215. தங்கர் பச்சானின் நாரிப் போன சிஸம்

சன் டி.வி காமெடி டைம் நிகழ்ச்சி இன்னிக்கு. தங்கர் பச்சான் சிறப்பு விருந்தினர். சிட்டிபாபு கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொண்டிருந்தார். அது தங்கரிடம் இருக்கும் பயம் காரணமாகவா அல்லது வாகாக பக்கத்திலிருக்கும் பெண்ணிடம் உரசவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஒதுங்கி இருந்ததாலேயே இதுகூட இப்பதிவில் ஒரு வரிக்காக ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

முதலில் பேசிய தங்கர் தான் லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்புகள் இருந்தும் சினிமா என்னும் மீடியத்தின் ஆளுமையையும் அதை சினிமாக்காரர்கள் எப்படி பொறுப்பில்லாமல் கையாளுகிறார்கள் என்பதையும் கண்டு வெந்து வெதும்பி நொந்து நொறுங்கி சினிமாவையே redefine செய்து தன் கரத்தில் நிலைநிறுத்த இத்துறையில் இறங்கி சமூக சேவை செய்து வருவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.

காமெடி டைம் சுயசொறிதல் டைமாக (நன்றி: மோகன்) மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த சிட்டி வாரந்தோறும் வரும் லட்சோப லட்சம் கடிதங்களிலிருந்து ஒன்றை பொறுக்கி வழக்கமான கெக்கே பிக்கேவை விடுத்து நேரடியாக காமெடி டைம் சிட்டிபாபு என்றவுடன் பளிச்சென்று அடையாளம் கண்டுகொண்டார் இரும்புலியூரைச் சேர்ந்த நேயர்.

சிட்டி சொ.செ.சூ வாங்க ஆசைப்பட்டோ என்னவோ நேயரிடம்..."இன்னிக்கு நமக்கு சிறப்பு விருந்தினர் இருக்காரு.. அவர் யாருன்னு தெரியுமா?

மறுமுனை: தெரியலையே சார்..

சிட்டி: பள்ளிக்கூடம் படம் பாத்தீங்களா..

மறுமுனை: பாத்தேனே

சிட்டி: அதுல வர்ற அம்மாடி கேரக்டர் பண்ணவரத் தெரியுமா

ம.மு: தெரியலையே...

சிட்டி: சரி அந்தப் படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: நினைவுக்கு வரல சார்

(இப்போது தங்கரின் முகத்தை பார்த்திருக்க வேண்டும்... :))

சிட்டி: சரி.. அழகி படமாவது பாத்தீங்களா?

ம.மு: பார்த்தேனே சார். பார்த்தீபன் நடிச்ச படம்.

சிட்டி: அந்தப்படத்தோட டைரக்டரத் தெரியுமா?

ம.மு: உஹும்.. தெரியல சார்...

சிட்டி: நிலைமை காமெடியாக மாறுவதை புரிந்து உஷாராகி கேள்விகளை மேலும் கேட்காமல் 'தங்கர் பச்சான் சார் வந்துருக்காரு. அவரத்தெரியுமா?'

ம.மு: ஓ... தெரியும் சார்.. ஆனா முன்னால பேரு மறந்துருச்சு..

சிட்டி: சரி.. இப்ப அவருகிட்ட பேசுங்க..

பேச ஆரம்பித்த தங்கர் கேட்ட கேள்விகளையும் பாத்துருவோம். என்ன செய்ய எனக்கு ரொம்ப போரடிக்குது. டைப்படிக்கணும்னு ஆசையாவும் இருக்கு.

அதோட கொஞ்சம் அதிகமாகவே பிரசங்கிக்கொண்டிருந்த நார்ஸிஸ்ஸம் நாரிப்போன ஸிஸம் ஆனதில் பொங்கிக்கொண்டிருந்த தங்கர் பேசியதுதான் காலத்தின் கொடுமை. அதுக்கு அந்த நேயர் என்ன காரணத்தினாலோ பதிலே சொல்லாம விட்டுட்டாரு.

தங்கர்: வணக்கம்..

ம.மு: வணக்கம் சார். சாரி. சட்டுனு பேர் நினைவுக்கு வரலை..

தங்கர்: என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?

ம.மு: (என்ன சொன்னார்னு எனக்கு நினைவில்லை)

தங்கர்: சரி. என்ன படிச்சிருக்கீங்க?

