168. மழை, பசி, கலாம் - 2

உரை முடிந்தவுடன் மாணவர்களுடன் கலந்துரையாடல் என்பது நிகழ்ச்சி நிரல். பாஞ்சாலி சபதத்தின் சரஸ்வதி வணக்கத்திலிருந்து ஒரு மேற்கோளுடன் தனது உரையை ஆரம்பித்தார் கலாம். தமிழில் தான் முழு உரையும் இருக்குமென்று நினைத்தால், சிறிது நேரத்தில் ஆங்கிலத்துக்கு தாவிவிட்டார். பர்னாலாவின் நன்மைக்காக இருக்குமென்று நினைக்கிறேன்.

சுருக்கமாக இதோ:

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் அந்நாட்டின் பாதுகாப்பிலும் தான் அடங்கியிருக்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டு உலகத்தில் சமூகங்களின் முக்கிய மூலதனம் பணமோ, தொழிலாளர்களின் அளவோ அல்ல. மாறாக அறிவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூகத்தில் அறிவாற்றலின் சீரான வளர்ச்சி மற்றும் அதன் முறையான பயன்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு முதலிய அளவீடுகளைக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை அளக்கலாம். நம் கனவு முன்னேறிய இந்தியா. அதற்கு அடிப்படைத் தேவை அறிவுசார் சமூகம். இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், மனித வளத்துக்கும் பஞ்சமேயில்லை. நம் நாட்டிற்கென்று சில core competencies உள்ளன. நம் நாட்டின் மக்கட்தொகையை சுமையாக எண்ணக்கூடாது. ஆனால், இவை isolated pockets ஆக சிதறிக்கிடக்கின்றன. இந்தியாவின் கிராமங்களுக்கு நகரங்களைப் போன்ற வசதிகள் கிடைக்கிற போதுதான் நாம் முன்னேறிய நாடாக ஆவோம்.

புதிதாக அறிவாற்றலைப் பரப்புவதும் இவ்வளர்ச்சியினை sustain செய்வதும் முக்கியமானது. தகவல்தொடர்பு தொழில்நுட்பம், வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் knowledge creation மற்றும் knowledge deploymentஐ எவ்வளவு திறமையாக செய்கிறது என்பதைக் கொண்டுதான் ஒரு நாடு வளர்ந்த அறிவுசார் சமூகமென்ற நிலையை அடைந்துவிட்டதா என்று சோதிக்க இயலும்.

*******************
இவ்விடத்தில் teleprompterஇல் பிரச்சனையா அல்ல உரை எழுதியதிலேயே பிரச்சனையா என்று தெரியவில்லை. இரண்டு பத்திகளை இரண்டு முறை படித்தார். இரண்டாவது முறை பாதி படித்தவுடன் குழப்பத்தை உணர்ந்து, அதி வேகமாக மனப்பாடம் செய்வது போல படித்து முடித்தார் கலாம். நமது குடியரசுத்தலைவரின் தளத்திலுள்ள உரையிலும் இத்தவறு இருக்கிறது.
***************
நம் நாட்டின் அடிப்படை படிப்பனைகளாக வல்லுநர் குழுக்களால் அடையாளம் காட்டப்படுபவை:
1. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறை
2. விண்வெளி ஆராய்ச்சி
3. பயோ-டெக்னாலஜி
4. வானிலை முன்னுரைத்தல் தொழில்நுட்பம்
5. நவீன tele-medicine மற்றும் tele-education

மேற்கூறியவை எல்லாமும் த.தொ.தொழில்நுட்பத்துறையென்னும் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

நம் இந்தியா தகவல்தொடர்பு சமூகமாக மாறிக்கொண்டுவருகிறது. ஆனால் அறிவுசார் சமூகமாக மாற இத்துறையில் மட்டுமில்லாமல் பல்முனைகளிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்குச் சாதகமாக உள்ளது.

