தமிழ்நாட்டை விட்டு மாஸ்கோவுக்கு வந்தபுதிதில் கொஞ்சம் வியந்துதான் போனேன். இங்குள்ள கட்டிடங்களையும், அவற்றின் அழகையும் பார்த்துமட்டும் அல்ல. Piracy என்னும் பேய் செய்யும் அட்டகாசங்களை பார்த்து. நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டு ப்ளாட்-ஃபாரத்துல விற்கப்படும் கண்ணாடி, சீப்பு, சோப்பு டப்பாக்களைப்போல மைக்ரோசாஃப்டும், மாக்ரோமீடியாவும், அடோபியும் கூறுகட்டி விற்கப்பட்டதை பார்த்து. இது தவிர, உலகத்துல யாரெல்லாம் மென்பொருட்கள் பண்றாங்களோ அவங்களோட படைப்புகளையும் தெருவுக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்.
மென்பொருள்-னு நான் சொல்றது பீ.ஸி-விளையாட்டுக்களில் தொடங்கி அன்றாடம் நாம் பயன்படுத்தும் தளங்கள் (OS), மேசை பிரசுர செயலிகள் (Desktop Publishing), தினசரி உபயோகிக்கும் Media Players/Converters, CD-Writing, Anti-Virus, அறிவியல் மென்பொருள், உலக இசை படைப்புகள் (MP3 வடிவில்), இப்படி ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாமே கிடைக்கும். ஒரு மென் தட்டை (CD)
எடுத்துக்கொண்டால், அதனுடைய 650 MBக்குள் எத்தனை செயலிகளை நிரப்பமுடியுமோ அத்தனையும் நிரப்பி ஒரு கூட்டாஞ்சோறாக கொடுப்பார்கள். இதில் பல வகை உள்ளது. ஒன்று, ஒரு நிறுவனத்தின் பொருட்களை மட்டும் நிரப்புவது, எ.கா-வாக, மாக்ரோமீடியா என்று எடுத்துக்கொண்டால், அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கியது முதல் நேற்று வெளியிட்ட மென்பொருள் வரை அனைத்தையும் அதில் நிரப்பிவிடுவார்கள். இப்படி நிறுவனங்களுடைய செயலிகளை மொத்தமாக பிரித்துவிடுவது. இரண்டாவது, செயலிகளை ஜாதிவாரியா பிரித்து வெளியிடுவது. எ.கா-உலகின் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் மேசை பிரசுர செயலிகளினுள் மிகச்சிறந்தவையை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு தட்டில் நிரப்பிவிடுவது. இப்படி ஒன்ரிரண்டு தட்டுக்களை வாங்கிக்கொண்டுவந்து வீட்டில் உட்கார்ந்து அவைகளின் உண்மைவிலைகளை இணையதளங்களில் தேடிபார்த்தால், ஒரு மென்பொருள் தட்டின் விலை 1000 அல்லது 1500 டாலர்களைத்தாண்டும்.
படத்தில் காண்பது 'Multimedia' என்ற பிரிவில் வெளிவந்துள்ள ஒரு தட்டின் உறை (டிவிடி-யில்)
பல இடங்களில், மிகவும் விலை உயர்ந்த SAP, Oracle, Avid போன்ற நிறுவனங்களின் செயலிகளும் கிடைக்கும். இவைகளெல்லாம், பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் செயலிகள். ஒருமுறை வீடியோ படத்தொகுப்புக்கென ஒரு தட்டினை வாங்கினேன். அதில் Avid Newscutter XP என்ற ஒரு செயலி இருந்தது. அதனைப் பற்றி இணையத்தில் தேடியதில், அது உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களும், ஹாலிவுட் ஸ்டுடியோக்களும் பயன்படுத்தும் செயலி என்று அறிந்தேன். அதன் விலை? அதிகமில்லை ஜென்டில்மென், பிச்சைக்காசு 7000 டாலர்கள்தான். இத்தனைக்கும் அந்த செயலி, வாங்கிய தட்டிலிருந்த பல செயலிகளில் ஒன்றுதான். அதைத்தவிர, அடோபி, பின்னகிள், இப்படி பல நிறுவனங்களின் செயலிகளும் அதில் அடக்கம்.
