214. கொத்தனாரின் இனவெறி நுண்ணரசியல்!

சமீபத்தில் கொத்ஸோட ராஜ் பட்டேல் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தவுடன் ரொம்ப நாளாக எழுத நினைத்துக்கொண்டிருந்த இவ்விஷயத்தை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். பிரபலமான ஆர்ச்சீஸ் காமிக்ஸில் புதிதாய் நுழைந்திருக்கும் ராஜ்பட்டேல் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பிச்சைக்கார இந்தியனாக காட்டாமல் நல்லமுறையில் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறார். ஆனால் என்னை இப்பதிவை எழுத தூண்டியது பின்வரும் வரிகள் தான்..

//அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள்.//

மதர் இந்தியா ஜிந்தாபாத் என்று கோஷம் போடவில்லையென்றாலும் ஒருவிதமான பெருமை தொனிக்கும்படியே இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சாட்டிலேயே கேட்டிருக்கமுடியும் என்றாலும் நிற்க வைத்து சாட்டையை இப்படி சுழற்றினால் மேலும் பலரின் பார்வைகளையும் புரிந்துகொள்ளமுடியுமே என்ற ஆசையினாலேயே இது. அமெரிக்காவில் மற்ற இனத்தின் வம்சாவழியினரை விட இந்தியர்கள் பெரும்பாலும் நல்ல நிலைகளில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! :) இதற்குரிய காரணங்களை ஆராய்வது நம் நோக்கமல்ல. அமெரிக்கா தவிர ஏனைய மேற்கத்திய நாடுகளிலும், இந்தியர்கள் தத்தமது நாடுகளில் இருக்கும் கலாச்சாரத்தோடு மற்ற இனங்களை விட இணக்கமாக இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு. அப்படி சுமூகமான நிலை நிலவும் பட்சத்தில் ஒரு சித்திரக் கதையில் இந்திய கதாப்பாத்திரம் சேர்க்கப்பட்டது newsworthyஆ என்ற கேள்வி நெருடுகிறதா இல்லையா? வெள்ளைக்காரனிடம் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய ஆர்வம் இருப்பதும் தெளிவாகிறதே?

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். ஆர்ச்சீஸ் பிடித்ததால் அதிலும் தன்னால் அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய ஒரு கதாபாத்திரம் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தால் இந்த சிற்றிலக்கிய சிண்டுபிடிக்கும் பதிவு கண்டிப்பாக வந்திருக்காது. ஆனால் கடைசி வரிகள்? வெளிநாடு வாழ் இந்தியர்கள்/இந்திய வம்சாவழியினர்/இந்தியாவின் இந்தியர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றே என்ற நிலைப்பாட்டுடன்: இதில் ஒரு அமெரிக்க சிறுவர் பத்திரிக்கையில் சித்திரப் பட கதாபாத்திரம் தோன்றியதால் இந்தியர்களின் தகுதியும், திறமையும், பாரம்பரியமும், உழைப்பும் அதற்கு கிடைத்த சமூக அந்தஸ்தும் இன்னும் ஒருமுறை நிருபிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்ற பொருள் வருகிறதல்லவா? இப்படி நம் இருப்பை நிருபிக்கவேண்டியதற்கான அவசியமோ நிர்பந்தமோ இருப்பதாக தெரியாத போது இதன் பயன் தான் என்ன?

இதே இழையில் தொடர்வோம். ஏனெனில் இது இந்தப்பதிவின் மையக்கருத்தல்ல. கொத்ஸின் பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டிருக்கும் சில கருத்துகள் benign வகையென்றால் நம் இந்தியர்களிடையே இருக்கும் இதே நோயின் கோர வடிவம் இன்னமும் malignant ஆனது. அதை நம் அரசியல்வாதிகள் சுரண்டி மைலேஜ் பெற முயல்வது புரிந்துகொள்ளக் கூடியதென்றாலும் படித்த மக்களும் அதற்கு துணைபோவது மிகவும் வருந்தத்தக்கது.

பெருமைமிகு இந்தியர்கள் சிறு பட்டியல் பார்ப்போமா? இவர்களை உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். முழுமையான லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு.

1. சுனிதா வில்லியம்ஸ் (விண்வெளி விஞ்ஞானி)
2. கல்பனா சாவ்லா (விண்வெளி விஞ்ஞானி)
3. சுப்ரமண்யம் சந்த்ரசேகர் (நோபல் பரிசு பெற்றவர்)
4. அமர் போஸ் (bose corp)
5. மனோஜ் நைட் சியாமளன் (திரைப்பட இயக்குநர்)
6. இந்த்ரா நூயி (பெப்சியின் தலைவர்)
7. அமர்த்யா சென் (நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்)
8. ஹர் கோவிந்த் குரானா (நோபல் பரிசு பெற்றவர்)
9. ஜுபின் மெஹதா (கம்போஸர்)
10. மிரா நாயர் (க்ராஸ் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்)
11. சபீர் பாட்டியா (ஹாட்மெயில் கண்டுபிடித்தவர்)
12. அருண் சாரின் (வோடாபோன் CEO)

இவர்களின் சாதனைகளை இந்திய பத்திரிகைகள் வாயிலாக நாமும் அறிந்துகொண்டுள்ளோம். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று ஏதாவதொரு கட்டத்தில் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுடன் சண்டையிட்டிருப்பீர்கள்..பாருங்க நாங்க எவ்வளவு புத்திசாலியென்று. இந்திய அரசாங்கமே இவர்களில் பலரை கௌரவப்படுத்தியுள்ளது. இவர்கள் படித்த பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் போன்றவற்றிற்கு ம்யூசியம் டூர் வைக்கக்கூடிய அளவுக்கு கூட்டம் வருகிறது. இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியனுக்கும், அதாவது கனவு காணும் "இந்தியனு"க்கும் ஒரு படிப்பினை என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.

இவ்வளவு தெரிந்த உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவர்களில் யாருமே இந்தியர்களே இல்லை!

1. திருமதி சுனிதா தான் இப்போதைய ஹாட் பேவரிட். இவர் முழுக்க இந்திய வம்சாவழியினர் அல்லர். ஸ்லோவேனியத் தாயும் இந்தியத் தந்தையும் கொண்டவர். இவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் செட்டிலாகி அங்கேயெ பிறந்தவர் சுனிதா.

