திருவிழாக் கோ(கா)லம்!

அப்பாடா! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடின்னு நொந்துகிட்டே ஓரமா உக்காந்து பாடிகிட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மாசம். ஆறுமாசம் ஆறுவருஷமாட்டம் போச்சு. சரி சரி ஓவர் பில்டப் எதுக்கு. ஒருவழியா இவ்ளோ நாள் ஆவலோட காத்துகிட்டிருந்த திருவிழா எந்தவித தடையுமில்லாம நேத்திக்கு (மார்ச் 12) சண்டை சச்சரவு எதுவுமில்லாம இனிதே நடந்து முடிஞ்சத பாத்தோன நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அப்படி என்ன திருவிழா அன்னிக்குன்னு யோசிக்கற ஆளா நீங்க? அப்படின்னா, இதுக்கு மேல படிக்காதீங்க. சரி, போனாப் போகுது.. இந்தப் பாழாப்போன கிரிக்கெட்டே கதின்னு கெடக்கற ஆளுகளையும் கரையேத்த வேணாமா? அதுக்காக மேல் விபரங்கள். திருவிழா நடந்தது பஹ்ரைன்ல. Gulf Air Sakhir Bahrain Grand Prix. ஒருவழியா பார்முலா 1 ஆரமிச்சுடுச்சு இந்த வருஷத்துக்கு. என்னடா வழக்கமா ஆஸ்திரேலியால தானே ஆரமிப்பாங்கன்னு யோசிக்கறவங்களுக்கு இன்று ஒரு தகவல். CommonWealth Games இப்போ அங்க நடக்கறதால, Adelaide Park-க்காரங்க கொஞ்சம் காலெண்டர மாத்திக்கோங்கன்னு FIA-வ கேட்டுக்கவே, பஹ்ரைனுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ்.

இந்தவருஷம் நிறைய மாற்றங்கள். எஞ்சின்ல ஆரமிச்சு டெக்னிக்கலாகவும், தகுதிச்சுற்று விதிமுறைகள் போன்ற சில விதிகளிலும், அப்புறம் பொதுவா டீம் களிலும் நிறைய மாற்றங்கள். நான்கு புது டீம்கள் (உண்மையா சொன்னா ஒரு புது டீம், மிச்ச ரெண்டுத்தலயும் change of ownership) வந்தது பார்முலா 1-க்கே புதுரத்தம் மாதிரி இருக்கு. ரெனோ முதலிடத்தைத் தக்கவச்சுக்க என்ன செய்யப்போகுது, இந்த வருஷமாவது கிமிக்கும் மாண்டோயாவிற்கும் உடையாத காரை மெக்லாரன் தருமா, பெராரி-ஷுமாக்கர் என்ன செய்யப்போறாங்க, பார் ஹோண்டாவில் பாரிஷெல்லோவின் பங்கேற்பு, சண்டை போட்டு பிரிஞ்ச வில்லியம்ஸும் பி.எம்.டபிள்யு அணிகளில் யாருக்கு இந்த வருஷம் அதிக வாய்ப்பு, நிக்கோ ரோஸ்பெர்க் மற்றும் ஸ்காட் ஸ்பீட் போன்ற புதுமுகங்கள் ன்னு நிறைய கேள்விகள். எதிர்ப்பார்புகள்.

இந்த வருஷம் விதிமுறைகள்ல ரெண்டு முக்கியமான மாற்றங்கள். முதலில், தகுதிச்சுற்று முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. போன வருஷம், ரெண்டு ரவுண்டா இருந்தது இந்த வருஷம் மூணு ரவுண்ட் ஆகியிருக்கு. எப்படின்னு பாப்போமா? முதல் சுற்று 15 நிமிடங்கள். இதில் 22 கார்களும் பங்கேற்க வேண்டும். எல்லா ஓட்டுநர்களின் லாப்-டைம்களைப் பொறுத்து ஒன்றிலிருந்து வரிசை வழங்கப்படும். இதில் 17-22 வரைக்கும் வருவோர் அடுத்த சுற்றிற்கு செல்ல முடியாது. பந்தயத்தன்று 7-11 வரையிலான வரிசைகளில் தான் ஆரம்பிக்க வேண்டும். மற்ற 15 ஓட்டுநர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். முந்தையதைப் போலவே பதினைந்து நிமிடங்கள். இதில் 11-16 வரையிலான பந்தய இடங்களுக்கு ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தவிரு சுற்றுகளை, சென்ற வருஷத்தோடு ஒப்பிடுகையில் முக்கியமான மாற்றம், எரிபொருளின் அளவு.

