போல்டன், வுல்ப்போவிட்ச் மற்றும் F-16கள்!

அகிலாண்ட கோடி உலகமெல்லாம் ஆளும் நமதருமை பேரரசர் சமீபத்தில் நியமித்த இருவரை பற்றி மிகவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.ஒருவர் ஜான் போல்டன். இன்னொருவர் பால் வுல்ப்போவிட்ச் . ஏதுடா, நம்மூர்லேயே எவன் மந்திரி னு தெரியல. அமெரிக்காவுல என்ன நடந்தாநமக்கென்னனு யோசிக்ககிறீங்களா? விஷயதுக்கு வரேன்.

முதலில் போல்டன். ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்காவின் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்னமும் அமெரிக்க செனட் ஒப்புதல்அளிக்கவில்லையாயினும், நியமனமே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உலகத் துணை ஜனாதிபதி டிக் செனியின் அடிப்பொடிகளில் ஒருவர் இவர். இராக்கிற்கும் தீவிரவாததிற்கும் தொடர்புள்ளதென மக்களிடத்து நம் மன்னர் பொய் சொல்லும் முன்னரே, அந்நாட்டினை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டிய மூளைகளில் ஒருவர்.

"பாக்ஸ் அமெரிக்கானா" அடிப்படைவாதிகளை இவ்விரண்டாவது ஆட்சிக்காலத்தில் பெரும் பதவிகளில் தனிப்பெரும் கருணையோடு அமர்த்திவருகிறார் புஷ். நீக்ரோபாண்டே, ரைஸ், செர்டொப் வரிசையில் வந்தவர் தான் போல்டன். ஐ. நா சபை கலைக்கப் பட வேண்டும் அல்லது அமெரிக்கா அதனிலிருந்து விலக வேண்டும் என்பது இவரின் கொள்கை. இவ்விரண்டில் ஓன்று நடந்தாலும் உலக அமைதி குலையப் போவது உறுதியெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இரண்டாமவர் இன்னமும் தீவிரமானவர். உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக IMF வங்கியின் தலைவரை ஐரோப்பாவும், உலக வங்கியின் தலைவரை அமெரிக்காவும் நியமித்து வருகின்றன. "பாக்ஸ் அமெரிக்கானா"-வின் தற்போதைய தலைவர்களில் ஒருவரான பாதுகாப்பு செயலர் டோனல்டு ரம்ஸ்பெல்டின் தளபதி இவர்.

உலக வங்கியின் முக்கியப் பணி அமெரிக்க ஆயுதங்களை வாங்க வளரும் நாடுகளுக்கு உதவி செய்வதேயாகும். இரண்டாவது, அம்மாதிரி ஏழை நாடுகளை இவ்வகையில் பெருங்கடனுக்கு உள்ளாக்கி, பின்னர் தனியார் மயமாக்கலுக்கு அவைகளை உட்படுத்துவது. தனியார் மயமாக்கலில் தீங்கில்லை. ஆயினும் அதை செயல் படுத்தும் முறையில் வசூல் ராஜாவாகவெ உலக வங்கி செயல்பட்டு வந்துள்ளது. இந்த அழகில் வுல்ப்போவிட்சின் நியமனம் பீதியை கிளப்புகிறது.

முக்கியமாக இந்தியாவிற்கும் F-16 ஜெட்களை விற்போம் என்று ரைஸ் கூறியுள்ளார். நமது பொருளாதார நிலைமையில், அரதப் பழசான விமானங்களை வாங்க மேலும் மேலும் நாம் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.

நான் எழுதுவதால் நம்மன்னர் எதையும் மாற்றப்போவதில்லை. எதற்கு இதுக்கு ஒரு வலைப்பதிவு-னு உங்க முணுமுணுப்பூ எனக்கும் கேட்குது

0 Comments:

 

வார்ப்புரு | தமிழாக்கம்