2. திருமதி கல்பனா சவ்லா - இவர் இறந்தபோது இந்தியாவே அழுதது. மனிதாபிமான முறையில் அதைப்பற்றி தவறு கூற இயலாது. 1983 அமெரிக்கரை மணந்த கல்பனா, 1990களில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

3. திரு சந்த்ரசேகர் - சித்தப்பா சி.வி.இராமனுடன் இருந்த குடும்பப்பிரச்சனைகளாலும், கேம்ப்ரிட்ஜில் சந்தித்த கல்விசார்ந்த பிரச்சனைகளாலும் அமெரிக்காவில் குடியேறியவர். 1953-ல் குடியுரிமை பெற்றவர்.

4. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற போஸின் தந்தை கல்கத்தாவில் ஆங்கிலேய ஆட்சியின் நெருக்கடியால் வெளியேறியவர். சுதந்திரத்துக்கு பிறகு தாயகம் திரும்பவில்லை. திரு அமர் போஸ் அங்கேயே பிறந்து படித்து வளர்ந்து தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்.

5. திரு மனோஜ் சியாமளன் - சென்னையில் பிறந்தவரென்றாலும் இவரின் குடும்பமும் அமெரிக்காவின் குடிகள்.

6. திருமதி இந்திரா நூயி - சென்னையைச் பிறந்த இந்திரா நூயி, அமெரிக்காவிற்கே நடுவிரலை காட்டியவரென்றாலும் அமெரிக்க பிரஜை ஆனதுதான் வரலாறு.

இது சாம்பிள்தான். ஆகக்கூடி, சொந்த காரணங்களுக்காகவோ அல்லது பெற்றோர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காரணத்தாலோ விதிவசத்தால் இவர்கள் அமெரிக்க பிரஜைகள் ஆகிவிட்டனர். இவர்கள் இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ இல்லை. (Indian citizens or NRIs). இவர்கள் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவழியினர் (People of Indian Descent). முன்னே சொன்னவற்றிற்கும் வம்சாவழியினருக்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர்கள் அனைவரும் சாதித்தவை சாதாரணமானவை அல்ல. அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அமெரிக்க குடியுரிமை பெற்றபின் இந்தியாவின் மேல் இவர்களுக்கு பாசமும் இருக்கலாம். ஆனால் இவர்கள் இந்தியர்கள் என்ற பட்டம் எதற்கு வழங்கவேண்டும்? இவர்களின் சொந்த தேவைகளுக்காகவோ, பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்காகவோ நம் நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களை நமக்கு ரோல் மாடல்களாக காட்டுவதன் அவசியம் என்ன?

இந்தியாவில் பிறந்த இந்தியர்களுக்கு இவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இந்தியாவில் வேலையில்லை என்ற வேலிடான காரணமோ, அல்லது பெற்றோர்கள் இந்தப் படுகுழியிலிருந்து எப்போது தப்பிப்போம் என்ற காரணத்திற்காக இந்தியாவைத் துறந்தது நியாயப்படுத்த வேண்டுமா? வேலையில்லை என்றால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பதை தவறு என்று சொல்லவில்லை. நம் அனைவரின் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியது அவசியமாகிறது. ஆனால் இந்திய குடியுரிமையை தொலைக்க வேண்டியது அவசியமானதா?

சரி அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா? இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க இந்தியாவைக் கைவிடாத வேறு முன்மாதிரிகளே இல்லையா? மற்ற நாடுகளைப் பொறுத்தவரை ஒருவர் குடியுரிமையை துறக்கும்வரை அவர்களுக்கு கொடிபிடிப்பார்கள். அதே துறந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் ஆகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும்.

இப்படி இந்தியாவை துறந்தவர்களின் உதவியில்லாமல் நம் பாரம்பரியத்தையோ, உழைப்பையோ, உலகில் நம் இருப்பையோ நியாயப்படுத்திக்கொள்ள முடியாதா?


டிஸ்கி: 1. சுனிதா இந்தியா வந்தபோது பிரதீபா பாட்டிலும் மன்மோகனும் அவர்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற செய்தி படித்தவுடனேயே இதை பதிய நினைத்தேன்.

2. அப்புறம் வெளிநாடு போனாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தானு சொல்றவங்களுக்கு: இத்தாலியைச் சேர்ந்த சோனியா அம்மையார் ராஜிவை திருமணம் செய்தவுடன் இந்தியர் ஆகிவிட்ட லாஜிக்கின் படி இந்த வாதம் செல்லாது என்று சொல்ல விரும்புகிறேன்.

3. டைட்டிலுக்கு காரணமும் சொல்லணுமா?? :)

59 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    அடப்பாவி! நானே ஒரு 10 -15 பின்னூட்டம் கூட வரலையேன்னு நினைச்சா, இப்படி ஒரு டைவேர்ஷனா!!இருக்கட்டும். அப்புறம் வந்து பதில் சொல்லறேன்.


  2. ILA (a) இளா said...

    வந்துட்டேன். கொத்ஸ்க்கு இனவெறியா? அதுல நுண் அரசியலா? ஓஹ் இதெல்லாம் அவருக்கு தெரியுமா?


  3. சேதுக்கரசி said...

    //டைட்டிலுக்கு காரணமும் சொல்லணுமா?? :)//

    அது சரி!!


  4. Anonymous said...

    ங்கொய்யால! கொத்தனார் ரொம்ப நாள் பின்ன ஜாலியா பதிவு போட அது பிடிக்காம ஒரு ஆராய்ச்சி பதிவுபோட்டு அவரை ஒழிக்கனும்னு கங்கனம் கட்டிகிட்டு திரியும் டாக்டர், இந்த பதிவு பூங்காவிலே வரனும்ன்னு சபிக்கிறேன்!!!


  5. நாகை சிவா said...

    மேட்டரு எல்லாம் சரி தான், அதுக்கு கொத்தனாரை பழியாடு ஆக்கிட்டிங்க...