**************
பின்னர் இந்தியா 2020 பற்றிப் பேசினார். பிறகு கல்லூரியைப் பற்றிப்பேசியவர், நடுவில் நம் நாட்டின் மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி முறைகளில் lack of scientific evaluation மற்றும் standardization பற்றிச் சொன்னார். இதற்கு அகில இந்திய அளவில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வல்லுநர்களின் உதவியால் standardize செய்வதன் மூலம் இவ்வரிய முறைகளின் முழு potential-உம் மக்களைச் சென்றடைய உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல். முன்னரே யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்கப்போகிறார்கள் என்று குடியரசுத்தலைவரின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கல்லூரிக்கு சொல்லப்பட்டிருக்கிறது (இத்தகவல் அக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியது). அதனால் spontaneity குறைவுதான். சில கேள்விகளும் அதற்கான பதில்களும் பேராசிரியர் சொன்னதை உறுதிப்படுத்தின. இதில் எனக்கு நினைவில் நின்றவற்றை மட்டும் இடுகிறேன்.
____________________________________
1. உலகப் பொருளாதாரச் சந்தையை ஏன் வரவேற்கிறீர்கள்?
***
இப்படித்தான் கேட்டார். கலாம் அவர்களுக்கும் எதைக் குறித்துக் கேட்கிறார் என்று புரியவில்லை. பின்னர் WTO என்று விளக்கம் சொன்னார் கேட்டவர்.
***
பதில்: நாட்டின் முன்னேற்றத்திற்கு competitiveஆக் பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இன்றியமையாதது. அப்படி செய்யக்கூடாது என்று சொன்னால் முன்னேறிய நாடுகள் அந்நிலையில் இருக்காது. அவை அதே கொள்கையை நமக்கும் விதித்தால், நம் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும். உ.வர்த்தக சந்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், இந்தியாவுக்கு அதில் சில reservations இருக்கின்றன. இந்தியாவின் கொள்கைகளுக்கும், வளர்ச்சிக்கும் எதிரான அவற்றை நிவர்த்தி செய்யும்வரை பாரதம் விடாமல் போராடும்.

________________________________________________________________________
2. நீங்கள் பலருக்கு inspiration ஆக இருக்கின்றீர்கள். உங்களுக்கு யாரை ரோல்-மாடலாக கொண்டுள்ளீர்கள்?
பதில்: இந்தியாவில் ரோல் மாடல்களுக்கா பஞ்சம். வள்ளுவரில் தொடங்கி காந்தியடிகள் வரை பலர் இருந்திருக்கின்றனர்.

_________________________________________________________________________
3. தென்கோடி இராமேஸ்வத்தில் ஒரு மிக வறிய குடும்பத்திலிருந்து உயர்ந்து குடியரசுத்தலைவராக முடிந்ததன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?

பதில்: இதில் பெரிய ஆச்சரியமோ அதிசயமோ ரகசியமோ ஒன்றுமே இல்லை. உழைப்பு உழைப்பு உழைப்புதான். உழைப்போடுகூட நல்ல சிந்தனைகளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வளர்ச்சியடையலாம். ஒருவராலும் தடுக்க இயலாது. அய்யன் வள்ளுவன் சொன்னதுபோல "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு". எவ்வளவுக்கெவ்வளவு நல்ல உயர்ந்த எண்ணங்களை வச்சுருக்கோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு முன்னேற்றமும் உண்டாகும். இதை எப்பவும் நினைவில் வச்சுக்கணும்.

-----------------------------------------------------------------
4. நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்ததற்கும் ஜனாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பதில்: பெரிதாக ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் இரண்டுக்கும் பெரிய ஒற்றுமைதான் இருக்கிறது. அது hard work. விஞ்ஞானியா இருந்தப்பவும் செய்தேன். இப்பவும் செய்கிறேன்.

------------------------------------------------------------------
5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நல்லுறவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? இவ்விஷயத்தில் ஒரு முஸ்லீம் என்ற முறையில் உங்கள் கருத்தென்ன?
பதில்: அம்மா, இப்படித்தான் நான் நாகாலாந்து போயிருந்தப்ப ஒரு கல்லூரியில ஒரு மாணவன் கேட்டான். 'நீங்க சைண்டிஸ்டா? பிரசிடெண்டா? முஸ்லீமா? தமிழ் ஆளா?ன்னு'. நான் அவனுக்கு ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். நான் இது எதுவும் இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். அவ்வளவுதான்.

-------------------------------------------------------------------
6. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் இந்திய இளைஞர்களோ வெளிநாட்டில் இருக்கிறார்களே?
பதில்: இளைஞர்கள் மட்டுமில்லம்மா. இளைஞிகளும் தான். (**கேட்டவர் ஒரு மாணவி**) நம் நாட்டுல ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பொறியாளர்களும், ஒரு லட்சம் மருத்துவர்களும் படிச்சுட்டு வராங்க. இதுல வெளிநாட்டுக்கு போகிறவர்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது.

