கோழியால் முட்டை வந்ததா என்பது போலத்தான் ரசிகர்களால் சினிமா கெட்டதா இல்லை சினிமாவினால் ரசிகர்களா என்ற கேள்வியும். சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பதிவில் என்று நினைக்கிறேன் இதைப்பற்றி கருத்துக்கள் வந்தன. சந்திரமுகி என்னும் சுமாரான படத்தில் இருக்கும் ஓட்டைகளை அவர் சுட்டிக்காட்டுவதே தப்பு என்பது போலவும் பின்னுட்டங்கள் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
சினிமா என்பது கலைநயத்துடன் ரசிக்கப்படுவதா? சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கவேண்டுமா? இல்லை வெறும் தீம் பார்க்குகள் போல் வெறும் ஜனரஞ்சக பொழுது போக்கு சாதனமாக மட்டுமே பார்க்கப்படுகிறதா? இதுதான் அடிப்படைக் கேள்வி என்று நினைக்கிறேன். இந்தப் பிரிவு எலீட் மற்றும் பாமர மக்களுக்கு இடையேயான வித்தியாசமாகவே வெளிப்படுகிறது. இதற்கு நடுவே ஒரு பிரிவு, சினிமாவின் technical விஷயங்கள் குறித்து கவலைப்படாமல் கலைப்படமாய் நம்மை பாதித்தாலும், மசாலாவாய் நம்மை குஷிப்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்வது என்ற நிலையில் ஒரு பகுதியினர் இருக்கின்றனர். இந்த வகையில் நானும் சேர்த்தி.
இந்தியாவில் இருந்த வரை ஜாக்கி சான், ஸ்டாலோன், புரூஸ் லீ, அர்னால்ட் ஆகியவர்களை மட்டுமே கொண்ட ஹாலிவுட்டை அறிந்தவன் நான். அப்போது அந்தப் படங்களில் காட்டப்படும் விஷயங்களுக்கும் நம்மூர் மசாலாப்படங்களில் உள்ளவற்றிற்கும் technical level-இல் தவிர வேறெந்த வித்தியாசமும் இருந்ததாய் பட்டதில்லை. பின்னர், வெளியிலிருக்கும் போது, தமிழ் சினிமா பார்ப்பது குறைந்தது. குறைந்தது ஆர்வமில்லை. availability-தான்.
subtlety, underplay - இவற்றிற்கெல்லாம் விடைகள் கிடைத்தது இந்தியாவை விட்டு வந்த பின்னர் தான். இவை இந்தியப் படங்களில் இல்லாதது கலாச்சார ரீதியில் விளக்க முடியுமென்பது என் கருத்து.
தனி மனித வழிபாடு என்ற ஒன்று மேற்கத்திய நாடுகளை விட நம்நாட்டில் அதிகம் இருக்கிறது. சினிமாவில் மட்டுமில்லை, அரசியலிலும் இருக்கிறது. ஹிந்தியில் கூட ஷாருக் பட ரீலீஸிற்கு கற்பூரமும், பாலாபிஷேகமும் நடப்பதாக தெரியவில்லை. ஆந்திராவிலும் நம்மூரிலுமே பரவியிருக்கிறது. தனி மனித வழிபாடு அவரவரின் சொந்த விருப்பு வெறுப்பென்று சொல்ல முடியுமாவென்று தெரியவில்லை. இந்த வழிபாட்டினால் உருவாக்கப்படும் இமேஜ் என்ற போலித்தன்மையே நல்ல சினிமாக்களை கெடுக்கிறது. நல்ல சினிமா என்றால் மசாலாவாக இருந்தாலும் நல்ல மசாலாப்படம் என்று இருக்கவேண்டும். நம் சினிமா நடிக நடிகையரை இந்த இமேஜைவைத்தே எடைபோடுகிறது. casting என்பது அடிப்படையான விஷயம். கதையில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு ஒருவர் பொருந்துவாரா என்று பார்ப்பதே அது. ஹாலிவுட்டில் எப்பேர்ப்பட்ட ஹீரோவாயிருந்தாலும் காஸ்டிங் முறையில் மறுக்கும் இயக்குநர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஹீரோ கதாப்பாத்திரம் ஆனாலும் கதையின் ஒரு அங்கமே. நம் சினிமாவில் என்ன நடக்கிறது? ஒரு ஸ்டார் நடிகருக்காக, அவரின் போலி