டோனி ப்ளேர் நமக்குத் தரும் பாடங்கள்

வரும் ஜூன் - 27 அன்று பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளப் போவதாக நேற்று பிரிட்டானியப் பிரதமர் டோனி ப்ளேர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சொல்லிவந்தாலும், அறிக்கை வந்தவுடன் பார்க்க, இந்தியனான எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர் என்ன லூசா? இருக்கிற ஐந்து பசங்களெல்லாம் வளர்ந்து பெரியாளாகவில்லை. ப்ரான்சில் திராட்சைத்தோட்டம் வாங்கிப்போடவில்லை. இது எல்லாம் மேலோட்டமாகத் தோன்றினாலும் அடிப்படையிலேயே புரியாத புதிராய்த் தெரிந்தது இந்த அறிவிப்பு. அதுவும் தன் வாரிசு என்று கோர்டன் பிரவுனை ஆதரிப்பதாகவும், ஆனால் கட்சியின் பொதுக்குழுவே அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்குமென்றும் அறிவித்திருக்கிறார்.

ப்ளேரின் ஆட்சி கவிழ்க்கப்படவில்லை. இம்பீச் செய்யப்படவில்லை. தேர்தலில் தோற்கடித்துத் துரத்தப்படவில்லை. தாமாகவே மனமுவந்து (இது சந்தேகமாயிருந்தாலும்) பதவி விலகுகிறார். இதைவிடவும் கலியுகத்தில், ஒரு இந்தியனுக்கு ஆச்சரியம் தரும் விஷயம் இருக்கிறதா என்ன? இருந்தால் ஆட்சிக்கட்டில், இல்லையேல் மரணக்கட்டில் என்ற 'பற்றற்ற' கொள்கையுடைய அரசியல்வாதிகளையே கண்டவர்கள் நாம்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு பிறகு தேர்தலில் ஒருவர் போட்டியிடக்கூடாது என்று பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளைப் போல் சட்டமேற்றுவதில் என்ன பிரச்சனை? நிரந்தர முதல்வர் என்ற முட்டாள்தனமான கனவுதான் காரணமா? இருக்கிற ஐந்துகோடி பேரில் அவர் ஒருவரை விட்டால் திறமையான தலைவர் அடுத்த தலைமுறையில் கூட கிடைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையா? நிரந்தரமாக பதவியெடுத்துக்கொள்ளும் ஆட்சிகளெல்லாம் அவை ஆரம்ப காலகட்டத்தில் எத்தகைய மக்களாட்சியாக இருந்தாலும் காலப்போக்கில் பதவிபோதையில் ஒரு கேவலமான மன்னராட்சி நிலைக்குத்தான் சூழ்நிலைகளால் தள்ளப்படுகின்றன. உகாண்டாவின் இடி அமீன் தொடங்கி இன்றைய ஜிம்பாப்வேயின் முகாபே வரைக்கும் முகத்தில் அறையும் உதாரணங்கள் கணக்கில் அடங்கா. அவ்வாறு ஒரு குடும்பத்திற்கோ ஒரு தனியாளுக்கோ மாற்று ஏற்படாதவகையில் அடாவடி அரசியல் செய்யத்தூண்டுவதற்கு காரணம் இந்த நிரந்தர முதல்வர் கனவும் அது தரும் போதையும் தான்.