    தப்பே இல்ல :)

    எனக்கு இந்தியர்கள், என்.ஆர்.ஐ. களுக்கும் இந்திய வம்சாவளினர்க்கும் வித்தியாசம் புரிகிறது. இந்திய வம்சாவளிகள் சாதனைகள் கண்டு மகிழ்வதிலோ, உற்சாகப்படுத்துவதிலோ தப்பே இல்லை. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் என் கருத்து.

    நான் நீங்க எப்படியோ அப்படி தான்... (குடியுரிமையை சொன்னேன்).


  6. நாகை சிவா said...

    என்னது கொத்தனார் போட்டது ஜாலியான பதிவா... ஜல்லியான பதிவுனு சொல்லுங்க ஒத்துக்குறேன்...

    இப்படி எல்லாம் அபாண்டமா சொல்லக் கூடாது சொல்லிட்டேன்...

    பூங்காவில் வருவதுக்கான வாய்ப்புகள் அதிகம் :)


  7. Unknown said...

    ராமநாதன்,

    குடியுரிமை,குடிமகன் என்பதை எல்லாம் வைத்து அன்பு காட்டப்படுவதில்லை.இதெல்லாம் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ் எங்கே பிறந்தார்கள் எந்த நாட்டு குடிமக்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை.அவர்களின் வேர்கள் இருப்பது இங்குதான்.அன்பு செலுத்தப்படுவதும் அதனால்தான்.


  8. பெருசு said...

    yo tambien naci en la India, estoy muy orgulloso por la razon y la patria !

    viva jalli!!!!!!!!!


  9. rv said...

    கொத்ஸு,
    டைவர்ஷனா? லாஜிக்கல் எக்ஸ்டென்ஷன் ஐயா..

    பதில் வந்து சொல்லும்.


  10. rv said...

    இளா,
    அவருக்கு அரசியல் தெரியாதுன்னு நீங்க நினைக்கிறீங்க பாருங்க. அங்கதான் இருக்கு அவரோட நுண்ணரசியலே! :)


  11. rv said...

    சேதுக்கரசி,
    :)

    நன்னி!


  12. rv said...

    பூங்காவில் வராதவன்,
    பம்மல் சம்பந்தத்துல கமல் விடுவாரே சிம்ரனுக்கு சாபம் அந்த மாதிரி (கண்ட கண்ட கான்ஸுலேட் வாசல்ல காத்து கிடக்க போற...) இது சாபமா வாழ்த்தா?


  13. பினாத்தல் சுரேஷ் said...

    அரசியல், நுண்ணரசியல் எல்லா உப்புமா மேட்டர்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உங்க மேட்டர்ல ஒரு பாயிண்ட் இருக்கிறது.

    நாகை சிவா சொல்வது போல பாராட்டலாம் ஓக்கே, கொண்டாடத் தேவையில்லை.

    செல்வன், அவர்கள் வேர்கள் இந்தியாவில் இருக்கிறது என்றால், சோனியாவின் வேர்கள் இத்தாலியில் இருக்கிறது என்று சொல்பவர்கள் குரலும் நியாயம்தானா?


  14. தென்றல் said...

    இராமநாதன்,

    நல்ல பதிவு!

    //இவர்கள் அனைவரும் சாதித்தவை சாதாரணமானவை அல்ல. அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அமெரிக்க குடியுரிமை பெற்றபின் இந்தியாவின் மேல் இவர்களுக்கு பாசமும் இருக்கலாம். ஆனால் இவர்கள் இந்தியர்கள் என்ற பட்டம் எதற்கு வழங்கவேண்டும்?//

    சமீபத்திய சுனிதா வில்லியம்ஸ் இந்தியா விஜயம் மற்றும் அங்கு நடந்த சில நிகழ்வுகள் நல்ல கேலி கூத்து! அதற்கு ஒரு மாநில முதலமைச்சரும் மற்றும் நம் அரசாங்கமும் காரணமாய் இருப்பது வருத்தமளிக்கிறது.

    அப்புறம்... அமர்த்யா சென் வசிப்பது அமெரிக்காவில், ஆனால் அவருடைய 'Nationality' இந்தியன்.


  15. Unknown said...

    //இந்தியாவில் பிறந்த இந்தியர்களுக்கு இவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இந்தியாவில் வேலையில்லை என்ற வேலிடான காரணமோ, அல்லது பெற்றோர்கள் இந்தப் படுகுழியிலிருந்து எப்போது தப்பிப்போம் என்ற காரணத்திற்காக இந்தியாவைத் துறந்தது நியாயப்படுத்த வேண்டுமா? வேலையில்லை என்றால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பதை தவறு என்று சொல்லவில்லை. நம் அனைவரின் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியது அவசியமாகிறது. ஆனால் இந்திய குடியுரிமையை தொலைக்க வேண்டியது அவசியமானதா?//

    ராமநாதன்,

    வெளிநாட்டு குடியுரிமை வாங்குவது வரி, சொத்து, பணிபாதுகாப்பு, குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளை பெறுதல் என பல காரணங்களுக்காக செய்யவேண்டியுள்ளது. இரட்டை குடியுரிமை வாங்கியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.நாளை தேவையானால் மீண்டும் இந்திய குடியுரிமை வாங்கலாம்.பாஸ்போர்ட் என்பது வெறும் அடையாள சீட்டுதான்.இதுக்கு இம்மாம் பெரிய எமோஷனல் அட்டாக் தேவையா?

    //சரி அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா? //

    இப்ப நம்ம அண்ணனோ, தம்பியோ வெளிநாட்டு குடியுரிமை வாங்கிட்டா அவர் நமக்கு அண்ணன் இல்லை நம்ம ஊர்காரர் இல்லைன்னு ஆயிடுமா?அவர் நல்லது கெட்டதுல நாம பங்கெடுத்துக்க மாட்டமா?அவரை பாராட்ட மாட்டோமா?இதை கோமாளி ஆட்டம் என ஏன் சொல்கிறீர்கள்?

    //மற்ற நாடுகளைப் பொறுத்தவரை ஒருவர் குடியுரிமையை துறக்கும்வரை அவர்களுக்கு கொடிபிடிப்பார்கள். அதே துறந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் ஆகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும்.//

    இங்கிலாந்து கொடியை ஏன் இன்னமும் ஆஸ்திரேலியா தனது கொடியில் வைத்திருக்கிறது?ஏன் இன்னமும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் பாசத்துடன் இருக்கின்றன? இங்கிலாந்து ராணி ஏன் இன்னமும் கனடாவுக்கும் ராணியாக இருக்கிறார்?

