குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடா?

பல நாட்களுக்கு முன்னர் எழுதியது. குடிப்பழக்கம் என்பது தனி மனித சுதந்திரமா என்று சர்ச்சை நடக்கும் வேளையில் மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியதால் செய்கிறேன். இதனால் நான் குடிப்பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்பது இல்லை. சிலருக்கு டிவி ட்ராமா, சினிமா மோகம் மாதிரியே இதுவும் தனி மனிதனைச் சார்ந்தது என்பது என் எண்ணம். இனி ஒரிஜினல் பதிவு

---

மிகவும் பிரபலமான "slogan" இது இந்தியாவில். ஆனால் உண்மையா இது? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாக உண்டு. குடிகாரன் எனப்படுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். Lite, medium, மொடாக்குடிகாரன் இல்லை addict.

வெளிநாடுகளில் லைட் வகையறாக்களைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. social drinking என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இங்கே ரஷ்யாவில் வாரத்தில் குறைந்தது மூன்று நான்கு வேலை நாட்களில், வேலைக்குப்பின் இரண்டு மூன்று பியர்கள் என்பது கிட்டத்தட்ட கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. வாரயிறுதியிலோ ஒருமுறையாவது hard alcohol என்பது வழக்கம். குறிப்பாய் 'வோட்கா'. இங்கே ஜோக் கூட உண்டு. தாகமெடுத்தால் பியர் குடிப்பது மினரல் வாட்டர் குடிப்பதை விட மலிவு என்று.

மீடியம் ஆல்கஹாலிக்ஸ் எனப்படுபவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்தால் மட்டுமே addicts ஆகின்றனர். அதுவும் கூட addiction என்பதன் விளக்கம்: "A chronic brain disorder characterized by the loss of control of drug-taking behavior, despite adverse health, social, or legal consequences to continued drug use."

இவ்விளக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூதாயம் மற்றும் சட்டம். இந்த duties-ஐ ஒருவன் மறந்து குடி உள்பட எவ்வகை போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அது addiction-ஆக கருதப்படும். அதற்கு மருத்துவசிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் குடிப்போரை (குடிகாரர்கள் என்பது கொஞ்சம் derogatory-ஆக ஒலிப்பதால்) பெரும்பாலும் இகழ்வது வழக்கமாய் உள்ளது. சோமபானத்தை அருந்தி மகிழ்ந்த தேவர்களை வணங்கும் நாம் ஏன் குடிப்பழக்கத்தை (இதிலும் பழக்கம் என்பது habit என்றில்லாமல் addiction என்றே தொனிப்பதாய் தெரிகிறது) இப்படி நம் சமூகம் வெறுக்கிறது என்பது புரியவில்லை.

மது, அதிலுள்ள alcohol மற்றும் சிகரெட்டில் உள்ள சில வஸ்துக்கள், போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் பல மருந்தாய்ப் பயன்படும் பொருட்களும் இந்த dependence-ஐ (மருத்துவத்துறையில் இதுவே preferred term. addiction என்பது மருத்துவத்துறைக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது) விளைவிக்கின்றன. சிகரெட்டின் தீமைகளை திண்ணமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல் மதுவிற்கு இல்லை. சொல்லப்போனால், குறைந்த அளவில் ஆல்கஹால் (ஆலகால விஷம் இது தான் என்று வைத்துக்கொண்டால், நீலகண்டன் நிரந்தரமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார் :) ) உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில ஆராய்ச்சிகளில் பியர் குடிப்பதன் மூலம் புதிய synapses உண்டாவதாகக் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பியர் குடிப்பதன் மூலம் அறிவு வளர்ச்சி என்று மேம்போக்காக சொன்னாலும், புதிய சினாப்ஸகளின் வேலை மது dependence-ஐ உண்டாக்குவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. மேலதிக விவரம் தெரியவில்லை.