இமேஜிற்காக கதாபாத்திரத்துக்காக கதை உருவாக்கப்படுகிறது. கருவாக்கமே தவறாயிருக்கும் போது குழந்தை எப்படி சரியாக இருக்க முடியும்? இந்த இமேஜ் வட்டத்திற்குள், ஓரளவிற்கு சிக்காமல் இருப்போர் விக்ரம், சூர்யா, கமல், சிவாஜி போன்றோர். ஓரளவிற்குத்தான். ஹீரோயின்கள் தேர்வு இன்னும் மோசம். விஜய் திரிஷா நடிச்ச கில்லி பிச்சுகிட்டு ஓடிச்சு. அதனாலே அடுத்த விஜய் படத்திற்கு திரிஷாதான் ஜோடி என்ற அபத்த கான்செப்ட் தான் நிலவிவருகிறது. புதுமுகங்கள் தேர்விலும் சில பிரச்சனைகள். ஆயிரத்தில் ஒருவருக்கே காமிரா முன் நடிப்பது இயற்கையாய் வரும். பலருக்கு திறமை இருந்தாலும் அதை தீட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக்கலை படிப்பவர்க்கு சினிமாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை தமிழகத்தில் நாடகங்கள் நசிந்த்தால் ஏற்பட்டது என்பது என் கருத்து.
நல்ல மசாலா என்று நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப்படங்களில் முதலிடம் Kill Bill 1&2 தான். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை செயல்படுத்திய நேர்த்தியும் தரமும் வியக்க வைக்கின்றன. இந்தப் படத்திலிருந்து பல விஷயங்களை கேவலமாக உருவி "கரம்" என்று ஜான் ஆபிரஹாம் நடித்த கண்றாவியையும் பார்த்தேன். இரண்டையும் பாருங்கள், வித்தியாசங்கள் தெரியும்.
மேட்ரிக்ஸில் கியானு காற்றில் zero gravity-இல் குதிக்கிறார், தோட்டாக்களை dodge செய்கிறார் என்றால் என்னதான் இயற்பியலுக்கு மாறுபட்டு இருந்தாலும், ஏன் அதைச் செய்கிறார் கதைக்கும் அதற்கும் என்ன தொடர்பு போன்றவற்றை விளக்கவாவது முயற்சி செய்தனர். இங்கே கேப்டனும், சூப்பரும், இளையதளபதியும் அதையே சிறிதும் கதைக்கு ஒவ்வாமல் செய்வது காமெடியாக அவர்களுக்கே படவில்லையா? குருட்டாம்போக்கில் காப்பியடிக்காமல் சுயமாக யோசிக்கலாமே. ஆட்டோகிராப், காதல் போன்ற படங்கள் வரும் நேரத்திலே நாம் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களின் genre-வைக் குறை சொல்லவில்லை, ஆனால் பலசமயங்களில் அப்பட்ட காமெடியாய் இருக்கும் இந்த வகைக் CGI காட்சிகளுக்கு பணத்தை வாரியிழைக்காமல் கதையிலும் இயக்கத்திலும் கவனத்தைச் செலுத்தலாம். மசாலா கொடுத்தாலும் நல்ல மசாலாவைக் கொடுக்கலாமே. ரஜினியின் ரசிகன் என்ற வகையில் நான் எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமான genre-க்களை முயற்சி செய்து பார்க்கவேண்டும். அவரின் நடிப்பின் மேல் இன்னும் நம்பிக்கை இருப்பதே இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம். மசாலாக்களின் ராஜா நீங்கள் தான் என்று நிருபித்தாகிவிட்டது. மிச்சவற்றிலும் முத்திரை பதிக்கலாமே. விஜய் மசாலாப்படங்களிலேயே நடிப்பேன் என்று கூறுவது அவரின் சொந்தக்கருத்து. எனக்குத் தெரிந்தவரையில், எந்த வேலையானாலும் பியூன் குமாஸ்தாவாக உழைப்ப்தும், குமாஸ்தா அவர் பங்குக்கு மானேஜராக நினைப்பதும் தான் இயற்கை. இதில் நான் பியூனாகவே இருந்து கொள்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்வது அவரின் விருப்பம்.
