ளை செய்யப்பட்ட மென்பொருள் தட்டுக்கள் கிடைத்தாலும், இங்கு கிடைக்கும் தட்டுக்கள் போல நான் கண்டதில்லை.

Image hosted by Photobucket.com
'Pirates' பீ.ஸி-விளையாட்டின் தட்டு மற்றும் உறை


ரஷ்ய அரசியல் சட்டத்தில் இந்த திருட்டுக்களை ஒழிக்க பலமான விதிமுறைகள் இன்னமும் வரவில்லை என்பதே இவர்கள் இன்று தழைப்பதற்கு காரணம். சில வாரங்களுக்கு முன் AllOfMP3.com என்ற ரஷ்ய இணையதளத்தை, International Federation of the Phonographic Industry (IFPI)-இன் உந்துதலின் பேரில் கோர்ட்டுக்கு இழுத்தது ரஷ்ய போலிஸ். காரணம், அவர்களது தளத்தில் உலகின் பல மூலைகளில் இருந்தும் வெளியாக இசை ஆல்பங்களை போதிய பதிப்புரிமை இல்லாமல் MP3 வடிவில் விற்கிறார்கள் என்பதே. அதுவும் எப்படி, ஒரு பாட்டுக்கு இவ்வளவு விலை என்றில்லை. 5$-க்கு 500 பாடல்கள் என்ற கணக்கில். எதிர்பார்த்தார் போல், வெளிநாடுகளிலிருந்தும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இணையதளத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துவிட்டார்கள். எப்படி? ரஷ்ய சட்டத்தில் எந்த ஒரு படைப்பை விற்கவும் Copyright மிக அவசியம் என்றுதான் உள்ளது. ஆனால், online distribution பற்றி ஒரு வரி கூட இல்லை. இவர்களது சட்டம், அனுமதி மீறியதாக சொல்லப்படும் பொருள் Material Goods அதாவது Physical copiesஆக இருக்கவேண்டும். இந்த இணையதளமோ, பாடல்களை MP3 வடிவில்தானே(electronic-ஆக) விற்கிறது. ஆக, அவர்கள் மீது கிரிமினல் குற்றத்தை பாய்ச்ச முடியாது என்று கூறிவிட்டார்கள். இதன் மூலம், ரஷ்ய சட்டத்தில் பதிப்புரிமைக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று புரியும்.

ஆனால், சென்ற ஆண்டுவரை நகரத்தின் எல்லா இடங்களிலும் நடைபாதைகளில் விற்றுவந்தவர்களை, மாஸ்கோ மாநகராட்சியே ஒரு பெரிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்து அதற்குள் கொண்டுசென்றுவிட்டார்கள். விற்பனையை தடை செய்தபாடில்லை. இந்தியாவில் NASSCOM போன்ற அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக அசல் செயலிகளைத்தான் வாங்க வேண்டும் என்று கடிவாளம் போடுகிறார்கள். ஆனால், இங்கு அப்படியும் இல்லை. பல அலுவலகங்களிலேயே திருட்டு செயலிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

Image hosted by Photobucket.com
சான் பென்
நடித்த 21 Grams/Mystic River - இரண்டு படங்களை உள்ளடக்கிய டிவிடி

இன்று, கனிணியைத்தாண்டி, இந்த தொழில் DVDகளுக்கும் வந்துவிட்டது. புதிய ஹாலிவுட் படத்தின் DVD வெறும் 80 ரூபிள்தான். இவைகளும் மென்பொருள் தட்டுக்களைப்போல, ஒரு தட்டில் இரண்டு படங்கள் (நடிகர் அல்லது genre வகையில் பிரித்து) அதே 80 ரூபிளுக்கு, சுத்தமான அசல் டால்பி/டீ.டி.எஸ் 5.1 சப்தங்களோடு கிடைக்கின்றன. அப்படி டீ.டி.எஸ் லாம் உங்களுக்கு முக்கியமில்லையெனில் ஒரு தகடில் பத்துபடங்கள் வரை ஸ்டீரியோ ஒலியுடன் வைத்துள்ளார்கள். முக்கியமாக, சான்க்ட் பீட்டர்புர்க் மாநகரத்தில், DVD கடைகள் ஏராளம். இந்த விஷயங்களுக்கிடையில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த திருட்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுடைய பெயரையோ, விலாசத்தையோ, வெளியிட சிறிதுகூட யோசிப்பதில்லை. ஒவ்வொரு தட்டிலும், அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், அதன் முழு விலாசத்துடன் பின் பக்கத்தில் இருக்கும். படங்களை உற்று கவணியுங்கள், ஒவ்வொன்றிலும், ஏதோ அசல் தயாரிப்பு போல Bar-Code கூட இருப்பதைக் காணலாம். சிலர் ஒருபடி மேலே போய், அவர்களது வெளியிடும், வெளியிடப்போகும் தயாரிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இணையதளங்களையே நடத்திவருகிறார்கள். 'செய்வதை திருந்தச் செய்' என்ற முதுமொழியை தவறாமல் பின்பற்றுபவர்கள் இவர்கள்.

shop505 - சான்க்ட் பீட்டர்புர்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருட்டு படைப்புகளை விற்கும் '505'
நிறுவனத்தின் தளம். இங்கு அவர்கள் கடைகளின் விவரங்கள், புதிய படைப்புகளின் விமர்சனங்கள், தகவல்களைக் காணலாம். ரஷ்ய-னில்தான் உள்ளது. கொஞ்சம் scroll பண்ணி பாருங்கள்.


----------------
பி.கு: பழைய நண்பரிடம் பழையபடியே சுட்டது.

176. பிரியா விடை பெற்றாள் என் காதலிகளுள் ஒருத்தி!

இது பை பை சொல்லும் காலம். இருந்தாலும் இப்படியொரு கொடுமையான பை பை சொல்லவேண்டி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டு நம்மை விட்டு சென்றுவிட்டாள் எல்லோரையும் கவர்ந்த Zen என்னும் உலக அழகி. அவளுக்கு சரியான obituary கூட கிடையாது. அழகிய இளங்குமரியை கோர கிழவியாக்கி, அக்கிழவியைப் நடைபிணமாக்கி ஒருவழியாக பாக் செய்து வெற்றிகரமாக அனுப்பிவைத்துள்ளனர் மாருதி உத்யோக் காரர்கள். அக்குமரியின் நினைவாக இப்பதிவு.

Classic Yellow Beauty




zen அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் அப்போது. ஹிந்துவில் விளம்பரம் வந்திருந்தது. சிகப்பு கலர் ஜென் ஒன்றின் front 1/3 ப்ரோபைல் படம். Engineered for Exhilaration என்ற tag line உடன். பார்த்த நொடியிலேயே crush. அதன் நளினமான stance இலா இல்லை டிசைனிலா - எதில் மயங்கினேன் என்று தெரியவில்லை. ஓட்டவேண்டாம,் பார்த்தாலே பரவசம். பெரிய specifications ஒன்றும் கிடையாது. ஆனால் அதன் கியர்பாக்ஸும், rev செய்ய செய்ய இன்னும் இன்னும் என்று கெஞ்சும் துடிப்பான எஞ்சினும் என அப்போது ஜென்னை ஓட்டியவர்கள் எல்லாரையும் சொக்கிப்போகத்தான் வைத்தது. வந்தவுடன் மிகப்பெரிய வெற்றியடைந்துவிடவில்லை. 93-ல் டெல்லி வீதிளிலேயே சில வண்டிகளை மட்டுமே பார்த்தேன். ஆனாலும் பேப்பரில் பார்த்த மோஹினியை நேரில் பார்த்தது பரவசமாகத்தான் இருந்தது. என்னமோ சினிமா ஸ்டாரைப்போல எப்போதாவது ரோடுகளில் கண்ணில் பட்டு மறைவாள்.


Chic in Stunning Red



பின்னர் என் நண்பன் வீட்டில் புக் செய்து, பலமாதங்கள் காத்திருந்து வாங்கினார்கள். அதுவும் ப்ரீமியம் எல்லாம் கொடுத்து வார்த்தையில் வர்ணிக்க இயலா மஞ்சள். இத்தனைக்கும் பாடி கலர் பம்பர், ORVMகள், அல்லாய்ஸெல்லாம் கிடையாது. ஏன் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, செண்ட்ரல் லாக்கிங் கூட கிடையாது. ஒரிஜினல் மிசெலின் ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்தது. அந்த அழகியைப் பார்க்கவென்றே அவன் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்தேன். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போன்ற அழகு. jelly bean டிசைன் என்று அப்போது அமர்க்களப்பட்டது.


Zen VX - Revamped



ஒரு வழியாக மூன்று வருடங்கள் காத்திருந்ததன் பயனாய் 97-ல் ஒரு சொக்கவைக்கும் வெள்ளை அழகி வீட்டினுள் வந்தாள். மஞ்சள் கூடவே கூடாதென்று மேலிடங்கள் உத்தரவிட்டதன் பேரில் வெள்ளை. இருந்துமென்ன 'a zen is a zen is a zen'. காரினுள் நான்கு 'பெரிய'வர்கள் பயணம் செய்ய இயலாது. அதிகபட்சம் இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள். அவ்வளவுதான் இடம். டிக்கியில் ரெண்டு குடை வைத்தால் இடம் காலி. இப்படி இடப்பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. இதைத்தவிர nags நிறைய. ஆனால் ஓட்டுநர்களுக்கு எந்தக்கவலையானாலும் அதை மறக்கச்செய்யும் அளவுக்கு போதையேற்ற வல்லவள் zen. போதையின் காரணம் அவளின் எஞ்சின் - கியர்பாக்ஸ் ஜோடி. ஓட்ட ஓட்ட சுகம். கூட உட்கார்ந்து வருபவர்கள் எல்லாம் சோர்ந்து போனாலும், ஓட்டுநருக்கு மட்டும் 'மற்ற மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக்காதல் அல்ல'. கன்னியாகுமரியிலிருந்து திருப்பதிவரை நாகப்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை என ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கூடவே வந்தவளை இன்னொருவரின் கையைப்பிடித்துக் கொடுக்கவேண்டுமென்றால் தாங்குமா? என்ன செய்ய, ப்ராக்டிகல் காரணங்களுக்காகவும் மாருதி சர்வீஸ் செண்டரின் அலட்சியப்போக்கினாலும் மாருதி வைத்துக்கொள்வது இனி லாயக்குப்படாது என்று சொல்லி அந்த வெள்ளை அழகியைக் கொடுத்தாகிவிட்டது.