சென்ற வருடத்தின் விதிகளின் படி, actual பந்தயத்தில் கலந்துகொள்ளும் போது பயன்படுத்தவிருக்கும் எரிபொருளின் அளவு தகுதிச்சுற்றிற்கு முன்னரேயே முடிவு செய்யப்பட வேண்டும். அதில் மாற்றங்கள் பின்னால் செய்ய முடியாது. அதனால், சென்ற ஆண்டு தகுதிச்சுற்றுகளில் கார்களின் மொத்த potential உக்கு வேலையே இல்லை. பந்தயத்தில் ஒருபகுதிபோலவே இருந்தது. இந்த வருடம் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு மிகக் குறைவான அளவில் எரிபொருள் கார்களுள் இருப்பதால், அவற்றின் வேகம் அதிகமாகும். (இதில் வேறொரு புது விதி வந்துள்ளது, அதைப்பற்றி பிறகு பார்ப்போம்). இன்னும் இண்டெரெஸ்டிங்காக இருக்கிறது இப்புதிய பார்மாட்டில்.

மூன்றாவது இருபது நிமிட கடைசி தகுதிச் சுற்றில், சென்ற ஆண்டைப் போன்று, பந்தயத்திற்கான எரிபொருள் அளவே பயன்படுத்தப் படவேண்டும். இதன் முடிவுகளை வைத்து ஒன்றிலிருந்து பத்து வரைக்குமான வரிசைக்கிரமம் உருவாக்கப்படும். இந்த எரிபொருள் கட்டுப்பாடு தளர்க்கப்பட்டதால் நேற்றைக்கு பெரிதும் பயனடைந்தவர் மெக்லாரனின் கிமி ராய்க்கோனன். தகுதிச்சுற்றின் ஆரம்பத்தில் சஸ்பென்ஷன் தகராறால், பந்தயத்தில் இருபத்தியிரண்டாவது இடத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை வந்தும், சமயோசிதமான பிட்-ஸ்டாப் strategy மூலம் பாயிண்ட்களை அள்ள முடிந்தது. தகுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் மைக்கேல் ஷுமாஹர், பெலிப்பே மாஸ்ஸா மற்றும் பெர்னாண்டோ அலோன்ஸோ. அலோன்ஸோவை எதிர்ப்பாத்திருந்தாலும் பெராரியின் முன்னேற்றத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல மாஸ்ஸாவின் இரண்டாவது இடத்தையும்.

விதிமுறைகளில் இன்னொரு முக்கியமான மாற்றம். Pit Stop Tyre Changes. சென்ற வருடம் இது தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது ஒரு ரேஸின் இடையில் எரிபொருள் நிரப்புகையில், டயர் மாற்றம் செய்யக்கூடாது என்ற முட்டாள்தனமான விதி இருந்தது. இதனால் பெரும்பாலான ரேஸ்களின் போக்கை இந்த மிஷெலின் vs. பிரிட்ஜ்ஸ்டோன் சண்டையே நிர்ணயித்தது. மேலும், இண்டியானபோலிஸில் நடந்த கேலிக்கூத்தையும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. நல்ல வேளையாக இந்த தடவை, மாஸ்லியின் மண்டையில் யாரோ நன்றாக தட்டி, அவரை தெளிவுறச் செய்திருக்கின்றனர். நல்லதுதான். அதனால் இம்முறை எரிபொருள் நிரப்புகையில் டயர்களை மாற்றலாம் என்றும், ஏழு செட் டயர்கள் வரைக்கும் ஒரு ரேஸ் வீக்கெண்டிற்கு பயன்படுத்தலாம் என்று விதி தளர்த்தப்பட்டிருக்கிறது. வீக்கெண்ட் என்றால் வியாழன்று பொதுவாக ஆரம்பிக்கும் பயிற்சி சுற்றுகளையும் சேர்த்து ரேஸ் முடியும் ஞாயிறு வரை.

ரேஸ் பார்த்தவுடனேயே பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. ஆனால், அதைப் பார்த்தவுடன் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பார்முலா 1 மிகவும் விறுவிறுப்பாய் இருக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்துவிட்டது. ரெனோவின் தொடரும் பார்ம், பெராரியின் புத்துணர்ச்சி தவிர மெக்லாரன் மற்றும் BAR ஹோண்டாவும் competitive ஆக இருக்கின்றன. குறைந்தபட்சம், இந்த ஆண்டு இந்த நான்கு முனைப்போட்டியாவது இருக்குமென்று நினைக்கிறேன். சென்ற ஆண்டைப்போல இருமுனைப்போட்டியாக அல்லாமல் இருந்தால் நம்மைப்போன்ற ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே. ரேஸைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்