'அளவிற்கு அதிகமானால்' என்பதாகவே ஆல்கஹாலினால் விளையும் தீமைகளும். alcoholic liver disease மற்றும் மிகவும் கடைசி நிலையில் liver cirrhosis-உம் உண்டாகும். இதில் ALD வெளிப்படுவதற்கு குறைந்த பட்சமாக ஐந்து வருடங்களோ அதிகபட்சமாக பத்து வருடங்களாகவோ தினமும் 30 கிராம் வெறும் ஆல்கஹால் units அருந்தியிருக்கவேண்டும். பலவருடங்களாக தினமும் குடிப்பது அதுவும் 5 வருடங்களாக என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். இந்த மருத்துவ சான்று ஒன்றினால், சரி இனிமே குடிப்போம் என்று நினைப்பவர்களுக்கு. ஆல்கஹால் அட்டிக்ஷன் என்பது மிகவும் கொடியது. அட்டிக்ஷன் என்றில்லாமல் இப்போதைய பேஷனான binge-இன் மூலமும் பாதிப்புகள் உருவாகலாம். நேரிடையாக பாதிக்கப்படும் கல்லீரலைத் தவிர பான்கிரியாஸ் போன்ற மிச்ச இடங்களிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், நீங்கள் மிதமாவோ லைட்டாவோ குடிப்பவர்களானால், அப்படியே இருப்பது உத்தமம். குறிப்பாக, இரத்தக்கொதிப்பு நோயுடையோர் அடியோடு நிறுத்துவதுதான் நல்லது.

சரி, மருத்துவப்படி dependence state-ஐ தவிர மிதமாய்க் குடிப்போர்க்கு பயப்படுவதற்கு பெரும்பாலும் ஒன்றுமில்லை. இப்படியிருக்கையில், சமூகத்தில் ஏன் இத்தனை இகழ்வு என்பது விந்தை. அடுத்த மனிதரையோ சமூகத்தையோ தொல்லைப்படுத்தாதவரை ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இது தனிமனித அல்லது நண்பர்களுடான harmless பொழுதுபோக்கு என்று கருதாமல் சமுகம் ஏன் சர்ச்சைப்பட வேண்டும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

மேற்கத்திய சமூகம் குடியைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் போதைப்பொருட்களை பொறுப்பதில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் அமெரிக்க பழங்குடியினரிடத்தும் தெற்கமெரிக்க பழங்குடியினரிடத்தும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே போ.பொ விளங்குகின்றன. இன்னும் ஒரு சில சமூகங்களிடையே, shamans எனப்படும் நம்மூர் கடவுளிடம் பேசும் பூஜாரிகள் போன்றோர் தம்முடைய சடங்குகளில் peyote எனப்படும் போதை வஸ்துவை பயன்படுத்தியே கடவுளைக் காண்கின்றனர். கலாச்சார வித்தியாசம் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. கலாச்சாரங்கள் மாறும் நேரத்தில், மற்றவரை எவ்வகையிலும் தொல்லைப்படுத்தாத வித்தியாசம் என்று சொல்லுவதால், அது தனி மனித உரிமை ஆகிவிடுகிறதல்லவா?

அந்த ஆண்டவன் சொல்றான்!

பிபிசியில பாலஸ்தீனிய தகவல்தொடர்பு அமைச்சர் நபில் ஷாத்தை பேட்டி கண்டபோது சொல்லிருக்காரு...

2003 ஜூன்ல இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடந்தது. அதில் ஜனாதிபதி புஷ் எல்லார்கிட்டேயும் சொல்லிருக்காரு "'I'm driven with a mission from God'. God would tell me, 'George go and fight those terrorists in Afghanistan.' And I did."

இது தாலிபான் பத்தி ஆண்டவன் சொன்னது. அதுக்கப்புறம் கூடுதலா இராக் பற்றியும் ரொம்பவே புஷ்ஷிடம் வருத்தப்பட்டிருக்காரு. "And then God would tell me,' George, go and end the tyranny inIraq' And I did."

இன்னிக்கு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் இது கட்டுக்கதைன்னு மறுத்திருக்காரு.

ஆண்டவனே வந்து பர்சனலா வருத்தப்பட்டுகிட்டா என்னா செய்வார் பாவம் நம்ம ஜார்ஜு? இப்படி என்னிக்காவது இந்தியா சரியில்ல புஷ் தம்பி, நம்ம படைகளை அனுப்பி அவுங்க கொட்டத்தை அடக்குன்னு சொல்லித் தொலைக்காம இருக்கணும்!

Independent

என் பாஸ்தா புராணம்!

இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.

பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.

பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.

சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்

கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?

1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.

அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?

அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.

இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.

இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.

சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.

சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.

எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.

இது தனியா கஷ்டப்படறவங்கள்ள சமைக்கணுமேன்னு ஆர்வம் உள்ளவங்களுக்கு. அப்படி இல்லாதவங்களுக்கு வேற ரெசிபி முன்னாடியே இங்க சொல்லிருக்கேன்.

மேலும் விபரங்களுக்கு

1. iLovePasta
2. Delia Smith

இதைப் பார்த்த ஆர்வத்தில் எழுதியது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்