இப்படி அவளுடனான எனது தேனிலவு வெறும் நான்கு வருடங்களே ஆனாலும் அவளின் அடிமையாய் முற்றிலுமாய் மாற்றிவிட்டு சென்றாள் என்னைவிட்டு.
Zen Classic - What was Maruti thinking?




அவள் இருந்த இந்த குறைந்த வருடங்களில் பல மேக்கப், பல எஞ்சின்கள் என மாற்றி அவளை நிம்மதியாக இருக்கவிடாமல் படுத்திக்கொண்டிருந்தனர் மாருதியைச் சேர்ந்தவர்கள். ஜென் க்ளாசிக் என்று கண்ணாலே பார்க்ககூட முடியாத அந்நியன் மேக்கப்பை போட்டு என் காதலியை அவமானப்படுத்தினர். அவள் இடைக்கும் நடைக்கும் துளியும் பொருந்தாத பீஜோ டிசலை உள்ளே வைத்து பாடாய்ப்படுத்தினர். பின்னர் Lx, Lxi, Vx, Vxi, A, D என ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் பொட்டாய் ஒட்டித்தீர்த்தனர். இவற்றைக்கூட பரவாயில்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடலாம்.

ஆனால் புதுசாக்குகிறேன் என்று சொல்லி அவள் முகத்தையும் பின்புறத்தையும் சின்னாப்பின்னப்படுத்தியைத்தான் தாங்கமுடியவில்லை. ஒரிஜினல் '93 டிசைனின் மிகப்பெரிய ப்ளஸ்களான ஹெட் லைட்டுகளையும், டெயில் லாம்ப்களையும் அநியாயத்திற்கு மகா கண்றாவியாய் மாற்றி 2003 இல் 'புத்தம்புதிய ஜென்' என்று தெருக்களில் அவளை அரைநிர்வாணமாய் ஓடவிடுவதுபோல விட்டனர். அப்படியும் நேற்றுமுளைத்த அசிங்கமான சாண்ட்ரோகளுக்கு போட்டியாக நளினமாகத்தான் ஓடினாள் ஜென். மாருதியினர் அவளுக்கு செய்த கொடுமைகளெல்லாம் போதாமல் முத்தாய்ப்பாய் முள்கீரிடம் வைப்பதுபோல 'எஸ்டிலோ' என்னும் அசிங்கத்திற்கு Zen என்கிற அழகியின் பெயரை வைத்துள்ளனர். காதலியைக் கொன்றுபுதைத்துவிட்டு ராட்சசிக்கு இளவரசி பட்டம். அவள் பெயரில் ஆள்மாறாட்டம். மோகினிக்குப் பதில் சூர்ப்பனகை. ராட்சசி காதலியாக முடியுமா என்ன?

The Typical Maruti Makeover. Scarily Made Up! Jelly Bean Design gone down the drain!



மாருதி 800களும் டப்பா ஆம்னிகளும் இன்னும் தயாரிப்பில் இருக்கையில் இவளின் கதையை மட்டும் சட்டென்று முடித்துவிட்டனர். பாவம் மாருதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டாள் என் காதலி. இந்த அழகி பிறந்திருக்கவேண்டிய இடமே வேறு. அவளை வைத்து நாளும் கொண்டாடியிருப்பார்கள். இருந்தாலும் ஆறுதலாய், இப்போது நம்மைவிட்டு போனாலும், செகண்ட் ஹாண்ட் கார் சந்தையில் பலவருடங்களுக்கு சீரும் சிறப்புமாய் உலாவருவாள் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வப்போது சாலைகளில் அதே பழைய மிடுக்குடனும் துடுக்குடனும் எதிர்ப்புறம் அவள் பறக்கையிலே உதட்டோரமாய் ஒரு சின்ன புன்னகை பூக்காமல் போகாது என்பது நிச்சயம்.
This? A Zen? More like Wagon R's Ugly Twin!



--------
முந்தாநேற்றைக்கு ஒரு 94 வருடத்து மஞ்சள் ஜென் பெயிண்ட் கூட மங்காமல், இண்டீரியர்களெல்லாம் பளிச்சென்று பார்க்க நேர்ந்தது. உண்மையாகவே பொறாமையாக இருந்தது. இந்த அழகி நம்மிடம் இல்லையே என்று. அதோடு கூட புது ஜென் எஸ்டிலோவை ஷோரூமில் பார்த்துவிட்டு வந்த ஆத்திரத்தில் எழுதியது.

174. பூச்சி காட்டட்டுமா?

காமிரா வச்சுருக்கவங்க எல்லாரும் அப்பப்போ மாக்ரோ எடுத்து அலட்டறது வழக்கம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ சில பூச்சீஸ்.

கைல எடுக்கறது பிடிக்காதுன்னாலும், பூச்சீஸ காமிரால்ல எடுக்க ரொம்பவே பிடிக்கும். எத்தன வண்ணங்கள் எத்தனை டிஸைன்கள்னு கணக்குவழக்கே இல்லாம படைச்சு வச்சுருக்கான். பூச்சிகள்னு சொன்னாலே பலருக்கு ஏதோ தங்க கைல தான் ஏதோ நெளியறாப்போல இருக்கும். ஆனா பாருங்க, அதுங்க இருக்கறது ஒரு தனி உலகம். honey i shrunk the kids னு அந்தக் காலத்துல ஒரு குழந்தைங்க படம் உண்டு. சைண்டிஸ்ட் அப்பா எதையோ செய்யப்போக குழந்தைங்க எல்லாம் அரிசி சைஸுக்கு ஆயிடுவாங்க. டினோசார் மாதிரி கட்டெறும்புகளும், திமிங்கிலம் மாதிரி கரப்பான்பூச்சிகளும், பெரிய பெரிய மரங்கள் மாதிரி புற்களும்னுட்டு பயங்கர தமாஷா இருக்கும்.

பூச்சிகளும் நாமளும் ஒரே பூமியில இருந்தாலும் நம்ம கண்ணுக்குத் தெரியாத உலகம் அதுங்களோடது. வீட்டுத் தோட்டத்துக்கு போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு சுத்தி முத்தி பாத்தா தான் தெரியும். இக லோகம் பரலோகம் மாதிரிதான் தத்துவார்த்தமா சொன்னாக்க. நின்னு கவனிச்சாத்தான் கண்ணுக்கே புலப்படும். அவசர வாழ்க்கையில எங்க இருக்கு நேரம்?னு சலிச்சுக்கறீங்களா.. ஹூம்.. என்ன செய்ய..

அரேபிய பாலைவனங்களா, அமெரிக்க வைல்ட் வெஸ்டா, சைபீரியன் பைக்கல் ஏரியா, ஆர்க்டிக் பனிமலைகளா, இந்திய சமவெளிகளா, ஆஸ்திரேலியாவின் டவுன் அண்டரா, பிஜித்தீவுகளா, ஆப்பிரிக்க காடுகளா, ஸ்காண்டினேவியன் பியார்டுகளா, கனேடிய ராக்கீஸா, தென்னமெரிக்க அமேசோனா, கரீபியன் கடற்கரைகளா, மங்கோலியன் ஸ்டெப்பீஸா? எதைப் பார்ப்பது எதைவிடுவது என்று தெரியாமல் எத்தனை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு எழிலும் வண்ணமும் கொஞ்சும் உலகத்துல பிறக்க கொடுத்துவச்சுருக்கோம். ஆனாலும் நின்னு நிதானமா ஒரு நொடி ரசிக்கக்கூட முடியாம அப்படி என்னதான் ஓட்டம் வேண்டிக்கிடக்கோ தெரியவேயில்லை. நாமளே ஏற்படுத்திகிட்ட ஓட்டம். எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.

நான் என்னவோ எழுதிக்கிட்டிருக்கேன். நீங்களும் கடனேன்னு படிச்சுகிட்டிருக்கீங்க. இத்தோட ஸ்டாப்பு. இனி படம் மட்டும் பாருங்க.

























175. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு

கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. விரதமிருப்பதும் தீபம் ஏற்றுவதும் பலருக்கு நடப்பதில்லையென்றாலும் கோபுரத்தையாவது தரிசிக்கலாமே.

இதோ சில கோபுரங்கள்:

1. தில்லை நடராஜர் திருக்கோயில்




2. தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில்



3. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்



4. மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்.


கும்பகோணம் என்ற பெயர் வரக்காரணமான ஈசன். பிரளய காலத்தின் போது மண் குடத்தில் அமிர்தம் மகாமேருவில் இருந்து உருண்டு வர, அதை வேட ரூபம் கொண்டு அம்பெய்தி உடைத்தார் பரமேஸ்வரன். அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை ஆனது. வழிந்த அமிர்தமே மகாமக குளமானது என்று ஐதீகம். இங்கேயுள்ள சிவலிங்கத்தின் மேல் மண் குடத்தின் கலசம் சாய்ந்தாற்போல் கோணலாக இருப்பதால் கும்பகோணம் என்ற பெயர் பெற்றது.

5. திருச்சேறை ஞானாம்பிகை சமேத செந்நெறியப்பர் (சாரபரமேஸ்வரர்) ஸ்வாமி திருக்கோயில்






திருச்சேறை சாரபரமேஸ்வரர் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சாரநாதஸ்வாமியும் கால பைரவரும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் நாச்சியார்கோயிலுக்கு அப்பால் உள்ளது. ஓரே ஊரில் சாரநாதப் பெருமாளும், சாரநாதஸ்வாமியும் எதிரெதிர் கோயில்களில் உள்ளனர்.

கடன் தொல்லை நிவர்த்திக்கென தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது இந்த சிவன் கோயில். நாங்கள் தேடிய வரையில் மார்க்கண்டேயரின் பிறவிக்கடனை நிவர்த்தி செய்த சிவலிங்கம் என்று மட்டுமே தலவரலாற்று புத்தகத்தில் இருந்தது. ஆயினும் நமக்கு பிறவிக்கடனை பற்றி தற்போது என்ன கவலை? கவலையெல்லாம் வங்கிகளில் இருக்கும் கடனைப் பற்றிதானே. அதற்கு பதினோரு திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து இச்சிவனை வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. நேரில் வர இயலாதவர்கள் "செயல் அலுவலர், அ/மி சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612605, கும்பகோணம் தாலுக்கா" என்ற விலாசத்திற்கு ரூ. 165 மணியார்டர் அனுப்பினால் அர்ச்சனை செய்து பதினோரு வாரங்களுக்கு பிரசாதம் அனுப்பப்படும் என்று எழுதிவைத்துள்ளார்கள். தொலைபேசி: 0435-2468001

இங்குள்ள காலபைரவருக்கு என்ன விசேஷமென்றால் தமிழ்நாட்டில் திருநாவுக்கரசரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற ஒரே பைரவர் இவர்.

