156. ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா?

கொஞ்ச நாளா பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இடஒதுக்கீடு பத்தி விவாதங்கள் நடந்துகிட்டு வருது. ஆனா, நடுவுல என் கண்ல பட்டது ரிஸர்வேஷன் டாக்டர்கள்லாம் என்னமோ எமனோட ஏஜெண்ட்கள் மாதிரி அவங்ககிட்ட போகவே சில மக்களெல்லாம் உயிருக்கே பயப்படறாங்க.

சேரும்போது என்னமோ மெரிட்ல வந்தவங்கள்லாம் 300 எடுத்துட்டு வந்தா மாதிரியும், மிச்சவங்கள்லாம் 35 எடுத்துட்டு வந்தா மாதிரியும் நினச்சுகிட்டு இருக்கிறதால வர காழ்ப்புணர்ச்சியிது. உண்மை நிலவரம் என்னான்னா, OC, BC, MBC, SC, STனு வரிசைக்கிரமப்படி 294 - 275 வரைக்கும் தான் இலவச சீட்டே. இது அக்ரெகெட் இல்லியா? 274ங்க்றது 91.4%. எந்த ஊர்ல சாமி 91.4 வாங்கினவங்க மக்கானாங்க? அவன விட அதிகமா மார்க் வாங்கின ஆளுங்கள நான் குறைச்சு சொல்லல. தனிமனிதன்னு பார்த்தா இன்னும் அதிகமான மதிப்பெண் வாங்கின மாணவனுக்கு கிடைக்காம போனது துரதிருஷ்டம் தான். ஆனா, இந்த இடஒதுக்கீடு நம் நாட்டுக்கு அவசியமானது. இதுனால இந்த 6% வித்தியாசத்துல உங்க உயிரே ஊசலாடுத்துன்னு ஒப்பாரி வைக்கிறது நியாயமா?

இதுவெறும் சேர்க்கை நிலவரம் தானே. 91 வாங்கின பையன் நூறு வாங்க மாட்டானா? பன்னிரண்டாம் கிளாஸ் மார்க் வச்சுதான் டாக்டரோட தரத்தை முடிவு பண்ணுவீங்களா? அப்ப அப்புறம் நாலரை வருஷம் உயிரக் குடுத்து படிச்சு, ஒண்ணரை வருஷம் இண்டெர்னா குப்பக்கொட்டினது இதெல்லாம் எந்த தெய்வத்துக்கு ப்ரீத்தி?

மிச்ச கல்லூரிகள விட மருத்துவக் கல்லூரிகளில் பெயிலாகும் கோஷ்டி அதிகம் தான். அது பன்னிரண்டாம் கிளாஸ்ல இவ்வளவு மார்க் எடுத்துட்டு வந்த பசங்கதானே. படிப்போட தன்மை காரணமா இப்படி நடக்கிறது வழக்கம்தான். இது ஒண்ணும் இன்னிக்கு நேத்திக்கா நடக்கறதில்லை. பலவருஷமா நடந்து வரதுதான். உங்க ஊர்ல உங்களுக்கு நல்லா தெரிஞ்ச இந்தியாலேயே படிச்ச பெரிய டாக்டரப் போய் கேட்டுப் பாருங்க. எவ்வளவு வருஷம் படிச்சாங்க, இல்ல அவங்க அளவுக்கே பெரிய ஆளா இருக்கிற ப்ரண்ட்ஸ் எவ்வளவு ஸ்ட்ராங்கா படிச்சிருக்காங்கன்னு கத கதயா சொல்லுவாங்க.

