ஏய், யாருப்பா குறுக்க..!

(என் கற்பனைக் கதை)

காலம்பர பத்து மணி இருக்கும். எம் பொண்டாட்டிகிட்ட எவ்வளவோ சொன்னேன், அவ கேக்கலியே!

"அடியே நேத்துலேந்து கொஞ்சம் ஒடம்பு செரியில்ல. அதனால நான் இன்னிக்கு லீவு. நீயே போய் காய்கறி வாங்கிட்டு வாம்மா..ப்ளிஸ்!".
"சும்மா எங்கிட்டியே கதவிடாதீங்க. ராத்திரி கண்ணு முழிச்சு 'F.TV' பாத்துகிட்டிருந்துட்டு, இப்போ டபாய்க்கிறிங்களா. ஆபிஸ் போனாபோகுது, எங்கூட மார்கெட்டுக்கு வந்தேயாகனும். நெறயா சாமான் வாங்கனும், அதயெல்லாம் யாரு தூக்கறது. ஒழுங்கா 10 நிமிஷத்துல கிளம்புங்க, புரியுதா?". நானும் வாயமூடிகிட்டு கெளம்பிட்டேன்.

பஸ் ஸ்டாண்டு பக்கம் அவனவன் ஆபிஸ் அவசரத்துல ஓடிகிட்டிருந்தான். நிக்க எடமில்ல. மார்கெட்ல அவ, ராத்திரி சமைக்க கெழங்கு, வெங்காயம்னு வாங்கி ரெண்டு பைய ரொப்பிட்டா.

"அப்புறம் என்னடி?"
"கொத்தமல்லி, பூண்டு, இஞ்சியும் வாங்கிட்டா நீங்க வீட்டுக்கு போலாம்."
"அப்ப நீ?"
"தெரு மொனையில 'அமுதம் கட்-பீஸ்' இருக்குல்ல. அங்க நாலு 'பிட்'டு துணி வாங்கனும். வேனுன்னா நீங்களும் வாங்க."
"ஆள விடுதாயே, நீ சொன்னத வாங்கிட்டு நா கெளம்பறேன்."

நமக்கோ தலவலி. சீக்கிரம் வீட்டுக்கு போனாபோதுங்கற அவசரத்துல அவ சொன்னதெல்லாம் வாங்க அந்த பக்கமா போனேன். அங்கதான் கொசுரு கடைங்க இருக்கு. கொஞ்சதூரம் தள்ளி ஒரே கூட்டம். எதாவது புதுக்கடயா இருக்கும். முன்னாடி போய் எட்டிபாத்தேன். "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர..." அப்டின்னு ஒரு பாட்ட அலர விட்டுட்டு பத்து பேரு ஆடிகிட்டு இருந்தாங்க. கொளுத்துர வெய்யில்ல மர கழன்டிருச்சு போல-னு அவங்கள தாண்ட அடி எடுத்துவெச்சேன். ஒருத்தன் குறுக்கவந்து,

"யோவ்..ஒனக்கு தனியாச்சொல்லனுமா! பாத்தா தெரியல? ஷுட்டிங் நடக்குதுயா. இந்த பக்கம் போக முடியாது."
"அந்த பக்கம் இருக்குர கடைக்கு போனுமே, எப்டியா போறது?"
"இப்டி முடியாது. பின்னாடியாப்போயி, அய்யங்கடைத்தெரு வழியா சுத்தி போகலாம்."
"தம்பி, அது பயங்கர சுத்து. கொங்சம் வழி விடேன். ஒரே ஓட்டமா ஓடிடறேன்."
"அதில்லயா, டைரக்டர் எப்போ 'ஷாட்' சொல்வார்-னு தெரியாது. சீனுக்கு குறுக்க ஓடினா எப்படி?". சொல்லிவாய் மூடல, அந்த பயலக்காணோம்.

ஒரு வழியா, பதினொண்னே முக்காலுக்கு வழிவிட்டானுங்க. வீட்டுக்கு போய் கட்டில்ல விழுந்ததுதான் தெரியும்.

(3 மாதங்களுக்கு பின், ஒரு சனிக்கிழமை)
"அப்பா ! விஜய் நடிச்ச 'மதுர' படம் வந்திருக்கு பா. நம்ம ஊர்ல எடுத்த படமாம். இன்னிக்கு சாய்ந்தரம் போலாமா?"
"டிக்கெட் கிடைக்குமா? கிடைச்சா போலாம்."
"என் ஃப்ரெண்ட்-கிட்ட சொல்லிட்டேன். அவன் நேரா தியேட்டருக்கு வரச்சொல்லிட்டான்."

படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷத்துல எங்கேயோ கேட்ட பாட்டு "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர...". பரவாயில்ல, விஜய் நல்லா ஆடுறார்.அந்த ஆட்டத்த பாக்கவிடாம அதென்ன, ஒவ்வொரு சீன் ஆரம்பத்துலயும் நாலு பசங்க, கோழி, ஆடு மாடு, தள்ளுவண்டிக்காரன் இப்டி யாராவது குறுக்க ஓடுறாங்க. டைரக்டர் கவனிக்காம இருந்துட்டாரு போல.

"அய்யோ அப்பா, அவங்கள்ளாம் துணை-நடிகங்கபா. அவுங்க அப்டி இப்டி ஓடும்போது, நிஜமாவே விஜய் மார்கெட்ல மக்களுக்கு நடுவுல ஆடுற மாதிரி 'நேச்சுரலா' இருக்கில்ல?"

அடப்பாவீங்களா! நான் குறுக்கபோகக்கூடாதுனு சொல்லிட்டு நீங்களே ஆள் வெச்சு இங்கயும் அங்கயும் ஓடவிட்டிருக்கீங்களே. இவுங்களால பாதிநேரம் விஜய் ஆடுறதே தெரியல. படம் எடுக்குறாங்களாம் படம்.

எங்க போயி முட்டிக்கறது?

பிடிச்ச நாலு!

சும்மாவே மெகா சீரியல் ஆளு நான். என்னையப் போய் பிடிச்ச நாலு சொல்லுன்னு சொன்னா.. விட்டுடுவேனா? பார்ட் -1,2,3,4 போட்டாதான் நியாயம்னாலும், போனாப்போகுதுன்னு ஒரே பதிவா போட்டுடறேன்.