தனிநபர் ஒழுக்கம் பற்றியெல்லாம் பொழுதைக்கழிப்பது வீண். ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கக் கூட பொழுதில்லாமல் தேர்தல்நேரத்து வாக்குறுதிகளுக்காக வெக்கமில்லாமல் கண்ணைக் கட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு புத்திசொல்ல நான் யார்? ஒருவேளை நான் தமிழனில்லையோ? இல்லை மனநலக் காப்பகங்களில் இருக்கவேண்டியவனோ? மாற்றுக்கட்சிகளும் இல்லை, மாற்றுத்தலைவர்களும் இல்லை என்ற நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டோ, தெரியாத மோகினிக்கு தெரிந்த பிசாசே மேலென்று விதியை நொந்துகொண்டோ திரும்பவும் அதே ரவுடிகளுக்கும் ஊழல்பெருச்சாளிகளுக்கும் தொடர்ந்து வாக்களிக்கும் மக்கள் எக்கேடுதான் இன்னும் கெடவேண்டும்? தேர்தல் புறக்கணிப்பு? புரட்சி, மறுமலர்ச்சி என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஊழலில் ஊறியதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. மக்கள் புரட்சியைக் கையிலெடுத்தால் ரஷ்யாவின் கதியா நமக்கு என்றெல்லாம் அசரவேண்டாம். ரஷ்யர்களின் வாழ்க்கை பல நிலைகளில் நம்மைவிட நன்றாகவே இருக்கின்றது. இதோ போன வாரம் துருக்கியில் நடக்கவில்லை மக்களின் புரட்சி? இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாடெங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்து பாராளுமன்றமே சட்டத்தை திருத்தி அமைக்கவில்லை?

ச்வதர்ம பரிபாலனா என்னும் தர்ம கோட்பாட்டை அதன் அர்த்தமே திரியும் அளவுக்கு சுருக்கி தம் குடும்ப/உ.பி.சகோ குடும்ப பரிபாலனம் என்ரு அர்த்தம் கற்பித்து நாட்டைச் சுருட்டும் இவர்களுக்கு வேண்டுமென்றால் மட்டும் வெட்கமில்லாமல் பிரியாணிப்பொட்டலமும் / உற்சாக பானமும் வாங்கவாவது கட்சி மாநாட்டுக்கூட்டங்களில் லட்சக்கணக்கில் கூடும் தமிழர்கள் ஏன் தங்களுக்கென ஊழலற்ற ஆட்சி/அடிப்படைக் கல்வி/தொழிற் சார்ந்த முன்னேற்றம் போன்றவற்றிற்கு கூடுவதில்லை என்று நினைத்துப்பார்க்கவே நாறுகிறது. அந்த நாற்றத்திற்கு ஏசி ரூமில் சமூகசீர்த்திருத்தம் பேசும் நாமும் காரணம் என்பது நாற்றத்தைவிடவும் குமட்டுகிறது.

நம் மக்களிடையே பரவலான ஜோக் ஆட்டோ அனுப்புவார்கள் என்பது. எண்ணிப்பாருங்கள். இதைவிடவும் கேவலமாக ஜனநாயகம் நடத்தப்பட முடியுமா? எல்லா நாடுகளிலும் லஞ்சமும் உண்டு ஊழலும் உண்டு. ஆனால் நாட்டின் நலன் என்று வரும்போது அதுவே முக்கியத்துவம் பெறுகிறது அல்லது குறைந்தபட்சம் பயம் காரணமாகவாவது அத்தகைய தனிநபர் சுருட்டல்கள் குறைக்கப்படுகின்றன. இது ஏன்? இங்கே வெள்ளைக்காரன் தோல் பெரும்பாலும் வெள்ளையாகவே இருக்கிறது. ஏன் என்பதுதான் ஆச்சரியம். ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் ஒருசில நாடுகள் தவிர்த்து பெரும்பாலும் இந்த தனிநபர்/ஆட்சியாளர்/தொழிலதிபர் என்று நேரத்திற்கு தகுந்தாற்போல நாட்டையும் ஆட்சியையும் நடத்தும் ஆட்சியாளர்களே அதிகம். அது ஏன்? வெள்ளையர்களின் குறுக்கீடா? அல்லது சுதந்திரம் பெற்றபின்னும், அதன் அர்த்தம் என்னவென்றே உணர மறுக்கும் மக்களின் விதியா?