ம.மு: நான் டிகிரி படிச்சிருக்கேன் சார்

தங்கர்: டிகிரி படிச்சிருக்கேன்னு சொல்றீங்க. ஆனா ஒரு படத்தோட டைரக்டர் யாருன்னு தெரியலேன்னு சொல்றீங்களே..

ம.மு: மறந்துருச்சு சார்.

தங்கர்: ஒரு படத்துல நடிக்கறவங்க மூஞ்சியே பாத்துகிட்டிருந்தா எப்படி? அதுக்கு காரணகர்த்தா டைரக்டர் தானே?

ம.மு: ???????

தங்கர்: இது உங்களுக்கே வெட்கமா இல்லியா?

ம.மு: ??????? (சொல்லாமல் விட்டது WTF?)

காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகறத உணர்ந்த சிட்டி: இதோ உங்களுக்கான காமெடி காட்சிய பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

--------------------------
தங்கருக்கு கோவம் வந்ததுக்கு காரணம் தான் யாருன்னு தன் படத்தோட பேர வச்சு நேயரால கண்டுபிடிக்க முடியாம போனதுனாலயாம். அதோட தன் பேர விட்டுட்டு ஹீரோ பேரப் போய் ஞாபகம் வச்சுத் தொலச்சிருந்தது இன்னமும் வெறுப்பேத்திருச்சு.

--------------------------
இதுக்கு சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். வேறொரு படத்தோட டயலாக்..

பாண்டி: ஜானகி.. கொஞ்சம் மரியாதையா பேசு.. சார் தான் டைரட்டரு..

ஜானகி: என்ன பெரிய டைரக்டரு? இந்தாளு என்ன அசோக் லேலண்டுக்கு டைரக்டரா இல்ல டிவிஎஸ்ஸோட டைரக்டரா...? வெறும் சினிமா டைரக்டர் தானே?

பாண்டி & டைரக்டர்: ???????

படம்: அவ்வை சண்முகி
டைரக்டர்: கே.எஸ்.இரவிக்குமாராக இருக்கலாம்
காட்சியில் நடித்த நடிகர்கள்: கமல்ஹாசன், மீனா, ரமேஷ் கிருஷ்ணா, டான்ஸ் மாஸ்டர் ரகுராம்
---------------------------

டிஸ்கி:
1. இப்படி கேனத்தனமா நேயர் மேல தங்கர் கோவப்பட்டது மட்டுமே இப்பதிவிற்கான காரணம்.
2. தங்கர் பச்சானின் படங்களை எதுவும் நான் இதுவரை பார்த்ததில்லை.
3. சன் டிவி. காமெடி டைமெல்லாம் பாக்குற கேஸானு கேக்கறவங்களுக்கு பதில் சொல்லாமல் என் தலையை குனிந்து கொள்கிறேன்.

214. கொத்தனாரின் இனவெறி நுண்ணரசியல்!

சமீபத்தில் கொத்ஸோட ராஜ் பட்டேல் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தவுடன் ரொம்ப நாளாக எழுத நினைத்துக்கொண்டிருந்த இவ்விஷயத்தை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். பிரபலமான ஆர்ச்சீஸ் காமிக்ஸில் புதிதாய் நுழைந்திருக்கும் ராஜ்பட்டேல் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பிச்சைக்கார இந்தியனாக காட்டாமல் நல்லமுறையில் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறார். ஆனால் என்னை இப்பதிவை எழுத தூண்டியது பின்வரும் வரிகள் தான்..

//அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள்.//

மதர் இந்தியா ஜிந்தாபாத் என்று கோஷம் போடவில்லையென்றாலும் ஒருவிதமான பெருமை தொனிக்கும்படியே இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சாட்டிலேயே கேட்டிருக்கமுடியும் என்றாலும் நிற்க வைத்து சாட்டையை இப்படி சுழற்றினால் மேலும் பலரின் பார்வைகளையும் புரிந்துகொள்ளமுடியுமே என்ற ஆசையினாலேயே இது. அமெரிக்காவில் மற்ற இனத்தின் வம்சாவழியினரை விட இந்தியர்கள் பெரும்பாலும் நல்ல நிலைகளில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! :) இதற்குரிய காரணங்களை ஆராய்வது நம் நோக்கமல்ல. அமெரிக்கா தவிர ஏனைய மேற்கத்திய நாடுகளிலும், இந்தியர்கள் தத்தமது நாடுகளில் இருக்கும் கலாச்சாரத்தோடு மற்ற இனங்களை விட இணக்கமாக இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு. அப்படி சுமூகமான நிலை நிலவும் பட்சத்தில் ஒரு சித்திரக் கதையில் இந்திய கதாப்பாத்திரம் சேர்க்கப்பட்டது newsworthyஆ என்ற கேள்வி நெருடுகிறதா இல்லையா? வெள்ளைக்காரனிடம் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய ஆர்வம் இருப்பதும் தெளிவாகிறதே?

