167. மழை, பசி, கலாம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இருபத்தி நான்காம் தேதி தஞ்சாவூர் அருகில் பூண்டி கிராமத்தில் உள்ள ஆ. வீரய்ய வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களும் தமிழக ஆளுநர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருவதாக இருந்தனர். மதியம் நான்கு மணிக்குத் தொடங்கி இருபது நிமிடங்கள் மட்டுமே நடக்கப்போகிறது என்று அழைப்பிதழில் இருந்தது. மதியம் இரண்டு மணிக்கே வந்துவிட வேண்டும், கைத்தொலைபேசி கூடாது, காமிராக்கள் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்று ஏகப்பட்ட நிபந்தனைகளும் கூடவே போட்டிருந்தார்கள்.

முதலில் கூட்டத்திற்கு பயந்து போகவேண்டாமென்று நினைத்துப் பின்னர், இவருக்கு ஏன் இப்படி ஒரு cult following இருக்கிறது என்று பார்த்தே விட வேண்டுமென்று எண்ணி போவது என்று முடிவெடுத்தோம். நாலரைக்கு விழா முடிந்துவிட்டால் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெனாவட்டாக மதியம் இரண்டு மணிக்கு சென்றோம். பாதுகாப்புச் சோதனைகள் என்று பெயரளவில் கூட இல்லை. ஒரே ஒரு மெட்டல் டிடெக்டர் உள்ளே சென்று வரச் சொன்னார்கள். அதுவும் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்ததால் தகுந்த முறையில் சரிபார்த்தார்களா என்றால் இல்லை. பொதுவாக எங்காவது ரொம்ப சோதனையிட்டார்கள் என்றால் நேரம் விரயமாகிறதே என்று அலுத்துக்கொள்வோம். ஆனால், இப்படி விழாக்களுக்கும் முக்கிய இடங்களுக்கும் செல்கையில் தகுந்த பாதுகாப்புச் சோதனைகள் இல்லாவிட்டால் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கிறது. :)

திறந்தவெளி அரங்கம் தான். நடுவில் ஒரு பகுதி மட்டும் அஸ்பெஸ்டாஸ் கூரை. மிச்ச இடங்களில் பந்தல் போட்டிருந்தார்கள். மேடையிலிருந்து ஒரு இருபது அடி தள்ளிதான் பார்வையாளர்கள் வரிசைகளே ஆரம்பித்தன. அதில் நான்காவது வரிசையில் இடம் கிடைத்தது. அப்படியும் இடப்பற்றாக்குறையால் பலர் பந்தலுக்கு வெளியே. உள்ளே சென்று அமர்ந்தவுடன் பிடித்துக்கொண்ட மழை விட்டு விட்டு பெய்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அரிமா சங்கத்தின் உபயத்தில் எல்லோருக்கும் கலாமின் பொன்மொழிகள் என்று ஒரு தாளில் அச்சிட்டுத்தந்தார்கள் கூடவே மினி தினமலரும். மழை நின்றாலும் பந்தலின் உள்ளே வழிந்த சகதிநீர் மூலம் அமர்ந்திருந்த எல்லோருக்கும் தலைவழியே drips ஏறிக்கொண்டிருந்தது. வெளியில் நின்றிருந்தவர்கள் குளித்தே முடித்திருந்தார்கள். கலாமின் அறிவுரைகள் வாழ்க்கையில் உதவியதோ இல்லையோ மழையிலிருந்து பலரின் தலையைக்காக்க உதவியது.

ஒரு மணி நேரம் தாமதமாக ஐந்தரை மணி சுமாருக்குத்தான் குடியரசுத்தலைவர் வருவாரென்று மூணரை மணிக்கு அறிவித்த உடன் திடிரென்று பசிக்க ஆரம்பித்தது. எங்கும் எழுந்து போக முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்களாவது பரவாயில்லை. காலை பதினோரு மணியிலிருந்தே காத்திருந்த மாணவர்கள் கூட்டம் பொறுமையிழக்க ஆரம்பித்தது. அதுகூட எப்போதாவது ஒரு விசில் சத்தம், ஒரு கூச்சல் என்ற அளவிலே தான். அதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விழாவுக்கு டி. ஜெவாக இருந்தவர்கள் ஒலிபெருக்கியில் அவ்வப்போது 'நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்' போன்ற தத்துவப் பாடல்களை ஒலிபரப்பி கிளுகிளுப்பூட்டினார்கள். மொத்தத்தில் கல்லூரி மாணவர்கள் என்றே சொல்ல முடியாத அளவில் அமைதியாக காத்திருந்தார்கள். நடுநடுவில் போலீஸ் உயரதிகாரிகளும் மற்ற முக்கியஸ்தர்களும் கார்களில் வர, கலாம் தான் வந்துவிட்டார் என்று கூட்டத்தில் சலசலப்பு எழுந்து கொண்டிருந்தது.