அஞ்சரை வருஷம் படிச்சு முடிச்சு வர்றவங்க எல்லாம் ஜொல்லிக்கறதில்லை. இதுல ரிஸர்வேஷன்ல வந்தவங்க, ஓப்பன்ல வந்தவங்க இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. தொழிலும் தெரிஞ்சு, கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்தா எல்லாரும் முன்னுக்கு வருவாங்க. இதுல யார் நல்லா வராங்கன்னு முடிவெடுக்குறது அந்த டாக்டர்கிட்ட போற பேஷண்ட்ஸ் மட்டுமே. அவர் கொடுக்கிற ரிஸல்ட்ஸ் தான் மக்களுக்கு நம்பிக்கை வரதுக்கு ஒரே காரணம். மத்தபடி அவர் பன்னிரண்டாம் வகுப்புல பிஸிக்ஸ்லயும், கெமிஸ்ட்ரிலேயும் 100 வாங்காம 91 தான் வாங்கினார்னு யாரும் கவலைப்படப்போறதில்லை. பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி என்ன, மருத்துவப் பாடங்கள்ல கூட அவர் என்ன வாங்கினார்னு உங்களுக்குத் தெரியப்போறதில்லை. அது அவசியமும் இல்ல. வைத்தியம் ஒழுங்கா பாக்கறார், மக்களுக்கு நம்பிக்கை இருக்குன்னா அது ஒண்ணே போதும்.

நீ 2000ல ரிஸர்வேஷன்ல வந்தவன், மருத்துவன்னு பல்கலைக்கழகமே சான்றிதழ் கொடுத்திருந்தாலும் என் உயிருக்கு உன்னால உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னு சொல்வீங்களா? consistent-ஆ negligenceனு எந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது புகார்கள் வந்திருக்கா என்ன? அந்த மாதிரி எதுனாச்சும் ஸ்டாடிஸ்டிக்ஸ் முதக்காரியம் கிடைக்குதா?

இன்னொரு விஷயம் எனக்கு புரியவேயில்ல. ரிஸர்வேஷன்ல வந்த ஆளுன்னு எப்படிங்கய்யா முடிவு செய்வீங்க? டாக்டர் நேம் போர்ட பாத்துமட்டுமா?

இந்த கேவலமான வரியை எழுத வேண்டாம்னு தான் பார்த்தேன். ஆனா, எப்படிக் கண்டுபிடிப்பாங்கன்னு சத்தியமா தெரியவேயில்ல அதான் கேட்டுட்டேன். கோச்சுக்காதீங்க.


---
முக்கியக்குறிப்பு: இட ஒதுக்கீட்டினால் தரம் குறைந்து நம் நாட்டின் அசுர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றெல்லாம் மாக்ரோ படம் பார்த்தாலும், என் எண்ணத்தில், முன்னேறப்போவதென்னவோ வாஸ்தவம் தான். என்ன அப்படி அவசரம்? பாதி ஜனங்களை 'முன்னேற்ற ஏர்பஸ்'ஸில் ஏற்றிக்கொள்ளக்கூட முடியாமல்? மெதுவாகத்தான் போவோமே. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்லி அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு நாம் (ஓரளவு நன்றாய் வாழும் மக்கள்) மட்டும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிகராவதில் பயனேதுமில்லை என்பது என் கருத்து.

இட ஒதுக்கீட்டை ஆதரிச்சாலும் அதை அமல்படுத்தும் முறையில் குறிப்பாக creamy layer, அதோடு கூடவே கீழ ஒட்டியிருக்கிற லேயர் பத்தியெல்லாம் எனக்கு தீவிர மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனா, இடஓதுக்கீட்டில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்ய வழிசொல்லாமல், இடஒதுக்கீட்டையே தப்பு சொல்வது அநியாயம்.

அதப்பத்தி நான் எழுதறத விட, ஏற்கனவே பத்ரி மற்றும் இன்னும் சிலபேர் நல்லாவே எழுதிட்டாங்க. அங்க பின்னூட்டங்களிலும் நிறைய விஷயங்கள் சொல்லிருக்காங்க. அங்க பாத்துக்கங்க. என்னவோ இதப் பத்தி மட்டும் எழுதணும்னு தோணிச்சு. அதான்.