வெறும் சினிமா நடிகைக்கு ஆயிரம்கோடி சொத்து எங்கேயிருந்து வந்தது? ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதைவிடவும் பெரிய அளவிலான சொத்துகள் எங்கேயிருந்து வந்தது? இவை வெறும் தமிழ்நாட்டின் அவலங்கள் தான். அகில இந்திய அளவில் இன்னும் மோசமான உதாரணங்கள் உண்டு.

மறுபடியும் ப்ளேருக்கே வருவோம். அவருக்கு நெருக்கடி இருந்தது உண்மைதான். அது ஈராக்கில் நடந்த யுத்தத்தினால். புஷ்ஷுடன் அவருக்கு இருந்த அத்தியந்த நட்பினால். கோர்டன் பிரவுன் கொஞ்ச நாட்களாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவை மட்டும் அவரை பதவி விலகச் செய்தது என்று சொன்னால் சிரிக்கத்தான் வேண்டும். மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாதா? ப்ளேருக்கு ஆட்டோ அனுப்பத்தெரியாதா? ஈராக் விஷயம் தவிர்த்து அவரின் சாதனைகள் பல. யோசித்துப்பார்த்தால் வட அயர்லாந்தின் புதிய அரசு, ஆப்ரிக்காவிற்கு அதிக நிதி என அவரின் வெளியுறவுத்துறை சாதனைகள் தவிர உள்நாட்டிலேயே பொருளாதாரம், சுகாதாரத்துறை போன்றவை சீரிய அளவில் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. இப்போது ஏன் விலக வேண்டும்?

ஒரே விளக்கம் தான் தோன்றுகிறது. 'போதுமென்ற மனமே'. ப்ளேரின் கைகள் ஒன்றும் அவ்வளவு சுத்தமில்லை என்று பல சர்ச்சைகள் வந்துபோயிருந்தாலும் நம் நாட்டுடன் ஒப்பிட்டால் லாலு சிலுக்குவார்ப்பட்டியில் ஒரு வீடு வாங்கினார் என்றுதான் ஒப்பிட முடியும். ஒரு மிகச் செல்வாக்குவாய்ந்த/சக்திவாய்ந்த நாட்டின் தலைவராக இருப்பது எத்தனை கடினம் என்று எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. "but enough is enough" என்று சொல்வார்களே அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நாட்டின் தலைவராயிருந்தால், நாட்டு மக்களுக்கு தான் சேவகன் என்பது மறந்து நாடே தம் குடும்பச் சொத்து என்ற எண்ணம் வந்துவிடலாம். இதுவும் பல இடங்களில் திரும்பத் திரும்ப நிருபிக்கப்பட்டிருக்கிறது. "the sad part about history is everybody reads it but dont learn from it"

அவ்வளவு சக்திவாய்ந்த பதவியிலிருந்து ஒருவன் எவ்வித சீரியஸான threatகளும் இல்லாத சமயத்திலும் தன்னிச்சையாக வெளியேற முடிகிறதென்னால் அவனுக்கு தமிழனென்ற முறையில் ஆழ்ந்த அனுதாபத்தையும் அவனின் கையாலாகாத தனத்தை எள்ளியும் எதிர்ப்புகளை சமாளிக்கமுடியாத ஆண்மையற்றத்தனத்தை கிண்டலடித்தும் போர்வாளாய் பணியாற்ற மறுத்த சோம்பேறித்தனத்தை கண்டித்தும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டோனி ப்ளேர் வாழ்க வளமுடன்! நாங்கள் உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். கற்றுக்கொள்வோமா என்ற கேள்வி அவசியமற்றது, இப்போதைக்கு.

மற்றுமொரு வயித்தெரிச்சல் பிரான்சில் நடந்த தேர்தல். சார்க்கோஸியும் ராயலும் விவாதம் செய்ததில் தொடங்கி தேர்தல் நடந்த விதம் வரை எத்தனையோ இருக்கு நாம் கற்றுக்கொள்ள.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - எம்.ஜி.ஆர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தருமிக்கு நன்றி).