தமிழ்ப்பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி, சண்முகா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் என்று பல இடங்களில் விழாக்களை முடித்து சரியாக ஐந்தரை மணிக்கு சர் சர்ரென்று உள்ளே வரிசையாக நான்கைந்து அம்பாசிடர்கள், ஒரு வெள்ளை மெர்சிடிஸ், இன்னோவா, ஐகான் அப்புறம் மறுபடி சில அம்பாசிடர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து நின்றவுடன் கறுப்பு உடையணிந்த சிறப்புக் பாதுகாப்புப் படையினர் மெர்சிடிஸின் முன் சீட்டிலிந்து வேகமாக இறங்கவே கலாமும், பர்னாலாவும் அதிலிருந்து இறங்குவார்கள் என்று கூட்டமே பார்க்க, முன்னால் இருந்த அம்பாசிடரிலிருந்து பளிச்சென்று இறங்கினார் ஜனாதிபதி. இறங்கினவர் வரவேற்பை ஏற்று ஓட்டமும் நடையுமாக கையசைத்துக்கொண்டே மேடைக்குச் சென்றார். அப்படி ஒரு உற்சாகம். இதுவரையில் மழையில் நின்று, உணவில்லாமல் பசியில் வாடிக்கொண்டிருந்த கூட்டம் அத்தனையும் மறந்து வரவேற்புக் கோஷங்கள், கைதட்டல் என்று ஆரவாரத்தில் அரசியலும் இல்லாத சினிமாவும் சாராத ஒரு தலைவருக்காக இத்தனை நேரம் காத்திருந்ததை அனைவரும், நாங்கள் உட்பட மறந்தே போனோம். தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிந்து தாளாளர் ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் மாணவர்கள் கூட்டம் ஜனாதிபதி பேசுவதைக் கேட்கவே ஆவலுடன் இருப்பதை உணர்ந்து சுருக்கமான இனிய வரவேற்புரை அளித்து அமர்ந்தார். பின்னர் வந்த மேதகு தமிழக ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டு சம்பிரதாயப்படி 'னன்றி வனாக்கம்' சொல்லி கைத்தட்டல் பெற்று அமர்ந்தார். அவர் சொல்லியது எதுவும் மாணவர் காதில் விழுந்ததோ இல்லையோ, என் காதில் விழவில்லை. கவனிக்கவில்லை. இந்தியாவே போற்றும் கலாம் அவர்கள் எப்போது பேசப்போகிறார் என்றுதான் என்னைப்போலவே எல்லோரும் காத்திருந்தனர்.

உதவியாளர் ஒரு LCD திரையை மைக் அருகே கொண்டு வந்து பவ்யமாக வைக்க, நம் குடியரசுத் தலைவர் பேச எழுந்தார். கரகோஷம் உண்மையாகவே காதைக் கிழித்தது.

19 Comments:

 1. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  //இவருக்கு ஏன் இப்படி ஒரு cult following இருக்கிறது என்று பார்த்தே விட வேண்டுமென்று எண்ணி போவது என்று முடிவெடுத்தோம்//
  //எப்போது பேசப்போகிறார் என்றுதான் என்னைப்போலவே எல்லோரும் காத்திருந்தனர்//

  கடைசியில் நீங்களும் cult-இல் இணைந்து விட்டீர்கள்! :-)
  இன்னும் ஒர் ஆண்டு தான் அவர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிப்பார் என்பதை நினைக்கும் போது, அடுத்து வருபவர் கலாம்+ ஆக இருந்தால் எவ்வளோ நல்லா இருக்கும்?

  They also serve who only stand and wait - Milton. இளைய தலைமுறைக்கு wait செய்யும் கலாமுக்கு சலாம்!

  என்ன ஆச்சரியம் பாருங்கள், நீங்கள் கவர் செய்த நிகழ்ச்சியை கலாம் அதற்குள் வலையேற்றி விட்டார்! இருந்தாலும் நான் சுட்டி கொடுக்கப் போவதில்லை! இராமநாதனிடமே இருந்தே நாங்கள் அறிந்து கொள்கிறோம்! waiting for next !