மென்பொருள் தட்டு உறையின் பின்புறம்
இந்த திருட்டு தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்ப்பு இங்கே. இதற்கு பல காரணங்கள் உள்ளது. விலையில் இவை மிகக்குறைவு என்பது ஒரு காரணம். மாஸ்கோவிலோ, சான்க்ட் பீட்டர்புர்கிலோ நான் பார்த்தவரை அனைவருமே ஒரே விலைதான். அதாவது, ஃப்லாட் ரேட்டாக, ஒரு தட்டு 70 ரூபிள்கள் (Roubles). இது டாலர் கணக்கில் 2.4$ வரும். கிடைக்கும் பொருளின் தரத்தோடு ஒப்பிடும்போது, இது சில்லரைக் காசுதான். ஆனால், விலை குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு தட்டும், அதை அவர்கள் செய்திருக்கும் தரமும் வியக்கவைக்கும். முதலில், வெளிப்புரத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு சிடி-க்கும் கண்டிப்பாக ஒரு சிறப்பான Plastic Case கிடைக்கும். அந்த உறையின் முகப்பில், உள்ளிருக்கும் மென்பொருள்களில் சிறந்தவைகளை குறிப்பிட்டு அவற்றுக்கு தொடர்புடைய அழகான படம் ஒன்று பின்னணியில் இருக்கும். மேலும் பின்புறத்தில், உள்ளடங்கிய மென் பொருட்கள் ஒவ்வொன்றின் விபரம் அழகாக அச்சிடப்பட்டு காணலாம். பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு அசல் நிறுவனமே வெளியிடும் பொருளைப்போல இருக்கும்.
வெளியில் அப்படி என்றால், தட்டின் உள்ளேயும் ஒரு நேர்த்தியை காணலாம். தட்டை கனிணியுள் செலுத்தியவுடன் Auto-run ஆகும் பட்சத்தில், Flash அல்லது HTMLலில் செய்யப்பட்ட ஒரு பக்கம் தொடங்கிவிடும். உள்ளிருக்கும் செயலிகளைப்பற்றி அறிந்துகொள்ளவும், பிடித்தவற்றை இறக்கிக்கொள்ளவும் வசதியாக சுட்டிகளும், விவரங்களும் அதில் இருக்கும். மேலும், தேவைப்படும் செயலிகளுக்கு உறிய Crack-களும் இருக்கும். இதுவரை நான் வாங்கியுள்ள தட்டுகளில் ஒன்றுகூட மாறி இருந்ததில்லை. அனைத்திலும் ஒரு நேர்த்தி, அழகு. உலகின் பல இடங்களில் இப்படிப்பட்ட கொள்ளை செய்யப்பட்ட மென்பொருள் தட்டுக்கள் கிடைத்தாலும், இங்கு கிடைக்கும் தட்டுக்கள் போல நான் கண்டதில்லை.
'Pirates' பீ.ஸி-விளையாட்டின் தட்டு மற்றும் உறை
ரஷ்ய அரசியல் சட்டத்தில் இந்த திருட்டுக்களை ஒழிக்க பலமான விதிமுறைகள் இன்னமும் வரவில்லை என்பதே இவர்கள் இன்று தழைப்பதற்கு காரணம். சில வாரங்களுக்கு முன் AllOfMP3.com என்ற ரஷ்ய இணையதளத்தை, International Federation of the Phonographic Industry (IFPI)-இன் உந்துதலின் பேரில் கோர்ட்டுக்கு இழுத்தது ரஷ்ய போலிஸ். காரணம், அவர்களது தளத்தில் உலகின் பல மூலைகளில் இருந்தும் வெளியாக இசை ஆல்பங்களை போதிய பதிப்புரிமை இல்லாமல் MP3 வடிவில் விற்கிறார்கள் என்பதே. அதுவும் எப்படி, ஒரு பாட்டுக்கு இவ்வளவு விலை என்றில்லை. 5$-க்கு 500 பாடல்கள் என்ற கணக்கில். எதிர்பார்த்தார் போல், வெளிநாடுகளிலிருந்தும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இணையதளத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துவிட்டார்கள். எப்படி? ரஷ்ய சட்டத்தில் எந்த ஒரு படைப்பை விற்கவும் Copyright மிக அவசியம் என்றுதான் உள்ளது. ஆனால், online distribution பற்றி ஒரு வரி கூட இல்லை. இவர்களது சட்டம், அனுமதி மீறியதாக சொல்லப்படும் பொருள் Material Goods அதாவது Physical copiesஆக இருக்கவேண்டும். இந்த இணையதளமோ, பாடல்களை MP3 வடிவில்தானே(electronic-ஆக) விற்கிறது. ஆக, அவர்கள் மீது கிரிமினல் குற்றத்தை பாய்ச்ச முடியாது என்று கூறிவிட்டார்கள். இதன் மூலம், ரஷ்ய சட்டத்தில் பதிப்புரிமைக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று புரியும்.