Four Jobs I have had
உண்மையச் சொல்லப் போனா அப்பப்போ பார்ட்-டைம்ல தான் பார்த்திருக்கேனே தவிர, வேலைன்னு சொல்ற அளவுக்கு ஒண்ணும் செஞ்சதில்லை. இருந்தாலும் சொல்லியாகணுமில்லியா?

1. சில மாதங்களுக்கு Intern: எவ்வளவு தான் படிச்சாலும், இண்டெர்ன்ஷிப் சேரும்போதுதான் நமக்கு உண்மையிலேயே ஓண்ணுமே தெரியாதுங்கறது தெரியவரும். அப்ப கத்துகிட்டா தான் வாழ்க்கைக்கும் ஏதாவது. அப்படி, எனக்கும் ஒண்ணுமே தெரியாதுன்னு புரியவச்சது அந்த சில மாதங்கள்.

2. மொழிபெயர்ப்பாளர்: அதுக்காக டோண்டு அளவுக்கு pro லெவல்லாம் இல்ல. சில வருஷங்களுக்கு முன்னாடி India Trade Promotion Organization சில் கண்காட்சிகள நடத்தினாங்க. இந்தியாலேர்ந்து பிஸினஸ்காரங்க வந்து ஸ்டால்லாம் வச்சிருந்தாங்க மாஸ்கோல. ஆனா, ITPO ஆட்கள் நிஜமான மொழிபெயர்ப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாதுன்னு சொல்லி நாளைக்கு பிக்ஸட் ரேட் போட்டு எங்கள கூப்பிட்டாங்க. ஓசியில பணம்னா வேணாம்னா சொல்லுவோம். காலேஜும் தூதரகத்திலிருந்து விண்ணப்பம் வரவும், எங்களுக்கு ஸ்பெஷல் லீவெல்லாம் கொடுத்து அனுப்பினாங்க. யஷ்வந்த் சின்ஹா கற ஜாலியான, உயரமான, மரியாதையான ஆள (அப்போ மத்திய அமைச்சர்) தனியா சந்திச்சு பேச அருமையான வாய்ப்பு கிடச்சது. கூடவே ராஜீவ் ப்ரதாப் ரூடி. அதோட சூப்பர் பார்ட்டி ரேடிஸனல. வேலையொண்ணும் பாக்கல. சும்மா சுத்தினோம்.

3. எங்க காலேஜுக்கான ஆண்டுவிழாவை புரட்சி செஞ்சு சிடியில் மாற்றி ப்ளாஷ் டகால்டி பண்ணி ஏகப்பட்ட பணம் சுட்டது.

அவ்ளோதான்.

Four Movies I love னு சுருக்க முடியாது. அதனால ஆங்கிலம், தமிழ்னு பிரிச்சுக்கறேன்.

English
1. Lord of the Rings - எதுன்னு கேக்கக்கூடாது
2. Monty Python and the Holy Grail
3. Full Metal Jacket
4. Crash

தமிழ்
1. மகாநதி
2. மைக்கேல் மதன காமராஜன்
3. ராஜா கைய வச்சா
4. அண்ணாமலை

Four TV Shows I can watch over and over again
1. Seinfeld
2. Fawlty Towers
3. Late Night with Conan o'Brien
4. The Good Life

Four Places Id rather be
1. மூணார்
2. கொடைக்கானல்
3. பழநி
4. திருச்செந்தூர்

Four Actors I adore
English
1. de Niro
2. Tom Cruise
3. Colin Farrell
4. Ralph Fiennes

தமிழ்
1. ரஜினிகாந்த்
2. கமல்ஹாசன்
3. மாதவன்
4. விவேக்

Four Things Id rather do
1. பிடிச்ச பாட்டு போட்டுட்டு கார்ல சுத்தறது
2. அது முடியாத பட்சத்தில் GTA San Andreasஇல் ஓட்டுவது
3. surfing
4. gaming

Four Favorite Dishes + more
1. Lasagna Vegetariano
2. தயிர் சாதம், ஆவக்காய்
3. வெங்காய சாம்பார், சேப்பக்கிழங்கு/உருளைக்கிழங்கு கறி
4. வத்தக்குழம்பு, ஜவ்வரிசி வடகம்
5. சில்லி பரோட்டா / வெங்காயப் பச்சடி
6. டால் மக்கனி+garlic naan

Four Favorite Singers
கர்நாடக சங்கீதம்
1. டி. எம். க்ருஷ்ணா
2. செம்மங்குடி
3. விஜய் சிவா
4. எம். எஸ்

மெல்லிசை
1. எஸ்.பி.பி
2. கார்த்திக்
3. திப்பு
4. உதித் நாராயண்

Four Sites I Visit Daily
1. Google News
2. The Register
3. Thamizmanam.com
4. GMail

நான் வம்புக்கு இழுக்கும் நாலு பதிவர்கள் + more
1. ஆனந்த்
2. முகமூடி
3. இலவசக் கொத்தனார்
4. மோஹன் தாஸ்
4. குசும்பன்

நண்பன் அவர்களுக்கு....

சில வாரங்களுக்கு முன்னர் நண்பனின் அமெரிக்க எதிர்ப்பு பதிவில் பின்னூட்டமிட்டுவிட்டு பின்னர் விரிவாக எழுதுவதாய் சொல்லி மறந்துவிட்டேன். நேற்றைக்கு யாரோ ஒரு அநாதிநாதர் தனிமடலில் , பதில் போட 'மறந்து' விட்டதா என்று கேட்டிருந்தார். மறந்துபோனது என் தவறுதான். ஆனால் ஏதும் விசேஷமான காரணங்களுக்காக மறக்கவில்லை. தமிழ்மணத்தில் நடந்த சில கூத்துகள், அப்புறம் சொந்த விஷயங்களாலும், புதுப்பதிவொன்று ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதாலும் மட்டுமே. அதன் காரணமாகவே, பழைய நண்பரொருவரின் பதிவுகளை என் வலைப்பூவிலும் பதித்து வருகிறேன்.

சரி, கேள்விக்கு வருவோம். ஏன் முஸ்லீம்கள் மட்டுமே எப்போதும் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருந்தார்.

