160. வாழ்க வளமுடன்!

இரண்டு சம்பவங்கள். ஒன்றுகொன்று சம்பந்தமில்லாதவை.

ஆனாலும் சம்பந்தமுண்டு. இப்படிச் சொல்லி சில மாசங்கள் முன்னாடி இங்க விளையாட்டு நடந்துது. அது மாதிரி இது ரெண்டும். எனக்கு ஏதோ ஷங்கர் படம் பார்ப்பது போலிருந்தது இந்த ரெண்டு கதைகளையும் கேட்டுவிட்டு. ஒன்றும் சொல்லிக்கொள்கிறா மாதிரி இல்லை.

1) தெரிந்தவரொருவர் அவர் வளர்ந்த கிராமத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணினார். இப்போது பெருநகரங்களுக்கு அவரும் அவர் பிள்ளைகளும் குடிபெயர்ந்துவிட்டாலும், அவரின் பூர்வாங்க வீடு கிராமத்தில் தான் இருக்கிறது. அதை ஒரு முதியோர் இல்லம் மற்றும் இலவச மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென்று முடிவு செய்து பழைய கால வீட்டை நான்கைந்து லட்ச ரூபாய் செலது செய்து புனரமைத்து, மருத்துவமனை புதிதாய்க் கட்ட மேலும் சில லட்சங்களும், மாதந்தோறும் அதை நடத்த தேவையான பணத்தை corpus fund ஆகவும் போட்டு ஒரு அறக்கட்டளை நிறுவி, கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை அறங்காவலர்களில் ஒருவராக நியமித்தார்.

விஷயத்துக்கு வருவோம். இதில் இலவச முதியோர் இல்லம்/மருத்துவமனை நடத்த தேவையான தீயணைப்புத்துறை உரிமம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து உரிமம் மற்றும் இன்னபிற உரிமங்கள் சில பெற வேண்டியிருக்கிறது. உரிமம் தருவதற்கு தாசில்தார் சோதனைக்கு வரவேண்டுமல்லவா? ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நண்பரால் இங்கே வந்துபோவது நடக்கக்கூடியதா? அவர் அனுப்பிய ஆள் இந்த ஆபீஸுகளுக்கு போகும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாக்குபோக்கு சொல்லி இழுத்தடித்து வந்துள்ளனர். ஒருவழியாக வர ஒத்துக்கொண்ட தாசில்தார் கிளம்புமுன் அவரின் ஜீப் ட்ரைவர் "வண்டி ஸ்டார்ட் ஆகாது போலிருக்கு சார்" என்று பல்லவி பாட, அவரையும் 'கவனிக்கிறேன்' என்று நண்பர் சார்பில் சென்றவர் சைலண்டாய் சைகை காண்பிக்கவும், மேஜிக் போல் மக்கர் செய்த வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. டிரைவருக்கு நூறு ரூபாய். பைல் தூக்கி வந்த பியூனுக்கு நூறு ரூபாய் என்று அங்கேயும் இங்கேயும் தாசில்தார் ஆபீஸில் மட்டும் அழுதது ஐயாயிரம் ரூபாய்.

தீயணைப்புத்துறை, நண்பரின் நல்ல காலம், இளம் அலுவலர் ஒருவர் புதிதாய் பொறுப்பேற்றிருந்ததால் 'கவனிப்பு' எல்லாம் கேட்காமல் நேர்மையாய் வேலையை செய்துவிட்டார். ஏன் பணம் கொடுத்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்றால், நண்பரின் அவசரம் அவருக்கு. தன்னால் நேரடியாக எதையும் வந்து செய்ய முடியாது. அனுப்பும் ஆட்களும் மற்றவர்களுடையவர்கள். அவர்களையும் நிரந்தரமாக அலையவிட முடியாது. அதனால் கொடுப்பதை கொடுத்து வாங்க வேண்டிய சான்றிதழ்களை வாங்கிவிடவேண்டும் என்கிற அவசரம். இந்த ஐயாயிரம் ரூபாய் இன்னும் ஓரிரு நோயாளிகளுக்காவது/முதியோர்களுக்காவது பயன்பட்டிருக்கும்.