    பிறந்த மண்ணின் மீதான பாசத்தை யாராலும் அப்படி எல்லாம் விட்டு கொடுக்க முடியாது. அது பாஸ்போர்ட்,விசா சம்பந்தப்பட்ட விஷயமல்ல.உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.


  16. Unknown said...

    //செல்வன், அவர்கள் வேர்கள் இந்தியாவில் இருக்கிறது என்றால், சோனியாவின் வேர்கள் இத்தாலியில் இருக்கிறது என்று சொல்பவர்கள் குரலும் நியாயம்தானா?//

    ஒட்டாவியோ குவட்ரோச்சி அண்ணாத்தைக்கே வெளிச்சம்:)


  17. rv said...

    புலி,
    பலியாடுகள் பழியாடுகள் இல்லாமல் யாரும் முன்னுக்கு வர முடியாதாக்கும்! :)

    //இந்திய வம்சாவளிகள் சாதனைகள் கண்டு மகிழ்வதிலோ, உற்சாகப்படுத்துவதிலோ தப்பே இல்லை. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் என் கருத்து.//
    அதே அதே..

    ரொம்ப நன்றி.


  18. rv said...

    புலி,
    //பூங்காவில் வருவதுக்கான வாய்ப்புகள் அதிகம் :)//
    பூங்காவே வருமானு அவனவன் காய்ஞ்சு போய் கிடக்கிறான். அதுக்குள்ள துண்டு போட்டாக்க எப்படி?


  19. rv said...

    செல்வன்,
    //அவர்களின் வேர்கள் இருப்பது இங்குதான்.அன்பு செலுத்தப்படுவதும் அதனால்தான்.//
    அன்பு செலுத்தட்டும். செலுத்தப்படட்டும். யார் வேண்டாம்னு சொன்னது? ஆனா இந்தியனு பில்டப் தேவையில்லேங்குறதுதான் என் கருத்து.

    பெனாத்தலார் கேட்ட கேள்விதான் என்னுடையதும். :))


  20. rv said...

    பெருசு,
    y tu mama tambien தெரியும்.. இங்க ஏதோ வேற சொல்றீங்க ????? :)))

    நீங்க சொன்னது உண்மைதான். நன்னி!


  21. Unknown said...

    //அன்பு செலுத்தட்டும். செலுத்தப்படட்டும். யார் வேண்டாம்னு சொன்னது? ஆனா இந்தியனு பில்டப் தேவையில்லேங்குறதுதான் என் கருத்து.//

    1998ல பொருளாதார தடை விதிச்சப்ப இவங்ககிட்ட தான் அரசு கடன்பத்திரத்தை வெளியிட்டு அன்னிய செலாவணி பெற்றது.அப்பல்லாம் இவங்க இந்தியர்கள், இப்ப வெளிநாட்டவர் இல்லையா?:-)

    இந்தியாவுக்கு ஆதரவா வெளிநாடுகளில் லாபி செய்து அந்தந்த நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை இந்தியாவுக்கு ஆதரவா மாற்றுவதை இவர்களில் பலர் கடமையாக செய்து வருகின்றனர். குடியுரிமை வாங்கியவன்,பச்சை அட்டை வாங்கியவன்னெல்லாம் இதில் வித்தியாசம் கிடையாதுஇந்தியன் என்ற உணர்வில்லாமல் யாரும் இதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்கு செய்யலை:)


  22. Anonymous said...

    //இப்படி இந்தியாவை துறந்தவர்களின் உதவியில்லாமல் நம் பாரம்பரியத்தையோ, உழைப்பையோ, உலகில் நம் இருப்பையோ நியாயப்படுத்திக்கொள்ள முடியாதா?//

    அடிமைத்தனமும், வெளிநாட்டு மோகமும் மண்டியிருக்கும் நம்மிடையே இந்த மாதிரி ஒரு மனப் போக்கு இருப்பது வேதனைதான். நீங்கள் குறிப்பிட்டவர்கள், இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்! உறுதிமொழி எடுக்கும்போது, இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தாலும், குடியுரிமை பெற்ற நாட்டுக்கு ஆதரவாகத்தான் நடக்கவேண்டும் என்பது போன்றவற்றுக்கு தலையாட்டியவர்கள்.

    எப்போது இந்தியக் குடியுரிமையை வேண்டாம் என்று தூக்கி எறிந்தார்களோ அப்போதே அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று ஆகி விடுகிறது.

    சுனிதா மாதிரி சமோசா பிடிக்கும் என்று சொல்வதற்கெல்லாம் இந்தியன் என்று அடையாளப் படுத்துவது, மிகக் கேலிக்குரியது. தனிப்பட்ட முறையில் அவர்கள் சாதனைகள் பாராட்டத்தக்கவை. அதற்காக விழா எடுப்பது போன்ற கேலிக்கூத்துக்கள் தேவையில்லாதது.

    வெளினாட்டு இந்தியர்கள், இந்தியாவுக்காகக் காரியங்கள் செய்வது, ஒருவித குற்ற மனப்பான்மையில்தான்.


  23. துளசி கோபால் said...

    அடக்கடவுளே..............

    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

    நான் 'இப்ப' இந்தியளா? இல்லையா?


  24. துளசி கோபால் said...

    இல்லைன்னு சொல்லிறாதீங்க.

    அக்கா இல்லைன்னா தம்பியும் இல்லைன்னு ஆகிரும்:-)


  25. இலவசக்கொத்தனார் said...

    இல்லையாம் டீச்சர். நீங்க எல்லாம் இந்தியர்கள் இல்லையாம். அப்படித்தான் பேசிக்கறாங்க!!


  26. Anonymous said...

    Dr.Ramanathan - I fully agree with your views. There was total tamasha for last 2-3 weeks on Sunita's visit.
    While we can appreciate their achievements there is no need to do overboard as if they are Indians.

    Lakshmi Mittal - richest person and living in UK, still holds Indian passport. There are many role models in India - Narayanmurthy, Ambanis, Premji, Bajaj, Ratan Tata, Birla, Dr.Kalam - who should be treated well in India than these Foriegners of Indian Descent.