//இல்லையா பின்னே? நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை. அல்லது குறைந்தபட்சம் தமிழ்கத்தில் எப்படி செய்திகள் வெளி வருகின்றன என அறிய இயலாத சூழ்நிலையாகக் கூட இருக்கலாம். அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் முழுவீச்சும் புரியவில்லை போலிருக்கிறது. ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்க இயலும். ஒன்று - முஸ்லிம்களிடையே ஒரு பதட்டத்தை உண்டாக்க வேண்டும். அவர்களின் நம்பகத் தன்மையை குலைக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தர முனையும் அல்லது அவர்களை ஓட்டு வங்கியாக நினைக்கும் அரசியல் கட்சிகளை தள்ளி வைப்பது. என்றுமே இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட இந்துத்வா அமைப்புகள் இஸ்லாமிய ஓட்டு வங்கியைத் தனிமைப் படுத்தி விட்டால், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. மற்ற கட்சிகளுக்கும் அதனால் நன்மை அடையாது என்ற அரசியல் ஒரு முக்கியமான காரியம். இந்துத்வா வாதிகள் போடும் கணக்கு - முஸ்லிம் ஓட்டு வங்கி ஒட்டுமொத்தமாக தங்களுக்கு எதிராக இயங்கினால், மொத்தமாக ஒரு 150 இடங்கள் வரையிலாவது தங்களால் வெற்றி பெறவே முடியாது - அதனால், இந்த ஓட்டு வங்கியைத் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற கணக்கு தான். அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆதாயம் கிட்ட வேண்டுமென்றால் இந்த முஸ்லிம் ஓட்டு வங்கியை அரவணைத்து இயங்க நினைக்கும் அரசியல் கட்சிகளை - அரசியல் வாதிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது - அந்த அரசியல் வாதிகளின் தேசபற்றை கேள்விக்குரியதாக்குவது - இதெல்லாம் தான் நோக்கம். இதை ஒரு பலமுனை பிரச்சார உத்தியாக அது செய்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் ஊடகங்கள் மூலம் செய்திகளைத் திரித்து எழுதுவது.
//

அதற்கு விடை சொல்லுமுன்னர், நண்பனே சரியாக என் உலக அறிவைக் குறித்து அவதானித்திருந்தபடி நமக்கு கம்மிதான். மேலும் தமிழ்நாட்டில் பல வருடங்களாய் இருக்கக் கூடிய பாக்கியமும் இல்லை. ரெண்டுமே சரி. ஆனால், பிரபலமான இந்திய, குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளையும் இணையத்திலாவது ஓரளவிற்காவது வாசித்துவிடுவது வழக்கம். அவ்வகையில் நான் புரிந்து கொண்ட வரையில், தமிழ்நாட்டில் முஸ்லீம்களை மட்டுமே குறிவைத்து பிரச்சனைகள் கிளப்பபடுகின்றன என்பது என்னளவில் ஏற்புடையதாக இல்லை. சர்ச்சைக் கிடைத்தால் எந்த மதத்தினரையும் விடுவதில்லை. சதுர்வேதி, சங்கராச்சாரியார் போன்ற 'இந்து' விவகாரங்களுக்கு தமிழ் பத்திரிகைகள் கையாண்ட டேப்ளாய்ட் பல்ப் பிக்ஷன் கவரேஜும் இன்னும் மறக்க வில்லை. மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகைகளை பற்றியே பேச்சு. ஆர்.எஸ்.எஸ், திராவிட மற்றும் இதர மத சம்பந்தமுள்ளவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படி சாதாரணமாக இந்தியர் (தமிழர்) ஒருவரென்ற வகையில் என் கண்ணில் படவில்லை. அது நான் போட்டிருக்கும் கண்ணாடியா என்று தெரியவில்லை. அதனாலேயே நண்பன் அளவிற்கு அம்மாதிரி இருந்து, அதனுள் இருப்பதாய் சொல்லும் உள்/வெளி/ஆழக் குத்துகள் என் முதுகில் விழவில்லை. மேலும் பா.ஜ.க-விற்கு ஓட்டுப்போடும் இந்துக்கள் எல்லாம் இந்துவெறியர்கள் என்று சொல்லப்படும் காலத்தில், முஸ்லீம் வோட்டு வங்கி கைப்பற்ற சூழ்ச்சி என்றெல்லாம் அலட்டிக்கொள்ளவேண்டாம். பா.ஜ.க செய்தது என்ன, மு.லீ செய்தது என்ன என்ற கேள்வி அவசியமற்றது. சமயச்சார்புடையதா இல்லையா என்பதுமட்டும் தான் பார்க்கப் பட வேண்டும். தமக்குள்ளேயே தம்மதத்தை சரியாக புரிந்து கொள்ளாத சில நரிகளால் ஒட்டுமொத்த மதத்திற்கும் கெட்ட பெயர் வருகிறது என்று நிதந்தோறும் வருத்தப்படுவோர்க்கு, அதேபோல இந்துமதத்தை புரியாத சில குள்ளநரிகளால் பா.ஜ.கவிற்கு கேடு வருகிறதென்பதை புரிந்து கொள்ள, எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தேவரும், வடமாவட்டங்களில் வன்னியரும் என்று எல்லா கட்சிகளுக்கும் ஒரு அடிப்படை வட்டம் இருக்கும். அதுபோலவே பதினைந்து சதவிகிதமான முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்ற கட்சிக்கே பிரதமராய் அமர்வது எளிதாய் இருக்கும். இதுவும் அடிப்படை அரசியல். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற fringe அமைப்புகள் ஒரேயடியாக எல்லா ஊடகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வாள் சுழற்றுகிறார்கள் என்பது நம்புவதற்கு கடினமாய் இருக்கிறது. இதனாலேயே இவ்வளவு economic மற்றும் political clout உடைய சமூகத்தைப் பற்றி அவதூறோ எதுவோ கிளப்புவதற்கு தேசியக் கட்சிகள் என்ன, கார்த்திக்கின் கட்சி கூட ஆழ்ந்து விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முன்வராது. அதே நிலையே பத்திரிகைகளுக்கும்.

உடனேயே அடுத்த கேள்வி வரும். ஏன் சில முஸ்லீம்கள் கேடுகெட்டு தீவிரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் மதப்பெயரும் அவமதிப்பிற்கு உள்ளாகிறது? இந்துத் தீவிரவாதியென்றோ கிறித்துவத் தீவிரவாதிகளென்றோ குறிக்கப்படாமல் முஸ்லீம்கள் மட்டுமே இவ்வாறு இழிவுபடுத்தப்படுகின்றனர்?