---------------------------------
டிஸ்கி:
1. நான் திமுகவும் கிடையாது. அதிமுகவும் கிடையாது. பாஜகவும் கிடையாது. வி.காந்தும் கிடையாது. மொத்தத்தில் ஒருமுறைகூட ஓட்டே போட்டிராத தமிழன்.

2. இது ஏசி ரூமில் இருந்து எழுதியதுதான்.

3. ஏன் ஒரிசாவில் இல்லையா, குஜராத் எரியவில்லையா என்ற கேள்விகளெல்லாம் இங்கே அர்த்தமற்றதாகின்றது. எல்லா மாநிலங்களில் சேற்றை வாரியிறைத்துக்கொள்கிறார்கள் என்றால் நாமும் ஏன் செய்யவேண்டும்?

4. பிற மாநிலங்களைவிட திராவிட கட்சிகளின் ஆட்சியில் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது என்று சொல்வோர் இருக்கலாம். நான் அந்த வாக்கியத்தில் in spite of என்று சேர்த்துக்கொள்ளச் சொல்கிறேன்.

5. ப்ளேர் செய்தது போல இது நம்மூரில் நடக்கும் காலமும் வருமா என்ற வயித்தெரிச்சலில் எழுதியது.

41 Comments:

 1. தருமி said...

  நல்ல நியாயமான வயித்தெரிச்சல்கள். என்று தணியும் இந்த வயித்தெரிச்சல்கள்.

  இப்படிக்கு,
  இன்னொரு வயித்தெரிச்சல்காரன்.  பி.கு.
  "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது".
  - பட்டுக் கோட்டை... ?


 2. G.Ragavan said...

  நல்லதொரு ஆதங்கம். நம்மூரில்தான் இவரை விட்டால் நாடே பிழைக்க முடியாது. அவரை விட்டுவிட்டால் உலகமே பிழைக்க முடியாது போன்ற கதாநாயக/நாயகி எண்ணங்கள். நாடு இருக்கும். மக்கள் பிழைப்பர். ஆனால் மாற்றம் என்று வரவேண்டியது மக்கள் மனதிலிருந்து. ஒவ்வொரு நபரும் தான் நல்லவராகவும் சரியான அணுகுமுறை உள்ளவராகவும் மாறத் தொடங்கினால் விரைவில் மாற்றம் வந்து விடும். அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். ஆகவே மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். தொடங்கும். மாற்றம் வரும்.


 3. உண்மைத்தமிழன் said...

  நானும் தொலைக்காட்சியில் அந்த அழகுக் காட்சியைப் பார்த்தேன். மனிதரின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்? ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் பிரதமராக இருப்பவர் பதவி விலகுகிறேன் என்பதையும் பதவியேற்கப் போகும்போது இருந்த அதே சந்தோஷத்துடன் சொல்கிறாரே.. இவர் அரசியல்வாதி..

  நம் ஊரில்.. ம்.. பதவி பறிபோன உடனேயே ஏதோ வீட்டில் எழவு விழுந்துவிட்டதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு லாவணி பாடுவார்கள்..

  படித்தவர்கள் படித்தவர்கள்தான் ஸார்..

  அப்புறம் பேராசிரியர் தருமி ஸார்.. எப்பவுமே தூங்க மாட்டார் போலிருக்கு.. இன்னிக்கு இங்கன தப்ப கண்டுபிடிச்சிட்டாரு.. அந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்.. அதுக்கெதுக்கு ஸார் கொஸ்டீன் மார்க் போட்டீக.. அங்கனயும் டவுட்டா?

  சரி.. இராமநாதன் ஸார்.. நடுநிலையான நியாயமான பதிவு. வாழ்த்துக்கள்..


 4. வடுவூர் குமார் said...

  ஏதோ ஒரு பதிவில் படித்தது.கவர்மென்ட் ஊழியர்களை "கவர்மென்ட் சர்வென்ட்" என்று அழைப்பார்களாம்.அந்த ஞாபகம் வரும் போது எந்த பதவியும் பணம்/சந்ததி .. மற்ற பிறவுடன் சேர்த்து பார்க்கப்படாது.
  பிரிட்டன் போல் இங்கு நடக்க இன்னும் சில மாமாங்கம் ஆனாலும் ஆகலாம்.
  நம்பிக்கை கொள்வோம்.


