உங்களில் பெரும்பாலானாவர்கள் ஒரு தடவையாவது இந்த ஓவர்புக்கிங்கினால் அவதிப்பட்டிருப்பீர்கள். விமான பயணச்சீட்டு வைத்திருந்தாலும் விமானத்தில் பறக்க இடமில்லை என்று சொல்லி துரத்திவிடுவார்கள். கூடவே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும், சாப்பாடு கூப்பன்கள், தொலைபேசி அட்டைகள் மற்றும் இன்னபிற.
பெரும்பாலும் அதிக டிமாண்ட் உள்ள ரூட்களில் எகானமி பிரிவில் தான் நடக்கும். சரி, ஓவர்புக்கிங் எப்படி சாத்தியம்? பயணச்சீட்டு இருந்தால் விமானத்தில் இடமில்லை என்று எப்படி உரிமை மறுக்கலாம் என்று கேட்கலாம். ஆனால், IATA விதிகளின் படி இது சாத்தியம். சராசரியாக ஒரு ப்ளைட்டில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாகவே இருக்கும். இவற்றிற்கு "no shows" என்று பெயர். இதனை சரி செய்ய, எத்தனை பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே predict செய்து அதற்கு தகுந்தாற்போல் அதிக அளவு டிக்கட்டுகள் விற்கப்படும். இவற்றின் எண்ணிக்கை, மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும். இந்த ஓவர்புக்கிங்குகள் தினந்தினம் நடந்து வருவதுதான் என்றாலும், சில நேரங்களின் "no shows" எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தால் இருக்கைகளைவிட அதிக பயணிகள் என்றாகிவிடும். ஸ்டாண்டிங், புட்போர்ட் மற்றும் கிரில் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்றவை சாத்தியமில்லையதனால் பயணிகளை குழுக்களாக பிரிப்பார்கள். முதலில் டிரான்ஸிட் மற்றும் connection flights உள்ளோர். இவர்களுக்கு முன்னுரிமை. இவையில்லாமல் ப்ளைட்டின் destination-னே final destination ஆக இருக்கும் பயணியர்க்கு first come, first served அடிப்படையில் இடம் கிடைக்கும். பிஸினஸ் பிரிவில் இடமிருந்தால் இலவசமாக மாற்றிக்கொடுத்துவிடுவர். உங்கள் பயணத்தேதி அவ்வளவு முக்கியமாக இல்லாதவர்கள் தங்கள் ப்ளைட்டில் ஓவர்புக்கிங் என்று தெரிந்தால் மிக லேட்டாக செக்-இன் செய்யுங்கள். இந்த டிரிக் சிலசமயம் வேலைசெய்து, பயனாய் இலவசமாக பிஸினஸில் பறக்கலாம். அப்படி வேலை செய்யவில்லையென்றாலும், என்னாகிவிட்டது! நட்சத்திர தங்கும் வசதி கண்டிப்பாய் உண்டு. அது எந்த டகால்டி ஏர்லைனாக இருந்தாலும் ஓவர்புக்கிங்கால் விமானத்தில் இடம் மறுக்கப்பட்டவர்களுக்கு இந்த வசதிகளை செய்துதர வேண்டும். மறுக்க முடியாது.
சரி இனி என் கதை. இந்த மாதிரி ஓவர்புக்கிங்கில் டில்லியில் மாட்டிக்கொண்டேன். ட்ரான்ஸிட் பயணிகள் பலர் இருந்ததால், கண்டிப்பாய் இடம் கிடையாது என்று தெரிந்துவிட்டது. இரவு மணி இரண்டு. 'உங்களுக்கு தில்லியில் தங்க இடம் இருக்கிறதா? இல்லை ஓட்டல் வேண்டுமா?" என்று கேட்பதற்கே காத்திருந்தமாதிரி "ஓட்டல் தான்". "சாகெத்தில் உள்ள மேரியட்டில் இடமிருக்கிறது, பரவாயில்லையா?". "ஏன், மவுர்யாவில் இல்லையா?!" என்று என்னவோ மேரியட் டப்பா ஓட்டல் மாதிரி திருப்பிக்கேட்டேன். "சாரி சர், இப்போதைக்கு மிஞ்சியிருப்பது மேரியட்டும் ஏர்போர்ட் செண்டாரும் தான்". "சரி சரி, என்னவோ, செண்டாருக்கு மேரியட்டே தேவல!" (திரும்பவும்) என்று அலம்பல் செய்த என்னிடம் ஓட்டல் கூப்பன் கொடுத்தவாறே இலவச பஸ்ஸிற்கும் இடம்காட்டினாள் பணிப்பெண். விமான நிலையத்திலிருந்து சாகெத் கொஞ்சம் தள்ளி இருப்பதால் முக்கால்மணி நேரப் பயணம்.