155. 42.18 கிலோ மீட்டர, 375510 க்ளிக்ஸ்

என்னடா இது புதுசா ஏதோ விஜயகாந்த் மாதிரி ஸ்டேடிஸ்டிக்ஸ்லாம் தரேன்னு பயப்படாதீங்க. யாரும் ஓடுனதோ தாண்டுனதோ ஓட்டினதோ இல்ல இது. 42.18 கி.மீட்டர் கறது என் கணினியோட எலிக்குட்டி அது ஓடற தக்கணூண்டு mousepad இடத்துக்குள்ள ஓடினது. 375510 என்பது எலிக்குட்டியோட பட்டன்களை நான் அமுக்கின அளவு. :)) அதுல இடது பட்டன் மட்டும் 361 ஆயிரத்து சொச்சம்.

மவுஸ்ட்ராக்ஸ்னு சொல்லிட்டு சும்மா ஒரு குட்டி ப்ரோக்ராம் சினெட்லேந்து டவுன்லோட் பண்ணேன். அதுல வந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் தான் இது. எனக்கே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்துச்சு. இந்த அளவு க்ளிக்ஸும், தூரமும் அடைய தேவைப்பட்ட காலம் 32 நாட்கள். ஒரு மாசம்னாலும் 42 கி.மீட்டர் டூ டூ மச்சாட்டம் இருக்குல்ல? எனக்கே இந்த கதின்னா, கணினிப்பொட்டியே கதின்னு கிடக்கும் மக்கள்ஸ் எவ்ளோ தூரம் எலிக்குட்டிய பாடா படுத்துவாங்களோ நினச்சு, எலிக்குட்டி பாதுகாப்புக் கழகம் ஆரமிக்கலாம்னு எண்ணம். யாராவது சேந்துக்கறீங்களாப்பா?

cnet.com போய் MouseTracksனு தேடுங்க இல்லேன்னா www.x21B.com

154. வெற்றி! வெற்றி! - லார்ஸன் வாழ்க!

பார்ஸெலோனா சூப்பர் வெற்றி! 2-1

ஆட்டத்தையே திருப்பிப் போட்ட லார்ஸன் வாழ்க. இரண்டாவது போட்ட பெல்லெட்டி வாழ்க. எட்டோ சூப்பர் வாழ்க!

ரோனால்டின்யோ வாழ்க வாழ்க!

UEFA Champions 2005/06 - F. C. Barcelona

Arsenal (Campbell 37") - 1 : 2 - (Eto'o 76"; Belleti 81") F. C. Barcelona

153. வி.ஐ.பி வேட்பாளர் பட்டியல் - சொத்துவிவரங்கள்

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பமகவின் வேட்பாளர் பட்டியல், சொத்துவிவரங்கள், சில கொள்கை விளக்கங்களையும், வாக்குறுதிகளையும் மீண்டும் ஒருமுறை பதிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இருக்கும் ஐவரை வைத்து தமிழகமெங்கும் 494 தொகுதிகளில் வெற்றிபெற போவதாக பீலா விடும் சங்கங்களுக்கு ஒரு கேள்வி. முதலில் அத்தனை தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நிதிவசதி இருக்கிறதா? சங்கப் 'போர்வால்' என சுயமுழக்கமிடும் மதிப்புமிகு பொன்ஸ் அவர்களின் கூற்றுப்படி வ.வா.சவின் மொத்த கையிருப்பு 4 ரூபாய் 45 காசுகள். அதிலும் இரண்டு ரூபாய் எங்கள் இணையில்லாத் தலைவரிடம் அவர்களின் தல ஹேண்ட்சைல்ட் டீ குடிக்கவென கைமாற்றாக வாங்கியது.