ஆனால், சென்ற ஆண்டுவரை நகரத்தின் எல்லா இடங்களிலும் நடைபாதைகளில் விற்றுவந்தவர்களை, மாஸ்கோ மாநகராட்சியே ஒரு பெரிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்து அதற்குள் கொண்டுசென்றுவிட்டார்கள். விற்பனையை தடை செய்தபாடில்லை. இந்தியாவில் NASSCOM போன்ற அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக அசல் செயலிகளைத்தான் வாங்க வேண்டும் என்று கடிவாளம் போடுகிறார்கள். ஆனால், இங்கு அப்படியும் இல்லை. பல அலுவலகங்களிலேயே திருட்டு செயலிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
சான் பென் நடித்த 21 Grams/Mystic River - இரண்டு படங்களை உள்ளடக்கிய டிவிடி
இன்று, கனிணியைத்தாண்டி, இந்த தொழில் DVDகளுக்கும் வந்துவிட்டது. புதிய ஹாலிவுட் படத்தின் DVD வெறும் 80 ரூபிள்தான். இவைகளும் மென்பொருள் தட்டுக்களைப்போல, ஒரு தட்டில் இரண்டு படங்கள் (நடிகர் அல்லது genre வகையில் பிரித்து) அதே 80 ரூபிளுக்கு, சுத்தமான அசல் டால்பி/டீ.டி.எஸ் 5.1 சப்தங்களோடு கிடைக்கின்றன. அப்படி டீ.டி.எஸ் லாம் உங்களுக்கு முக்கியமில்லையெனில் ஒரு தகடில் பத்துபடங்கள் வரை ஸ்டீரியோ ஒலியுடன் வைத்துள்ளார்கள். முக்கியமாக, சான்க்ட் பீட்டர்புர்க் மாநகரத்தில், DVD கடைகள் ஏராளம். இந்த விஷயங்களுக்கிடையில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த திருட்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுடைய பெயரையோ, விலாசத்தையோ, வெளியிட சிறிதுகூட யோசிப்பதில்லை. ஒவ்வொரு தட்டிலும், அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், அதன் முழு விலாசத்துடன் பின் பக்கத்தில் இருக்கும். படங்களை உற்று கவணியுங்கள், ஒவ்வொன்றிலும், ஏதோ அசல் தயாரிப்பு போல Bar-Code கூட இருப்பதைக் காணலாம். சிலர் ஒருபடி மேலே போய், அவர்களது வெளியிடும், வெளியிடப்போகும் தயாரிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இணையதளங்களையே நடத்திவருகிறார்கள். 'செய்வதை திருந்தச் செய்' என்ற முதுமொழியை தவறாமல் பின்பற்றுபவர்கள் இவர்கள்.
shop505 - சான்க்ட் பீட்டர்புர்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருட்டு படைப்புகளை விற்கும் '505' நிறுவனத்தின் தளம். இங்கு அவர்கள் கடைகளின் விவரங்கள், புதிய படைப்புகளின் விமர்சனங்கள், தகவல்களைக் காணலாம். ரஷ்ய-னில்தான் உள்ளது. கொஞ்சம் scroll பண்ணி பாருங்கள்.
----------------
பி.கு: பழைய நண்பரிடம் பழையபடியே சுட்டது.