அதே போல் என் சந்திரமுகி குறித்த பதிவில் குறிப்பிட்டது போல போலீஸோ, ராணுவமோ, மருத்துவமோ எதைப்பற்றியும் ஒரு படத்தில் கூற முற்படும் போது அந்த துறை சார்ந்த வல்லுனர்களை கலந்தாலோசித்து சித்தரித்தால் அது படத்தை இன்னமும் மெருகூட்டும். பணம் ஒரு பிரச்சனையே இல்லை என்ற வகையில் கண்டதிற்கும் செலவிடும் தயாரிப்பாளர்கள் இதைக் கவனித்தால் நன்று.
ரசிகர் மன்றங்கள் - எனக்கு தெரிந்தவரையில் appreciation society-களின் அடிப்படையிலேயே தோன்றியிருக்க வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட நடிகர் நடித்த படத்தை ஆராய்ந்து பார்த்து நல்லது கெட்டது குறித்து விவாதம் நடத்த வேண்டியதே ஆக்கபூர்வமான செயலாகும். போஸ்டர், பந்தல், தோரணம், கட் அவுட் வைப்பது அல்ல. சேவைகள் செய்வது
வரவேற்புக்குரியதென்றாலும் மேற்கூறியவை நெருடுகின்றன.
பாடல் காட்சிகள் திரையில் இடம்பெறுவது குறித்து எனக்கு பிரச்சனையில்லை. அது நம் நாட்டு கலாச்சார வெளிப்பாடு. ஆனால் எங்கு தேவையோ அங்கு மட்டுமே பாடல்களை வைக்கவேண்டும். ஒரு படமென்றால் 5 பாடல்கள் இருக்கவேண்டும் என்பது ஒன்றும் விதியல்ல. சில வகைப் படங்களில் பாடல்களுக்கு தேவையே இருக்காது. அவற்றில் ஏதோ வேண்டுதல் மாதிரி புகுத்தலைத் தவிர்க்க வேண்டும்.
வசனகர்த்தாக்களும், கதாசிரியரும் மற்றும் திரைக்கதாசிரியர்களுக்கும் உண்மையான அங்கிகாரமும் சன்மானமும் கொடுக்க படுவதில்லை. இவை ஒரு profession-ஆக கொண்டோர் சிலரே இருப்பதாலேயே கதைப்பஞ்சம் நிலவுவதாக எனக்கு ஒரு conspiracy theory-யே உண்டு. ஹாலிவுட்டில் Charlie Kaufman என்று ஒரு கதாசிரியர் இருக்கிறார். பல முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறவர். இவர் கதையெழுத்தித் தர மாட்டாரா என்று ஹீரோக்களும் இயக்குநர்களும் காத்திருக்கின்றனர். நம்மூரில் என்ன நிலை? யாராவது எழுதின கதையை சுருட்டி நகாசு வேலை பண்ணி தன் கதை என்று சொல்லிக்கொண்டு அலைவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இப்படி இருந்தால் புதுப்புது ஐடியாக்கள் எங்கிருந்து வரும்? வெறும் காதல் காதல் என்று எத்தனை நாட்களுக்குத் தான் பழைய மாவையே அரைக்க முடியும்? வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம் தானே தவிர, அதுவே வாழ்க்கை என்பது போலல்லவா சிந்திக்கிறது தமிழ் சினிமா? (CK-வைப் பற்றி சொல்லும்போது அவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை Adaptation, Being John Malkovich, Eternal Sunshine of the Spotless Mind. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.)
அடுத்து தமிழ்ப் பெயர்களைப் பொறுத்தவரையில், ஒரு கதைக்கு பொருத்தமாக என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது கதாசிரியர், இயக்குநர் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய விஷயம். நாம் தலையிடுவது வேண்டாத விஷயம். இல்லையென்றால் B.F படத்தின் பெயரை அ...ஆ.. என்று கீழ்த்தரமாக மாற்றப்பட்டது போலவே விளைவுகள் இருக்கும். தமிழில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தலாம், இல்லை நாம் சொல்வதை கேட்போரிடத்தில் மட்டும் அந்த படத்தை புறக்கணி என்று கட்டளையிடலாம். மற்றபடி மிச்சதெல்லாம் வெறும் பிலிம் காட்டுவதுதான்.