பொதுச்சேவைக்காக தன் சொந்த வீட்டையும் கொடுத்து, பணத்தையும் லட்சக்கணக்கில் செலவு செய்பவரிடம் 'அட்டை'களைப் போல பணத்தை உரியும் இந்த ஜந்துக்கள் வளமாகத் தான் வாழ்கிறார்கள். வாழட்டும்!

2) இது இன்னும் மோசம். இவரும் தெரிந்தவர்தான். வசதிகள் கொஞ்சம் குறைவுதான். இருபது வயது நிரம்பிய இவரின் மகன் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்துபோனார். அரசு பிரேதக் கிடங்கிலிருந்து பிரேதத்தை கொடுக்க போலிஸ் அனுமதி தரவேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கின்றனர். ஆனால், சென்றவர்களிடம் எல்லாம் சேர்த்து பார்த்ததில் எழுநூற்றி சொச்சம் தான் இருந்திருக்கிறது. பிரேதத்தை வாங்க வந்தவர்களிடம் ஆயிரம் ரூபாயை வைத்துவிட்டுத்தான் நகரவேண்டும் என்று அடாவடி செய்த போலிஸாரிடம் நியாயம் கேட்க.. அவர்கள் சொன்னது 'என்ன ஊர் உலகத்துல எல்லாரும் பணம் கொடுத்துதானே எடுத்துகிட்டு போறான். உங்களுக்கு மட்டும் என்ன தனியா சொல்லி வாங்கிக்கணுமா.. பணத்த வச்சுட்டு நகருய்யா'. இவர்களிடம் முட்டைகோஸ் வியாபாரம் போல் பேரம் பேசி கடைசியில் எழுநூற்றியைம்பது ரூபாய்க்கு தங்கள் ரேட்டை பெரியமனது செய்து குறைத்துக்கொண்டு பிரேதத்தை எடுத்துச் செல்ல அனுமதி தந்துள்ளனர் போலீஸார். எல்லாரும் நல்லா இருங்கய்யா! இந்தியா உருப்படும்.இதைப் போன்ற அரக்கர்களை 'சோரிகக்கக் கூரகட் டாரியிட்டோரிமைப் போதினிற் கொல்ல' அந்த முருகன் என்று வரப் போகிறானோ. அதுவரை எல்லோரும் வளமுடன் வாழட்டும்!

10 Comments:

 1. G.Ragavan said...

  அரசாங்க வேலைன்னாலே இப்படித்தான்னு ஆகிப்போச்சு ராமநாதன். அதுலயும் போலீசு...அப்பப்பா.....என்னவோ இவங்கதான் ஒலகத்த காப்பாத்த வந்தவங்க மாதிரி போடுற ஆட்டமும் நடத்துற வசூலும்....இவங்கள நம்பி நாமளும் இந்த நாட்டுல வாழவேண்டியிருக்கே!


 2. மணியன் said...

  இவர்கள் யாருமே அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் இல்லை. அரசிடமும் பணத்தை உறிஞ்சிக் கொண்டு மக்களிடமும் உறிஞ்சும் அட்டைகள்தான். உப்பு சேர்த்திருந்தால் ஒழியும்.


 3. Hariharan # 03985177737685368452 said...

  அரசியல் திரா'விட இயக்கத் தலைவர்களான நவீனகாலச் சோழர்கள் ஆட்சிக்கு வந்து இந்த 40 ஆண்டுகளில் முற்போக்காக சிந்தித்து நல பழக்கங்களை நிந்தித்து, வெட்டியாய்ப் பேசிப் பேசி மரபுகள் கட்டுடைத்ததில் விளைந்த நற்பயிர் இது.

  அடிபட்டு இறந்து கிடப்பவனின் மோதிரத்தை, பர்ஸைக்கூட திருடக் கூடிய மனோபாவத்தை ஒருவனுக்குத் தருவது, ஆட்சியாளர்களே திருடர்கள் தானே என்ற பரந்துபட்ட உண்மையை பகுத்தறிவுடன் அறிந்திருப்பதும் - இம்மாதிரி கயமைத்தனம் இன்று தினசரி வாழ்வில் பிரித்திடமுடியாத அளவுக்கு ஊடுருவிக்கிடக்கிறது.

