176. பிரியா விடை பெற்றாள் என் காதலிகளுள் ஒருத்தி!

இது பை பை சொல்லும் காலம். இருந்தாலும் இப்படியொரு கொடுமையான பை பை சொல்லவேண்டி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டு நம்மை விட்டு சென்றுவிட்டாள் எல்லோரையும் கவர்ந்த Zen என்னும் உலக அழகி. அவளுக்கு சரியான obituary கூட கிடையாது. அழகிய இளங்குமரியை கோர கிழவியாக்கி, அக்கிழவியைப் நடைபிணமாக்கி ஒருவழியாக பாக் செய்து வெற்றிகரமாக அனுப்பிவைத்துள்ளனர் மாருதி உத்யோக் காரர்கள். அக்குமரியின் நினைவாக இப்பதிவு.

Classic Yellow Beauty
zen அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் அப்போது. ஹிந்துவில் விளம்பரம் வந்திருந்தது. சிகப்பு கலர் ஜென் ஒன்றின் front 1/3 ப்ரோபைல் படம். Engineered for Exhilaration என்ற tag line உடன். பார்த்த நொடியிலேயே crush. அதன் நளினமான stance இலா இல்லை டிசைனிலா - எதில் மயங்கினேன் என்று தெரியவில்லை. ஓட்டவேண்டாம,் பார்த்தாலே பரவசம். பெரிய specifications ஒன்றும் கிடையாது. ஆனால் அதன் கியர்பாக்ஸும், rev செய்ய செய்ய இன்னும் இன்னும் என்று கெஞ்சும் துடிப்பான எஞ்சினும் என அப்போது ஜென்னை ஓட்டியவர்கள் எல்லாரையும் சொக்கிப்போகத்தான் வைத்தது. வந்தவுடன் மிகப்பெரிய வெற்றியடைந்துவிடவில்லை. 93-ல் டெல்லி வீதிளிலேயே சில வண்டிகளை மட்டுமே பார்த்தேன். ஆனாலும் பேப்பரில் பார்த்த மோஹினியை நேரில் பார்த்தது பரவசமாகத்தான் இருந்தது. என்னமோ சினிமா ஸ்டாரைப்போல எப்போதாவது ரோடுகளில் கண்ணில் பட்டு மறைவாள்.


Chic in Stunning Redபின்னர் என் நண்பன் வீட்டில் புக் செய்து, பலமாதங்கள் காத்திருந்து வாங்கினார்கள். அதுவும் ப்ரீமியம் எல்லாம் கொடுத்து வார்த்தையில் வர்ணிக்க இயலா மஞ்சள். இத்தனைக்கும் பாடி கலர் பம்பர், ORVMகள், அல்லாய்ஸெல்லாம் கிடையாது. ஏன் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, செண்ட்ரல் லாக்கிங் கூட கிடையாது. ஒரிஜினல் மிசெலின் ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்தது. அந்த அழகியைப் பார்க்கவென்றே அவன் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்தேன். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போன்ற அழகு. jelly bean டிசைன் என்று அப்போது அமர்க்களப்பட்டது.


Zen VX - Revampedஒரு வழியாக மூன்று வருடங்கள் காத்திருந்ததன் பயனாய் 97-ல் ஒரு சொக்கவைக்கும் வெள்ளை அழகி வீட்டினுள் வந்தாள். மஞ்சள் கூடவே கூடாதென்று மேலிடங்கள் உத்தரவிட்டதன் பேரில் வெள்ளை. இருந்துமென்ன 'a zen is a zen is a zen'. காரினுள் நான்கு 'பெரிய'வர்கள் பயணம் செய்ய இயலாது. அதிகபட்சம் இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள். அவ்வளவுதான் இடம். டிக்கியில் ரெண்டு குடை வைத்தால் இடம் காலி. இப்படி இடப்பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. இதைத்தவிர nags நிறைய. ஆனால் ஓட்டுநர்களுக்கு எந்தக்கவலையானாலும் அதை மறக்கச்செய்யும் அளவுக்கு போதையேற்ற வல்லவள் zen. போதையின் காரணம் அவளின் எஞ்சின் - கியர்பாக்ஸ் ஜோடி. ஓட்ட ஓட்ட சுகம். கூட உட்கார்ந்து வருபவர்கள் எல்லாம் சோர்ந்து போனாலும், ஓட்டுநருக்கு மட்டும் 'மற்ற மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக்காதல் அல்ல'. கன்னியாகுமரியிலிருந்து திருப்பதிவரை நாகப்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை என ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கூடவே வந்தவளை இன்னொருவரின் கையைப்பிடித்துக் கொடுக்கவேண்டுமென்றால் தாங்குமா? என்ன செய்ய, ப்ராக்டிகல் காரணங்களுக்காகவும் மாருதி சர்வீஸ் செண்டரின் அலட்சியப்போக்கினாலும் மாருதி வைத்துக்கொள்வது இனி லாயக்குப்படாது என்று சொல்லி அந்த வெள்ளை அழகியைக் கொடுத்தாகிவிட்டது.