வெறும் தமிழகத்தில் கூட சொந்தமாக நிற்கவே (குவார்ட்டராய நம நம!) முடியாதவர்கள், முச்சந்தி கூட்டணியான ஒன்றை முப்பெரும் கூட்டணி என்று பிலிம் காட்டிவருகிறார்கள். இனி பமகவின் கூட்டணிக் கட்சிகள் உலகெங்குமுள்ள தொகுதிகளில்

அமெரிக்கா - ஆளுங்கட்சியான கழுதைப் பார்ட்டி புஷ்ஷுடன் சேர்ந்து தீவிரவாதத்தை சுதந்திரமாக்க கூட்டணி
ஜெர்மனி - ஆஞ்செலாவுடன் சேர்ந்த கில்பான்ஸ் கூட்டணி
ரஷ்யா - பூடினுடனான அடக்குமுறைக் கூட்டணி
மத்தியகிழக்கு - அரேபிய சுல்தான்களுடனான ஜனநாயக முற்போக்கு கூட்டணி
பிரான்சு - யு.எம்.பி யுடனான கோஷ்டிப்பூசல் கூட்டணி
இத்தாலி - ப்ரோடியுடன் தகிடுதத்த கூட்டணி
ஆஸ்திரியா - யோர்க் ஹைதருடன் மிதவாதக் கூட்டணி
பிரிட்டன் - ப்ளேருடனான தோற்றுக்கொண்டிருக்கும் கூட்டணி
சீனா - ஹு ஜிண்டாவுடன் மனித உரிமைக் கூட்டணி
தென் கொரியா - ஹுண்டாய் சேர்மன் ஆரம்பித்துள்ள கட்சியுடன் லஞ்சமொழிப்பு கூட்டணி
வடகொரியா - அணுகுண்டுக் கூட்டணி
ஸ்பெயின் - எடாவுடன் அமைதிக் கூட்டணி
போர்ர்சுகல் - என்ன கட்சி, யார் பிரதமர் தெரியாக் கூட்டணி
ஜிம்பாப்வே - முகாபேயுடனான நிலஆக்கிரமிப்பு கூட்டணி
இரான் - அஹமதினஜாதுடன் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூட்டணி
ISS - அமெரிக்க, ரஷ்ய, ஜப்பானிய நாடுகளுடன் கூட்டணி

ஏனைய தொகுதிகளில் பமக தனித்துப் போட்டியிட்டு அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று லைசன் - பொய்சன் கருத்துகணிப்புகள் தெரிவித்தவண்ணம் உள்ளன.

இனி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகள் மற்றும் சொத்து விவரங்கள்!
1. வட அமெரிக்கா (மேற்கு), சிலுக்குவார்ப்பட்டி - தலைவர் முகமூடி
2. வட அமெரிக்கா (தென்கிழக்கு), திருநெல்வேலி - இலவசக்கொத்தனார்
2. வட அமெரிக்கா (மத்திய), மதுரை - ஆன்மிகச் செம்மல் குமரனார்
3. மத்திய கிழக்கு, வடசென்னை - பெனாத்தலார்
4. வட அமெரிக்கா (வடகிழக்கு), சங்கரன்கோவில் - கௌசிகனார்
5. மெக்ஸிகோ, காஞ்சிபுரம் - பார்ட் சின்னவன்
6. போடி, பூனா, திருப்பரங்குன்றம், க்றைஸ்ட்சர்ச் - பின்னூட்ட நாயகி துளசியக்கா
7. பெஙகளூர் (தென் கர்நாடகா), தூத்துக்குடி - சொல்லின் செல்வர் இராகவனார்
8. வடகர்நாடகா - வெண்பா வித்தகர் ஜீவா
9. ஆஸ்திரேலியா, ஆண்டிப்பட்டி - ஜெயஸ்ரீ
10. தென்கிழக்கு ஆசியா, தென்சென்னை - தேன் துளி
11. மத்திய ஆசியா, செங்கல்பட்டு - ஆனந்த்
12. கிழக்கு ஐரோப்பா, தஞ்சாவூர் - அடியேன்
13. மேற்கு ஐரோப்பா, திருச்சி - உஷா அக்கா
14. மஹாராஷ்ட்ரா - மஹாமோசம் ஹரிஹரனார்
15. சந்திர மண்டலம் - சுவாமி குஜிலி
16. ஸ்விட்ஸர்லாந்து, ஸ்கேண்டினேவியா - ஜலஜாஸ்ரீ
17. தாம்பரம், திண்டிவனம்(ரிஸர்வ்ட்) - பொன்ஸ்
18. நாகர்கோவில், கன்னியாகுமரி (ரிஸர்வ்ட்) - தேவ்
19. இதர இந்தியா (மால்கேட் சேர்ந்து ரிஸர்வ்ட்) - கைப்புள்ள
20. தென் அமெரிக்கா (ரிஸர்வ்ட்) - பெரு(சு)
21. நாமக்கல் (ரிஸர்வ்ட்) - சிபி
22. மேற்கூறிய தொகுதிகள் அல்லாமல் வேறு எதுவேண்டுமானாலும் (ரிஸர்வ்ட்) - ஜொள்ளுப்பாண்டி (சென்னையிலிருந்து நாயுடு ஹால், குவின்/ஸ்டெல்லா மேரிஸ் மற்றும் அனைத்து பஸ்-ஸ்டாப்புகளையும் பிரித்து தனித்தொகுதியாகவும் வழங்க ஐடியா இருக்கிறது!)