    Are there any such role model Indians in Russia now ? or will it be Dr.Ramanathan after 10 years ?


  27. பூனைக்குட்டி said...

    இது பெரிய அரசியல் தல இங்க. நான் விக்கிபீடியாவிற்காக கொஞ்சம் காலம் எழுதிய பொழுது விக்கிபீடியா கட்டுரையில் கூட சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா எல்லாம் இந்தியர்ன்னு போட்டிருந்தார்கள். இதிலும் தெளிவாய் ஆங்கில விக்கிபீடியாவில் அமேரிக்கப் பிரஜைன்னு போட்டிருந்தது.

    ஆனால் அதை மாற்றச் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் மாற்றியவர்கள் கல்பனா சாவ்லாவை இந்தியாவில் பிறந்த அமேரிக்கப் பிரஜை அப்படின்னு சுத்திச் சுத்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    இதில் கொடுமை என்னான்னா அந்தம்மா பெயரில் விருது வழங்குறாங்களாம் தமிழ்நாட்டு அரசு. காமெடியா இருக்கு, விருது வழங்குறதைப் பத்திச் சொல்லலை தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இந்திய பிரஜைகள் சாதித்தவர்கள் இல்லவே இல்லையா? மொத்தமே ஜீரோவா?

    இப்ப கல்பனா சாவ்லா பேரில் விருது வழங்க என்ன தேவை! ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    --------------------

    அமர்த்தியா சென் தான் என்று நினைக்கிறேன்(தவறா இருந்தால் திருத்தலாம்) இந்தியர் நோபல் பரிசு வாங்கினார்னோ என்னவோ நியூஸ் சொல்லிக்கொண்டிருந்த பொழுது தான் இந்தியர் இல்லை என்று சொன்னவர். கொடுமை என்னான்னா இன்னமும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இன்னொரு நாட்டின் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இந்தியன் என்று சொல்லிக்கொள்(ல்)ளாதீர்கள். உங்களுக்கு இருக்கும் பாசம் பற்றிய இருவேறு கருத்து இல்லை அதேபோல் நீங்கள் இந்தியன் இல்லை என்பதிலும் தான்.

    PS: இதனாலெல்லாம் நானென்னமோ நாளைக்கு அமேரிக்கா பச்சை அட்டையோ ஆஸ்திரேலியாவின் குடியுரிமையோ கிடைத்தால் போகாமல் இந்தியாவில் இருப்பேன் என்பதல்ல அர்த்தம்.

    PS1: தமிழ் விக்கிபீடியாவை தவறாகச் சொல்லவில்லை - நினைத்திருந்தால் இந்தியாவில் பிறந்த என்பதையும் தூக்கியிருக்கலாம் என்றாலும் அதில் தவறொன்றும் இல்லையே - கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்தவர் தான்!


  28. ஜோ/Joe said...

    துளசியக்கா,
    நீங்க நியூசிலாந்து குடியுரிமை வாங்கிட்டா ,நீங்க இந்திய தேசத்தவர் அல்ல .வெறும் இந்திய இனத்தவர் தான் .இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை .

    நியூசிலாந்து குடியுரிமை வாங்கிட்டு ,இந்தியாக்கும் நியூசிலாந்த்துக்கும் போர் வந்தா நீங்க ந்நியூச்சிலாந்துக்கு எதிரா வரிஞ்சு கட்டினா அது தேச துரோகம்.


  29. rv said...

    தென்றல்,
    //சமீபத்திய சுனிதா வில்லியம்ஸ் இந்தியா விஜயம் மற்றும் அங்கு நடந்த சில நிகழ்வுகள் நல்ல கேலி கூத்து! அதற்கு ஒரு மாநில முதலமைச்சரும் மற்றும் நம் அரசாங்கமும் காரணமாய் இருப்பது வருத்தமளிக்கிறது.//
    ஆமாம்.. அதைப்படித்தவுடனேயே இதை எழுதத் தோன்றியது. ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்.

    நன்றி.

    சென் பற்றி மோகன் சொன்னது போலப் படித்ததாகத்தான் எனக்கும் நினைவு.


  30. rv said...

    செல்வன்,
    //1998ல பொருளாதார தடை விதிச்சப்ப இவங்ககிட்ட தான் அரசு கடன்பத்திரத்தை வெளியிட்டு அன்னிய செலாவணி பெற்றது.அப்பல்லாம் இவங்க இந்தியர்கள், இப்ப வெளிநாட்டவர் இல்லையா?:-)//

    நீங்கள் இதை உணர்வுப்பூர்வமாக ரொம்ப யோசிக்கிறீர்கள். ஆபத்து காலத்துக்கு உதவியதெல்லாம் உகந்த செயல்தான். அவர்களுக்குள் இந்திய உணர்வு இந்தியாவில் இருக்கும் சிலரை விட அதிகமாக இருக்கலாம். அல்லது இங்கே ஒரு அனானி சொன்னதுபோல் குற்றவுணர்வாகவும் இருக்கலாம். judge செய்வது எனக்கு தகுதியுமில்லை.

    ஆனால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை என்பதே என் வாதம்.

    அதற்கு அரசும், இந்தியக் குடியரசின் தலைவர்களும், பத்திரிகைகளும் இந்தியர் பட்டம் கொடுக்கத் தேவையில்லை. இப்படிச் செய்வதன் மூலம் நாம் கோமாளிகள் தான் ஆகின்றோம் என்பதுதான் எண்ணம்.


  31. rv said...

    அனானி,
    //நீங்கள் குறிப்பிட்டவர்கள், இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்! //
    அதுவே தான் என் கருத்தும். சொந்தக் காரணங்கள் என்னவாக இருந்தாலும் 'பொதுப்புத்தியுடன்' பார்த்தால் இந்திய குடியுரிமையை துறந்து வேறொரு நாட்டின் பிரஜைகளாக ஆவதாக வாக்குமூலம் கொடுத்தவர்கள்.

    வீடு கிடைக்க, கிரெடிட் ஹிஸ்டரி, பிள்ளை படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவையெல்லாம் individual ஆக case by case சொல்லப்படும் காரணங்கள். அவை பொதுவில் செல்லுபடியாகாது.