இப்படி அவளுடனான எனது தேனிலவு வெறும் நான்கு வருடங்களே ஆனாலும் அவளின் அடிமையாய் முற்றிலுமாய் மாற்றிவிட்டு சென்றாள் என்னைவிட்டு.
Zen Classic - What was Maruti thinking?
அவள் இருந்த இந்த குறைந்த வருடங்களில் பல மேக்கப், பல எஞ்சின்கள் என மாற்றி அவளை நிம்மதியாக இருக்கவிடாமல் படுத்திக்கொண்டிருந்தனர் மாருதியைச் சேர்ந்தவர்கள். ஜென் க்ளாசிக் என்று கண்ணாலே பார்க்ககூட முடியாத அந்நியன் மேக்கப்பை போட்டு என் காதலியை அவமானப்படுத்தினர். அவள் இடைக்கும் நடைக்கும் துளியும் பொருந்தாத பீஜோ டிசலை உள்ளே வைத்து பாடாய்ப்படுத்தினர். பின்னர் Lx, Lxi, Vx, Vxi, A, D என ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் பொட்டாய் ஒட்டித்தீர்த்தனர். இவற்றைக்கூட பரவாயில்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடலாம்.

ஆனால் புதுசாக்குகிறேன் என்று சொல்லி அவள் முகத்தையும் பின்புறத்தையும் சின்னாப்பின்னப்படுத்தியைத்தான் தாங்கமுடியவில்லை. ஒரிஜினல் '93 டிசைனின் மிகப்பெரிய ப்ளஸ்களான ஹெட் லைட்டுகளையும், டெயில் லாம்ப்களையும் அநியாயத்திற்கு மகா கண்றாவியாய் மாற்றி 2003 இல் 'புத்தம்புதிய ஜென்' என்று தெருக்களில் அவளை அரைநிர்வாணமாய் ஓடவிடுவதுபோல விட்டனர். அப்படியும் நேற்றுமுளைத்த அசிங்கமான சாண்ட்ரோகளுக்கு போட்டியாக நளினமாகத்தான் ஓடினாள் ஜென். மாருதியினர் அவளுக்கு செய்த கொடுமைகளெல்லாம் போதாமல் முத்தாய்ப்பாய் முள்கீரிடம் வைப்பதுபோல 'எஸ்டிலோ' என்னும் அசிங்கத்திற்கு Zen என்கிற அழகியின் பெயரை வைத்துள்ளனர். காதலியைக் கொன்றுபுதைத்துவிட்டு ராட்சசிக்கு இளவரசி பட்டம். அவள் பெயரில் ஆள்மாறாட்டம். மோகினிக்குப் பதில் சூர்ப்பனகை. ராட்சசி காதலியாக முடியுமா என்ன?