இனி சில சொத்துவிவரங்கள்
தலைவர் முகமூடி
மொத்த மதிப்பு: 10 ரூபாய் 25 காசு
அசையா சொத்துகள்: ப்ளோரிடா, கலிபோர்னியா பழத்தோட்டங்கள்,
வாகனங்கள்: கார் சொந்தமாக கிடையாது (2 லியர் ஜெட்கள்: பறக்கும் வாகனங்கள் அதனால் அவை கணக்கில் வராது)
நகை மதிப்பு: 2 ரூ. இரண்டு தங்கமூலாம் பூசிய முகமூடிகள்
1 ரூ வங்கிக்கடன்

ஆன்மிக செம்மல் குமரனார்
மொத்த மதிப்பு: 9 ரூ 99 காசு
அசையா சொத்துகள்: இருபது ப்ளாக்குகள், 10 நாமக்கட்டிகள் :)
வாகனம்: ஒரு ஒத்தமாட்டுவண்டி
நகைமதிப்பு: விலைமதிக்கமுடியா புன்னகையிருக்க பொன்னகை கிடையாது.

ஆன்மிக செம்மல் இராகவனார்
மொத்த மதிப்பு: 9ரூ 85 காசு
அசையா சொத்துகள்: மூன்று அக்மார்க் ருத்திராட்சங்கள், பெங்களூர்
நகை மதிப்பு: இரண்டு வடபழனி முருகன் கோயில் டாலர்கள்
வாகனங்கள்: ஒரு மயிலார்

பின்னூட்ட நாயகி துளசியக்கா
மொத்த மதிப்பு: 15 ரூ 10 காசு
அசையா சொத்துகள்: குடும்பச்சொத்தான பின்னூட்ட புதையல், சவுத் ஐலண்ட், பாவப்பட்ட கோபால் மாமா :)
நகை மதிப்பு: 10 ரூபாய்: ஒரிஜினல் திருவிழா நேரத்து மதுரை மீனாட்சி நகை செட்
வாகனங்கள்/அசையும் சொத்துகள்: நாலு யானை, அஞ்சு பூனைகள்

சுவாமிஜி குஜிலியானந்தா
மொத்த மதிப்பு: 8 ரூ 30 காசு
சொத்துவிவரம்: ஆயிரம் ஏக்கர் ஸ்விஸ்ஸாபுரத்தில் புறம்போக்கு ஆசிரமம், ஜலஜாஸ்ரீ
நகைமதிப்பு: கோர்ட்டில் வழக்கு நடப்பதால் மதிப்பு சரியாகத் தெரியவில்லை
வாகனங்கள்: நோ கமெண்ட்ஸ்! :))

தேர்தல் வாக்குறுதிகள் நாளை வெளியாகும். தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நாள் வரை உலகக்கட்சியென்ற காரணத்தினால் நாங்கள் பிரச்சாரம் செய்யலாம் என்று சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறோம்.