    //சுனிதா மாதிரி சமோசா பிடிக்கும் என்று சொல்வதற்கெல்லாம் இந்தியன் என்று அடையாளப் படுத்துவது, மிகக் கேலிக்குரியது.//

    இது நச்! அப்படியே சுனிதா இந்தியாவில் தன் extended குடும்பத்தை பார்க்க வந்ததில் தவறில்லை. ஆனால் அவரை பிரதமரும், ஜனாதிபதியும் சந்தித்தது தவறு. மீடியாவில் மொக்கை போட்டது தவறு. :)


  32. rv said...

    அக்கா,
    இதில் உணர்ச்சி வசப்பட ஒருவிஷயமுமில்லை.

    இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் இந்தியர்/ள்/ன்.

    அவ்வளவுதான்.

    பொதுவாக சொல்லவேண்டுமெனில், வேற்று தேசத்து குடியுரிமையை பெறுவதற்கு உணர்ச்சிவசப்படலங்களை தள்ளிவைத்து இந்திய குடியுரிமையைத் துறந்து தெளிவாக உறுதிமொழி எடுக்கிறவருக்கு... அதன் காரணமாக இந்தியப் பிரஜை = "இந்தியன்" இல்லையென்று சொன்னால் மட்டும் உணர்ச்சிவசப்படுவது எதற்கு?

    மேலும், தெ.கா செல்வன் பதிவில் சொன்னபடி இதில் குற்றவுணர்வுக்கு எள்ளளவும் அவசியமில்லை. அவரவர் காரணங்கள் அவருக்கு. பொருளாதார காரணங்கள் மட்டுமில்லாமல், இந்தியா பிடிக்கவேயில்லை என்று சொல்லி மாறியிருந்தாலும்கூட அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. சரியா?


  33. rv said...

    கொத்ஸு,
    ஐயா, நல்லாவே சிண்டு முடியுறீர்!


  34. rv said...

    அனானி,
    நன்னி!
    //Are there any such role model Indians in Russia now ? or will it be Dr.Ramanathan after 10 years ?//

    வரிசையா சப்போர்டா பேசிகிட்டே வர்றீங்கன்னு சந்தோஷப்படுற நேரத்துல... கடைசியில பஞ்ச் கொடுத்து எனக்கே வச்சீரே ஐயா ஆப்பை.. :(((((


  35. தென்றல் said...

    இராமநாதன்,

    //சென் பற்றி மோகன் சொன்னது போலப் படித்ததாகத்தான் எனக்கும் நினைவு.//

    அப்படியா? உண்மையென்றால், அவர் பேசியது ஆச்சரியமாய் இருக்கிறது. (வருத்தமும்கூட..). ஏனென்றால், 1999ல் பாரத ரத்னா பெற்றவர்.

    //இதில் கொடுமை என்னான்னா அந்தம்மா பெயரில் விருது வழங்குறாங்களாம் தமிழ்நாட்டு அரசு. காமெடியா இருக்கு, விருது வழங்குறதைப் பத்திச் சொல்லலை தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இந்திய பிரஜைகள் சாதித்தவர்கள் இல்லவே இல்லையா? மொத்தமே ஜீரோவா?//

    Good Point மோகன்தாஸ்!


  36. நட்பு தேடி said...

    உலகமே எந்நாடு
    நான் ஒரு உலக குடிமகன்
    சொல்லி வச்சிப் போனாரு
    அறிஞர் ஒருத்தரு

    அறிஞர் சொன்ன‌ சொல்ல‌த்தானே
    மெய்யாக்கிட‌ வேணுமுன்னு
    பொய்யில்ல‌ம‌ ஒழைக்குது
    எல்ல‌ரும் உற‌வேனு ஒரு கூட்ட‌ம்

    உலகமே ஒரு கிராம‌மா
    ஆயுடுமாம்‍‍ இன்ன‌ கொஞ்ச‌ நாளில்
    க‌ன‌வுக் க‌ண்டுத் திரியுது
    க‌ள்ள‌மில்லா ஒரு கூட்ட‌ம்

    ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட‌
    அண்ணே! அது உசிர‌ வ‌ந்து உலுக்குது
    அடிவ‌யிற க‌ல‌ங்க‌ வச்சி
    தூக்கமில்லாம பண்ணிடிச்சி

    க‌ருவிலே உண்டானே(ன்)
    பூமியிலே பொறந்தப்பின்னே இடமாறி‍டேனு
    தொப்புள் கொடி அறுத்துடலாம்
    தாய் ‍புள்ள‌ உற‌வ‌யில்ல‌

    தாலி ஒன்னு வாங்கிப்புட்டா
    பொன்னு பொற‌ந்த‌ வீட்ட‌ ம‌றந்திட‌னுமா?
    அட்டைக‌ள‌ மாத்திப்புட்டா
    அண்ணெ த‌ங்க‌ச்சி உறவு அத்துடுமா?

    சொத்துரிமை நா(ன்) கேக்க‌ல‌
    ஓட்டுரிமையையும் விட்டுத்தாரேன்
    சொந்த‌மே இல்லையினு சொல்லிப்புட்டே
    ஆத‌ர‌வு இல்ல‌ம‌ பொல‌ம்ப வ‌ச்சிட்டியே
    அண்ணே! எ(ன்)ண‌ண்ணே!

    ஒன்ன‌ சொல்லி குத்த‌மில்ல‌ ‍வெறும்
    தொட்டிச் செடி தானே நானு
    ம‌ர‌மா இருந்திருந்தா ஓரிட‌த்தில
    வேர் பிடிச்சி இருந்திருப்பேன்

    தொட்டிச் செடியாயிருந்தாலும்
    யென் தொட்டியில் இருப்ப‌தும்
    தாய‌டி ம‌ண்ணுதானே
    தாய் ம‌ண்ண‌ எப்ப‌டி ம‌ற‌ப்பேன்?


  37. இராம்/Raam said...

    / பூங்காவில் வராதவன் said...