// என்னைப் பொருத்தவரை ஸ்ரீலஙகாவில் நடக்கும் பிரச்சனைக்கு இந்து/புத்தம் என்று வர்ணம் புகுத்தாமல் தமிழே முதன்மைப்படுத்தப்படுகிறது. //

இலங்கையில் மதம் முன்னிறுத்தப்பட வேண்டிய அவசியமேயில்லை. அங்கு முன்னிறுத்தப்படுவது இனம் தானே தவிர, மதம் அல்ல. தமிழர்களை யாரும் தீவிரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இலங்கை அரசு கூட தங்கள் ஊடகங்களில் போராளிகள் என்று தான் கூறுகின்றனரே தவிர, தீவிரவாதிகள் என்றல்ல. ஆனால், ஆரம்பகாலங்களில், தமிழ் போராளிகளைத் தமிழக ஊடகங்களில் சில தமிழ் தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டு வந்தது. இப்பொழுதும் கூட இலங்கை விடுதலை வீரர்களை போராளிகள் என்று குறிப்பிடும் ஊடகங்கள், தமிழகத்தில் நடக்கும் சில குற்றங்களை தமிழ் தீவிரவாதிகள் செய்தனர் என்றே கூறி வருகின்றன. அதாவது தங்கள் நிலைபாட்டிற்கு எதிரான கொள்கையுடையவர்களை அவர்கள் சார்ந்த இனத்துடன் சேர்த்தே குறிப்பிடுவது என சில பத்திரிக்கைகள் கொள்கை வைத்திருக்கின்றன.

// அல்-கயிதாவில் ஆரம்பித்து லாஷ்கர்-இ-தொய்பா வரைக்கும் தங்களின் மதத்தையே முன்னிருத்துருகின்றனர். அத்தகைய குழுக்களின் (ஹமாஸ் உட்பட) பெயரினில் தங்களின் மதம் சம்பந்தபட்டுள்ளதே: இஸ்லாமிஸற்க்கு எதிர்ப்பானதனொன்று. இது புரியாமலா இருக்கிறீர்கள்? //

ராமநாதன் - நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த குழுக்கள் எல்லாம் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பரப்புவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றா நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? அராபிய, பாரசீக, உருது பெயர்கள் இருந்தாலே அவை இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் - அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?

ஹமாஸ் - பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழு. அவர்கள் நோக்கம் பாலஸ்தீனர்களின் தாயகத்தை விட்டு ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என்ற உரிமைப் போராட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு குழு. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் அமைப்பு அது. இஸ்லாத்தைக் காக்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அல்ல அது.

அதே போல அல் கொய்தா - அமெரிக்கர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் - எதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்று. ஆயுதங்களை எடுத்துச் சென்று ரஷ்யர்களுக்கு எதிராகப் போராடும் முஜாஹிதீன்களுக்கு கொடுப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு நவீன பயிற்சிகள் எல்லாம் கொடுத்து, பின்லேடன் தலைமையில் அனுப்பி வைத்தனர். இது இன்று உலக வரலாறு. அனைவரும் அறிவர்.

பின்னர் பின்லேடன் அமெரிகாவிற்கு எதிராக திரும்ப காரணமாக அமைந்தவை -
//
//உலக நடப்புகள் பற்றி இன்னமும் கூட கொஞ்சம் முனைந்து அறிந்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீனம்

ஈழம்

காஷ்மீரம்

இந்த மூன்றின் பிரச்சினைகளின் பரிமாணங்கள் வேறு வேறு.

பாலஸ்தீனம் - விரட்டியடிக்கப்பட்ட மக்களின் குரல்.

ஈழம் - பேரின வாத அரசு ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட முனையும் குரல்.

காஷ்மீரம் - விதிகள் வழுவிய அரசுகளின் சாணக்யத்தனத்திற்கு எதிரான குரல்.

இந்த மூன்றையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து நிறுத்தியது தற்செயலான சிந்தனை தானா, ராமநாதன்?

உங்களுக்குத் தான் தெரியும்!!!
//
அதற்கு இலங்கையும், காஷ்மீரும், பாலஸ்தீனமும் என்று உதாரணம் சொன்னேன். அதற்கும் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். தற்செயலான சிந்தனை தானா என்று கேட்டு நான் ஏதோ துவேஷத்தோட சொன்ன மாதிரி சொல்லியிருக்கிறார். ஆனால் நான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றும் வகையில். இலங்கையில் நடப்பதிலும் ஒருவகையில் நிலத்தின் மீதான குரல் தான். நான் புரிந்துகொண்டது தவறோ? புலிகள் தனி ஈழமோ அல்லது சுயாட்சியோ முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கேட்பதாக அல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? மேலும், அந்தச் சண்டையில் புத்த மதமும் இந்து மதமும் நேரிடையாக மோதிக்கொள்வதென்ற கோணமும் அடங்கியிருக்கிறதல்லவா? ஆனால், அவை முன்னிறுத்தப்படாமல் அவர்களின் உரிமையே நிலைநிறுத்தப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனத்திற்கு வருவோம். மேலும் விளக்கம் அளிக்குமுன் சோதனையாக ஒரு பின்னூட்டமிட்டேன். அதற்கு பொறுப்பாக பதிலளித்திருந்தார். அதையும் குறிப்பிட்டிருந்தேன்.

//
உங்களுக்கு இஸ்ரேலிய நண்பன் இருப்பதில் தவறில்லை. ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அராபத் பற்றி இதுவரையிலும் ஒரு வார்த்தை கூட பேசப்படவே இல்லாத பொழுது திடீரென்று அவரை அமைதியின் சீடர் என்று நான் கூறினேன் என்கிறீர்கள். எப்படி?