அதுவும் இல்லாம 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' நம்ம பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்க இல்ல. அப்படி வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்களுக்கும் இந்தியாவிற்குத்தானே பணத்தை அனுப்புகிறார்கள்? ஒரு வீடு நன்றாக இருந்தால் ஒரு தெரு நன்றாக இருக்கும். ஒரு தெரு நன்றாக இருந்தால் ஒரு ஊர் நன்றாக இருக்கும். இப்படி நாடே நன்றாக இருக்கும், இதில் தவறொன்றுமில்லை.

------------------------------------------
இன்னும் ஒரிரு கேள்விகள் கேட்டார்கள். எனக்குத்தான் மறந்துவிட்டது. :(

இப்படி நேரம் போய்க்கொண்டிருப்பது தெரியாமல் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தவரின் முன்னால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாமதமாகிவிட்டதென்று குறிப்பை வைக்கவும், இதோடு முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு பின்னர் சில உறுதிமொழிகளை தான் சொல்லி மாணவர்களைத் திரும்பச் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

உரையை முடித்து இருக்கைக்குச் சென்றவர், ஒரு புத்தக bundleஐ கல்லூரி நூலகத்திற்கு தன் அன்பளிப்பென்று தானே மைக் முன்னர் மறுபடி வந்து கூறிச்சென்றார். அதற்குப்பின்னர், கல்லூரி முதல்வர் துரிதகதியில் நன்றியுரையை வாசிக்க, அதற்குள் கார் பட்டாளம் மறுபடி அணிவகுப்பிற்கு வந்து நின்றிருந்தது. கிடுகிடுவென்று கூட்டத்தை நோக்கி கையசைத்தவாறே மேடையிலிருந்து இறங்கிப் பறந்தார் நம் குடியரசுத்தலைவர். மணி அப்போது ஆறு முப்பத்தியைந்து. இருபதுநிமிடத்தில் முடியவேண்டிய விழா ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்ததற்கு காரணம் நம் ஜனாதிபதிக்கு மாணவர்களின் மேலுள்ள அன்பும் அக்கறையும். இந்த ஒரு மணி நேரத்திற்காக ஒரு வாரகாலமாக ஏற்பாடுகளுக்காக உழைத்து, பின்னர் காலையிலிருந்து கால் கடுக்க வெய்யிலிலும் பின் மழையிலும் காத்திருந்து கலாமைப் பார்க்க மாணவர் கூட்டம் ஒழுங்குடன் காத்திருந்தது என்றால் அதற்கு அவர் மேலுள்ள அன்பு என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

வழியெங்கும் தோரணங்களும், ட்யூப் லைட்டுகளும், ஆளுயர மாலைகளும், கட் அவுட்களும், ஒருவரை ஒருவர் செயற்கையாக புகழ்ந்துகொள்ளும் முகஸ்துதியும், வாழ்க கோஷங்களும் என ஒரு அரசியல் தலைவர் கலந்து கொள்ளும் விழா என்பதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் - கல்லூரிவிழாக்களில் நடக்கும் அமளிதுமளிகள் ஒன்றுமில்லாமல், தள்ளுமுள்ளு இல்லாமல் - கல்லூரிக்கும் அதன் விழாவிற்கு சம்பந்தமேயில்லாமல் திருவிழா போலப் பார்க்கச் சென்ற என்னுள்ளும் மாறாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றார் நம் மேதகு குடியரசுத்தலைவர். முடிவில் மழையுமில்லை, பசியுமில்லை. கலாம் மட்டுமே மனதில் நின்றிருந்தார்.

வாழ்க கலாம்! இது கல்ட் இல்லை. அரசியலையும் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி நாட்டின் வளர்ச்சி மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒர் நல்ல மனிதரை வாழ்க வென்று சொல்வதில் தவறேதுமில்லையே?

----------
திரு. அப்துல் கலாம் அவர்கள் பூண்டி கல்லூரியில் ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கே

இவ்விழாவைப் பற்றிய என் முந்தைய பதிவு.

18 Comments:

 1. குமரன் (Kumaran) said...

  வாழ்க கலாம். வாழ்க அவர்தம் பெருமை உரைத்த இராமநாதன்.


 2. நிர்மல் said...

  இது போன்ற விழாக்களுக்கு குடியரசு தலைவர் நேரத்துக்கு வர வேண்டும்.

  முதல் குடிமகனிடம் இதை எதிர்ப்பார்பதில் தவறில்லை

  பூண்டி விழாவில் வந்து ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டியதில்லை. தமிழில் பேசினால் கூட்டத்திற்கு வந்த கடைக் கோடி மனிதனுக்கும் அவரது உரை போய் சேரும். கவர்னருக்கு உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கையில் கொடுத்திருக்கலாம்.