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். ஆர்ச்சீஸ் பிடித்ததால் அதிலும் தன்னால் அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய ஒரு கதாபாத்திரம் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தால் இந்த சிற்றிலக்கிய சிண்டுபிடிக்கும் பதிவு கண்டிப்பாக வந்திருக்காது. ஆனால் கடைசி வரிகள்? வெளிநாடு வாழ் இந்தியர்கள்/இந்திய வம்சாவழியினர்/இந்தியாவின் இந்தியர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றே என்ற நிலைப்பாட்டுடன்: இதில் ஒரு அமெரிக்க சிறுவர் பத்திரிக்கையில் சித்திரப் பட கதாபாத்திரம் தோன்றியதால் இந்தியர்களின் தகுதியும், திறமையும், பாரம்பரியமும், உழைப்பும் அதற்கு கிடைத்த சமூக அந்தஸ்தும் இன்னும் ஒருமுறை நிருபிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்ற பொருள் வருகிறதல்லவா? இப்படி நம் இருப்பை நிருபிக்கவேண்டியதற்கான அவசியமோ நிர்பந்தமோ இருப்பதாக தெரியாத போது இதன் பயன் தான் என்ன?

இதே இழையில் தொடர்வோம். ஏனெனில் இது இந்தப்பதிவின் மையக்கருத்தல்ல. கொத்ஸின் பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டிருக்கும் சில கருத்துகள் benign வகையென்றால் நம் இந்தியர்களிடையே இருக்கும் இதே நோயின் கோர வடிவம் இன்னமும் malignant ஆனது. அதை நம் அரசியல்வாதிகள் சுரண்டி மைலேஜ் பெற முயல்வது புரிந்துகொள்ளக் கூடியதென்றாலும் படித்த மக்களும் அதற்கு துணைபோவது மிகவும் வருந்தத்தக்கது.

பெருமைமிகு இந்தியர்கள் சிறு பட்டியல் பார்ப்போமா? இவர்களை உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். முழுமையான லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு.

1. சுனிதா வில்லியம்ஸ் (விண்வெளி விஞ்ஞானி)
2. கல்பனா சாவ்லா (விண்வெளி விஞ்ஞானி)
3. சுப்ரமண்யம் சந்த்ரசேகர் (நோபல் பரிசு பெற்றவர்)
4. அமர் போஸ் (bose corp)
5. மனோஜ் நைட் சியாமளன் (திரைப்பட இயக்குநர்)
6. இந்த்ரா நூயி (பெப்சியின் தலைவர்)
7. அமர்த்யா சென் (நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்)
8. ஹர் கோவிந்த் குரானா (நோபல் பரிசு பெற்றவர்)
9. ஜுபின் மெஹதா (கம்போஸர்)
10. மிரா நாயர் (க்ராஸ் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்)
11. சபீர் பாட்டியா (ஹாட்மெயில் கண்டுபிடித்தவர்)
12. அருண் சாரின் (வோடாபோன் CEO)

இவர்களின் சாதனைகளை இந்திய பத்திரிகைகள் வாயிலாக நாமும் அறிந்துகொண்டுள்ளோம். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று ஏதாவதொரு கட்டத்தில் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுடன் சண்டையிட்டிருப்பீர்கள்..பாருங்க நாங்க எவ்வளவு புத்திசாலியென்று. இந்திய அரசாங்கமே இவர்களில் பலரை கௌரவப்படுத்தியுள்ளது. இவர்கள் படித்த பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் போன்றவற்றிற்கு ம்யூசியம் டூர் வைக்கக்கூடிய அளவுக்கு கூட்டம் வருகிறது. இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியனுக்கும், அதாவது கனவு காணும் "இந்தியனு"க்கும் ஒரு படிப்பினை என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.