அராபத் அமைதியின் சீடர் இல்லை தான். ஏன் அவர் அமைதியின் சீடராக இருக்க வேண்டும்? அவர் ஒரு போராளி. இஸ்ரேலியர்களை எதிர்த்துப்போர் செய்தார். இஸ்ரேலும் அவரை எதிர்த்துப் போர் செய்தது. யுத்த நெறிமுறைகளை இருவருமே சரிவர கையாளவில்லை. ஆனால், அராபத்தின் பக்கம் நியாயம் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கை இருந்தது. ஆனால், இஸ்ரேலின் பக்கம் இது எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பு - மேலும் மேலும் ஆக்கிரமிப்பு. உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்துக் குரல் கொடுத்தாலும், தங்கள் இஷ்டம் போல செயல்படும் திமிர் இருந்தது. உலக நாடுகளை இஸ்ரேல் போல அலட்சியப்படுத்திய நாடு வேறு எதுவும் இருக்காது.
//

முதலில் //ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. // அவர் உயர்வாக பேசவேண்டுமென்பதில்லை. சொல்லப்போனால் ஆக்கிரமிப்பாளர்களென்று அநியாயமாக சொல்வதாக சொல்லி தாழ்வாகவே பேசியிருக்கலாம். பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலை திட்ட உரிமையிருக்கிறதென்றால், இஸ்ரேலியர்களுக்கும் அது உண்டு. இஸ்ரேலுக்கு உரிமையில்லையா? தனிநாடாக இருந்து அரபு நாடுகள் செய்த போர்கள், இன்றளவும் சந்திக்கும் தீவிரவாதங்களை எதிர்கொள்வதிலிருந்து உரிமை வராதா? ஜனநாயக நாடுகளில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை உண்டு. தீவிரவாதமென்று வந்துவிட்டால், அவர்களிடம் அளவிற்கு அதிகமான வன்முறையே கையாளும். integrity க்கு இது மிகவும் அவசியமாகிப் போவதால் இது தவிர்க்க முடியாது.

//நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த குழுக்கள் எல்லாம் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பரப்புவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றா நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? அராபிய, பாரசீக, உருது பெயர்கள் இருந்தாலே அவை இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் - அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது? //
இதையே நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று நான் கேட்க முடியும். விரட்டியடிக்கப்பட்ட மக்களின் குரலென்று கல்நெஞ்சும் உருகும் வகையில் சொன்னாலும் ஹமாஸும், அல் கொயிதாவும் செய்வதை கண்டிப்பாக நீங்கள் நியாயப்படுத்த மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் அதற்குள் போகாமல், இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். இரானிய அதிபரில் ஆரம்பித்து பச்சா தீவிரவாத கூட்டத்து ஆட்களெல்லாம் பேசும் பேச்சுகளை கேட்டிருக்கீறீர்களா? பிபிசி, இண்டிபெண்டண்டில் ஆரம்பித்து ஆஸ்திரேலியன் ஏஜ் வரை உலக பத்திரிகைகள் அனைத்தும் அவர்கள் பேசும் அமைதி ததும்பும் பேச்சுகளை வேண்டுமென்றே ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து islamophobia விற்கு தீனி போடுகிறார்கள் என்கிற மாதிரி இருக்கிறது மதம் அதில் சம்பந்தப்படவில்லையென்கிற உங்கள் கருத்து. இது உண்மையா? அராபத்தின் இந்த இரட்டைவேடம் பலமுறை சந்திசிரித்திருக்கிறதே. சுட்டிகள் தேடித்தருகிறேன். இப்போது கைவசம் இல்லை.

அவ்வகை புரட்சிப்பேச்சுகளில் "அல்லா அவர்களின் பெயரால் தலையை எடுப்போம். இன்னும் குண்டு போடுவோம். இந்த jews களை கடலுக்குள் விரட்டுவோம். கையை வெட்டுவோம்"னு சொல்றதெல்லாம் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனை, இல்லையா? அதற்கு உடனே வரும் பதில் மூன்று வகைகளில்.

1. இஸ்ரேல் பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றார்கள். கர்ப்பிணிப் பெண்களை கற்பழித்தார்கள். அவங்க மேல உங்களுக்கு பாவமே இல்லியா? இதெல்லாம் கேட்க நாதியில்லியா? சொந்த நாட்டிலேயே அகதிகளாய் திரிகிறார்களே? என்று செண்டி பிட் போடுவது ஒரு வகை. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவில்லை, ஆனால் மேற்கூறிய என் கருத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் பலமுறை முழித்திருக்கிறேன்.

2. ரெண்டாவது வேலு நாயக்கர் ஸ்டைல். அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.

3. அவர்கள் அறியாமல் பேசுகிறார்கள். அவர்களை வைத்து எங்களை மதிப்பிடுவதா என்று மடக்குவது. சரி, இரானிய அதிபர் கறவர் சாதாரணப்பட்டவரா? அறியாமையால் பேசுகிற பதவியா? சரி, அவர் ஏதோ மக்கு. சொல்லிட்டாரு. கூட இருக்கறவங்கள்ல யாராவது கண்டிச்சாங்களா? எனக்குத் தெரிஞ்சு இல்ல. இந்த மாதிரி எழுச்சியா பேசுனா கும்பலோட சேர்ந்து டேபிள் தட்டறாங்க என்று நினைக்கும் வகையிலேயே மவுனம் காக்கிறார்கள். டென்மார்க்கில் ஒண்ணுனோன புரட்சி செய்த அரேபியர்கள் பத்தி செய்திகளா கொட்டுது. வலைப்பூவிலும் பின்னறாங்க. ஆனா, இந்த மாதிரி விஷயத்துல மட்டும் எல்லா பத்திரிகைகளும் புஷ்கிட்ட கையூட்டு வாங்கிகிட்டு இந்த மாதிரி கிறுக்குகளை கண்டிக்கற லட்சக்கணக்கான முஸ்லீம் பெரியவர்கள் சொல்றதப் பத்தி போட மாட்டேங்கறாங்க. இல்லியா? இரானிய அதிபர் சொன்னது கருத்துச் சுதந்திரம்னா, கார்ட்டூன் போட்டதும் கருத்துச் சுதந்திரம் தானே? இதுக்கு புரட்சி, அதுக்கு மவுனம். ஏனோ? எங்கேயோ ஒரு கோடியில் நடந்ததற்கு பாகிஸ்தானில் கொடியெரிப்பு, இந்தோனேஷியாவில் தூதரக எரிப்பு. இதுக்கெல்லாம் வலுவா மறுப்புகளும் கண்டனங்களும் வந்திருக்கிறதா. இல்லை. sorrynorwaydenmark என்று புதுத்தளம் அமைத்த சில reasonable இளைஞர்கள் எழுதியிருப்பதைப் போலப் பேசினாலே போதுமே. யாரும் ரவுண்ட் கட்டி அடிக்க மாட்டார்கள்.