    ங்கொய்யால! கொத்தனார் ரொம்ப நாள் பின்ன ஜாலியா பதிவு போட அது பிடிக்காம ஒரு ஆராய்ச்சி பதிவுபோட்டு அவரை ஒழிக்கனும்னு கங்கனம் கட்டிகிட்டு திரியும் டாக்டர், இந்த பதிவு பூங்காவிலே வரனும்ன்னு சபிக்கிறேன்!!!//

    /பூங்காவில் வருவதுக்கான வாய்ப்புகள் அதிகம் :)/

    இப்பிடியெல்லாம் பின்னூட்டம் வந்திருக்கிற பார்த்தா நல்ல பதிவுன்னு தெரியுது,ஆனா இன்னும் நான் பதிவே படிக்கலை.... :)

    பூங்காவிலே வந்ததும் படிச்சிக்கிறேன்..... நன்றி வணக்கம்... :)


  38. Unknown said...

    நண்பர்களுக்கு:

    அனானி என்று (orbraja) இந்தப் பின்னூட்டங்களில் அறியப்படுவது ... நாந்தான்! பின்னூட்டம் இடும்போது நேர்ந்த தொழில்னுட்பக் கோளாறு! மற்றபடி, என் கருத்துக்களில் எந்த மாற்றமுமில்லை. அனானியாக வருவதில் எனக்கு எந்த விருப்பமும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை!

    துளசி டீச்சர், உங்களின் இந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், நீங்கள் இந்திய வம்சாவழிதான். இந்தியப் பிரஜை இல்லை!

    அயல்னாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், தப்பானவர்கள் அல்லர். அவர்களுடைய வசதி அது. என் நண்பர்கள் நிறைய பேர் 'அயல் நாட்டவர்கள்' ஆகிவிட்டார்கள், அட்டையை மாற்றியதால்! ஆனால், அவர்கள் என் நண்பர்கள் இல்லை என்பது அபத்தம்!

    என்னைப் பொறுத்தவரை, என் உயிர் இருக்கும்வரை இந்தியனாகத்தான் வாழ்வேன்! அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்! அதேபோல், ஒரு நண்பர் சொன்னதுபோல், இந்தியாவில் இருப்பவர் எல்லாம் தேசபக்தர்கள் அல்லர். இத்தாலிக் காரர்கள் உள்பட!!

    இராமனாதன், y tu mama tambian பாத்து இருக்கீங்களா? நல்ல படம்! கேய்ல் கார்சியா பெர்னால் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமீபத்திய, மோட்டோர் சைக்கிள் டயரி உள்பட!!


  39. Unknown said...

    ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்துக்களை யோசித்து பின்னர் சொல்கிறேன்..

    ஆனாலும் ஆர்ச்சி காமிக்ஸ் பத்தி பதிவு போட்டதுக்கு அண்ணன் கொத்ஸை இப்படியா கன்னாப் பின்னான்னு கலாய்க்கிறது...

    ப.ம.கவில் எதேனும் உள்கட்சி தகராறா? ப.ம.கவில் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் என் ஆதரவு வேண்டுவோர் உடனே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து என் ஆதரவைப் பெறலாம் நன்றி வணக்கம்.


  40. ஓகை said...

    இராமநாதன், நல்ல பதிவு.

    ஆங்கில ஆதிக்கம் நம்மை மனதளவில் ஆழமாக பாதித்திருக்கிறது (அவர்களே ஆண்டால் பரவாயில்லை என்று சிலர் எண்ணுமளவிற்கு). இந்த தாழ்வு மனப்பான்மை சுனிதா வில்லியம்ஸின் வரவை ஒட்டி நிகழந்த நிகழ்வுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.

    நண்பர் செல்வனை அந்நிய நாட்டு பாஸ்போர்ட்டுடன் பார்க்கும்போது என் மனது அவரை விட்டு இரண்டடி தாற்கலிகமாக விலகி நிற்குமோ என்று அஞ்சுகிறேன். இந்த அனிச்சை செயல், அந்நிய பாஸ்போர்ட்டுடன் இருக்கும் இந்தியர்களைப் பார்க்கும் போதெல்லாம் பெரும்பாலான இந்தியர்களுக்கு வருமோ என்று ஐயம் வருகிறது.


  41. rv said...

    மோகன்,
    தமிழ் வீக்கீபீடியாவிலும் இந்த அரசியலா? நல்லவேளை வெளிநாட்டினர் இதைப் படித்து சிரிக்க முடியாது.

    //தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இந்திய பிரஜைகள் சாதித்தவர்கள் இல்லவே இல்லையா? மொத்தமே ஜீரோவா?//
    :)

    //உங்களுக்கு இருக்கும் பாசம் பற்றிய இருவேறு கருத்து இல்லை அதேபோல் நீங்கள் இந்தியன் இல்லை என்பதிலும் தான்.//
    இதுவேதான் என் கருத்தும். அவர்கள் வேர், கிளை எல்லாம் இங்கேயிருந்தாலும் for all practical purposes 'இந்தியன்' கிடையாது. இதுல உணர்ச்சிவசப்பட ஒரு விஷயமும் இல்லை. கண்ட கண்ட இடத்தில் நான் ஆப்பு வாங்குவதாக சொல்வதற்கும் அர்த்தமில்லை.


  42. rv said...

    ஜோ,
    //இந்தியாக்கும் நியூசிலாந்த்துக்கும் போர் வந்தா நீங்க ந்நியூச்சிலாந்துக்கு எதிரா வரிஞ்சு கட்டினா அது தேச துரோகம்.//
    ஆமாம்.. இப்படி ஒரு நிலைமை வந்தா ரொம்ப கஷ்டம்தான்.

    நன்றி


  43. rv said...

    தென்றல்,
    //ஏனென்றால், 1999ல் பாரத ரத்னா பெற்றவர். //
    அப்படியா? ஹூம்.. கூகிளாண்டவரை கேட்டுப்பார்க்கிறேன்.

    உங்களின் பதிவை பார்த்தேன். நியாயமான கேள்விகள். பதில் சொல்லத்தான் யாருமில்லை.

    மிக்க நன்றி.


  44. rv said...

    நட்புதேடி,
    கவிதைக்கு நன்னி.

    //சொந்த‌மே இல்லையினு சொல்லிப்புட்டே//
    அப்படியெல்லாம் எங்க ஐயா சொன்னேன்?. இந்தியன் இல்லேனு தான் சொன்னேன். இதுல என்ன கன்பூசன்?


  45. rv said...