 5. Santhosh said...

  நியாயமான வயித்தெரிச்சல் தான்.


 6. கப்பி | Kappi said...

  + + +

  :(


 7. rv said...

  பெரியப்பா,
  எல்லாருக்குமே வயித்தெரிச்சல் தான். ஒமீஸும் டைஜீனும் வாங்கிக் கொட்டிக்கிறதத் தவிர இப்போதைக்கு ஒண்ணும் செய்யமுடியாது போலிருக்கே...

  பட்டுக்கோட்டையா... இவரு கல்யாணசுந்தரம் தானே?? :)


 8. rv said...

  ஜிரா,
  //மாற்றம் வரும்.//
  வரும் வரும் வ்ரும் வ்ரும் ரும் ரும் ர்ம் ர்ம் ம் ம் ம் ....

  இப்படியே மோட்டுவளைய பாத்துகிட்டே நாமெல்லாம் அதுக்குள்ள 'குணா' ஆகாம இருந்தாச் சரிதான்..


 9. rv said...

  உண்மைத்தமிழன்,
  உண்மைதான். சிரிச்சுகிட்டே இருந்தாரு. (அதுகூட PR ஆ இருக்கலாம்). இருந்தாலும் செய்யணும்னு தோணுனதே பெரிய மனுஷன்கறத காட்டுது..

  பதவி கொடுத்தா பொன்குடம்.. பதவி பிடுங்கினா மண்குடம்னு சொல்வாங்க இல்ல வழக்கமா?

  நன்றி


 10. rv said...

  வடுவூர் குமார்,
  சர்வெண்ட் வேணாமப்பா. சக மனிதன்னு ஒத்துகிட்டு பணிசெஞ்சாலே போதும்.. மாமாங்கமா.. எத்தன மாமாங்கம்னு யாராச்சும் கணிச்சு சொல்வாங்களா??


 11. rv said...

  சந்தோஷ்,
  நன்றி.


 12. rv said...

  கப்பி பய,
  +க்கு நன்றி..

  உங்க சோகத்துல நானும் பங்கெடுத்துக்கிறேன். வேற ஒண்ணும் சொல்லத்தெரியல.

  இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு போகாம நாம ரிவர்ஸ்ல போறோமோனு சந்தேகம் வர ஆரமிச்சுருக்கு எனக்கு...


 13. மணியன் said...

  இதற்குத் தான் தவளை வீட்டுக் கிணற்றைத் தாண்டி பார்க்கக் கூடாது என்பது. கூந்தல் இருப்பவர்கள் அலங்காரம் செய்து கொள்ளத் தான் செய்வார்கள், இதெற்கெல்லாம் வருத்தப் பட்டுக் கொண்டிருக்க முடியுமா ?
  கன்ஃபுசியஸ் சொன்னதுபோல துயரத்தின்போதும் அந்தநிமிட இன்பத்தை அனுபவியுங்கள் :)


 14. பினாத்தல் சுரேஷ் said...

  தம்பி ராமநாதா,

  உன் அனுபவச் சிதறல்கள் அருமை. உன் முதுகு தடவப்படும் அபாயம் இருக்கிறது.

  வயிறெரியக்கூட இட ஒதுக்கீடு கொண்ட நாடப்பா இது!


 15. Sundar Padmanaban said...

  அடடா. கொஞ்சம் முன்னாடி இந்தப் பதிவைப் போட்ருந்தீங்கன்னா (முகமூடியோட பதிவ வந்த நேரத்துலயே) உங்களையும் வால்டர் வெற்றிவேல் ஆட்டத்துல சேர்த்திருப்பாரு. மிஸ் பண்ணிட்டீங்களே ராமநாதன்!