எது ஆபாசம்? எது வன்முறை? என்பதில் தான் பிரச்சனையே இருக்கிறது. ஒரு படத்தின் கதையின் தேவைக்கேற்ப படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றாலும், கலாச்சார சீர்கேடு என்று வானுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல் சிந்தித்து அணுக வேண்டும். 18 வயதிற்கு மேலுள்ளோருக்கும், திருமணமானவருக்கும் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை இது. ஆகவே அவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கவேண்டும் என்ற சான்றிதழுடன் வெளியிடலாம். தியேட்டர்களிலும் செயல்படுத்தவேண்டும். அங்குதான் பிரச்சனை இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் நடக்க வேண்டிய ஒன்று. விரச குலுக்கல் நடனங்களும் இந்த விதத்திலேயே கையாளப்படவேண்டும். திறமைமிக்க இயக்குநர்கள் பெண்களை காட்சிப்பொருளாய் ஆட
விடப்படும் பாட்டுகளை அனுமதிக்க தேவையே இருக்காது. இப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதில் சென்ஸார் மற்றும் தியேட்டர்களின் பங்கு இருக்கிறது. சினிமாத்துறைக்கு கொஞ்சம் அதிகப்படியான பொறுப்பு தான் இதில்.
ஆனால் நடப்பு நிலவரம் என்ன? இந்த மாதிரி வயது வந்தோர் சான்றிதழ் கொடுத்தால் பெண்களும், குழந்தைகளும் அடங்கிய பெரிய மார்க்கெட் அவுட்-டாகி விடும். அதனாலேயே இந்த அரைகுறை ட்ரெஸ் ஆட்டங்கள் ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் இருக்கிறது. இது சற்றும் பொறுப்பற்ற ஒரு செயல். கூழுக்கும் ஆசை என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
பெண்களை ஏற்கனவே கட்டுக்குள் வைத்திருக்கும் சமுதாயத்தில் அதற்கு மேலும் தீனி போடும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியது. ஹீரோ கதாநாயகியை சர்வ சாதாரணமாக அவமானப்படுத்துவதும், கேலி செய்வதுமாக ஏதோ பெரிய ஆண்மைமிக்க செயலாய் காண்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் சீனியரிலிருந்து ஜூனியர் வரை எல்லா ஸ்டார்களும் தவறு செய்கிறார்கள். இதெல்லாம் பெண்ணடிமையின்றி வேறில்லை. கதைக்கு தேவையென்றால் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். இத்தகைய எண்ணங்கள் தவறு என்று போதிக்கும் அளவிற்கு சமூகப்படங்கள் எடுக்கவேண்டாம். மசாலாப் படமெடுத்தால் இந்த அபத்தங்களைத் தவிர்க்கவாவது செய்யலாம்.
வழக்கம் போல் ரொம்ப பெரிய பதிப்பாகி விட்டது. சுசி. கணேசன், அழகம் பெருமாள், பாலாஜி சக்திவேல், செல்வராகவன் போன்றோர் நம்பிக்கையளிக்கிறார்கள் இதுவரைக்கும். என்ன செய்கிறார்கள் இனிமேல் என்று பார்க்கவேண்டும்.
இன்றைய தமிழ் சினிமா குறித்து என் பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
இராமநாதன்
நல்ல பதிவு ஆனால் அழகம் பெருமாள் என்ன நல்ல சினிமா கொடுத்தார் என்று தெரியல.
//பாடல் காட்சிகள் திரையில் இடம்பெறுவது குறித்து எனக்கு பிரச்சனையில்லை. அது நம் நாட்டு கலாச்சார வெளிப்பாடு. ஆனால் எங்கு தேவையோ அங்கு மட்டுமே பாடல்களை வைக்கவேண்டும். ஒரு படமென்றால் 5 பாடல்கள் இருக்கவேண்டும் என்பது ஒன்றும் விதியல்ல. //
அதுலே நாலு பாட்டு ஃபாரீன் லே எடுக்கணும்!