6. கண்ணபிரான் ரவிசங்கருக்காக சாரநாயகி சமேத சாரநாதப் பெருமாள் கோயில், திருச்சேறை



173. How Big is Your P*nis?

இதைப் படித்தவுடன்:

1) பொதுவில் கேட்க்கக்கூடாத கேள்வியைக் கேட்கிறான் நாகரிகமற்றவன். இந்தப்பதிவை தொடர்ந்து படித்துத்தொலைப்பதா? வேண்டாமா?

2) ஏதாவது Kinsey/Freud வகையறா உளவியல் ப்ளாக்கிற்கு வந்துவிட்டோமா?

3) ஏதாவது பம்ப், மூலிகைக் களிம்பு விற்கிற தளமாக இருக்குமோ?

4) இருப்பதைவிட பெரிய எண்ணாக சொன்னால்தான் என்ன? இல்லை உண்மையான பதிலைச் சொல்லித்தான் பார்ப்போமா?

என்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.

1) அது எவ்வளவு 'நளினமாக' இருக்கிறதோ அவ்வளவு மதிப்பு அதிகம். சமூகத்தில் மற்ற ஆண்களிடத்தில் கண்டிப்பாக உண்டு. பல ஆண்கள் தங்களுக்கு அவ்வாறு வாய்த்திருக்ககூடாதா என்று தினம்தினம் ஏங்குவார்கள். ஆனால் இவ்விஷயத்தில் பெண்கள் 'எக்ஸ்ட்ரா'வாக மதிப்பார்களா என்பது காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டிமன்றத்தலைப்பு. அதனால் அதை விட்டுவிடுவோம்.

2) பெரும்பாலான ஆண்கள் பலதடவை பொதுவில் expose செய்கிறார்கள். பெண்களைக் கவர மட்டுமில்லாமல் தேவையற்ற போட்டிகளை சமாளிக்கவும்.

3) பொழுதுபோகாமல், கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல், அதனுடன் விளையாடுவோர் சதவிகிதம் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் மிக அதிகம். இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பெண்கள் வெளியிலேயே காட்ட மாட்டனர். தேவைப்பட்டாலேயொழிய.

4) தேவையே இல்லாமல் அமுக்கிப்பார்ப்பது, வேலை செய்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்து சோதனை செய்வது..

சரி வேண்டாம் ரொம்ப மஞ்சப்பத்திரிகை வாடை வீசுவது போல இருப்பதால் இப்போது நிஜமாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீண்ட நாட்களுக்கு முன் இதை ஒரு தளத்தில் படித்துவிட்டு மறந்துபோயிருந்தேன். இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆராய்ச்சியின் படி மேற்கூறிய சகலமும் செய்வதில் ஆண்களே முதலிடம் செல்போன் விஷயத்தில். இனிமேல் பொது இடங்களில் சுற்றுமுற்றும் கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள். ஒருவர் போன் மணியடித்தால் அனைவரும் எடுத்துச் பார்த்துக்கொள்வது. அதிலும் அவரதை விட நம்முடையது விலையுயர்ந்த மாடலாக இருந்தால் அப்போதுதான் நினைவுக்கு வந்தது போல எஸ். எம். எஸ் அடிக்கத் தொடங்குவது.

எடுத்து எடுத்து பாட்டரி சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது. இல்லையென்றால் குருட்டாம்போக்காக சில நம்பர்களை அமுக்கி டயல் செய்து பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்வது.

ஓட்டல்களைப் போன்ற இடங்களில் தேவையேயில்லாமல் டேபிளில் எடுத்து வைத்திருப்பது. அதை சுற்றி சுற்றி விளையாடுவது. இடுப்பில் சொருகிக்கொள்வது. எடுப்பது.

இப்படி எத்தனை காரியங்கள் செய்ய முடிகிறது செல்போன்களைக் கொண்டு ஆண்களால். முக்கால்வாசி நேரம் அதில் அழைப்பே வராது. அழைக்கவும் ஆளிருக்க மாட்டனர். பெரும்பாலோர் செல் போன் வாங்குவதில், பொதுவில் அம்மாடலை எடுத்தால் எத்தனை பேரிடம் இருக்கும், எடுத்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்துதான் விலையுயர்ந்த மாடல்களை வாங்குகின்றனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உளவியல் ரீதியாகவாவது.

பெண்கள் பெரும்பாலும் ஹாண்ட் பாக்கினுள்ளேயே வைத்திருப்பர். தேவைப்பட்டாலேயொழிய அதைவைத்து பொதுவில் விளையாட்டு காட்ட மாட்டார்கள்.

அதுவும் ஒவ்வொரு முறையும் வேட்டையாடு விளையாடு ரிங்டோனாக 'பார்த்த முதல் நாளாய்' கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சன் ம்யூஸிக் நிறுத்தினாலும் இவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தம், பெரும்பாலான ஆண்கள் செல் போன் வாங்குவதே தங்கள் ஆண்மையின் பிரதிபலிப்பின் வடிவாகக் கொண்டு பெண்களைக் கவரத்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தான் வசதி வாய்ந்தவன் என்று காட்ட அல்லவாம். மாறாக தான் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளப்படவேண்டிய/கூடிய ஒரு பொறுப்புள்ள, powerful முக்கியஸ்தன் என்பதைச் சுட்டத்தானாம்.

சுட்டி இங்கே.

ஏன் 'அதனுடன்' சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சந்தேகமாகவா இருக்கிறது??? பார்க்க இங்கே. இருபக்க நியாயங்களும் இருக்கின்றன இங்கே.

---------------------------------
பதிவின் தலைப்பிலுள்ள கேள்விக்கு வந்துட்டோமா?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?


(அய்யா சாமி, செல்போன் மாடலச் சொன்னேன்பா. அதப்பத்தி மட்டும் சொல்லுங்க. என் பதிவ புகழ்பெற்ற 'டாக்டர் பிரகாஷ்' பதிவா ஆக்கிடாதீங்க!! அவரே வேற வெளியில வர்றாராம். :)))

172. கோவைப்பக்கம் ஒரு நாள்

1. திருச்சி ரோடில் மேம்பாலம் கட்டுவதாகச் சொல்லி சூலூர் தாண்டியவுடன் போக்குவரத்தைத் திருப்பிவிட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஒண்டிப்புதூர் குறுக்குத்தெருக்களையெல்லாம் காணும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களெல்லாம் இன்னும் சில கிலோமீட்டர் ஊரைச் சுற்றி வரவேண்டுமென்று நண்பர் கூறினார். மேம்பாலம் கட்டி இருபுறமும் ரோடெல்லாம் போட்டு, தண்டவாளத்தின் மேல் போடுவார்களே அந்தப் பகுதியை மட்டும் விட்டுவைத்திருப்பதாக கேள்வி. அதற்கு என்று விடியப்போகிறதோ, 2008 என்று ட்ரைவர் தகவல் சொன்னார், ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. இராஜஸ்தானி சங்க் திருமண மண்டபம் செல்ல வேண்டியிருந்தது. வித்தியாசமான செட்-அப். கீழே டைனிங். மேலே மண்டபம். இனிமேல் ஓசிச் சாப்பாடு சாப்பிட சம்பிரதாயத்துக்குக்கூட மணமக்களை வாழ்த்தவேண்டாம் என்று தோன்றியது.

3. ரொம்ப நாள் கழித்து ரேஸ் கோர்ஸ் ரோடு, கே.ஜி தியேட்டர், ஹாஸ்பிடல் (!) எல்லாம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. பழைய ஞாபகங்கள் நிறைய. பள்ளி விடுமுறை நாட்களில் சித்தப்பாவின் ஹீரோ ஹோண்டாவில் ஏறி வேலை மெனக்கெட்டு சேரன் டவர்ஸ் போக வேண்டுமென்று அடம்பிடித்து (விண்டோ ஷாப்பிங் செய்யக்கூட ஒன்றுமில்லை அங்கே அப்போது), பைக் முன்னாடி அமர்ந்தபடி நேரு ஸ்டேடியத்தை ஒரு ரவுண்ட், அவினாசி ரோட்டில் நார்த் கோயம்பத்தூருக்கு பிரியும் மேம்பால ரவுண்டானா ஏறி இறங்கி, கேஜி ஹாஸ்பிடல் பழமுதிர்ச்சோலையில் ஜூஸோ இல்லை கௌரிசங்கரில் டிபனோ என இனிதே கழிந்தது தினமென்று சுபம் போட்ட நாட்கள். லைப் தான் எத்தனை சிம்பிளாக இருந்திருக்கிறது என்று நினைத்து எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. "குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு கூவச்சொல்லுகிற உலகம்" என்று ஏன் வைரமுத்து உருகி உருகி எழுதினார் என்று ஓரளவுக்கு புரியவும் செய்கிறது.

4. அவினாசி ரோடு மேம்பால ரவுண்டானா இப்போது ரொம்ப மாறிவிட்டது. பெரிய நகரங்களுக்கு மத்தியில் இங்கே கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது வழக்கமாக தென்படும் பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்றவற்றிற்காக சிரித்து கிளுகிளுப்பூட்டும் அழகான ராட்சசிகள் ஆப்செண்ட். அதற்கு மாறாக ஜான் ப்ளேயர்ஸ், லூயி பிலிப், வான் ஹூசன், ஆலென் சோலி என்று முறைத்து முறைத்துப் பார்க்கும் அரவிந்தசாமி அண்ணாக்கள் மயம். கோவையில் மட்டும் ஏனிப்படி என்று விளங்கவில்லை.

5. இருந்த கொஞ்ச நேரத்தில் பார்த்த சன் நியுஸ். சென்னையில் மழையால் விளைந்த சேதத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் வேட்டியை மடித்துக்கட்டியபடி சேற்றில் இறங்கிப் பார்வையிட்டார். அடுத்து, சென்னையின் புதுமேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் உடனிருக்கையில் வெள்ளிச் செங்கோலுடன் பதவியேற்கிறார்.