  நன்றி ராமநாதன்.


 3. மஞ்சூர் ராசா said...

  கூட்டத்தைப் பற்றிய செய்தியினை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

  வாழ்த்துக்கள்.


 4. siva gnanamji(#18100882083107547329) said...

  நிறைவான பதிவு


 5. G.Ragavan said...

  இந்த நாட்டின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் பண்பாட்டின் மீதும் உண்மையான அக்கறையுள்ளவர் கலாம். அவரது கனவுகள் நனவாகி இந்தியா முன்னேற வேண்டும். முன்னேறும்.


 6. வடுவூர் குமார் said...

  நல்ல பதிவு.
  எங்களை மாதிரி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அறியக்கொடுத்ததற்கு நன்றி.


 7. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  அருமையா எல்லாத்தையும் விளக்கமாப் பதிஞ்சதுக்கு மொதல்லே நன்றி.

  என்ன ஒரு நல்ல மனிதர்.

  அவரோட தளம் முகவரி சொல்லுங்களேன்.


 8. rv said...

  கும்ஸ்,
  பெருமை உரைத்ததுக்கெல்லாம் நன்றி, வாழ்கவெல்லாம் உண்டா?

  நன்னி.


 9. rv said...

  நிர்மல்,
  விழாவிற்கு தாமதமாக வந்ததுக்கு காரணம் இவ்விழாவிற்கு முன்னதாக மூன்று கல்லூரி விழாக்கள் இருந்தன. அவற்றிலும் மாணவர்களோடு கலந்துரையாடல் இருந்தது. இங்கே நடந்தா மாதிரியே அரைமணி நிகழ்ச்சிகள் ஒரு மணியாகியிருக்க வேண்டுமென்று தான் எனக்குத் தோன்றியது.

  ஆங்கிலத்தில் உரையாற்றியதில் எனக்குமே வருத்தம் தான்.

  நன்றி


 10. rv said...

  மஞ்சூர் ராசா, சிவஞானம்ஜி,
  மிக்க நன்றி.


 11. rv said...

  ஜிரா,
  கனவுகள் நினைவாகும் என்ற நம்பிக்கை கூட்டத்தில் பொங்கி வழிந்தது.

  வெளியே வந்தவுடன் ஊர் முழுக்க ஆண்டாண்டு காலமாய் நடக்கும் கழிவுநீர் குழாய்கள் திட்டத்தைக் கண்டு நம்பிக்கை கொஞ்சம் டவுனாகி விட்டது. வெட்டுகிறார்கள், மூடுகிறார்கள், வெட்டுகிறார்கள், மூடுகிறார்கள்.. இதெல்லாம் ஒரே இடத்திலேயே. இப்படி ஊர் முழுதும். ஹூம்.


 12. rv said...

  வடுவூர் குமார்,
  நன்றி


 13. rv said...

  அக்கா,
  நன்றி.


  தளத்தின் முகவரி இதோ:
  http://presidentofindia.nic.in


 14. நிர்மல் said...

  //நிர்மல்,
  விழாவிற்கு தாமதமாக வந்ததுக்கு காரணம் இவ்விழாவிற்கு முன்னதாக மூன்று கல்லூரி விழாக்கள் இருந்தன. அவற்றிலும் மாணவர்களோடு கலந்துரையாடல் இருந்தது. இங்கே நடந்தா மாதிரியே அரைமணி நிகழ்ச்சிகள் ஒரு மணியாகியிருக்க வேண்டுமென்று தான் எனக்குத் தோன்றியது.
  //
  நேர மேலாண்மை முதல் குடிமகனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

  தகுந்த இடை வேளைகளில் நிகழ்சியை அமைத்திருக்கலாம்.


 15. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  நன்றி. இந்த முகவரி ஏற்கெனவெ என்கிட்டே இருக்குப்பா. கூகுளாண்டவர் கொடுத்திருந்தார்.
  வேற தனி முகவரி இருக்கோ?ன்னுதான் கேட்டேன்.


 16. rv said...

  நிர்மல்,
  //நேர மேலாண்மை முதல் குடிமகனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

  தகுந்த இடை வேளைகளில் நிகழ்சியை அமைத்திருக்கலாம்.//

  ஒன்றும் சொல்வதற்கில்லை. :))


 17. rv said...

  அக்கா,
  இதுதான் official இணைய தளம். வேறொன்றும் இருப்பது மாதிரி தெரியவில்லை.


 18. மணி ப்ரகாஷ் said...

  நல்ல பதிவு...


 

வார்ப்புரு | தமிழாக்கம்