  ஒரு வேளை அவர் இதுக்காக இன்னொரு பதிவு போட்டாலும் போடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

  எனிவே உங்க பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்!


 16. Boston Bala said...

  பலரின் ஆதங்கம்.

  ---சார்க்கோஸியும் ராயலும் விவாதம் செய்ததில் தொடங்கி தேர்தல் நடந்த விதம் வரை ---

  அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறை? அதிலாவது மேற்கத்திய தேர்தல் நாகரிகத்தை ஓரளவாவது பின்பற்றுகிறோம்.

  ஆட்டோ - முச்சில்லுவண்டி (பெயரிலி பதிவில் கண்டது :)


 17. Unknown said...

  ராம்ஸ்,
  //பட்டுக்கோட்டையா... இவரு கல்யாணசுந்தரம் தானே?? :)//

  அந்த சொற்களையும், அதற்குரிய credt-யையும் ஆள்மாற்றிக் கொடுத்ததைச் சுட்டவே அந்தப் பின்னூட்டம்.


 18. Sundar Padmanaban said...

  //ஆட்டோ - முச்சில்லுவண்டி (பெயரிலி பதிவில் கண்டது :)//

  பாபா... மக்கள் தொலைக்காட்சியில் ஆட்டோவை 'தானி' என்று குறிப்பிட்டதாகத் துக்ளக்கில் படித்தேன்.


 19. rv said...

  மணியன்,
  அட.. கிணத்துத்தவளையா இருக்கறதுல இத்தன சவுகரியம் இருக்கா???? :))))))

  நமக்கு கூந்தல் வளரலேன்னாலும் hair replacement expertsகள தேடுவதில்லியா?? அது மாதிரி... :))


 20. rv said...

  பெனாத்தலார்,
  முதுகு காலியா இருக்கு.. தடவுனா நல்லாத்தானே இருக்கும்.. யாராச்சும் துபாய்ல இருக்கிற நல்ல ரஷ்யன் குட்டியா அனுப்பி வைக்கவும்... :P

  வயிறெரிய இட ஒதுக்கீடுதான்.. மிச்சவங்களுக்குத்தான் எலிக்கறி இருக்கே!!! (தேவையில்லாத பொலிடிக்கல் ஸ்டேட்மெண்ட்.. என்ன செய்ய??)


 21. rv said...

  சுந்தர்,
  வால்டர் ஆட்டத்துல சேருற குடுப்பினை இல்ல போலிருக்கு...

  தமிழ்மணம் ஏனோ வேலை செய்யலை மதியம். இல்லேன்னா தலையோட போஸ்ட் பாத்து அங்கேயே பின்னூட்டமா போட்டிருப்பேன்..

  பதிவுக்கு நோ கமெண்ட்ஸா?


 22. rv said...

  பாபா,
  //அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறை? //

  அங்கும் தமிழ்நாட்டைப் போலவே வந்தேறிகளால் (immigrants பா) வன்முறை நடத்தப்பட்டது என்பதை சொல்ல வருகிறீர்களா பாபா? :P


 23. rv said...

  சாம்,
  நீங்க பெரியப்பாவா? மாத்திக்கொடுக்கலியே.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தானே?


 24. நாகை சிவா said...

  ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு போயும் அவர்களுக்கு சலாம் அடிக்கும் நீ எல்லாம் ஒரு பச்சை தமிழனா என்ற சந்தேகம் தோன்றுகிறது.


 25. நாகை சிவா said...

  //நான் திமுகவும் கிடையாது. அதிமுகவும் கிடையாது. பாஜகவும் கிடையாது. வி.காந்தும் கிடையாது. மொத்தத்தில் ஒருமுறைகூட ஓட்டே போட்டிராத தமிழன்.//

  அப்ப காங், இல்லாட்டி பாமக தான்.


 26. rv said...