வழமையாய் நடந்த இவற்றுள் எனக்கு உறுத்தியது முக்கியமான ஒன்று. இந்த இரு நிகழ்ச்சிகள் என்றில்லை. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நாலாவது வார்ட் தி.மு.க பிரசிடெண்ட் நன்றி அறிவிப்புக் கூட்டமானாலும் சரி, புதுக்கோட்டை மாவட்ட மனையேறிப்பட்டியில் தி.மு.க தொண்டரின் வீட்டில் எருமை மாடு கன்று போட்டாலும் சரி...உடனே வெளிர் நீலம் அல்லது வெளிர் பிங்க் சட்டை, கறுப்பு பேண்ட் போட்டுக்கொண்டு நல்ல கருகருமீசையுடன் கண்ணாடியணிந்த ஒரு இளைஞர் பளிச்சென்று ஆஜராகி டி.வியில் நிற்கிறார். அவர் நமது மதிப்பிற்குரிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (இணை கூட இல்லை, மத்திய) திரு. தயாநிதி மாறன். இவர் என்ன இந்தியா முழுவதற்குமான மத்திய அமைச்சரா இல்லை தமிழக தி.மு.க-விற்கு பி.ஆர்.ஓ-வா என்று சந்தேகமாக இருக்கிறது. மத்திய அமைச்சருக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து நேரம் கிடைக்கிறது என்று பொதுவில் நேர மேலாண்மை வகுப்புகள் நடத்தினால் அனைவரும் இந்த ஆம்னிப்ரெஸென்ஸ் டெக்னிக்கை கற்றுக்கொண்டு பயன்பெறலாம்.

6. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அரங்கநாத சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருத்தலம். நான் கூட இரங்கநாதர் என்றவுடன் பள்ளிகொண்ட ரங்கநாதரை எதிர்பார்த்தேன். இவர் வித்தியாசமாக இருக்கிறார்.

7. காரமடையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது "தென் திருப்பதி". அசர வேண்டாம். கே.ஜி.டெனிம் கார்ப்பரேஷன் (KG Denim) தெரியும்தானே? trigger ஜீன்ஸ் காரர்களேதான். அவர்களின் மில் வளாகத்தினுள் கட்டப்பட்ட தனியார் கோயில். இதற்கு நிறைய பில்டப். செல்போன், காமிராக்களை வாயிலிலேயே பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். வருகிறவர்கள் அனைவரும் கே.ஜி.டெனிமின் பங்காளியோ விருந்தாளியோ என்று சொல்லி ஒரு லெட்ஜரில் கையெழுத்திட்ட பின்னரே செல்லவேண்டும். உண்டியல் கூட கிடையாது. இந்துசமய அறநிலையத்துறை பலரது சொப்பனங்களில் சிம்மமாய் வருவதனாலோ என்னவோ.

சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார் என்று அதகளப்பட்டது. அதனால் பிரபலமும் அடைந்துவிட்டது. பிரபலமாகும் வரை கருணையோடு கண்திறந்து பார்த்த நாராயணர், அப்புறம் ஏன் பார்க்கவில்லை என்று உடனே கேட்க நினைக்கும் conspiracy theoristகள் நேராக கோயில் நிர்வாகத்திற்கே எழுதிக்கேட்டுக்கொள்ளலாம்.

மற்றபடி ஒரு சிறு மேட்டில் வெங்கடாஜலபதி சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி எனத் தொடங்கி அத்தூணூண்டு இடத்தில் திருமலைக்கோவில் போலவே அமைத்து முத்தாய்ப்பாக விமான வெங்கடேசரையும் அசலைப் போலவே செய்து வைத்திருக்கிறார்கள். நித்தியபடி அலங்காரம் திருமலைப்பெருமானைப் போலவே. கூட வந்த ஓட்டுநர் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டுதலை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். ஐந்து வருடத்திற்கு முன்னர் தோன்றிய தனியார் வெங்கடேசன் திடீரென ஒப்பில்லா அப்பனையும், குணசீலனையும் ஓவர்டேக் செய்தது எப்படி என்று எனக்கு குழப்பம் வந்தது.

பெருமாளைச் சேவித்துவிட்டு வருவோர் அன்னதான டொனேஷன் கவுண்டர், பிரசாத விற்பனை கவுண்டர் என எல்லாவற்றையும் எம்பித்தாவிவிட்டு இலவச பிரசாத கவுண்டருக்கு செல்ல வேண்டும். நான் போன அன்று இனிப்பு மட்டாக ஜோரான சர்க்கரைப்பொங்கலும், மிளகு குழம்பா சாம்பார் சாதமா என மினி பட்டிமன்றம் நடத்த ஏதுவான ஒரு சாதமும் பிரசாதம். தோட்டத்திலேயே அழகாய் பாறைகளை இருக்கைகளாய் வைத்திருக்கிறார்கள். குடிநீர் வீணாக்காதீர் என்று எழுதிவைத்தவர்கள், பிரசாதம் சாப்பிட்டோர் கை கழுவ நீரை வைக்க மறந்துவிட்டார்கள். ஆனால், இருக்கும் தோட்டத்தில் அருமையான மர நிழலில் நன்றாக நிஷ்டை கைகூடுகிறது. ஏன் இப்படி குற்றமாக கண்டுபிடிக்கிறேன் என்று நோக வேண்டாம். திருப்பதியைப் போன்ற பெருமை வாய்ந்தது என்றெல்லாம் பில்டப் கொடுத்து அழைத்துச் சென்ற டிரைவர் மேலுள்ள வெறுப்பினாலும் இருக்கலாம். பக்திக்காக என்றில்லாமல், curiosityக்காக சென்று வரலாம்.

8. அடுத்து காடையூர். காங்கேயத்திலிருந்து ஆறு கி.மீட்டரில் உள்ளது. விசேடமான கோயில் என்று சொல்லி போனதுதான் இங்கேயும். காடையீஸ்வரர், பங்கயற்செல்வி, சுப்ரமண்யர், லக்ஷ்மிநாராயணர், அனுமார், வெள்ளையம்மன் என பலர். என்ன விசேஷம் என்று சொல்ல ஆளில்லை. ஆனால் டிரைவர் புண்ணியவான் சொன்ன ஸ்தல புராணம் இதோ: சிவகுமாருக்கு இவர்தான் குலதெய்வம். சென்ற வாரம் தான் சூர்யாவும் ஜோவும் சிவகுமார் குடும்பத்தினருடன் ரகசியமாய் வந்து சென்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு பயந்து பொங்கல் எல்லாம் வைக்காமல் சிம்பிளாக கும்பிட்டு கிளம்பிவிட்டனர் என்றார்.

இப்படியாக கோவைப் பயணம் இனிதே முற்றிற்று.



அதிசயமாக பயணப் பதிவு தொடராமல் முற்றிற்று. அதற்காகவே தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பெய்யாமலும் போகலாம் என்பது ரமணன் சாரின் லேட்டஸ்ட் தகவல்.

171. எப்படி எப்படி எப்படி?

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்! - ஏய்
இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!

நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
ஒன்று பட்டது வென்று விட்டது

கிறுகிறுங்குது குறுகுறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

இந்தா இந்தா அங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி படிச்சிப் பாரு புரியும்!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?





இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.


குறிப்பு:

இப்பதிவிற்கு கண்டிப்பாக பின்னூட்டம் இடக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்!

170. தீபாவளி நல்வாழ்த்துகள்!

வீரதீரத்துடன், அஞ்சாநெஞ்சத்துடன் சரவெடி வெடி வெடி!


விடுமுறை நாளிலும் ராக்கெட் ரிசர்ச்!


ராக்கெட்டின் பேர் ரோஹினி! PSLV என்று சைடில் வேறு எழுதியிருந்தது. அடாது மழைபெய்தாலும் விடாது டெஸ்ட் செய்தாகிவிட்டது.

அனைவருக்கும் இனிய தீபாளி நல்வாழ்த்துகள்!

169. சில புகைப்படங்கள்

மறுபடியும்...

சிலர் இது என்ன கோயில் என்பது போலக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக: இது தஞ்சாவூரில் உள்ள இராஜ இராஜேச்சுரம் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில்.

இறைவன்: பெரிய நாயகி (எ) பிரஹன்நாயகி உடனுறை பெருவுடையார் (எ) பிரகதீஸ்வரர்



1. நடராஜர் சந்நிதிக்கு அருகிலிருந்து. நந்தி மண்டபம் foregroundஇல்.



2. நாட்டிய அரங்கேற்றத்துகென்று இருக்கிற மேடையிலிருந்து - பிரசாதக் கடைப் பக்கத்தில் என்று சொன்னால் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.



3. ஆஞ்சநேய சுவாமி சந்நிதியிலிருந்து - பிக்காஸாவில் நிறைய பிஸ்கோத்துவேலை செய்து கலரே மாறிவிட்டது.



4. நுழைந்தவுடன் இடதுபுறத்தில் இருக்கிற இராகு சந்நிதி அருகிலிருந்து (a)


5. கால்நடை மருத்துவமனை அருகிலிருந்து (b)



6. மேம்பாலத்திலிருந்து (c)




----------------
(a) இவ்வளவு பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால் பிரம்மாண்ட இராகு பகவான் மட்டும் உண்டு, இரண்டாவது கோபுரத்தைத் தாண்டிய உடனே அக்கோபுரத்திலேயே பெருவுடையாரைப் பார்த்தபடி இருக்கிறார் இராகு. இராஜ இராஜனுக்கு சதய நட்சத்திரம் என்பதால் அதன் அதிபதியான இராகுவை மட்டும் ஸ்தாபிதம் செய்திருக்கிறான் என்று ஐதீகம்.

(b) இவ்வழி வெளியூர்க்காரர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. சிவகங்கை பூங்கா நுழைவுவாயிலின் வழிவே நுழைந்தால், இடதுபுறம் செல்லும் சாலை ஏ.எஸ்.ஐ ஆபீஸ் தாண்டி நேரே இரண்டாவது கோபுரத்தின் அருகில் சென்று முடியும். இங்கே வண்டிகள் கூட்டமிருக்காது. செருப்பை காரிலேயே விட்டுவிட்டு செல்லலாம். பார்க்கிங் டோக்கனும் கிடையாது. :))

(c) இந்த viewவை மறைத்துத்தான் ராட்சத விளம்பரப் பலகைகள் வைக்கப்போய் சமீபத்தில் சர்ச்சையானது. பலகைக்கான எலும்புக்கூடுகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

168. மழை, பசி, கலாம் - 2

உரை முடிந்தவுடன் மாணவர்களுடன் கலந்துரையாடல் என்பது நிகழ்ச்சி நிரல். பாஞ்சாலி சபதத்தின் சரஸ்வதி வணக்கத்திலிருந்து ஒரு மேற்கோளுடன் தனது உரையை ஆரம்பித்தார் கலாம். தமிழில் தான் முழு உரையும் இருக்குமென்று நினைத்தால், சிறிது நேரத்தில் ஆங்கிலத்துக்கு தாவிவிட்டார். பர்னாலாவின் நன்மைக்காக இருக்குமென்று நினைக்கிறேன்.

