காவிரியில் தண்ணீர் பொங்கி வருவதால், மறுபடியும் குளிக்க போனேன் (இன்னும் ஐந்து நாள் தான் இந்தியாவில் என்பதும் ஒரு காரணம் :-( ) ஷட்டர்கள் சென்ற முறையை விட இந்த முறை அதிகம் திறந்திருந்ததால் வேகமும் அதிகம். எதிர்க்கரையில், திரைப்படங்களிலெல்லாம் காட்டுவது போல் கிராமத்து சிறுவர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். மேலேயிருந்து குட்டி கரணம் அடிப்பது போன்ற சர்க்கஸ் சாகசங்கள் போன்றவைகளூக்கு ஒரு impromptu போட்டியே நடந்து கொண்டிருந்தது.
குட்டி குட்டி மீன்கள் ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தன. தண்ணீருக்குள் இறங்கினால் shorts-க்குள்ளும் எக்கச்சக்கத்துக்கு புகுந்து கொண்டு தொல்லை கொடுத்தன. சரி, கரையோரம் செல்வோம் என்று சென்றபோது, ஒரு தூணில் சாவகாசமாக காற்று வாங்கி கொண்டு சாரலில் குளித்துக் கொண்டிருந்தார் இந்த ஸ்பைடர் மேன். சிலந்திகள் பொதுவாகவே reclusive என்று கேள்விப்பட்டிருந்ததால் அருகில் செல்வதா இல்லை தள்ளியிருந்தே எடுப்பதா என்ற குழப்பமிருந்தது. ஆனால் கடைசியில் super macro அணியே வென்றது. சரி, மிக எச்சரிக்கையாக அருகில் சென்றேன். சரி இப்போது ஓடிவிடப்போகிறது, இதோ இதோ என்று எனக்கு பிரஷர் எகிறியதே ஒழிய, ஸ்பைடர் மேன் காமிராக்கூச்சம் சிறிதுமில்லாமல் அனுபவமுள்ள மாடல் போல் நிலைகுத்தி நின்று போஸ் கொடுத்தார். ரொம்ப அருகில் செல்வதற்கும் பயம். ரொம்ப சிறியதாக இல்லாமல், மீடியம் சைஸ் இருந்ததே காரணம். ஏதாவது விஷமுள்ள வகை சிலந்தியாயிருந்தால் என்ன செய்வது என்ற கவலை.
1. கொஞ்சம் தள்ளியிருந்து!
2.இப்போ ரொம்பத்தான் தைரியம் வந்துருச்சு!
சரி, இதற்கே பயந்தால் நேஷனல் ஜியோ-விலெல்லாம் வேலை செய்வோர் நிலையென்ன என்று ஆறுதல்பட்டு, 3 inch தூரத்திற்கு மாக்ரோ செட் பண்ணிவிட்டு எடுக்க ஆரம்பித்தேன். இந்த நேரம் பார்த்து வெளிச்சம் பத்தவில்லை. 1/30 கீழ் குறைத்தால், தண்ணீரின் குளிரா இல்லை என் பயமா தெரியவில்லை. கை நடுங்கிவிட்டது. settings மாற்ற நாம் கையை நகர்த்தப்போய் விரலை எங்காவது கடித்து விட்டால் என்ன செய்வது. ஏதாவது சின்ன கைகளாக இருந்தாலாவது பரவாயில்லை. reflex இல் தப்பிக்கலாம். நல்ல தவில் வித்துவான் அளவிற்கு விரல்கள் இருப்பதால், ஸ்பைடர்மேனுக்கு ஒரு நொள்ளக் கண் இருந்தாலே கடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை. இவருக்கு திசைக்கு ஒன்றாய் எட்டு வேறு. ISO செட்டிங்குகளை மாற்றி சில ஷாட்கள் எடுத்து நான் நிம்மதியாய் தள்ளி வந்துவுடன் இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல் செஷன் முடிந்து ஸ்பைடர் மேனும் அதிவேகமாய் எஸ்கேப் ஆகிவிட்டார். மொத்தத்தில் இனிமையான அனுபவம்.