இதை மட்டும் நேர்மையா செஞ்சாலே போதும். யாரும் தவறா எழுத வேண்டிய அவசியமே கிடையாது. ஏன் இப்படி செய்யறாங்க? நடுஇராத்திரி மூணு மணி வரைக்கும் தூக்கம் வராம மண்டையப் பிச்சுகிட்டாலே மட்டும் வரக்கூடிய விளக்கம். உலகெங்கும் வேகமாய் பரவிவரும் அமைதி மார்க்கமான இஸ்லாமை கண்டு பொறுக்காமல் மேற்கத்திய ஊடகங்கள் எதிர்க்கிறார்கள். அதான் எல்லா மக்களும் சேர்ந்துக்கறாங்களே. அப்படின்னா அவங்க அவதூறு campaign வெற்றி பெற வில்லைன்னு தானே அர்த்தம்? இது எப்படின்னா, சன் டிவியில தமிழ்நாடே அரசுக்கு எதிரா திரண்டு நிக்குது. டீக்கடையிலல்லாம் ஜெவ த் திட்டித் தான் பொழுது போக்கறாங்கன்னு நியுஸ் போடறா மாதிரி. அதப் போட்டுட்டு அப்புறமா தோத்துப்போனா தமிழன் சோறு திங்கறானான்னு கேள்வி கேக்கறது.

//யூதர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி, பாலஸ்தீனர்களுக்கு உரிமைகளைக் கொடுத்து விட்டால் எல்லா பிரச்னைகளுமே தீர்ந்து விடப் போகிறது. கடந்த மாதம் நடந்த GCC மாநாட்டில், அரபு நாடுகளின் அனைத்து தலைவர்களும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர் - அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மத்திய கிழக்கை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக அறிவிக்க. இஸ்ரேலுக்கு அழைப்பு விடப்பட்டது என்பதே - அவர்களை ஒரு நாடாக மதித்து தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வெகு தூரமில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல, எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஜோர்டான் கூட இஸ்ரேலுடன் குறிப்பிடத்தக்க - ஆனால், வெளிப்படையாக இல்லாமல் உறவு வைத்துக் கொண்டே இருக்கிறது. யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் விட்டு வெளியேறி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்றே தோன்றுகிறது.
//
அரபு நாடுகளின் தேவை இஸ்ரேலிற்கு இருக்கிறதோ, நட்பு நாடாய் பார்த்தால் அதனிலிருந்தும் பலவிஷயங்கள் அரபு நாடுகளுக்கு பயன்படும். மேலும் பாலஸ்தீனியப் பிரச்சனையில் குட்டையை குழப்பிய ஜோர்டான், சவுதி போன்ற நாடுகளுக்கு பாலஸ்தீனியர்கள் மீது இருக்கும் அபிமானம் கொஞ்சம் வரலாற்றை புரட்டினாலே தெரியும். ஏன் அவ்வப்போது அப்பிரச்சனை கொழுந்துவிட்டெரிகிறது என்பது எளிதில் புலப்படும். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் spirit-ஐ அழித்துவிட பார்த்தால் முடியாத காரியமொன்றுமில்லை. ஆயுதமெல்லாம் வேண்டாம். மின்சாரமும், தண்ணீரும் போதும். இஸ்ரேலைப் பொருத்தவரை பாலஸ்தீனத்தில் ஹமாஸ் வந்தது மிகப் பெரும் setback. ஹமாஸ் காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால், மிரட்டும் அமெரிக்காவும் மற்ற நாடுகளையும் எளிதில் சமாதானப்படுத்திவிடலாம். மேலும் ஷரோன் இல்லாத இஸ்ரேலிடமிருந்து அமைதியைப் பெறுவது முன்னரைவிட எளிதாகிவிட்டது. அதற்கு பதிலாக அரபு நாடுகளிடமிருந்து வரும் நிதியே போதுமென்று கனவும் காண்கிறது. உண்மையான நிலை என்னவென்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. இஸ்ரேலிற்கு அழைப்பு விடுப்பது நகைப்புக்குரியதொன்றாக இருக்கிறது. பாகிஸ்தானின் அணுஆயுத பிஸினஸ் வெகு ஜோராக நடந்து அரபு நாடுகளின் நிலை என்னவென்று அறியாத நிலையிலும், இரானிய அதிபர் போன்ற தெளிவான ஒருவரிடம் அத்தகைய ஆயுதங்கள் இருக்கப்பெறும் சாத்தியங்களும் இருப்பதாலும், இஸ்ரேல் நிச்சயம் ஒத்துப்போகாது என்று தெரிந்தே நடந்த நாடகமென்றே எனக்குத் தோன்றுகிறது.

எதுவாகினும், இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்சனைக்கு பெரும்தலைகளே தீர்வு காணத் திணறும்போது நாமிருவரும் அதைப் பற்றிப் பேசி பயனில்லை. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னளவில் திருப்திகரமாய் பதிலெழுதியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். விளக்கங்கள் தேவையெனில் கேட்கவும்.
கண்டிப்பாக எனக்கு தெரிந்த அளவு எழுதுகிறேன். இப்போதைக்கு இவ்வளவு தான்.

----
சில குறிப்புகள்:
1. bias இருக்கலாம். நானும் ஒத்துக்கொள்கிறேன். கண்ணாடி போட்டுக்கொண்டு தானே எல்லாரும் பார்க்கிறோம். ஆனால் இது மத துவேஷ பதிவு இல்லை என்பது படிக்கும் எல்லாருக்கும் புரிந்திருக்கும். என்னை அறிந்தவர்களுக்கு அது தெரியும். மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சும்மா ஜாலியா வந்துட்டு, வந்த பாவத்துக்கு நாலு வசவு பாடி இது 'அது'தான் என்று நினைத்து மாத்திரம் கருத்துச்சிலம்பம் ஆடினால் கண்டிப்பாக பிரசுரம் செய்ய மாட்டேன்.

2. இப்பதிவிற்கு பலரிடமிருந்து பலவகை எதிர்க்கருத்துகளும் வரும் என்று தெரியும். அவை 1 ஆக இல்லையென்றால் கண்டிப்பாக வரவேற்கிறேன்.