9 Comments:
ஆனாலும் இப்படி அடுத்தவங்க உழைப்பில் இப்படி மண்ணைப் போடறது சரியா? விற்பனை வரி இல்லாமல் சாமான் வாங்க வேண்டாம் என்பது போல, திருட்டு சிடி வாங்காதீர்கள் என்பது போல இதையும் புறக்கணிக்க வேண்டாமோ?
இருக்கட்டும். ஒரு அவசரத்துக்கு கட் பேஸ்ட் பண்ணி போடற மாதிரி பதிவுகள் இருக்கற சிடி கிடைக்குமாப்பா? :)
கொத்ஸு,
உழைப்பில் மண்ணைப் போடறதெல்லாம் இல்லை. விலை நிர்ணயத்தில் இருக்கிறது பிரச்சனை. iTunes ன் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு இதற்கு.
கொஞ்சம் கம்யூனிஸ்டாகிவிடுவேன் இவ்விஷயத்தில். எப்படி ஒரு மருந்துக்கம்பெனிக்கு அது கண்டுபிடித்த மருந்துக்கு பத்துவருடங்கள் தான் உரிமையோ அதுபோலவே மென்பொருளும் இன்னும் குறைவான காலத்திற்கு (3 மாதம்??) மட்டுமே பாதுகாக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
சில சமயங்களில் உயிர் காக்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர்களை கம்பெனிகள் கொட்டியிருந்தாலும், பொதுநலம் கருதி சில அரசுகள் generic தயாரிப்பை கண்டுகொள்வதில்லை / அனுமதிக்கின்றன. அதே நடைமுறைதான் இங்கேயும் வேண்டுமல்லவா?
Non Commercial / personal use Licenses நடைமுறையில் இருந்தாலும் விலை என்னவோ இமாலய விலைதான் பெரும்பாலும். கொஞ்சம் சிக்கலான விஷயம்தான் இது.
இதற்குத் தொடர்பான சுவையான கருத்துக்கள் சில இங்கே பின்னூட்டங்களில்.
MRP?
//ஒரு அவசரத்துக்கு கட் பேஸ்ட் பண்ணி போடற மாதிரி பதிவுகள் இருக்கற சிடி கிடைக்குமாப்பா? :)//
ஹி ஹி.. எனக்கு இப்போதைக்கு ஒரு இருபது பதிவு ஸ்டாக் இருக்கு. மொத்தத்துக்கும் என்ன ரேட் தருவீரு? அப்புறம் பின்னூட்ட ராயல்டி மேட்டரெல்லாம் வேற டிஸ்கஸ் பண்ணனும்.. :))
இராமநாதன், ரஷ்ய Piracy பற்றி நல்லா எழுதி இருக்கீங்க, கப்பல் ஒவ்வொரு முறை சான்க்ட் பீட்டர்புர்க் போகும்போதும் ஆறு மாதங்களுக்கு தேவையான DVD களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது வழக்கம். இது ரஷ்யாவுல மட்டும் இல்லை, உக்ரேன், துருக்கி போன்ற நாடுகளும் இந்த விசயத்தில் ரஷ்யாவிற்கு சளைத்தவை அல்ல. ஆனால் தரத்தில் ரஷ்யர்களை மிஞ்ச ஒருவராலும் முடியது. சில சமயம் திருட்டு DVD வட்டு மற்றும் Plastic Case ஒரிஜினலை விட மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கும். அப்புறம் தியேட்டரில் படம் வெளிவரும் முன்பே கூட சில படங்களின் DVD-க்கள் இங்கு கிடைத்தது உண்டு. :-)
Baranee
//அதுபோலவே மென்பொருளும் இன்னும் குறைவான காலத்திற்கு (3 மாதம்??) மட்டுமே பாதுகாக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.//
ஆக மட்டும் எங்க பொழைப்பில் மண்ணைப் போட கிளம்பிட்டீங்க. காலம் கலி காலமய்யா...