3. இந்தக் கண்ணு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
reptiles, arachnids போன்றவற்றுடன் அன்று என்ன ராசியோ தெரியவில்லை. குளித்துவிட்டு படித்துறையின் அருகில் நின்று கொண்டு முதல் மரியாதை சிவாஜி ஸ்டைலில் நானும் அம்மாவும் மேல்துண்டில் மீன் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ தண்ணீரில் ஒரு பாம்பு அடித்துக் கொண்டு வந்தது. படித்துறையில் ஏற மிகவும் முயற்சி செய்தது. ஆனால் வெள்ளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தண்ணீரோடவே போய்விட்டது, பாவம். தண்ணிப்பாம்பா, சாதாப்பாம்பா என்று தெரியவில்லை. தண்ணிப்பாம்புக்கு விஷமில்லைன்னு தனக்குத்தானே சொல்லிகிட்டு ஜாலியா நின்னுக்கிட்டிருந்த என் அம்மாக்கிட்ட சும்மா இல்லாமல் என் கஸின் தண்ணிப்பாம்புக்கும் நல்ல விஷம் உண்டுன்னு டிவி யிலப் பாத்ததா கிளப்பிவிட்டுட்டான்.
கையருகில் காமிரா இல்லாமல் இந்த மாதிரி அருமையான photo-opஐ விட்டு விட்டோமே என்பதுவே என் கவலை. ஆனால் அம்மாவோ போறும் குளிச்சது, முதல்ல தண்ணீலேந்து எழுந்து வாங்கடான்னு அதட்டவும் வீட்டுக்கு கிளம்பியாச்சு. அந்த பாம்பு எங்கே போச்சோ தெரியவில்லை.
இந்த மாக்ரோ எடுப்பது ஒரு வகை addiction ஆகவே ஆகிவிட்டது. நம் வாழ்க்கையில் பார்க்கும் பலவிஷயங்களில் இருக்கும் details ஐ நாம் ரசிப்பதில்லை. ரசிப்பதற்கு நேரமுமில்லை. இந்த மாதிரி மாக்ரோக்களில் கிடைக்கும் புகைப்படங்களில், பல சமயம் இந்த மாதிரி details நாம் எதிர்பாராத இடங்களில் கூட கிடைக்கும். இந்த சிலந்தி போல, நம் கண்முன்னே இருந்தும் சாதாரணமாக தென்படாத விஷயங்களில்கூட எவ்வளவு அழகு என்று வியப்பில் ஆழ்த்துகிறது.
எனது முந்தைய மாக்ரோ முயற்சிகள்
1. வயிரவன் கோயில் நெருப்பெறும்புகள்
2. மஞ்சள் பூவில் வண்டு
3. பட்டுப் பூச்சி
4. குட்டீயூண்டு பூ
Spider Man, Spider Man! - புகைப்படங்கள்
தஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள் - 2
க்ருபா அவர்கள் சொன்ன படங்களை நீக்கிவிட்டு, முருகன் கோயிலில் எடுத்தவற்ற ைபோட்டுவிட்டேன்.
தஞ்சாவூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. கோயிலின் வலதுபுறம் தட்சிணாமூர்த்திக்கு முன்னர் இரும்பு
படக்கட்டின் மீது ஏறிச் செல்லவேண்டும். இதற்கு தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து அனுமதி பெற்றாக வேண்டும்.
1. விமானம் வெளித்தோற்றம்
2. விமானம் close-up
மேலே ஏறிப்பார்த்தால் விமானத்தின் உண்மையான அளவு தெரிகிறது. அதேபோல் கோயிலின் பரப்பளவும் பிரமிக்க வைக்கிறது. கோயிலின் இடதுபுறம் உள்ள இடத்தில்
உள்ள சுப்பிரமணியர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னதிகளும், எண்ணற்ற சிவலிங்கங்களை உள்ளடக்கிய பிரகாரமும் அருமை.
3. சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி
4. பெரிய நாயகி அம்மன் சன்னதி
விமானத்தின் அமைப்பு ஒரு பூக்கூடையை தலைகீழாய்க் கவிழ்த்தது போல் இருக்கிறது. 14 அடுக்குகளாய் 216 அடிகளுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரம் உள்புறம்
வெற்றிடமாய் இருப்பது அதிசயமாக இருக்கிறது. விமானத்தின் மேலே இருக்கும் வட்ட வடிவ கல் மட்டும் 80 டன்கள் இருக்கலாம் என்கிறார்கள். இவ்வளவு எடையை
இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தாங்கி நிற்பது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு மகுடமாகும்.
முதல் அடுக்குக்குள் சென்றால் கர்ப்பகிரகத்திற்கு மேலே வட்ட வடிவில் ஒரு பெரிய அறை. தரை இருக்கிறது. அங்கிருந்து அண்ணார்ந்து பார்த்தால் 216 அடி உயரத்தில்
விமானத்தின் உச்சியில் இருக்கும் கல்லை தாங்கும் கருங்கல் platform தெரிகிறது. நடுவில் தாங்குவதற்கு ஒரு support ம் இல்லை.