3. இப்பதிவை எழுதி என் மேல் இருக்கும் பிம்பத்தையும் உடைத்துக்கொள்ளவேண்டுமா என்று நிறைய யோசித்தேன். ஆனால், நண்பனிடம் பதில் எழுதுவதாக சொல்லிவிட்டு அதைச்செய்யாவிட்டால் அவமரியாதையாக இருக்குமென்பதாலும், அநாதிநாதர் போன்றவர்கள் நான் பதில் போடாடதற்கு புது கற்பிதம் செய்ததைப் போல் எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள் என்பதையும் நினைத்தே இப்பதிவு.
---
நன்றி

நானொரு சந்து, தஞ்சாவூர் சந்து

ராஜராஜ சோழன் கட்டின 'பெரிய கோயில்' உலக பிரசித்தம். வண்டி வண்டியா வெள்ளக்காரனும், நம்மூர்காரனும் வந்து பாத்துட்டு போராங்க. ஆனா, அதத் தவிர பாக்கறதுக்கு ஒன்னுமே இல்லே இந்த தஞ்சாவூர்லனு நெனச்சீங்களா? தப்பு பண்ணிட்டீங்க சார், தப்பு. முக்கியமா நீங்க பாக்கவேண்டியது எங்கள, சந்து-களதான் சார். நாங்க எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா? எங்க ஊர் ராஜா ஆண்ட காலத்துலேயே நாங்க இங்க வந்தாச்சு. அந்த காலத்துல எல்லாம் ஊர்ல முக்கியமா நாலு வீதி தானுங்க. அதாவது, ஊர் நடுவுல அரண்மனை, அத சுத்தி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு அப்டின்னு நாலு ராஜ வீதிங்க இருந்தாங்க. அவங்கதாங்க இன்னிக்கும் ராஜ மரியாதையோட இருக்காங்க. எல்லா பெரிய கடைங்க, வங்கிகள், ஆஸுபுத்திரி, வக்கீலுங்க, பத்திரிக்கை ஆபிஸுங்க இப்படி அந்த நாலு பேருக்கும் பயங்கர மவுசு. பகல் வேளயில மனுஷங்க கால் வெக்க எடமிருக்காதுங்க. இதுல கொடுமை என்னன்னா, இந்த வீதிங்க அவங்களுக்கு கெடச்ச மதிப்ப வெச்சுகிட்டு அரசியல் கூட்டம், அது இது அப்டின்னு அனுமதிக்கிறாங்க. இத்தனைக்கும் அவங்க அவ்வளவு அகலம் இல்லீங்க. எங்களவிட ரெண்டு மடங்குதான் அகலம் ஜாஸ்தி.

நாங்க எவ்வளவு தெரியுமா? மூனு மனுஷங்கள பக்கத்து பக்கத்துல நிக்கவெச்சா அடுத்த ஆளுக்கு எடம் இருக்காது. இதாங்க நம்ம தெருக்களோட அகலம். ஆனா, இந்த நெரிசல்லயும் எவ்வளவு மக்கள் எங்களுக்குள்ள தங்கிருக்காங்க தெரியுங்களா? பாதி தஞ்சாவூரே உங்களுக்குள்ள தான்யா இருக்காங்க, அப்டினு மத்த பெரியதெருக கிண்டல் பண்ணுவாங்க. அது கிட்டதட்ட நெஜம்தாங்க.

'புறா கூண்டு போல இங்க முன்னூறு ரூமு' அப்டினு ஒரு பாட்ட நம்ம இடத்துல ஒருநாள் அலறவிட்டாங்க. கேட்ட எனக்கு ஒரே குஷிதான். ஏ! நம்ம பத்திதான்யா பாடுறாங்கனு தோனிச்சு. எங்க இடத்துல தங்குறவங்களுக்கு சின்ன சின்ன வீடுதான். ஆனா, எங்ககிட்ட இருக்குற நிம்மதி வேற எந்த தெருங்ககிட்டயாவது கிடைக்குமானு கேட்டுப்பாருங்க.

ஏன்னா, நான் மொதல்ல சொன்ன மாதிரி, நாங்க வந்து பல ஆயிரம் வருஷங்க ஓடிப்போச்சுங்க. ஆனா இன்னும், எங்க வீடுங்க பழமைய விடலீங்க. அந்த காலத்து திண்ணைங்க, மித்தம், நடு வீட்லேயே ஒரு குட்டி துளசி மடம் இப்டி எல்லாத்துலயும் ஒரு மண்வாசனை இருக்கும்.
உள்ள வந்தா வெளியே போக மனசு வராதுங்க, அடிச்சு சொல்றேன்.

பழமைலையும் புதுமை பண்ணவங்க நாங்க. அந்த காலத்துலயே 'நெட்வொர்க்'கோட வீடு கட்டினாங்க. ஒரு வீட்டுக்குள்ள போனா, அதோட கொல்லபுறத்துவழியா பின்னாடிபோனா, அடுத்த வீட்டுக்கும், தெருக்கோடிக்கும் போயிடலாம். இல்ல 'சைடுல' அடுத்த தெருவுக்கே வழி இருக்குமுங்க. இப்டி ஆத்திர அவசரத்த புரிஞ்சு உருவான ஆளுங்க நாங்க.

எங்க ஊரப்பத்தி ஒங்களுக்கே தெரியும், கலைகளை வளத்ததுல நாங்கதாங்க தமிழ்நாட்டுலயே முதலிடம். இன்னிக்கு கூட நெறயா ஆளுங்க எங்க சந்துகள்ள தங்கியிருக்காங்க. பாட்டு வாசிக்கிறவங்களும், பக்கவாத்தியக்காரங்களூம் ஏன், வீணை மாதிரி வாத்தியங்களச் செய்றதே எங்க பக்கம்தான். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருத்தரான தியாகராஜர் பூஜை பண்ண ராமர் சிலை இன்னிக்கும் எங்க சந்துல ஒரு வீட்டுல இருக்குங்க. வருஷா வருஷம் திருவையாத்துல வந்து பாடும் பலர் இங்க வந்து அந்த சிலைக்கு முன்னால பாடிட்டுபோவாங்க. அதுக்கும் மேல,
இன்னொருத்தரான வெங்கடகிருஷ்ணரோட (சியாமா சாஸ்திரி) வீடே இன்னிக்கும் இருக்கு. இதத்தவிர, கோயிலுங்க, தெருக்கோடி புள்ளையாருங்க இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

ஆளுங்க இங்கயும் அங்கயும் ஓடிகிட்டுதான் இருப்பாங்க. ஆனா, ஏதோ ஆசிரமத்துக்குள்ள வந்த மாதிரி அமைதி இருக்குங்க எப்பவும். பாதைகள் சின்னதா இருக்கறதால பெரிய வண்டிங்க உள்ள வரமுடியாது. அதனால கூட்டம், நெரிசல், புகை இப்படி எந்த தொந்தரவும் கிடையாது. அதான் இத்தனை வருஷங்களா கட்டுக்கோப்பா இருக்கோம்.