152. குலுக்குநடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை

தமிழகத்தின் முன்னாள் கனவுக்கன்னி, லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்களின் காதல் இளவரசி, இன்றைய குலுக்ஸ் ஜில்பாஸ்ரீயை பமகவிற்கு, சீ, தமிழ் கலைச்சேவைக்கென்றே பெற்றெடுத்த தெய்வத்தாய் ஜலஜாஸ்ரீ இன்று பமகவிற்கு ஆதரவாய் வெளியிட்டுள்ள அறிக்கையாவது.




மே 4, 2006
ஸ்விஸ்ஸாபுரம், செயிண்ட் மாரிட்ஸ்

வணக்கம் தமிழர்களே! என் இளைஞர்களே! எனக்கு கோவில் கட்டி கும்பிட்ட நான் உங்களை என்றும் மறவேன். சிறிதுகாலம் கலைச்சேவையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு, இங்கு வந்து எனது ஆன்மிக குருவான சுவாமி குஜிலியானந்தாவிற்கு தொண்டுகள் செய்துவருகிறேன். தமிழகத்தேர்தல் நெருங்குகையில், தமிழகத்தில் என் வாரமலர் செண்டர் ஸ்ப்ரெட்டை கட் செய்து பீரொவின் உள்பக்கத்தில் மறைவாய் ஒட்டி கற்பூரம் காட்டி நாள்தோறும் வழிபடும் என் ரசிகர்களுக்கு இத்தேர்தல் சமயத்தில் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்ததன் விளைவே இது.

ஒரு டாக்டராகி சூடான் சென்று மருத்துவத்தொண்டு புரியும் வாய்ப்புகளும், துபாய் சென்று கலைச்சேவை ஆற்றும் சந்தர்ப்பங்களும், கம்பூட்டர் படித்து ஆஸ்திரேலியா செல்ல ஸ்கோப்புகளும் இருந்திருந்தாலும், தமிழ்த்திரைப்படவுலகை மலையாள திரைப்பட உலக அளவிற்கு தரமானதாக்கவேண்டும் என்று கோடிக்கணக்கில் உங்களிடமிருந்து அன்று வந்த அன்புக்கட்டளைகளினால், ஐந்தாம் க்ளாஸ் பெயிலாகிவிட்டு, நான் கலைச்சேவையில் தற்செயலாக, ஆக்ஸிடெண்டலாக, தொபுக்கடீரென குதித்தேன். வெள்ளித்திரையில் மட்டுமன்றி வண்ணத்திரையிலும் நானே செண்டரில் இருந்தேன் உங்கள் பேராதரவோடு. தமிழகமெங்கும் எனக்கு தேவாலயங்கள் எழுப்பி கும்பாபிஷேகம் செய்து எனக்கு உங்கள் நன்றிக்கடனை தெரிவித்தீர்கள்.

இன்று தினமும் எனக்கு வரும் லட்சக்கணக்கான கலாரசிகர்களின் கோரிக்கை ஒன்றுதான். கலைச்சேவையில் வெற்றித்தடம் பதித்த தாயே, நீ (நான் தான்) மக்கட்சேவையை வெற்றிடமாய் விட்டது ஏனோ என்று இரத்தத்தில் எழுதிய கடிதங்கள் அனுப்புகின்றனர் என் ரசிகர்கள். என் நெஞ்சக்கூடு வருத்தத்தில் பொங்கியது. அதனால் நம்மெல்லாருக்கும் குருவான சுவாமிஜியிடம் இதைப் பற்றி அனுமதியும் அறிவுரையும் கேட்டிருந்தேன். அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்!

தமிழக ரசிகர்களே! உங்களிடம் ஒன்று கேட்பேன். ஊசி போட சான்ஸ் கிடைத்தும் உங்களுக்காக பாசிவிற்பவளாய் ஆட்டம்போடும் என் மகள் ஜில்பாஸ்ரீக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என்ன? உரல் எழுத வாய்ப்புகள் கிடைத்தும் உங்களுக்காக உரலிடித்து ஆடிய எனக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு என்ன? எங்கள் வாழ்க்கைகளையே உங்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டோம். இப்போது வெறும் ஆட்சியைத்தானே கேட்கிறோம். எங்கள் கட்சி பமக விற்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துங்கள். வண்ணத்திரையில் நடுவில் வந்த நாங்கள் தினமூடியின் முதல் பக்கத்தில் வருவோம். வந்து உங்கள் மனதின் கலைப்பசியைத் தீர்ப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

ஓம் குரு குஜிலியாய நமஹ!

