சந்திரமுகி என் பார்வையில்

உலகிலேயே தலைசிறந்த மருத்துவர், அமெரிக்காவில் படித்த டாக்டர் என்று ஒவர் பில்ட் அப் கொடுத்ததால் கடைசியில் மருத்துவ ரீதியாக விளக்கங்கள் கொடுப்பார் என்று பெரிதும் நம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமாய், தமிழ் சினிமாவின் கையில் பெரும்பாடு படும் மருத்துவம். சாதாரண வாந்தி பேதிக்குக்கூட "பேஷண்டுக்கு அளவுக்கு அதிகமான அதிர்ச்சியோ சந்தோஷத்தையோ தரக்கூடிய எதையும் சொல்லாதீர்கள்" என்று கண்ணாடியை கழற்றி கொண்டே, பின்னர் தன் goatee-ஐ தடவிக்கொண்டே "இனிமே எல்லாம் அவன் செயல்" சொல்லும் டாக்டர்களே ரசிகர்களுக்கு பழக்கம். கதாநாயகி வாந்தியெடுத்தவுடன், ஒரு முறை பல்ஸ் பார்த்து "congratulations, நீங்க அப்பாவாக போறீங்க" ன்னு ஹீரோவைப் பார்த்து டயலாக் விடும் மகப்பேறு மருத்துவர்களும் வலம் வரும் தமிழ்சினிமாவில், சூப்பர்ஸ்டாராவது கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இதை செய்வாரா என்று நம்பினேன். ஆனால் இந்த படத்திலும் இதே நிலையே என்ற ஏமாற்றமே மிஞ்சியது. சரி, நோயின் தன்மையை விடுங்கள்.. பெயரையாவது சரியாகச் சொல்லியிருக்கலாம். கங்காவின் நோயிற்கு தற்போதைய பெயர் "Dissociative Identity Disorder". SPD-ம் MPD-ம் misleading-ஆக இருப்பதால் 90-களிலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதுகூட தெரியாதவரா நம் சூப்பர் சரவணன்? இந்த நோய் (DID) கங்காவிற்கு வந்ததற்கு காரணம் Post Traumatic Stress Disorder தான் என்று காட்சிகளில் காண்பிப்பது ஒரு ஆறுதல். ஆனால் சாதாரண ரசிகனுக்கு PTSD என்று புரியும் வகையில் இல்லை. DID-யும் PTSD-யும் வெவ்வேறு விஷயங்கள். இந்த DID நோயே சர்ச்சைக்குரியது. இது நிஜமாக நோயே இல்லை, மாறாக நோயாளிகள் பொய் சொல்கின்றனர் என்று கூறுவோரும் இருக்கின்றனர். இதையெல்லாம் சொல்லியிருந்தால் சந்தோஷத்தில் எனக்கு சந்தோஷத்தில் மாரடைப்பே வந்திருக்கும். ஹூம்.. அதை விடுங்கள்.

இத்தனை கோடிகள் செலவழித்து தயாரித்த படத்தின் மூலக்கருவான இந்த நோயின் தன்மையை technical advisor-ஆக ஒரு நிஜ மனோதத்துவ நிபுணரை அணுகி விசாரித்திருக்கலாம். அதற்கு மாறாக, artistic license-ஐயெல்லாம் தாண்டி, வாசுவின் அபத்தக் கற்பனையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவ நோயை குணப்படுத்த விட்டலாச்சார்யாவின் மந்திரவாதியை நாடுவதெல்லாம், ரஜினியின் பாபா hang-over என்று நினைக்கிறேன். பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் mind-இல் இருக்கிறது என்று தைரியமாய் சூப்பர்ஸ்டார் சொல்லியிருந்தால், தமிழ்நாட்டில் இந்த மூட நம்பிக்கை கொஞ்சமாவது குறைந்திருக்கும். அவரின் பெரும் விசிறிகளான குழந்தைகளுக்கு முக்கியமாக. அதைச் சொல்லாமல், நீங்கள் மந்திரம் போடுங்கள், நான் மருத்துவம் பார்க்கிறேன் என்று ஏன் சமரசம் செய்து பின்வாங்கவேண்டும்? அந்த மந்திரவாதி பொய்வேஷக்காரன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? பிரபு சொல்லும் டயலாக்கை கூட திசைதிருப்பி மந்திரவாதிகள் உண்மை என்று ஏன் நம்ப வைக்க வேண்டும்?