6. முருகன் கோயில்
7. அழகிய வேலைப்பாடு
8. கல்லுக்குள் குச்சி!
இது போல் 14 அடுக்குகள்.
இந்த கர்ப்பகிரகம் இருக்கும் அறைக்கு வெளியில் உடனே பெரிய சுவர் இருக்கின்றது. சுவற்றிற்கும் இதற்கும் மத்தியில் நடைபாதை. முதல் அடுக்கில் உள் சுவற்றில் முழுதும்
பரதநாட்டியக் கலையின் 108 கரணங்கள் என வழங்கப்படும் pose கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து கல்லில் செதுக்கி எடுத்து வந்து ஒட்டாமல், முதலிலேயே
சுவற்றில் granite கற்களை பதித்து விட்டு பின்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக 108 கரணங்கள் முழுதாய் முடிக்கபடாமல் நான்கைந்து கற்கள்
செதுக்கப்படாமல் இருக்கின்றன. இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயிலில் வேலை செய்ய பணித்ததால் சிற்பிகள் விட்டு சென்று விட்டார்கள்
என்று காரணம் சொல்கிறார்கள்.
7. கோயில் விமானத்தின் rough வரைபடம்
இன்னும் மேலடுக்குகளில் muralகளும் சிற்பங்களும் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் மேலே செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. மேலும் படிப்படியாய் 216 அடி
ஏறுவதற்கும் முடியவில்லை!
இக்கோயிலைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவு இங்கே.
சூரிய அஸ்தமனம் - புகைப்படங்கள்
ஆஹா...இத்தாலிக்கும் இந்தியாவுக்குந்தான் என்ன ஓற்றுமை..
சோனியா காந்தி என்னும் வெளிநாட்டில் பிறந்த பெண்மணியை எப்படி இந்தியா தன் மகளாய் தத்தெடுத்துக்கொண்டது. ஒருவிதமான கலாச்சார shock உம் இல்லாமல் அவராலும் தான் எப்படி இந்தியப் பெண்ணாய், இந்தியாவின் கீழ்த்தரமான அரசியலையும் புரிந்து அதற்கேற்றாற்போல் தலைமை ஏற்க முடிந்தது என்பது ரொம்ப வினோதனமான் விஷயம். அதற்கு பதிலளிப்பது போல் உள்ளது கீழ்வரும் அனிமேஷன். இதப்பாத்தப்புறம் தான் புரியுது அன்னைக்கு இந்தியா மீனுக்கு நீர் போலன்னு! :)
Italy Animation
சுவற்றில் கிறுக்கும் கிறுக்கன்கள்!
நடராஜப் பெருமானின் ஆடும் திருக்கோலம் பல கோயில்களில் இருந்தாலும், தமிழகத்தில் ஐந்து இடங்களில் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மற்ற நான்கில் விக்கிரக உருவமாக உள்ள நடராசர் ஓவிய ரூபமாய் ஆடும் திருத்தலம் திருக்குற்றாலம். இதற்கு 'சித்திர சபை' என்ற பெயருமுண்டு (மற்ற நான்கு--- கனகசபை - சிதம்பரம்; வெள்ளிசபை - மதுரை; தாமிரசபை - திருநெல்வேலி; இரத்தினசபை - திருவாலங்காடு).
சுமார் 500-600 வருடங்களுக்கு பராக்கிரம பாண்டியன் காலத்தில் இந்த சபை கட்டப்பட்டது. முற்றிலும் மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட நடராசர், மற்றும் பல்வேறு உருவங்கள் மிக அழகாக வரையப்பட்டுள்ளன. நான் எழுத வந்தது இந்த ஓவியங்களின் சிறப்பை பற்றியல்ல. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
ஆனால் இத்தகைய பழங்கால சிறப்புமிக்க ஓவியங்களின் மீது சில மூடர்கள் கிறுக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். கிறுக்குவதையும் ஓரமாக செய்து விட்டு போனால் ஏதோ ஆர்வக்கோளாறு என்று எண்ணி விட்டு தொலையலாம். ஓவியங்களில் உள்ள உருவங்களின் மேல் எழுதியும் உருவங்களின் கண்கள் உள்ள இடத்தை சுரண்டியும் சென்றிருக்கின்றன இந்த குரங்குகள். மாரி என்பவர் செல்வராணி என்ற தன் துணையோடு 1991- ஆம் வருடம் மே மாதம் வந்து விட்டு போனதாக 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய ஓவியங்களில் மேல் கிறுக்குவெட்டு விட்டு சென்றிருக்கிறார். வற்றாத வடவருவி என்ற சிறப்புமிக்க அருவியில் குளித்ததில் மூளை கலங்கித்தான் விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தெய்வங்களின் மீது நம்பிக்கையில்லாதோர் ஆயினும் கலை என்ற அளவிலாவது இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு மரியாதை கூட கொடுக்கத்தெரியாத மூடராகவா ஒருவர் இருக்க முடியும்?