---
நடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை முற்றிற்று.

151. சுவாமி குஜிலியானந்தா பரபரப்பு பேட்டி

பிரபல சுவாமி குஜிலியானந்தா அவரது ஸ்விஸ்ஸாபுரம் தோட்டத்தில் தங்கி ஆன்மிக பணியாற்றி வருவது தெரிந்ததே. நேற்று மாலை நமது தினமூடி நிருபர் அவரைச் சந்தித்து வ.வா.ச, தேர்தல், தமிழக மக்கள் மற்றும் சில திடுக்கிடும் உண்மைகள் ஆகியவற்றை பற்றி பேட்டி கண்டார். சுவாமிஜியின் சூடான பதில்கள் இதோ.

கே: வணக்கம் சுவாமிஜி. சில ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியலில் உங்களைக் காணமுடியவிலலையே. அதற்கு என்ன காரணம்?

: தமிழ்நாட்டு அரசியல் முன்னாடி நறுமணம் கமழும் நந்தவனமாட்டம் இருந்தது. அப்போது என்னைப் போன்ற ஆன்மிகவாதிகளை ஆலோசனைகேட்டு ப.ம.க போன்ற கட்சிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. நாங்களும் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வந்திருந்தோம். வயதாகிறதே. ப.ம.க மாதிரி நல்ல ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த திருப்தியில் இங்கே ஸ்விஸ்ஸாபுரத்தில் ஆயிரம் ஏக்கரில் சின்ன பண்ணை தொடங்கி ஜிராந்தையார் என்னும் பதினொன்றாம் நூற்றாண்டு சித்தர் சொன்னது போல 'மாதேவா சம்போ கந்தா' என்று இறைப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.

கே: தமிழகத்தேர்தல் நெருங்கிவிட்டதே. இத்தனை நாள் அறிக்கைவிடாமல் இருந்துவிட்டு இப்போது வெளியில் வந்துள்ளீரே சுவாமி. என்ன காரணமோ?

: நான் சொன்ன நந்தவனம் முன்னாடி இருந்துது. ஆனா இப்போ என்ன நடக்கிறது? 'யத்திந்தாம் சித்திந்தாம் பத்தினானாம் குத்தினானாம், சுவாஹாவாம் இங்கதாம் வசவாம்' அப்படின்னு ரிக்வேதத்துலேயே டுபிங்கஸுவ சம்ஹிதைல சொல்லிருக்கு. வசவாம்ங்கறது வ.வா.ச வோட திரிபு. அதாவது இங்கதாம்னா மக்கள். மக்களை சுவாஹான்னு சொல்லி வசவாம்னு பேர வச்சிண்டு வரவா சாப்டுடுவான்னு ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிவச்சுட்டு போயிருக்கா பெரியவா. அதான் நானும் சொல்றேன். இப்போ வ.வா.ச ன்னு வந்துருக்கறது இந்த துஷ்டால்லாம் சேர்ந்து நம்ம பாவப்பட்ட மனுஷால்ல டின்னரா சாப்டுட்டு போயிடுவா. அப்படி சாப்படறச்சே,யத்திந்தாம் தித்திந்தாம்னு ஆடிண்டே சாப்புடுவாளாம். அதான் சொல்லிருக்கு. அதான் க்ருஷ்ண பகவான் போல வந்துருக்கார் முகமூடி சார்.

கே: முகமூடி வெறும் ஒரு கட்சித்தலைவர். அவரப்போய் க்ருஷ்ணர்னு சொல்லறீங்களே ஸ்வாமிஜி?

