நானொரு சந்து, தஞ்சாவூர் சந்து

ராஜராஜ சோழன் கட்டின 'பெரிய கோயில்' உலக பிரசித்தம். வண்டி வண்டியா வெள்ளக்காரனும், நம்மூர்காரனும் வந்து பாத்துட்டு போராங்க. ஆனா, அதத் தவிர பாக்கறதுக்கு ஒன்னுமே இல்லே இந்த தஞ்சாவூர்லனு நெனச்சீங்களா? தப்பு பண்ணிட்டீங்க சார், தப்பு. முக்கியமா நீங்க பாக்கவேண்டியது எங்கள, சந்து-களதான் சார். நாங்க எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா? எங்க ஊர் ராஜா ஆண்ட காலத்துலேயே நாங்க இங்க வந்தாச்சு. அந்த காலத்துல எல்லாம் ஊர்ல முக்கியமா நாலு வீதி தானுங்க. அதாவது, ஊர் நடுவுல அரண்மனை, அத சுத்தி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு அப்டின்னு நாலு ராஜ வீதிங்க இருந்தாங்க. அவங்கதாங்க இன்னிக்கும் ராஜ மரியாதையோட இருக்காங்க. எல்லா பெரிய கடைங்க, வங்கிகள், ஆஸுபுத்திரி, வக்கீலுங்க, பத்திரிக்கை ஆபிஸுங்க இப்படி அந்த நாலு பேருக்கும் பயங்கர மவுசு. பகல் வேளயில மனுஷங்க கால் வெக்க எடமிருக்காதுங்க. இதுல கொடுமை என்னன்னா, இந்த வீதிங்க அவங்களுக்கு கெடச்ச மதிப்ப வெச்சுகிட்டு அரசியல் கூட்டம், அது இது அப்டின்னு அனுமதிக்கிறாங்க. இத்தனைக்கும் அவங்க அவ்வளவு அகலம் இல்லீங்க. எங்களவிட ரெண்டு மடங்குதான் அகலம் ஜாஸ்தி.

நாங்க எவ்வளவு தெரியுமா? மூனு மனுஷங்கள பக்கத்து பக்கத்துல நிக்கவெச்சா அடுத்த ஆளுக்கு எடம் இருக்காது. இதாங்க நம்ம தெருக்களோட அகலம். ஆனா, இந்த நெரிசல்லயும் எவ்வளவு மக்கள் எங்களுக்குள்ள தங்கிருக்காங்க தெரியுங்களா? பாதி தஞ்சாவூரே உங்களுக்குள்ள தான்யா இருக்காங்க, அப்டினு மத்த பெரியதெருக கிண்டல் பண்ணுவாங்க. அது கிட்டதட்ட நெஜம்தாங்க.

'புறா கூண்டு போல இங்க முன்னூறு ரூமு' அப்டினு ஒரு பாட்ட நம்ம இடத்துல ஒருநாள் அலறவிட்டாங்க. கேட்ட எனக்கு ஒரே குஷிதான். ஏ! நம்ம பத்திதான்யா பாடுறாங்கனு தோனிச்சு. எங்க இடத்துல தங்குறவங்களுக்கு சின்ன சின்ன வீடுதான். ஆனா, எங்ககிட்ட இருக்குற நிம்மதி வேற எந்த தெருங்ககிட்டயாவது கிடைக்குமானு கேட்டுப்பாருங்க.

ஏன்னா, நான் மொதல்ல சொன்ன மாதிரி, நாங்க வந்து பல ஆயிரம் வருஷங்க ஓடிப்போச்சுங்க. ஆனா இன்னும், எங்க வீடுங்க பழமைய விடலீங்க. அந்த காலத்து திண்ணைங்க, மித்தம், நடு வீட்லேயே ஒரு குட்டி துளசி மடம் இப்டி எல்லாத்துலயும் ஒரு மண்வாசனை இருக்கும்.
உள்ள வந்தா வெளியே போக மனசு வராதுங்க, அடிச்சு சொல்றேன்.