இவ்வளவு தெரிந்த உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவர்களில் யாருமே இந்தியர்களே இல்லை!

1. திருமதி சுனிதா தான் இப்போதைய ஹாட் பேவரிட். இவர் முழுக்க இந்திய வம்சாவழியினர் அல்லர். ஸ்லோவேனியத் தாயும் இந்தியத் தந்தையும் கொண்டவர். இவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் செட்டிலாகி அங்கேயெ பிறந்தவர் சுனிதா.

2. திருமதி கல்பனா சவ்லா - இவர் இறந்தபோது இந்தியாவே அழுதது. மனிதாபிமான முறையில் அதைப்பற்றி தவறு கூற இயலாது. 1983 அமெரிக்கரை மணந்த கல்பனா, 1990களில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

3. திரு சந்த்ரசேகர் - சித்தப்பா சி.வி.இராமனுடன் இருந்த குடும்பப்பிரச்சனைகளாலும், கேம்ப்ரிட்ஜில் சந்தித்த கல்விசார்ந்த பிரச்சனைகளாலும் அமெரிக்காவில் குடியேறியவர். 1953-ல் குடியுரிமை பெற்றவர்.

4. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற போஸின் தந்தை கல்கத்தாவில் ஆங்கிலேய ஆட்சியின் நெருக்கடியால் வெளியேறியவர். சுதந்திரத்துக்கு பிறகு தாயகம் திரும்பவில்லை. திரு அமர் போஸ் அங்கேயே பிறந்து படித்து வளர்ந்து தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்.

5. திரு மனோஜ் சியாமளன் - சென்னையில் பிறந்தவரென்றாலும் இவரின் குடும்பமும் அமெரிக்காவின் குடிகள்.

6. திருமதி இந்திரா நூயி - சென்னையைச் பிறந்த இந்திரா நூயி, அமெரிக்காவிற்கே நடுவிரலை காட்டியவரென்றாலும் அமெரிக்க பிரஜை ஆனதுதான் வரலாறு.

இது சாம்பிள்தான். ஆகக்கூடி, சொந்த காரணங்களுக்காகவோ அல்லது பெற்றோர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காரணத்தாலோ விதிவசத்தால் இவர்கள் அமெரிக்க பிரஜைகள் ஆகிவிட்டனர். இவர்கள் இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ இல்லை. (Indian citizens or NRIs). இவர்கள் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவழியினர் (People of Indian Descent). முன்னே சொன்னவற்றிற்கும் வம்சாவழியினருக்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர்கள் அனைவரும் சாதித்தவை சாதாரணமானவை அல்ல. அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அமெரிக்க குடியுரிமை பெற்றபின் இந்தியாவின் மேல் இவர்களுக்கு பாசமும் இருக்கலாம். ஆனால் இவர்கள் இந்தியர்கள் என்ற பட்டம் எதற்கு வழங்கவேண்டும்? இவர்களின் சொந்த தேவைகளுக்காகவோ, பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்காகவோ நம் நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களை நமக்கு ரோல் மாடல்களாக காட்டுவதன் அவசியம் என்ன?

இந்தியாவில் பிறந்த இந்தியர்களுக்கு இவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இந்தியாவில் வேலையில்லை என்ற வேலிடான காரணமோ, அல்லது பெற்றோர்கள் இந்தப் படுகுழியிலிருந்து எப்போது தப்பிப்போம் என்ற காரணத்திற்காக இந்தியாவைத் துறந்தது நியாயப்படுத்த வேண்டுமா? வேலையில்லை என்றால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பதை தவறு என்று சொல்லவில்லை. நம் அனைவரின் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியது அவசியமாகிறது. ஆனால் இந்திய குடியுரிமையை தொலைக்க வேண்டியது அவசியமானதா?

சரி அவர்கள் தொலைக்கிறார்கள்.. சொந்த காரியங்களுக்காக. அவர்கள் அப்படி தொலைத்தபின்பும் வலுக்கட்டாயமாக இந்தியர்கள் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கோமாளி ஆட்டம் போட வேண்டியது நமக்கு ரொம்ப தேவைதானா? இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க இந்தியாவைக் கைவிடாத வேறு முன்மாதிரிகளே இல்லையா? மற்ற நாடுகளைப் பொறுத்தவரை ஒருவர் குடியுரிமையை துறக்கும்வரை அவர்களுக்கு கொடிபிடிப்பார்கள். அதே துறந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் ஆகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும்.