 2. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  //நாலரைக்கு விழா முடிந்துவிட்டால் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து மதிய உணவு
  சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெனாவட்டாக மதியம் இரண்டு மணிக்கு ...//

  இது கொஞ்சம் த்ரீமச் இல்லையா? மதிய உணவு அஞ்சு மணிக்கு???????


  இப்படிச் சட்னு முடிச்சா எப்படி?
  அப்புறம் என்ன ஆச்சு? என்ன சொன்னார் நம்ம கலாம்:-)


 3. Badri Seshadri said...

  சரியான எடத்துல நிறுத்தி வெச்சுட்டீங்க? அடுத்த போஸ்ட் எப்ப?


 4. rv said...

  கண்ணபிரான், ரவிசங்கர்
  //கடைசியில் நீங்களும் cult-இல் இணைந்து விட்டீர்கள்! :-)//

  கிட்டத்தட்ட அப்படித்தான்.

  நேற்றைக்கு விழாவிலேயே இங்கு தன்னிடம் கேள்விகள் கேட்க இயலாதவர்கள் வலைத்தளத்தின் மூலம் அனுப்பலாம், கண்டிப்பாய் பதிலனுப்புவேன் என்று சொன்னார்.

  நன்றி.


 5. rv said...

  அக்கா,
  //மதிய உணவு அஞ்சு மணிக்கு???????//
  என்ன செய்யறது? சண்டேவாச்சே. எல்லாமே அஷ்டகோணலாத்தான் அன்னிக்கு நடக்கும். :))


 6. rv said...

  பத்ரி,
  நாளைக் காலைக்குள் அடுத்த பதிவை இட்டு விடுகிறேன்.

  நன்றி


 7. நிர்மல் said...

  நிறைய மக்கள் கலாமை ஒரு முஸ்லீமாகவும், அவர் ஜனாதிபதி பதவி ஏற்றது மத நல்லிணக்கதுக்கு எடுத்துக் காட்டாகவும் சொல்லி அவரை பிரசாரத்துக்கு பயன் படுத்துகிறார்கள்.

  அவர் எந்த மதக்காரராக இருந்தாலும் இந்த பதவிக்கு ஏற்றவர். பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஒரு குடும்பத்திலிருந்து மேல் வந்து நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர். நேர்மையாக இருந்தால் வாழ்வில் முன்னேறம் வராது என்ற போலித்தனமான நம்பிக்கைகளை உடைத்துக் காட்டியவர். உயர்வான கருத்துகளையும், கொள்கைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு உண்டு.அவரை வெறும் cult என்ற வார்த்தையில் அடைக்காமல் இருத்தல் நலம். அவர் நம் குழந்தைகளுக்கு role model.


 8. rv said...
  This comment has been removed by a blog administrator.

 9. rv said...

  நிர்மல்,
  //நிறைய மக்கள் கலாமை ஒரு முஸ்லீமாகவும், அவர் ஜனாதிபதி பதவி ஏற்றது மத நல்லிணக்கதுக்கு எடுத்துக் காட்டாகவும் சொல்லி அவரை பிரசாரத்துக்கு பயன் படுத்துகிறார்கள்//
  இப்படியும் கேள்விகள் இருந்தன. அதற்கும் அருமையாக பதிலளித்தார்.

  உழைப்பிற்கு அடையாளம் என்பது வேறு. அதற்கு கிடைத்தது பாரத ரத்னா. அரசியலும் கூடவரவே, வந்தது குடியரசுத்தலைவர் பதவி என்பதுதான் என் எண்ணம். அவரின் தகுதியை மதிப்பீடு செய்யவில்லை. எனக்கு அந்த யோக்கியதையும் கிடையாது. சந்தர்ப்பங்கள் சாதகமாக இருந்தன என்று மட்டும்தான் கூறுகிறேன்.

  நன்றி.


 10. ENNAR said...

  ராமனாதன்
  நன்றி நான் அங்கு கலந்து கொண்டது போல் நேரடி வரணணைபோல் செய்து விட்டீர்கள்


 11. Unknown said...

  ஹை நேத்து மட்டுமே தமிழ்நாட்டுல நிறைய ஊருக்கு போயிருக்காரு போலருக்கே. எங்க ஊருக்கும் போனாராம், எங்க அப்பா பேர் எல்லாம் பேப்பர்ல வந்திருக்குன்னு நானும் இன்னிக்கு என்கிட்ட மாட்டினவுங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் :D


 12. rv said...

  என்னார்,
  மிக்க நன்றி.