மொத்தம் 5 பாட்டு ஏழு ஃபைட்டு.
பாக்கி இடமிருந்தால் கதை !!
இதுதான் இப்பத்து ஃபார்மலா!!!
விஜய் எப்பவுமே ரீமேக்காளு! இப்பக்கூட
அவரோட அப்பா ஒரு தெலுங்குப் படம் வாங்கியிருக்காராம், மகனுக்காக!!!!!!!!
//அழகம் பெருமாள் என்ன நல்ல சினிமா கொடுத்தார் என்று தெரியல.// அதே டவுட்டு தான் நமக்கும்.. 'உதயா' டும்டும்டும்.. இதுல எது நல்ல சினிமா??
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி..
அழகம் பெருமாள் "5 ஸ்டார்" என்னும் பரவாயில்லை என்று சொல்லும்படியான வித்தியாசமான படத்தை இயக்கினார்னு தப்பா நினச்சு சொல்லிட்டேன். அது சுசி. கணேசன் -னு இப்போதான் தெரிஞ்சுது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இப்போ வந்த அமீர் பத்தியும் நிறையா சொல்றாங்க. நான் அவரோட "ராம்" பாக்கல.
துளசியக்கா
5 பாட்டையும் வேணாக்க பாரின்லேயே எடுக்கட்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள் பார்த்த மாதிரி ஆனது. ஆனா நீங்க சொன்ன இந்த பார்முலா சினிமா தான் பிரச்சனை.
விஜய் அடுத்த சூப்பராகணும்னு ட்ரை பண்றாரு. அதப்பாக்கிறதுக்கு கூட்டம் இருக்கறவரைக்கும் பண்ணட்டுமே! பாவம்.
கோர்ட் சீன்களை தமிழ் சினிமாவில் நாஸ்தி செய்வது போல வேறு எங்கும் செய்ய முடியாது என நினைக்கிறேன். ஒரு உதாரணம். படம்: சமீபத்தில் 1970-ல் வெளிவந்த "மன்னிப்பு". ஒரு கிராமத்தான் கற்பழிப்பு செய்ய இருந்த ஒருவனைத் தடுக்கும்போது போட்ட சண்டையில் அவனைக் கொன்று விடுகிறான். ஒரு குற்றம் தடுக்கும்போது நடக்கும் மரணம் கொலையாகாது என்பது அடிப்படை அறிவு உள்ள எவனுக்கும் தெரியும். கற்பழிப்பு நடக்க இருந்ததை ஒப்புக் கொள்ளும் அரசு தரப்பு வக்கீல் (மனோஹர்) கூறும் வாதம்: "யுவர் ஆனர், ஒரு பெண் கற்பை இழந்து உயிர் வாழலாம், ஆனால் ஒருவன் உயிரை இழந்து உயிர் வாழ முடியாது". அதன் பிறகு எதிர் தரப்பு வக்கீல் அவருக்கே உரிய முறையில் அடி வயிற்றிலிருந்து கத்தி கத்தி கற்பைப் பற்றி பிரசங்கம் கொடுக்கிறார். தலைவலி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
நல்ல பதிவு, நல்ல அலசல், நீங்கள் எழுதியதிலிருந்து சிலதை மேற்கோள் காட்டி பின்னூட்டமிடலாம் ஆனால் அது ஒரு சாரரை குத்துமென்பதால் விட்டுவிடுகின்றேன்....
நேர்மையான, நடுநிலையான நல்ல அலசல்
டோண்டு சாருக்கும் குழலி அவர்களுக்கும் என் நன்றி...
சட்டத்துறையில் மட்டுமல்லாமல், எல்லாத்துறைகளிலும் creative license-ஐ எல்லாம் மீறி, இயக்குநரின் அபத்த கற்பனையே பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றன. நீங்கள் கூறிய உதாரணத்தையே எடுத்து கொண்டால், இந்தப்படத்தின் இயக்குநரோ வசனகர்த்தாவோ தொலைபேசி மூலமாகவாது, தமக்கு தெரிந்த ஒரு வக்கீலிடம் இவ்விஷயத்தில் சட்டத்தின் உண்மையான பார்வை என்னவென்று கேட்க எவ்வளவு நேரமோ பணமோ செலவாகப்போகின்றது என்று தெரியவில்லை.