  நாகை சிவாவின் பின்னூட்டம் editஇற்கு பின்னர்:

  //வெறும் சினிமா நடிகைக்கு ஆயிரம்கோடி சொத்து எங்கேயிருந்து வந்தது? //

  நிஜாம் கொடுத்து இருப்பார். ;-)

  //ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதைவிடவும் பெரிய அளவிலான சொத்துகள் எங்கேயிருந்து வந்தது?///

  'ஏழை சூத்திரர்' ஒருவரின் பேரர் ஆசிய கண்டத்தில் முதல் பணக்காரராக வருவதை கண்டு பொறமைப்படும் பட்டியலில் தாங்களும் ஒருவரோ?


 27. rv said...

  நாகை சிவாவின் மற்றொரு பின்னூட்டம் editஇற்கு பின்னர்:

  நல்ல ஆளும்ய்யா நீர்,

  கேவலம் ஒரு கருத்து கணிப்புக்கே மூணு பேரை போட்டு தள்ளும் கட்சியொன்று

  தமிழகத்தின் நிரந்தர முதல்வராக தான் மட்டும் தான் இருக்க வேண்டும் என எண்ணுபவரின் கட்சியொன்று

  பாண்டியை தன் பையில் அடக்க நினைக்கும் கட்சியொன்று

  கக்கூஸ் போக கூட டில்லி இருந்து அனுமதி வாங்கும் கட்சியொன்று


  இத எல்லாம் வச்சுக்குக்கிட்டு நல்லா காணுகின்றீர் கனவு....

  வரலாற்றை ஓழுங்கா எழுதும்....


 28. தருமி said...

  இராமநாதா...(பல்லைக் கடிக்கிறது தெரியுதா?)
  //சாம்,
  நீங்க பெரியப்பாவா?''
  இல்ல .. இல்ல.. பெரீஈஈயப்பா...சரியா?

  //மாத்திக்கொடுக்கலியே.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தானே? //

  எதுக்கு'யா இந்த வரிகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். பெயர் அப்டின்னு கேட்டேன்.
  எழுதுனவருக்கு மரியாதை கொடுக்காம வாயை அசைச்சவருக்குக் கொடுக்கணுமான்னு கேட்டேன்.

  புரிஞ்சுதா... ஸ்ஸ்ஸ்...அப்பா கண்ணக் கட்டுதே ..


 29. rv said...

  புலி,
  நான் பச்சை தமிழன் இல்லை.. நீலத்தமிழனில்லை. சிவப்புத்தமிழனில்லை.. நான் brown தமிழன்.

  உள்குத்துறதுல வித்தகனாயிட்ட... சாக்கிரதையப்பூ!!!!!


 30. rv said...

  //அப்ப காங், இல்லாட்டி பாமக தான்.//

  யோவ்... எங்க கட்சி ப.ம.க.. பச்சோந்தி மக்கள் கட்சி.. நாளைக்கே தலைக்கு அடுத்த வாரிசு நான் தான்னு தினமூடில வரப்போகுது.... இந்த நேரத்துல காரியத்தையே கெடுத்துடுவ போலிருக்கே....


 31. rv said...

  புலி,
  ஆயிரம் கோடிங்கறது கிட்டத்தட்ட இருநூறு மில்லியன் டாலர்! ஆஞ்ஜெலினா ஜோலியோட சம்பளம் கூட பத்து மில்லியன் தான் ஒரு படத்துக்கு.... கணக்கு எக்கச்சக்கமா உதைக்குது... நிஜாமோ, எம்ஜிஆரோ யார் கொடுத்தாலும் "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்"னு பாட்டு பாடவேண்டிய கட்டாயம்.... :))

  //ஏழை சூத்திரர்' ஒருவரின் பேரர//

  இதானே வேணாங்கிறது... நான் இந்த பொலிடிக்ஸில நுழைவதாய் இல்லை!!!!


 32. rv said...