ஒரு ஓவியத்தைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் கிறுக்கல்கள். மாரி அவர்களின் பெயரைச் சொல்ல காரணம் அவர் ஒரு இடம் என்றில்லாமல் பல ஓவியங்களை களங்கப்படுத்தியிருந்தார். தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பேரரசன் இராசராசனே, தன் சிலையை தான் கட்டிய கோயிலில் நிறுவவில்லை. அவ்வளவு பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் அவன் பெயர் தட்டுபடுவதே மிக அரிது. ஆனால் இந்த மாரி போன்றோர்களோ தானும் கட்டவில்லை, இருப்பதையும் அழிப்பவர்களாய் இருக்கின்றனர். நம்மூரில் கோயில்களுக்கு 100 ரூபாய்க்கு ட்யூப் லைட்டு வாங்கிவிட்டு வெளிச்சமே வெளியே வராமல் மறைத்து உபயம் என்றெழுதும் பண்பு செழிப்பாக இருக்கிறது. அதுவாவது அவர்கள் 100 ரூபாய், எழுதிக்கொள்ளட்டும். சும்மா வந்துவிட்டு பொதுசொத்துக்களை நாசமடிக்கும் கூட்டத்தை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய், இப்போதுதான் அரசாங்கமும் இரும்பு வேலியமைத்திருக்கின்றனர். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. என்ன செய்து என்ன பயன்? அழிக்கப்பட்ட ஓவியங்களை திரும்பப் பெற முடியுமா? வரலாற்று சின்னங்களை இவ்வளவு துச்சமாகக் கருதும் அலட்சியம் அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த கெட்ட பழக்கம் இங்கு மட்டுமில்லை. கோயில்கள், வரலாற்று சிறப்புமிக்க வேறு இடங்கள் என்று எல்லா பொது இடங்களிலும் கிறுக்கிவிட்டு செல்கின்றனர். அதற்கு உதாரணமாக 30.04.05 அன்று ஆடும் நடராசப் பெருமானுக்கு பதில் கிறுக்கும் நடராஜ் அவர்கள் தமிழ்ச்செல்வி என்ற தமது துணையுடன் தஞ்சை அரண்மனை கோபுரத்தினுள்ளே எழுந்தருளியிருந்தார் என்பதற்கான அரிய வரலாற்று நினைவுச் சின்னத்தை காண்க. கண்டு களிப்புறுக.
வயிரவன் கோயில் எறும்புகள் vs. நான் - படங்கள் : மீள்பதிவு
வயிரவன் கோயில் என்னும் ஊர் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது. கோயில் குருக்கள் வர தாமதமானதால் கோயிலின் எதிரில் உள்ள ஒற்றையடி பாதையில் கொஞ்சம் தூரம் சென்ற போது அகப்பட்டன (காமெராவில் தான்) இந்த எறும்புகள்.
எளிதில் கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரு இலையை ரெண்டாக அழகாக மடித்து ஒட்டுப்போட்டு, வீடு மாதிரி அதனுள்ளே இருந்தன.கொஞ்சம் கிட்டே சென்ற போதுதான் வித்தியாசமான அனுபவம். டிஸ்கவரி சானலில் மட்டுமே பார்த்திருக்கின்ற எறும்புகளின் defense system பார்க்க கிடைத்தது. இலையின் மேல் கூட்டமாக சுற்றி கொண்டிருந்தவைகள், காமிராவின் லென்ஸ் barrel அருகே சென்றவுடன் ஒரு எறும்பை தவிர மற்ற எல்லாம் உள்ளே ஓடிவிட்டன. அந்த sentinel எறும்பு கொஞ்சம் கூட பயமின்றி, பின்புறத்தை காமிரா பக்கம் திருப்பி ஏதோ ஒரு strange ritual செய்தது. பயமுறுத்த நினைத்ததோ என்னவோ. எறும்புகள் பின்புறத்திலுள்ள sting மூலமாகத்தான் கடிக்கின்றன என்று ஊகிக்கிறேன். ஒரு 30 செகண்ட் இப்படி அங்கேயும் இங்கேயும் இலை மேல் குட்டி கரணமெல்லாம் அடித்து தலைகீழாய் நின்று என்னை பயப்படுத்த செய்த முயற்சி தோல்வியடையவே, கிடுகிடுவென்று உள்ளே ஒடிச்சென்று தன் எறும்பு சேனையை வெளியே அழைத்து வந்தது. அதில் சில தன் கூட்டின் அருகிலேயே காமிராவைப் பார்த்தபடியே சுற்றிச்சுற்றி வந்தன. மற்றவை அக்கம்பக்க இலைகளிலெல்லாம் தாவி என்னை கடிக்க முற்பட்டன.