மணி மூன்றாகிவிட்டது, இருப்பினும் சுறுசுறுப்புடன் அதிர்ஷ்டவசமாய் தனி ரூம் கொடுத்துவிட்டார்கள். இனியென்ன, வீட்டிற்கு சொல்லணுமில்ல? தொலைபேசி கார்டு வாங்க மறந்துட்டோமே. நட்சத்திர ஓட்டல்னா STDக்கு தீட்டிவிடுவார்களே என்று கவலையிருந்தாலும், இந்த நடுநிசியில் எங்கு போய் கால் செய்வது. தூக்க கலக்கத்தில் இருந்த அப்பாவிடம் இது கனவில்லை, நான் எங்கிருக்கிறேன், எதனால் பறக்கவில்லை, ஓட்டல் நம்பர் என்றெல்லாம் விளக்கவே பத்துநிமிடமாகிவிட்டது.
அடுத்த நாள் காலை 930க்கு ரிசப்ஷனிலிருந்து போன். "Good Morning Sir, Sorry to have woken you up! காலை உணவு buffet முடிய இன்னும் அரைமணிதான் இருக்கிறது. சொல்வதற்குத்தான் கூப்பிட்டோம்". அடாடாடா. இதுதாண்டா சர்வீஸ் என்று நன்றி சொல்லிவிட்டு காலைஉணவு புப்பேவிற்கு போனேன். பிரமாதமான ஸ்ப்ரெட். காண்டினண்டல், சவுத் இந்தியன், ரோட்டி, சப்பாத்தி என்று பிரமாதம். buffet இல் ஒரு சவுகரியம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று மற்றவர்க்கு தெரியாது. a la carte வாக இருந்து சர்வருக்கு டிப்ஸ் வைக்கலேன்னா, "ஒசின்னு சொன்னோன்ன நல்லா துன்றான் பாரு கடோத்கஜனாட்டம்.. ஆனா பக்கி! ஒரு முப்பது ரூவ வக்கத் துப்பில்ல"னு வைதல்கள் வர சாத்தியக்கூறுகள் அதிகம். புப்பேவில் இந்த கவலையெல்லாம் இல்லாமல், எல்லாத்தையும் வேணுங்கற அளவு எடுத்துப் போட்டு பயமில்லாம சாப்பிடலாம். ஆனா கேக் போன்றவற்றை முன்னரே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு விட வேண்டும். கடைசியாப் போனீங்கன்னா கீரிம், செர்ரி எல்லாம் இல்லாம வெறும் பிரெட் மட்டுந்தான் மிஞ்சியிருக்கும். மத்தியான சாப்பாடு எப்போன்னு முக்கியமா கேட்டுகிட்டு கிளம்பினேன். டில்லியில் செய்யறதுக்கு வேலை ஒன்றுமில்லையதனால், ரூமில் டிவி பார்த்தே பொழுதுபோக்கியாச்சு.
மத்தியானம் மணி சரியா ரெண்டு அடிச்சோன்ன மறுபடியும் ரெஸ்டாரண்ட். எனக்கு முன்னரே சக பயணிகள் சிலர் இருந்தனர். அதனால் கூச்சமெல்லாம் படாமல் களத்தில் நேராக இறங்கினேன். முதல்ல ரெண்டு குலாப் ஜாமூன், அப்புறம் பெங்காலி ஸ்வீட் சில என்று தனியாய் லவட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டேன். அடுத்து சூப் மல்லிகாடானி (மல்லி ரசம்), தக்காளி, லெண்டில் (பருப்பு) என்று வகைக்கொன்று கா கா கிண்ணம். புலாவில் ஆரம்பிக்கலாமா, இல்லை ரோட்டியா என்று மினி பட்டி மன்றம் நடத்தி முடித்து ரோட்டி பக்கம் போனேன். அங்கே கோபி பராத்தா, லசூன் நான் அப்புறம் புல்கா என்று வகைக்கொன்று. தொட்டுக்க வேணுமே. அதில எனக்கு ரொம்ப பிடிச்ச பைங்கன் பர்த்தா (கத்திரிக்கா) மற்றும் பன்னீர் கோப்தா, அப்புறம் அருகில் நின்ன செப் மனசு வருத்தப்படக்கூடாதே மிச்சமிருந்த ஆலு மட்டரும், கோபி மஞ்சூரியனும் என்று அள்ளியாச்சு. இது முதல் ரவுண்ட். அவசர அவசரமா சாப்பிட்டாத் தான் நிறைய சாப்பிட முடியாது. அதனால பொறுமையா ஒரு முக்கா மணி நேரம் நின்னு ஒவ்வொரு கடி (bite) ஆ அனுபவிச்சு முடிச்சேன். அடுத்த ரவுண்டுக்கு வெஜ் புலாவ், புதுசா ஐட்டங்களில் அப்போதுதான் சேர்ந்திருந்த கார்லிக் ப்ரெட். அப்புறம் தொட்டுக்கற