பழமைலையும் புதுமை பண்ணவங்க நாங்க. அந்த காலத்துலயே 'நெட்வொர்க்'கோட வீடு கட்டினாங்க. ஒரு வீட்டுக்குள்ள போனா, அதோட கொல்லபுறத்துவழியா பின்னாடிபோனா, அடுத்த வீட்டுக்கும், தெருக்கோடிக்கும் போயிடலாம். இல்ல 'சைடுல' அடுத்த தெருவுக்கே வழி இருக்குமுங்க. இப்டி ஆத்திர அவசரத்த புரிஞ்சு உருவான ஆளுங்க நாங்க.

எங்க ஊரப்பத்தி ஒங்களுக்கே தெரியும், கலைகளை வளத்ததுல நாங்கதாங்க தமிழ்நாட்டுலயே முதலிடம். இன்னிக்கு கூட நெறயா ஆளுங்க எங்க சந்துகள்ள தங்கியிருக்காங்க. பாட்டு வாசிக்கிறவங்களும், பக்கவாத்தியக்காரங்களூம் ஏன், வீணை மாதிரி வாத்தியங்களச் செய்றதே எங்க பக்கம்தான். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருத்தரான தியாகராஜர் பூஜை பண்ண ராமர் சிலை இன்னிக்கும் எங்க சந்துல ஒரு வீட்டுல இருக்குங்க. வருஷா வருஷம் திருவையாத்துல வந்து பாடும் பலர் இங்க வந்து அந்த சிலைக்கு முன்னால பாடிட்டுபோவாங்க. அதுக்கும் மேல,
இன்னொருத்தரான வெங்கடகிருஷ்ணரோட (சியாமா சாஸ்திரி) வீடே இன்னிக்கும் இருக்கு. இதத்தவிர, கோயிலுங்க, தெருக்கோடி புள்ளையாருங்க இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

ஆளுங்க இங்கயும் அங்கயும் ஓடிகிட்டுதான் இருப்பாங்க. ஆனா, ஏதோ ஆசிரமத்துக்குள்ள வந்த மாதிரி அமைதி இருக்குங்க எப்பவும். பாதைகள் சின்னதா இருக்கறதால பெரிய வண்டிங்க உள்ள வரமுடியாது. அதனால கூட்டம், நெரிசல், புகை இப்படி எந்த தொந்தரவும் கிடையாது. அதான் இத்தனை வருஷங்களா கட்டுக்கோப்பா இருக்கோம்.

பொதுவா சந்துங்கனாலே பொந்துங்க மாதிரினு சொல்லுவாங்க. ஆனா, நாங்க குகைகள் மாதிரி. உள்ள வந்துட்டீங்கனா போய்கிட்டே இருப்பீங்க. சில சமயம், நாள் முழுக்க நடந்தாலும் வெளிய போக வழிதெரியாம கூட போகலாம். அப்படி மாட்டிக்கிட்டீங்கனா, கவலைப்படாதீங்க. 'டேய், வலைப்பதிவு செஞ்ச சந்தே'னு சத்தம்போட்டு கூப்பிடுங்க. நம்ம ஆள அனுப்பி வெக்கறேன்.

நான் ஒரு முட்டாளு, உள்ளூர்காரனே இந்த பக்கம் வரமாட்டேங்கறான். ஆப்பிரிக்காவிலயும், அமெரிக்காவிலயும் இருக்குற உங்ககிட்ட போய் இதச்சொல்றேன். நீங்க வரலேன்னாலும், வெள்ளக்கார துரைங்க யாராவது வந்தா மறக்காம எங்கள வந்து பாக்கச்சொல்லுங்க, டான்க்ஸ்.!

போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். நன்றி மீண்டும் வருக, ஹி! ஹி!

இப்படிக்கு,
வரகப்பய்யர் சந்து,
தஞ்சாவூர்.

----
PS: போனது மாதிரியே இதுவும் நண்பரின் பதிவு தான்.

1 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    இராம்ஸ். உங்க நண்பர் ரொம்ப அற்புதமா எழுதுறாருங்கோ...ஏன் இப்ப எல்லாம் அவர் எழுதுறதில்ல?


 

வார்ப்புரு | தமிழாக்கம்