சுருக்கமாக இதோ:

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் அந்நாட்டின் பாதுகாப்பிலும் தான் அடங்கியிருக்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டு உலகத்தில் சமூகங்களின் முக்கிய மூலதனம் பணமோ, தொழிலாளர்களின் அளவோ அல்ல. மாறாக அறிவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூகத்தில் அறிவாற்றலின் சீரான வளர்ச்சி மற்றும் அதன் முறையான பயன்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு முதலிய அளவீடுகளைக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை அளக்கலாம். நம் கனவு முன்னேறிய இந்தியா. அதற்கு அடிப்படைத் தேவை அறிவுசார் சமூகம். இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், மனித வளத்துக்கும் பஞ்சமேயில்லை. நம் நாட்டிற்கென்று சில core competencies உள்ளன. நம் நாட்டின் மக்கட்தொகையை சுமையாக எண்ணக்கூடாது. ஆனால், இவை isolated pockets ஆக சிதறிக்கிடக்கின்றன. இந்தியாவின் கிராமங்களுக்கு நகரங்களைப் போன்ற வசதிகள் கிடைக்கிற போதுதான் நாம் முன்னேறிய நாடாக ஆவோம்.

புதிதாக அறிவாற்றலைப் பரப்புவதும் இவ்வளர்ச்சியினை sustain செய்வதும் முக்கியமானது. தகவல்தொடர்பு தொழில்நுட்பம், வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் knowledge creation மற்றும் knowledge deploymentஐ எவ்வளவு திறமையாக செய்கிறது என்பதைக் கொண்டுதான் ஒரு நாடு வளர்ந்த அறிவுசார் சமூகமென்ற நிலையை அடைந்துவிட்டதா என்று சோதிக்க இயலும்.

*******************
இவ்விடத்தில் teleprompterஇல் பிரச்சனையா அல்ல உரை எழுதியதிலேயே பிரச்சனையா என்று தெரியவில்லை. இரண்டு பத்திகளை இரண்டு முறை படித்தார். இரண்டாவது முறை பாதி படித்தவுடன் குழப்பத்தை உணர்ந்து, அதி வேகமாக மனப்பாடம் செய்வது போல படித்து முடித்தார் கலாம். நமது குடியரசுத்தலைவரின் தளத்திலுள்ள உரையிலும் இத்தவறு இருக்கிறது.
***************
நம் நாட்டின் அடிப்படை படிப்பனைகளாக வல்லுநர் குழுக்களால் அடையாளம் காட்டப்படுபவை:
1. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறை
2. விண்வெளி ஆராய்ச்சி
3. பயோ-டெக்னாலஜி
4. வானிலை முன்னுரைத்தல் தொழில்நுட்பம்
5. நவீன tele-medicine மற்றும் tele-education

மேற்கூறியவை எல்லாமும் த.தொ.தொழில்நுட்பத்துறையென்னும் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

நம் இந்தியா தகவல்தொடர்பு சமூகமாக மாறிக்கொண்டுவருகிறது. ஆனால் அறிவுசார் சமூகமாக மாற இத்துறையில் மட்டுமில்லாமல் பல்முனைகளிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்குச் சாதகமாக உள்ளது.

**************
பின்னர் இந்தியா 2020 பற்றிப் பேசினார். பிறகு கல்லூரியைப் பற்றிப்பேசியவர், நடுவில் நம் நாட்டின் மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி முறைகளில் lack of scientific evaluation மற்றும் standardization பற்றிச் சொன்னார். இதற்கு அகில இந்திய அளவில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வல்லுநர்களின் உதவியால் standardize செய்வதன் மூலம் இவ்வரிய முறைகளின் முழு potential-உம் மக்களைச் சென்றடைய உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல். முன்னரே யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்கப்போகிறார்கள் என்று குடியரசுத்தலைவரின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கல்லூரிக்கு சொல்லப்பட்டிருக்கிறது (இத்தகவல் அக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியது). அதனால் spontaneity குறைவுதான். சில கேள்விகளும் அதற்கான பதில்களும் பேராசிரியர் சொன்னதை உறுதிப்படுத்தின. இதில் எனக்கு நினைவில் நின்றவற்றை மட்டும் இடுகிறேன்.
____________________________________
1. உலகப் பொருளாதாரச் சந்தையை ஏன் வரவேற்கிறீர்கள்?
***
இப்படித்தான் கேட்டார். கலாம் அவர்களுக்கும் எதைக் குறித்துக் கேட்கிறார் என்று புரியவில்லை. பின்னர் WTO என்று விளக்கம் சொன்னார் கேட்டவர்.
***
பதில்: நாட்டின் முன்னேற்றத்திற்கு competitiveஆக் பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இன்றியமையாதது. அப்படி செய்யக்கூடாது என்று சொன்னால் முன்னேறிய நாடுகள் அந்நிலையில் இருக்காது. அவை அதே கொள்கையை நமக்கும் விதித்தால், நம் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும். உ.வர்த்தக சந்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், இந்தியாவுக்கு அதில் சில reservations இருக்கின்றன. இந்தியாவின் கொள்கைகளுக்கும், வளர்ச்சிக்கும் எதிரான அவற்றை நிவர்த்தி செய்யும்வரை பாரதம் விடாமல் போராடும்.

________________________________________________________________________
2. நீங்கள் பலருக்கு inspiration ஆக இருக்கின்றீர்கள். உங்களுக்கு யாரை ரோல்-மாடலாக கொண்டுள்ளீர்கள்?
பதில்: இந்தியாவில் ரோல் மாடல்களுக்கா பஞ்சம். வள்ளுவரில் தொடங்கி காந்தியடிகள் வரை பலர் இருந்திருக்கின்றனர்.

_________________________________________________________________________
3. தென்கோடி இராமேஸ்வத்தில் ஒரு மிக வறிய குடும்பத்திலிருந்து உயர்ந்து குடியரசுத்தலைவராக முடிந்ததன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?

பதில்: இதில் பெரிய ஆச்சரியமோ அதிசயமோ ரகசியமோ ஒன்றுமே இல்லை. உழைப்பு உழைப்பு உழைப்புதான். உழைப்போடுகூட நல்ல சிந்தனைகளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வளர்ச்சியடையலாம். ஒருவராலும் தடுக்க இயலாது. அய்யன் வள்ளுவன் சொன்னதுபோல "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு". எவ்வளவுக்கெவ்வளவு நல்ல உயர்ந்த எண்ணங்களை வச்சுருக்கோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு முன்னேற்றமும் உண்டாகும். இதை எப்பவும் நினைவில் வச்சுக்கணும்.

-----------------------------------------------------------------
4. நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்ததற்கும் ஜனாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பதில்: பெரிதாக ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் இரண்டுக்கும் பெரிய ஒற்றுமைதான் இருக்கிறது. அது hard work. விஞ்ஞானியா இருந்தப்பவும் செய்தேன். இப்பவும் செய்கிறேன்.

------------------------------------------------------------------
5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நல்லுறவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? இவ்விஷயத்தில் ஒரு முஸ்லீம் என்ற முறையில் உங்கள் கருத்தென்ன?
பதில்: அம்மா, இப்படித்தான் நான் நாகாலாந்து போயிருந்தப்ப ஒரு கல்லூரியில ஒரு மாணவன் கேட்டான். 'நீங்க சைண்டிஸ்டா? பிரசிடெண்டா? முஸ்லீமா? தமிழ் ஆளா?ன்னு'. நான் அவனுக்கு ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். நான் இது எதுவும் இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். அவ்வளவுதான்.

-------------------------------------------------------------------
6. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் இந்திய இளைஞர்களோ வெளிநாட்டில் இருக்கிறார்களே?
பதில்: இளைஞர்கள் மட்டுமில்லம்மா. இளைஞிகளும் தான். (**கேட்டவர் ஒரு மாணவி**) நம் நாட்டுல ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பொறியாளர்களும், ஒரு லட்சம் மருத்துவர்களும் படிச்சுட்டு வராங்க. இதுல வெளிநாட்டுக்கு போகிறவர்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது.

அதுவும் இல்லாம 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' நம்ம பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்க இல்ல. அப்படி வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்களுக்கும் இந்தியாவிற்குத்தானே பணத்தை அனுப்புகிறார்கள்? ஒரு வீடு நன்றாக இருந்தால் ஒரு தெரு நன்றாக இருக்கும். ஒரு தெரு நன்றாக இருந்தால் ஒரு ஊர் நன்றாக இருக்கும். இப்படி நாடே நன்றாக இருக்கும், இதில் தவறொன்றுமில்லை.