செக்சன். பன்னீர் கோப்தாவும், கோபி மஞ்சூரியன் எடுத்துட்டு பார்த்தா அதுக்குள்ள கத்திரிக்காயக் காணோம். வெறும் கர்ரி மட்டும் தான் பாக்கியிருந்தது. பேரரிடம் கேட்கவே நானே கொன்டுவந்துகொடுக்கறேன் சொல்லி சொன்னா மாதிரியே கொடுத்தார். இதுக்கு ஒரு அரை மணி. அப்புறம் கொறிக்க வெண்டக்கா பிரை. இது மட்டுமே ரெண்டு பிளேட். ஏன்னா, நான் முன்னாடி தட்ட வெச்சுட்டு ரீபில் பண்ணப்போனப்ப யாரோ அபேஸ் பண்ணிட்டாங்க. சாப்பிட்ட தட்டுகளையெல்லாம் எடுத்துப் போட்டவர் இதையும் சேர்த்து அள்ளியிருக்க வேண்டும். விடுவேனா? எடு இன்னொரு பிளேட். எப்படி இத்தனையும் சாப்பிட்டேன்னு எனக்கே தெரியலை. சாப்பிட்டு முடிச்சு நிஜமாவே உண்ட களைப்பில் படுத்தவன் தான். ரெண்டு மணி நேரம் ஓடியாச்சு. ஆறு மணிக்கு போன் பண்ணி, நீச்சல் குளம் வேலை செய்கிறது என்று தெரிந்தவுடனே ஓடி ஊறிக் கொண்டிருந்தபடியே ஒரு பன்னீர் டிக்கா. பொதுவா இப்பல்லாம் நீச்சல் குளம் போனா நீச்சலெல்லாம் அடிக்கிறதில்ல. நல்ல குட்டையில் ஊறற எரும மாதிரி ஊறுவதுதான்.
இராத்திரி பத்து மணிக்கு பஸ் மீண்டும் விமான நிலையத்திற்கு புறப்படும் என்று முன்னரே தகவல் சொல்லியிருந்தனர். அதனால் 8 மணிக்கெல்லாம் டின்னர் புப்பே. இந்த முறை முதல் ரவுண்ட் ஒரு வித்தியாசத்திற்காக ஸ்பாகெட்டி நியோபாலிட்டானே, ஒரு துண்டு பீட்ஸா. கூடவே நவரத்தன் குருமா, டால் மக்கனி அப்புறம் stuffed குடைமிளகாய்.
என்னிடம் இருந்தது ஒரேயொரு மீடியம் சைஸ் பெட்டி மட்டும் தான். கூடவே குட்டி ப்ரீப் கேஸ். சென்னையிலிருந்து ப்ளைட்ல யார் உதவியுமில்லாம தூக்கிகிட்டு, டில்லி விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு வந்தது நான் தான் என்றாலும், பெல் டெஸ்க் எதுக்கு இருக்கு. 950க்கு ரிசப்ஷனுக்கு போன் செய்து பெல்பாய் வரச்சொல்லுங்கள் என்று கேட்டேன். இதோ அனுப்பறேன் என்று சொன்னவர்கள் மறந்தே போனார்கள். காரணம் நாற்பதுக்கும் மேற்பட்ட இதே விமானப் பயணிகள் செக்-அவுட் செய்து கொண்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு ரிசப்ஷனுக்கு முன்னிருந்த உள்ள லவுஞ்சில் அவர்கள் கண்ணில் படும்படியே போய் அமர்ந்தேன். ஆனால், வேலை பிஸியில் கவனிக்கவில்லை. பத்தேகாலுக்கு பஸ் புறப்பட்டபிந்தான் என்னை கவனித்தார் ரிசப்ஷனில் வேலை செய்பவர். சாரியெல்லாம் பவ்யமாக சொன்னவரிடம் வீம்பாக "அரைமணிக்கு முன்னர் பெல் பாய் அனுப்பச்சொன்னேன். இன்னும் அனுப்புகிறீர்கள். இப்போ எப்படி நான் ஏர்போர்ட் போறது? என்ன மாதிரி ஓட்டல் நடத்துகிறீர்கள்" என்று வீண் சண்டை போட்டேன். "ஏண்டா வரும்போது எப்படி வந்தே? பொதி கழுதை மாதிரி நீயே தானே தூக்கிண்டு வந்தே? இப்ப பெரிய இஷ்டாரு கணக்கா பெல் பாய் எங்கேன்னு கேட்கற"ன்னு நான் அவரிடத்தில் இருந்தாலும் கேட்டிருப்பேன். ஆனால் மேரியட்டாச்சே. மிகவும் மன்னிப்பு கேட்டு ஒரு ஏஸி மாருதி எஸ்டீம் ஏற்பாடு செய்து தந்தார். டெலிபோன் பில்லும் வாங்கவில்லை. நீச்சல் குளத்தில் சாப்பிட்ட பன்னீர் டிக்காவுக்கு டிஸ்கவுண்ட். டாக்ஸிக்கும் பணம் கேட்கவில்லை. பஸ்ஸிற்கு முன்னரே ஏர்போர்ட் வந்து சேர்ந்து, எகானமி பிரிவில் முதல் ரோவில் இடம் வாங்கி பறந்துவிட்டேன்.