2. sentinel எறும்பின் சாகசங்கள்: தலைகீழாய் பகீரதன் போல் தவம்
3. sentinel எறும்பின் வீரத்திருமுகம்
4. Attack of the Clones
ஹூம். நகமெல்லாம் கடிச்சு முடிச்சாச்சா? இப்போ கிளைமாக்ஸ்: இதெல்லாம் நடந்து முடியறதுக்குள்ளே கோயில் குருக்கள் வந்து கூப்பிட்டதால், போர்க்களத்திலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்து புறமுதுகிட்டு ஓடிவந்து விட்டேன் :-)
கொஞ்சம் கோயிலைப் பற்றி: சுவாமிமலையில் உபதேசம் பெற சிவபெருமான் வந்த போது, முருகப்பெருமான் சிவன் தனியாகத்தான் வரவேண்டும் என்று கட்டளையிட தன் பரிவாரங்களான சந்திரன், பைரவன், சக்தி, நந்தி, கங்கை எல்லோரையும் விட்டு தனியாய்ச் சென்றதாக சொல்கிறார்கள். அந்த வகையில் காலபைரவரை இந்த ஊரில் விட்டுவிட்டார் என்பது கதை. இவ்வூருக்கு அருகில் ஈச்சாங்குடி (ஈசன் குடி) என்ற ஊரில் தான் சிவன் தங்கி பின்னர் சுவாமிமலை சென்றதாக சொல்கிறார்கள். வழக்கமாக சிவன் கோயிலின் அங்கமாக இருக்கும் பைரவருக்கு இங்கே தனியே கோயிலே இருப்பது சிறப்பானதாம். காசியை அடுத்து காலபைரவருக்கென்று விசேஷமான கோயில் இதுவென்று சொன்னார்கள்.. இந்த வைரவன் கோயில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திங்களூருக்கு திரும்பும் சாலைசந்திப்புக்கும் கணபதி அக்ரஹாரத்திற்கும் இடையில் மெயின் ரோட்டிலேயே உள்ளது.
பிகு: ப்ளாக்கர் சரியாக படங்களை ஏற்றாததால் மீள்பதிவு இட வேண்டியதாகிவிட்டது! :(
மொட்டுகள் மாதிரி!
தங்கமணி அவர்கள் ஆரம்பித்த மாதிரி ஒரு மாறுதலுக்காக அரும்புகள். சொல்லப் போனா அரும்புகளுக்கு கொஞ்சம் முன்னாடி ஸ்டேஜ் இதுன்னு நினைக்கிறேன். முதல் படம் எடுத்தது கொடைக்கானலில். அடுத்த ரெண்டும் வீட்டு பால்கனியில்.
தஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள்
தஞ்சன் என்ற அசுரனை தஞ்சபுரீஸ்வரர் வதம் செய்த இடமென்பதால் தஞ்சாவூர் என்ற பெயர் வந்தது. இந்தக் கோயிலும் இதன் அருகிலுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான மணிக்குன்ற பெருமாள் கோயிலும் மிகவும் பழைமையானது. அதே போல் பங்காரு காமாக்ஷி கோயில், கொண்கணேஸ்வரர் கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மற்றும் இராகு கால அம்மன் கோயில் என்று பல பழமையான கோயில்கள் இருந்தாலும் தஞ்சையென்றாலே
பலருக்கும் நினைவுக்கு வருவது இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் கோயில் தான்(தஞ்சாவூருக்கு வந்து போனவர்களுக்கு தெருப்புழுதியும், சந்துகளும் நினைவுக்கு வரும்).
மேலதிக விவரங்களுக்கு இங்கேயும் இங்கேயும் செல்லவும்.