வடிவேலும் ரஜினியும் செய்யும் காமெடி அபத்தமாகவெ பட்டது. செந்தில், கவுண்டமணியை வைத்துக்கொண்டு வீரா, மன்னன் போன்றவற்றில் ஜொலித்தார் ரஜினி. இதில் சொதப்பல்.

எனக்கென்னவோ ஜோதிகா நடிக்க(?)வந்ததே தமிழ்சினிமாவிற்கு சாபக்கேடு என்றுதான் தோன்றுகிறது. எந்த படத்தில் நடித்திருக்கிறார்.. சும்மா சும்மா கண்ணை உருட்டறதும், ஆள்காட்டி விரல நீட்டிக்கிட்டே தலய ஆட்றதும் நடிப்புன்னு தப்பா நினைச்சுக்கிட்டு நம்மள படாத பாடு படுத்தி வருகிறார். இந்த படம் அவரின் sadism-த்தின் கோரத்தாண்டவம். கடைசி அரை மணி நேரத்தில், முக்கியமாய் ரஜினி தான் ஏன் கங்கா தான் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதற்காக காட்டப்படும் காட்சிகளில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இதை பார்த்து ஓகே, கட் சொன்ன வாசு என்ன நினைத்தார் என்பது புரியவில்லை. அதேமாதிரி வீனீத் போன்றதொரு அற்புதமான நடனக்கலைஞனை cast செய்ததன் மூலம் வாசு ஜோதிகாவிற்கு ஆடவராது என்றும் காண்பித்துள்ளார். ஒரு வேளை கங்காவிற்கு ஆடவராது என்பதற்காக இப்படி தத்தக்கா பித்தக்கா என்று ஆடுவாரோ? சேச்சே, ஒரு professional நடிகை தான் இதைச் செய்வாங்க. ஜோ-கிட்டயெல்லாம் இதை எதிர்ப்பார்க்க முடியாது.

படம் முழுக தெலுங்கு டப்பிங் வாசம். அகிலாண்டேஸ்வரி காரக்டர்? அதைப் பற்றி கூறத் தேவையில்லை. நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

தேவுடா தேவுடா - இது சிம்பு, த்னுஷ் போன்றோருக்கான ஒப்பனிங் பாடல். சூப்பர்ஸ்டாருக்கல்ல. ரஹ்மானை விட்டது பெரிய தவறு. வித்யாசாகர் வெறும் இரண்டு பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். அத்திந்தோம் மற்றும் கொஞ்ச நேரம். கொஞ்ச நேரம் பாட்டிலும் அழகான ஒரு பாடலை ஆஷா வாயால், இல்லை மூக்கால் பாட கேட்கவேண்டியிருக்கு.

திரைக்கதை மஹா சொதப்பல்.

இந்த படத்தில் ரஜினியில்லாமல் சத்யராஜோ சரத்குமாரோ நடித்திருந்தால் ரெண்டு நாள் கூட ஒடியிருக்குமா என்பது சந்தேகம். ரஜினிகாந்த் என்னும் காந்தம் இருப்பதால் மட்டுமே இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்கிறது இந்த சந்திரமுகி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. சூப்பர்ஸ்டாராக ஆசைப்பட்ட அந்நியனும், கில்லியும், வில்லனும், மன்மதனும், சண்டக்கோழியும் தலைவருக்கு முன்னால் எம்மாத்திரம் என்ற எனது நம்பிக்கையை வலிமையுறச் செய்திருக்கிறது இப்படத்தின் வெற்றி.

பிகு: முதலில் இந்த பதிவிற்கு பின்னூட்டமாகவே எழுதினேன். ரொம்ப நீளமாகிவிட்டதால் தனிப்பதிவு செய்கிறேன்.

1 Comments:

  1. Anonymous said...

    ///சாதாரண வாந்தி பேதிக்குக்கூட "பேஷண்டுக்கு அளவுக்கு அதிகமான அதிர்ச்சியோ சந்தோஷத்தையோ தரக்கூடிய எதையும் சொல்லாதீர்கள்" என்று கண்ணாடியை கழற்றி கொண்டே, பின்னர் //

    :))
    ரவியா


 

வார்ப்புரு | தமிழாக்கம்