பொதுவா சந்துங்கனாலே பொந்துங்க மாதிரினு சொல்லுவாங்க. ஆனா, நாங்க குகைகள் மாதிரி. உள்ள வந்துட்டீங்கனா போய்கிட்டே இருப்பீங்க. சில சமயம், நாள் முழுக்க நடந்தாலும் வெளிய போக வழிதெரியாம கூட போகலாம். அப்படி மாட்டிக்கிட்டீங்கனா, கவலைப்படாதீங்க. 'டேய், வலைப்பதிவு செஞ்ச சந்தே'னு சத்தம்போட்டு கூப்பிடுங்க. நம்ம ஆள அனுப்பி வெக்கறேன்.

நான் ஒரு முட்டாளு, உள்ளூர்காரனே இந்த பக்கம் வரமாட்டேங்கறான். ஆப்பிரிக்காவிலயும், அமெரிக்காவிலயும் இருக்குற உங்ககிட்ட போய் இதச்சொல்றேன். நீங்க வரலேன்னாலும், வெள்ளக்கார துரைங்க யாராவது வந்தா மறக்காம எங்கள வந்து பாக்கச்சொல்லுங்க, டான்க்ஸ்.!

போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். நன்றி மீண்டும் வருக, ஹி! ஹி!

இப்படிக்கு,
வரகப்பய்யர் சந்து,
தஞ்சாவூர்.

----
PS: போனது மாதிரியே இதுவும் நண்பரின் பதிவு தான்.

திரும்பும் முன் கவனி!

வித்தியாசமான மனிதர்களையும், நிகழ்வுகளையும், கதைகளையும் காண அதிகம் அலையத்தேவையில்லை. நம் வீடுகளிலேயே இவைகள் நாளுக்கு நாள் புதுபூஜைகள் போடப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன. சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று நாம் புரிந்துகொள்வதற்குள்ளாகவே மற்றொரு விந்தை நிகழும்.

நான் ஏதும் மனநல நிபுணர் இல்லை. ஆனாலும், எனக்கு புரியாத ஒரு மனநிலைக்கு RH Syndrome என்று பெயர் வைத்துள்ளேன். அதென்ன, RH Syndrome? அதாவது, Return Home Syndrome-ஐ தான் அப்படி சுருக்கியுள்ளேன். இதை எப்போது காணலாம்?

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வெளியூர் எங்காவது சுற்றுலா, பண்டிகைகள், திருமணங்கள் இப்படி எதற்காவது செல்கிறீர்கள். போகும்போது ஏகப்பட்ட சந்தோஷம் அனைவர் முகத்திலும். வழிநெடுக பாடல்களைக் கேட்டுக்கொண்டும், ஒரே வீட்டில் இருந்தும், ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசக் கிடைக்காத விஷ்யங்களையெல்லாம் பேசிக்கொண்டும் போகிறீர்கள். சென்ற இடத்திலும் அதே மகிழ்ச்சி அனைவரிடமும். இப்படிப்பட்ட நாட்கள் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும்.

மறக்கமுடியாத அனுபவங்களுடன் சுற்றுலா முடிந்து வீடு திரும்புகிறீர்கள். பாதி தூரம் வந்திருப்பீர்கள். அப்போதுதான் நான் சொல்லும் RH Syndrome தொற்றிக்கொள்ளும். பயணத்தின் களைப்பில் அவரவர் அமைதியாக வரும்போது இந்த மனநிலை உள்ளே புகும். ஏதோ ஒரு Depression மனதில் புகுந்துவிடும். என்ன காரணமோ தெரியாது, அதுவரை ஜாலியாக உலக விஷ்யங்களைப் பேசிவந்தவர் மத்தியில் முக்கியமான குடும்ப பிரச்சனைகள் தலைகொடுக்கும். இது முக்கியமாக நடுத்தர வயதானவர்களிடம் காணலாம். அடுத்த நாள் செய்யவேண்டிய வேலை, பால் பாக்கி, electricity bill, தண்ணி மோட்டார் பிரச்சனை போன்றவை அலசப்படும். சாதாரணமாக இருந்துவந்த சிரிப்பு காணாமல்போகும். முகங்கள் இருகும். பாடல்கள் நிறுத்தப்படும்.

பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம், அவரவர் வேலைக்கு சென்றுவிடுவார்கள். தாய்மார்கள் சமையல் அறையில் அடுத்த நாள் சமையலுக்கு ஆயத்தமாகிவிட, பிள்ளைகள் தொலைக்காட்சியோ, கம்பியுட்டரையோ தொடக்கிவிடுவார்கள். அதற்கு வழக்கம்போல் அர்ச்சனையும் பெறுவார்கள்.

என்னதான் ஆச்சோ? சந்தோஷமாக இருந்தவர்கள் ஏன் இப்படி சிடுசிடுவென ஆனார்கள் என்பதுதான் புரியாத புதிர். இதைத்தான் நான் Return Home Syndrome என்று பெயர்கொடுத்துள்ளேன். சுற்றுலா முடிந்துவிட்டதே என்ற துக்கமா, இல்லை வீட்டுக்கு திரும்புகிறோமே என்ற பதட்டமா? நான் சொன்ன இந்த குணங்களை உங்கள் பயணங்களில் அனுபவித்தது உண்டா? உண்டென்றால், உங்கள் குடும்பம் RH+ (positive), இல்லையேல் RH- (negative). நீங்க RH பாஸிட்டிவா, நெகடிவ்வா?

இது நான் வெச்ச பேருதாங்க. நிஜமாக இதைப்பற்றி எதாவது ஆராய்ச்சி உள்ளதா என்று கூகிளைத் தேட சோம்பலாக இருக்கிறது! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

-----------
குறிப்பு: புதிதாக எழுத சோம்பலாக இருப்பதால் நண்பரொருவர் (இப்போது ஆக்டிவ்வாக எழுதுவதில்லை) சில மாதங்களுக்கு முன் எழுதிய சில பதிவுகளை மறுபதிப்பு செய்கிறேன். அவர் அனுமதியோடு. பொறுத்தருள்க. நன்றி.

 

வார்ப்புரு | தமிழாக்கம்