------------------------------------------
இன்னும் ஒரிரு கேள்விகள் கேட்டார்கள். எனக்குத்தான் மறந்துவிட்டது. :(

இப்படி நேரம் போய்க்கொண்டிருப்பது தெரியாமல் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தவரின் முன்னால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாமதமாகிவிட்டதென்று குறிப்பை வைக்கவும், இதோடு முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு பின்னர் சில உறுதிமொழிகளை தான் சொல்லி மாணவர்களைத் திரும்பச் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

உரையை முடித்து இருக்கைக்குச் சென்றவர், ஒரு புத்தக bundleஐ கல்லூரி நூலகத்திற்கு தன் அன்பளிப்பென்று தானே மைக் முன்னர் மறுபடி வந்து கூறிச்சென்றார். அதற்குப்பின்னர், கல்லூரி முதல்வர் துரிதகதியில் நன்றியுரையை வாசிக்க, அதற்குள் கார் பட்டாளம் மறுபடி அணிவகுப்பிற்கு வந்து நின்றிருந்தது. கிடுகிடுவென்று கூட்டத்தை நோக்கி கையசைத்தவாறே மேடையிலிருந்து இறங்கிப் பறந்தார் நம் குடியரசுத்தலைவர். மணி அப்போது ஆறு முப்பத்தியைந்து. இருபதுநிமிடத்தில் முடியவேண்டிய விழா ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்ததற்கு காரணம் நம் ஜனாதிபதிக்கு மாணவர்களின் மேலுள்ள அன்பும் அக்கறையும். இந்த ஒரு மணி நேரத்திற்காக ஒரு வாரகாலமாக ஏற்பாடுகளுக்காக உழைத்து, பின்னர் காலையிலிருந்து கால் கடுக்க வெய்யிலிலும் பின் மழையிலும் காத்திருந்து கலாமைப் பார்க்க மாணவர் கூட்டம் ஒழுங்குடன் காத்திருந்தது என்றால் அதற்கு அவர் மேலுள்ள அன்பு என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

வழியெங்கும் தோரணங்களும், ட்யூப் லைட்டுகளும், ஆளுயர மாலைகளும், கட் அவுட்களும், ஒருவரை ஒருவர் செயற்கையாக புகழ்ந்துகொள்ளும் முகஸ்துதியும், வாழ்க கோஷங்களும் என ஒரு அரசியல் தலைவர் கலந்து கொள்ளும் விழா என்பதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் - கல்லூரிவிழாக்களில் நடக்கும் அமளிதுமளிகள் ஒன்றுமில்லாமல், தள்ளுமுள்ளு இல்லாமல் - கல்லூரிக்கும் அதன் விழாவிற்கு சம்பந்தமேயில்லாமல் திருவிழா போலப் பார்க்கச் சென்ற என்னுள்ளும் மாறாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றார் நம் மேதகு குடியரசுத்தலைவர். முடிவில் மழையுமில்லை, பசியுமில்லை. கலாம் மட்டுமே மனதில் நின்றிருந்தார்.

வாழ்க கலாம்! இது கல்ட் இல்லை. அரசியலையும் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி நாட்டின் வளர்ச்சி மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒர் நல்ல மனிதரை வாழ்க வென்று சொல்வதில் தவறேதுமில்லையே?

----------
திரு. அப்துல் கலாம் அவர்கள் பூண்டி கல்லூரியில் ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கே

இவ்விழாவைப் பற்றிய என் முந்தைய பதிவு.

167. மழை, பசி, கலாம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இருபத்தி நான்காம் தேதி தஞ்சாவூர் அருகில் பூண்டி கிராமத்தில் உள்ள ஆ. வீரய்ய வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களும் தமிழக ஆளுநர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருவதாக இருந்தனர். மதியம் நான்கு மணிக்குத் தொடங்கி இருபது நிமிடங்கள் மட்டுமே நடக்கப்போகிறது என்று அழைப்பிதழில் இருந்தது. மதியம் இரண்டு மணிக்கே வந்துவிட வேண்டும், கைத்தொலைபேசி கூடாது, காமிராக்கள் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்று ஏகப்பட்ட நிபந்தனைகளும் கூடவே போட்டிருந்தார்கள்.

முதலில் கூட்டத்திற்கு பயந்து போகவேண்டாமென்று நினைத்துப் பின்னர், இவருக்கு ஏன் இப்படி ஒரு cult following இருக்கிறது என்று பார்த்தே விட வேண்டுமென்று எண்ணி போவது என்று முடிவெடுத்தோம். நாலரைக்கு விழா முடிந்துவிட்டால் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெனாவட்டாக மதியம் இரண்டு மணிக்கு சென்றோம். பாதுகாப்புச் சோதனைகள் என்று பெயரளவில் கூட இல்லை. ஒரே ஒரு மெட்டல் டிடெக்டர் உள்ளே சென்று வரச் சொன்னார்கள். அதுவும் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்ததால் தகுந்த முறையில் சரிபார்த்தார்களா என்றால் இல்லை. பொதுவாக எங்காவது ரொம்ப சோதனையிட்டார்கள் என்றால் நேரம் விரயமாகிறதே என்று அலுத்துக்கொள்வோம். ஆனால், இப்படி விழாக்களுக்கும் முக்கிய இடங்களுக்கும் செல்கையில் தகுந்த பாதுகாப்புச் சோதனைகள் இல்லாவிட்டால் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கிறது. :)

திறந்தவெளி அரங்கம் தான். நடுவில் ஒரு பகுதி மட்டும் அஸ்பெஸ்டாஸ் கூரை. மிச்ச இடங்களில் பந்தல் போட்டிருந்தார்கள். மேடையிலிருந்து ஒரு இருபது அடி தள்ளிதான் பார்வையாளர்கள் வரிசைகளே ஆரம்பித்தன. அதில் நான்காவது வரிசையில் இடம் கிடைத்தது. அப்படியும் இடப்பற்றாக்குறையால் பலர் பந்தலுக்கு வெளியே. உள்ளே சென்று அமர்ந்தவுடன் பிடித்துக்கொண்ட மழை விட்டு விட்டு பெய்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அரிமா சங்கத்தின் உபயத்தில் எல்லோருக்கும் கலாமின் பொன்மொழிகள் என்று ஒரு தாளில் அச்சிட்டுத்தந்தார்கள் கூடவே மினி தினமலரும். மழை நின்றாலும் பந்தலின் உள்ளே வழிந்த சகதிநீர் மூலம் அமர்ந்திருந்த எல்லோருக்கும் தலைவழியே drips ஏறிக்கொண்டிருந்தது. வெளியில் நின்றிருந்தவர்கள் குளித்தே முடித்திருந்தார்கள். கலாமின் அறிவுரைகள் வாழ்க்கையில் உதவியதோ இல்லையோ மழையிலிருந்து பலரின் தலையைக்காக்க உதவியது.

ஒரு மணி நேரம் தாமதமாக ஐந்தரை மணி சுமாருக்குத்தான் குடியரசுத்தலைவர் வருவாரென்று மூணரை மணிக்கு அறிவித்த உடன் திடிரென்று பசிக்க ஆரம்பித்தது. எங்கும் எழுந்து போக முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்களாவது பரவாயில்லை. காலை பதினோரு மணியிலிருந்தே காத்திருந்த மாணவர்கள் கூட்டம் பொறுமையிழக்க ஆரம்பித்தது. அதுகூட எப்போதாவது ஒரு விசில் சத்தம், ஒரு கூச்சல் என்ற அளவிலே தான். அதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விழாவுக்கு டி. ஜெவாக இருந்தவர்கள் ஒலிபெருக்கியில் அவ்வப்போது 'நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்' போன்ற தத்துவப் பாடல்களை ஒலிபரப்பி கிளுகிளுப்பூட்டினார்கள். மொத்தத்தில் கல்லூரி மாணவர்கள் என்றே சொல்ல முடியாத அளவில் அமைதியாக காத்திருந்தார்கள். நடுநடுவில் போலீஸ் உயரதிகாரிகளும் மற்ற முக்கியஸ்தர்களும் கார்களில் வர, கலாம் தான் வந்துவிட்டார் என்று கூட்டத்தில் சலசலப்பு எழுந்து கொண்டிருந்தது.

தமிழ்ப்பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி, சண்முகா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் என்று பல இடங்களில் விழாக்களை முடித்து சரியாக ஐந்தரை மணிக்கு சர் சர்ரென்று உள்ளே வரிசையாக நான்கைந்து அம்பாசிடர்கள், ஒரு வெள்ளை மெர்சிடிஸ், இன்னோவா, ஐகான் அப்புறம் மறுபடி சில அம்பாசிடர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து நின்றவுடன் கறுப்பு உடையணிந்த சிறப்புக் பாதுகாப்புப் படையினர் மெர்சிடிஸின் முன் சீட்டிலிந்து வேகமாக இறங்கவே கலாமும், பர்னாலாவும் அதிலிருந்து இறங்குவார்கள் என்று கூட்டமே பார்க்க, முன்னால் இருந்த அம்பாசிடரிலிருந்து பளிச்சென்று இறங்கினார் ஜனாதிபதி. இறங்கினவர் வரவேற்பை ஏற்று ஓட்டமும் நடையுமாக கையசைத்துக்கொண்டே மேடைக்குச் சென்றார். அப்படி ஒரு உற்சாகம். இதுவரையில் மழையில் நின்று, உணவில்லாமல் பசியில் வாடிக்கொண்டிருந்த கூட்டம் அத்தனையும் மறந்து வரவேற்புக் கோஷங்கள், கைதட்டல் என்று ஆரவாரத்தில் அரசியலும் இல்லாத சினிமாவும் சாராத ஒரு தலைவருக்காக இத்தனை நேரம் காத்திருந்ததை அனைவரும், நாங்கள் உட்பட மறந்தே போனோம். தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிந்து தாளாளர் ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் மாணவர்கள் கூட்டம் ஜனாதிபதி பேசுவதைக் கேட்கவே ஆவலுடன் இருப்பதை உணர்ந்து சுருக்கமான இனிய வரவேற்புரை அளித்து அமர்ந்தார். பின்னர் வந்த மேதகு தமிழக ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டு சம்பிரதாயப்படி 'னன்றி வனாக்கம்' சொல்லி கைத்தட்டல் பெற்று அமர்ந்தார். அவர் சொல்லியது எதுவும் மாணவர் காதில் விழுந்ததோ இல்லையோ, என் காதில் விழவில்லை. கவனிக்கவில்லை. இந்தியாவே போற்றும் கலாம் அவர்கள் எப்போது பேசப்போகிறார் என்றுதான் என்னைப்போலவே எல்லோரும் காத்திருந்தனர்.

உதவியாளர் ஒரு LCD திரையை மைக் அருகே கொண்டு வந்து பவ்யமாக வைக்க, நம் குடியரசுத் தலைவர் பேச எழுந்தார். கரகோஷம் உண்மையாகவே காதைக் கிழித்தது.

166. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - என் எண்ணங்கள்

அரசாங்கள் மிகவும் வலிமை பெற்றிருக்கும். இல்லை மோனோபாலியாக இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் அரசை டம்மியாக வைத்திருக்கும். இதில் மட்டும் இப்போதைக்கும் வருங்காலத்திற்கும் மாற்றம் இல்லையென்று நினைக்கிறேன்.