    இராம்,
    //பார்த்தா நல்ல பதிவுன்னு தெரியுது,ஆனா இன்னும் நான் பதிவே படிக்கலை....//
    ஓவராத்தெரியல? ஆனாலும் இவ்வளவு a-politicalஆ இருந்தா ஊரு தாங்காதுய்யா!

    நன்னி.


  46. rv said...

    தஞ்சாவூரான்,
    //அயல்னாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், தப்பானவர்கள் அல்லர். அவர்களுடைய வசதி அது. என் நண்பர்கள் நிறைய பேர் 'அயல் நாட்டவர்கள்' ஆகிவிட்டார்கள், அட்டையை மாற்றியதால்! ஆனால், அவர்கள் என் நண்பர்கள் இல்லை என்பது அபத்தம்! //

    நான் சொல்லவந்ததை இன்னும் அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    ----
    குவரோன் நம்ம பேவரிட் ஆயிட்டாரு.. அதப் பார்த்தப்புறம்.

    மோகனோட பதிவு பாருங்க.


  47. rv said...

    தேவ்,
    //ஒரு இந்திய பதிவன் என்ற் முறையில் என் கருத்துக்களை யோசித்து பின்னர் சொல்கிறேன்..//
    இப்படியே சங்கச் சிங்கமெல்லாம் ஜகா வாங்கிட்டே இருங்க. புலி மட்டும் தான் பேருக்கேத்த மாதிரி கமெண்ட் விடுறாரு.

    //ப.ம.கவில் எதேனும் உள்கட்சி தகராறா? ப.ம.கவில் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் என் ஆதரவு வேண்டுவோர் உடனே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து என் ஆதரவைப் பெறலாம் நன்றி வணக்கம்.//
    ஆச தோச அப்ளம் வட...


  48. அபி அப்பா said...

    ஹி ஹி நான் தான் பூங்காவில் வராதவன்!! தஞ்சாவூராம் மட்டும் ஒத்துக்கும் போது நானும் ஒத்துக்கறேன்!! டீச்சர் அப்பன்னா 16 வருஷமா துபாய்ல இருக்கேனே நான் துயாய் ஷேக்கா!!:-))


  49. அபி அப்பா said...

    சூடானி புலியாரே இதுக்கு என்ன பதில்???


  50. இராம்/Raam said...

    அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))


  51. அரவிந்தன் said...

    எந்த நாட்டில் இருந்தாலும் எந்த குடிமை அட்டை வைத்திருந்தாலும் நமது மாறாத அடையாளம் "தமிழர்" என்பதே

    இன்று என் அலுவலகத்தில் நடந்த ஒரு விவாதமொன்றில் நான் சொன்னேன்."இந்தியாவில் வசிக்கும் தமிழன் என்று" அதற்க்கு பெரும் எதிர்ப்பு, அவர்கள் சொல்கிறார்கள் நான் ஒரு இந்தியன் ஆனால் தமிழ் பேசுபவன் என்றுதான் சொல்லவேண்டுமாம்
    அதற்க்கு நான் சொன்னேன்"நாளையே எனக்கு அமெரிக்க குடியுமரிமை கிடைத்துவிட்டால் நான் அமெரிக்காவில் வசிக்கும் தமிழனாகிவிடுவேன்.

    ஆகவே என்றும் மாறாத அடையளமான தமிழன் என்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.

    அவர்கள் வாயடைத்து போனர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களூர்


  52. rv said...

    ஓகை,
    //என் மனது அவரை விட்டு இரண்டடி தாற்கலிகமாக விலகி நிற்குமோ என்று அஞ்சுகிறேன்.//

    இது என்னைப்பொறுத்தவரைக்கும் ஓவர்.

    இந்தியன் பாஸ்போர்ட் இல்லேன்னா என்ன.. இந்தியத்தனம் போயிடுமா? அதுவும் பாஸ்போர்ட் பார்த்து பழக வேண்டிய காலமெல்லாம் இப்பத்தாண்டி போச்சுனு நினைக்கிறேன்.

    நன்றி!


  53. rv said...

    அபி அப்பா,
    துபய் பாஸ்போர்ட் ஷோக்கா வச்சிருந்தீங்கன்னா ஷேக்கே தான்... :)


  54. rv said...

    இராம்,
    //அம்பது இங்கன அடிச்சிக்கலாமா??? :))//

    அடிச்சதுக்கு நன்னி...


  55. rv said...

    அரவிந்தன்,
    //நமது மாறாத அடையாளம் "தமிழர்" என்பதே//

    உண்மைதான் அரவிந்தன். தமிழன் என்பது மொழிசார்ந்த அடையாளமாக போய்விடுவதால் நாம் எங்கே போனாலும் தமிழன் தான். ஆனால் தமிழ்நாட்டுக்காரன் அல்ல.

    மிக்க நன்றி!


  56. Anonymous said...

    http://www.ibnlive.com/news/debate-not-indian-but-indians-gloat-over-their-success/51004-3.html

    Bobby Jindal is also being given hyper publicty in Indian media as if he is local fellow.


  57. தாணு said...

    //அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா//v.apt arguement


  58. படகோட்டி said...

    இப்ப என்ன, சுனிதா வில்லியம்ஸை இந்தியர்னுதானே மீடியாக்கள் பார்க்குறாங்க. வேற பாஸ்போர்ட் எடுத்தாலும், இந்தியர் இத்தனை பெரிய ப்ளேன் வாங்குனார்னு நாளைக்கு தினமலர்ல எழுதப்போறான். அந்த இந்தியன் எந்த பாஸ்போர்ட் வச்சுருக்கான்ற விஷயம் இந்தக் கோழிப்பிரியாணி நிருபர்களுக்குத் தெரியுமா? அடப் போங்கய்யா.. நாட்டு இரகசியத்தை வெளிநாட்டுக்கு விக்குற துரோகி இந்தியன் இந்தியனை விட, ஏதோவொரு நாட்டு இந்தியனாக இருக்குறது ஒன்னும் தப்பேயில்லை.


  59. Anonymous said...

    தங்களது articleஐ www.Tamigg.com என்ற siteல் படித்தேன். Good artilce. ஒ௫ சிரிய திருத்தம் திரு மனோஜ் சியாமளன் புதுவையில் பிறந்தவர்


 

வார்ப்புரு | தமிழாக்கம்