பரணீ,
//ஆறு மாதங்களுக்கு தேவையான DVD களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது வழக்கம். //
நானும் உங்களப்போலத்தான். இல்லேன்னா டிவிடி விக்கற விலைக்கு வீட்டுல கலெக்ஷன் பில்ட் பண்ணமுடியுமா என்ன?
piracy பற்றியெல்லாம் ஏனோ கவலைப்படறதில்லை. ரொம்ப நல்ல படமாருந்தா ஒரிஜினல் வாங்கிடுவேன். இல்லேன்னா சான்ஸே இல்லை.
அதோடுகூட வீடியோ கடைகளிலுமே இந்த போலி டிவிடிக்களைத்தான் தர்றாங்க. அப்படித்தான் புதுப்படங்களெல்லாம் பார்க்க முடியுது.
ஒரு வல்லரசின் வீழ்ச்சி தெரிகிறது. இரஷ்ய இணையதளங்களும் 'கெட்ட' பெயரை சம்பாதித்துக் கொண்டுள்ளன.
இராமநாதன், இதில் திருட்டு ஒரு பிரச்சனையென்றால் விலை மற்றொரு பிரச்சனை. அளவுக்கு மீறி விலை போகும் பொழுது எப்படியாவது கொள்ளையாகும்.
ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்கிறேன். சென்னையில் இப்பொழுது சங்கரா ஹாலில் ஆடியோ வீடியோ எக்சிபிஷன் நடக்கிறது. அங்கு தமிழ் விசிடிகளும் டிவிடிகளும் நல்ல விலைக்குக் கிடைத்தன. பழைய நடுத்தர டிவிடிகள் 50,70 என்ற விலையில் இருந்தன. அதே நேரத்தில் ஒரு சில படங்கள்..நினைத்தாலே இனிக்கும் டிவிடியின் விலை கிட்டத்தட்ட 200ச் சொச்சம். எப்படி அதை வாங்குவது? 70களிலும் 80களிலும் வந்த படங்கள் ஒரிஜினலாக இருந்தால் 100 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றால் கூட ஒரிஜினல் வாங்குகிறவர் எண்ணிக்கை கூடும். ஆனால் கடையில் சென்று பாருங்கள். 400, 500 என்று விலை இருக்கும். பேராசை. அதே நேரத்தில் தெலுங்கிலும் இந்தியிலும் பழைய படங்கள் என்றால்...பழசென்ன..புதுப்பட ஒரிஜினல் டிவிடியே அதிகபட்சமாக 100-150க்குள் கிடைத்து விடுகிறது. அப்புறம் ஏன் டூப்ளிகேட் வாங்க வேண்டும்.
என்னிடம் இருக்கும் 95%க்கும் மேற்பட்ட டிவிடிகளும் விசிடிகளும் ஒரிஜினலே. ஆனாலும் ஒரிஜினல் விற்பனையாளர்களின் அடாவடியையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மணியன்,
இதில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையெல்லாம் இல்லை.
ரஷ்ய மக்களுக்கும் அரசுக்கும் ராட்சச மேற்கத்திய கம்பெனிகளைப் பற்றிய பெரிய அபிப்பிராயமே கிடையாது. அதனால் இந்த மாதிரி பைரஸி விஷயங்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இப்போது வரைக்கும்.
திருட்டு டிவிடிக்களை விற்க தடை செய்ய சட்டங்கள் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் போலீஸார் கூட அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ரூபிளில் சம்பாதிக்கும் ரஷ்யர்கள் டாலர் விலைக்கு பொருட்களை வாங்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம். அதன் காரணமாகவே இத்திருட்டு கொடிகட்டிப்பறக்கிறது. அரசும் கண்ணை மூடிக்கொள்கிறது.
உண்மைதான் ஜிரா,
இத்திருட்டு கண்டிக்கப்படவேண்டியது என்று ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நேர்மையான விலைகள் உள்ளனவா என்றும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் அல்லவா?
ஒன்று கவனிக்கவேண்டும். ஐம்பது டாலர் டிவிடியைக் கூட மக்கள் விலைகொடுத்து வாங்குவார்கள். அதில் விஷயம் இருக்கிறதென்றால்.
என்னிடம் இருக்கும் டிவிடிக்களை பற்றி சொல்வதற்கில்லை. :)
Post a Comment