பெண் பார்க்கும் படலங்கள் அற்றுப் போகும். அரசே மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் எட்டுப்பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தி வைக்கும். திருமணம் என்ற ஒன்று மாற வாய்ப்புகள் குறைவு. மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கும் என்பது என் ஊகம். electronic transfer மாதிரி அதற்கும் Bluetooth / WiFi (பேரு கூட பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள் ;) ) போல ஏதாவது வந்திருக்கும். இது ஏதோ ஒரு ஆங்கில B-Movie யில் பார்த்த நினைவு. இதனால், கணினிபோன்ற வெளி உபகரணங்களில் (external devices) ஒரு conscious being-ஐ virtual ஆக வளர்க்கக்கூடிய/இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும். ஒரு பெரிய விஞ்ஞானியோ, அறிவாளியோ 'இறக்க' வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். இறவாமல் இருக்க வரம் பெற்ற அசுரர்கள் போல வலம் வரலாம்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்கிற மூன்றும் உயிர் என்பதில்லாமல் அடிப்படையாக மாறமுடியும் என்று நினைக்கிறேன். வைரஸ்கள் போல transfers (ட்ரான்ஸ்பர் என்றால் உடனே கூட வருவது infection-உம் தான். எ. கா: பேய் வகையறா?) of consciousness சாத்தியமாகுமோ? ஏதுடா ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் யோசின்னா, நமக்கு ஆதிகாலத்து கூடுவிட்டு கூடுபாயுற டெக்னிக்தான் நினைவுக்கு வருது. :))

ஆனால் இந்த டிரான்ஸ்பர்கள் சாத்தியமானால், omnipresence அல்லது குறைந்தபட்சம் multi tasking; multipresence (intraconscious மற்றும் interconscious network களில் தற்போதைய சாட் ப்ரோக்ராம்கள் போல ) ஆவது கிடைக்குமா என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதாவது திருவான்மீயூர் பீச்சில் காதலியைக் கொஞ்சிக்கொண்டே, மொனாக்கோ காஸினோவில் தாயம் உருட்டிக்கொண்டே, கொல்கத்தாவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, லண்டனில் ஆபீஸில் காபி சாப்பிட்டுக்கொண்டே ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் புல்வெளியில் படுத்து சுகமாக தூங்கிக்கொண்டிருப்பது. இப்படி பல இடங்களில் physical presence தற்காலத்திய விஞ்ஞானத்தின் படி சாத்தியமே இல்லை. live feedகள் மூலம் நமக்கு வந்து, அதை நம் மூளை ப்ராஸஸ் செய்வதால் வரும் ரியாக்ஷன்களை வைத்து; திரும்பவும் பீட் வரும் இடத்தில் presence simulation? இப்படி பல இடங்களில் பலவகை பீட்கள் வரும் பட்சத்தில் நம் மனித மூளை தாக்குப்பிடிக்குமா என்பது வேறு சங்கதி.

இப்படி ட்ரான்ஸ்பர் சாத்தியமாவது போலவே knowledge transfer உம் சாத்தியமாகும். அந்த ட்ரான்ஸ்பர் டிஜிட்டல் முறை போல இன்ஸ்டண்டாக நடக்கக்கூடியது.
எவ்வித வேலைகளுக்கு ஆட்கள் தேவையோ அதற்கு தக்கவாறு அரசே சீனியாரிட்டி முறையிலும் மரபணுக்கள் முறையிலும் படிப்பை அளிக்கும். இடத்தைவிட்டு நகராமல் வர்ச்சுவலாக ஆபீஸ் முதல் காய்கறி கடை வரை சென்று பார்த்து வேலை செய்து வர முடியும் (பாத்ரூம் விஷயங்களும் இதில் முடியுமா என்று தெரியவில்லை :) ) செய்வதன் மூலம், விமானங்கள் போன்றவை பெரும்பாலும் இராணுவ பயன்பாட்டிற்கே பயன்படும். இடத்தைவிட்டு நகரவேண்டிய தேவை குறைவதாலால் மோட்டார் வாகனங்கள் குறைந்து படிப்படியாக இயற்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பிக்கும்.

மடி மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் பயோ-பவரில், அதாவது பயன்படுத்துகிற மனிதனின் ஆற்றலிலேயே இயங்கக்கூடிய வகையில் இருக்கும். எரிபொருள் தட்டுப்பாடு என்பது இருக்காது என்பது வராது என் ஊகம். அப்படியே வந்தாலும் அது மனித சமூதாய முன்னேற்றத்தை எவ்விதத்திலும் நிரந்தரமாக பாதிக்கமுடியாது. மாற்றுமுறைகள் கண்டிப்பாக உருவாக்கப்படும். அதுவும் தவிர, இப்போதைய நிலையை விட விரயம் குறையும்.

கலிபோர்னியாவில் கொசு கடித்தால் வத்தலகுண்டில் ஏன் சுனாமி அடிக்கிறது என்று இன்று போலவே விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் இயக்கம், ஆக்கம் பற்றி புரியாமல் தவிப்பர். இயந்திர கதியான வாழ்க்கை வெறுத்து பூவுலகை நீத்து மேற்சொன்னபடி 'ஆவி'யுலகில் சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகும். மதங்களும் அவற்றின் எழுத்துகளும் infallible அல்ல என்று ஆத்திகர்களுக்கும் விஞ்ஞானத்தின் குறைபாடுகள் நாத்திகர்களுக்கும் புரிய வரும். இதனால் சண்டைகள் குறையும். சண்டை ஏற்பட்டால் ஏற்படப் போகும் பேரழிவிலிருந்து தற்காத்துக்கொள்ளவாவது மனித இனம் ஒன்றுபடும்.

கொஞ்சம் pessimistic ஆக யோசித்தால் மேட்ரிக்ஸ் படங்களைப் போல ஆட்டுமந்தைகள் போலவே மனிதர்களை அரசுகள் வளர்க்கும். (இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம் என்று கேட்கக்கூடாது). இப்படி ஆட்டுமந்தைத்தனம் அதிகமாகி வாழ்க்கையே வெற்றாய் போவதால் மனித மனம் இறைவனை மேலும் தேட ஆரம்பிக்கும். ஆனால் கொஞ்சம் sophisticated ஆக 'அஹம் பிரஹ்மஸ்மி' போன்ற (போன்ற தான் - இது பழையது என்று எனக்கும் தெரியும் :)) தத்துவங்கள் நிலைபெறும்.

quantum physics கொஞ்சம் கொஞ்சம் கோடிட்டு காண்பிக்கிறது. பிரபஞ்சமும் அதனுள் இருக்கும் பலகோடி கோள்களும், நட்சத்திரங்களும், அதில் நம் துளியளவு பூமியும் அதனுள் எல்லாமுமே என உயிர்கள் உட்பட big bangஇற்கு முன்னர் வரை ஒரு கடுகளவு (கடுகளவு என்பது கற்பனைக் கூட செய்யமுடியாத அளவு மிக மிகச் சிறிய என்று கொள்க) இடத்திற்கும் குறைந்த இடத்தில் அடைந்து இருந்தவை தான்.

ஒரு ஆத்மா எப்போதும் potential ஆக இப்பிரபஞ்சத்தினுள் இருந்து ஒரு பிறவியென்று உயிர் பெறுகிறது. இப்படி உடலில்லாமல் consciousness (ஆத்மா) இருக்க முடியுமா என்கிற் கேள்விக்கு பதிலாய் பிரபஞ்சத்தின் நீட்சியான ஆத்மா கண்டிப்பாக ஒரு உடலில்லாமல் இருக்க முடியும் என்றூ தோன்றுகிறது. அப்படியானால் பிரபஞ்சத்திற்கென்று ஒரு அந்தராத்மா இருக்கிறதா என்ற இடியாப்பச் சிக்கல் கேள்வியும் வந்து தொலைக்கிறது.

இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? :))

அப்பாடி, இத எழுதறதுக்குள்ளேயே மண்டை கிர்கிருத்து போயிடுச்சி. இனிமே எதுனாச்சும் தோணினா அப்புறமா எழுதறேன்.

முந்தைய பதிவு

165. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில்...

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதே நம் தலையாய பிரச்சனையாய் இருக்கையில், இது கொஞ்சம் bigger picture கேள்வி. உண்மையில் பத்து ஆண்டுகளோ, நூறு ஆண்டுகளோ பூமியின் வயதுடன் ஒப்பிடுகையில் அவை ஒரு நொடிக்கூட கிடையாது. ஆயிரமாண்டுகள் என்பது கொஞ்சம் பெரிய அளவாக இருக்கிறது. நம் நவீன வரலாற்றை புரட்டினாலே ஆயிரமாண்டுகளில் எத்தனையோ சமூக, பூகோள, தொழில்நுட்ப மாற்றங்களை கண்டுள்ளோம். அப்படி,

இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - அதாவது செப்டம்பர் 7, 3006-ல் நாம் பூமியில் திடுமென வந்து குதித்தால் தென்படும்

1. பூகோள ரீதியான மாற்றங்கள்

2. மனித இனத்தில் நிகழப்போகும் biological, behavioural மாற்றங்கள்

3. நாடுகளுக்கு இடையிலோ, சமூக அளவிலோ நடந்திருக்கக்கூடியவை

4. தொழில்நுட்பத்தால் சாத்தியப்படும்

என்று நீங்கள் நினைப்பவற்றை பதிவிடலாமே. இந்தியா, தமிழ்நாடு என்று குறிப்பிட்டு எழுதினாலும் பரவாயில்லை.

எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே இது. பெரிய அளவில் டெக்னிக்கல் திறனாய்வெல்லாம் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி அறிவியல் சார்ந்து எழுதுபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

இதை இங்கே பின்னூட்டமாய் இடாமல், தங்கள் பதிவில் கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது bullets போட்டு பாயிண்ட்களாகவோ எழுதலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழும் என்று நீங்கள் எண்ணினால், அது ஏன் நடக்குமென்று நினைக்கிறீர்கள் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும். இதற்கும் லாஜிக், அறிவியல் எல்லாம் அப்ளை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வெறுமனே கற்பனை செய்தாலும் பரவாயில்லை. அதற்குரிய சாத்தியங்களை விவரம் தெரிந்தோர் விளக்கலாம்.

உங்கள் பதிவில் பதித்துவிட்டு, இங்கே பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்கலாம் (நிறைய வலைப்பதிவுகள் இருப்பதால் ஒரே இடத்தில் சுட்டிகளை சேகரிக்கவே இது. பின்னூட்டக் கயமைத்தனம் இல்லை. இல்லவே இல்லை. :)) )
நிறைய பதிவர்கள் எழுதினால் புதிய தகவல்கள் கண்டிப்பாக தெரியவரும்.