இப்படி இந்தியாவை துறந்தவர்களின் உதவியில்லாமல் நம் பாரம்பரியத்தையோ, உழைப்பையோ, உலகில் நம் இருப்பையோ நியாயப்படுத்திக்கொள்ள முடியாதா?


டிஸ்கி: 1. சுனிதா இந்தியா வந்தபோது பிரதீபா பாட்டிலும் மன்மோகனும் அவர்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற செய்தி படித்தவுடனேயே இதை பதிய நினைத்தேன்.

2. அப்புறம் வெளிநாடு போனாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தானு சொல்றவங்களுக்கு: இத்தாலியைச் சேர்ந்த சோனியா அம்மையார் ராஜிவை திருமணம் செய்தவுடன் இந்தியர் ஆகிவிட்ட லாஜிக்கின் படி இந்த வாதம் செல்லாது என்று சொல்ல விரும்புகிறேன்.

3. டைட்டிலுக்கு காரணமும் சொல்லணுமா?? :)

213. மன்னர்களின் கிராமம்!

எழுத ஒண்ணும் மேட்டர் பெரிசா இல்லாததால போட்டோ போட்டு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன். Tsarskoye Selo (மன்னர்களின் கிராமம்) பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பல அரண்மனை வளாகங்களில் முக்கியமானது.

இந்த வளாகத்தில் இரண்டு முக்கியமான அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றின் உள்ளே பிறிதொரு நாள் செல்லலாம். அதுவரைக்கும் வெளியே சுற்றுவோம்.

மென்ஷிக்கோவ் என்பவருக்கும் சொந்தமான இடத்தை 1708-ல் பீட்டர் மன்னர் (Peter the Great) தன் மனைவி கேத்தரீனுக்கு பரிசாக அளித்தார். கேத்தரீன் ராணியானபின் உருப்பெற்றதே இந்த வளாகம். சுமார் 750 ஏக்கர்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது அரண்மனைகளும் சுற்றியுள்ள தோட்டங்களும். அரச குடும்பத்தினரின் கோடைக்கால வாசஸ்தலமாக சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பிரபலமாக இருந்தது. அதற்கப்புறம் என்னாயிற்று என்று கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னர் வளாகத்தினுள் நுழைவோம்.

சீராக பராமரிக்கப்படும் தோட்டமும் அதிலுள்ள சிற்பங்களும் அட்டகாசமானவை. அரண்மனையின் பிராதான கட்டடத்துக்கு செல்லும் அழகிய பாதை இதோ...


1. The Main Alley




இதே பாதையில் முன்னே சென்றால் இரு குளங்களைக் காணலாம். வலப்புறம் இருப்பது கண்ணாடிக்குளம் என்றழைக்கப்படுவது. ஏன் என்று சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதில் தெரியும் மஞ்சள் கட்டடம் அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட குளியல் குதூகலங்களுக்கானது. :) இரண்டாம் உலகப்போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தாலும் 1950 களில் அசலுக்கு இணையான முறையில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.


2. The Mirror Pond and The Washroom of their Highnesses




முதலாவது எகேத்தரீன் ராணி (Catherine the Great) இங்கே தன் வாழ்க்கையின் பெரும்பாதியை கழித்த அரண்மனை. முற்றிலுமாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு கண்ணைக்கவரும் ரஷ்யன் பரோக் வடிவமைப்பில் ஜொலிக்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹெர்மிடாஜ் அரண்மனைக்கும் இதற்கும் வடிவமைப்பில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். இதன் பிரம்மாண்டத்தையும் நீலம், வெள்ளையுடன் தங்கம் ஜொலிப்பதை போட்டோவில் justify செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். உலகப்போரின் போது பெரும் சேதமடைந்த இந்த அரண்மனையில் மொத்தம் 57 அறைகள் இருந்திருக்கின்றன. இப்போதோ வெறும் 29 மட்டுமே பொதுப்பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளன. மற்றவற்றில் இன்னமும் வேலைகள் நடைபெறுகின்றன. இவ்வரண்மனைக்குள் இருக்கும் அறைகள் உலகின் மற்ற அரச குடும்பங்களையே கூனிக்குறுக செய்துவிடும் அளவுக்கு இருப்பவை. உதாரணமாக இங்கே சென்று பார்க்கலாம்.