இதனால் தெரியும் உண்மையென்றால்... ஒவர்புக்கிங் சான்ஸ் கிடைத்தால் கோட்டை விட்டுவிடாதீர்கள்.
என் overbooking அனுபவம்!
தனியாய் கஷ்டப்படும் ஆண்களுக்கு: சமையல் குறிப்பு!
வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.
இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.
அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.
இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.
என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.
இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
This article is a stub and readers are expected to further experiment and provide feedback.
பங்களாதேஷ் - "குண்டு ஒண்ணு வெச்சுருக்கே!"
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலும் மற்றும் 63 மாநிலங்களிலும் தொடர்ச்சியாக 400 குண்டுகள் வெடித்தன. தற்போது எல்லைப் பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த தில்லி வந்த பங்களாதேஷின் Bangaladesh Rifles இன் Director General ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி கூட்டுபத்திரிகையாளர் சந்திப்பில் "தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அருகில் உள்ள ஒரு பெரிய நாடுதான் காரணம்" என்றார். அது எந்த நாடென கேட்ட இந்தியப் பத்திரிகையாளருக்கு "It is you!" என்று பதிலளித்துள்ளார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. உடனே மத்திய அரசும் மறுத்தும் கண்டித்தும்
"This is a baseless and scurrilous allegation and is all the more shocking because it has been made against a friendly country and particularly after the two countries have had useful and constructive talks between the BDR and BSF." என்று பதிலளித்துள்ளது.
நட்பு நாடான இந்தியாவிடம் சரிவர நடந்து கொள்ளத் தெரியவில்லையே.
முதலில், இந்தியாவிற்கு விருந்தினராக பேச்சுவார்த்தை நடத்த வந்துவிட்டு இப்படியொரு செய்தியை உண்மையோ பொய்யோ பத்திரிகையாளர்களிடம் சொல்ல வேண்டிய தேவையென்ன? இப்படிச் சொல்லிவிட்டு வாருங்கள் பேசலாம் என்றால் எந்த நாடாவது ஒத்துதான் வருமா? இந்தச்செய்திக்கு ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு பேசியிருந்தால் மதிப்பாவது கிடைத்திருக்கும். குருட்டாம்போக்காக இப்படியொரு அபாண்டமான பழியை சுமத்த என்ன தேவை? பங்களாதேஷின் அடிப்படைவாத எதிர்க்கட்சிகளின் ஆதரவோ இல்லை ஷேக் ஹஸினாவின் அரசு ஆதரவோயில்லாமல் இப்படி ஒரு செய்தி கொடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் "cross border terrorism" பத்தி சந்திகிழிய பேசுகிறவர்கள் இந்தியர்கள். ஆனால் இந்தியா எங்கள் நாட்டிலே தீவிரவாதம் செய்கிறது என்று திசைதிருப்பி அரசியல் பண்ணும் வேலைதானே இது?
நாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தோம் என்ற காரணத்திற்க்காக அடிமை சாசனம் எழுதித்தர சொல்லவில்லை. நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று கேட்பது தவறா? கங்கையைக் குறித்து நடந்த தகராறு, எல்லைத் தகராறு, BSF-ஐ அச்சுறுத்துவது, சட்டத்துக்கு புறம்பாக immigrants-ஐ தடுக்காதது என்று ஏகப்பட்டது செய்கிறீர்கள். இத்தனை இருந்தும் புழுவாக நினைத்து தன்னிச்சைப்படி நடந்து நசுக்காமல் மரியாதையுடன் நட்பு பாராட்டும் இந்தியாவிற்கு தரும் பதில் மரியாதை இதுதானா?
கொசுறு: இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களில் ஒரே ஒருவர் தான் of indian origin. கியாஸுதின். ஆனால் அவரும் 17 வருடங்களாக பங்களாதேஷிலேயே வசிப்பவர்.
The Hindu
NDTV