The Typical Maruti Makeover. Scarily Made Up! Jelly Bean Design gone down the drain!மாருதி 800களும் டப்பா ஆம்னிகளும் இன்னும் தயாரிப்பில் இருக்கையில் இவளின் கதையை மட்டும் சட்டென்று முடித்துவிட்டனர். பாவம் மாருதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டாள் என் காதலி. இந்த அழகி பிறந்திருக்கவேண்டிய இடமே வேறு. அவளை வைத்து நாளும் கொண்டாடியிருப்பார்கள். இருந்தாலும் ஆறுதலாய், இப்போது நம்மைவிட்டு போனாலும், செகண்ட் ஹாண்ட் கார் சந்தையில் பலவருடங்களுக்கு சீரும் சிறப்புமாய் உலாவருவாள் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வப்போது சாலைகளில் அதே பழைய மிடுக்குடனும் துடுக்குடனும் எதிர்ப்புறம் அவள் பறக்கையிலே உதட்டோரமாய் ஒரு சின்ன புன்னகை பூக்காமல் போகாது என்பது நிச்சயம்.
This? A Zen? More like Wagon R's Ugly Twin!--------
முந்தாநேற்றைக்கு ஒரு 94 வருடத்து மஞ்சள் ஜென் பெயிண்ட் கூட மங்காமல், இண்டீரியர்களெல்லாம் பளிச்சென்று பார்க்க நேர்ந்தது. உண்மையாகவே பொறாமையாக இருந்தது. இந்த அழகி நம்மிடம் இல்லையே என்று. அதோடு கூட புது ஜென் எஸ்டிலோவை ஷோரூமில் பார்த்துவிட்டு வந்த ஆத்திரத்தில் எழுதியது.

16 Comments:

 1. நாகை சிவா said...

  //பாவம் மாருதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டாள் என் காதலி. //

  //அவ்வப்போது சாலைகளில் அதே பழைய மிடுக்குடனும் துடுக்குடனும் எதிர்ப்புறம் அவள் பறக்கையிலே உதட்டோரமாய் ஒரு சின்ன புன்னகை பூக்காமல் போகாது என்பது நிச்சயம்.//

  உண்மை உண்மை. உண்மையை தவிர வேற ஒன்றும் இல்லை.


 2. rv said...

  வாங்க புலி,
  //உண்மை உண்மை. உண்மையை தவிர வேற ஒன்றும் இல்லை.//
  புலி கடிக்கும் தெரியும்.. ஆனா இதுல ஏதோ குத்தறாப்புல இல்ல இருக்கு? ஒண்ணுமே புரியலையே?


 3. இலவசக்கொத்தனார் said...

  நல்லா எழுதி இருக்கீரே, சரி எதனா சொல்லலாம் அப்படின்னு வந்தா, டப்பா ஆம்னி என எழுதி என்னை இன்ஸல்ட் பண்ணிட்டீரே.

  உம்ம பேச்சு கா!


 4. rv said...

  கொத்ஸு,
  //டப்பா ஆம்னி என எழுதி என்னை இன்ஸல்ட் பண்ணிட்டீரே.//

  நீங்க நான் சொல்ற 'ஆம்னி'ய பத்தித்தானே பேசிகிட்டிருக்கீங்க???


 5. இலவசக்கொத்தனார் said...

  //நீங்க நான் சொல்ற 'ஆம்னி'ய பத்தித்தானே பேசிகிட்டிருக்கீங்க???//

  நீங்க எந்த ஆம்னியைப் பத்தி சொன்னீங்களோ தெரியாது. நான் சொன்னது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எங்கள் ஊர் கிருஷ்ணா தியேட்டரில் பார்த்த நீல ஆம்னியைத்தான். ;)


 6. rv said...

  கொத்ஸு,
  சொல்றத சரியாச் சொல்லுமய்யா. தமிழ் ரொம்ப நுட்பமான மொழி!

  கிருஷ்ணா தியேட்டரில் நின்ன நீல ஆம்னியா ஓடின நீல ஆம்னியா?


 7. இலவசக்கொத்தனார் said...

  //கிருஷ்ணா தியேட்டரில் நின்ன நீல ஆம்னியா ஓடின நீல ஆம்னியா?//

  திரை நிறையா ஓடின ஆம்னி ஐயா. இதில் என்ன சந்தேகம்? அதுக்கப்புறம் வெளிய வந்து பார்த்தா ரோடில் வேற ஓடுது. ஆனா அப்பவாவது ஒண்ணு ரெண்டுதான். கொஞ்ச நாள் போன பின்னாடி பார்த்தா எங்க பார்த்தாலும் ஓடிச்சுங்க. எவன் கிட்ட பேசினாலும், நானும் ஆம்னி 'வெச்சி' இருக்கேண்டா அப்படின்னு பெருமை பீத்தல் வேற!