  ஒரு முறை பொருள் திருடுபோனதுக்கு கம்ப்ளைண்ட் தர போலீஸ் ஸ்டேஷன் போனபோது நான் அறிந்து கொண்டது திருடனே பரவாயில்லை என்பதே. சீருடை அணிந்த கொள்ளைக்காரர்கள் நீக்கமற நிறைந்தது நம் தமிழக ஸ்காட்லாந்து யார்டு. ஆட்சி செய்வது கரைவேட்டிக் கயவர்கள்.

  பின்ன நாடு இப்படி "சுபிட்சமா" இருக்க வேண்டியதுதான்.


 4. Unknown said...

  இப்போது தான் ஊருக்குப்போய் அங்கே சில இடங்களில் "அழுது" விட்டு வந்திருக்கிறேன். நீர் நினைப்பையெல்லாம் கிளறிவிட்டீர்.

  மின்வாரியத்தில் ஒரு பெயரில் இருந்த இணைப்பை மற்ற பெயருக்கு மாற்ற, அரசாங்கம் அளித்த ரசீது ரூ.100க்கு. மொத்தம் நான் 'அளித்தது' ரூ.750.

  தண்ணீர் வரி/வீட்டு வரி - இவைகளுக்கும் பெயர் மாற்றப்பட வேண்ட அரசாங்க ரசீது ரூ. 150, நான் அளித்தது ரூ. 850.

  எல்லாவற்றிற்கும் ஒரு அட்டவணை போட்டு வசூலிக்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் பிணக்கிடங்கிலும், சுடுகாட்டிலும் இப்படி செய்வது தான் ..... நீங்கள் சொல்லியது போல அந்த முருகன் தான் வர வேண்டும்.


 5. நாகை சிவா said...

  முதல் மேட்டர கூட ஒரு மாதிரி சகித்துக் கொள்ள முடிகின்றது. இந்த இரண்டாவது விசயத்த கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. மனிதாபிமானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்ப்பார்கள் போல உள்ளது. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம், இல்ல இல்ல சாவலாம்.


 6. rv said...

  ஜிரா,
  இப்படித்தான் எத்தனை நாளைக்குத்தானோ?

  அடுத்தவங்க வயித்துல அடிச்சு சாப்பிட்டுட்டு, இவங்களுக்கெல்லாம் இராத்திரி எப்படித்தான் தூக்கம் வருதோ?


 7. rv said...

  மணியன்,
  ஒரு நாளைக்கு ஐயாயிரம் பத்தாய் டார்கெட் வச்சு, அது கிடைக்கற வரைக்கும் வீட்டுக்கே போக மாட்டாங்க போலிருக்கு.


 8. rv said...

  ஹரிஹரன்,
  இது ஒண்ணும் திராவிட கட்சிகளுக்கே உரித்தான விஷயம் இல்லையே. நம் நாட்டுல எல்லா ஸ்டேட்லயும் நடக்கிறதுதானே.

  சில சமயங்களில் நீங்க சொல்றா மாதிரி திருடனே தேவல தான்.


 9. rv said...

  துபாய்வாசி,
  //எல்லாவற்றிற்கும் ஒரு அட்டவணை போட்டு வசூலிக்கிறார்கள். //
  கரெக்ட். இத அப்டியே ஒரு பிரிண்ட்-அவுட் எடுத்து மாட்டிட்டா வரவங்களுக்கு சவுகரியமா போயிடும்னு நினைக்கறேன். பாதி நேரம், இது சரியில்ல அது சரியில்லன்னு திருப்பி திருப்பி அனுப்ப மாட்டாங்கல்ல.


 10. rv said...

  நாகை சிவா,
  உண்மைதான். நமக்கு வயிறு எரிகிறது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று எண்ணுகையில். அவர்கள் என்னவோ இதற்கெல்லாம் கவலைப்படாமல், ப்ராக்டிக்கலா பேசுங்க சார்னு வாங்கி தள்ளிகிட்டுருக்காங்க.


 

வார்ப்புரு | தமிழாக்கம்