  மெகா சீரியல் ரைட்டர் ஆயிடலாம்னு சொல்லாம சொல்றீங்களா? :))


 13. rv said...

  wa,
  இது என்னது இது? எந்த ஊரு என்னன்னு சொன்னாத்தானே எங்களுக்கும் என்ன சேதின்னு புரியும்??

  நம்ம ஜனாதிபதி தமிழ்நாட்டையே ஒரு ரவுண்ட் விட்டுட்டு வந்துருக்காரு. இதுல நாங்க எங்கனு போய் யூகிக்கிறது? திண்டுக்கல்லா?


 14. இலவசக்கொத்தனார் said...

  யோவ் இதுக்கெல்லாம் தொடர் போடறது கொஞ்சம் ஓவராத் தெரியலை? சீக்கிரம் சொல்லும்.

  அது சரி கே.ஆர்.எஸ்., கலாமுக்கு இன்னொரு சான்ஸ் இல்லைன்னே முடிவு பண்ணிட்டீங்களா?


 15. rv said...

  // யோவ் இதுக்கெல்லாம் தொடர் போடறது கொஞ்சம் ஓவராத் தெரியலை? சீக்கிரம் சொல்லும்.
  //

  ஹி ஹி.. என்ன கொத்ஸு? பின்ன கரண்ட் அபேர்ஸ் பதிவ வச்சுகிட்டு வேற எப்படி ஓட்டறதாம்?

  அதுவே பாருங்க, இன்னிக்கு அடுத்த பதிவ போடறேன்னு சொன்னேன். முடியாமப் போயிடுச்சு. நாளை நாளைக்கு போடறதுக்குள்ள ஊசிப்போயிடும். இந்த மாதிரி மேட்டருக்கெல்லாம் இட்லிவடை தான் லாயகுன்னு நினைக்கிறேன்.


 16. குமரன் (Kumaran) said...

  குடுத்து வச்சவரய்யா நீர். கலாம் ஐயாவை நேர்ல பாத்தாச்சா? நல்லது. எனக்கும் ஒரு வாய்ப்பு வராமலேயேவா போயிடப் போகுது.

  விரைவிலேயே அடுத்தப் பகுதியைப் போடுங்க ராம்ச்.

  ரவிசங்கர் – இன்னொரு முறை கலாமுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்கன்னா நெனைக்கிறீங்க?


 17. Kannabiran, Ravi Shankar (KRS) said...

  //இலவசக்கொத்தனார் said...
  அது சரி கே.ஆர்.எஸ்., கலாமுக்கு இன்னொரு சான்ஸ் இல்லைன்னே முடிவு பண்ணிட்டீங்களா?

  குமரன் (Kumaran) said...
  ரவிசங்கர் – இன்னொரு முறை கலாமுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்கன்னா நெனைக்கிறீங்க?//

  ஆகா அதுக்குள்ள 2 பேர் அடிக்க வராங்க! :-)
  கொத்ஸ், குமரன் ,
  கலாமுக்கு கொடுத்தா நம்ம எல்லாருக்குமே கொடுத்தத விட மகிழ்வோமே! பத்திரிகைகள் எல்லாம் மறு வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை-ன்னு தான் எழுதுகின்றன.

  நம்ம கலாம் அய்யாவும் ஆசிரியர் ஆகத் தான் விருப்பம். 2nd round ஆசையில்ல-ன்னு சொல்லிட்டாரு!

  முன்னேற்றத்தின் முனையில் பாரத தேசம் நிற்கும் இவ்வேளையில், பிரதமர் உறுதியாக நிற்க வேண்டும், "we want kalam" என்று!

  சோனியாவும் இதில் உறுதியாக நின்றால், அவர் முன்பு செய்ததாகச் சொல்லப்படும் "தியாகங்கள்" எல்லாவற்றுக்கும் மதிப்பு கூடும்.


 18. rv said...

  குமரன்,
  அடுத்த பதிவும் போட்டாச்சு. நீங்களும் பின்னூட்டியாச்சு.

  அப்புறம் என்ன இதுக்கு இந்த பின்னூட்டம்னு நினைக்கிறீங்களா? ஹி ஹி..


 19. rv said...

  கண்ணபிரான், ரவிசங்கர்
  நான்கூட முன்னாடி இவரு என்ன அப்படி செஞ்சுட்டாருன்னு நினச்சுகிட்டிருந்தேன்.

  இவருக்கே திரும்ப கொடுத்தாக்க நல்லதுதான். ஆனா சந்தேகமால்ல இருக்கு. ஏன்னா தியாகி அன்னை சோனியா இவர திரும்ப உக்கார வப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்லை. :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்