 8. rv said...

  அப்போதைக்கு வந்ததுலேயே சீப்பா கிடைச்சது ஆம்னிதானே? அதான் அப்படி சொல்லிருப்பாங்க. :))


 9. இலவசக்கொத்தனார் said...

  ஆமாம் ஆமா ரேட்டு என்னமோ சீப்புதான். ஆனா அதுக்கே அது ஓடற ஓட்டமும் உழைக்கிற உழைப்பும்...

  நீர் என்னடான்னா வாய்க்கு வந்தா மாதிரி டப்பான்னு வேற சொல்லறீரு.


 10. rv said...

  //ஆமா ரேட்டு என்னமோ சீப்புதான். ஆனா அதுக்கே அது ஓடற ஓட்டமும் உழைக்கிற உழைப்பும்...

  நீர் என்னடான்னா வாய்க்கு வந்தா மாதிரி டப்பான்னு வேற சொல்லறீரு.//

  கொஞ்சம் ரூட் மாறுதோன்னு நினச்சேன். திரும்ப டீசண்ட் PG-13க்கு வந்துட்டீரு. நன்றி.

  டப்பா மாதிரி இருக்கற வண்டிய டப்பான்னுதானே சொல்வாங்க


 11. G.Ragavan said...

  zen காரில் அந்த மஞ்சள் நிறம் இருக்கிறதே...அடடா! பார்க்கப் பார்க்கப் பரவசம். புது மாடல் வருதுன்னு சொன்னாங்க. வந்துருச்சு போல. ரொம்ப வருத்தப்பட்டு நீங்க எழுதீருக்கிறதப் பாத்தா உங்க வருத்தம் புரியுது. வருத்தப்படாதீங்க. இதுவும் ஓடும்.


 12. வடுவூர் குமார் said...

  இன்னும் வாங்குகிற அளவுக்கு பணம் சேரவில்லை.வாங்கிய பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.
  :-))


 13. ENNAR said...

  நான் வேறு மாதிரி நினைத்தேன்


 14. rv said...

  ஜிரா,
  //அடடா! பார்க்கப் பார்க்கப் பரவசம். //

  அதே அதே.. பாத்துகிட்டே இருக்கலாம்.

  //புது மாடல் வருதுன்னு சொன்னாங்க. வந்துருச்சு போல.//
  நீங்க இப்போ இந்தியால தான் இருக்கீங்களா? எந்த மலையில இருக்கற குகைக்குள்ள இருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா வந்து பார்க்க வசதியா இருக்கும். :))

  //இதுவும் ஓடும//
  ஓடும் என்பதில் சந்தேகமேயில்லை. பழசு மாதிரி ஓடுமாங்கறதுதான் சந்தேகம்.


 15. rv said...

  வடுவூர் குமார்,
  வாங்கினாத்தான் பின்னூட்டம் போடணும்னா எதுலயுமே போடமுடியாதுங்க.

  BMWவோ மெர்சிடிஸோ விடற கார்களெல்லாம் நல்லாருக்கு இல்லேன்னு சொல்லறதுக்கு வாங்கினாத்தான் முடியும்னா அப்புறம் எங்க போறது. போஸ்டர் போஸ்டரா பெராரியும் லம்போர்கினியும் ஒட்டி வச்சுகிட்டிருந்ததெல்லாம் பின்ன? வாழ்க்கைக்கும், பணம் வந்தாலும் வாங்க மாட்டோம்னு தெரிஞ்ச விஷயங்கள் தானே.

  அதுமாதிரி தான் இதுவும்.

  நன்றி


 16. rv said...

  என்னார்,
  நீங்க என்ன வேற மாதிரி நினைச்சீங்க?

  நான் ரொம்ப நல்ல பையன்ங்க.


 

வார்ப்புரு | தமிழாக்கம்