அரண்மனையைச் சுற்றி ஆங்கில ஸ்டைலில் சிறிய structured parkஉம் அதைச் சுற்றி பரந்த landscaped parkஉம் இருக்கின்றன.


3. Baroque Facade of The Catherine Palace




சார்லஸ் கேமரோன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கட்டிடவியல் வல்லுநரை பணிக்கமர்த்தி உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் கட்டிட சின்னங்களை ஒரே இடத்தில் கொண்டு வர கேத்தரீன் ராணி விரும்பினார். விளைவு ரோமன் தூண்களும், பாபிலோனியா ஸ்டைலில் தொங்கும் தோட்டங்கள் என புதையலே இருக்கிறது.

4. Cameron Gallery









அருகிலுள்ள பெரிய ஏரியை சுற்றி அழகான நடைபாதை போட்டு வைத்திருப்பதால் நடக்க அருமையான இடம். பகோடாக்கள், எகிப்தின் ஓபெலிஸ்க்கள் என பல காட்சிகளில் முதன்மையானது முற்றிலும் மார்பிளால் ஆன இந்தப் பாலம்.

6. The Marble Bridge





டூரிஸ்ட்களின் தாகம் தீர்க்க அரண்மனை வாயிலில் முளைத்திருக்கும் கபேயிலிருந்து...
7. The Regular garden - view from the cafe





ஓரளவுக்கு சுத்தியாச்சா.. சரி கொஞ்சம் தாண்டி அரண்மனைக்கு பின் பக்கம் போவோம். சுற்றுலாப்பயணிகளின் கண்களில் இன்னும் அவ்வளவா படாதது இது. அலெக்ஸாண்டர் அரண்மனை. கேத்தரீன் பாட்டி தன் செல்லப்பேரன் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச்சுக்காக ஆசைஆசையா கட்டினது இது. கேத்தரீன் அரண்மனைக்கும் முற்றிலும் மாறுபட்ட வடிவில் இருக்கும் இவ்வரண்மனையும் அதைச் சுற்றியிருக்கும் தோட்டமும் இன்னமும் முழுதாக புணரமைக்கப்படவில்லை. காரணம் முற்றிலுமாக ஜெர்மானியர்கள் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டதுதான்.

இவ்வரண்மனைக்கு இன்னும் ஒரு 'சிறப்பு' இருக்கிறது. பின்னால் இருக்கும் கேத்தரீன் ரஷ்ய அரச பரம்பரையின் பொற்காலத்தை காட்டுகிறது என்றால் இவ்வரண்மனையில் தான் அரச பரம்பரையே முடிவுக்கு வந்தது. 1917-ல் புரட்சிப்படையினரால் சைபீரியாவுக்குச் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அதே வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் நிக்கோலாஸ் II மன்னரும் அலெக்ஸாண்ட்ரா ராணியும் அவர்களின் ஐந்து குழந்தைகளும் இங்கேதான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நிக்கோலாஸும் அலெக்ஸாண்டராவும் தோட்டங்களில் உலாவ பெருந்தன்மையாக அனுமதிக்கப்பட்டிருந்தார்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?

அவர்கள் நினைவாக ஒரு சிறிய மார்பிள் தக்டு இருக்கிறது அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலில். அவ்வளவுதான். அரச பரம்பரையின் வரலாறு முற்றும் என்று நினைவுபடுத்தும் வகையில்.


8. Ruins of Alexander Palace




நியு யார்க் டைம்ஸில் 1917-ஆம் வருடம் நிக்கோலாஸின் வீட்டுச்சிறைப் பற்றி வந்த கட்டுரை.


அதிகாரப்பூர்வமான தளம்

----
இவற்றைத் தவிர அலெக்ஸாண்டர் லைசியம் (Lyceum) என்ற கல்வி நிறுவனமும் இங்கே இருக்கிறது. இதன் மிகப் பிரபலாமான மாணவர் அலெக்ஸாண்டர் செர்கெயெவிச் புஷ்கின். ரஷ்யாவின் முதன்மையான கவிஞர் என்று கருதப்பட்டவ்ர். இவரின் நூற்றாண்டை ஒட்டி 1930களில் இந்த ஊருக்கே புஷ்கின் என்று பெயர் சூட்டியது சோவியத் அரசு. பெரும்பாலான ஊர்களைப் போல் அதன் பழமையான பேரே மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது, சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.

 

வார்ப்புரு | தமிழாக்கம்