ப: அப்பா.. எல்லாருக்கும் எல்லாமும் புரிஞ்சிடாது. அப்படிப் புரிஞ்சிட்டா அப்புறம் எங்களுக்கு என்ன வேலை? தெய்வம் பேசறத எல்லாராலும் புரிஞ்சிக்க முடியாது. புரிஞ்சிட்டா தாங்கிக்கவும் முடியாதுப்பா. நான் ஞான திருஷ்டில ஸ்ரீலஸ்ரீ ஜிராந்தையார் என் கனவுல வந்து பேசறதச் சொல்றேன். அவரவிட ஒரு பெரிய மகான் இருக்க முடியுமா? எல்லாம் தெரிஞ்ச அவதாரம் அவர். ஜீவ சமாதியாகியிருந்தாலும் இன்னும் அவர் சமாதி பக்கம் போனீங்கன்னா 'எக்ஸ்சூஸ் மீ' னு ஜபம் சதா சர்வகாலம் கேட்டுண்டுருக்கும். வாழுற தெய்வம் அவர். அவர் வந்துசொன்னது தான். கைப்புள்ளைவாள் கரவர் கரனோட அவதாரம். 'மகாபாரதத்துல' மெயின் வில்லன் ரோல் கிடைக்காததால, சர்வேஸ்ரரான விஷ்ணு கரனுக்கு பூலோகத்துல கைப்புள்ளைவாள்னு பேரு கொடுத்து பொறக்கவச்சுருக்கார். கூடவே சூர்ப்பனகை, தூஷணன் அப்புறம் ஆயிரம் அசுராளும் பொறந்து வந்துருக்கா. துவாபர யுகத்துல துறவிகளுக்கு தொல்லை கொடுத்தவா, இப்போ மக்களுக்கு தொல்லை கொடுக்க வந்துருக்கா.

யதா யதாஹி தர்மஸ்தன்னு ராமானந்த் சாகர் சீரியல் டைட்டில் முயுசிக்ல வரமாதிரி இப்போ முகமூடி ரூபத்துல சாட்சாத் க்ருஷ்ணரே வந்துருக்கார்.

கே: என்னவோ சாமி. வித்தியாசமா என்னன்னமோ சொல்றீங்க. இந்த தேர்தலுக்கு மக்களுக்கு என்ன அறிவுரை கொடுக்கப்போறீங்க?

ப: சுவாமி பாத்துண்டே இருக்கார். அதர்மம் என்னிக்கும் ஜெயிக்காது. ஜெயிக்கறா மாதிரி தெரிஞ்சாலும் க்ருஷ்ணர் வந்துட்டார் உங்கள காப்பாத்துவார். கவலைப்படாதீங்கோ. டெய்லி சுவாமிய வேண்டிக்கோங்கோ.

கே: அப்போ இந்த வருஷம் உங்க வோட்டு பமக வுக்கத்தானா சுவாமி?

: 'தார் டின்னாய, சிபிஐகேஸாய, ஜெயில்பேஸாய, பெயில்கேஸாய, சொத்துசொத்தாய, நகைக்கடையாய, பண்ணைவாயாயானாம் ஹேண்ட்சைல்டாய நாசகாய நம ஓம்:' னு சொல்லி ஒரு ஸ்லோகம் இருக்கு. எல்லாரும் தினமும் பாராயணம் பண்ணலாம். ரொம்ப நல்லது. நாட்டுக்கும் நல்லது. வீட்டுக்கும் நல்லது. பண்ணுங்கோ. இந்த ஸ்லோகத்துலேயே சொன்ன மாதிரி கர, தூஷண, சூர்ப்பணகைகளுக்கு யாராவது ஓட்டு போடுவாளா? க்ருஷ்ணனுக்குத்தான் போடுவா. அதான் நானும் பண்ணுவேன். நீங்களும் பண்ணுங்கோ. இந்த வரிய நன்னா பெர்சா போடுங்கோ.




பேட்டியின் பாகம் ரெண்டு அடுத்த இதழில் தொடரும்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்