  புலி,
  அப்புறம் தமிழக கட்சிகளின் நிலைமைய புட்டுபுட்டு வச்சிருக்கீங்க.. இருந்தாலும் மதிமுக தொடங்கி இன்னும் மிச்ச கட்சிகளை நீங்க விமர்சிக்காத்ததால் நீங்க அந்த கட்சிகள சேர்ந்த புல்லுருவிகள் என இந்த உயர்நீதிமன்றம் (உச்ச மனு இல்லப்பா) தீர்ப்பளிக்கின்றது!!!!


 33. Geetha Sambasivam said...

  பதில் சொல்லலாமா வேணாமான்னு ரொம்ப யோசிச்சுட்டு இருக்கேன். ஆனால் டோனி ப்ளேர் பத்தித் தானே எழுதி இருக்கீங்கன்னு நினைச்சுட்டுத் தான் வந்தேன்,முதல்லே.ஆனால் கமென்ட யோசனையா இருக்கு. ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டுச் சொல்லுங்க, வந்து கமென்டறேன். :D


 34. துளசி கோபால் said...

  //ப்ளேர் செய்தது போல இது நம்மூரில் நடக்கும் காலமும் வருமா
  என்ற வயித்தெரிச்சலில் எழுதியது.//

  இதெல்லாம் இங்கே நியூஸியில் சகஜமப்பா.

  1989லேயே ஒரு பிரதமர் இப்படி வேலையை விட்டுட்டார்.

  பெரிய கம்பெனிகளில் இருந்து CEO க்களும் இப்படிச் செய்யறாங்க இங்கே.


 35. rv said...

  பெரீய்யப்பா,
  எம்.ஜி.ஆர் னு எழுதி குறுக்க கோடு போட்டது உள்குத்துன்னு சொல்லித்தெரிய வேண்டிய நிலையிலா இருக்கீங்க???? :)))))))


 36. rv said...

  கீதா,
  //ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டுச் சொல்லுங்க, வந்து கமென்டறேன்.//

  உப்புமா பதிவு போட என்ன கசக்குமா என்ன... அதுல பின்னூட்டம் போடுறேன்னு வாக்களிக்கிற சாக்குல இங்க ஒரு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்கோவ்...


 37. பத்மா அர்விந்த் said...

  அதிகாரத்தை விடுவெதென்பது மிக கடினம். அது நிறுவனமாகட்டும் வீடாகட்டும். அதிகாரம் தரும் போதை அத்தகையது. சில நேரங்களில் கட்சிக்குள் தரும் நெருக்கடியும் (மெக்ரீவி)ஒரு காரணமாகலாம். முடியும் போது விளக்கமாக எழுதுகிறேன்.


 38. rv said...

  அக்கா,
  //1989லேயே ஒரு பிரதமர் இப்படி வேலையை விட்டுட்டார்.//

  நீங்க வேற வயித்தெரிச்சல கிளப்புறீங்க...

  நம்மூரப் பத்தி என்ன சொல்ல...


 39. VSK said...

  நடுநிலயான பதிவு எனச் சொன்னாலும் ஆட்டோ வரும் அபாயம் உள்ள பதிவுதான்!
  :))

  "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!"
  இது வாலி அதே எம்.ஜி.ஆர். வாயசைப்பில் சொன்னது!

  லாபம் இருக்கு!

  திருந்தாத உள்ளங்களுக்குத்தான்!
  :)


 40. Tulsi said...

  ராம்ஸ்,

  நம்மூரைப் பத்திச் சொல்ல இன்னும் என்ன இருக்கு?

  கருத்துக்கணிப்பு பட்ட பாட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்கதானே?

  இன்னும் கொஞ்சம் வயித்தெரிச்சலைக் கூட்டவா?


  இன்றைய ஸ்பெஷல்


 41. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

  உங்கள் விமர்சனமும் கோபக்கனைகளும் நியாயமாகவே படுகிறது.
  உங்கள் வலைப்பக்கம் நன்றாக உள்ளது. சிறக்க வாழ்த்துக்கள்!

  அன்புடன் ஜோதிபாரதி


 

வார்ப்புரு | தமிழாக்கம்