குழலி அவர்களே
நீங்கள் சொல்வது புரிகிறது.
நன்றி
என்ன ராமநாதன்,
நான் ஒரு தொடரா எழுத் நினச்சதில பாதிக்குமேல இங்க அவுட்டாயிடுச்சி!
பரவாயில்லை...ஒரே wave length-ல்ல?
ராமநாதன்,
தமிழ்திரைப்படத்தின் தலையெழுத்துக்கு நுகர்வோரும் ஒரு முக்கிய காரணம் .உங்களைப்போல(என்னையுன் சேர்த்துத்தான்) சில பேர் நல்ல படம் வேண்டுமென்கிறீர்கள் நாம் சிறுபான்மை .அதுவும் நீங்கள் கேட்டதை யாராவது கஷ்டப்பட்டு கொடுத்தாலும் ,சிரமமெடுத்து உடனே திரயரங்கம் சென்று பார்ப்பதில்லை .படம் வந்தவுடனே அடித்து பிடித்து பார்க்கும் கூட்டம் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை .அப்புறம் ஆளில்லாததால் தியேட்டரை விட்டு தூக்கிய பிறகு ,அதுக்குள்ள தூக்கிடாங்களான்னு VCD வாங்கி பார்த்துட்டு 'சூப்பர் படம்'-ன்னு சொன்னா போதுமா? அதுக்கப்புறம் கைகாசு போட்டு அது மாதிரி படம் எடுக்க ,சினிமா காரங்க என்ன கலைச்சேவையா பண்ணுறாங்க?
மகாநதியை வெகுஜனங்கள் புறக்கணித்ததும் ,அதோடு கூட வந்த ஆபாச குப்பை 'ரசிகன்' வெள்ளிவிழா ஓடியதும் நீங்கள் அறியாததா? 'குட்டி'-ன்னு ஒரு அற்புதமான படம் வந்ததே பல பேருக்கு தெரியாது. 'அன்பே சிவம்' என்னாச்சு ?கில்லி பக்கதுல நிக்க முடியல்லியே?
இதுக்கு எங்க போய் முட்டிக்குறது?
அட வேறொரு பதிவில் இதப் பத்தி விளம்பரம் கொடுக்கலாம்னு நினச்சபோதுதான் புதுசா ஜோவும், தருமியும் கமெண்ட் கொடுத்திருக்கீங்கன்னு பார்த்தேன்.
தருமி,
ஒரே வேவ்லெங்த்தில் ரொம்ப சந்தோஷம்.. :) அப்படியே வேவ்லெங்த் மூலமா அறிவு ட்ரான்ஸ்பர் உங்க கிட்டேர்ந்து அனுபவம்/அறிவு ட்ரான்ஸ்பர் பண்ண முடிஞ்சா எவ்வளவு சவுகரியமா இருக்கும்?
ஜோ,
// நுகர்வோரும் ஒரு முக்கிய காரணம்//
இது monopoly மாதிரி தான். மசாலாவே கிடைத்தால் அது பிடித்துத்தான் ஆக வேண்டும். மாறாக கருத்துள்ள படங்கள் நிறைய வர ஆரம்பித்தால் மக்களின் மனநிலையும் மாற வழிவகுக்கும். ஏனென்றால், நம் நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சினிமா ஊடுருவியுள்ளது. பெண்களை அவமானப்படுத்துவதும், நான் ஆம்பிளடா போன்றவை இள வயதினரிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இல்லையென்கிறீர்களா?
கில்லி போன்றவையே நிறைந்திருப்பதுதான் என் பிரச்சனை. குப்பையென்று ஒதுக்கவில்லை. அவையும் தேவைதான். ஆனால், நல்ல படங்களும் அதே அளவிற்கு தயாரிக்கப்படவேண்டும். சினிமா என்பது வெறும் பிஸினஸ் என்கிறீர்கள். லாபம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக உங்கள் பால்காரர் அதிக தண்ணீர் கலந்து கலப்பட பால் விற்றால், பிஸினஸ் தானே என்று சும்மா விடுவீர்களா?
Post a Comment