இப்பதிவு போட்ட என்னுடைய கருத்தைக் கேட்கிறீர்களா? தோன்றாமல் தானே உங்களுக்கு கொக்கி போடுகிறேன். விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கலாம். நானும் சீக்கிரம் பதிக்கிறேன் இதுபற்றி.

இவ்விளையாட்டில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யலாமெனில் தாராளமாக செய்யலாம்.

தானாகவே பதிவர்கள் முனவராத பட்சத்தில், நாலுவிளையாட்டு போல 'டேக்' செய்துவிட்டு மற்றவரை மிரட்டிப்போடச் சொல்லலாம். :))

tag செய்வதுதான் இப்படிப்பட்ட பதிவுகளுக்கு சிறந்த வழியென்பதால் இதோ நான் அழைக்கும் ஐந்து பதிவர்கள். ஏன் ஐந்து? நாலு ஆச்சு ஆறாச்சு. அதான் ஐந்து. கூப்பிட்டவர்கள் மட்டுந்தான் போடவேண்டுமென்றில்லை. இதை எல்லோருக்குமான அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்கள் பூவிலேயே பதிவைப் போட்டுவிட்டு சுட்டிமட்டும் கொடுங்கள்.

1) செல்வன்
2) பாஸ்டன் பாலா
3) மோகன் தாஸ்
4) பொன்ஸ்
5) வெளிகண்டநாதர்

விநாயக சதுர்த்திக்கு

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குளிக்காமல் கொள்ளாமல் சந்துபொந்துகளுக்குள் நுழைந்தால் அழகான பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றுள் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து, கூடவே காட்டுப்பூக்கள், அருகம்புற்கட்டு, எறுக்கம்பூ மாலை, வாழைக்கன்று, தோரணங்கள் எல்லாம் வாங்கி வீட்டிற்குவந்து குளித்து பூஜை செய்து அவருக்கு வெறுமனே காட்டிவிட்டு அப்பம், தேங்காய் எள் மற்றும் உப்பு கொழுக்கட்டைகள், சுண்டல் எல்லாவற்றையும் உள்ளே தள்ளிவிட்டு இதோ இப்ப எடுத்த பிரெஷ் படங்கள் இரண்டு.



  

  

164. கோபுர தரிசனம்..


1. செந்திலாண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர்

  



2. பெருவுடையார் திருக்கோயில், தஞ்சாவூர் - அவ்வளவு சரியாக வரவில்லை

  



3. கூடலழகர் திருக்கோயில், மதுரை

  




4. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை

  




5. வாலீசுவரர் திருக்கோயில், வாலிகண்டபுரம்

  



6. ஜெயம்கொண்ட சோளீசுவரர் திருக்கோயில், நேமம் (காரைக்குடி)

  


7. வடபத்ரசாயி திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

  

ரஷ்யா-அமீரகம் கூட்டுச்சதி!

லெபனான் - இஸ்ரேல் பிரச்சனை, பிரிட்டன் விமான நிலையப் பீதி, சுதந்திர தின தடபுடல்கள் எனப்பல்வேறு விஷயங்கள் மக்களின் மனதை திசைத் திருப்பிக்கொண்டிருந்த பதினான்காம் தேதி பின்மாலை நேரம் மர்மமான முறையில் முற்றிலும் ரகசியமாக கும்மிருட்டில் ரஷ்ய மற்றும் அமீரகத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தனியே சதித்திட்டம் தீட்டப்போவதாக ஊகங்கள் சில நாட்களாக வந்தவண்ணம் இருந்தன. அவற்றை பொய்யென மறுத்துவந்த இருதரப்பினரும் சந்தித்து பேசியேவிட்டனர் என்று இப்போது கிட்டத்தட்ட ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. சரி, போதும் பில்டப்.

தன் குடும்பத்துடன் எங்க ஏரியா கோவில்களை ரவுண்ட் வந்துகொண்டிருந்த அரசியல் மற்றும் இணைய உலக வி.ஐ.பி ஒருவரை ஒருமணி நேரம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டேட் கேட்டிருந்தபோது, ஆடிட் வரப்போகும் மேலதிகாரி மாதிரி 12,13,14 தேதிகளில் ஏதோ ஒருநாள் தஞ்சை வருவேன் - சந்திக்கலாம் என்று முன்னரே தொலைபேசியிருந்தார். சொன்னவரைக் காணவில்லையே என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு போன் செய்து இன்னும் அரைமணியில் கெஸ்ட் ஹவுஸிற்கு வரவும் என்று சொன்னார். இந்தியனாச்சே, பதினைந்து நிமிடம் லேட்டாக சென்று ஐந்துநிமிடம் காத்திருந்தேன். அதற்குள் அவரின் உறவினர் ஒருவர் வந்து ஐயா இப்போது வந்துவிடுவார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயா ஏதோ முக்கியமான வேலையில் மூழ்கியிருக்கிறார் என்று எண்ணி நின்றிருந்தேன். அந்த ஏரியாவில் அப்போதுதான் புதிதாய்த் திறந்திருந்த ஒரு ரெஸ்டாரண்டை ஒரு வழிசெய்துவிட்டு வெற்றிச் சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தார் எனதருமை அண்ணன், உலகத் தனிப்பெரும் கட்சியான ப.ம.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் பெனாத்தலார் சுரேஷ்.

வேட்டி, டி-ஷர்ட் என்று படு காஷுவலாக இருந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, என்னைப்பார்த்து சிறிது நேரம் போட்டோவில் இருக்கிற மாதிரியே அச்சு அசலாய் இருக்கீறீர்களே என்று ஷாக்காகி நின்று விட்டார். தெளிவடைந்த பின் கெஸ்ட் ஹவுஸ் வாசலிலேயே பேச ஆரம்பித்தாகிவிட்டது. வழக்கமான வெட்டி சங்கதிகளோடு ஆரம்பித்த பேச்சு சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், லா.ச.ரா, சுரதா மறைவு என்றெல்லாம் திசைதிரும்பாமல் வெட்டியாகவே தொடர்ந்தது.

மாலையே பெரியகோவில் பார்க்கவருவதாய் வைத்திருந்த திட்டம் நிறைவேறாமல் தாமதமாகிப்போனதைப் பற்றியும், வரும் வழியெல்லாம் கர்நாடகா தராத காவேரியில் அடையாளப் போராட்டமாக சில பலமணி நேரம், இறங்கிக்குளித்ததையும் சொன்னார். வெட்டிப்பேச்சு வலைப்பதிவுகள் பற்றித் திரும்பாமல் போகுமா? முன்னர் மாதிரி பதிவுகள் இடமுடிவதில்லையென்றும் பின்னூட்டங்கள் போட முடிவதில்லையென்றும் பரஸ்பர ஆதங்கத்திற்கு பிறகு கணினியிலேயே உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறேன் என்று கட்டுபவர்கள்தான் நிரந்தரமாக வலைப்பதிய முடியும் என்ற கசப்பான உண்மை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பின்னூட்ட மட்டுறுத்தல் இருக்கும் காலத்திலேயும் வேலை வெட்டியில்லாமல் சுகமாய் அமர்ந்து கொத்தனார் அறுநூறு எழுநூறு என்று புகுந்து விளையாடுவதே மேற்கூறிய தீர்மானத்திற்கு ஆதாரம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அஞ்சுக்கும் பத்துக்கும் நாம் அலைகையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்தும் விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்படும் என்றும் முடிவு செய்துள்ளோம். பேச்சு இப்படிப்போய் கொண்டிருக்கையில் பெனாத்தலாரை பின்னிருந்து இயக்கும் தங்கமணி(இவர் அவரில்லை! -தருமியின் சந்தேகம் தீர்க்க இந்த குறிப்பு) வரவே, அதுவரை ரகளை செய்துவந்த கொ.ப.சே பவ்யமாக எழுந்து நின்று என்னை அறிமுகப்படுத்தினார். மூன்றெழுத்தில் இவரோட மூச்சிருக்கும் என்றவுடன் அவர்களுக்கும் என்னை நினைவிற்கு வந்தது. மிகவும் லேட்டாகிவிட்டதால் பெனாத்தலாரின் அரசியல் வாரிசுகளைக் கவனிக்க சில நிமிடங்களில் உள்ளே சென்றுவிட்டார். 'அண்ணி' உள்ளே சென்றவுடன் மறுபடியும் புதுப்பொலிவு பெற்று துள்ளியெழுந்த பெனாத்தலார் சிறிது 'வாக்'கலாமே என்றார்.

நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று நான் தான் ஆனந்த் (எ) சின்னவனாய் இருக்கலாமோ என்று புதிதாய் ஒன்றை பற்றவைத்தார் பெனாத்தலார். அந்தக் கோணத்தில் யோசித்தால் சில கணக்குகள் சரியாகவும் வந்தது. இந்த சந்தேகமே சில அன்பான அர்ச்சனைகளுக்கு காரணமாய் இருக்கலாமோ என்றும் கேள்வி தோன்றியது. ஆனந்த் மன்னிக்க.

அடுத்த பார்டில் - அமெரிக்கா, மத்தியகிழக்கு, தென்கிழக்காசிய மற்றும் இந்திய பதிவர்/பதிவுகள்/தமிழ்மண ரவுண்டப்.

டிஸ்கி போடுவதில்லையென்ற புதிய கொள்கையினால் எதற்கு இது ஒரு தொடர்கதை என்று கேட்பவர்கள் அவர்களுக்குள்ளாகவே கேட்டு திருப்தியடைந்து கொள்ளலாம்.

161. படம் காட்டுகிறேன்

படம் காட்டி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், சில படங்கள்.









தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரம் - நம்மூரு வண்டி டிவிஎஸ் XL லேயும் சைக்கிள்களிலும் எடுத்துச் செல்லப்படும் பொருட்களே ஒரு தனி கேட்டகரி. தனியா ஒரு பதிவு போடணும். :)




திங்களூர் சந்திரன் கோயில் போகும் வழியில் கிராமத்து குளமும் ஆலமரமும்.


  

  


இந்த வயலும் அதே திங்களூர் ரோடுதான். திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ளது.

திங்களூர் தாண்டி வயிரவன்கோயில் போகும் சாலை.


  
பள்ளி அக்ரகாரம்.



  
தென்பெரம்பூர் ஷட்டர்ஸ். வெண்ணாறு, வெட்டாறு, புதாறு பிரியும் இடம்.

  





  
பழைய குற்றாலம் செல்லும் சாலையில் எடுத்தது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்